கிறிஸ்தவக் குடும்பங்கள் ‘தயாராயிருக்க’...
“தயாராயிருங்கள்; ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வரப்போகிறார்.” —லூக். 12:40.
1, 2. “தயாராயிருங்கள்” என்று இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிவது ஏன் முக்கியம்?
“மனிதகுமாரன் தம்முடைய மகிமையில்” வந்து மக்களை இரண்டாகப் ‘பிரிக்கும்போது’ நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எந்தப் பக்கத்தில் இருப்பீர்கள்? (மத். 25:31, 32) நாம் நினைக்காத நேரத்தில் இது நடக்கும் என்பதால் “தயாராயிருங்கள்” என்று இயேசு கொடுத்த அறிவுரைக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம்!—லூக். 12:40.
2 முழு குடும்பமும் ஆன்மீக ரீதியில் விழிப்புடனிருக்க குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை முந்தைய கட்டுரையில் சிந்தித்தோம். நம் குடும்பத்தின் ஆன்மீக நலனைப் பாதுகாக்கும் மூன்று விஷயங்களை இப்போது சிந்திப்போம்.
கண்ணைத் “தெளிவாக” வைத்திருங்கள்
3, 4. (அ) கிறிஸ்தவக் குடும்பங்கள் எதைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்? (ஆ) நம் கண்ணைத் “தெளிவாக” வைத்திருப்பது எதைக் குறிக்கிறது?
3 கிறிஸ்து வரும்போது தயாராயிருக்க, உண்மை வணக்கத்திலிருந்து திசைதிரும்பி விடாதபடி கிறிஸ்தவக் குடும்பங்கள் கவனமாயிருக்க வேண்டும். கவனச்சிதறல்கள் காரணமாக அவர்களுடைய ஆன்மீகப் பார்வை மங்கிவிடாதவாறு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அநேக குடும்பங்கள் பொருளாசை என்ற கண்ணியில் சிக்கியிருப்பதால் நம் கண்களைத் “தெளிவாக” வைப்பதைப் பற்றி இயேசு கொடுத்த கட்டளையைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. (மத்தேயு 6:22, 23-ஐ வாசியுங்கள்.) நம்மிடம் ஒரு விளக்கு இருந்தால் அது நம் பாதைக்கு வெளிச்சம் காட்டும், தடுக்கிவிழாமல் நடக்கவும் உதவும்; அவ்வாறே, நம் ‘மனக்கண்ணும்’ நம்முடைய வாழ்க்கைக்கு வெளிச்சம் காட்டும், பாவத்தில் விழுந்துவிடாமல் நடந்துகொள்ளவும் உதவும்.—எபே. 1:18.
4 நம் கண் தெளிவாகப் பார்க்க வேண்டுமென்றால் அது சரியாகச் செயல்பட வேண்டும், எதைப் பார்க்கிறதோ அதன்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். அதைப் போலவே நம் மனக்கண்ணும் தெளிவாக இருக்க வேண்டுமென்றால் அது ஒரு காரியத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். அப்போது, பொருளை வாங்கிக் குவிப்பதிலும் குடும்பத்தின் அடிப்படை தேவைகளைக் கவனிப்பதிலுமே குறியாய் இராமல் ஆன்மீகக் காரியங்கள்மீது நம் கண்களை ஒருமுகப்படுத்துவோம். (மத். 6:33) அது, நம்மிடமுள்ள பொருள்களை வைத்துத் திருப்தியோடு இருக்கும் அதே சமயம் கடவுளுடைய சேவைக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பதைக் குறிக்கிறது.—எபி. 13:5.
5. கடவுளுக்குச் சேவை செய்வதிலேயே தன் “கண்” குறியாக இருந்ததை ஓர் இளம் பெண் எப்படிக் காட்டினாள்?
