மனிதவர்க்கத்துக்கு அற்புதமான சுகப்படுத்துதல் சமீபமாயிருக்கிறது
“நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லை.” திமிர்வாதக்காரனை இயேசு உடனடியாக அற்புதமாக சுகப்படுத்தியபோது நேரில் கண்ட சாட்சிகள் இப்படித்தான் சொன்னார்கள். (மாற்கு 2:12) இயேசு குருடரையும் ஊமையரையும் சப்பாணிகளையும்கூட குணப்படுத்தினார்; அவரைப் பின்பற்றினோரும் அதேவிதமாகவே செய்தனர். இயேசு இதை எந்த வல்லமையினால் செய்தார்? அதில் விசுவாசம் என்ன பாகத்தை வகித்தது? இந்த முதல் நூற்றாண்டு அனுபவங்கள் இன்று செய்யப்படும் அற்புதமான சுகப்படுத்துதல்கள்மீது என்ன அறிவொளியை வீசுகின்றன?—மத்தேயு 15:30, 31.
“உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது”
பன்னிரண்டு வருஷமாய் உதிரப்போக்கினால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்து, குணப்படுத்தப்படுவதற்காக இயேசுவிடமாக வந்த அந்தப் பெண்ணிடம் இயேசு சொன்ன வார்த்தைகளை இன்று விசுவாச சுகப்படுத்துவோர் மேற்கோள் காட்ட மிகவும் விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர்: “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.” (லூக்கா 8:43-48) அவள் சுகப்படுத்தப்படுவது அவளுடைய விசுவாசத்தைச் சார்ந்திருந்தது என்பதை இயேசுவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டினவா? இன்று செய்யப்படுவது போன்ற “விசுவாச சுகப்படுத்துதலுக்கு” இது ஒரு முன்மாதிரியாக இருந்ததா?
பைபிள் பதிவை நாம் கவனமாக வாசிக்கும்போது, வியாதிப்பட்டவர்கள் குணப்படுத்தப்படுவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கையிட வேண்டும் என்று இயேசுவும் அவருடைய சீஷர்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கேட்கவில்லை என்பதை நாம் காண்கிறோம். மேலே குறிப்பிடப்பட்ட அந்தப் பெண் வந்தாள்; இயேசுவிடம் எதையும் சொல்லாமலே அவருக்கு பின்னாக வந்து அமைதியாக அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்; அப்போது “உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று.” மற்றொரு சந்தர்ப்பத்தில், இயேசு தம்மை கைதுசெய்ய வந்தவர்களில் ஒருவனைச் சுகப்படுத்தினார். இயேசு யாரென்றுகூட அறியாதிருந்த ஒரு மனிதனையும்கூட அவர் சுகப்படுத்தினார்.—லூக்கா 22:50, 51; யோவான் 5:5-9, 13; 9:24-34.
அப்படியென்றால் விசுவாசம் என்ன பாகத்தை வகித்தது? இயேசுவும் அவருடைய சீஷர்களும் தீரு சீதோன் பட்டணங்களில் இருந்தபோது, கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்” என்று சொன்னாள். “ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும்” என்பதாக அவள் கெஞ்சியபோது அவளுடைய மனமுறிவை கற்பனை செய்துபாருங்கள். இரக்கம் மிகுந்தவராய் இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது.” அவளுடைய மகள், ‘அந்நேரம் முதற்கொண்டே’ ஆரோக்கியமடைந்தாள். (மத்தேயு 15:21-28) தெளிவாகவே, விசுவாசம் உட்பட்டிருந்தது, ஆனால் யாருடைய விசுவாசம்? இயேசு போற்றியது தாயின் விசுவாசத்தையே, நோய்வாய்ப்பட்டிருந்த குழந்தையினுடையதை அல்ல என்பதை கவனியுங்கள். மேலும் எதில் விசுவாசம்? இயேசுவை “ஆண்டவரே, தாவீதின் குமாரனே” என்பதாக அழைப்பதன் மூலம், இயேசுவே வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக இருந்தார் என்பதை அந்தப் பெண் வெளிப்படையாக ஒப்புக்கொண்டாள். அது வெறுமனே கடவுளில் விசுவாசமாக அல்லது சுகப்படுத்துபவரின் வல்லமையில் விசுவாசமாக இருக்கவில்லை. “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்பதாக இயேசு சொன்னபோது மேசியாவாக அவரில் விசுவாசம் இல்லாதிருந்தால், துன்பமனுபவித்துக்கொண்டிருந்தவர்கள் குணப்படும்படியாக அவரிடமாக வந்திருக்கமாட்டார்கள் என்பதையே அவர் அர்த்தப்படுத்தினார்.
