படிப்புக் கட்டுரை 38
“என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்”
“உழைத்துக் களைத்துப்போனவர்களே, பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்.”—மத். 11:28.
பாட்டு 84 ‘எனக்கு மனமுண்டு’
இந்தக் கட்டுரையில்...a
1. மத்தேயு 11:28-30-ல் இயேசு என்ன வாக்குறுதியைக் கொடுத்தார்?
பெரிய கூட்டம் ஒன்று இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அப்போது, அவர்களுடைய இதயத்துக்கு இதமளிக்கும் ஒரு வாக்குறுதியை அவர் கொடுக்கிறார். “என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்” என்று சொல்கிறார். (மத்தேயு 11:28-30-ஐ வாசியுங்கள்.) வெறும் பேச்சுக்காக இயேசு அப்படிச் சொல்லவில்லை. நிஜமாகவே அவர் புத்துணர்ச்சி கொடுத்தார். உதாரணத்துக்கு, பயங்கரமான நோயால் தவித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு அவர் எப்படி உதவினார் என்று யோசித்துப்பாருங்கள்.
2. வியாதியால் துவண்டுபோயிருந்த பெண்ணுக்கு இயேசு என்ன செய்தார்?
2 உதவிக்காக அவள் ஏங்கினாள்! யாராவது குணமாக்க மாட்டார்களா என்ற தவிப்பில் அவள் எவ்வளவோ மருத்துவர்களைப் போய்ப் பார்த்துவிட்டாள். ஆனால், 12 வருஷங்கள் போராடிய பிறகும் வேதனை தீர்ந்தபாடில்லை. திருச்சட்டத்தின்படி அவள் தீட்டுப்பட்டிருந்தாள். (லேவி. 15:25) உடம்பு சரியில்லாமல் தவிப்பவர்களை இயேசு குணமாக்குகிறார் என்ற செய்தி அவள் காதில் விழுகிறது. அதனால், அவரைத் தேடிப் போகிறாள். அவரைப் பார்த்தவுடனே அவருடைய மேலங்கியின் ஓரத்தைத் தொடுகிறாள். அந்த நொடியே அவள் குணமாகிறாள். ஆனால், வெறுமனே குணமாக்கியதோடு இயேசு நிறுத்திவிட்டாரா? இல்லை, அன்புக்கும் மரியாதைக்கும் அவள் தகுதியானவள் என்பதைச் செயலில் காட்டினார். உதாரணத்துக்கு, “மகளே” என்று அவளை கனிவோடு கூப்பிட்டார். அப்போது அவளுக்கு எவ்வளவு புத்துணர்ச்சி கிடைத்திருக்கும்! அவள் நிச்சயம் புதுப் பலம் அடைந்திருப்பாள்!—லூக். 8:43-48.
3. எந்தெந்த கேள்விகளுக்கு நாம் பதில்களைப் பார்க்கப்போகிறோம்?
3 இதில் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? இயேசுவிடம் போவதற்கு அந்தப் பெண்தான் முதல்படி எடுத்தாள். அதைத்தான் நாமும் செய்ய வேண்டும். இன்று தன்னிடம் வருகிறவர்களுடைய நோய்களை இயேசு குணமாக்குவதில்லை என்பது உண்மைதான். ஆனாலும், “என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன்” என்று அவர் நம்மை அழைக்கிறார். இப்போது, ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம். (1) இயேசுவிடம் போவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (2) ‘என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று இயேசு எந்த அர்த்தத்தில் சொன்னார்? (3) இயேசுவிடம் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (4) அவர் கொடுத்திருக்கிற வேலை நமக்குப் புத்துணர்ச்சி தருகிறது என்று ஏன் சொல்லலாம்? (5) இயேசுவின் நுகத்தடியின் கீழ் தொடர்ந்து புத்துணர்ச்சி கிடைப்பதற்கு நாம் எதையெல்லாம் செய்ய வேண்டும்?
