“தேவன் அன்பாகவே இருக்கிறார்”
“அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்.”—1 யோவான் 4:8.
1-3. (அ) யெகோவாவின் பண்புகளில் அன்பைப் பற்றி பைபிள் என்ன குறிப்பை சொல்கிறது, இந்தக் குறிப்பு எந்த விதத்தில் தனித்தன்மை வாய்ந்தது? (ஆ) “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என பைபிள் ஏன் சொல்கிறது?
யெகோவாவின் பண்புகள் அனைத்தும் ஈடிணையற்றவை, பரிபூரணமானவை, கவரத்தக்கவை. ஆனால் யெகோவாவின் பண்புகள் அனைத்திலும் மிகவும் விரும்பத்தக்கது அன்பாகும். யெகோவாவின் அன்பைப் போல வேறு எந்தப் பண்பும் அந்தளவுக்கு நம்மை அவரிடம் நெருங்கி வரச் செய்யாது. அந்த அன்பே அவரது பிரதான பண்பாக இருப்பது சந்தோஷத்துக்குரிய விஷயம். அது பிரதான பண்பாக இருப்பது நமக்கு எப்படி தெரியும்?
2 அன்பைப் பற்றி பைபிள் ஒரு விஷயத்தை சொல்கிறது; யெகோவாவின் மற்ற பிரதான குணங்களைப் பற்றி அது ஒருபோதும் அவ்வாறு சொல்வதில்லை. தேவன் வல்லமையாக இருக்கிறார், தேவன் நீதியாக இருக்கிறார், அல்லது தேவன் ஞானமாக இருக்கிறார் என்றெல்லாம் வேதவசனங்கள் சொல்வதில்லை. அந்தக் குணங்களை அவர் பெற்றிருக்கிறார், இம்மூன்று குணங்களைப் பொறுத்த வரையில் அவரே அவற்றிற்கு ஊற்றுமூலர். ஆனால் அன்பைப் பொறுத்ததில் அதிக ஆழமான ஒரு கருத்து 1 யோவான் 4:8-ல் சொல்லப்பட்டுள்ளது: ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்.’ கடவுளுடைய இயல்பின் சாராம்சமே அன்பு. பொதுவாக, அதை நாம் இவ்வாறு யோசித்துப் பார்க்கலாம்: யெகோவாவின் வல்லமை, செயல்பட அவருக்கு உதவுகிறது. அவருடைய நீதியும் ஞானமும் அவர் செயல்படும் விதத்தை வழிநடத்துகின்றன. ஆனால் யெகோவாவின் அன்போ செயல்படும்படி அவரை உந்துவிக்கிறது. மேலும், பிற குணங்களை அவர் பயன்படுத்துகிற விதத்திலும் அவருடைய அன்பு எப்பொழுதும் இழையோடுகிறது.
3 யெகோவா அன்பின் உருவாகவே இருக்கிறார் என அடிக்கடி சொல்லப்படுகிறது. ஆகவே, அன்பைப் பற்றி நாம் கற்றுக்கொள்ள விரும்பினால், நாம் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். எனவே யெகோவாவின் ஈடிணையற்ற அன்பின் சில அம்சங்களை நாம் ஆராய்வோமாக.
மகத்தான அன்பின் செயல்
4, 5. (அ) மனித சரித்திரத்திலேயே மகத்தான அன்பின் செயல் எது? (ஆ) இதுவரை உருவான அன்பின் கட்டிலேயே பலமான அன்பின் கட்டால் யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் ஐக்கியப்பட்டிருப்பதாக ஏன் சொல்லலாம்?
4 யெகோவா அநேக வழிகளில் அன்பு காட்டியிருக்கிறார், ஆனால் ஒரு வழி மற்றெல்லாவற்றையும்விட தனிச்சிறப்பு மிக்கது. அது எது? நமக்காக வேதனையை அனுபவித்து மரிக்கும்படி அவர் தம்முடைய குமாரனை அனுப்பியது. இதை, மனித சரித்திரத்திலேயே மகத்தான அன்பின் செயல் என சொல்வது பொருத்தமானதே. ஏன் அப்படி சொல்லலாம்?
