தலைசிறந்த தலைமை—எங்கே கண்டடைவது?
“எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்” என பைபிள் குறிப்பிடுகிறது. (எபிரெயர் 3:4; வெளிப்படுத்துதல் 4:11) மெய் கடவுளாகிய யெகோவா நம் படைப்பாளராக இருப்பதால், அவர் ‘நம்முடைய உருவம் இன்னதென்று அறிவார்.’ (சங்கீதம் 103:14) நம்முடைய வரையறைகளையும் தேவைகளையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கிறார். அவர் அன்புள்ள கடவுளாக இருப்பதால் அந்தத் தேவைகளைத் திருப்தி செய்ய விரும்புகிறார். (சங்கீதம் 145:16; 1 யோவான் 4:8) தலைசிறந்த தலைமை வகிப்புக்கான தேவையும் அதற்கு விதிவிலக்கல்ல.
“இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்” என ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா அறிவித்தார். (ஏசாயா 55:4) தலைமை வகிக்க தலைவரின்றி தத்தளிக்கும் இன்றைய நிலைக்குத் தீர்வு காண, சர்வவல்லவராலேயே நியமிக்கப்பட்ட இந்தத் தலைவர் யார் என அடையாளம் கண்டுகொள்வதும், அவருடைய தலைமை வகிப்பை ஏற்றுக்கொள்வதும் அவசியம். அப்படியானால் முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தலைவரும் அதிபதியும் யார்? தலைவராக இருப்பதற்கு அவருக்கிருக்கும் தகுதிகள் யாவை? அவர் எங்கே நம்மை வழிநடத்தி செல்வார்? அவருடைய தலைமை வகிப்பிலிருந்து பலனடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
வாக்குப்பண்ணப்பட்ட தலைவர் வருகிறார்
சுமார் 2,500 வருடங்களுக்கு முன்பாக தானியேல் தீர்க்கதரிசியிடம் காபிரியேல் தூதன் இவ்வாறு சொன்னார்: “இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.”—தானியேல் 9:25.
யெகோவா தேர்ந்தெடுத்துள்ள தலைவர் எப்போது வருவார் என்பதைப் பற்றிய திட்டவட்டமான காலத்தை தானியேலுக்கு தூதன் தெளிவாக அறிவித்தார். எருசலேமை திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை பிறந்த பொ.ச.மு. 455-ம் வருடத்திலிருந்து கணக்கிட்டால் 69 வாரங்களின் முடிவில் அல்லது 483 வருடங்களுக்குப் பின் ‘பிரபுவாகிய மேசியா’ அல்லது தலைவர் தோன்றவிருந்தார்.a (நெகேமியா 2:1-8) அந்தக் காலப்பகுதியின் முடிவில் என்ன நிகழ்ந்தது? “திபேரியு ராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியு பிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், . . . இருந்த காலத்தில் [பொ.ச. 29] வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று. அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்” என சுவிசேஷ எழுத்தாளராகிய லூக்கா விவரிக்கிறார். அந்தச் சமயத்தில் மேசியாவாகிய தலைவரை ‘மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.’ (லூக்கா 3:1, 2, 6, 15; பொது மொழிபெயர்ப்பு) ஜனக்கூட்டத்தாரெல்லாம் யோவானிடம் வந்தபோதிலும் அவர் அந்தத் தலைவர் அல்ல.
பொ.ச. 29-ல், கிட்டத்தட்ட அக்டோபர் மாதத்தில் யோவானிடம் முழுக்காட்டுதல் பெறும்படி நாசரேத்தை சேர்ந்த இயேசு வந்தார். “ஆவியானவர் [“ஆவி,” NW] புறாவைப் போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங் [“முழுக்காட்டுதல்,” NW] கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங் கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன்” என்பதாக யோவான் சாட்சியம் அளித்தார். (யோவான் 1:32-34) முழுக்காட்டுதலின் போது இயேசு அபிஷேகம் பண்ணப்பட்ட தலைவராகிய மேசியா அல்லது கிறிஸ்து ஆனார்.
