கிறிஸ்துவின் தலைமை—உங்களுக்கு நிஜமானதாக இருக்கிறதா?
“‘தலைவர்கள்’ என்றும் அழைக்கப்படாதிருங்கள், ஏனெனில் உங்கள் தலைவர் ஒருவரே, அவர் கிறிஸ்துவே.”—மத்தேயு 23:10, NW.
1. யார் ஒருவரே உண்மை கிறிஸ்தவர்களுக்கு தலைவர்?
அது நிஸான் 11, செவ்வாய்க்கிழமை. மூன்று நாட்களுக்குப் பின், இயேசு கிறிஸ்து கொல்லப்படுவார். கடைசி முறையாக அவர் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அன்று, அங்கு கூடிவந்திருந்தவர்களுக்கும் தமது சீஷர்களுக்கும் முக்கியமான ஒரு விஷயத்தை இயேசு போதித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் ‘தலைவர்கள்’ என்றும் அழைக்கப்படாதிருங்கள், ஏனெனில் உங்கள் தலைவர் ஒருவரே, அவர் கிறிஸ்துவே.” (மத்தேயு 23:8-10, NW) எனவே, உண்மையான கிறிஸ்தவர்களுக்கு இயேசு கிறிஸ்துவே தலைவர் என்பது தெளிவு.
2, 3. யெகோவாவுக்குச் செவிகொடுப்பதும், அவர் நியமித்திருக்கிற தலைவரை ஏற்பதும் நம்முடைய வாழ்க்கையில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
2 இயேசுவின் தலைமையை நாம் ஏற்கையில், நம் வாழ்க்கையில் அது எப்பேர்ப்பட்ட நன்மைகளை அள்ளித் தருகிறது! இந்தத் தலைவரின் வருகையை முன்னறிவித்து, யெகோவா தேவன் தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலமாய் இவ்வாறு கூறினார்: “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். . . . நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். . . . இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.”—ஏசாயா 55:1-4.
3 யெகோவாவுக்குச் செவிகொடுத்து அவர் தந்திருக்கும் தலைவரும் அதிபதியுமானவரைப் பின்பற்றுகையில், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி பாதிக்கப்படும் என்பதைக் காட்டுவதற்கு தண்ணீர், பால், திராட்சரசம் ஆகிய சாதாரண திரவங்களை உருவகங்களாக ஏசாயா பயன்படுத்தினார். அதன் பலன் புத்துயிரளிக்கிறது. இது, சுரீரென்று வெயில் தகிக்கும் நாளில் ஜில்லென்று குளிர்ந்த தண்ணீரை ஒரு டம்ளர் குடித்தால் எப்படி இருக்குமோ அப்படியிருக்கிறது. சத்தியத்திற்கும் நீதிக்குமான நம்முடைய தாகம் தீர்க்கப்படுகிறது. குழந்தைகள் பலப்படுவதற்கும் வளருவதற்கும் பால் உதவி செய்வது போலவே, ‘திருவசனமாகிய ஞானப்பால்’ கடவுளுடைய உறவில் நம்மைப் பலப்படுத்தி ஆவிக்குரிய வளர்ச்சியை முன்னேற்றுவிக்கிறது. (1 பேதுரு 2:1-3) கொண்டாட்டங்களின் போது திராட்சரசம் மகிழ்ச்சியூட்டுவதை யார் மறுக்கக்கூடும்? அவ்வாறே உண்மையான கடவுளை வணங்குவதும், அவர் நியமித்திருக்கிற தலைவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதும் வாழ்க்கையை ‘சந்தோஷமாக்குகிறது.’ (உபாகமம் 16:15) அப்படியானால், இளைஞர் முதியோர், ஆண்கள் பெண்கள் என நாம் அனைவரும், கிறிஸ்துவின் தலைமை நமக்கு நிஜமாயிருப்பதைக் காட்டுவது அத்தியாவசியம். எனினும், மேசியா நம்முடைய தலைவர் என்பதை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டலாம்?