“என்னிடம் வாருங்கள்”
4-5. இயேசுவிடம் போவதற்கு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்ன?
4 இயேசுவிடம் போவதற்கு ஒரு வழி: அவருடைய சொல்லிலிருந்தும் செயலிலிருந்தும் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள்வது! (லூக். 1:1-4) நமக்காக இதை வேறு யாராவது செய்ய முடியுமா? நாம்தான் அவரைப் பற்றிப் படிக்க வேண்டும். இயேசுவிடம் போவதற்கு இன்னொரு வழி: ஞானஸ்நானம் எடுத்து அவருடைய சீஷராக ஆவதற்கு முடிவு செய்வது!
5 இயேசுவிடம் போவதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. உதவி தேவைப்படும் சமயத்தில் மூப்பர்களிடம் போவதுதான் அது! தன்னுடைய ஆடுகளைக் கவனித்துக்கொள்வதற்காகத்தான் இயேசு இந்த “மனிதர்களைப் பரிசுகளாகக் கொடுத்தார்.” (எபே. 4:7, 8, 11; யோவா. 21:16; 1 பே. 5:1-3) உதவி கேட்டு மூப்பர்களிடம் போவதற்கு நாம்தான் முதல் படி எடுக்க வேண்டும். நம்முடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும், நமக்கு என்ன தேவை என்பதையும், மூப்பர்கள் தாங்களாகவே புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஜூலியன் என்ற சகோதரர் சொல்வதைக் கேளுங்கள். “உடம்பு முடியாம போனதுனால பெத்தேல் சேவைய விட வேண்டியிதாயிடுச்சு. அந்த சமயத்துல, ‘மேய்ப்பு சந்திப்புக்கு வரச்சொல்லி மூப்பர்கள்கிட்ட கேளுங்க’னு ஒரு நண்பர் சொன்னார். அதுக்கு அவசியம் இல்லனு முதல்ல நினைச்சேன். ஆனா, அதுக்கு அப்புறம் மூப்பர்கள்கிட்ட உதவி கேட்டேன். அந்த மேய்ப்பு சந்திப்பு, எனக்கு இதுவரைக்கும் கிடைச்ச அருமையான பரிசுகள்ல ஒண்ணுனு சொல்லலாம்” என்கிறார் ஜூலியன். அவரைப் பார்க்கப் போன அந்த இரண்டு மூப்பர்களைப் போலவே, உண்மையுள்ள மற்ற மூப்பர்களும் ‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்ள நமக்கு உதவுகிறார்கள். அதாவது, கிறிஸ்துவின் எண்ணத்தையும் மனப்பான்மையையும் புரிந்துகொள்ளவும், அவரைப் போலவே நடந்துகொள்ளவும் உதவுகிறார்கள். (1 கொ. 2:16; 1 பே. 2:21) அவர்கள் நமக்குக் கொடுக்கிற பரிசுகளில் இது ஓர் அருமையான பரிசு என்பதில் சந்தேகமே இல்லை.
‘என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்’
6. ‘என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னபோது இயேசு எதை அர்த்தப்படுத்தியிருக்கலாம்?
6 ‘என் நுகத்தடியை உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று சொன்னபோது, “என்னுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இயேசு அர்த்தப்படுத்தியிருக்கலாம். “என்னோடு சேர்ந்து என் நுகத்தடியின் கீழ் வாருங்கள், நாம் ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யலாம்” என்றும் அவர் அர்த்தப்படுத்தியிருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, நாம் வேலை செய்ய வேண்டும் என்பது இதிலிருந்து புரிகிறது.
7. மத்தேயு 28:18-20-ல் சொல்லியிருப்பது போல், நமக்கு என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது, எதை நாம் உறுதியாக நம்பலாம்?
