மகிழ்ச்சியாக வாழ நம்பிக்கை அவசியம்
உணவு நச்சினால் (ஃபுட் பாய்ஸனிங்) ஏற்படும் உடல் உபாதைகளை யாருமே சுத்தமாக விரும்ப மாட்டார்கள். இதனால் அடிக்கடி பாதிக்கப்படுகிற ஒருவர் தனது உணவுப் பழக்கங்களைக் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் “ஃபுட் பாய்ஸனிங்” பிரச்சினையை ஒழிப்பதற்காக சாப்பிடுவதையே நிறுத்திவிடுவது நடைமுறையான தீர்வாகாது, மாறாக இது பிரச்சினையை தீர்ப்பதற்குப் பதில் அதை இன்னும் மோசமாக்கிவிடும். ஏனென்றால் உணவின்றி ஒருவர் நெடுநாள் வாழ முடியாது.
இது போலவே, நம்பிக்கை துரோகத்திற்கு பலியாவதும் வேதனையளிக்கும் ஒன்று. நாம் திரும்பத் திரும்ப நம்பிக்கை துரோகத்திற்கு ஆளாகியிருந்தால் நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே சமயத்தில், பிறரால் ஏமாற்றப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஆட்களைவிட்டு அடியோடு ஒதுங்கிப்போவது தீர்வாகாது. ஏன்? ஏனென்றால் நாம் மற்றவர்களை நம்பாவிட்டால் நம்முடைய மகிழ்ச்சியே பறிபோய்விடும். ஆகவே, திருப்தியான வாழ்க்கை வாழ பரஸ்பர நம்பிக்கையை அஸ்திவாரமாகக் கொண்ட உறவுகள் அவசியம்.
“எவ்வித சிக்கலும் இல்லாமல் மற்றவர்களுடன் அன்றாடம் பழகுவதற்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று நம்பிக்கை” என யூஜென்ட் 2002 குறிப்பிடுகிறது. “எல்லாரும் நம்பிக்கைக்காக ஏங்குகிறார்கள்” என நாயீ ஸுயர்கெர் ஸைட்டுங் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. “உயிர்வாழ இன்றியமையாதது” என்று சொல்லும் அளவுக்கு அது “வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.” சொல்லப்போனால், மற்றவர்கள் மீது நம்பிக்கை வைக்காவிட்டால் “ஒருவர் தன் வாழ்க்கையை சமாளிக்கவே முடியாது” என அந்தப் பத்திரிகை தொடர்ந்து சொல்கிறது.
பிறர் மீது நம்பிக்கை வைப்பது ஓர் அடிப்படை தேவை என்பதால், ஏமாற்றப்படும் அபாயமின்றி நாம் யாரை முழுமையாக நம்பலாம்?
முழு இருதயத்துடன் யெகோவாவை நம்புங்கள்
“உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிரு” என பைபிள் நமக்குச் சொல்கிறது. (நீதிமொழிகள் 3:5, NW) சொல்லப்போனால், நமது படைப்பாளராகிய யெகோவா தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படி அவருடைய வார்த்தை மீண்டும் மீண்டும் நம்மை உற்சாகப்படுத்துகிறது.
கடவுள் மீது ஏன் நம்பிக்கை வைக்கலாம்? ஒரு காரணம், யெகோவா தேவன் பரிசுத்தர். “யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்” என தீர்க்கதரிசியாகிய ஏசாயா எழுதினார். (ஏசாயா 6:3, NW) பரிசுத்தம் என்ற கருத்து உங்களைக் கவரவில்லையா? நிச்சயம் அது உங்களைக் கவர வேண்டும், ஏனென்றால் யெகோவா பரிசுத்தராக இருப்பது அவர் தூயவர், மாசற்றவர், முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்பதைக் குறிக்கிறது. அவர் ஒருபோதும் சூதுவாதுள்ளவராகவோ துஷ்பிரயோகம் செய்பவராகவோ ஆக முடியாது, நமது நம்பிக்கையை ஒருபோதும் அவர் கெடுக்க மாட்டார்.
அதோடு, தமக்கு சேவை செய்கிறவர்களைக் காப்பாற்ற அவருக்கு திறமையும் இருக்கிறது, விருப்பமும் இருக்கிறது, அதனால் அவர் மீது முழு நம்பிக்கை வைக்கலாம். உதாரணமாக, அவருடைய மகா வல்லமை அவரை செயல்பட வைக்கிறது. அவருடைய பரிபூரண நீதி, ஞானம் ஆகியவை அவர் செயல்படும் விதத்தைக் கட்டுப்படுத்துகிறது. அவரது ஒப்பற்ற அன்பு அவரை செயல்பட தூண்டுகிறது. “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோவான் 4:8) கடவுளுடைய அன்பு அவர் செய்யும் அனைத்தின் மீதும் செல்வாக்கு செலுத்துகிறது. யெகோவா பரிசுத்தராக இருப்பதும் அவருடைய ஒப்பற்ற பிற குணங்களும் அவரை ஒரு சிறந்த தகப்பனாக்குகிறது, முழு நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக்குகிறது. யெகோவாவைவிட வேறெதுவும், வேறெவரும் அதிக நம்பகமானவராக இருக்க முடியாது.