இளைஞரே—தொடர்ந்து ‘ஞானத்தில் விருத்தியடையுங்கள்’
4. (அ) பன்னிரண்டு வயது இயேசு, பஸ்காவின் சமயத்தில் எருசலேமுக்குச் சென்றபோது என்ன நடந்தது? (ஆ) பன்னிரண்டு வயதே நிரம்பிய இயேசு, விஷயங்களை எந்தளவுக்கு அறிந்திருந்தார்?
4 இளைஞருக்கு நம்முடைய தலைவர் வைத்த தலைசிறந்த முன்மாதிரியை கவனியுங்கள். இயேசுவின் இளமை பருவத்தைப் பற்றி அதிக தகவல் இல்லை என்றாலும் ஒரு சம்பவத்திலிருந்து அதிக விஷயத்தை தெரிந்துகொள்கிறோம். இயேசுவுக்கு 12 வயதானபோது, அவருடைய பெற்றோர் பஸ்காவுக்காக எருசலேமுக்கு அவரைக் கூட்டிச் சென்றார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் அவர் வேதப்பூர்வ விஷயங்களை மும்முரமாக கலந்துபேசுவதில் மூழ்கியிருந்தார். அவருடைய குடும்பத்தாரும் அவரைப் பற்றிய ஞாபகமின்றி அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். மூன்று நாட்களுக்குப் பின்பு, கவலையுற்ற அவருடைய பெற்றோராகிய யோசேப்பும் மரியாளும் அவரை தேவாலயத்தில் கண்டனர்; அங்கே அவர் ‘போதகர் நடுவில் உட்கார்ந்து, அவர்கள் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டும், அவர்களை வினாவிக்கொண்டும்’ இருந்தார். மேலும், “அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங் குறித்துப் பிரமித்தார்கள்.” கற்பனைசெய்து பாருங்கள், 12 வயதே நிரம்பிய இயேசுவால் சிந்தனையைத் தூண்டும் ஆன்மீக கேள்விகளைக் கேட்க மட்டுமல்லாமல், விவேகத்தோடு பதில்களைக் கொடுக்கவும் முடிந்தது! பெற்றோருடைய பயிற்றுவிப்பு அவருக்கு கைகொடுத்தது என்பதில் சந்தேகமில்லை.—லூக்கா 2:41-50.
5. குடும்ப பைபிள் படிப்பைக் குறித்ததில் இளைஞர்கள் எவ்வாறு தங்கள் மனப்பான்மையை சீர்தூக்கி பார்க்கலாம்?
5 ஒருவேளை நீங்கள் ஓர் இளைஞராக இருக்கலாம். உங்கள் பெற்றோர் கடவுள் பக்தியுள்ள ஊழியர்கள் என்றால், உங்கள் வீட்டில் ஒழுங்கான குடும்ப பைபிள் படிப்புத் திட்டம் இருக்கலாம். அந்தக் குடும்ப படிப்பை எவ்வாறு கருதுகிறீர்கள்? பின்வரும் கேள்விகளுக்கு சிந்தனை செலுத்துவது நன்மை பயக்கலாம்: ‘எங்கள் குடும்பத்திலுள்ள பைபிள் படிப்பு ஏற்பாட்டை நான் முழு இருதயத்துடன் ஆதரிக்கிறேனா? நான் ஒத்துழைக்கிறேனா, அந்த நேரம் பார்த்து வேறு எதையாவது செய்துகொண்டு அன்று படிக்க முடியாதபடி செய்து விடுகிறேனா?’ (பிலிப்பியர் 3:16) ‘படிப்பில் ஆர்வத்துடன் பங்குகொள்கிறேனா? பொருத்தமாயிருக்கையில், படிக்கப்படும் பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கிறேனா, அதை கடைப்பிடிப்பதன் பேரில் குறிப்பு சொல்கிறேனா? ஆவிக்குரிய முறையில் முன்னேறுகையில், “பூரண வயதுள்ளவர்களுக்கே தகு”ந்த “பலமான ஆகார”த்திற்கான ஆர்வத்தை நான் வளர்க்கிறேனா?’—எபிரெயர் 5:13, 14.