ஆம், ‘ஜனங்களின் [வாக்குப்பண்ணப்பட்ட] தலைவராகவும், அதிபதியாகவும்’ இயேசு கிறிஸ்து நிரூபித்தார். தலைவராக அவருடைய குணங்களை நாம் ஆராய்ந்தால், இலட்சிய தலைவரிடம் இன்று எதிர்பார்க்கப்படும் சகல குணங்களையும் அவர் மிஞ்சி நிற்பதை நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
மேசியா—இலட்சிய தலைவர்
தலைசிறந்த தலைவர் தெளிவான வழிநடத்துதலைக் கொடுக்கிறார், பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்குத் தேவையான திடநம்பிக்கையையும் திறமையையும் பெற்றுக்கொள்ள தன் பராமரிப்பில் உள்ளவர்களுக்கு உதவுகிறார். ‘இது 21-ம் நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவரிடம் எதிர்பார்க்கப்படும் தகுதிகளில் ஒன்று’ என சொல்கிறது 21-ம் நூற்றாண்டின் தலைமைத்துவம்: 100 முக்கிய தலைவர்களுடன் உரையாடல் என்ற ஆங்கில புத்தகம். அன்றாட பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிக்க இயேசு தமக்குச் செவிசாய்த்தவர்களை எப்பேர்ப்பட்ட விதத்தில் சிறப்பாக தயார்படுத்தினார்! மலைப் பிரசங்கம் எனும் அவருடைய பிரசித்தி பெற்ற சொற்பொழிவுக்கு சற்று கவனம் செலுத்துங்கள். மத்தேயு 5 முதல் 7 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகளில் ஈடிணையற்ற நடைமுறையான ஆலோசனைகள் மண்டிக்கிடக்கின்றன.
உதாரணத்திற்கு, தனிப்பட்ட விதத்தில் எழும் மனஸ்தாபங்களை சரிசெய்வதற்கு இயேசு கொடுத்த அறிவுரையைக் கவனியுங்கள். “ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி [“சமரசம் செய்து,” NW], பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து” என அவர் சொன்னார். (மத்தேயு 5:23, 24) மற்றவர்களுடன் சமரசம் செய்ய முன்வருவது, எடுக்க வேண்டிய தலையாய நடவடிக்கை; இது மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின்படி எருசலேமிலிருந்த ஆலய பலிபீடத்தில் பலிகளை செலுத்துதல் போன்ற மத சம்பந்தமான கடமைகளை நிறைவேற்றுவதைவிட மிக முக்கியமானது. இதை செய்யாவிட்டால், வணக்க சம்பந்தமான செயல்களை கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார். நூற்றாண்டுகளுக்கு முன்பு இயேசுவின் அறிவுரை எந்தளவுக்கு நடைமுறையானதாக இருந்ததோ அந்தளவுக்கு அது இன்றும் உள்ளது.
ஒழுக்கக்கேடு எனும் வலையில் சிக்காமல் தப்பித்துக்கொள்வதற்கும் இயேசு தமக்கு செவிசாய்ப்பவர்களுக்கு உதவினார். “விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று” என அவர்களுக்குப் புத்திமதி கூறினார். (மத்தேயு 5:27, 28) எப்பேர்ப்பட்ட பொருத்தமான எச்சரிக்கை! மோசமான எண்ணங்களில் மனதை லயிக்க அனுமதித்து விபசாரத்தில் போய் முடிவடையும் பாதையில் ஏன் கால் வைக்க வேண்டும்? வேசித்தனமும் விபசாரமும் இருதயத்திலிருந்து பிறப்பவை என இயேசு சொன்னார். (மத்தேயு 15:18, 19) நம்முடைய இருதயத்தைக் காத்துக்கொள்வதே விவேகமானது.—நீதிமொழிகள் 4:23.
