வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
செப்டம்பர் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 7-8
“மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் குருவாக இருப்பவர்”
it-2-E 366
மெல்கிசேதேக்கு
சாலேம் என்ற பழங்கால நகரத்தின் ராஜாவாகவும், ‘உன்னதமான கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்துவந்த குருவாகவும்’ மெல்கிசேதேக்கு இருந்தார். (ஆதி 14:18, 22) இவர்தான் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் முதல் குரு; கி.மு. 1933-க்குக் கொஞ்சக் காலம் முன்பு அவர் குருவாகச் சேவை செய்தார். சாலேம் என்பதற்கு “சமாதானம்” என்று அர்த்தம். அதனால் சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கை, அப்போஸ்தலன் பவுல் “சமாதானத்தின் ராஜா” என்று சொன்னார். அதோடு, அவருடைய பெயரின் அர்த்தத்தை வைத்து “நீதியின் ராஜா” என்றும் சொன்னார். (எபி 7:1, 2) அன்றைய சாலேம், பிற்பாடு எருசலேம் என்று அழைக்கப்பட்ட நகரத்துக்கு மையமாக இருந்தது என்று தெரிகிறது. அதனால் எருசலேம் என்ற பெயரில் சாலேம் என்ற பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. சிலசமயங்களில், எருசலேமைக் குறிப்பதற்கு “சாலேம்” என்ற பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—சங் 76:2.
ஆபிராம் (ஆபிரகாம்), கெதர்லாகோமேர் ராஜாவையும் அவனுடன் கூட்டு சேர்ந்திருந்த மற்ற ராஜாக்களையும் போரில் தோற்கடித்த பிறகு, சாவே என்ற பள்ளத்தாக்குக்கு, அதாவது “ராஜா-பள்ளத்தாக்குக்கு,” வந்தார். அப்போது, மெல்கிசேதேக்கு ‘ரொட்டியும் திராட்சமதுவும் கொண்டுவந்து’ ஆபிராமுக்குக் கொடுத்தார். அதோடு, “வானத்தையும் பூமியையும் படைத்த உன்னதமான கடவுள் ஆபிராமை ஆசீர்வதிக்கட்டும்! உன்னதமான கடவுளுக்குப் புகழ் சேரட்டும்! அவர் உன்னுடைய எதிரிகளை உன் கையில் கொடுத்தாரே!” என்று சொல்லி ஆபிரகாமை ஆசீர்வதித்தார். அப்போது ஆபிரகாம், போரில் கைப்பற்றிய “மிகச் சிறந்த பொருள்களில் பத்திலொரு பாகத்தை,” ராஜாவாகவும் குருவாகவும் இருக்கிறவருக்குக் கொடுத்தார்.—ஆதி 14:17-20; எபி 7:4.
it-2-E 367 ¶4
மெல்கிசேதேக்கு
மெல்கிசேதேக்கு “எப்போது பிறந்தார், எப்போது இறந்தார் என்று யாருக்கும் தெரியாது” என்று ஏன் சொல்லப்பட்டிருக்கிறது?
மெல்கிசேதேக்கைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மையை பவுல் சொன்னார். அதாவது, “அவருடைய தாய் தகப்பனைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய வம்ச வரலாறும் கிடையாது; அவர் எப்போது பிறந்தார், எப்போது இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவர் கடவுளுடைய மகனைப் போல் ஆக்கப்பட்டார், அவர் என்றென்றும் குருவாக இருக்கிறார்” என்று சொன்னார். (எபி 7:3) மற்ற மனிதர்களைப் போல மெல்கிசேதேக்கு பிறந்தார், இறந்தும்போனார். இருந்தாலும், அவருடைய அப்பா அம்மாவின் பெயர்களோ, அவருடைய முன்னோர்களையும் சந்ததிகளையும் பற்றிய விவரங்களோ பைபிளில் குறிப்பிடப்படவில்லை. அதோடு, அவர் எப்போது பிறந்தார், எப்போது இறந்தார் என்பதைப் பற்றியும் பைபிள் சொல்வதில்லை. இவரைப் போன்ற ஒரு குரு இவருக்கு முன்போ பின்போ இருந்ததாக எந்தப் பதிவும் இல்லை. அதேபோல், கிறிஸ்துவைப் போன்ற ஒரு தலைமைக் குரு அவருக்கு முன்பும் இல்லை, பின்பும் இல்லை என்று பைபிள் சொல்கிறது. இந்த விதத்தில் மெல்கிசேதேக்கு, என்றென்றும் குருவாக இருக்கும் இயேசு கிறிஸ்துவுக்குப் படமாக இருக்கிறார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கிறது. இயேசு யூதா கோத்திரத்தில் பிறந்ததாலும், தாவீதின் ராஜ வம்சத்தில் வந்ததாலும் குருவானார் என்றோ, அப்படிப்பட்ட பரம்பரையில் வந்ததால்தான் ஒரேசமயத்தில் ராஜாவாகவும் குருவாகவும் இருக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது என்றோ சொல்ல முடியாது. யெகோவா அவருக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்ததால்தான் அவர் ராஜாவாகவும் குருவாகவும் ஆனார்.
it-2-E 366
மெல்கிசேதேக்கு
கிறிஸ்துவுக்குப் படமாக இருந்தவர். மேசியாவைப் பற்றிய ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தில், தாவீதின் “எஜமானிடம்” யெகோவா இப்படி ஆணையிட்டுச் சொன்னார்: “மெல்கிசேதேக்கைப் போலவே நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்.” (சங் 110:1, 4) யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு எழுதப்பட்ட இந்த சங்கீதத்தை வைத்து, மேசியா ஒரேசமயத்தில் குருவாகவும் ராஜாவாகவும் இருப்பார் என்பதை எபிரெயர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போஸ்தலன் பவுல் எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில், ‘இயேசு, மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் தலைமைக் குருவாக இருக்கிறார்’ என்று சொன்னார். இப்படி, முன்னறிவிக்கப்பட்ட மேசியாவைத் தெள்ளத்தெளிவாக அடையாளம் காட்டினார்.—எபி 6:20; 5:10.
it-1-E 1113
தலைமைக் குருவாக இயேசு கிறிஸ்துவின் சேவை. இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்துக்குப் போனதிலிருந்து ‘மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் தலைமைக் குருவாக இருக்கிறார்’ என்று எபிரெய புத்தகம் சுட்டிக்காட்டுகிறது. (எபி 6:20; 7:17, 21) கிறிஸ்துவுடைய குருத்துவ சேவை எவ்வளவு மகத்தானது என்பதையும், அது ஆரோனின் குருத்துவ சேவையைவிட எவ்வளவு மேலானது என்பதையும் காட்டுவதற்கு, மெல்கிசேதேக்கைப் பற்றி பவுல் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதாவது, ராஜாவாகவும் அதேசமயத்தில் குருவாகவும் சேவை செய்யும் வாய்ப்பை மெல்கிசேதேக்கு தன் பரம்பரைச் சொத்தாகப் பெற்றுக்கொள்ளவில்லை, உன்னதமான கடவுள்தான் அவருக்கு அந்தப் பொறுப்பைக் கொடுத்தார் என்று அவர் குறிப்பிடுகிறார். அதேபோல், இயேசு கிறிஸ்து லேவி கோத்திரத்திலிருந்து வரவில்லை. அவர் யூதா கோத்திரத்தில், தாவீதின் சந்ததியில் வந்தார். அவர் ஆரோனுடைய வம்சத்தில் வரவில்லை. இருந்தாலும் தலைமை குருவாக இருக்கும் பொறுப்பைப் பெற்றுக்கொண்டார். ஏனென்றால், அவர் மெல்கிசேதேக்கைப் போல, யெகோவாவால் நேரடியாக நியமிக்கப்பட்டார். (எபி 5:10) சங்கீதம் 110:4-ல், “‘மெல்கிசேதேக்கைப் போலவே நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்’ என்று யெகோவா ஆணையிட்டுச் சொல்லியிருக்கிறார். அவர் தன்னுடைய மனதை மாற்றிக்கொள்ள மாட்டார்” என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, பரலோகத்தில் தலைமைக் குருவாகவும் ராஜாவாகவும் சேவை செய்ய இயேசுவை யெகோவா நியமித்திருக்கிறார். அதுமட்டுமல்ல, தாவீதின் வம்சத்திலிருந்து வந்ததாலும் ராஜாவாக ஆட்சி செய்யும் அதிகாரம் கிறிஸ்துவுக்குக் கிடைத்திருக்கிறது. தாவீதோடு யெகோவா செய்த ஒப்பந்தத்தின்படியும், கிறிஸ்து ராஜ வம்சத்தின் வாரிசாக ஆகிறார். (2சா 7:11-16) இப்படி, மெல்கிசேதேக்கைப் போலவே, இயேசு ராஜாவாகவும் அதேசமயத்தில் குருவாகவும் இருக்கிறார்.