இயேசு செய்த சுகப்படுத்துதல் இன்று பொதுவாக காணப்படுகிற அல்லது சொல்லப்படுகிறவற்றிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருப்பதை இந்த வேதாகம உதாரணங்களிலிருந்து நாம் காணமுடியும். கூச்சல்போடுவது, பாடுவது, அழுவது, மயங்கிவிழுவது போன்ற பலமான உணர்ச்சிவயப்பட்ட செயல்கள் ஜனக்கூட்டத்திடமும் இயேசுவின் பங்கில் நாடகபாணியில் ஆவேசமும் காணப்படவில்லை. மேலுமாக, விசுவாசத்தில் குறைவுபட்டதையோ அல்லது அவர்களுடைய காணிக்கை போதுமான அளவு தாராளமாக இல்லாததையோ காரணங்காட்டி பலவீனமாயிருந்தவர்களைக் குணப்படுத்த இயேசு ஒருபோதும் தவறவில்லை.
கடவுளுடைய வல்லமையினால் சுகப்படுத்துதல்கள்
இயேசுவும் அவருடைய சீஷர்களும் எவ்வாறு குணப்படுத்தல்களைச் செய்தார்கள்? “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] வல்லமை விளங்கிற்று” என்பதாக பைபிள் பதிலளிக்கிறது. (லூக்கா 5:17) சுகப்படுத்துதல் ஒன்று செய்யப்பட்டதைத் தொடர்ந்து, “அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள்” என்பதாக லூக்கா 9:43 சொல்கிறது. இயேசு சுகப்படுத்துபவராக தம்மிடமாக கவனத்தைத் திருப்பிக்கொள்ளாமல் இருந்தது சரியே. ஒரு சமயம், பிசாசின் தொந்தரவிலிருந்து ஒரு மனிதனை விடுவித்துவிட்டு அவனிடமாக இவ்வாறு சொன்னார்: “நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் [“யெகோவா,” NW] உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவி.”—மாற்கு 5:19.
இயேசுவும் அப்போஸ்தலர்களும் கடவுளுடைய வல்லமையினால் சுகப்படுத்திய காரணத்தால், குணப்படுகிறவனின் பங்கில் விசுவாசம் ஏன் எப்போதும் தேவைப்பட்டதாக இல்லை என்பதைக் காண்பது எளிதாக உள்ளது. என்றபோதிலும், சுகப்படுத்துபவரின் பங்கில் பலமான விசுவாசம் தேவைப்பட்டது. ஆகவே, இயேசுவை பின்பற்றினோரால், குறிப்பாக வல்லமை வாய்ந்ததாக இருந்த ஒரு பிசாசை துரத்த இயலாமல் போனபோது, இயேசு அதற்கான காரணத்தை அவர்களுக்குச் சொன்னார்: “உங்கள் அவிசுவாசத்தினாலேதான்.”—மத்தேயு 17:20.
அற்புதமான சுகப்படுத்துதலின் நோக்கம்
இயேசு தம்முடைய பூமிக்குரிய ஊழியம் முழுவதிலுமாக அநேக சுகப்படுத்துதல்களைச் செய்தபோதிலும், முக்கியமாக அவர் ஒரு ‘சுகப்படுத்துதல் ஊழியத்தைச்’ செய்துகொண்டில்லை. அவர் அற்புதமாக சுகப்படுத்தியபோது—அதற்காக அவர் ஒருபோதும் எந்தக் கட்டணத்தையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளவோ அல்லது நன்கொடைகளைக் கேட்கவோ இல்லை—அது, அவருடைய பிரதான அக்கறையாக இருந்த “ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கி”க்கும் வேலைக்கு அடுத்ததாக இரண்டாம் பட்சமானதாகவே இருந்தது. (மத்தேயு 9:35) ஒரு சமயத்தில், “அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்” என்பதாக பதிவு சொல்கிறது. (லூக்கா 9:11) சுவிசேஷ பதிவுகளில், இயேசு அடிக்கடி “போதகர்” என்பதாக அழைக்கப்படுகிறாரே அல்லாமல் “சுகப்படுத்துபவர்” என்பதாக ஒருபோதும் அழைக்கப்படவில்லை.