6, 7. அன்றாட பைபிள் வாசிப்புக்குரிய ஒரு திட்டம், இளைஞருக்கு எந்த அளவில் பயனுள்ளதாக இருக்கலாம்?
6 அன்றாட பைபிள் வாசிப்பு திட்டமும் பயன்மிக்கது. சங்கீதக்காரர் இவ்வாறு பாடினார்: “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாம[ல்], . . . கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.” (சங்கீதம் 1:1, 2) மோசேக்குப் பின் பொறுப்பேற்ற யோசுவா, ‘நியாயப்பிரமாண புஸ்தகத்திலிருந்தவற்றை இரவும் பகலும் தியானித்தார்.’ இது, ஞானமாய் நடக்கவும் கடவுளால் கொடுக்கப்பட்ட பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றவும் அவருக்கு உதவியது. (யோசுவா 1:8) நம்முடைய தலைவராகிய இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய [“யெகோவாவினுடைய,” NW] வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.” (மத்தேயு 4:4) மாம்சப்பிரகாரமான உணவு நமக்கு அனுதினமும் தேவையாக இருக்கிறதென்றால், ஆவிக்குரிய உணவு எவ்வளவு அதிகமாய் தேவை!
7 நிக்கோல் என்ற 13 வயது பெண் தன்னுடைய ஆவிக்குரிய தேவையை உணர்ந்ததால் ஒவ்வொரு நாளும் பைபிள் வாசிக்கத் தொடங்கினாள்.a இப்போது 16 வயதில், முழு பைபிளையும் ஒருமுறை வாசித்து முடித்துவிட்டு, இரண்டாவது தடவையாக ஏறக்குறைய பாதியை வாசித்து விட்டாள். அவள் வாசிக்கும் முறை எளிதாயுள்ளது. “ஒவ்வொரு நாளும் ஒரு அதிகாரத்தையாவது வாசிக்கணும்னு தீர்மானித்திருக்கிறேன்” என்று அவள் சொல்கிறாள். அன்றாட பைபிள் வாசிப்பு அவளுக்கு எவ்வாறு உதவி செய்திருக்கிறது? அவள் இவ்வாறு பதில் சொல்கிறாள்: “திரும்புகிற பக்கமெல்லாம் கெட்ட காரியங்கள்தான் நடக்குது. என் விசுவாசத்துக்குப் போட்டியாக பள்ளியிலும் மற்ற இடங்களிலும் நான் தினம் தினம் நெருக்கடிகளை எதிர்ப்படுகிறேன். தினமும் பைபிளை வாசிப்பதால், இந்த நெருக்கடிகளையெல்லாம் எதிர்த்து நிற்க தூண்டும் பைபிள் கட்டளைகளையும் நியமங்களையும் உடனடியாக ஞாபகத்துக்கு கொண்டுவர உதவுது, இதனால யெகோவாவும் இயேசுவும் என் பக்கத்திலேயே இருப்பதாக உணர்றேன்.”
8. ஜெபாலயத்தைக் குறித்ததில் இயேசுவின் பழக்கம் என்ன, எவ்வாறு அவருடைய மாதிரியைப் பின்பற்றலாம்?