கிறிஸ்துவின் குருத்துவ சேவை மேலானது என்பது இன்னொரு விதத்திலும் காட்டப்பட்டிருக்கிறது. யூதக் குருத்துவ ஏற்பாட்டுக்கு முன்னோராக இருந்த லேவி, ஒருவிதத்தில் மெல்கிசேதேக்குக்குப் பத்திலொரு பாகத்தை கொடுத்தார் என்று சொல்லலாம். எப்படியென்றால், சாலேமின் குருவாகவும் ராஜாவாகவும் இருந்த மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் பத்திலொரு பாகத்தைக் கொடுத்தபோது, லேவி ஆபிரகாமுடைய வருங்கால சந்ததியாக இருந்தார். இந்த விதத்தில், லேவியும் மெல்கிசேதேக்கினால் ஆசீர்வதிக்கப்பட்டார். சிறியவரைப் பெரியவர் ஆசீர்வதிப்பதுதான் முறை. (எபி 7:4-10) மெல்கிசேதேக்குடைய “தாய் தகப்பனைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய வம்ச வரலாறும் கிடையாது; அவர் எப்போது பிறந்தார், எப்போது இறந்தார் என்று யாருக்கும் தெரியாது” என்றும் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். இதன் மூலம், பரலோகத்துக்கு உயிர்தெழுப்பப்பட்டு ‘அழியாத வாழ்வை’ பெற்றிருக்கிற இயேசு கிறிஸ்துவின் நிரந்தரமான குருத்துவ ஏற்பாட்டுக்கு மெல்கிசேதேக்கு அடையாளமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.—எபி 7:3, 15-17.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கடவுளுக்கு உகந்த பலிகள்
11 “ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார். (எபிரெயர் 8:3) பூர்வ இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன் செலுத்தியவற்றை, ‘காணிக்கைகள்’ என்றும் ‘பலிகள்’ அல்லது ‘பாவங்களுக்காக பலிகள்’ என்றும் இரண்டு வகையாக பவுல் பிரிப்பதைக் கவனியுங்கள். (எபிரெயர் 5:1) பொதுவாக மக்கள் பாசத்தையும் போற்றுதலையும் வெளிக்காட்டவும், நட்பை வளர்க்கவும், தயவை பெறவும் அல்லது அங்கீகரிக்கப்படவும் வெகுமதிகளை (காணிக்கைகளை) கொடுக்கின்றனர். (ஆதியாகமம் 32:20; நீதிமொழிகள் 18:16) அவ்வாறே, நியாயப்பிரமாணம் செலுத்தும்படி கட்டளையிட்ட பல பொருட்களை, கடவுளுடைய அங்கீகாரத்தையும் தயவையும் பெறுவதற்காக செலுத்தப்பட்ட ‘காணிக்கைகளாக’ கருதலாம். அதே சமயத்தில், நியாயப்பிரமாணத்தை மீறுகையில், மீண்டும் தயவைப் பெற, “பாவங்களுக்காக பலிகள்” செலுத்தப்பட்டன. பைபிளின் முதல் ஐந்து ஆகமங்கள், முக்கியமாய் யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் ஆகியவை வெவ்வேறு வகை பலிகளையும் காணிக்கைகளையும் பற்றி விலாவாரியான விவரங்களைத் தருகின்றன. எல்லா விவரங்களையும் புரிந்துகொண்டு நினைவில் வைப்பது கடினம் என்றாலும், அவற்றைப் பற்றிய சில முக்கிய குறிப்புகளை கவனிப்பது அவசியம்.
it-1-E 523 ¶5
ஒப்பந்தம்
திருச்சட்ட ஒப்பந்தம் எப்படி ‘நீக்கப்பட்டது’?
ஒரு புதிய ஒப்பந்தத்தைப் பற்றி எரேமியா தீர்க்கதரிசி மூலம் கடவுள் அறிவித்தபோது, திருச்சட்ட ஒப்பந்தம் ஒரு அர்த்தத்தில் ‘நீக்கப்பட்டது.’ (எரே 31:31-34; எபி 8:13) கி.பி. 33-ல், இயேசு சித்திரவதைக் கம்பத்தில் இறந்தபோது, திருச்சட்ட ஒப்பந்தம் துடைத்தழிக்கப்பட்டது. (கொலோ 2:14) அதற்குப் பதிலாகப் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.—எபி 7:12; 9:15; அப் 2:1-4.
‘ராஜாக்களாகவும் குருமார்களாகவும்’ இருப்பீர்கள்
9 இந்த ஒப்பந்தம் இயேசுவுக்காகச் செய்யப்படவில்லை. ஏனென்றால், மற்ற மனிதர்களைப் போல் இயேசு பாவமுள்ள மனிதர் அல்ல; அவருக்கு பாவ மன்னிப்பும் தேவையில்லை. ஆனால், ஆதாமின் சந்ததியில் வந்தவர்கள் பாவிகளாக இருக்கிறார்கள். அதனால், அவர்களைப் பாவத்திலிருந்து விடுவிக்க இயேசு சிந்திய இரத்தத்தை யெகோவா பயன்படுத்தினார். எல்லா மனிதர்களுடைய பாவத்தையும் போக்குவதற்கு ஒரேமுறையாக இயேசு இரத்தம் சிந்தினார். இயேசு சிந்திய இரத்தம் புதிய ஒப்பந்தத்தைச் செல்லுபடி ஆக்கியது. எப்படி? சில மனிதர்களுக்கு யெகோவா தம் சக்தியை அளித்து, “மகன்களாக” தேர்ந்தெடுக்க உதவியது. (ரோமர் 8:14-17-ஐ வாசியுங்கள்.) இதன்மூலம், இவர்கள் பாவத்திலிருந்து விடுதலை அடைந்து இயேசுவைப் போல பாவமற்றவர்களாக, கடவுளுடைய மகன்களாக ஆவார்கள். கடவுளுடைய சக்தியைப் பெற்ற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் “கிறிஸ்துவின் சக வாரிசுகளாக” ஆவார்கள். இப்படி, இஸ்ரவேலர்கள் இழந்த வாய்ப்பை இவர்கள் பெறுவார்கள்; “ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாக” ஆகும் வாய்ப்பையும் பெறுவார்கள். இவர்களைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு இப்படிச் சொன்னார்: “நீங்களோ இருளிலிருந்து தமது அற்புதமான ஒளியின் பக்கம் உங்களை அழைத்தவருடைய ‘மகத்துவங்களை எங்கும் அறிவிப்பதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், ராஜ அதிகாரமுள்ள குருமார் கூட்டமாகவும், பரிசுத்த தேசமாகவும், அவருடைய விசேஷ சொத்தாகவும்’ இருக்கிறீர்கள்.” (1 பே. 2:9) புதிய ஒப்பந்தத்தின் மூலம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் ஆபிரகாமின் வாரிசின் பாகமாக ஆகிறார்கள்.
புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது
10 இயேசு பூமியிலிருந்த கடைசி இரவன்று புதிய ஒப்பந்தத்தைப் பற்றி சொன்னார். ஆனால், அந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு சில விஷயங்கள் நடக்க வேண்டியிருந்தது. இயேசு இரத்தம் சிந்தி, அதன் மதிப்பை பரலோகத்தில் யெகோவாவிடம் கொடுக்க வேண்டியிருந்தது. அதோடு, “கிறிஸ்துவின் சக வாரிசுகளாக” இருப்பவர்கள்மீது கடவுள் தமது சக்தியைப் பொழிய வேண்டியிருந்தது. எனவே, கி.பி. 33 பெந்தெகோஸ்தே நாளன்று இயேசுவின் சீடர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்ற பிறகுதான் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
11 எரேமியா மூலம் புதிய ஒப்பந்தத்தைப் பற்றி யெகோவா சொன்னபோது திருச்சட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வரவில்லை. புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகுதான் திருச்சட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. (எபி. 8:13) இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம், யூதர்களுக்கு மட்டுமல்ல, விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்களுக்கும் இயேசுவோடு ஆட்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால், “விருத்தசேதனம், [அவர்களுக்கு] எழுதப்பட்ட சட்டத்தினால் செய்யப்படுவதில்லை, கடவுளுடைய சக்தியினால் இருதயத்தில் செய்யப்படுகிறது.” (ரோ. 2:29) “என்னுடைய சட்டங்களை நான் அவர்களுடைய மனதில் வைப்பேன், அவர்களுடைய இருதயங்களில் அவற்றை எழுதுவேன்” என்று யெகோவா சொன்னார். (எபி. 8:10) இந்தப் புதிய ஒப்பந்தத்தை 1,44,000 பேரோடு யெகோவா செய்கிறார். இவர்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்” என்று அழைக்கப்படுகிறார்கள்.—கலா. 6:16; வெளி. 14:1, 4.
13 புதிய ஒப்பந்தம் கடவுளுடைய அரசாங்கத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? புதிய ஒப்பந்தத்தின் மூலம் ‘கடவுளுடைய இஸ்ரவேலர்கள்’ ராஜாக்களாகவும் குருமார்களாகவும் இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இப்படி இயேசுவின் சக வாரிசுகளாக, அதாவது ஆபிரகாமின் வாரிசுகளாக, ஆகிறார்கள். (கலா. 3:29) ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்பதை புதிய ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.
14 புதிய ஒப்பந்தத்தின் மூலம் “கடவுளுடைய இஸ்ரவேலர்,” “கிறிஸ்துவின் சக வாரிசுகளாக” ஆக முடியும். ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தில் அவர்கள் இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் ஆட்சி செய்வதற்கு சட்டப்பூர்வ உரிமை தேவைப்படுகிறது. அதற்காக, இன்னொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
செப்டம்பர் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 9-10
“வரப்போகிற நன்மைகளின் . . . நிழல்”
it-1-E 862 ¶1
மன்னிப்பு
இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த சட்டத்தின்படி, ஒருவர் கடவுளுக்கு எதிராக அல்லது வேறொரு மனிதனுக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டால், முதலாவதாக அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும். பிறகு, பெரும்பாலான சமயங்களில் யெகோவாவுக்கு இரத்த பலியைச் செலுத்தவும் வேண்டும். அப்போது அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். (லேவி 5:5–6:7) அதனால்தான் பவுல் பின்வரும் நியமத்தைச் சொன்னார்: “திருச்சட்டத்தின்படி ஏறக்குறைய எல்லாமே இரத்தத்தால் சுத்தமாக்கப்படுகின்றன; இரத்தம் சிந்தப்படவில்லை என்றால், மன்னிப்பு இல்லை.” (எபி 9:22) உண்மையில், மிருக பலிகளின் இரத்தத்தால் மனிதர்களுடைய பாவங்களைப் போக்கவும் முடியவில்லை, அவர்களுக்குக் குற்றமில்லாத மனசாட்சியைக் கொடுக்கவும் முடியவில்லை. (எபி 10:1-4; 9:9, 13, 14) ஆனால், முன்னறிவிக்கப்பட்ட புதிய ஒப்பந்தம் இயேசு கிறிஸ்துவின் மீட்புப் பலியின் அடிப்படையில் மனிதர்களுக்கு உண்மையான மன்னிப்பைத் தருகிறது. (எரே 31:33, 34; மத் 26:28; 1கொ 11:25; எபே 1:7) இயேசு பூமியில் இருந்தபோதுகூட, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனைக் குணப்படுத்தியதன் மூலம் பாவங்களை மன்னிக்க தனக்கு அதிகாரம் இருந்ததைக் காட்டினார்.—மத் 9:2-7.
“என்னை தொடர்ந்து பின்பற்றி வா”
4 இயேசு பரலோகத்திற்குச் சென்றதையும், அவருக்குக் கிடைத்த வரவேற்பையும், அவருடைய தகப்பனுடன் மறுபடியும் இணைந்ததையும் பற்றி பைபிள் நமக்கு எதுவும் சொல்வதில்லை. இருந்தாலும், இயேசு பரலோகத்திற்குத் திரும்பிச் சென்றவுடன் என்ன நடக்கும் என்பதைக் குறித்து பைபிள் முன்னரே வெளிப்படுத்தியது. மோசேயின் காலம் தொடங்கி முதல் நூற்றாண்டுவரை, 15 நூற்றாண்டுகளுக்கும் அதிகமாக யூத மக்கள் வருடாவருடம் புனித சடங்கு நடத்தப்பட்டதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு வருடமும் பிராயச்சித்த நாளன்று தலைமைக் குரு மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்று ஒப்பந்தப் பெட்டிக்கு முன்பு மிருகங்களின் இரத்தத்தைத் தெளித்தார். தலைமைக் குரு அந்த நாளில் மேசியாவுக்குப் படமாக விளங்கினார். ஆனால், இயேசு பரலோகத்திற்குத் திரும்பிச் சென்ற பிறகு எக்காலத்திற்கும் ஒரே தடவையாக தம்முடைய உயிரை மீட்புவிலையாகச் செலுத்தினார். இவ்வாறு, அந்தப் புனித சடங்கின் நோக்கத்தை நிறைவேற்றினார், அதாவது பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற வழிசெய்தார். யெகோவாவின் மகிமை பொருந்திய சந்நிதிக்குள் வந்து, ஆம், இப்பிரபஞ்சத்திலேயே மிகவும் புனிதமான இடத்திற்குள் வந்து, தம்முடைய தகப்பனிடம் மீட்புவிலையின் மதிப்பை சமர்ப்பித்தார். (எபிரெயர் 9:11, 12, 24) யெகோவா அதை ஏற்றுக்கொண்டாரா?