சத்துருவை சிநேகிப்பது, தயாள குணத்தை காட்டுவது, பொருளாதார, ஆன்மீக காரியங்களை சரியாக நோக்குவது போன்ற அநேக விஷயங்களின் பேரில் ஒப்பற்ற புத்திமதி மலைப் பிரசங்கத்தில் உள்ளது. (மத்தேயு 5:43-47; 6:1-4, 19-21, 24-34) ஜெபிப்பது எப்படி என தமக்கு செவிசாய்த்த கூட்டத்தாருக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் கடவுளுடைய உதவியை நாடுவதற்கான வழியையும் இயேசு காண்பித்தார். (மத்தேயு 6:9-13) மேசியாவாகிய தலைவர், மனிதகுலத்திற்கே உரிய பொதுவான பிரச்சினைகளை சமாளிப்பதற்கு தம்மை பின்பற்றுவோரை பலப்படுத்தி, தயார்படுத்துகிறார்.
ஒரு குறிப்பை சொல்லுகையில், “உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்” அல்லது “உரைக்கப்பட்டது” என்ற சொற்றொடரை இயேசு மலைப் பிரசங்கத்தில் ஆறு முறை உபயோகித்தார், ஆனால் அதன் பிறகு, “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என குறிப்பிட்டு வேறுபட்ட கருத்தைத் தெரிவித்தார். (மத்தேயு 5:21, 22, 27, 28, 31-34, 38, 39, 43, 44) இதிலிருந்து இரண்டு விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது: அவருக்கு செவிசாய்த்துக் கொண்டிருந்தவர்கள் பரிசேயரின் வாய்வழி பாரம்பரியங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட விதத்தில் காரியங்களை பழக்கமாக செய்து வந்தார்கள்; ஆனால் இயேசுவோ தற்போது வித்தியாசமான வழியை, அதாவது மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளும் வழியைக் காட்டினார். இவ்வாறு, இயேசு மாபெரும் மாற்றத்தை அறிமுகப்படுத்தினார், அதையும் தம்மை பின்பற்றுகிறவர்கள் எளிதில் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அளித்தார். ஆம், ஜனங்கள் தங்கள் வாழ்க்கையில் ஆன்மீகத்திலும் தார்மீகத்திலும் மாபெரும் மாற்றங்களைச் செய்யும்படி இயேசு தூண்டுவித்தார். அதுவே உண்மை தலைவருக்குரிய அடையாளம்.
இத்தகைய மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது எத்தனை கடினம் என்பதை மேலாண்மை பற்றிய பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது. “மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவருக்கு, பொது நலத் தொண்டருக்குரிய மென்மை, மனோதத்துவ நிபுணருக்குரிய பகுத்துணர்வு, மாரத்தான் ஓட்டக்காரருக்குரிய உள்ளுரம், புல்டாக்குக்குரிய துணிவு, தன்னைத்தான் சார்ந்திருக்கும் துறவிக்குரிய மனப்பான்மை, புனிதருக்குரிய பொறுமை ஆகியவை ஒருங்கே தேவை. இப்படி அனைத்து குணங்களும் குடிகொண்டிருந்தாலும் வெற்றிக்கு உறுதியளிக்க முடியாது” என அது குறிப்பிடுகிறது.
“தன் தொண்டர்கள் நடந்துகொள்ள வேண்டுமென விரும்பும் அதே விதத்தில் தலைவர்களும் நடந்துகொள்ள வேண்டும்” என “தலைமைத்துவம்: குணங்கள் முக்கியமா?” என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டது. தலைசிறந்த தலைவர் தான் கற்பிப்பதை உண்மையிலே கடைப்பிடிக்கிறவர். இது இயேசு கிறிஸ்துவைப் பொறுத்த வரை எவ்வளவு உண்மை! ஆம், தம்முடன் இருந்தவர்களுக்கு தாழ்மையைக் கற்பித்தார், அவர்களுடைய பாதங்களைக் கழுவுவதன் மூலம் நடைமுறையான பாடத்தையும் புகட்டினார். (யோவான் 13:5-15) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்க தம்முடைய சீஷர்களை மட்டும் அவர் அனுப்பி வைத்துவிடவில்லை, ஆனால் அந்த ஊழியத்தில் அவர்தாமே முழுமூச்சுடன் மும்முரமாக பங்குகொண்டார். (மத்தேயு 4:18-25; லூக்கா 8:1-3; 9:1-6; 10:1-24; யோவான் 10:40-42) தலைமை வகிப்புக்குக் கீழ்ப்படிவதில் இயேசு முன்மாதிரி வைத்தார். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்” என தம்மைக் குறித்து அவர் சொன்னார்.—யோவான் 5:19.
