யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்தபெண்கள்
‘உன் செய்கைக்குத்தக்க பலனை யெகோவா உனக்குக் கட்டளையிடுவாராக; . . . அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக.’—ரூத் 2:12.
1, 2. யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்த பெண்களைப் பற்றிய பைபிள் உதாரணங்களை சிந்திப்பதன் மூலம் நாம் எப்படி நன்மையடையலாம்?
பார்வோனுக்கு எதிராக செயல்பட தேவ பயம் இரண்டு பெண்களைத் தூண்டியது. உயிரையே பணயம் வைத்து இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரரை காப்பாற்றுவதற்கு விசுவாசம் ஒரு வேசியை உந்துவித்தது. நெருக்கடியான சூழலில் பல உயிர்களைக் காப்பாற்றவும், யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒருவர் இரத்தப்பழிக்கு ஆளாகாமல் தடுக்கவும் ஒரு பெண்ணுக்கு புத்திசாலித்தனமும் மனத்தாழ்மையும் கைகொடுத்தது. தன்னிடமிருந்த கொஞ்சநஞ்ச உணவையும் கடவுளுடைய தீர்க்கதரிசிக்கு கொடுப்பதற்கு தாயாக இருந்த ஒரு விதவையை விசுவாசமும் உபசரிக்கும் குணமும் தூண்டியது. யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்த பெண்களைப் பற்றிய பைபிள் உதாரணங்களில் இவை சிலவே.
2 இத்தகைய பெண்கள் மீது யெகோவாவுக்கு இருந்த மனப்பான்மையும் அவர்கள் மீது அவர் பொழிந்த ஆசீர்வாதங்களும் ஓர் உண்மையை நிரூபிக்கின்றன. அதாவது ஆண் பெண் என்ற பாகுபாடல்ல, ஆனால் முக்கியமாக அவர்களுடைய ஆவிக்குரிய பண்புகளே யெகோவாவின் மனதை குளிர்விக்கின்றன என்பதுதான் அந்த உண்மை. இன்றைய உலகம் பகட்டான காரியங்களில் மூழ்கிக் கிடப்பதால், ஆவிக்குரிய காரியங்களுக்கு ஒருவர் முதலிடம் கொடுப்பது ஒரு சவாலாக இருக்கிறது. ஆனால் இந்த சவாலை சமாளிப்பது சாத்தியமே என்பதை கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் திரளாக இருக்கும் தேவ பயமுடைய லட்சோபலட்சம் பெண்கள் இன்று நிரூபித்திருக்கிறார்கள். பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள தேவ பயமுள்ள பெண்கள் வெளிக்காட்டிய விசுவாசம், விவேகம், உபசாரம் ஆகிய பண்புகளையும் இன்னும் பல சிறந்த பண்புகளையும் இவர்கள் காட்டுகிறார்கள். உண்மைதான், சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிய பூர்வகால பெண்களிடமிருந்த பண்புகளை கிறிஸ்தவ ஆண்களும் இன்று காட்டுகிறார்கள். இப்பண்புகளை இன்னும் எப்படி முழுமையாக வெளிக்காட்டலாம் என்பதை அறிந்துகொள்வதற்கு, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பெண்களைப் பற்றிய பைபிள் பதிவுகளை விலாவாரியாக ஆராயலாம்.—ரோமர் 15:4; யாக்கோபு 4:8.
பார்வோனுக்கு எதிராக செயல்பட்ட பெண்கள்
3, 4. (அ) இஸ்ரவேலில் புதிதாய் பிறக்கும் எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்லும்படி பார்வோன் இட்ட கட்டளைக்கு சிப்பிராளும் பூவாளும் ஏன் கீழ்ப்படியவில்லை? (ஆ) அந்த இரு மருத்துவச்சிகள் காண்பித்த துணிவுக்கும் தேவ பயத்திற்கும் யெகோவா எப்படி பலனளித்தார்?