5 கண்ணைத் தெளிவாக வைத்திருக்க பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்கும்போது கிடைக்கும் பலன்கள் ஏராளம்! எத்தியோப்பியா நாட்டிலுள்ள ஓர் இளம் பெண்ணின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவள் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால், பள்ளிப் படிப்பை முடித்ததும் தொடர்ந்து மேற்படிப்பு படிக்க அவளுக்கு உதவித்தொகை கிடைத்தது. என்றாலும், யெகோவாவைச் சேவிப்பதிலேயே அவள் குறியாக இருந்ததால் அதை ஏற்க மறுத்துவிட்டாள். சீக்கிரத்திலேயே, மாதத்திற்கு 4,200 அமெரிக்க டாலர்கள் சம்பளம் கிடைக்கும் ஒரு வேலையும் அவளைத் தேடி வந்தது; இது, அந்த நாட்டில் கிடைக்கும் சராசரி வருமானத்தோடு ஒப்பிட மிக அதிக தொகையாகும். ஆனால், அவளுடைய “கண்” பயனியர் சேவை செய்வதிலேயே குறியாக இருந்தது. பெற்றோருடைய அனுமதிக்காகக் காத்திருக்காமல் அந்த வேலையை நிராகரித்துவிட்டாள். அவள் செய்ததைக் கேள்விப்பட்ட அவளுடைய பெற்றோர் எப்படி உணர்ந்தார்கள்? அவர்களும் சந்தோஷப்பட்டார்கள்; ‘உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம்!’ என்றும் சொன்னார்கள்.
6, 7. எந்த ஆபத்தைக் குறித்து நாம் ‘விழிப்புடனிருக்க’ வேண்டும்?
6 மத்தேயு 6:22, 23-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளில் பேராசைக்கு எதிரான எச்சரிப்பும் அடங்கியுள்ளது. “தெளிவாக” என்பதன் எதிர்ப்பதமான “தெளிவற்றதாக” என்ற வார்த்தையை உபயோகிக்காமல் “பொல்லாததாக” என்ற வார்த்தையை அவர் உபயோகித்தார். ‘பொல்லாத கண்’ பேராசை பிடித்தது. பேராசையைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார்? “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்கூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது” என்று பைபிள் சொல்கிறது.—எபே. 5:3.
7 மற்றவர்கள் பேராசைப்படுவது நம் கண்ணுக்குப் பளிச்சென தெரியும், ஆனால் நாம் பேராசைப்படுவது நமக்குத் தெரிவதில்லை. ஆகவே, “விழித்திருங்கள், எல்லா விதமான பேராசையைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று இயேசு கொடுத்த அறிவுரைக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும். (லூக். 12:15) இதைச் செய்ய நம் மனக்கண்ணை எதன்மீது பதிய வைத்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பொழுது போக்குவதற்கும் பொருள்களை வாங்கிக் குவிப்பதற்கும் எவ்வளவு நேரத்தையும் பணத்தையும் செலவு செய்கிறார்கள் என்பதைக் குறித்து கிறிஸ்தவக் குடும்பங்கள் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்.
8. பொருள்களை வாங்கும் விஷயத்தில் நாம் எப்படி ‘விழிப்புடனிருக்கலாம்’?
8 ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு, அதை வாங்க போதுமான பணம் இருக்கிறதா இல்லையா என்று யோசித்தால் மட்டும் போதாது. பின்வரும் விஷயங்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும்: ‘இதை உபயோகிக்கவும், பராமரிக்கவும் எனக்குப் போதுமான நேரம் இருக்குமா? அதை நன்கு பயன்படுத்தக் கற்றுக்கொள்ள எவ்வளவு காலம் எடுக்கும்?’ இளைஞர்களே, இந்த உலகின் விளம்பரங்களை எல்லாம் நம்பிவிடாதீர்கள்; அவற்றைப் பார்த்து, விலையுயர்ந்த ஆடையை அல்லது மற்ற பொருள்களை வாங்கித்தரும்படி கேட்டு அடம்பிடிக்காதீர்கள். உங்கள் ஆசைக்கு அணைபோடுங்கள். அதோடு, ஒரு பொருளை வாங்குவது கிறிஸ்துவின் வருகைக்குத் தயாராயிருக்க உங்கள் குடும்பத்திற்கு உதவுமா என்று சிந்தித்துப் பாருங்கள். “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று யெகோவா கொடுத்த வாக்கில் நம்பிக்கை வையுங்கள்.—எபி. 13:5.