it-2-E 602-603
பரிபூரணம்
பரிபூரணமான திருச்சட்டம். குருத்துவச் சேவையும் மிருக பலிகளும் மோசேயின் மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்தின் சில அம்சங்களாக இருந்தன. திருச்சட்டம் கடவுளிடமிருந்து வந்ததால் பரிபூரணமாக இருந்தது உண்மைதான்; ஆனால், குருத்துவச் சேவையும் சரி, மிருக பலிகளும் சரி, திருச்சட்டத்தின்கீழ் இருந்தவர்களைப் பரிபூரணமாக்கவில்லை. இதைத்தான், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி 7:11, 19; 10:1) திருச்சட்டம் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை தருவதற்குப் பதிலாக, அது பாவங்களை இன்னும் தெளிவாகக் காட்டியது. (ரோ 3:20; 7:7-13) இருந்தாலும், இந்தத் தெய்வீக ஏற்பாடுகள் எல்லாமே கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றின. திருச்சட்டம், கிறிஸ்துவிடம் மனிதர்களை வழிநடத்துகிற “பாதுகாவலராக” செயல்பட்டது; இப்படி, ‘வரப்போகிற நன்மைகளின் [பரிபூரணமான] நிழலாக’ இருந்தது. (கலா 3:19-25; எபி 10:1) அப்படியென்றால், “மனிதர்களுடைய பாவ இயல்பால் திருச்சட்டம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட முடியாததாகவும் அவர்களைக் காப்பாற்ற முடியாததாகவும் இருந்தது” என்று பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன? (ரோ 8:3) எபிரெயர் 7:11, 18-28-ன்படி, யூத தலைமைக் குருவினால் மக்களை ‘முழுமையாக மீட்க’ முடியாததைப் பற்றி பவுல் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. (திருச்சட்டத்தின்படி தலைமைக் குரு, பலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கவும், பாவப் பரிகார நாளில் மகா பரிசுத்த அறைக்குள் போய், பலி செலுத்தப்பட்ட விலங்கின் இரத்தத்தைத் தெளிப்பதற்கும் நியமிக்கப்பட்டிருந்தார்.) ஆரோன் வம்சத்து குருமார்கள் செலுத்திய பலிகள் கடவுளுக்கு முன்பாக மக்களை நீதியுள்ளவர்களாக இருக்க உதவி செய்தபோதும், தாங்கள் பாவிகள் என்ற உணர்வை மக்களின் மனதிலிருந்து முழுமையாக அல்லது பரிபூரணமாக நீக்க முடியவில்லை. அப்போஸ்தலன் பவுல் இதைப் பற்றி விளக்கும்போது, பாவப் பரிகார பலிகளால், “கடவுளை வணங்குகிற ஆட்களை ஒருபோதும் பரிபூரணமாக்க முடியாது,” அதாவது குற்றமில்லாத மனசாட்சியைக் கொடுக்க முடியாது என்று சொல்கிறார். (எபி 10:1-4; எபி 9:9-ஐ ஒப்பிடுங்கள்.) அவர்களைப் பாவத்திலிருந்து முழுமையாக விடுவிப்பதற்குத் தேவைப்படும் மீட்புவிலையைத் தலைமைக் குருவால் கொடுக்க முடியவில்லை. கிறிஸ்துவுடைய முடிவில்லாத குருத்துவச் சேவையினாலும், அவர் கொடுத்த மதிப்புமிக்க பலியினாலும்தான் முழுமையான மீட்பு கிடைக்கப்போகிறது.—எபி 9:14; 10:12-22.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w92 3/1 31 ¶4-6
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கடவுளுக்கும் மனிதர்களுக்குமிடையே உடன்படிக்கைகள் செல்லத்தக்கதாவதற்கு மரணம் தேவையாயிருந்தது என்று பவுல் குறிப்பிட்டார். மோசேயின் நியாயப்பிரமாணம் ஓர் உதாரணமாகும். மோசே அதன் மத்தியஸ்தராக, கடவுளுக்கும் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலுக்குமிடையே இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு வருகிறவராக இருந்தார். இவ்விதமாக மோசே ஒரு முக்கிய பங்கை வகித்தார், இஸ்ரவேலர் உடன்படிக்கைக்குள் வந்துகொண்டிருந்த போது, அவர்களோடு செயல்தொடர்பு கொண்ட மனிதனாக இருந்தார். இதன் காரணமாக யெகோவாவிடமிருந்து தோன்றிய நியாயப்பிரமாண உடன்படிக்கையை எழுதின மனிதனாக மோசே கருதப்படலாம். ஆனால் நியாயப்பிரமாண உடன்படிக்கை அமலுக்கு வருவதற்கு மோசே தன் உயிர் இரத்தத்தைச் சிந்த வேண்டுமா? இல்லை, மாறாக, மோசேயின் இரத்தத்தை செலுத்தப்பட்ட மிருகங்களின் இரத்தம் ஈடுசெய்தன.—எபிரெயர் 9:18-22.
யெகோவாவுக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேல் தேசத்திற்குமிடையிலான புதிய உடன்படிக்கையை பற்றி என்ன? யெகோவாவுக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலுக்குமிடையே தரகராக, மத்தியஸ்தராக இருக்கும் மகத்தான பங்கை இயேசு கிறிஸ்து கொண்டிருந்தார். யெகோவா இந்த உடன்படிக்கையை ஏற்படுத்திய போதிலும், அது இயேசு கிறிஸ்துவையே மையமாகக் கொண்டிருந்தது. அதன் மத்தியஸ்தராக இருப்பது தவிர, இயேசு மாம்சத்திலிருந்த போது இந்த உடன்படிக்கையினுள் முதலாவதாக எடுத்துக்கொள்ளப்பட இருந்தவர்களோடு நேரடியாக செயல்தொடர்பு கொண்டவராக இருந்திருக்கிறார். (லூக்கா 22:20, 28, 29) மேலுமாக, உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்க தேவையான பலியை அளிக்க தகுதியுள்ளவராக அவர் இருந்தார். இந்தப் பலி வெறுமனே மிருகங்களினுடையதாக இல்லாமல், பரிபூரண மனித ஜீவனாக இருந்தது. ஆகவே பவுல் கிறிஸ்துவை புதிய உடன்படிக்கையை எழுதின மனிதனாக குறிப்பிட முடிகிறது. கிறிஸ்து “பரலோகத்தில்தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்த” பிற்பாடு, புதிய உடன்படிக்கை செல்லத்தக்கதானது.—எபிரெயர் 9:12-14, 24.
மோசேயையும் இயேசுவையும் உடன்படிக்கை எழுதின மனிதர்களாக பேசுகையில், உண்மையில் கடவுளே ஏற்படுத்தியிருந்த உடன்படிக்கைகளை இவர்களிடமிருந்து தோன்றியதாக பவுல் தெரிவித்துக்கொண்டில்லை. மாறாக அந்த இரண்டு மனிதர்களும் அந்தந்த உடன்படிக்கைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதில் மத்தியஸ்தர்களாக மிகநெருக்கமாக உட்பட்டிருந்தார்கள். ஒவ்வொன்றின் காரியத்திலும் மரணம் தேவைப்பட்டது—மோசேக்கு பதிலாக மிருகங்களும், புதிய உடன்படிக்கையிலிருப்பவர்களுக்கு இயேசு தம்முடைய சொந்த உயிர் இரத்தத்தையும் அளித்தார்.