அப்படியென்றால் இயேசு ஏன் அற்புதமாக சுகப்படுத்துதல்களை நடப்பித்தார்? முக்கியமாக, வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவாக தம்முடைய அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கே ஆகும். அநியாயமாக யோவான்ஸ்நானன் சிறையிலடைக்கப்பட்டபோது, அவர் கடவுள் தன்னை எதைச் செய்வதற்காக அனுப்பினாரோ அதைச் செய்துமுடித்துவிட்டதைக் குறித்து உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினார். அவர் தன்னுடைய சீஷர்களை இயேசுவிடம் அனுப்பி, “வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா?” என்று கேட்டார். யோவானின் சீஷர்களிடம் இயேசு என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள்: “நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.”—மத்தேயு 11:2-5.
ஆம், சுகமளித்தலை மாத்திரமல்ல, ஆனால் சுவிசேஷங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள மற்ற அற்புதங்களையும்கூட அவர் செய்திருக்கும் உண்மையானது, அவர்தாமே “வருகிறவர்” வாக்களிக்கப்பட்ட மேசியா என்ற அவருடைய அடையாளத்தை உறுதியாக நிரூபித்தது. யாருக்குமே “வேறொருவர் வரக்காத்திருக்கவேண்”டிய அவசியம் இருக்கவில்லை.
இன்று அற்புதமான சுகப்படுத்துதல்கள்?
அப்படியென்றால் சுகப்படுத்துதல்களின் மூலமாக தம்முடைய வல்லமையை கடவுள் நிரூபிக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டுமா? இல்லை. கடவுளின் வல்லமையினால் அவர் நடப்பித்த அற்புதமான செயல்களின் மூலமாக, வருவார் என்பதாக கடவுள் வாக்களித்திருந்த மேசியாவாக தாம் இருந்ததை எந்தச் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் இயேசு நிரூபித்துவிட்டார். இயேசு செய்த வல்லமையான செயல்கள், அனைவரும் வாசிப்பதற்கு பைபிளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட செயல்களைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு தலைமுறையிலுள்ள மக்களுக்கும் செய்துகாட்டி தம்முடைய வல்லமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் கடவுளுக்கு இல்லை.
சுகப்படுத்துதல்களும் மற்ற அற்புதமான செயல்களும் ஓரளவுக்கு மாத்திரமே நம்பவைப்பதாக இருந்தன என்பது அக்கறைக்குரியதாக உள்ளது. இயேசு செய்த அற்புதங்களை நேரடியாக பார்த்தவர்களில் சிலரும்கூட அவருடைய பரம தந்தையின் துணை அவருக்கு இருந்தது என்பதை நம்பவில்லை. “அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.” (யோவான் 12:37) அதன் காரணமாகவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் பல்வேறு அங்கத்தினர்களுக்கு கடவுள் அருளியிருந்த பல்வேறு அற்புதமான ஈவுகளை—தீர்க்கதரிசனம் சொல்லுதல், அந்நிய பாஷை பேசுதல், சுகப்படுத்துதல் போன்றவை—குறித்து கலந்துபேசிய பின்பு, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு சொல்லும்படியாக ஏவப்பட்டார்: “தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.”—1 கொரிந்தியர் 12:28-31; 13:8-10.
நிச்சயமாகவே, கடவுளில் விசுவாசம் வைப்பது நம்முடைய சுகநலனுக்கு அத்தியாவசியமாகும். இருந்தபோதிலும், சுகப்படுத்தப்படும் என்ற பொய்யான வாக்குறுதிகளை விசுவாசத்துக்கு ஆதாரமாக கொள்வது ஏமாற்றத்துக்கே வழிநடத்தும். மேலுமாக, முடிவு காலத்தின் சம்பந்தமாக, இயேசு இந்த எச்சரிக்கையைக் கொடுத்தார்: “ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.” (மத்தேயு 24:24) பித்தலாட்டம், ஏமாற்றுவேலை தவிர, அங்கே பிசாசின் வல்லமை வெளிப்படவும்கூட செய்யலாம். இதன் விளைவாக, நம்பமுடியாத சம்பவங்களைப் பற்றி சொல்லப்படும் செய்திகள் நம்மை ஆச்சரியமடையச் செய்யக்கூடாது; இவை கடவுளில் உண்மையாக விசுவாசம் வைப்பதற்கு நிச்சயமாகவே ஆதாரமாக இல்லை.
