அதிகாரம் 36
படை அதிகாரியின் விசுவாசம்
படை அதிகாரியின் வேலைக்காரனைக் குணமாக்குகிறார்
விசுவாசம் இருந்தால் ஆசீர்வாதம் கிடைக்கும்
மலைப்பிரசங்கத்தைக் கொடுத்த பிறகு, இயேசு கப்பர்நகூமுக்குப் போகிறார். அப்போது, யூதர்களின் பெரியோர்களில் சிலர் அவரிடம் வருகிறார்கள். ரோமப் படை அதிகாரியான, அதாவது நூறு வீரர்களுக்கு அதிகாரியான, ஒருவர்தான் அவர்களை அனுப்பியிருந்தார்.
அந்த அதிகாரி வேறு தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இயேசுவிடம் உதவி கேட்கிறார். ஏனென்றால், அந்தப் படை அதிகாரிக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு, சாகிற நிலையில் இருக்கிறான். அவன் “பக்கவாதத்தால் ரொம்ப அவதிப்படுகிறான், வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்று அந்த யூதர்கள் இயேசுவிடம் தெரிவிக்கிறார்கள்; ஒருவேளை, அவன் வலியில் துடித்துக்கொண்டிருந்திருக்கலாம். (மத்தேயு 8:6) இந்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அந்தப் படை அதிகாரி தகுதியானவர்தான் என்று இயேசுவிடம் அவர்கள் சொல்கிறார்கள். ஏனென்றால், அந்த அதிகாரி “நம்முடைய மக்களை நேசிக்கிறார்; இங்கே ஒரு ஜெபக்கூடத்தையும் கட்டித் தந்திருக்கிறார்” என்று சொல்கிறார்கள்.—லூக்கா 7:4, 5.
சீக்கிரத்திலேயே, படை அதிகாரியின் வீட்டுக்குப் போவதற்காக அந்த யூதர்களோடு இயேசு புறப்படுகிறார். அவருடைய வீட்டுக்குச் சற்றுத் தூரத்தில் இயேசு வந்துகொண்டிருக்கும்போதே, படை அதிகாரி தன் நண்பர்களை அவரிடம் அனுப்புகிறார். “ஐயா, உங்களுக்குச் சிரமம் வேண்டாம்; நீங்கள் என்னுடைய வீட்டுக்குள் அடியெடுத்து வைப்பதற்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. உங்களை வந்து பார்ப்பதற்கும்கூட தகுதி இல்லை” என்று அவரிடம் சொல்லச் சொல்கிறார். (லூக்கா 7:6, 7) மற்றவர்களுக்குக் கட்டளையிட்டே பழக்கப்பட்ட வாயிலிருந்து எவ்வளவு தாழ்மையான வார்த்தைகள்! வேலைக்காரர்களைக் கொடுமைப்படுத்துகிற ரோமர்களைப் போல இவர் இல்லை என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.—மத்தேயு 8:9.
மற்ற தேசத்து ஆட்களோடு யூதர்கள் பழக மாட்டார்கள் என்பது இந்தப் படை அதிகாரிக்குத் தெரிந்திருக்கும். (அப்போஸ்தலர் 10:28) ஒருவேளை இதை மனதில் வைத்துதான் அவர் தன்னுடைய நண்பர்களை அனுப்பி, “ஒரு வார்த்தை சொல்லுங்கள், என் வேலைக்காரன் குணமாகட்டும்” என்று இயேசுவிடம் சொல்லச் சொல்லியிருக்கலாம்.—லூக்கா 7:7.
அதைக் கேட்டதும் இயேசுவுக்குப் பயங்கர ஆச்சரியம்! அதனால், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இஸ்ரவேலில்கூட இப்பேர்ப்பட்ட விசுவாசத்தை நான் பார்த்ததில்லை” என்று சொல்கிறார். (லூக்கா 7:9) அதிகாரியின் நண்பர்கள் அவருடைய வீட்டுக்குத் திரும்பிப் போனபோது, அந்த வேலைக்காரன் குணமாகியிருந்தான்.
விசுவாசம் வைக்கிற வேறு தேசத்து மக்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த இயேசு அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். “கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் நிறைய பேர் வந்து, பரலோக அரசாங்கத்தில் ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் விருந்து சாப்பிட உட்காருவார்கள்” என்கிறார். விசுவாசம் வைக்காத யூதர்களுக்கு என்ன ஆகும்? அவர்கள் “வெளியே இருட்டில் தள்ளப்படுவார்கள். அங்கே அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 8:11, 12.
கடவுளுடைய அரசாங்கத்தில் இயேசுவுடன் ஆட்சி செய்கிற வாய்ப்பு முதலில் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் ஒதுக்கித்தள்ளப்படுவார்கள். ஆனால், வேறு தேசத்தைச் சேர்ந்தவர்கள் “பரலோக அரசாங்கத்தில்” அவருடன் விருந்து சாப்பிடும் அழைப்பைப் பெறுவார்கள்.