it-1-E 249-250
ஞானஸ்நானம்
ஞானஸ்நானம் எடுத்த சமயத்தில் இயேசு ஜெபம் செய்துகொண்டிருந்தார் என்று லூக்கா குறிப்பிட்டார். (லூக் 3:21) இயேசு கிறிஸ்து “இந்த உலகத்துக்கு” வந்தபோது (அவர் பிறந்த சமயத்தில் அல்ல, அதாவது இந்த வார்த்தைகளை வாசிக்கவோ சொல்லவோ முடியாத சமயத்தில் அல்ல, ஆனால் ஞானஸ்நானம் எடுத்து ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில்) சங்கீதம் 40:6-8-ல் [செப்டுவஜின்ட்] உள்ள வார்த்தைகளைச் சொன்னார்: “பலியையும் காணிக்கையையும் நீங்கள் விரும்பவில்லை, ஆனால் எனக்காக ஓர் உடலைத் தயார்படுத்தினீர்கள். . . . கடவுளே, இதோ, உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற வந்துவிட்டேன். சுருளில் என்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது.” (எபி 10:5-9) பிறப்பிலேயே இயேசு யூத தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தார். அது கடவுளோடு ஒப்பந்தம் செய்திருந்த தேசம். அதாவது, திருச்சட்ட ஒப்பந்தம் செய்திருந்த தேசம். (யாத் 19:5-8; கலா 4:4) இதன் காரணமாக, இயேசு யோவானிடம் போய் ஞானஸ்நானம் எடுத்தபோது யெகோவா தேவனோடு ஏற்கெனவே ஒரு ஒப்பந்தத்தில் இருந்தார். திருச்சட்டம் என்ன எதிர்பார்த்ததோ அதைவிட இயேசு அதிகத்தைச் செய்தார். அதாவது, தன்னுடைய தகப்பனின் “விருப்பத்தை” செய்வதற்காகத் தன்னையே அர்ப்பணித்தார். அவர் தனக்காக ‘தயார்படுத்தப்பட்டிருந்த’ உடலைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதும், திருச்சட்டத்தின்படி செலுத்த வேண்டியிருந்த மிருக பலிகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதும் தகப்பனுடைய விருப்பமாக இருந்தது. “இயேசு கிறிஸ்து தன்னுடைய உடலை எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்து அந்த ‘விருப்பத்தை’ நிறைவேற்றியதால்தான் நாம் புனிதமாக்கப்பட்டிருக்கிறோம்” என்று பவுல் சொன்னார். (எபி 10:10) கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை இயேசு செய்ய வேண்டும் என்பதும் தகப்பனின் விருப்பமாக இருந்தது; அதற்காகவும் இயேசு தன்னையே அர்ப்பணித்தார். (லூக் 4:43; 17:20, 21) யெகோவா தன்னுடைய மகனின் அர்ப்பணிப்பை ஏற்றுக்கொண்டு அதை அங்கீகரித்தார். இயேசுவைத் தன்னுடைய சக்தியினால் அபிஷேகம் செய்து இப்படிச் சொன்னார்: “நீ என் அன்பு மகன்; நான் உன்னை ஏற்றுக்கொள்கிறேன்.”—மாற் 1:9-11; லூக் 3:21-23; மத் 3:13-17.
செப்டம்பர் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 11
“விசுவாசம் ஏன் முக்கியம்?”
யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது விசுவாசம் வையுங்கள்
6 விசுவாசம் என்றால் என்ன என்பதைப் பற்றி எபிரெயர் 11:1 விளக்குகிறது. (வாசியுங்கள்.) (1) விசுவாசம் என்பது “எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்.” இங்கே சொல்லப்பட்டிருக்கும் எதிர்பார்க்கிற காரியங்கள் என்பது எதிர்காலத்தைப் பற்றி கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகளை உட்படுத்துகின்றன. உதாரணத்துக்கு, அநியாயமும் அக்கிரமமும் ஒழிந்த பிறகு புதிய உலகம் வரும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். (2) விசுவாசம் என்பது “பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை” அல்லது நம்பகமான ஆதாரத்தைக் காண்பதாகும். யெகோவாவையும், இயேசு கிறிஸ்துவையும், தேவதூதர்களையும் நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறோம். பரலோகத்தில் இருக்கிற கடவுளுடைய அரசாங்கத்தை நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும் அதையும் நம்புகிறோம். (எபி. 11:3) கடவுளுடைய வாக்குறுதிகள் மீதும், நம்மால் பார்க்க முடியாத விஷயங்கள் மீதும், நமக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறது என்பதை எப்படிக் காட்டலாம்? நாம் வாழும் விதத்திலும், பேசும் விதத்திலும், நடந்துகொள்ளும் விதத்திலும் அதைக் காட்டலாம்.
w13 11/1 11 ¶2-5
‘அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர்’
யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்? “விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது” என்று பவுல் எழுதுகிறார். விசுவாசமில்லாமல் கடவுளைப் பிரியப்படுத்துவது கஷ்டம் என்று பவுல் சொல்லவில்லை என்பதை கவனியுங்கள். மாறாக, விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது என்று சொன்னார். வேறு வார்த்தைகளில், கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு விசுவாசம் ஒரு அடிப்படை தேவையாக இருக்கிறது.
எப்படிப்பட்ட விசுவாசம் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது? கடவுள்மீது விசுவாசம் வைப்பதற்கு நாம் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலாவதாக, “கடவுள் ஒருவர் இருக்கிறார்” என்று நம்ப வேண்டும். மற்ற மொழிப்பெயர்ப்புகள் இந்த வசனத்தைப் பற்றி சொல்லும்போது, ‘அவர் உண்மையானவர்’ என்றும் ‘அவர் உண்மையிலேயே இருக்கிறார்’ என்றும் சொல்கின்றன. கடவுள் இருக்கிறார் என்பதை நம்பவில்லை என்றால் நாம் எப்படி அவரைப் பிரியப்படுத்த முடியும்? ஆனால், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று வெறுமனே நம்புவது மட்டும் உண்மையான விசுவாசம் இல்லை. ஏனென்றால், பேய்களும்கூட அப்படி நம்பி, பயந்து நடுங்குகின்றன. (யாக்கோபு 2:19) கடவுள் உண்மையில் இருக்கிறார் என்ற நம்முடைய விசுவாசம் நம்மை செயல்பட தூண்ட வேண்டும். அதாவது, கடவுளைப் பிரியப்படுத்துகிற விதத்தில் வாழ்ந்து நம்முடைய விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும்.—யாக்கோபு 2:20, 26.
இரண்டாவதாக, கடவுள் “பலன் கொடுக்கிறார்” என்று நாம் “நம்ப வேண்டும்.” கடவுளைப் பிரியப்படுத்துவதற்காக நாம் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் வீண்போகாதென்று உண்மையான விசுவாசம் இருக்கும் நபர் முழுமையாக நம்புவார். (1 கொரிந்தியர் 15:58) நமக்கு பலன் கொடுக்க யெகோவா ஆசைப்படுகிறாரா அல்லது அவரால் நமக்கு பலன் கொடுக்க முடியுமா என்று சந்தேகப்பட்டால் நாம் எப்படி அவரைப் பிரியப்படுத்த முடியும்? (யாக்கோபு 1:17; 1 பேதுரு 5:7) கடவுள் அக்கறையில்லாதவர், போற்றுதல் இல்லாதவர், தாராள குணமில்லாதவர் என்று முடிவு செய்யும் ஒருவருக்கு பைபிளின் கடவுளைப் பற்றித் தெரியாது என்று சொல்லலாம்.
யெகோவா யாருக்கு பலன் கொடுக்கிறார்? “அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்கு” என்று பவுல் சொல்கிறார். பைபிள் மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஆராய்ச்சி குறிப்பு, இங்கு சொல்லப்பட்டுள்ள “ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்கு” என்ற கிரேக்க வார்த்தை, “வெளியே சென்று தேடுவது” என்று அர்த்தத்தைத் தருவதில்லை. மாறாக, “வணக்கத்தின்” மூலம் கடவுளிடம் வருவதைக் குறிப்பதாக சொல்கிறது. மற்றொரு குறிப்பு, இந்த கிரேக்க வினைச்சொல்லுக்கான அர்த்தத்தைப் பற்றி சொல்லும்போது, தீவிரமாகவும் ஊக்கமாகவும் முயற்சி செய்வதை அர்த்தப்படுத்துவதாக சொல்கிறது. விசுவாசத்தால் தூண்டப்பட்டு கடவுளை முழு இதயத்தோடும், பக்திவைராக்கியத்தோடும் அன்பு காட்டுகிறவர்களுக்கு அவர் பலன் கொடுக்கிறார்.—மத்தேயு 22:37.