5 “படைப்பனைத்திலும் தலைப்பேறு” என இயேசுவை பைபிள் அழைக்கிறது. (கொலோசெயர் 1:15, பொது மொழிபெயர்ப்பு) சற்று கற்பனை செய்து பாருங்கள்—இந்த அண்டம் தோன்றுவதற்கு முன்னரே யெகோவாவின் குமாரன் வாழ்ந்து வந்தார்! அப்படியானால், பிதாவும் குமாரனும் எவ்வளவு காலம் சேர்ந்து இருந்தனர்? இந்த அண்டத்திற்கு 1,300 கோடி வயதாகிறது என அறிவியலாளர்கள் சிலர் கணக்கிடுகின்றனர். ஒருவேளை இந்த மதிப்பீடு சரியாக இருந்தாலும்கூட, இது நிச்சயமாகவே யெகோவாவின் தலைப்பேறான குமாரனுடைய ஆயுட்காலத்தை குறிப்பிடுவதற்குப் போதிய நீளமுடையதாக இருக்காது! அப்படியென்றால் இத்தனை யுகங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? பிதாவின் ‘கைதேர்ந்த வேலையாளாக’ இந்தக் குமாரன் மகிழ்ச்சியோடு வேலை செய்தார். (நீதிமொழிகள் 8:30, NW; யோவான் 1:3) ஆகவே யெகோவாவும் அவருடைய குமாரனும் ஒன்றுசேர்ந்து எல்லாவற்றையும் உருவாக்கினர். எப்பேர்ப்பட்ட பூரிப்பும் மகிழ்ச்சியும் மிக்க சமயங்களை அவர்கள் அனுபவித்தனர்! அப்படியானால், கோடானு கோடி ஆண்டுகளாக நிலவும் பந்தத்தின் வலிமையை நம்மில் யாரால் முழுமையாக உணர முடியும்? இதுவரை உருவான அன்பின் கட்டிலேயே பலமான அன்பின் கட்டால் யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
6. இயேசு முழுக்காட்டுதல் பெற்ற சமயத்தில் அவரைப் பற்றிய தன் உணர்ச்சிகளை யெகோவா எவ்வாறு வெளிப்படுத்தினார்?
6 இருந்தாலும், மனித குழந்தையாக பிறப்பதற்கு தமது குமாரனை இந்தப் பூமிக்கு பிதா அனுப்பினார். இதற்காக, பரலோகத்தில் தமது ஆசை குமாரனோடு குலவி மகிழுவதையே சில பத்தாண்டுகளுக்கு தியாகம் செய்தார். இயேசு பரிபூரண மனிதராக வளர்ந்து வருவதை பரலோகத்திலிருந்து அவர் மிகுந்த ஆர்வத்தோடு கவனித்தார். சுமார் 30 வயதில், இயேசு முழுக்காட்டுதல் பெற்றார். அந்த சமயத்தில் பிதாவே பரலோகத்திலிருந்து இவ்வாறு சொன்னார்: “இவர் என்னுடைய நேச குமாரன், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன்.” (மத்தேயு 3:17, NW) முன்னுரைக்கப்பட்ட அனைத்தையும், அதாவது அவரிடம் எதிர்பார்க்கப்பட்ட அனைத்தையும் இயேசு உண்மையோடு நிறைவேற்றியதைக் கண்டு அவருடைய பிதா அகமகிழ்ந்திருக்க வேண்டும்!—யோவான் 5:36; 17:4.
7, 8. (அ) பொ.ச. 33, நிசான் 14 அன்று இயேசு எவற்றை அனுபவிக்க வேண்டியிருந்தது, அவருடைய பரலோக பிதா எவ்வாறு பாதிக்கப்பட்டார்? (ஆ) தமது குமாரன் பாடுபட்டு மரிப்பதற்கு யெகோவா ஏன் அனுமதித்தார்?