ஆன்மீக இலக்குகளை அடைய முயலுங்கள்
9. ஆன்மீக இலக்குகளை அடைய முயலுவது குடும்பங்களுக்கு எப்படி உதவும்?
9 குடும்ப அங்கத்தினர்கள் தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் முழு குடும்பத்தின் ஆன்மீக நலனைப் பாதுகாக்கவும் உதவுகிற மற்றொரு வழி ஆன்மீக இலக்குகளை வைத்து அவற்றை அடைய முயலுவதாகும். அவ்வாறு செய்வது, யெகோவாவின் சேவையில் எந்தளவு முன்னேறியிருக்கிறார்கள்... எந்த வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்... என்பதையெல்லாம் கண்டறிய அவர்களுக்கு உதவும்.—பிலிப்பியர் 1:10-ஐ வாசியுங்கள்.
10, 11. ஒரு குடும்பமாக என்ன ஆன்மீக இலக்குகளை வைத்திருக்கிறீர்கள், எதிர்காலத்தில் என்ன இலக்குகளை வைக்கப்போகிறீர்கள்?
10 குடும்பத்திலுள்ள ஒவ்வொருவராலும் எட்ட முடிந்த, சின்னச் சின்ன இலக்குகளை வைக்கும்போது அளவில்லா ஆசீர்வாதங்களை அள்ளலாம். உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளும் தின வசனத்தைச் சிந்திப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப அங்கத்தினர்கள் சொல்லும் குறிப்புகளை வைத்து அவர்கள் யெகோவாவை எந்தளவு நேசிக்கிறார்கள் என்பதைக் குடும்பத் தலைவரால் கண்டுபிடிக்க முடியும். குடும்பமாகச் சேர்ந்து பைபிளை வாசித்தால், பிள்ளைகள் நன்கு வாசிக்கக் கற்றுக்கொள்வார்கள்; பைபிளைப் பற்றிய அவர்களுடைய அறிவும் அதிகரிக்கும். (சங். 1:1, 2) நம் ஜெபங்களின் தரத்தை அதிகரிக்கவும் நாம் முயற்சிக்க வேண்டுமல்லவா? கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களை இன்னும் அதிகமாய் வெளிக்காட்ட முயற்சிப்பதும் ஒரு சிறந்த இலக்கு அல்லவா? (கலா. 5:22, 23) நாம் ஊழியத்தில் சந்திக்கிற ஆட்களிடம் பரிவுகாட்ட வாய்ப்புகளைத் தேடுவதும் சிறந்தது. குடும்பத்திலுள்ள அனைவரும் இந்தக் குணங்களை வளர்த்துக்கொள்ள முயலும்போது பிள்ளைகள் இரக்கம் காட்ட கற்றுக்கொள்வார்கள்; ஒழுங்கான பயனியர்களாக அல்லது மிஷனரிகளாகச் சேவை செய்யும் ஆர்வத்தையும் அவர்கள் வளர்த்துக்கொள்ள வாய்ப்பு இருக்கும்.
11 குடும்பமாக அடைய முடிந்த சில இலக்குகளைப் பற்றி நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? ஊழியத்தில் இன்னுமதிக நேரத்தைச் செலவிட இலக்கு வைக்கலாம், அல்லவா? தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பது, தெரு ஊழியம் செய்வது, அல்லது வியாபார பகுதிகளில் ஊழியம் செய்வது பற்றிய பயத்தைப் போக்க நீங்கள் முயற்சிக்க வேண்டுமா? தேவை அதிகமுள்ள இடங்களுக்குச் சென்று ஊழியம் செய்வதைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? குடும்பத்திலுள்ள ஒருவர் மற்றொரு மொழியைக் கற்றுக்கொண்டு பிற மொழி பேசுவோருக்குச் சாட்சி கொடுக்க முடியுமா?
12. தங்கள் குடும்பம் ஆன்மீக ரீதியில் முன்னேற குடும்பத் தலைவர்கள் என்ன செய்யலாம்?