3 இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஜெர்மனியில் நியுரம்பர்க்கில் நடந்த விசாரணைகளின்போது, படுகொலைகளை செய்ததாக தீர்ப்பளிக்கப்பட்ட பலர் தாங்கள் செய்தவற்றை நியாயப்படுத்த முயன்றார்கள்; கொடுக்கப்பட்ட உத்தரவுகளுக்குத்தான் தாங்கள் கீழ்ப்படிந்ததாக சொன்னார்கள். ஆனால், இந்தக் குற்றவாளிகளை இஸ்ரவேலில் இருந்த சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகளோடு சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் பூர்வ எகிப்தில் ஒரு பார்வோனின் ஆட்சி காலத்தில் வாழ்ந்தவர்கள்; அந்தப் பார்வோனின் பெயர் தெரியாது, ஆனால் அவன் ஒரு கொடுங்கோலன். எபிரெயர்கள் எக்கச்சக்கமாக பெருகுவதைப் பார்த்து அவன் பயந்தான். ஆகவே, புதிதாய் பிறக்கும் எல்லா எபிரெய ஆண் குழந்தைகளையும் கொல்லும்படி அந்த மருத்துவச்சிகளுக்கு உத்தரவிட்டான். அந்தக் கொடூரமான கட்டளைக்கு மருத்துவச்சிகள் கீழ்ப்படிந்தார்களா? இல்லை, ‘எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைக்கு கீழ்ப்படியாமல், ஆண் பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றினார்கள்.’ அந்தப் பெண்கள் ஏன் மனித பயத்திற்கு அடிபணியவில்லை? ஏனென்றால் அவர்கள் ‘மெய் தேவனுக்குப் பயந்தார்கள்.’—யாத்திராகமம் 1:15, 17; ஆதியாகமம் 9:6.
4 ஆம், அந்த மருத்துவச்சிகள் யெகோவாவை அடைக்கலமாக கொண்டிருந்ததால் அவரும் அவர்களுக்கு ‘கேடகமாக’ இருந்து, பார்வோனின் கோபத்துக்கு ஆளாக விடாமல் அவர்களை பாதுகாத்தார். (2 சாமுவேல் 22:31; யாத்திராகமம் 1:18-20) ஆனால், யெகோவாவின் ஆசீர்வாதம் அத்துடன் நின்றுவிடவில்லை. சிப்பிராளும் பூவாளும் பிள்ளைச் செல்வங்களோடு செழிப்பாக வாழ ஆசீர்வதித்தார். வருங்கால சந்ததியார் வாசித்து தெரிந்துகொள்ள அவர்களுடைய பெயர்களையும் செயல்களையும் தமது வார்த்தையில் பதிவுசெய்து வைப்பதன் மூலமும்கூட யெகோவா அவர்களை கெளரவித்தார். ஆனால் அந்தப் பார்வோனுடைய பெயரோ கால ஓட்டத்தில் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டது.—யாத்திராகமம் 1:21; 1 சாமுவேல் 2:30ஆ; நீதிமொழிகள் 10:7.
5. சிப்பிராள் பூவாளின் அதே மனப்பான்மையை இன்று கிறிஸ்தவ பெண்கள் அநேகர் எவ்வாறு காட்டுகிறார்கள், அவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிப்பார்?