யெகோவா மீது நம்பிக்கை வைத்து மகிழ்ச்சியாயிருங்கள்
யெகோவா மீது நம்பிக்கை வைப்பதற்கு மற்றொரு நல்ல காரணம், வேறு எவரையும்விட அவர் நம்மை நன்றாக புரிந்துகொள்கிறார் என்பதே. படைப்பாளருடன் பாதுகாப்பான, நிரந்தரமான, நம்பிக்கைக்குரிய உறவு வைத்திருப்பது ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள அடிப்படை தேவை என்பதை அவர் அறிந்திருக்கிறார். இத்தகைய உறவை வைத்திருப்பவர்கள் அதிக பாதுகாப்பாய் உணருகிறார்கள். “யெகோவாவையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்” என்ற முடிவுக்கு வந்தார் தாவீது ராஜா. (சங்கீதம் 40:4, NW) இன்று லட்சோபலட்சம் பேர் தாவீது சொன்ன கருத்தையே முழு இருதயத்தோடு எதிரொலிக்கிறார்கள்.
சில உதாரணங்களைக் கவனியுங்கள். டாரிஸ் என்ற பெண்மணி டொமினிகன் குடியரசு, ஜெர்மனி, கிரீஸ், ஐக்கிய மாகாணங்கள் போன்ற நாடுகளில் வசித்திருக்கிறார். அவர் கூறுகிறார்: “யெகோவா மீது நம்பிக்கை வைப்பதில் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் என்னை எப்படியெல்லாம் கவனித்துக்கொள்வது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். நண்பர்களிலேயே மிகச் சிறந்த நண்பர் அவர்தான்.” உல்ஃப்காங் என்ற சட்ட ஆலோசகர் இவ்வாறு விளக்குகிறார்: “உங்களுடைய மிகச் சிறந்த நலன் மீது அக்கறை காட்டுகிற, உங்களுக்கு மிகச் சிறந்ததை செய்ய வல்லமை படைத்திருக்கிற—கண்டிப்பாக அப்படி செய்கிற—ஒருவர் மீது நம்பிக்கை வைக்க முடிவது அருமையான ஒன்று!” ஆசியாவில் பிறந்து இப்பொழுது ஐரோப்பாவில் வாழும் ஹாம் என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “எல்லா காரியங்களுமே யெகோவாவின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் நம்பிக்கையோடிருக்கிறேன், அவர் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார், ஆகவே அவர் மீது சார்ந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”
ஆனால், நாம் ஒவ்வொருவரும் நமது படைப்பாளர் மீது மட்டுமல்ல, மனிதர் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆகவே, நாம் எப்படிப்பட்ட ஆட்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்? இதற்கான பதிலை ஞானமும் அனுபவமும் மிக்க நண்பராகிய யெகோவா நமக்கு தருகிறார். பைபிளை கவனமாக வாசிப்பதன் மூலம் இந்த விஷயத்தில் அவருடைய அறிவுரையை நாம் தெரிந்துகொள்ள முடியும்.
நம்பிக்கைக்குரிய மனிதர்கள்
“பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 146:3) கடவுளுடைய ஆவியால் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள், பெரும்பாலான மனிதர்கள் நம்முடைய நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் அல்ல என்பதை ஒத்துக்கொள்ள உதவுகின்றன. இந்த உலகத்தாரால் ‘பிரபுக்களாக’ உயர்வாய் மதிக்கப்படுகிறவர்களும்கூட, அதாவது விசேஷ துறைகளில் அறிவாளிகளாகவோ நிபுணர்களாகவோ திகழுகிறவர்களும்கூட நம்முடைய நம்பிக்கைக்குத் தகுதியானவர்களாக ஆகிவிடுவதில்லை. அவர்கள் தரும் அறிவுரை பெரும்பாலும் நம்மை தவறாக வழிநடத்துகிறது, இப்படிப்பட்ட ‘பிரபுக்கள்’ மீது நம்பிக்கை வைத்தால் நாம் சடுதியில் ஏமாற்றமடைந்து விடுவோம்.