7 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுக்கும்போது, இயேசுவின் அழைப்பை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இயேசு எல்லாரையும் அழைக்கிறார்! கடவுளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று மனதார ஆசைப்படுகிற யாரையும் அவர் ஒதுக்குவதில்லை. (யோவா. 6:37, 38) இயேசுவுக்கு யெகோவா ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அந்த வேலையைச் செய்து முடிப்பதில், இயேசுவின் சீஷர்களாக இருக்கும் எல்லாருக்குமே ஒரு பங்கு இருக்கிறது. அது எவ்வளவு பெரிய பாக்கியம்! அந்த வேலையைச் செய்ய இயேசு நமக்கு எப்போதுமே உதவுவார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.—மத்தேயு 28:18-20-ஐ வாசியுங்கள்.
“என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”
8-9. மனத்தாழ்மையான மக்கள் ஏன் இயேசுவிடம் ஓடோடிப் போனார்கள், என்னென்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்?
8 மனத்தாழ்மையான மக்கள் இயேசுவிடம் ஓடோடி வந்தார்கள். (மத். 19:13, 14; லூக். 7:37, 38) இயேசுவுக்கும் பரிசேயர்களுக்கும் இருந்த வித்தியாசம்தான் அதற்குக் காரணம்! அந்த மதத் தலைவர்கள் அன்பாக நடந்துகொள்ளவில்லை, கர்வம் பிடித்தவர்களாக இருந்தார்கள். (மத். 12:9-14) ஆனால், இயேசு அன்பைப் பொழிந்தார்; மனத்தாழ்மையோடு நடந்துகொண்டார். பரிசேயர்களோ லட்சிய வெறி பிடித்தவர்களாகவும் சமுதாயத்தில் தங்களுக்கு இருந்த அந்தஸ்தை நினைத்து பெருமையடிப்பவர்களாகவும் இருந்தார்கள். தன்னுடைய சீஷர்கள் அவர்களைப் போல் இருக்கக் கூடாது என்றும், மனத்தாழ்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் இயேசு சொன்னார். (மத். 23:2, 6-11) பரிசேயர்கள் மற்றவர்களை அடக்கி ஆண்டார்கள், தங்களைப் பார்த்து பயந்து நடுங்க வேண்டும் என்று நினைத்தார்கள். (யோவா. 9:13, 22) ஆனால் இயேசு, அன்பான வார்த்தைகளாலும் செயல்களாலும் மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தார்.
9 இயேசுவிடமிருந்து நாம் அருமையான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சாந்தமானவன்னும் மனத்தாழ்மையானவன்னும் நான் பேர் எடுத்திருக்கேனா? மத்தவங்களுக்கு சேவ செய்றதுக்காக சாதாரண வேலைகள செய்றதுக்குக்கூட நான் தயாரா இருக்கேனா? நான் அன்பா நடந்துக்குறேனா?’
10. தன்னோடு சேர்ந்து வேலை செய்தவர்களுக்கு எப்படிப்பட்ட சூழலை இயேசு ஏற்படுத்திக்கொடுத்தார்?
10 தன்னோடு சேர்ந்து வேலை செய்வதற்குத் தன்னுடைய சீஷர்களுக்கு ஓர் அருமையான சூழலை இயேசு ஏற்படுத்திக்கொடுத்தார். அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. (லூக். 10:1, 19-21) தன்னுடைய சீஷர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னிடம் கேள்விகள் கேட்கும்படி அவர் நடந்துகொண்டார். அவர்களுடைய கருத்துகளைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களிடம் கேள்விகள் கேட்டார். (மத். 16:13-16) நன்றாகப் பராமரிக்கப்பட்ட தோட்டத்தில் இருக்கிற செடிகள் செழித்து வளர்வதுபோல், இயேசுவின் சீஷர்கள் செழித்து வளர்ந்தார்கள். அவர் கற்றுக்கொடுத்த பாடங்களை மனதில் பதியவைத்துக்கொண்டார்கள். நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் அதற்கான பலன்களைத் தந்தார்கள்.