5 சிப்பிராளையும் பூவாளையும் போன்ற பெண்கள் இன்று இருக்கிறார்களா? ஆம், இருக்கிறார்கள்! உயிர்காக்கும் பைபிள் செய்திக்கு தடை விதித்து ‘ராஜா கட்டளை’ பிறப்பித்திருக்கும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரமாயிரம் பெண்கள் அச்செய்தியை தைரியமாக அறிவிக்கிறார்கள். இப்படி செய்வதன் மூலம் தங்களுடைய சுதந்திரத்தையும் உயிரையும்கூட பணயம் வைக்கிறார்கள். (எபிரெயர் 11:23; அப்போஸ்தலர் 5:28, 29) தைரியமிக்க இப்பெண்களுக்கு கடவுள் மீதும் அயலார் மீதும் அன்பு இருப்பதால் ராஜ்ய நற்செய்தியை பிறருக்கு அறிவிப்பதை யாரும் தடுப்பதற்கு இவர்கள் அனுமதிப்பதில்லை. இதனால், கிறிஸ்தவ பெண்கள் அநேகர் எதிர்ப்பையும் துன்புறுத்துதலையும் சந்திக்கிறார்கள். (மாற்கு 12:30, 31; 13:9-13) என்றாலும், சிப்பிராள், பூவாளின் விஷயத்தில் நடந்தது போலவே, இந்த அருமையான, தைரியமிக்க பெண்களின் செயல்களையும் யெகோவா நன்கு அறிவார்; இவர்கள் கடைசிவரை உண்மையுடன் நிலைத்திருந்தால் இவர்களுடைய பெயர்களை “ஜீவ புஸ்தகத்தில்” எழுதுவதன் மூலம் தமது அன்பை வெளிக்காட்டுவார்.—பிலிப்பியர் 4:3; மத்தேயு 24:13.
யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்த முன்னாள் வேசி
6, 7. (அ) யெகோவாவையும் அவருடைய ஜனத்தையும் பற்றி ராகாப் என்ன அறிந்திருந்தாள், அது அவள் மீது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது? (ஆ) கடவுளுடைய வார்த்தை ராகாபை எப்படி கெளரவிக்கிறது?
6 கானானிய பட்டணமாகிய எரிகோவில் பொ.ச.மு. 1473-ல் ராகாப் என்ற ஒரு வேசி வாழ்ந்து வந்தாள். அவள் விஷயந்தெரிந்த ஒரு பெண் என தெரிகிறது. எப்படியெனில், இஸ்ரவேலின் இரண்டு வேவுகாரர் அவளுடைய வீட்டில் தஞ்சம் புகுந்த சமயத்தில், எகிப்திலிருந்து இஸ்ரவேலர் அற்புதகரமாய் புறப்பட்டு வந்ததைப் பற்றிய விஷயங்களை, அதுவும் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயங்களை துல்லியமாக அவளால் சொல்ல முடிந்தது! எமோரிய ராஜாக்களான சீகோனையும் ஓகையும் இஸ்ரவேலர் சமீபத்தில் வென்ற விஷயமும் அவளுக்கு தெரிந்திருந்தது. அவள் அறிந்த விஷயங்கள் அவளை எந்தளவு பாதித்தன என்பதை கவனியுங்கள். அந்த வேவுகாரரிடம் அவள் இவ்வாறு சொன்னாள்: “நிச்சயமாகவே இந்த தேசத்தை யெகோவா உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார் என்று நான் அறிவேன், . . . ஏனெனில் உங்கள் தேவனாகிய யெகோவாவே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்.” (யோசுவா 2:1, 9-11, NW) ஆம், யெகோவாவையும் இஸ்ரவேலர் சார்பாக அவர் செய்த காரியங்களையும் பற்றி ராகாப் அறிந்த விஷயங்கள் அவளுடைய மனதைத் தொட்டன, அவரில் விசுவாசம் வைப்பதற்கும் தூண்டின.—ரோமர் 10:10.
7 ராகாபின் விசுவாசம் அவளை செயல்பட வைத்தது. இஸ்ரவேலின் வேவுகாரரை ‘சமாதானத்தோடே ஏற்றுக் கொண்டாள்.’ அதுமட்டுமல்ல, இஸ்ரவேலர் எரிகோவை தாக்க வரும்போது பாதுகாப்பிற்கு என்ன செய்ய வேண்டுமென அவர்கள் சொன்னார்களோ அவற்றிற்கு அவள் கீழ்ப்படிந்தாள். (எபிரெயர் 11:31; யோசுவா 2:17-21) விசுவாசத்தோடு ராகாப் செய்த காரியங்கள் யெகோவாவின் இருதயத்தை மகிழ்வித்தன என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்குரிய சிறந்த மாதிரியாக இருப்பதற்கு, தமது நண்பரான ஆபிரகாமின் பெயருடன் ராகாபின் பெயரையும் எழுதும்படி சீஷனாகிய யாக்கோபை யெகோவா ஏவினார். “அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறு வழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?” என அவர் எழுதினார்.—யாக்கோபு 2:25.
8. விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டியதற்காக ராகாபை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
8 ராகாபை பல வழிகளில் யெகோவா ஆசீர்வதித்தார். முதலாவதாக, அவளையும் அவளுடைய வீட்டில் தஞ்சம் புகுந்த அனைவரையும், அதாவது “அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும்” அற்புதமாய் காப்பாற்றினார். அடுத்ததாக, அவர்கள் அனைவரும் ‘இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்க’ அனுமதித்தார்; அவர்கள் இஸ்ரவேலின் ஜனங்களாக கருதப்பட்டார்கள். (யோசுவா 2:13; 6:22-25; லேவியராகமம் 19:33, 34) ஆனால், அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. இயேசு கிறிஸ்துவின் மூதாதையாகும் ஆசீர்வாதத்தையும் தந்து அவளை கௌரவித்தார். விக்கிரகத்தை வழிபட்டுவந்த கானானிய பெண்ணுக்கு எப்பேர்ப்பட்ட அன்புள்ள தயவு காண்பிக்கப்பட்டது!a—சங்கீதம் 130:3, 4.
9. ராகாபையும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ பெண்கள் சிலரையும் குறித்து யெகோவாவுக்கு இருந்த மனப்பான்மை இன்று சில பெண்களுக்கு எப்படி ஊக்கமளிக்கலாம்?
9 ராகாபைப் போலவே, முதல் நூற்றாண்டிலிருந்து இன்று வரை கிறிஸ்தவ பெண்கள் சிலர் கடவுளைப் பிரியப்படுத்த தங்களுடைய ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 6:9-11) இவர்களில் சிலர் பூர்வ கானானில் இருந்த அதே சூழலில், அதாவது ஒழுக்கக்கேடு பரவியிருந்த, அது சாதாரண விஷயமாக கருதப்பட்ட சூழலில் வளர்ந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வேதவசனங்களைப் பற்றிய திருத்தமான அறிவின் அடிப்படையிலான விசுவாசம் இந்தக் கிறிஸ்தவ பெண்களைத் தூண்டியதால் தங்கள் வழிகளை மாற்றிக் கொண்டார்கள். (ரோமர் 10:17) ஆகவே, இவர்களைக் குறித்ததில் “தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை” என்றும் சொல்லலாம். (எபிரெயர் 11:16) எப்பேர்ப்பட்ட அருமையான பாக்கியம்!
புத்திசாலித்தனத்திற்காக ஆசீர்வதிக்கப்பட்டாள்
10, 11. நாபால், தாவீது சம்பந்தமாக அபிகாயிலை செயல்பட வைத்த சம்பவம் எது?
10 பண்டைய காலங்களில் உண்மையுள்ள கிறிஸ்தவ பெண்கள் பலர் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்திருக்கிறார்கள். இவ்வாறு யெகோவாவுடைய ஜனங்களுக்கு மதிப்புமிக்க சொத்தாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் ஒருத்திதான் இஸ்ரவேலில் பெரிய பணக்காரனாய் இருந்த நாபாலின் மனைவி அபிகாயில். அவளுடைய புத்திசாலித்தனம் அநேகருடைய உயிரை காப்பாற்றியது, இஸ்ரவேலின் வருங்கால ராஜாவான தாவீதை இரத்தப்பழியிலிருந்து தடுத்தது. 1 சாமுவேல் 25-ம் அதிகாரத்தில் அபிகாயிலைப் பற்றிய பதிவை நாம் வாசித்துப் பார்க்கலாம்.