8 ஜெபாலயத்தில் வேதாகமம் வாசிக்கப்படுகையில் செவிகொடுத்துக் கேட்பதும் அதில் பங்குகொள்வதும் இயேசுவுக்குப் பழக்கமாயிருந்தது. (லூக்கா 4:16; அப்போஸ்தலர் 15:21) இளைஞர்கள் அந்த முன்மாதிரியைப் பின்பற்றி, பைபிள் வாசிக்கப்படும், படிக்கப்படும் இடமான கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் வருவது எவ்வளவு பயனுள்ளதாயிருக்கும்! அத்தகைய கூட்டங்களுக்கு நன்றியுணர்வை காட்டும் 14 வயது ரிச்சர்ட் இவ்வாறு சொல்கிறான்: “அந்தக் கூட்டங்கள் எனக்கு பொக்கிஷம் மாதிரி. நல்லது எது கெட்டது எது, ஒழுக்கமுள்ளது எது ஒழுக்கமற்றது எது, கிறிஸ்துவைப் போன்றது எது, அப்படி இல்லாதது எது என்பதெல்லாம் அங்கு இடைவிடாமல் எனக்கு நினைப்பூட்டப்படுகின்றன. அவற்றையெல்லாம் அடிபட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.” ஆம், “யெகோவாவின் சாட்சியம் நம்பிக்கைக்குரியது. அது பேதையை ஞானியாக்குகிறது.” (சங்கீதம் 19:7, திருத்திய மொழிபெயர்ப்பு) மேலும், வாரந்தோறும் ஐந்து கூட்டங்களுக்கு செல்வதையும் நிக்கோல் ஒரு தீர்மானமாக வைத்திருக்கிறாள். அவற்றிற்காக தயார் செய்வதற்கும் இரண்டு மூன்று மணிநேரம் செலவிடுகிறாள்.—எபேசியர் 5:15, 16.
9. இளைஞர் எவ்வாறு ‘ஞானத்தில் அதிகமதிகமாய் விருத்தியடையலாம்’?
9 ‘ஒரே உண்மையான கடவுளையும் அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை’ அடைவதற்கு இளமை தக்க சமயமாக இருக்கிறது. (யோவான் 17:3, NW) நகைச்சுவை புத்தகங்களை வாசிப்பதில், டெலிவிஷன் பார்ப்பதில், வீடியோ கேம்ஸ் விளையாடுவதில், அல்லது இன்டர்நெட்டை அலசுவதில் மிகுதியான நேரத்தைச் செலவிடும் இளைஞரை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நம்முடைய தலைவரின் பரிபூரண முன்மாதிரியை உங்களால் பின்பற்ற முடியும் எனும்போது அந்த இளைஞர்களை நீங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்? சிறுவயதிலேயே, யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்வதில் இயேசு மகிழ்ச்சியடைந்தார். அதனால் கிடைத்த பலன்? ‘இயேசு ஞானத்தில் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.’ (லூக்கா 2:52) அவ்வாறே நீங்களும் விருத்தியடையலாம்.
“ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்”
10. குடும்ப வாழ்க்கை சமாதானமாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு எது உதவி செய்யும்?
10 வீடு சமாதானமும் திருப்தியும் நிறைந்த ஒரு புகலிடமாக இருக்கலாம் அல்லது சண்டை சச்சரவுக்குரிய ஒரு போர்க்களமாக இருக்கலாம். (நீதிமொழிகள் 21:19; 26:21) நாம் கிறிஸ்துவின் தலைமையை ஏற்பது, குடும்பத்தில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் அதிகரிப்பதற்கு உதவி செய்கிறது. உண்மையில், இயேசுவின் முன்மாதிரி, குடும்ப உறவுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. வேதவசனங்கள் இவ்வாறு சொல்கின்றன: “தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். . . . புருஷர்களே, உங்கள் மனைவிகளில் [“தொடர்ந்து,” NW] அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:21-25, 27) கொலோசெயிலிருந்த சபைக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.”—கொலோசெயர் 3:18-20.
11. கிறிஸ்துவின் தலைமை தனக்கு நிஜமானதாக இருக்கிறதென்று ஒரு கணவன் எவ்வாறு காட்டலாம்?