7 ஆனால் பொ.ச. 33, நிசான் 14 அன்று இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு, கோபத்தில் கொதித்தெழுந்த கூட்டத்தாரால் கைதுசெய்யப்பட்ட போது யெகோவா எப்படி உணர்ந்தார்? இயேசு பரிகசிக்கப்பட்டு, எச்சில் துப்பப்பட்டு, முஷ்டியால் தாக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? வாரினால் அடிக்கப்பட்டு, அவருடைய முதுகு நார் நாராக கிழிக்கப்பட்டபோது எப்படி உணர்ந்தார்? கைகளிலும் கால்களிலும் ஆணி அடிக்கப்பட்டு, கழுமரத்தில் தொங்கிக் கொண்டிருக்கையில் மக்கள் அவரைப் பார்த்து நிந்தித்தபோது எப்படி உணர்ந்தார்? அவருடைய நேசகுமாரன் தாங்கொணா வேதனையில் துடித்துக்கொண்டு அவரை நோக்கி கூக்குரலிட்டபோது அந்தத் தகப்பன் எப்படி உணர்ந்தார்? இயேசு தமது இறுதி மூச்சை விட்டபோது, படைப்பின் சமயத்திலிருந்து முதன்முறையாக தம் நேச குமாரன் இல்லாமல் போனதைக் கண்டு யெகோவா எப்படி உணர்ந்தார்?—மத்தேயு 26:14-16, 46, 47, 56, 59, 67; 27:26, 38-44, 46; யோவான் 19:1.
8 யெகோவாவுக்கு உணர்ச்சிகள் இருப்பதால் தமது குமாரன் மரிக்கையில் அவர் அனுபவித்த வேதனை, வார்த்தைகளில் வெளிப்படுத்தும் நமது வல்லமைக்கு அப்பாற்பட்டது. நம்மால் விவரிக்க முடிந்ததெல்லாம், அதை ஏன் அனுமதித்தார் என்பதே. அந்த வேதனையையெல்லாம் பிதா ஏன் வருவித்துக் கொண்டார்? யோவான் 3:16-ல் அருமையான ஒன்றை யெகோவா நமக்கு வெளிப்படுத்துகிறார்; இந்த பைபிள் வசனம் மிக முக்கியமானதாக இருப்பதால் சிறிய சுவிசேஷம் என அழைக்கப்படுகிறது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என இது சொல்கிறது. ஆகவே கடவுள் அதை அனுமதித்ததற்கான காரணம், அன்பே. அதைவிட மகத்தான விதத்தில் அன்பு எக்காலத்திலும் காட்டப்படவில்லை.
எப்படி யெகோவா தமது அன்பை நமக்கு உறுதியளிக்கிறார்
9. யெகோவா நம்மை எப்படி கருதுகிறார் என நம்ப வேண்டுமென சாத்தான் விரும்புகிறான், ஆனால் யெகோவா நமக்கு என்ன உறுதியளிக்கிறார்?
9 என்றாலும் ஒரு முக்கியமான கேள்வி எழும்புகிறது: கடவுள் தனிப்பட்ட விதத்தில் நம்மை நேசிக்கிறாரா? யோவான் 3:16 கூறுவதற்கு இசைவாக, மனிதவர்க்கத்தின் மீது பொதுவாக கடவுளுக்கு அன்பு இருப்பதை சிலர் ஒத்துக்கொள்ளலாம். ஆனால், ‘‘என்னை கடவுள் ஒருபோதும் நேசிக்க மாட்டார்’ என அவர்கள் நினைக்கிறார்கள். யெகோவா நம்மை நேசிக்கவோ மதிப்பு வாய்ந்தவர்களாக கருதவோ இல்லை என்று நம்பும்படி செய்யவே பிசாசாகிய சாத்தான் முயலுகிறான் என்பதே உண்மை. மறுபட்சத்தில், யாரும் நம்மை நேசிக்கவில்லை என்றோ எதற்குமே தகுதியில்லாதவர்கள் என்றோ நாம் நினைத்தாலும், தம் உண்மையுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவருமே மதிப்பு வாய்ந்தவர்கள் என யெகோவா உறுதியளிக்கிறார்.
10, 11. யெகோவாவின் பார்வையில் நாம் மதிப்புமிக்கவர்கள் என்பதை அடைக்கலான் குருவிகளைப் பற்றிய இயேசுவின் உதாரணம் எவ்வாறு காட்டுகிறது?
10 உதாரணமாக, மத்தேயு 10:29-31-லுள்ள இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள். தம் சீஷர்களின் மதிப்பை விளக்குபவராய் இயேசு இவ்வாறு கூறினார்: “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.” முதல் நூற்றாண்டில் இயேசு சொன்னதை செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தின என்பதை கவனியுங்கள்.