ஆனால் அதற்காக யாரையுமே நம்பாமல் இருந்துவிடக் கூடாது. அதேசமயத்தில், நம்முடைய நம்பிக்கைக்குரியவரை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். நாம் எதை அளவுகோலாக பயன்படுத்த வேண்டும்? இதற்கு பூர்வ இஸ்ரவேல் தேசத்தின் ஓர் உதாரணம் நமக்கு உதவலாம். இஸ்ரவேலில் முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு ஆட்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொள்ளும்படி’ மோசேக்கு அறிவுரை கொடுக்கப்பட்டது. (யாத்திராகமம் 18:21) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
இவர்கள் நம்பிக்கைக்குரிய ஸ்தானங்களில் நியமிக்கப்படுமுன், தேவபக்திக்கேற்ற பண்புகளையுடைய ஆட்களாக இருந்தார்கள். கடவுளுக்கு பயந்து நடப்பவர்கள் என்பதற்கான அத்தாட்சியை ஏற்கெனவே காண்பித்தார்கள்; படைப்பாளர் மீது பயபக்தியை காட்டினார்கள், அவருக்குப் பிரியமில்லாததை செய்ய பயந்தார்கள். கடவுளுடைய தராதரங்களை நிலைநாட்டுவதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். அநியாயமான இலாபத்தை வெறுத்தார்கள்—அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்வதை எதிர்த்து நிற்கும் தார்மீக பலம் அவர்களுக்கு இருந்ததை இது சுட்டிக்காட்டியது. சுய நலனுக்காகவோ உறவினர்களுடைய அல்லது நண்பர்களுடைய நலனுக்காகவோ அவர்கள் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கவில்லை.
நம்முடைய நம்பிக்கைக்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் இன்றைக்கு இதுபோன்ற தராதரத்தைப் பயன்படுத்துவது ஞானமாக இருக்கும் அல்லவா? நமக்குத் தெரிந்தவர்கள் கடவுளுக்கு பயந்து நடப்பதை அவர்களுடைய நடத்தை காட்டுகிறதா? கடவுளுடைய ஒழுக்க தராதரங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்கிறார்களா? கெட்ட காரியங்களை செய்யாமல் விலகியிருப்பதன் மூலம் தங்கள் உத்தமத்தைக் காட்டுகிறார்களா? தாங்கள் விரும்பியதை அடைவதற்காக அல்லது தங்கள் ஆதாயத்திற்காக சூழ்நிலையை மாற்றியமைத்துக் கொள்ளாமல் நேர்மையாக நடந்துகொள்கிறார்களா? இத்தகைய குணங்களை வெளிக்காட்டுகிற ஆண்களும் பெண்களுமே நமது நம்பிக்கைக்குரியவர்கள்.
எப்போதாவது ஏமாற்றப்பட்டால் சோர்ந்துவிடாதீர்கள்
நாம் யாரை நம்பலாம் என்பதை தீர்மானிக்கையில், பொறுமையுடன் இருக்க வேண்டும், ஏனென்றால் மற்றவர் மீது நம்பிக்கை வைக்க சில காலமாகும். எடுத்த எடுப்பிலேயே ஒருவரை நம்பிவிடாமல், படிப்படியாக அவர் மீது நம்பிக்கை வைப்பதே ஞானமான போக்கு. அதை எப்படி செய்யலாம்? ஒருவருடைய நடத்தையை நாம் சில காலம் கூர்ந்து கவனிக்கலாம். சில சூழ்நிலைகளில் அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பார்க்கலாம். சின்னச் சின்ன விஷயங்களில்கூட நம்பிக்கைக்குரியவராக இருக்கிறாரா? உதாரணமாக, கடனாக வாங்கிய பொருட்களை சொன்னபடி திருப்பித் தருகிறாரா, இன்ன நேரத்திற்கு வருவதாக சொன்னால் சொன்னபடியே வருகிறாரா? அப்படி செய்கிற ஒருவரை பெரிய விஷயங்களிலும் நம்பலாம். இது, “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்” என்ற நியமத்திற்கு ஒத்திருக்கிறது. (லூக்கா 16:10) இவ்வாறு நம்பிக்கைக்குரியவர்களை பொறுமையாக தேர்ந்தெடுத்தால் பெரும் ஏமாற்றங்களை நாம் தவிர்க்கலாம்.
ஆனால் யாராவது நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தால்? இயேசு கிறிஸ்து கைது செய்யப்பட்ட அந்த இரவில் அவருடைய அப்போஸ்தலர்கள் அவருக்கு பெரிதும் நம்பிக்கை துரோகம் செய்தார்கள் என்பது பைபிளை படித்தவர்களுக்கு தெரிந்ததே. யூதாஸ் காரியோத்து அவரைக் காட்டிக் கொடுத்தான், மற்றவர்களோ பயத்தில் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். பேதுருவோ இயேசுவை மூன்று முறை மறுதலித்தார். ஆனால் இவர்களில் யூதாஸ் மட்டுமே வேண்டுமென்றே செயல்பட்டவன் என்பதை இயேசு பகுத்துணர்ந்தார். இத்தகைய முக்கியமான சமயத்தில் கைவிடப்பட்ட போதிலும் சில வாரங்களுக்குப் பிறகு மீதமுள்ள 11 அப்போஸ்தலர்களிடம் தாம் வைத்திருந்த நம்பிக்கையை இயேசு மீண்டும் உறுதிப்படுத்தினார். (மத்தேயு 26:45-47, 56, 69-75; 28:16-20) இவ்வாறே, நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர் துரோகம் செய்துவிட்டதாக நாம் நினைத்தால், நம்பிக்கை துரோகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே அவருக்கு இருந்ததா அல்லது ஏதோவொரு பலவீனத்தினால் அந்த நேரம் அப்படி செய்தாரா என்பதை யோசித்துப் பார்ப்பது நல்லது.