நீங்கள் எதிர்பார்க்கிற காரியங்கள்மீது உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்
10 எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலர் பவுல் இப்படிச் சொன்னார்: “பெண்கள், இறந்துபோன தங்களுடைய அன்பானவர்களை உயிர்த்தெழுதலில் பெற்றுக்கொண்டார்கள்; வேறு சிலர், அதைவிட மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்காக, விடுதலை பெறச் சம்மதிக்காமல் சித்திரவதையைச் சகித்தார்கள்.” (எபி. 11:35) உயிர்த்தெழுதலைப் பற்றி கடவுள் கொடுத்த வாக்குறுதிமீது பலமான விசுவாசம் இருந்ததால் அன்று வாழ்ந்த நிறைய பேர் சோதனைகளைச் சகித்தார்கள், கடவுளுக்கு உண்மையாக இருந்தார்கள். எதிர்காலத்தில் கடவுள் அவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்புவார் என்றும், அவர்கள் பூமியில் முடிவில்லாமல் வாழ்வார்கள் என்றும் அவர்கள் நம்பினார்கள். நாபோத்தையும் சகரியாவையும் நினைத்துப் பாருங்கள். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்கள். (1 இரா. 21:3, 15; 2 நா. 24:20, 21) தானியேல், சிங்கக் குகையில் தூக்கி எறியப்பட்டார். அவருடைய நண்பர்கள், கொழுந்து விட்டு எரியும் தீயில் எறியப்பட்டார்கள். யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் போவதற்குப் பதிலாக அவர்கள் சாவதற்கே தயாராக இருந்தார்கள். யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுப்பார், கஷ்டங்களைச் சகிப்பதற்கு உதவுவார் என்ற பலமான விசுவாசம் அவர்களுக்கு இருந்தது.—தானி. 3:16-18, 20, 28; 6:13, 16, 21-23; எபி. 11:33, 34.
11 மிகாயா, எரேமியா போன்ற நிறைய தீர்க்கதரிசிகள் கேலி செய்யப்பட்டார்கள் அல்லது சிறையில் போடப்பட்டார்கள். எலியாவைப் போல மற்ற தீர்க்கதரிசிகள், “பாலைவனங்களிலும் மலைகளிலும் அலைந்து திரிந்து, குகைகளிலும் குழிகளிலும் தஞ்சம் புகுந்தார்கள்.” ‘எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்பியதால்,’ அவர்கள் எல்லாரும் சகிப்புத்தன்மையோடும் உண்மையோடும் இருந்தார்கள்.—எபி. 11:1, 36-38; 1 இரா. 18:13; 22:24-27; எரே. 20:1, 2; 28:10, 11; 32:2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E 804 ¶5
விசுவாசம்
விசுவாசத்துக்கான பைபிள் உதாரணங்கள். ‘திரண்ட மேகம் போன்ற சாட்சிகள்’ அன்று இருந்ததாக பவுல் குறிப்பிட்டார். (எபி 12:1) அவர்கள் ஒவ்வொருவரும் விசுவாசம் காட்டியதற்கு முக்கியக் காரணம் இருந்தது. உதாரணமாக, ஒரு ‘வாரிசின்’ மூலம் ‘பாம்பின்’ தலை நசுக்கப்படும் என்ற கடவுளின் வாக்குறுதி ஆபேலுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதோடு, தன்னுடைய பெற்றோர்களுக்கு ஏதேன் தோட்டத்தில் யெகோவா கொடுத்த தண்டனை நிறைவேறியதை ஆபேல் கண்கூடாகப் பார்த்தார். ஏதேனுக்கு வெளியே, நிலம் சபிக்கப்பட்டிருந்ததால் முட்களும் புதர்களும் மண்டிக்கிடந்தன. அதனால், ஆதாமும் அவருடைய குடும்பத்தாரும் உணவுக்காக நெற்றி வியர்வை சிந்தி உழைக்க வேண்டியிருந்தது. அதேபோல், ஏவாள் தன் கணவன்மேல் ஏக்கமாகவே இருந்ததையும், ஆதாம் தன் மனைவியை அடக்கி ஆண்டதையும் ஆபேல் கவனித்திருப்பார். அதோடு, ஏவாள் தான் பட்ட பிரசவ வேதனையைப் பற்றிக் கண்டிப்பாக ஆபேலிடம் சொல்லியிருப்பாள். அதன் பிறகு, ஏதேன் தோட்டத்தை கேருபீன்கள் காவல்காத்ததையும், அங்கே சுடர்விட்டபடி சுழன்றுகொண்டிருந்த வாளையும் ஆபேல் பார்த்திருப்பார். (ஆதி 3:14-19, 24) இவை எல்லாமே ஆபேலுக்குத் ‘தெளிவான அத்தாட்சியாக’ இருந்தன. அதனால், வாக்குப்பண்ணப்பட்ட வாரிசின் மூலமாக மீட்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஆபேலுக்குக் கிடைத்தது. எனவே, அவர் விசுவாசத்தோடு, “காயீனுடைய பலியைவிட உயர்ந்த பலியைக் கடவுளுக்குக் கொடுத்தார்.”—எபி 11:1, 4.
wp17.1 12-13
‘கடவுளுக்கு பிரியமாக நடந்துகொண்டார்’
அந்தக் கெட்ட மக்கள் கையில் ஏனோக்கு சித்திரவதை அனுபவித்து சாகாதபடி யெகோவா அவரை எடுத்துக்கொண்டார். அதாவது, அவரை மரணத்தில் தூங்க வைத்துவிட்டார். இந்த அர்த்தத்தில்தான் அவர் “சாகாதபடி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டார்” என்று பைபிள் சொல்கிறது. ஆனால் அதற்கு முன்பு அவர் “கடவுளுக்கு மிகவும் பிரியமாக நடந்துகொண்டவர் என்று நற்சாட்சி பெற்றிருந்தார்.” எப்படி? அவர் இறப்பதற்கு முன்பு பூஞ்சோலை பூமியைப் பற்றிய ஒரு தரிசனத்தை கடவுள் அவருக்கு காட்டியிருக்கலாம். இது அவர் யெகோவாவுக்கு பிரியமான ஒரு நபராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் ஏனோக்கு உட்பட மற்ற விசுவாசமுள்ள ஆண்களையும் பெண்களையும் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: அவர்கள் “எல்லாரும் விசுவாசமுள்ளவர்களாக இறந்தார்கள்.” (எபிரெயர் 11:13) ஏனோக்கின் எதிரிகள் அவருடைய உடலைத் தேடியிருக்கலாம். அவரை அவமானப்படுத்துவதற்காக அவருடைய உடலைப் பயன்படுத்த நினைத்திருக்கலாம். அல்லது பொய் மத பழக்கத்துக்காக அதைப் பயன்படுத்த நினைத்திருக்கலாம். ஆனால் அவருடைய உடலை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் யெகோவா அதை மறைத்துவிட்டார்.
செப்டம்பர் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எபிரெயர் 12-13
“கண்டிப்பு—யெகோவாவின் அன்புக்கு அடையாளம்”
“பின்னால் இருப்பவற்றை” திரும்பிப் பார்க்காதீர்கள்
18 கடுமையான அறிவுரை. நாம் அறிவுரை பெற்றதை வெறுப்புடன் நினைத்துப் பார்த்தால் என்ன நடக்கலாம்? அது வேதனை அளிக்கலாம், கோபத்தைக் கிளறலாம், அல்லது நம்மைச் சோர்ந்துபோகச் செய்யலாம். (எபி. 12:5) அறிவுரையை உடனடியாக நாம் புறக்கணித்தாலும் சரி, அப்போதைக்கு ஏற்றுக்கொண்டு பிற்பாடு புறக்கணித்தாலும் சரி, விளைவு ஒன்றுதான். அதாவது, அறிவுரையிலிருந்து பயனடைய மாட்டோம். ஆகவே, “புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்” என்ற சாலொமோனின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பது எவ்வளவு மேல்! (நீதி. 4:13) சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள அடையாளக் குறியீடுகளுக்குக் கவனம் செலுத்துகிற டிரைவரைப் போல, அறிவுரைகளை ஏற்று, அவற்றிற்குக் கீழ்ப்படிந்து, முன்னோக்கிச் செல்வோமாக.—நீதி. 4:26, 27; எபிரெயர் 12:12, 13-ஐ வாசியுங்கள்.