11 இக்கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது: தாவீதும் அவருடைய ஆட்களும் நாபாலின் மந்தைக்கு அருகே கூடாரமிட்டிருக்கிறார்கள். நாபால் ஓர் இஸ்ரவேலன் என்ற முறையில் அவர்கள் அவனுக்கு கருணைகாட்டி, எந்தவித ஆதாயமுமின்றி அவனுடைய மந்தையை இராப்பகலாய் பாதுகாக்கிறார்கள். தாவீதிடமுள்ள உணவுப் பொருட்கள் தீர்ந்துபோகும் சமயத்தில், நாபாலிடம் உணவு கேட்கும்படி அவர் பத்து வாலிபரை அனுப்புகிறார். தாவீதுக்கு நன்றியுணர்வை காட்டுவதற்கும், யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்ற முறையில் அவரை கெளரவிப்பதற்கும் ஏற்ற சமயம் இப்போது நாபாலுக்கு கிடைக்கிறது. ஆனால், அதற்கு எதிர்மாறானதையே நாபால் செய்கிறான். கோபத்தில் சீறி எழுந்து தாவீதை அவன் அவமதிக்கிறான்; அதோடு, அந்த வாலிபரை வெறுங்கையோடு அனுப்பிவிடுகிறான். தாவீது இதைக் கேட்டதும் ஆயுதந்தரித்த 400 பேரை திரட்டிக்கொண்டு பழிதீர்க்க கிளம்புகிறார். தன் கணவன் இப்படி ஈவிரக்கமற்ற விதத்தில் நடந்துகொண்டதை அறிந்த அபிகாயில், உடனடியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்படுகிறாள்; அதாவது, தாவீதை சாந்தப்படுத்துவதற்கு ஏராளமான உணவு பதார்த்தங்களை அனுப்புகிறாள். அதற்கு பிறகு அவளே நேரடியாக தாவீதைப் போய் சந்திக்கிறாள்.—2-20 வசனங்கள்.
12, 13. (அ) அபிகாயில் எப்படி புத்திசாலித்தனத்துடனும், அதோடு யெகோவாவிடமும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவரிடமும் விசுவாசத்துடனும் நடந்துகொண்டாள்? (ஆ) வீட்டிற்கு வந்ததும் அபிகாயில் என்ன செய்தாள், அதற்கு பின்பு என்னென்ன காரியங்கள் நிகழ்ந்தன?
12 தாவீதை அபிகாயில் சந்திக்கிறபோது, இரக்கம் காட்டும்படி தாழ்மையுடன் அவள் கேட்கிறாள்; யெகோவாவால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் மீது அவளுக்கு இருக்கும் ஆழ்ந்த மரியாதையை இது வெளிப்படுத்துகிறது. “கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே” என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் இஸ்ரவேலுக்கு அதிபதியாக தாவீதை யெகோவா நியமிப்பார் என்றும் அவள் கூறுகிறாள். (28-30 வசனங்கள்) அதே சமயத்தில், பழிவாங்கும் எண்ணத்தை கட்டுப்படுத்தாமல் போனால், அது இரத்தப்பழிக்கே ஆளாக்கும் எனவும் தாவீதிடம் மிகுந்த தைரியத்தோடு சொல்கிறாள். (26, 31 வசனங்கள்) அபிகாயிலின் தாழ்மையான குணமும் ஆழ்ந்த மரியாதையும் தெளிந்த யோசனையும் தாவீதின் புத்தியை தெளிய வைக்கிறது. ஆகவே அவர் இவ்வாறு கூறுகிறார்: “உன்னை இன்றைய தினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கு . . . நீ இன்றைய தினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.”—32, 33 வசனங்கள்.
13 வீடு திரும்பிய அபிகாயில், தாவீதுக்கு பரிசாக கொடுத்தவற்றைப் பற்றி கொஞ்சமும் பயப்படாமல் தன் கணவரிடம் சொல்வதற்கு அவரை தேடுகிறாள். ஆனால் அவர் ‘மிகவும் வெறித்திருந்ததை’ அவள் பார்க்கிறாள். ஆகவே, போதை தெளியும் வரை காத்திருந்து அவரிடம் விஷயத்தை சொல்கிறாள். அதைக் கேட்டதும் நாபாலுக்கு என்ன ஆகிறது? அவன் மிகவும் அதிர்ச்சியடைந்து, ஒருவித முடக்குவாதத்தால் பீடிக்கப்படுகிறான். பத்து நாட்களுக்கு பிறகு, கடவுளுடைய கையாலேயே அவன் சாகிறான். நாபால் இறந்துபோன செய்தியை தாவீது கேள்விப்பட்டவுடன், அபிகாயில் மீது தனக்கிருந்த அன்பாலும் ஆழ்ந்த மரியாதையாலும் அவளை மணமுடிக்க விருப்பம் தெரிவிக்கிறார்; அபிகாயிலும் அதற்கு சம்மதிக்கிறாள்.—34-42 வசனங்கள்.
