இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
உபவாசத்தைக் குறித்து கேட்டார்கள்
பொச. 30-ல் ஆசரிக்கப்பட்ட பஸ்காவுக்கு இயேசு போய்வந்து ஏறக்குறைய ஒரு வருடம் கடந்துவிட்டது. முழுக்காட்டுபவனாகிய யோவான் சிறையிலிடப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. தன்னுடைய சீஷர்கள் எல்லாரும் கிறிஸ்துவின் சீஷர்களாக ஆகவேண்டும் என்று அவன் விரும்பியபோதும் எல்லாருமே அவருடைய சீஷர்களாகிவிடவில்லை.
இப்பொழுது சிறையிடப்பட்டிருக்கும் யோவானின் சீஷரில் சிலர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோம்; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்ன?” என்று கேட்கிறார்கள். பரிசேயர்கள் தங்களுடைய மத சடங்காக வாரத்தில் இருமுறை உபவாசிக்கும் பழக்கத்திலிருக்கிறார்கள். யோவானின் சீஷர்களும் அதுபோன்ற ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள் போலும். ஒருவேளை அவர்கள் யோவானின் சிறையிருப்பு குறித்து துக்கிப்பவர்களாய் உபவாசிக்கவுங்கூடும், இயேசுவின் சீஷர்களோ துக்கத்தை வெளிப்படுத்தும் இந்த உபவாசத்தில் ஏன் தங்களோடு சேர்ந்துகொள்ளாமலிருக்கிறார்கள் என்று வியப்படைகிறார்கள்.
இதற்குப் பதில் சொல்பவராக இயேசு பின்வருமாறு விளக்குகிறார்: “மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.”
யோவான் தாமே இயேசுவை மணவாளன் என்று சொன்னதை யோவானின் சீஷர்கள் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். எனவே இயேசு இருக்கும்போது உபவாசிப்பது பொருத்தமாக இருக்கும் என்று யோவான் கருதியிருக்க மாட்டான்; இயேசுவின் சீஷர்களுங்கூட அப்படிக் கருதவில்லை. பின்பு இயேசு மரிக்கையில் அவருடைய சீஷர்கள் துக்கிக்கிறார்கள், உபவாசமிருக்கிறார்கள். ஆனால் அவர் உயிர்த்தெழுந்து பரலோகத்துக்குப் போன பின்பு, துயரப்படுகிறவர்களாய் உபவாசிப்பதற்கு எந்தக் காரணமும் இருக்கவில்லை.
அடுத்தபடியாக, இயேசு பின்வரும் உதாரணங்களைப் பயன்படுத்துகிறார்: “ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்க மாட்டான், இணைத்தால் அதினோடே இணைத்த புதிய துண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். ஒருவனும் புது திராட்ச ரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்து வைக்க மாட்டான்; வார்த்து வைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தை புது துருத்திகளில் வார்த்து வைக்கவேண்டும்.” இந்த உதாரணங்களுக்கும் உபவாசித்தலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
தம்முடைய சீஷர்கள் உபவாசிப்பது போன்ற யூத மதத்தின் பழைய பழக்கங்களைப் பின்பற்றும்படி எவரும் எதிர்பார்க்கக்கூடாது என்பதை யோவானின் சீஷர்கள் மதித்துணர இயேசு உதவிசெய்துகொண்டிருந்தார். புறக்கணிப்பதற்குத் தயாராக இருந்த பழைய, கிழிந்துபோன மத முறைகளை ஒட்டுப்போடவும் தொடர்ந்து கடைபிடிக்கவும் அவர் வரவில்லை. மனிதரின் பாரம்பரியங்களினாலான அந்த நாளைய யூத மத முறைமைக்குக் கிறிஸ்தவ மதம் இசைந்துபோக அனுமதிக்கப்படாது. இல்லை, பழைய வஸ்திரத்தில் புதிய துண்டை இணைப்பது அல்லது பழைய துருத்திகளில் புதிய திராட்சரசத்தை வார்ப்பது போன்று இருக்க முடியாது. மத்தேயு 9:14-17; மாற்கு 2:18-22; லூக்கா 5:33-39; யோவான் 3:27-29.
◆ யாருக்கு உபவாசிக்கும் பழக்கம் இருந்தது? என்ன நோக்கத்துக்காக?
◆ இயேசுவின் சீஷர்கள் ஏன் அவர் தங்களோடு இருக்கும்போது உபவாசிக்கவில்லை? பின்பு உபவாசிப்பதற்கான காரணம் எப்படிச் சீக்கிரத்திலேயே ஒழிந்துபோயிற்று?
◆ இயேசு என்ன உதாரணங்கள் கொடுத்தார்? அவை அர்த்தப்படுத்துவது என்ன?
(w86 6/1)