“நீங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம், ‘தகப்பனே’ என்று சொல்லுங்கள்”
தன்னுடைய பிள்ளைகள் நல்ல ஆட்களாக வளர வேண்டும் என்பதற்காக ஒரு அன்பான அப்பா அவர்களைக் கண்டித்து வளர்ப்பார். (எபேசியர் 6:4) அப்படிப் பிள்ளைகளைத் திருத்தும்போது அவர் உறுதியாக இருப்பார். ஆனால் அவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ள மாட்டார். அதேபோல, சில சமயங்களில் நமக்கு கண்டிப்பு தேவை என்று நம் பரலோக அப்பா நினைக்கலாம். அதனால், அவர் நம்மை அன்போடு கண்டிக்கிறார். ஆனால், ஒருபோதும் கொடூரமாக கண்டிப்பதில்லை. இயேசு தன்னுடைய அப்பாவைப் போல் தன்னுடைய சீஷர்களை அன்பாக நடத்தினார். சீஷர்கள் ஆலோசனையை உடனடியாக கடைப்பிடிக்க தவறியபோதும் இயேசு அவர்களைக் கடுமையாக நடத்தவில்லை.—மத்தேயு 20:20-28; லூக்கா 22:24-30.
கண்டித்துத் திருத்தப்படுவது—ஞானத்தைத் தருகிறது!
18 கண்டித்துத் திருத்தப்படுவது நமக்கு வேதனையைத் தரலாம், ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை ஒதுக்கித்தள்ளுவதால் வரும் விளைவுகள், அதைவிட வேதனையைத் தந்துவிடும். (எபி. 12:11) காயீன் மற்றும் சிதேக்கியா ராஜாவின் மோசமான அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். தன் தம்பி ஆபேலை காயீன் வெறுத்ததையும் அவனைக் கொல்ல நினைத்ததையும் யெகோவா பார்த்தபோது, அவனிடம், “நீ ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்? ஏன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கிறாய்? நீ மனம் மாறி நல்லது செய்தால், உன்னை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேனா? நீ நல்லது செய்யவில்லை என்றால், இதோ, பாவம் உன் கதவுக்கு வெளியில் பதுங்கியிருக்கிறது. அது உன்மேல் பாய்வதற்குக் காத்திருக்கிறது. ஆனால், நீ அதை அடக்க வேண்டும்” என்று சொல்லி அவனை எச்சரித்தார். (ஆதி. 4:6, 7) ஆனால், காயீன் அந்த எச்சரிப்பை காதில் வாங்கவே இல்லை. கடைசியில் என்ன நடந்தது? அவன் ஆபேலைக் கொலை செய்தான், அதனால் வந்த மோசமான விளைவுகளை காலமெல்லாம் அனுபவித்தான். (ஆதி. 4:11, 12) அவன் மட்டும் கடவுள் பேச்சைக் கேட்டிருந்தால், அவ்வளவு வலியும் வேதனையும் அவனுக்கு வந்திருக்குமா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஓட்டப் பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓடுங்கள்
11 ‘திரண்டிருக்கும் மேகம் போன்ற சாட்சிகள்,’ பந்தயத்தை வெறுமனே வேடிக்கை பார்க்கவோ, தங்களுக்குப் பிடித்த வீரர் அல்லது அணி ஜெயிப்பதைக் கண்டுகளிக்கவோ வந்தவர்கள் அல்ல. மாறாக, அவர்களும் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டவர்களே. அவர்கள் வெற்றிகரமாய் ஓடி எல்லைக்கோட்டைத் தொட்டவர்கள். அந்த வெற்றி வீரர்கள் இப்போது இறந்திருந்தாலும், பந்தயத்தில் ஓடுகிற புதியவர்களுக்கு இன்னமும் உற்சாக ‘குரல்கொடுத்து’ ஊக்குவிக்கிறார்கள். இப்போது கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: தன்னைச் சுற்றி நிற்பவர்கள் எல்லாரும் சாதனையாளர்கள் என்பதை ஒரு போட்டியாளர் அறிந்திருந்தால் அவருக்கு எப்படியிருக்கும்? தன் சக்தியையெல்லாம் திரட்டி இன்னும் நன்றாக ஓடுவதற்கு உந்துவிக்கப்பட மாட்டாரா? எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், வாழ்வெனும் இந்தப் பந்தயத்தில் வெல்ல முடியும் என்பதை அந்த முற்கால சாட்சிகள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆகவே, ‘திரண்டிருக்கும் மேகம் போன்ற சாட்சிகளின்’ முன்மாதிரியை எப்போதும் மனதில் வைத்திருக்கும்போது நாம் தைரியத்தைப் பெற்று, ‘ஓட்டப்பந்தயத்தில் சகிப்புத்தன்மையுடன் ஓட’ முடியும்; முதல் நூற்றாண்டு எபிரெய கிறிஸ்தவர்கள் இதைத்தான் செய்ய வேண்டியிருந்தது.
w89 12/15 22 ¶10
யெகோவாவுக்குப் பிரியமான பலிகளைச் செலுத்துங்கள்
10 ஆகவே எபிரெயர்கள், யூதேய மதத்தினரின் “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு” திரிவதைத் தவிர்க்க வேண்டியது அவசியமாயிருந்தது. (கலாத்தியர் 5:1–6) இப்படிப்பட்ட போதகங்களால் அல்ல, ஆனால் சத்தியத்தில் உறுதியாக நிலைத்திருப்பதற்கு ‘கடவுளுடைய கிருபையினாலே இருதயம் ஸ்திரப்பட’ முடியும். சிலர் போஜனத்தையும் பலிகளையும் பற்றி தர்க்கம் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் இருதயமானது “போஜனபதார்த்தங்களில்” ஸ்திரப்படுவதில்லை. இதில் “முயற்சி செய்கிறவர்கள் பலனடையவில்லை,” என்பதாக பவுல் சொன்னான். தெய்வ பக்தியினாலும், மீட்பைப் போற்றுவதினாலும் ஆவிக்குரிய நன்மைகள் கிடைக்கின்றன. ஒரு சில உணவு பதார்த்தங்களை உண்பதைப் பற்றிய அல்லது குறிப்பிட்ட நாட்களை அனுசரிப்பதைப் பற்றிய அனாவசியமான கவலைகளினால் அது கிடைப்பதில்லை. (ரோமர் 14:5–9) மேலுமாக கிறிஸ்துவின் பலி லேவி கோத்திர பலிகளைப் பயனற்றதாக்கிவிட்டது.—எபிரெயர் 9:9-14; 10:5-10.
செப்டம்பர் 30–அக்டோபர் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாக்கோபு 1-2
“பாவத்துக்கும் மரணத்துக்கும் கொண்டுபோகும் வழி”
g17.4 14
சோதனை
ஏதாவது ஒன்றை செய்வதற்கான ஆசை வரும்போது, முக்கியமாக தவறு செய்வதற்கான ஆசை வரும்போது, நாம் சோதிக்கப்படுகிறோம். உதாரணத்துக்கு, நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது, உங்களுக்குப் பிடித்த ஒரு பொருள் கண்ணில் படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை யாருக்கும் தெரியாமல் திருடிவிடலாம் என்ற எண்ணம் உடனே உங்கள் மனதிற்கு வருகிறது. உங்கள் மனசாட்சியோ அப்படிச் செய்யக் கூடாது என்று சொல்கிறது. அதனால், அந்த எண்ணத்தை விட்டொழித்துவிட்டு அங்கிருந்து போய்விடுகிறீர்கள். அந்தச் சமயத்தில், நீங்கள் சோதனையை வெற்றிகரமாக சமாளித்தீர்கள் என்றே சொல்லலாம்!