11. நாம் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
11 உங்களுக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறதா? அப்படியென்றால், இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வீட்டுலயும் வேலை செய்ற இடத்துலயும் நான் எப்படிப்பட்ட சூழல ஏற்படுத்துறேன்? சமாதானமா, சந்தோஷமா வேல செய்ற மாதிரி நடந்துக்குறேனா? மத்தவங்க எங்கிட்ட தயங்காம கேள்விகள் கேட்குற மாதிரி நடந்துக்குறேனா? மத்தவங்களோட கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்குறேனா?’ தங்களிடம் கேள்வி கேட்டவர்களை பரிசேயர்கள் வெறுத்தார்கள். தங்களுடைய கருத்துகளுக்கு எதிரான கருத்துகளைச் சொன்னவர்களைத் துன்பப்படுத்தினார்கள். அவர்களைப் போல் நடந்துகொள்ள நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம்.—மாற். 3:1-6; யோவா. 9:29-34.
“உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்”
12-14. இயேசு நமக்குக் கொடுத்திருக்கிற வேலையைச் செய்வது ஏன் நமக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது?
12 இயேசு கொடுத்த வேலையைச் செய்வது நமக்குப் புத்துணர்ச்சியைத் தரும் என்று சொல்வதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்.
13 நமக்கு தங்கமான கண்காணிகள் இருக்கிறார்கள். யெகோவா உன்னதமானவராக இருந்தாலும் கடுகடுப்பாகவோ நன்றி இல்லாமலோ நடந்துகொள்வது கிடையாது. நம்முடைய சேவையை அவர் உயர்வாக மதிக்கிறார். (எபி. 6:10) அவர் கொடுத்திருக்கிற பெரிய பெரிய பொறுப்புகளைச் செய்து முடிப்பதற்கு உதவுகிறார். (2 கொ. 4:7; கலா. 6:5, அடிக்குறிப்பு) மற்றவர்களை நடத்துகிற விஷயத்தில் நம்முடைய ராஜாவான இயேசு, அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார். (யோவா. 13:15) நம்மைக் கவனித்துக்கொள்கிற மூப்பர்களும் “பெரிய மேய்ப்பரான” இயேசுவைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். (எபி. 13:20; 1 பே. 5:2) நம்மை வழிநடத்தும்போதும் நம்மைப் பாதுகாக்கும்போதும் நம்மீது அன்பு காட்டுகிறார்கள், நம்மைப் பலப்படுத்துகிறார்கள், தைரியமாக நடந்துகொள்கிறார்கள்.
14 நமக்கு ஆருயிர் நண்பர்கள் இருக்கிறார்கள். வேறு யாரையும்விட நமக்குத்தான் அருமையான நண்பர்கள் இருக்கிறார்கள், அர்த்தமுள்ள வேலையும் இருக்கிறது. இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: நம்முடைய சகோதர சகோதரிகள் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களின்படி வாழ்கிறார்கள். அதற்காகத் தங்களைத் தாங்களே நீதிமான்களாக அவர்கள் நினைப்பதில்லை. இப்பேர்ப்பட்டவர்களோடு சேர்ந்து வேலை செய்வது எவ்வளவு பெரிய பாக்கியம்! அவர்கள் ரொம்பவே திறமைசாலிகள்; ஆனாலும், அதைப் பற்றி அவர்கள் பெருமையடிப்பதில்லை. தங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாக நினைக்கிறார்கள். நம்மை வெறுமனே சக ஊழியர்களாக மட்டுமல்ல, நண்பர்களாகவும் பார்க்கிறார்கள். அவர்கள் நம்மேல் வைத்திருக்கிற அன்பு அவ்வளவு ஆழமாக இருப்பதால், நமக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்!
15. நம்முடைய வேலையைப் பற்றி நாம் எப்படி உணர வேண்டும்?