நீங்கள் அபிகாயிலைப் போல் இருக்க முடியுமா?
14. அபிகாயிலின் எத்தகைய பண்புகளை அதிகளவில் வளர்க்க நாம் விரும்பலாம்?
14 நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஓர் ஆணாக இருந்தாலும் சரி, அபிகாயிலின் விஷயத்தில் கண்ட சில பண்புகளை அதிகளவில் வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்களா? கஷ்டமான சூழ்நிலைகள் எழும்புகையில் மிகுந்த ஞானத்தோடும் புத்திசாலித்தனத்தோடும் செயல்பட நீங்கள் விரும்பலாம். அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டு பேசுகையில் நீங்கள் அமைதியாகவும் நியாயமாகவும் பேச விரும்பலாம். அப்படியானால், அதைக் குறித்து யெகோவாவிடம் ஏன் ஜெபிக்கக் கூடாது? ‘விசுவாசத்தோடு கேட்போருக்கு’ ஞானத்தையும் புத்தியையும் நல்யோசனையையும் தருவதாக அவர் வாக்குறுதி அளிக்கிறார்.—யாக்கோபு 1:5, 6; நீதிமொழிகள் 2:1-6, 10, 11.
15. அபிகாயில் காண்பித்த பண்புகளை கிறிஸ்தவ பெண்கள் எந்த சூழ்நிலைகளில் காண்பிப்பது மிக முக்கியம்?
15 பைபிள் நியமங்களுக்கு அறவே கவனம் செலுத்தாத அவிசுவாசியான ஒரு கணவனை உடைய ஒரு பெண் இத்தகைய சிறந்த பண்புகளை வளர்ப்பது மிக முக்கியம். ஒருவேளை அவர் அளவுக்கு மீறி குடிப்பவராகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட கணவன்மார் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். மனைவிமார் பலரும் சாந்தமாகவும் ஆழ்ந்த மரியாதையோடும் கற்போடும் நடந்துகொண்டதாலே அநேகர் மாறியிருக்கிறார்கள்.—1 பேதுரு 3:1, 2, 4.
16. ஒரு கிறிஸ்தவ சகோதரியின் குடும்ப சூழ்நிலை என்னவாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவாவோடு உள்ள உறவையே அதிகமாக மதிக்கிறாள் என்பதை அவள் எப்படி காட்டுவாள்?
16 வீட்டில் எப்படிப்பட்ட கஷ்டங்களை சகிக்க வேண்டியிருந்தாலும், யெகோவாவின் துணை எப்போதும் உங்களுக்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். (1 பேதுரு 3:12) ஆகவே ஆவிக்குரிய விதத்தில் உங்களை பலமாக வைத்திருக்க முயலுங்கள். ஞானத்திற்காகவும் அமைதியான மனநிலைக்காகவும் ஜெபியுங்கள். ஆம், தவறாமல் பைபிள் படித்து, ஜெபம் செய்து, தியானித்து, சக கிறிஸ்தவர்களுடன் கூட்டுறவு கொள்வதன் மூலம் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள். தன் கணவன் மாம்சப் பிரகாரமான சிந்தையுடையவனாக இருந்தபோதிலும், கடவுள் மீது அபிகாயிலுக்கு இருந்த அன்பும் அவர் அபிஷேகம் செய்த ஊழியர் மீதிருந்த மனப்பான்மையும் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. அவள் நீதி நியாயத்தின்படியே செயல்பட்டாள். கணவன் ஓர் உதாரண புருஷனாக கடவுளுடைய ஊழியராக இருக்கும் ஒரு குடும்பத்திலும்கூட, ஒரு கிறிஸ்தவ மனைவி தனது ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கும் ஆவிக்குரிய தன்மையை காத்துக்கொள்வதற்கும் தொடர்ந்து உழைப்பது அவசியம் என்பதை உணர்கிறாள். உண்மைதான், ஆவிக்குரிய ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கவனிக்க வேண்டிய பொறுப்பு கணவனுக்கு இருந்தாலும், மொத்தத்தில் தன் ‘சொந்த இரட்சிப்புக்காக பயத்தோடும் நடுக்கத்தோடும்’ அவள்தான் உழைக்க வேண்டும்.—பிலிப்பியர் 2:12; 1 தீமோத்தேயு 5:8.