பைபிள் என்ன சொல்கிறது
ஒருவர் சோதிக்கப்படுவதால் அவர் கெட்டவர் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், நாம் எல்லாருமே சோதிக்கப்படுகிறோம் என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 10:13) இருந்தாலும், சோதனை வரும்போது நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் உண்மையிலேயே முக்கியம்! சிலர் கெட்ட ஆசைகளைப் பற்றியே யோசித்து கொண்டிருப்பதால், கடைசியில் அதற்கு இணங்கிவிடுகிறார்கள். மற்றவர்களோ ஒரு விஷயம் தவறு என்று தெரிந்தவுடன் அதைச் செய்யக் கூடாது என்று முடிவு எடுக்கிறார்கள்.
“ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்.”—யாக்கோபு 1:14.
g17.4 14
சோதனை
ஒருவர் எப்படிப் படிப்படியாக தவறு செய்துவிடலாம் என்பதைப் பற்றி பைபிள் விளக்குகிறது. “அந்த [கெட்ட] ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது, பாவம் கடைசியில் மரணத்தை உண்டாக்குகிறது” என்று யாக்கோபு 1:15 சொல்கிறது. எளிமையாக சொன்னால், ஒரு கர்ப்பிணிப் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பது எவ்வளவு நிச்சயமோ, அதேபோல கெட்ட ஆசைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் நாம் தவறு செய்துவிடுவதும் நிச்சயம்! இருந்தாலும், கெட்ட ஆசைகளுக்கு நம்மால் அடிமையாகாமல் இருக்க முடியும். சோதனையை வெற்றிகரமாகச் சமாளிக்கவும் முடியும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 253-254
ஒளி
யெகோவா ‘ஒளியின் தகப்பனாக’ இருக்கிறார். (யாக் 1:17) அவர் ‘பகலில் வெளிச்சம் தர சூரியனைப் படைத்து, ராத்திரியில் வெளிச்சம் தர நிலவுக்கும் நட்சத்திரங்களுக்கும் சட்டங்களைக் கொடுத்திருக்கிறார்.’ (எரே 31:35) அதுமட்டுமல்ல, ஆன்மீக அறிவொளியின் ஊற்றுமூலரும் அவர்தான். (2 கொ 4:6) அவருடைய வழியில் நடப்பவர்களுக்கு அவருடைய சட்டங்களும், நீதித்தீர்ப்புகளும், வார்த்தையும், வெளிச்சம்போல் இருக்கின்றன. (சங் 43:3; 119:105; நீதி 6:23; ஏசா 51:4) “உங்களுடைய ஒளியால் நாங்கள் வெளிச்சத்தைப் பார்க்கிறோம்” என்று சங்கீதக்காரன் சொன்னார். (சங் 36:9; ஒப்பிடுங்கள்: சங் 27:1; 43:3) விடியற்காலை தொடங்கி “நடுபகல்வரை” அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரிய வெளிச்சத்தைப் போல நீதிமான்களுடைய பாதை கடவுளுடைய ஞானத்தால் அதிகமதிகமாகப் பிரகாசிக்கும். (நீதி 4:18) யெகோவாவின் சட்டங்களைக் கடைப்பிடிக்கும்போது, அவர் காட்டும் வெளிச்சமான பாதையில் நடப்போம். (ஏசா 2:3-5) ஆனால், அசுத்தமான கண்ணோட்டத்தோடு அல்லது கெட்ட எண்ணத்தோடு நாம் விஷயங்களைப் பார்க்க ஆரம்பித்தால் படுபயங்கரமான ஆன்மீக இருளில் சிக்கிக்கொள்வோம். இயேசு சொன்னதுபோல், “உங்கள் கண் கெட்டதாக இருந்தால், உங்கள் முழு உடலும் இருளாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒளி உண்மையில் இருளாக இருந்தால், அது எப்பேர்ப்பட்ட இருளாக இருக்கும்!”—மத் 6:23 அடிக்குறிப்பு; ஒப்பிடுங்கள்: உபா 15:9; 28:54-57; நீதி 28:22; 2பே 2:14.
it-2-E 222 ¶4
சட்டம்
“ராஜ சட்டம்.” ‘ராஜ சட்டம்,’ மனித உறவுகள் சம்பந்தப்பட்ட மற்ற எல்லா சட்டங்களையும்விட உயர்ந்ததாகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது. (யாக் 2:8) அன்புதான் திருச்சட்ட ஒப்பந்தத்தின் சாராம்சம்; “உன்மேல் நீ அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்” என்ற இரண்டாம் கட்டளை, திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. (மத் 22:37-40) கிறிஸ்தவர்களாகிய நாம் இப்போது திருச்சட்ட ஒப்பந்தத்தின்கீழ் இல்லை என்றாலும், புதிய ஒப்பந்தத்தின்படி ராஜாக்களாகிய யெகோவா மற்றும் இயேசு கிறிஸ்துவுடைய சட்டத்தின்கீழ் இருக்கிறோம்.
“யெகோவா யார்மீது அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார்; சொல்லப்போனால், யாரையெல்லாம் தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களையெல்லாம் அவர் தண்டிக்கிறார்” என்று பவுல் சொன்னார். (எபி. 12:6) யெகோவாவுடைய ஊழியர்கள் இன்னும் சிறந்த நபர்களாக ஆவதற்கு யெகோவா அவர்களை எப்படிக் கண்டித்துத் திருத்தினார் என்று பைபிளில் வாசிக்கிறோம். அதோடு அவர்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுத்தார் என்றும் வாசிக்கிறோம். உதாரணத்துக்கு யோசேப்பு, மோசே, தாவீது பயங்கரமான கஷ்டங்களை சந்திக்க யெகோவா அனுமதித்தார். யெகோவா அவர்களோடு இருந்ததால் அந்தக் கஷ்டங்களை எல்லாம் அவர்களால் சமாளிக்க முடிந்தது. அந்த சமயத்தில் கிடைத்த பயிற்சிதான், யெகோவா கொடுத்த பெரிய பெரிய பொறுப்புகளை நன்றாக செய்து முடிக்க அவர்களுக்கு உதவி செய்தது. யெகோவா அவருடைய மக்களுக்கு எப்படிப் பயிற்சி கொடுத்திருக்கிறார், அவர்களை எப்படி வழிநடத்தியிருக்கிறார் என்பதை எல்லாம் பைபிளில் படிக்கிறோம். அப்படிப் படிக்கும்போது, யெகோவாவுக்கு நம்மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.—நீதிமொழிகள் 3:11, 12-ஐ வாசியுங்கள்.
it-2-E 629
கண்டிப்பு
தன்னுடைய ஊழியர்கள் துன்புறுத்தலை எதிர்ப்படும்போது அதை அனுமதிப்பதன் மூலம் ஒரு விதத்தில் யெகோவா அவர்களைக் கண்டிக்கிறார் அல்லது அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார். அது பிற்பாடு அவர்களுக்குச் சமாதான பலனை, அதாவது நீதியான வாழ்வை, தருகிறது. (எபி 12:4-11) கடவுளுடைய மகனும்கூட தன்னுடைய தகப்பன் அனுமதித்த வேதனைகளை அனுபவித்ததால், கரிசனையும் அனுதாபமும் உள்ள தலைமைக் குருவாக ஆகியிருக்கிறார்.—எபி 4:15.