15 நமக்கு அருமையான வேலை இருக்கிறது. யெகோவாவைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் சொல்கிறோம். அவரைப் பற்றி பிசாசு பரப்பியிருக்கிற பொய்களை அம்பலப்படுத்துகிறோம். (யோவா. 8:44) சுமக்க முடியாத பாரத்தை மக்கள் தலைமேல் அவன் வைக்கிறான். உதாரணத்துக்கு, நம்முடைய பாவங்களை யெகோவா மன்னிக்கவே மாட்டார் என்று நாம் நினைக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய ஆசை! மற்றவர்களுடைய அன்பைப் பெற்றுக்கொள்ள நமக்குத் தகுதியில்லை என்று நாம் நினைக்க வேண்டும் என்பதும் அவனுடைய விருப்பம்! இவையெல்லாம் மக்களை அழுத்துகிற சுமைகள், மனதைச் சுக்குநூறாக்குகிற பொய்கள்! கிறிஸ்துவிடம் போகும்போது, நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கிறது. நம் எல்லார்மீதும் யெகோவா அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். (ரோ. 8:32, 38, 39) யெகோவாவை நம்பியிருப்பதற்கு மக்களுக்கு உதவுவதும், அவர்களுடைய வாழ்க்கை வளமாவதைப் பார்ப்பதும் நமக்கு எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது!
இயேசுவின் நுகத்தடியின் கீழ் தொடர்ந்து புத்துணர்ச்சி பெறுங்கள்
16. நாம் சுமக்க வேண்டிய சுமைகளுக்கும் இயேசு நம்மைச் சுமக்கச் சொல்கிற சுமைகளுக்கும் இருக்கிற வித்தியாசம் என்ன?
16 நாம் சுமக்க வேண்டிய சுமைகளுக்கும் இயேசு நம்மைச் சுமக்கச் சொல்கிற சுமைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்துக்கு, என்னதான் நாள் முழுவதும் ஓடியோடி வேலை செய்தாலும் நிறைய பேருக்குக் களைப்பும் அதிருப்தியும்தான் மிச்சம்! ஆனால், யெகோவாவுக்காகவும் இயேசுவுக்காகவும் ஓடியோடி வேலை செய்யும்போது எப்படி இருக்கிறது? மனநிறைவு கிடைக்கிறது, இல்லையா? நாள் முழுவதும் வேலை செய்ததால், நாம் ரொம்பவே களைப்பாக இருக்கலாம். கூட்டங்களுக்குப் போவதற்கு நம்மை நாமே கட்டாயப்படுத்த வேண்டியிருக்கலாம். ஆனாலும், கூட்டத்துக்குப் போய்விட்டு வரும்போது எப்படி இருக்கிறது? பெரும்பாலும் புத்துணர்ச்சியோடும் புதுத் தெம்போடும்தான் வீடு திரும்புகிறீர்கள், இல்லையா? ஊழியத்துக்குப் போகும் விஷயத்திலும், பைபிள் படிக்கும் விஷயத்திலும் இதுதான் உண்மை! இவற்றையெல்லாம் செய்வதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் கையளவு, ஆனால் அதற்கான பலன்கள் கடலளவு!
17. நாம் எதைப் புரிந்துவைத்திருக்க வேண்டும், எதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும்?
17 நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும். அதாவது, நமக்கு ஓரளவுதான் பலம் இருக்கிறது என்பதைப் புரிந்திருக்க வேண்டும். அதனால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை ஞானமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, பொருள்களை வாங்கிக் குவிப்பதிலேயே நம்முடைய பலமெல்லாம் போய்விடுகிறதா? பணக்கார இளைஞனிடம் இயேசு சொன்னதைக் கவனியுங்கள். அவன் இயேசுவிடம், “முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அவன் ஏற்கெனவே திருச்சட்டத்தின்படி வாழ்ந்துவந்தான். இயேசு ‘அன்போடு அவனைப் பார்த்தார்’ என்று மாற்கு சுவிசேஷம் சொல்வதால், அவன் நல்ல மனிதனாகத்தான் இருந்திருக்க வேண்டும். ‘நீ போய் உன்னிடம் இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு,’ “என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு அவனை அழைத்தார். அவன் இயேசுவைப் பின்பற்ற வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டான். ஆனால், அவர் சொன்னது அவனுடைய இதயத்தைப் பிளந்துவிட்டது. அவனிடம் இருந்த ‘நிறைய சொத்துகளை’ விட்டுவிட்டு வர அவனுக்கு மனம் வரவில்லை. (மாற். 10:17-22) இப்படி, இயேசுவின் நுகத்தடியை அவன் ஒதுக்கித்தள்ளினான்; ‘செல்வத்துக்கு’ அடிமையாக இருப்பதென்று முடிவெடுத்தான். (மத். 6:24) அவனுடைய இடத்தில் நீங்கள் இருந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள்?