11 இயேசுவின் காலத்தில் உணவுக்காக விற்கப்பட்ட பறவைகளில் அடைக்கலான் குருவியே மிகவும் மலிவானது. மிகக் குறைந்த மதிப்புள்ள ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை ஒருவர் வாங்கலாம். ஆனால் லூக்கா 12:6, 7-ன்படி, ஒருவர் இரண்டு காசு கொடுத்தால், நான்கு அல்ல, ஐந்து அடைக்கலான் குருவிகளை வாங்கலாம் என்று பின்பு இயேசு குறிப்பிட்டார். எந்த மதிப்பும் இல்லாததுபோல் அந்த பறவை இனாமாக கொடுக்கப்பட்டது. மனிதர் பார்வையில் ஒருவேளை அப்படிப்பட்ட பறவைகளுக்கு மதிப்பு இல்லாமல் இருந்தாலும் அவற்றை படைப்பாளர் எவ்வாறு நோக்கினார்? இயேசு சொன்னார்: “அவைகளில் ஒன்றாகிலும் [இனாமாக கொடுக்கப்பட்ட அந்த ஒரு பறவையும்] தேவனால் மறக்கப்படுகிறதில்லை.” இயேசு சொல்ல வந்த குறிப்பை இப்போது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரேவொரு அடைக்கலான் குருவிக்கு யெகோவா அந்தளவுக்கு மதிப்புக் கொடுக்கையில் ஒரு மனிதன் எந்தளவு மதிப்பு வாய்ந்தவன்! இயேசு சொன்னதைப் போல், நம்மைப் பற்றிய ஒவ்வொரு விவரமும் யெகோவாவுக்குத் தெரியும். நம் தலையிலுள்ள மயிரெல்லாம்கூட எண்ணப்பட்டிருக்கிறதே!
12. நம்முடைய தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என இயேசு சொன்னதில் எதார்த்தம் இருப்பதாக நாம் ஏன் உறுதியாக சொல்லலாம்?
12 இங்கு இயேசு மிகைப்படுத்திக் கூறியதாக சிலர் நினைக்கலாம். ஆனால் உயிர்த்தெழுதல் பற்றி சற்று எண்ணிப் பாருங்கள். நம்மை மறுபடியும் உருவாக்க எவ்வளவு நுணுக்கமாக யெகோவா நம்மை அறிந்திருக்க வேண்டும்! நம்மை வெகுவாய் மதிப்பதால் சிக்கலான மரபியல் சட்டங்கள், வருடக்கணக்கில் நம் ஞாபகத்தில் இருந்த விஷயங்கள், அனுபவங்கள் என அனைத்து விவரங்களையும் அத்துப்படியாக நினைவில் வைத்திருக்கிறார். அவற்றுடன் ஒப்பிடுகையில், நம் தலைமயிரை எண்ணுவது—சராசரியாக ஒருவரின் தலையில் சுமார் 1,00,000 மயிரை எண்ணுவது—எளியதாகவே இருக்கும். தனி நபர்களாக யெகோவா நம்மிடம் அக்கறை காட்டுகிறார் என்பதை இயேசுவின் வார்த்தைகள் எவ்வளவு அழகாக உறுதியளிக்கின்றன!
13. அபூரணராக இருந்தாலும் யெகோவா நம்மிடமுள்ள நல்லதைப் பார்க்கிறார் என்பதை அரசனாகிய யோசபாத்தின் விஷயம் எப்படி காட்டுகிறது?
13 வேறொன்றும்கூட யெகோவாவின் அன்பை நமக்கு உறுதிப்படுத்துவதாக பைபிள் காட்டுகிறது. நம்மிடமுள்ள நல்லதை அவர் பார்க்கிறார், மதிக்கிறார். நல்ல அரசனாகிய யோசபாத்தின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த அரசன் முட்டாள்தனமாக நடந்துகொண்டபோது, “கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது” என யெகோவாவின் தீர்க்கதரிசி அவனிடம் கூறினார். சிந்திக்க வைக்கும் கருத்து! ஆனால் யெகோவாவின் செய்தி அத்துடன் முடிவடைந்துவிடவில்லை. “ஆகிலும் . . . நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது” என்றும் அந்த செய்தியில் சொல்லப்பட்டது. (2 நாளாகமம் 19:1-3) எனவே யோசபாத்தின் ‘நல்ல காரியத்தை’ காணாதபடி யெகோவாவின் நீதியுள்ள கோபம் அவருடைய கண்ணை மூடிவிடவில்லை. நாம் அபூரணராக இருந்தாலும் நம் கடவுள் நம்மிடமுள்ள நல்லதைப் பார்க்கிறார் என்பதை அறிவது நமக்கு நம்பிக்கை அளிக்கவில்லையா?