“தீர்க்கதரிசிக்குரிய பலனை” அடைந்தாள்
17, 18. (அ) சாறிபாத்தைச் சேர்ந்த விதவை விநோதமான என்ன விசுவாசப் பரீட்சையை எதிர்ப்பட்டாள்? (ஆ) எலியாவின் கோரிக்கைக்கு அந்த விதவை எப்படி பிரதிபலித்தாள், அதற்கு யெகோவா எப்படி பலனளித்தார்?
17 தங்களையும் தங்கள் வளங்களையும் அளித்து மெய் வணக்கத்தை ஆதரிப்போரை யெகோவா மிகவும் போற்றுகிறார். எலியா தீர்க்கதரிசியின் காலத்தில் ஓர் ஏழை விதவையை யெகோவா பராமரித்த விதம் இதையே காட்டுகிறது. எலியாவின் நாளில் தேசத்தில் பஞ்சம் நீடித்ததால் அநேகர் வறுமையில் வாடினர்; சாறிபாத் ஊரில் வாழ்ந்த ஒரு விதவையும் அவளுடைய இளம் மகனும்கூட இதனால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் ஒருவேளைக்கு மட்டுமே உணவு இருந்த சமயத்தில்தான் ஒரு விருந்தாளி வந்தார்; அவர்தான் எலியா தீர்க்கதரிசி. அவருடைய வேண்டுகோள் ரொம்பவும் விநோதமாக இருந்தது. அந்தப் பெண்ணின் நிலையை அறிந்தும், கடைசியாக இருந்த மாவையும் எண்ணெய்யையும் வைத்து தனக்கு “ஒரு சிறிய அடையை” சுட்டுத் தரும்படி அவர் கேட்டார். அதோடு, “கர்த்தர் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மா செலவழிந்து போவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்து போவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்றும் அவர் சொன்னார்.—1 இராஜாக்கள் 17:8-14.
18 அந்த விநோதமான வேண்டுகோளுக்கு நீங்கள் எப்படி பிரதிபலித்திருப்பீர்கள்? எலியா, யெகோவாவின் தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும் என சாறிபாத்தின் அந்த விதவை அடையாளம் கண்டுகொண்டு “எலியாவின் சொற்படி செய்தாள்.” அவளுடைய உபசரிப்புக்கு யெகோவா எவ்விதத்தில் பலனளித்தார்? அந்தப் பஞ்ச காலத்தில் அந்த பெண்ணுக்கும் அவளுடைய மகனுக்கும் எலியாவுக்கும் அவர் அற்புதமாய் உணவளித்தார். (1 இராஜாக்கள் 17:15, 16) ஆம், சாறிபாத்தின் விதவை ஓர் இஸ்ரவேல் பெண்ணாக இல்லாத போதிலும் “தீர்க்கதரிசிக்குரிய பலனை” அவளுக்கு யெகோவா அளித்தார். (மத்தேயு 10:41, NW) கடவுளுடைய குமாரனும்கூட தம் சொந்த பட்டணமாகிய நாசரேத்திலிருந்த அவிசுவாசிகளிடத்தில் பேசியபோது அந்த விதவையை ஓர் எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு புகழ்ந்தார்.—லூக்கா 4:24-26.