11 இந்த அறிவுரைக்கேற்ப, குடும்பத்தை கணவன் தலைமைதாங்கி நடத்த வேண்டும், மனைவி உண்மையோடு அவருக்கு உதவி செய்ய வேண்டும், பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். எனினும், கணவனின் தலைமை வகிப்பு சரியான முறையில் நடத்தப்படும்போது மாத்திரமே சந்தோஷம் கிடைக்கிறது. ஞானமுள்ள கணவன் தான் தலைமை வகிக்க வேண்டிய விதத்தை தலைவரும் வழிகாட்டியுமாக திகழும் கிறிஸ்து இயேசுவின் மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். (1 கொரிந்தியர் 11:3) இயேசு, “சபைக்கு . . . எல்லாவற்றிற்கும் மேலான தலையாக” ஆனபோதிலும், ‘ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யும்படியே’ பூமிக்கு வந்தார். (எபேசியர் 1:23; மத்தேயு 20:28) அதைப்போலவே, கிறிஸ்தவ கணவன் தன் தலைமை வகிப்பை தன்னல ஆதாயத்திற்கு அல்ல, தன் மனைவி மக்களின், ஆம், முழு குடும்பத்தின் அக்கறைகளுக்காகவே செலுத்துகிறார். (1 கொரிந்தியர் 13:4, 5) தன் தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்பண்புகளைக் கவனித்துப் பின்பற்ற நாடுகிறார். இயேசுவைப் போல், இருதயத்தில் சாந்தமும் மனத்தாழ்மையும் நிறைந்தவராக இருக்கிறார். (மத்தேயு 11:28-30) தப்பு தன்மீது இருக்கையில், “என்னை மன்னித்துக்கொள்” அல்லது “நீ சொல்வது சரி” என்றெல்லாம் சொல்வது அவருக்குக் கடினமல்ல. அவர் சிறந்த முன்மாதிரி வகித்தால், அவருக்கு ‘உதவியாயும்’ ‘ஏற்ற துணையாயும்’ ‘தோழியாயும்’ இருப்பது மனைவிக்கு எளிதாகிறது; அவரிடமிருந்து கற்றுக்கொள்வதும் அவரோடு சேர்ந்து உழைப்பதும் சுலபமாகிறது.—ஆதியாகமம் 2:20, NW; மல்கியா 2:14.
12. தலைமைத்துவ நியமத்தை எதிர்க்காமல் ஏற்கும்படி மனைவிக்கு எது உதவி செய்யும்?
12 மனைவியும் தன்னுடைய பங்கில் கணவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். என்றபோதிலும், இவ்வுலகத்தின் மனப்போக்கால் செல்வாக்கு செலுத்தப்படுவது, தலைமைத்துவ நியமத்தைப் பற்றிய அவளுடைய நோக்கை பாதிக்கலாம். மேலும் ஒரு ஆணுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் நினைப்பையே அவள் வெறுக்கத் தொடங்கலாம். கணவன் அடக்கியாள வேண்டுமென வேதவசனங்கள் சொல்வதில்லை; ஆனால் மனைவிகள் தங்கள் கணவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்று கட்டளையிடுகின்றன. (எபேசியர் 5:24) கணவன் அல்லது தகப்பன், குடும்பத்தின் பொறுப்பேற்க வேண்டுமென்றும் பைபிள் கட்டளையிடுகிறது. இந்த அறிவுரையைப் பின்பற்றுகையில், குடும்பத்தில் சமாதானமும் ஒழுங்கும் நிலவுகிறது.—பிலிப்பியர் 2:5.
13. பிள்ளைகள் கீழ்ப்படிந்திருப்பதில் என்ன முன்மாதிரியை இயேசு வைத்தார்?
13 பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். இவ்விஷயத்தில், இயேசு மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தார். 12 வயதான இயேசு, ஆலயத்தில் மூன்று நாட்கள் செலவிட்ட அந்த சம்பவத்திற்குப் பின், “அவர் அவர்களுடனே [தம் பெற்றோருடனே] கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.” (லூக்கா 2:51) பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருப்பது, குடும்பத்தில் சமாதானமும் ஒற்றுமையும் நிலவ உதவி செய்கிறது. குடும்பத்திலுள்ள எல்லோரும் கிறிஸ்துவின் தலைமைக்கு கீழ்ப்பட்டு இருப்பதால் கிடைக்கும் பலன், சந்தோஷமான ஒரு குடும்பமாகும்.
14, 15. வீட்டில் சவாலான சந்தர்ப்பத்தை எதிர்ப்படுகையில் வெற்றிகரமாக சமாளிப்பதற்கு எது நமக்கு உதவி செய்யும்? உதாரணம் தருக.