‘மன்னிக்க தயாராயிருக்கிற’ கடவுள்
14. நாம் பாவம் செய்கையில் பாரமான எப்படிப்பட்ட உணர்ச்சிகளை அனுபவிப்போம், ஆனால் யெகோவாவின் மன்னிக்கும் குணத்திலிருந்து நாம் எப்படி பயனடையலாம்?
14 நாம் பாவம் செய்கையில் ஏற்படும் ஏமாற்றம், வெட்கம், குற்ற உணர்வு ஆகியவை யெகோவாவுக்குச் சேவை செய்ய எப்போதுமே தகுதியற்றவர்கள் என நம்மை சிந்திக்க செய்யலாம். எனினும் யெகோவா ‘மன்னிக்கிறதற்கு தயாராயிருக்கிறார்’ என்பதை நினைவில் வையுங்கள். (சங்கீதம் 86:5, NW) ஆம், நாம் பாவங்களிலிருந்து மனந்திருந்தி, மீண்டும் அவற்றை செய்யாதிருக்க கடினமாக முயலுகையில் யெகோவாவின் மன்னிக்கும் குணத்திலிருந்து பயனடையலாம். யெகோவாவுடைய அன்பின் இந்த அருமையான அம்சத்தைப் பற்றி பைபிள் விவரிக்கிற விதத்தை நாம் கலந்தாராயலாம்.
15. நம்முடைய பாவங்களை யெகோவா நம்மைவிட்டு எவ்வளவு தூரம் போட்டுவிடுகிறார்?
15 யெகோவாவின் மன்னிப்பை விவரிப்பதற்கு சங்கீதக்காரனாகிய தாவீது தத்ரூபமான சொற்றொடரைப் பயன்படுத்தினார்: ‘மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.’ (சங்கீதம் 103:12) மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரம்? ஒரு கருத்தில், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கிழக்கு எப்பொழுதும் மேற்கிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது; அவை இரண்டும் சந்திக்கவே முடியாது. இச்சொற்றொடர் “முடிந்தளவு; நம் கற்பனைக்கு எட்டிய அளவு” என அர்த்தப்படுத்துவதாக ஓர் அறிஞர் குறிப்பிடுகிறார். யெகோவா மன்னிக்கும்போது, நம்முடைய பாவங்களை நம்முடைய கற்பனைக்கு எட்டிய தொலைதூரத்தில் போட்டுவிடுகிறார் என கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் தாவீது எழுதிய வார்த்தைகள் சொல்கின்றன.
16. யெகோவா நம் பாவங்களை மன்னிக்கும்போது, அதற்குப் பின்பு நம்மை சுத்தமுள்ளவர்களாக கருதுகிறார் என ஏன் நம்பலாம்?
16 வெண்ணிற ஆடையிலிருந்து கறையை நீக்குவதற்கு நீங்கள் எப்பொழுதாவது முயற்சி செய்திருக்கிறீர்களா? நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் ஒருவேளை அந்தக் கறை போகாமல் அப்படியே இருந்திருக்கலாம். ஆனால், தம்மால் எந்தளவு மன்னிக்க முடியும் என்பதை யெகோவா வர்ணிக்கும் விதத்தைக் கவனியுங்கள்: ‘உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும்.’ (ஏசாயா 1:18, பொ.மொ.) நம்முடைய சொந்த முயற்சியால் பாவத்தின் கறையை நாம் ஒருகாலும் நீக்க முடியாது. கடுஞ்சிவப்பாகவும்,a இரத்த நிறமாகவும் இருக்கிற பாவங்களை உறைந்த பனியைப் போலவோ அல்லது சாயமேற்றப்படாத பஞ்சைப் போலவோ யெகோவா வெண்மையாக்குவார். ஆகவே, யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கும்போது, நம்முடைய மீதமுள்ள வாழ்நாள் காலமெல்லாம் இத்தகைய பாவக் கறைகளை நாம் சுமப்போம் என எண்ண வேண்டிய அவசியமில்லை.