12 குடும்பத் தலைவர்களே, எந்தெந்த விஷயங்களில் உங்கள் குடும்பம் முன்னேற வேண்டும் என்பதைக் கண்டுபிடியுங்கள். அதற்கு உதவும் திட்டவட்டமான இலக்குகளை வையுங்கள். குடும்பமாக நீங்கள் வைக்கும் இலக்குகள், உங்கள் சூழ்நிலைகளுக்கும் திறமைகளுக்கும் ஏற்ப நடைமுறையானவையாக, எட்ட முடிந்தவையாக இருக்க வேண்டும். (நீதி. 13:12) வைத்த நல்ல இலக்கை எட்ட காலமெடுக்கும் என்பது உண்மை. எனவே, டிவி பார்க்கச் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு ஆன்மீகக் காரியங்களுக்காக அதைப் பயன்படுத்துங்கள். (எபே. 5:15, 16) உங்கள் குடும்பத்திற்காக வைத்த இலக்குகளை அடைய கடினமாக முயலுங்கள். (கலா. 6:9) இவ்வாறு ஆன்மீக இலக்குகளை அடைய உழைக்கும் ஒரு குடும்பத்தின் “முன்னேற்றம் எல்லாருக்கும் தெரியவரும்.”—1 தீ. 4:15.
தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்துங்கள்
13. சபை கூட்டங்களில் என்ன மாற்றம் செய்யப்பட்டது, என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
13 குடும்பங்கள் கிறிஸ்துவின் வருகைக்குத் ‘தயாராயிருக்க’ உதவும் ஓர் அருமையான ஏற்பாடு ஜனவரி 1, 2009-ல் செய்யப்பட்டது; வாராந்தரக் கூட்ட நேரங்களில் செய்யப்பட்ட மாபெரும் மாற்றமே அது. சபை புத்தகப் படிப்பு என்று அழைக்கப்பட்ட கூட்டத்திற்காக வாரத்தில் ஒரு நாள் நாம் கூடிவருவதில்லை; அது, தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டத்தோடு சேர்த்து நடத்தப்படுகிறது. குடும்ப வழிபாட்டிற்காக வாரத்தில் ஒரு மாலை வேளையை ஒதுக்கி குடும்பத்தாரை ஆன்மீக ரீதியில் பலப்படுத்துவதற்காக அந்த நேரத்தை உபயோகித்துக்கொள்ளவே இந்த மாற்றம் செய்யப்பட்டது. இந்த மாற்றம் செய்யப்பட்டு நீண்டகாலம் கடந்துவிட்டதால் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘ஒதுக்கப்பட்ட அந்த நேரத்தில் குடும்ப வழிபாட்டை நடத்துகிறேனா அல்லது தனிப்பட்ட படிப்பைச் செய்கிறேனா? என்ன நோக்கத்திற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதோ அதை அடைந்திருக்கிறேனா?’
14. (அ) குடும்ப வழிபாட்டின் அல்லது தனிப்பட்ட படிப்பின் முக்கிய நோக்கம் என்ன? (ஆ) படிப்புக்காக நேரத்தை ஒதுக்குவது ஏன் மிக அவசியம்?
14 கடவுளிடம் இன்னும் நெருங்கி வருவதே குடும்ப வழிபாட்டின் அல்லது தனிப்பட்ட படிப்பின் முக்கிய நோக்கம். (யாக். 4:8) நேரம் ஒதுக்கி, தவறாமல் பைபிளைப் படித்து நம் படைப்பாளரைப் பற்றி அதிகமாய் அறிந்துகொள்ளும்போது அவருடன் உள்ள நம் பந்தம் பலப்படுகிறது. நாம் யெகோவாவிடம் எந்தளவு நெருங்கி வருகிறோமோ, அந்தளவு ‘முழு இருதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும்’ அவரை நேசிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பொங்கியெழும். (மாற். 12:30) கடவுளுக்குக் கீழ்ப்படியவும் அவரைப் பின்பற்றவுமே நாம் அனைவரும் விரும்புகிறோம். (எபே. 5:1) ஆகவே, “மிகுந்த உபத்திரவம்” நெருங்கி வருகையில் நம் குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் ஆன்மீக ரீதியில் ‘தயாராயிருக்க’ குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்துவது மிக அவசியம். (மத். 24:21) தப்பிப்பிழைக்க இது இன்றியமையாதது.
15. குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு நடக்க குடும்ப வழிபாடு எவ்வாறு உதவுகிறது?
15 குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரோடு ஒருவர் இன்னும் நெருங்கிவர உதவுவதே குடும்ப வழிபாட்டின் மற்றொரு நோக்கம். ஒவ்வொரு வாரமும் நேரமெடுத்து ஆன்மீக விஷயங்களைக் கலந்துபேசும்போது குடும்ப அங்கத்தினர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு நடக்க ஆரம்பிப்பார்கள். தம்பதியர் ஒன்றுசேர்ந்து பைபிளிலிருந்து ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்ளும்போது கிடைக்கும் சந்தோஷத்தால் அவர்கள் மத்தியிலுள்ள நெருக்கம் இன்னும் அதிகமாகும். (பிரசங்கி 4:12-ஐ வாசியுங்கள்.) பெற்றோரும் பிள்ளைகளும் ஒன்றுசேர்ந்து குடும்ப வழிபாட்டில் ஈடுபடும்போது, ‘எல்லாரையும் பரிபூரணமாகப் பிணைக்கும்’ அன்பில் அவர்கள் ஒன்றுபட அதிக வாய்ப்பிருக்கிறது.—கொலோ. 3:14.
16. தனிப்பட்ட படிப்பிற்காக நேரத்தை ஒதுக்குவதால் மூன்று சகோதரிகள் எப்படிப் பயனடைகிறார்கள் என்று விளக்குங்கள்.
16 பைபிள் படிப்புக்காக நேரம் ஒதுக்கியதால் வயதான சகோதரிகள் மூவர் எவ்வாறு பயனடைந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். விதவைகளான இந்த மூன்று பேரும் ஒரே நகரத்தில் வெவ்வேறு இடங்களில் குடியிருக்கிறார்கள்; என்றாலும், பல வருடங்களாகவே நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். தோழமைக்காகக் கூடிவருவதோடு ஆன்மீக ரீதியிலும் பயனடைய அவர்கள் விரும்பியதால் ஒரு திட்டம் போட்டார்கள்; வாரத்தில் ஒரு மாலைப்பொழுதில் ஒன்றுசேர்ந்து பைபிளைப் படிக்க ஏற்பாடு செய்தார்கள். ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ என்ற புத்தகத்திலிருந்து படிப்பை ஆரம்பித்தார்கள். “இந்தப் படிப்பில் நாங்கள் அந்தளவு மூழ்கிவிடுவதால் ஒரு மணிநேரம் போனது தெரியாமல் படித்துக்கொண்டிருப்போம். முதல் நூற்றாண்டில் வாழ்ந்த நம் சகோதரர்கள் சந்தித்த சூழ்நிலைகளைக் கற்பனைசெய்து பார்ப்போம்; அதைப் போன்ற சூழ்நிலைகளில் நாங்கள் என்ன செய்திருப்போம் என்றும் பேசுவோம். பின்னர், கலந்துபேசிய விஷயங்களை ஊழியத்தில் கடைப்பிடிக்க முயலுவோம். இப்படிச் செய்வதால் முன்பைவிட அதிக சந்தோஷத்தோடு நற்செய்தியை அறிவிக்கிறோம், மறுசந்திப்பு செய்கிறோம், வேதப்படிப்புகள் நடத்துகிறோம், நிறையப் பலன்களையும் பெறுகிறோம்” என்று அவர்களில் ஒருவர் சொல்கிறார். இவ்வாறு படிப்பது இந்த மூன்று நல்ல தோழிகளையும் ஆன்மீக ரீதியில் பலப்படுத்தியிருப்பதோடு ஒருவரோடு ஒருவர் இன்னும் நெருங்கி வரவும் உதவியிருக்கிறது. “இந்த ஏற்பாட்டை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்” என்று கூறுகிறார்கள்.
17. குடும்ப வழிபாட்டைச் சிறப்பாக நடத்த என்னென்ன செய்யலாம்?