14 வீட்டில் இக்கட்டான நிலைமைகள் எழும்புகையிலுங்கூட இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவதும் அவருடைய வழிநடத்துதலை ஏற்பதுமே வெற்றிக்கான வழி. உதாரணமாக, 35 வயதான ஜெரி, ஒரு டீனேஜ் மகளுக்குத் தாயாக இருந்த லானாவை திருமணம் செய்துகொண்டார்; இது, அவர்கள் இருவரும் கற்பனை செய்திராத ஒரு சவாலை கொண்டுவந்தது. ஜெரி இவ்வாறு விளக்குகிறார்: “வெற்றிகரமான தலைவனாக இருக்க, மற்ற குடும்பங்களுக்கு வெற்றியைக் கொண்டுவரும் அதே பைபிள் நியமங்களை நான் பொருத்தி பயன்படுத்த வேண்டுமென்று எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் அவற்றை மேலுமதிக ஞானத்துடனும் பகுத்துணர்வுடனும் நான் பொருத்திப் பயன்படுத்த வேண்டுமென்பதை சீக்கிரத்தில் கண்டுபிடித்தேன்.” அவருடைய மனைவியின் முந்தின கணவருடைய மகள், தனக்கும் தன் தாயாருக்கும் குறுக்கே வந்துவிட்டதாக அவரை கருதி மிகவும் வெறுத்தாள். அந்த வெறுப்பை அவள் சொல்லிலும் செயலிலும் காட்டியதை புரிந்துகொள்ள ஜெரிக்கு கூர்ந்த பகுத்தறிவு தேவைப்பட்டது. இந்த நிலைமையை அவர் எவ்வாறு கையாண்டார்? ஜெரி இவ்வாறு பதில் சொல்லுகிறார்: “கண்டித்து வளர்க்க வேண்டிய பெற்றோரின் பொறுப்பை தற்போதைக்கு லானாவே முழுவதுமாக எடுத்துக்கொள்ளவும், அதே சமயத்தில் அந்த மகளுடன் நல்ல உறவை உண்டாக்குவதில் நான் கவனம் செலுத்தவும் இருவரும் ஒப்புக்கொண்டோம். இதனால் காலப்போக்கில், நிச்சயமாகவே நல்ல பலன்கள் கிடைத்தன.”
15 வீட்டில் பிரச்சினைகள் எழும்போது, குடும்ப உறுப்பினர்கள் ஏன் அந்த முறையில் பேசுகிறார்கள் அல்லது நடந்துகொள்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க நமக்கு பகுத்தறிவு வேண்டும். மேலும் தேவ நியமங்களை தகுந்த முறையில் பொருத்திப் பயன்படுத்துவதற்கு ஞானமும் நமக்கு வேண்டும். உதாரணமாக, இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஸ்திரீ தம்மை ஏன் தொட்டாள் என்பதை இயேசு தெளிவாக பகுத்தறிந்து, அவளை ஞானமாயும் இரக்கத்துடனும் நடத்தினார். (லேவியராகமம் 15:25-27; மாற்கு 5:30-34) ஞானமும் பகுத்தறிவும் நம்முடைய தலைவரின் தனிச்சிறப்பான பண்புகள். (நீதிமொழிகள் 8:12) அவர் எவ்வாறு நடந்துகொள்வாரோ அவ்வாறு நாம் நடந்துகொண்டால் சந்தோஷமாக இருப்போம்.
‘முதலாவது ராஜ்யத்தை தொடர்ந்து தேடுங்கள்’
16. நம்முடைய வாழ்க்கையில் முக்கிய இடத்தை எது ஏற்க வேண்டும், தம்முடைய முன்மாதிரியால் இயேசு இதை எவ்வாறு காட்டினார்?