இயேசு என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதைப் பற்றி இதுவரை கலந்தாலோசித்ததிலிருந்து அவர் ஓர் இலட்சிய தலைவர் என்பது தெளிவாக தெரிகிறது. தலைமை வகிப்புக்கு மனிதர்கள் எதிர்பார்க்கும் எல்லா தராதரங்களையும் உண்மையில் அவர் மிஞ்சி நிற்கிறார். இயேசு பரிபூரணர். தம்முடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பிறகு அவர் அழியாமையைப் பெற்றிருப்பதால் அவர் என்றென்றும் வாழ்பவர். (1 பேதுரு 3:18; வெளிப்படுத்துதல் 1:13-18) எந்த மானிட தலைவராவது இந்தத் தகுதிகளில் சரிநிகர் சமானமாக முடியுமா?
நாம் என்ன செய்ய வேண்டும்?
கடவுளுடைய ராஜ்யத்தை அரசாளும் அரசராக, மேசியாவாகிய தலைவர் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு ஆசீர்வாதங்களை அபரிமிதமாக அளிப்பார். இதன் சம்பந்தமாக பைபிள் வாக்குறுதி அளிப்பதாவது: “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:11) “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” (மீகா 4:4) “தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இன்று உலகம் தலைமை வகிக்க தலைவர் இல்லாத குறையோடு தத்தளிக்கிறது. எனினும், இயேசு கிறிஸ்து சாந்த குணமுள்ளவர்களை சமாதானம் கொஞ்சும் புதிய உலகிற்கு வழிநடத்தி செல்கிறார்; அங்கு கீழ்ப்படிதலுள்ள மனிதகுலம் யெகோவா தேவனை வணங்குவதில் ஐக்கியப்பட்டிருக்கும், பரிபூரணத்தை நோக்கி முன்னேறும். மெய் கடவுளையும் அவரால் நியமிக்கப்பட்ட தலைவரையும் பற்றிய அறிவை நாம் பெற்றுக்கொள்வதற்கும் அந்த அறிவுக்கு இசைய நடப்பதற்கும் நேரத்தை ஒதுக்குவது எவ்வளவு முக்கியம்!—யோவான் 17:3.
ஒருவருக்கு மனமார்ந்த போற்றுதலை தெரிவிப்பதற்கு ஒரு வழி அவரைப் பின்பற்றுவது ஆகும். அப்படியென்றால், மனித சரித்திரத்தில் ஈடிணையற்ற தலைவராக விளங்கும் இயேசு கிறிஸ்துவை பின்பற்ற நாம் முயல வேண்டாமா? அவரை நாம் எப்படி பின்பற்றலாம்? அவருடைய தலைமை வகிப்பை ஏற்றுக்கொள்வது நம்முடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தக் கேள்விகளும் இன்னும் மற்றவையும் அடுத்த இரண்டு கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! என்ற புத்தகத்தில் பக்கங்கள் 186-92-ஐக் காண்க.
[பக்கம் 4-ன் படம்]
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரின் வருகையை தானியேல் முன்னறிவித்தார்
[பக்கம் 7-ன் படம்]
வாழ்க்கையின் பிரச்சினைகளை சமாளிக்க இயேசுவின் போதனைகள் ஜனங்களை தயார்படுத்தின
[பக்கம் 7-ன் படம்]
கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்தை சமாதானம் கொஞ்சும் புதிய உலகிற்கு இயேசு வழிநடத்துவார்