இன்று, இயேசு செய்ததைப் போன்ற அற்புதங்களை யாருமே செய்வதில்லை என்பதால், நமக்கு அது குறையாக இருக்கிறதா? இல்லவே இல்லை. உண்மையில், இயேசுவால் சுகப்படுத்தப்பட்டவர்கள் கடைசியாக மறுபடியுமாக நோய்வாய்ப்பட்டிருக்கலாம். அவர்கள் அனைவரும் முதியோராகி இறந்துபோனார்கள். அவர்கள் பெற்றுக்கொண்ட அந்த சுகப்படுத்துதலின் நன்மைகள் ஒப்பிடுகையில் குறுகிய காலமே நிலைத்திருந்தன. என்றபோதிலும், இயேசு செய்த அற்புதமான சுகப்படுத்துதல்கள் எதிர்கால ஆசீர்வாதங்களுக்கு முன்நிழலாக இருந்ததால் அவை அழியாத அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன.
ஆகவே, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஆராய்ந்தப் பின்பு, முன்னால் குறிப்பிடப்பட்ட ஆலிஷாண்டிராவுக்கும் பெனிடிட்டாவுக்கும் நவீன நாளைய விசுவாச சுகப்படுத்துதலிலும் ஆவியுலக தொடர்புடைய குணப்படுத்துதல்களிலும் இனிமேலும் நம்பிக்கை இல்லை. இருந்தபோதிலும், அற்புதமான சுகப்படுத்துதல்கள் கடந்த காலத்தில் மாத்திரமே நடந்த சம்பவங்கள் அல்ல என்பதையும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஏன் அப்படி? உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானோரைப் போல, கடவுளுடைய ராஜ்யத்தில் நடைபெறவிருக்கும் சுகப்படுத்துதலின் ஆசீர்வாதங்களை அவர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.—மத்தேயு 6:10.
வியாதியும் மரணமும் இனிமேல் இருக்காது
நாம் முன்பு கவனித்தபடியே, வியாதியஸ்தரை குணப்படுத்துவதும் மற்ற அற்புதங்களைச் செய்வதுமே இயேசுவின் ஊழியத்தினுடைய முக்கிய நோக்கமாக இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதையே அவர் தம்முடைய முக்கிய வேலையாக ஆக்கியிருந்தார். (மத்தேயு 9:35; லூக்கா 4:43; 8:1) அந்த ராஜ்யத்தின் மூலமாகவே மனிதவர்க்கத்திற்கு அற்புத சுகப்படுத்துதலை செய்து, பாவமும் அபூரணமும் மனித குடும்பத்தின்மீது குவித்திருக்கும் எல்லா தீங்கையும் கடவுள் நீக்கப்போகிறார். இதை எவ்விதமாக செய்வார், எப்போது செய்வார்?
பின்னால் வரவிருந்த எதிர்காலத்தைக் குறித்து முன்னறிவிப்பவராக கிறிஸ்து இயேசு தம்முடைய அப்போஸ்தலன் யோவானுக்கு ஒரு தரிசனத்தைக் கொடுத்தார்: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது.” (வெளிப்படுத்துதல் 12:10) 1914 முதற்கொண்டு கடவுளுடைய பெரிய எதிரியாகிய சாத்தான், பூமியின் எல்லைக்குள் தள்ளப்பட்டிருக்கிறான் என்பதையும் ராஜ்யம் இப்பொழுது உண்மையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் எல்லா அத்தாட்சியும் காட்டுகிறது! இயேசு மேசியானிய ராஜ்யத்தின் ராஜாவாக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டுவிட்டார், இப்பொழுது பூமியின்மீது பெரிய மாற்றங்களைச் செய்ய தயார் நிலையில் இருக்கிறார்.
சமீப எதிர்காலத்தில், இயேசுவின் பரலோக அரசாங்கம் நீதியுள்ள ஒரு மனித சமுதாயத்தின்மீது, உண்மையில் “ஒரு புதிய பூமி”யின்மீது ஆளுகைச் செய்யும். (2 பேதுரு 3:13) அப்போது நிலைமைகள் எவ்வாறு இருக்கும்? இதோ மகிமைபொருந்திய ஒரு முற்காட்சி: “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின. . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:1, 4.
மனிதவர்க்கத்துக்கு அற்புதமான சுகப்படுத்துதல் நடந்தேறும்போது, வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.” ஆம், விசுவாச சுகப்படுத்துவோரால் ஒருபோதும் செய்ய முடியாத காரியத்தைக் கடவுள் செய்வார். “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்.” ஆம், “கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்”திடுவார்.—ஏசாயா 25:8; 33:24.
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தில் மனிதவர்க்கத்தினர் அற்புதமாக சுகப்படுத்தப்படுவர்