17. என்ன அர்த்தத்தில் யெகோவா நம் பாவங்களை தமது முதுகுக்குப் பின்னால் எறிந்துவிடுகிறார்?
17 சாவுக்கேதுவான வியாதியிலிருந்து காப்பாற்றப்பட்ட பிறகு மனதை உந்துவிக்கும் ஒரு பாடலை எசேக்கியா இயற்றினார்; அதில், ‘என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்’ என யெகோவாவிடம் கூறினார். (ஏசாயா 38:17) மனந்திரும்பிய பாவியின் பாவங்களை தமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிடுவது போல யெகோவா இங்கே சித்தரிக்கப்படுகிறார்; அதன் பிறகு அவற்றை அவர் பார்ப்பதுமில்லை கண்டுகொள்வதுமில்லை. இங்கே சொல்லப்படும் கருத்தை இவ்வாறு தெரிவிக்கலாம் என ஒரு புத்தகம் சொல்கிறது: “[என்னுடைய பாவங்களை] அவை நடக்காதது போலவே நீர் செய்துவிட்டீர்.” இந்தக் கருத்து ஆறுதலளிக்கிறது அல்லவா?
18. யெகோவா மன்னிக்கும்போது நம்முடைய பாவங்களை நிரந்தரமாக நீக்கிவிடுகிறார் என்பதை தீர்க்கதரிசியாகிய மீகா எவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்?
18 திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய வாக்குறுதியில், மனந்திரும்பிய தமது மக்களை யெகோவா மன்னிப்பார் என்பதில் தன் உறுதியான நம்பிக்கையை தீர்க்கதரிசியாகிய மீகா வெளிப்படுத்தினார். ‘தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? . . . அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்’ என அவர் எழுதினார். (மீகா 7:18, 19) பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்களுக்கு அந்த வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்தின என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். ‘சமுத்திரத்தின் ஆழத்தில்’ எறியப்பட்டதை திரும்பப் பெறும் வாய்ப்பே இல்லை! ஆகவே, யெகோவா மன்னிக்கும்போது, நம்முடைய பாவங்களை நிரந்தரமாக நீக்கிவிடுகிறார் என்பதையே மீகாவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
‘நமது தேவனுடைய உருக்கமான இரக்கம்’
19, 20. (அ) “கருணை காண்பி” அல்லது “இரக்கப்படு” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வினைச்சொல்லின் அர்த்தம் என்ன? (ஆ) யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி நமக்கு கற்பிப்பதற்கு, ஒரு தாய் தன் குழந்தை மீது காண்பிக்கும் உணர்ச்சிகளை பைபிள் எவ்வாறு உதாரணமாக பயன்படுத்துகிறது?
19 யெகோவாவுடைய அன்பின் மற்றொரு அம்சமே இரக்கம். இரக்கம் என்றால் என்ன? பைபிளில் பல எபிரெய வார்த்தைகளும் கிரேக்க வார்த்தைகளும், உருக்கமான இரக்கம் என்ற கருத்தை தருகின்றன. உதாரணமாக, ராக்காம் என்ற எபிரெய வினைச்சொல் “கருணை காண்பி” அல்லது “இரக்கப்படு” என பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. யெகோவா தமக்கு பயன்படுத்தும் இந்த எபிரெய வார்த்தை “கருப்பை” என்ற வார்த்தையுடன் தொடர்புடையது, “தாய்க்குரிய இரக்கம்” என்றும் அதை விவரிக்கலாம்.
20 யெகோவா காண்பிக்கும் இரக்கத்தின் அர்த்தத்தை நமக்கு கற்பிப்பதற்கு, குழந்தை மீது தாய் காட்டும் உணர்ச்சிகளை பைபிள் உதாரணமாக பயன்படுத்துகிறது. “பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் [ராக்காம்] காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என ஏசாயா 49:15 (பொ.மொ.) சொல்கிறது. பால்குடிக்கும் குழந்தையை போஷிப்பதற்கும் கவனிப்பதற்கும் ஒரு தாய் மறந்துவிடுவதை கற்பனை செய்து பார்ப்பது மிகவும் கடினம். சொல்லப்போனால், பச்சிளங்குழந்தையால் எதையுமே சுயமாக செய்ய முடியாது, அக்குழந்தைக்கு இராப்பகலாக தாயின் கவனிப்பும் பாசமும் தேவை. ஆனால், பிள்ளைகளை அசட்டை செய்யும் தாய்மார்களைப் பற்றி நாம் கேள்விப்படாமல் இல்லை. வருந்தத்தக்க இந்தச் செயல் முக்கியமாக, இந்தக் ‘கொடிய காலங்களில்’ நடந்துகொண்டுதான் இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1, 3) என்றாலும், “நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என யெகோவா சொல்கிறார். யெகோவா தமது ஊழியர்கள் மீது காண்பிக்கும் கனிவான இரக்கம் நம் கற்பனைக்கு எட்டிய கனிவுமிக்க எந்தவொரு இயல்பான உணர்ச்சியைக் காட்டிலும்—பச்சிளங்குழந்தை மீது தாய் இயல்பாக காண்பிக்கும் இரக்கத்தைக் காட்டிலும்—அளவிட முடியாத அளவுக்கு பலமானது.