16 தமது தலைமையை ஏற்போரின் வாழ்க்கையில் எது முக்கிய ஸ்தானம் வகிக்க வேண்டும் என்பதை இயேசு தெளிவாக கூறியிருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “அப்படியானால் முதலாவது ராஜ்யத்தையும் அவருடைய [கடவுளுடைய] நீதியையும் தொடர்ந்து தேடுங்கள்.” (மத்தேயு 6:33, NW) மேலும், இதை எவ்வாறு செய்வதென்பதை தம்முடைய முன்மாதிரியால் நமக்குக் காட்டினார். இயேசு தமது முழுக்காட்டுதலுக்குப் பிறகு 40 நாட்கள் உபவாசித்து, தியானித்து, ஜெபித்தார்; அந்நாட்களின் முடிவில், அவர் ஒரு சோதனையை எதிர்ப்பட்டார். இந்த ‘உலகத்தின் சகல ராஜ்யங்களின்’ ஆட்சி உரிமையையும் பிசாசாகிய சாத்தான் அவருக்கு அளிக்க முன்வந்தான். இதை இயேசு ஏற்றிருந்திருப்பாரேயானால், அவருடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! எனினும், கிறிஸ்து தமது பிதாவின் சித்தத்தைச் செய்வதில் கவனத்தை ஊன்ற வைத்திருந்தார். சாத்தானின் உலகத்தில் அவன் அளிக்கும் வாழ்க்கை குறுகியதாகவே இருக்கும் என்பதையும் அவர் உணர்ந்தார். பிசாசு அளிக்க முன்வந்ததை அவர் இவ்வாறு சொல்லி உடனே நிராகரித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் [“யெகோவாவை,” NW] பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே.” அதன்பிறகு, “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று கூறி சீக்கிரத்திலேயே இயேசு “பிரசங்கிக்கத் தொடங்கினார்.” (மத்தேயு 4:2, 8-10, 17) கிறிஸ்து தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் மீதிபாகமெல்லாம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியே முழுநேரமும் அறிவிப்பவரானார்.
17. ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்கள் நம் வாழ்க்கையில் முதலிடம் வகிக்கின்றன என்று எவ்வாறு காட்டலாம்?
17 கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலையையே நம்முடைய வாழ்க்கையில் முக்கிய இலக்காக வைப்பதற்கு சாத்தானுடைய உலகம் நம்மை வசீகரிக்க இடங்கொடாமல், நம் தலைவரின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும். (மாற்கு 1:17-21) ராஜ்ய அக்கறைகளுக்கு இரண்டாம் இடத்தையே கொடுக்கும் அளவுக்கு உலகப்பிரகாரமான நாட்டங்களின் வலையில் சிக்கிவிடுவது எவ்வளவு முட்டாள்தனமாயிருக்கும்! ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கிப்பதும் சீஷராக்குவதுமான இந்த ஊழியத்தை இயேசு நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். (மத்தேயு 24:14; 28:19, 20) ஆம், நமக்கு குடும்ப அல்லது மற்ற பொறுப்புகள் இருக்கலாம், ஆனால் பிரசங்கிப்பதும் கற்பிப்பதுமான நம்முடைய கிறிஸ்தவ பொறுப்பை நிறைவேற்றுவதற்கு மாலை நேரங்களையும் வார இறுதி நாட்களையும் பயன்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் அல்லவா? 2001-ன் ஊழிய ஆண்டில், சுமார் 7,80,000 பேர் முழுநேர ஊழியர்களாக அல்லது பயனியர்களாக சேவித்தார்கள் என்பது எவ்வளவு உற்சாகமளிக்கிறது!
18. ஊழியத்தில் மகிழ்ச்சியைக் கண்டடைய எது நமக்கு உதவி செய்கிறது?