நான் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனா(ளா)?
நம்பிக்கைக்குப் பாத்திரமானவரை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கும் ஒருவர் நேர்மையாக இருக்க வேண்டும், அதோடு தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்ளவும் வேண்டும்: ‘நான் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனா(ளா)? நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்க என்ன நியாயமான தராதரங்களை என்னிடமும் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கிறேன்?’
நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் எப்பொழுதும் உண்மையே பேசுவார். (எபேசியர் 4:25) சுய ஆதாயத்திற்காக தன்னுடைய பேச்சை ஆளுக்குத் தகுந்த மாதிரி மாற்றிக்கொண்டே இருக்க மாட்டார். ஒரு வாக்குக் கொடுத்தால், அதைக் காப்பாற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வார். (மத்தேயு 5:37) யாராவது ஒருவர் தன்னை நம்பி மனந்திறந்து பேசியிருந்தால், அதை இரகசியமாக வைத்துக்கொள்வார், அவற்றைப் பற்றி மற்றவர்களிடம் கிசுகிசுக்க மாட்டார். அதுமட்டுமல்ல, தனது திருமண துணைக்கு உண்மையாக இருப்பார். ஆபாசமான படங்களைப் பார்க்க மாட்டார், சிற்றின்பம் சம்பந்தமான கற்பனை உலகில் மிதக்க மாட்டார், பிறரிடம் காதல் விளையாட்டுகளில் ஈடுபட மாட்டார். (மத்தேயு 5:27, 28) நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவர் தன்னுடைய மற்றும் தனது குடும்பத்தாருடைய வயிற்றுப்பாட்டுக்காக கடினமாக உழைப்பார்; மற்றவர்களை சுரண்டிப் பிழைப்பதன் மூலம் சுலபமாக பணம் சம்பாதிக்க முயற்சி செய்ய மாட்டார். (1 தீமோத்தேயு 5:8) இத்தகைய நியாயமான மற்றும் வேதப்பூர்வமான தராதரங்களை மனதில் வைத்திருப்பது நமது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை அடையாளம் கண்டுகொள்ள உதவும். மேலும், நடத்தை சம்பந்தமான இதே தராதரங்களைப் பின்பற்றும்போது மற்றவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக நம் ஒவ்வொருவராலும் இருக்க முடியும்.
எல்லாரும் நம்பகமானவர்களாக இருக்கும் ஓர் உலகில் வாழ்வது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! நம்பிக்கை துரோகத்தால் வரும் ஏமாற்றங்கள் அங்கு கடந்தகால நிகழ்ச்சியாக இருக்கும்! இது வெறும் கனவா? பைபிள் தரும் வாக்குறுதிகளை மிக முக்கியமானதாக கருதுகிறவர்களுக்கு இது வெறும் ஒரு கனவல்ல; எந்தவொரு ஏமாற்றமோ, பொய் பித்தலாட்டமோ, சுரண்டலோ, துன்பமோ, வியாதியோ இல்லாத, ஏன் மரணம்கூட இல்லாத அழகிய “புதிய பூமி” வரப்போவதைப் பற்றி கடவுளுடைய வார்த்தை முன்னறிவிக்கிறது! (2 பேதுரு 3:13; சங்கீதம் 37:11, 29; வெளிப்படுத்துதல் 21:3-5) இத்தகைய எதிர்காலத்தைப் பற்றி இன்னும் கூடுதலாக அறிந்துகொள்வது பிரயோஜனமாக இருக்கும் அல்லவா? இதன் சம்பந்தமாகவும் இன்றியமையாத மற்ற விஷயங்கள் சம்பந்தமாகவும் கூடுதலான தகவலை அளிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் ஆவலாய் இருக்கிறார்கள்.
[பக்கம் 4-ன் படம்]
நாம் மற்றவர்களை நம்பாவிட்டால் நம்முடைய மகிழ்ச்சியே பறிபோய்விடும்
[பக்கம் 5-ன் படம்]
யெகோவாவே நமது முழு நம்பிக்கைக்குரியவர்
[பக்கம் 7-ன் படங்கள்]
எல்லாருக்கும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான உறவுகள் அவசியம்