21, 22. பூர்வ எகிப்தில் இஸ்ரவேலர் எதை அனுபவித்தார்கள், அவர்களுடைய கூக்குரலுக்கு யெகோவா எப்படி பிரதிபலித்தார்?
21 ஓர் அன்பான தகப்பனைப் போல யெகோவா எவ்வாறு இரக்கத்தைக் காட்டுகிறார்? பூர்வ இஸ்ரவேல் தேசத்தாரை அவர் நடத்திய விதத்தில் இக்குணம் தெளிவாக காணப்படுகிறது. பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டின் முடிவிற்குள், எகிப்தில் லட்சக்கணக்கான இஸ்ரவேலர் அடிமைகளாக்கப்பட்டார்கள்; அங்கே அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். (யாத்திராகமம் 1:11, 14) வேதனையில் தத்தளிக்கையில் இஸ்ரவேலர்கள் உதவிக்காக யெகோவாவை நோக்கி கூக்குரலிட்டார்கள். இரக்கத்தின் கடவுளை இது எவ்வாறு பாதித்தது?
22 இது யெகோவாவின் இருதயத்தைத் தொட்டது. “எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; . . . அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன்” என்று அவர் சொன்னார். (யாத்திராகமம் 3:7, பொ.மொ.) தமது ஜனங்கள் படும் துன்பத்தை பார்த்தும், அவர்களுடைய கூக்குரலை கேட்டும் எந்தவித உணர்ச்சியுமின்றி இருப்பது யெகோவாவால் முடியாத காரியம். யெகோவா அனுதாபமுள்ள கடவுள். அனுதாபம்—மற்றவர்களுடைய வேதனையை உணரும் திறமை—இரக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையது. ஆனால் யெகோவா தமது ஜனங்களுக்காக வெறுமனே இரக்கப்படவில்லை; அவர்களுடைய சார்பாக செயல்படுவதற்கு தூண்டப்பட்டார். “தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்” என ஏசாயா 63:9 சொல்கிறது. ‘வல்லமையுள்ள கரத்தால்’ எகிப்திலிருந்து இஸ்ரவேலரை காப்பாற்றினார். (உபாகமம் 4:34) அதற்குப்பின், அற்புதமாக அவர்களுக்கு உணவளித்து, அவர்களுக்கு சொந்தமான செழிப்புமிக்க தேசத்தில் அவர்களை கொண்டு சேர்த்தார்.
23. (அ) தனிநபர்களாக யெகோவா நம்மீது ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார் என்பதை தாவீதின் வார்த்தைகள் எவ்வாறு நமக்கு உறுதியளிக்கின்றன? (ஆ) யெகோவா நமக்கு என்ன வழிகளில் உதவுகிறார்?