18 சுவிசேஷ பதிவுகள் இயேசுவை சுறுசுறுப்பானவராகவும், கனிவான உணர்ச்சிகளுள்ளவராகவும் வருணிக்கின்றன. தம்மை சுற்றியிருந்தோரின் ஆவிக்குரிய தேவைகளை கண்டபோது, அவர்களுக்காக மனதுருகி மனமுவந்து உதவியளித்தார். (மாற்கு 6:31-34) மற்றவர்கள் மீது கொண்டுள்ள அன்பாலும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற உள்ளப்பூர்வ ஆவலாலும் ஊழியத்தில் நாம் பங்குகொள்ளும்போது, அது நமக்கு மகிழ்ச்சி தருகிறது. ஆனால் அத்தகைய ஆவலை நாம் எவ்வாறு பெறலாம்? ஜேஸன் என்ற வாலிபர் இவ்வாறு சொல்கிறார்: “நான் டீனேஜில் இருக்கையில், ஊழியத்தை அவ்வளவாய் விரும்பவில்லை.” இந்த ஊழியத்திற்கான ஆவலை வளர்த்துக்கொள்ள ஜேஸனுக்கு எது உதவி செய்தது? ஜேஸன் பதில் சொல்கிறார்: “எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை, சனிக்கிழமைதோறும் காலைநேரத்தை வெளி ஊழியத்தில் செலவிட்டோம். இது எனக்கு நல்லதாக இருந்தது, ஏனெனில், நான் எவ்வளவு அதிகமாய் வெளி ஊழியத்திற்குச் சென்றேனோ அவ்வளவு அதிகமாய் அதன் நன்மையை கண்டேன், மேலும் அதை அதிகமதிகமாக அனுபவித்தும் மகிழ்ந்தேன்.” நாமுங்கூட உற்சாகத்தோடு ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்ள வேண்டும்.
19. கிறிஸ்துவின் தலைமையைக் குறித்ததில் நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
19 கிறிஸ்துவின் தலைமையை ஏற்பது நிச்சயமாகவே புத்துயிரளிக்கிறது, பலன்தருகிறது. அதை நாம் ஏற்கையில் இளமைப் பருவமானது அறிவிலும் ஞானத்திலும் முன்னேறுவதற்குரிய சமயமாகிறது. குடும்ப வாழ்க்கை சமாதானத்திற்கும் சந்தோஷத்திற்கும் காரணமாகிறது, ஊழியம் சந்தோஷத்தையும் மனத்திருப்தியையும் தரும் ஒன்றாகிறது. அப்படியானால், நிச்சயமாகவே கிறிஸ்துவின் தலைமைத்துவம் நமக்கு நிஜமானதாக இருப்பதை நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் நாம் செய்யும் தீர்மானங்களிலும் காட்டும்படி உறுதியாய் இருப்போமாக. (கொலோசெயர் 3:23, 24) எனினும், இன்னுமொரு வழியின் மூலமாகவும், அதாவது கிறிஸ்தவ சபையின் மூலமாகவும் கிறிஸ்து நம்முடைய தலைவராக இருந்து வருகிறார். இந்த ஏற்பாட்டிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம் என்பதை அடுத்த கட்டுரை எடுத்துரைக்கும்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கடவுளால் நியமிக்கப்பட்ட நம் தலைவரைப் பின்பற்றுவது நமக்கு எவ்வாறு நன்மை பயக்குகிறது?
• இயேசுவின் தலைமையை பின்பற்ற விரும்புவதை இளைஞர் எவ்வாறு காட்டலாம்?
• கிறிஸ்துவின் தலைமைக்கு கீழ்ப்படிவோரின் குடும்ப வாழ்வில் அது என்ன பலனை தந்திருக்கிறது?
• கிறிஸ்துவின் தலைமை நமக்கு நிஜமானதாக இருக்கிறதென்று நம்முடைய ஊழியம் எவ்வாறு காட்டலாம்?
[பக்கம் 9-ன் படங்கள்]
கடவுளையும் அவர் நியமித்திருக்கிற நம் தலைவரையும் பற்றிய அறிவை அடைவதற்கு இளமை தக்க சமயம்
[பக்கம் 10-ன் படங்கள்]
கிறிஸ்துவின் தலைமைக்குக் கீழ்ப்படிவது குடும்பத்தில் சந்தோஷத்தை உண்டுபண்ணும்
[பக்கம் 12-ன் படங்கள்]
ராஜ்யத்தை இயேசு முதலாவதாக தேடினார். நீங்களும் தேடுகிறீர்களா?