18. அடிக்கடி நாம் எதை யோசித்துப்பார்க்க வேண்டும், ஏன்?
18 நம் வாழ்க்கையில் எதற்கு முதலிடம் தருகிறோம் என்பதை அடிக்கடி யோசித்துப்பார்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான், நம்முடைய பலத்தை ஞானமாகப் பயன்படுத்துகிறோமா என்று தெரிந்துகொள்ள முடியும். மார்க் என்ற இளைஞர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். “நான் எளிமையா வாழ்றதா ரொம்ப வருஷமா நினைச்சிட்டிருந்தேன். நான் பயனியர் சேவைதான் செஞ்சிட்டிருந்தேன். ஆனா, இன்னும் சௌகரியமா வாழ்றத பத்தியும், பணம் சம்பாதிக்கிறத பத்தியும் யோசிச்சிட்டிருந்தேன். என் வாழ்க்கை ஏன் பாரமா இருக்குதுனும் யோசிக்க ஆரம்பிச்சேன். அப்புறம்தான் ஒரு விஷயம் புரிஞ்சுது. என்னோட நேரத்தையும் பலத்தையும் எனக்காகவே செலவழிச்சிட்டு, மிச்சம் இருக்குறதத்தான் யெகோவாவுக்கு கொடுத்திட்டிருந்தேன்” என்று மார்க் சொல்கிறார். பிறகு, யோசிக்கும் விதத்தையும் வாழ்க்கைப் பாணியையும் அவர் மாற்றிக்கொண்டார். யெகோவாவுடைய சேவையை அதிகமாகச் செய்யத் தயாரானார். “சில சமயத்துல பணத்த பத்தி நான் கவலைப்படுவேன். ஆனாலும் யெகோவாவும் இயேசுவும் எனக்குப் பக்கபலமா இருக்குறதனால, என்னோட பிரச்சினைகள சமாளிக்க முடியுது” என்கிறார் மார்க்.
19. சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?
19 இயேசுவின் நுகத்தடியின் கீழ் தொடர்ந்து புத்துணர்ச்சி கிடைக்க வேண்டுமென்றால், நாம் மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலாவது, நாம் சரியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் செய்வது, யெகோவாவின் வேலை! அதனால், அவர் சொல்கிறபடிதான் அதைச் செய்ய வேண்டும். நாம் வேலைக்காரர்கள், யெகோவாதான் நம் எஜமானர். (லூக். 17:10) நம்முடைய வழியில் அவருடைய வேலையைச் செய்ய வேண்டும் என்று நினைத்தால், நுகத்தடிக்கு எதிராக நாம் செயல்படுகிறோம் என்று அர்த்தம். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு காளை எவ்வளவு பலமானதாக இருந்தால்கூட, அதனுடைய இஷ்டத்துக்கு நடந்துகொள்ளும்போதும், எஜமானின் கட்டுப்பாட்டுக்குள் வராமல் தொடர்ந்து நுகத்தடிக்கு எதிராகச் செயல்படும்போதும், காயங்கள்தான் அதற்கு மிஞ்சும். அதோடு, அது ரொம்பவே களைத்துப்போய்விடும். யெகோவா சொல்கிறபடி அவருடைய வேலையைச் செய்தால், கற்பனை செய்து பார்க்காத விஷயங்களைக்கூட நம்மால் சாதிக்க முடியும். எல்லா தடைகளையும் தகர்த்தெறிய முடியும். அவருடைய நோக்கம் நிறைவேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்!—ரோ. 8:31; 1 யோ. 4:4.