19. சாறிபாத் விதவையின் அதே மனப்பான்மையை இன்று அநேக கிறிஸ்தவ பெண்கள் எவ்வழிகளில் காட்டுகிறார்கள், இவர்களை யெகோவா எப்படி கருதுகிறார்?
19 சாறிபாத்தைச் சேர்ந்த அந்த விதவையின் அதே மனப்பான்மையை இன்றும் அநேக கிறிஸ்தவ பெண்கள் காட்டுகிறார்கள். உதாரணமாக, தன்னலமற்ற கிறிஸ்தவ சகோதரிகள்—அவர்களில் பலர் ஏழைகள், குடும்பத்தை கவனிக்கும் பொறுப்புள்ளவர்கள்—பிரயாண கண்காணிகளையும் அவர்களுடைய மனைவிகளையும் வாராவாரம் உபசரிக்கிறார்கள். இன்னும் சிலரோ தங்கள் சபையிலுள்ள முழுநேர ஊழியர்களுக்கு உணவளிக்கிறார்கள், கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுகிறார்கள், அல்லது ராஜ்ய வேலையை ஆதரிக்க ஏதாவது ஒரு வழியில் தங்களையும் தங்கள் வளங்களையும் அளிக்கிறார்கள். (லூக்கா 21:4) இத்தகைய தியாகங்களை யெகோவா கவனிக்கிறாரா? நிச்சயமாகவே கவனிக்கிறார். “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
20. அடுத்த கட்டுரையில் என்ன விஷயம் ஆராயப்படும்?
20 முதல் நூற்றாண்டில், இயேசுவுக்கும் அவரது அப்போஸ்தலர்களுக்கும் பணிவிடை செய்யும் பாக்கியம் தேவ பயமுள்ள அநேக பெண்களுக்கு கிடைத்தது. இப்பெண்கள் யெகோவாவின் இருதயத்தை எப்படி மகிழ்வித்தனர் என்பதை அடுத்த கட்டுரையில் ஆராயலாம். அதோடு, கஷ்டமான சூழ்நிலைகளிலும் யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்கிற நவீன கால பெண்களின் உதாரணத்தையும் நாம் சிந்திக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a மத்தேயுவால் பதிவு செய்யப்பட்ட இயேசுவின் வம்சாவளி பட்டியல் தாமார், ராகாப், ரூத், மரியாள் ஆகிய நான்கு பெண்களின் பெயர்களை குறிப்பிடுகிறது. இவர்கள் எல்லாருமே கடவுளுடைய வார்த்தையில் உயர்வாகப் பேசப்பட்டுள்ளனர்.—மத்தேயு 1:3, 5, 16.
மறுபார்வை
• இந்தப் பெண்கள் யெகோவாவின் இருதயத்தை எப்படி மகிழ்வித்தனர்?
• சிப்பிராளும் பூவாளும்
• ராகாப்
• அபிகாயில்
• சாறிபாத் விதவை
• இப்பெண்கள் வைத்த முன்மாதிரியை தியானிப்பது நமக்கு தனிப்பட்ட விதத்தில் எப்படி உதவலாம்? விளக்கவும்.
[பக்கம் 9-ன் படங்கள்]
உண்மையுள்ள அநேக பெண்கள் ‘ராஜாவின் கட்டளைக்கு’ மத்தியிலும் கடவுளை சேவித்திருக்கிறார்கள்
[பக்கம் 10-ன் படம்]
விசுவாசத்திற்கு ராகாப் ஏன் சிறந்த மாதிரி?
[பக்கம் 10-ன் படம்]
அபிகாயில் காண்பித்த என்ன பண்புகளை நீங்கள் பின்பற்ற விரும்புகிறீர்கள்?
[பக்கம் 12-ன் படம்]
சாறிபாத்தை சேர்ந்த விதவையின் மனப்பான்மையை இன்று அநேக கிறிஸ்தவ பெண்கள் காட்டுகிறார்கள்