23 ஒரு தொகுதியாக மட்டுமே யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு இரக்கம் காட்டுவதில்லை. நம்முடைய அன்பான கடவுள் தனிநபர்களாக நம்மைப் பற்றி ஆழ்ந்த அக்கறை கொள்கிறார். நாம் படும் எந்த துன்பத்தையும் அவர் நன்கு அறிந்திருக்கிறார். சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு சொன்னார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.” (சங்கீதம் 34:15, 18) தனிநபர்களாக யெகோவா நமக்கு எவ்வாறு உதவுகிறார்? கண்டிப்பாக நம்முடைய துன்பத்திற்குரிய காரணத்தை அவர் நீக்குவதில்லை. ஆனால் உதவிக்காக கூக்குரலிடுகிறவர்களுக்கு யெகோவா அபரிமிதமான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். அவருடைய வார்த்தை நடைமுறையில் பயனளிக்கும் அறிவுரைகளை வழங்குகிறது. சபையில் ஆவிக்குரிய முதிர்ச்சி வாய்ந்த கண்காணிகளை அவர் ஏற்படுத்தியிருக்கிறார், இவர்கள் சக வணக்கத்தாருக்கு உதவி செய்வதில் அவருடைய இரக்கத்தைப் பின்பற்ற கடினமாக முயலுகிறார்கள். (யாக்கோபு 5:14, 15) மேலும், “ஜெபத்தைக் கேட்கிற”வராக, “தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியை” யெகோவா கொடுக்கிறார். (சங்கீதம் 65:2; லூக்கா 11:13) இந்த அனைத்து ஏற்பாடுகளும் “நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்”தின் வெளிக்காட்டுகள்.—லூக்கா 1:78, NW.
24. யெகோவாவின் அன்புக்கு நீங்கள் எப்படி பிரதிபலிப்பீர்கள்?
24 நம் பரம தகப்பனின் அன்பைப் பற்றி தியானிப்பது நமக்கு சிலிர்ப்பூட்டுகிறதல்லவா? நம்முடைய நலனுக்காக யெகோவா வல்லமை, நீதி, ஞானம் ஆகியவற்றை அன்பான வழிகளில் வெளிக்காட்டியிருக்கிறார் என்பது முந்தின கட்டுரையில் நமக்கு நினைப்பூட்டப்பட்டது. மனிதகுலத்துக்காக—தனிப்பட்ட விதத்தில் நம் ஒவ்வொருவருக்காகவும்—தனிச்சிறப்புமிக்க விதங்களில் யெகோவா நேரடியாக அன்பு காட்டிய விதத்தை இந்தக் கட்டுரையில் கவனித்தோம். ‘யெகோவாவின் அன்புக்கு நான் எப்படி பிரதிபலிப்பேன்?’ என இப்போது ஒவ்வொருவரும் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் முழு இருதயத்தோடும் மனதோடும் ஆத்துமாவோடும் பலத்தோடும் அவரை நேசிப்பதன் மூலம் பிரதிபலிப்பீர்களாக. (மாற்கு 12:29, 30) ஒவ்வொரு நாளும் நீங்கள் வாழும் முறை எப்போதும் யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கான இருதயப்பூர்வமான ஆசையைப் பிரதிபலிப்பதாக. அன்புள்ள கடவுளாகிய யெகோவா எப்போதும், நித்தியத்திற்கும் உங்களிடம் நெருங்கி வருவராக!—யாக்கோபு 4:8, NW.
[அடிக்குறிப்பு]
a இங்கே கடுஞ்சிவப்பு நிறம் என்பது “சாயம் போகாத அடர்ந்த நிறத்தை” குறிப்பதாக அறிஞர் ஒருவர் கூறுகிறார். “பனியிலும் மழையிலும் அதன் சாயம் வெளுத்துப் போகாது, துவைத்து பல காலம் பயன்படுத்தினால்கூட அது வெளிறிப் போகாது” என்கிறார்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• அன்பு யெகோவாவின் முக்கிய பண்பு என்று நமக்கு எப்படி தெரியும்?
• நமக்காக வேதனையை அனுபவித்து மரிக்கும்படி தம்முடைய குமாரனை யெகோவா அனுப்பியது மகத்தான அன்பின் செயலென ஏன் சொல்லலாம்?
• தனி நபர்களாக யெகோவா நம்மிடம் அன்பு காட்டுவதை அவர் நமக்கு எப்படி உறுதியளிக்கிறார்?
• என்ன தத்ரூபமான வழிகளில் யெகோவாவின் மன்னிக்கும் குணத்தை பைபிள் விவரிக்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனையே கொடுத்தார்’
[பக்கம் 16, 17-ன் படம்]
‘அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள்’
[படத்திற்கான நன்றி]
© J. Heidecker/VIREO
[பக்கம் 18-ன் படம்]
தன் குழந்தையிடம் தாய்க்கு ஏற்படும் உணர்ச்சிகள் யெகோவாவின் இரக்கத்தை நமக்குக் கற்பிக்கலாம்