17 குடும்ப வழிபாட்டிற்காக அல்லது தனிப்பட்ட படிப்பிற்காக நேரம் ஒதுக்குவதால் நீங்களும் பயனடைகிறீர்களா? நேரம் கிடைக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டால் இந்த ஏற்பாட்டிலிருந்து பயனடைய முடியாது. ஒதுக்கப்பட்ட நேரத்தில் படிப்பதற்குக் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். சின்னச் சின்ன காரியங்களுக்காக அந்தப் படிப்பைத் தள்ளிப்போடக் கூடாது. அதோடு, உங்கள் குடும்பத்தினரின் அன்றாட வாழ்க்கைக்குப் பிரயோஜனமாக இருக்கும் விஷயங்களை மனதில் வைத்து அந்தப் படிப்பைத் தயாரிக்க வேண்டும். படிப்பை அனைவரும் அனுபவித்து மகிழ நீங்கள் என்ன செய்யலாம்? நெஞ்சில் பதியும் விதத்தில் கற்பியுங்கள்; அதோடு, குடும்பத்திலுள்ள அனைவரும் அமைதியாக இருந்து பயபக்தியோடு கவனம் செலுத்த உதவுங்கள்.—யாக். 3:18.a
‘விழிப்புடனிருங்கள்,’ “தயாராயிருங்கள்”
18, 19. மனிதகுமாரன் சீக்கிரத்தில் வரப்போகிறார் என்பதை அறிந்திருப்பதால் நீங்களும் உங்கள் குடும்பமும் என்ன செய்ய வேண்டும்?
18 உலக நிலைமை நாளுக்கு நாள் சீரழிந்துகொண்டே போகிறது; சாத்தானின் இந்தப் பொல்லாத உலகம் 1914-லிருந்து அதன் முடிவு காலத்தில் இருப்பதை இது நிரூபிக்கிறது. அர்மகெதோன் என்ற சூறைக்காற்று சீக்கிரத்தில் வீசப்போகிறது. அப்போது மனிதகுமாரன், தேவபக்தியற்றவர்கள் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வருவார். (சங். 37:10; நீதி. 2:21, 22) அதை அறிந்திருப்பதால் நீங்களும் உங்கள் குடும்பமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமல்லவா?
19 கண்ணைத் ‘தெளிவாக’ வைத்திருக்கும்படி இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிகிறீர்களா? இந்த உலகின் மக்கள் பணம், புகழ், பதவி ஆகியவற்றின் பின்னால் ஓடுகையில் உங்கள் குடும்பம் ஆன்மீக இலக்குகளை அடைய முயலுகிறதா? குடும்ப வழிபாட்டிற்கு அல்லது தனிப்பட்ட படிப்பிற்குத் தவறாமல் நேரம் ஒதுக்க முடிகிறதா? அதிலிருந்து முழுமையாகப் பயனடைகிறீர்களா? முந்தைய கட்டுரையில் சிந்தித்தபடி, கணவனாக, மனைவியாக, பிள்ளையாக உங்கள் பொறுப்பைச் சரியாகச் செய்வதன் மூலம் முழு குடும்பமும் ‘விழிப்புடனிருக்க’ உதவுகிறீர்களா? (1 தெ. 5:6) அப்படிச் செய்தால் மனிதகுமாரன் வரும்போது நீங்கள் ‘தயாராய் இருப்பீர்கள்.’
[அடிக்குறிப்பு]
a குடும்ப வழிபாட்டில் எதைப் படிக்கலாம், அதை எவ்வாறு பயன்தரும் விதத்தில் சுவாரஸ்யமாக நடத்தலாம் என்பதை அறிய அக்டோபர் 15, 2009, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 29-31-ஐப் பாருங்கள்.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• பின்வருவனவற்றைச் செய்தவன் மூலம் கிறிஸ்தவக் குடும்பங்கள் எப்படி ‘தயாராயிருக்கலாம்’ என்பதை விளக்குங்கள்:
கண்ணைத் ‘தெளிவாக’ வைப்பதன் மூலம்
ஆன்மீக இலக்குளை வைத்து அடைய முயலுவதன் மூலம்
தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்துவதன் மூலம்
[பக்கம் 13-ன் படம்]
நம் கண் ‘தெளிவாக’ இருந்தால் இந்த உலகின் கவர்ச்சிகளால் கவனம் சிதறிவிட மாட்டோம்