20. என்ன குறிக்கோளோடு இயேசுவின் நுகத்தடியை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
20 இரண்டாவது, சரியான குறிக்கோளோடு செயல்பட வேண்டும். நம்முடைய அன்பான அப்பா யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பதுதான் நம்முடைய குறிக்கோள்! முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களில் யாரெல்லாம் பேராசையோடும் சுயநலத்தோடும் நடந்துகொண்டார்களோ, அவர்களுடைய சந்தோஷம் சீக்கிரத்தில் பறிபோனது. இயேசுவின் நுகத்தடியையும் அவர்கள் ஒதுக்கித்தள்ளினார்கள். (யோவா. 6:25-27, 51, 60, 66; பிலி. 3:18, 19) ஆனால், கடவுள்மீதும் மற்ற மனிதர்கள்மீதும் சுயநலமற்ற அன்பு காட்டியவர்கள், பரலோகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்கிற எதிர்பார்ப்போடு, பூமியில் வாழ்ந்த காலம் முழுவதும் அவருடைய நுகத்தடியைச் சந்தோஷமாகச் சுமந்தார்கள். அவர்களைப் போலவே நாமும் சரியான குறிக்கோளோடு இயேசுவின் நுகத்தடியைச் சுமந்தால், தொடர்ந்து சந்தோஷமாக இருப்போம்.
21. மத்தேயு 6:31-33-ன்படி, யெகோவாவிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்?
21 மூன்றாவது, சரியான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தியாகங்களும் கடின உழைப்பும் நிறைந்த ஒரு வாழ்க்கைப் பாதையை நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம். மற்றவர்கள் நம்மைத் துன்பப்படுத்துவார்கள் என்று இயேசு நம்மை எச்சரித்திருக்கிறார். ஆனால், எப்பேர்ப்பட்ட பிரச்சினையையும் சமாளிக்கத் தேவையான பலத்தை யெகோவா கொடுப்பார். நாம் எந்தளவு சகித்திருக்கிறோமோ அந்தளவு பலமானவர்களாக ஆவோம். (யாக். 1:2-4) நம்முடைய தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் என்பதிலும், இயேசு நம்மைப் பராமரிப்பார் என்பதிலும், சகோதர சகோதரிகள் நம்மைப் பலப்படுத்துவார்கள் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கலாம். (மத்தேயு 6:31-33-ஐ வாசியுங்கள்; யோவா. 10:14; 1 தெ. 5:11) இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்!
22. நாம் எதை நினைத்து சந்தோஷப்படுகிறோம்?
22 இயேசுவால் குணமாக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, அவள் குணமான அன்றே புத்துணர்ச்சி கிடைத்தது. ஆனால், தொடர்ந்து புத்துணர்ச்சி கிடைப்பதற்கு அவள் என்ன செய்ய வேண்டியிருந்தது? கிறிஸ்துவின் உண்மையுள்ள சிஷ்யையாக ஆக வேண்டியிருந்தது. அவள் என்ன செய்திருப்பாள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இயேசுவின் நுகத்தடிக்குக் கீழ் அவள் வந்திருந்தால், பரலோகத்தில் அவரோடு சேர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்திருக்கும்! அந்த வாய்ப்போடு ஒப்பிடும்போது, கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்காக அவள் செய்ய வேண்டியிருந்த எந்தத் தியாகமும் பெரிதாக இருந்திருக்குமா? நமக்குப் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, “என்னிடம் வாருங்கள்” என்ற இயேசுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டதை நினைத்து நாம் எவ்வளவு சந்தோஷப்படுகிறோம்!
பாட்டு 5 ஏசு நமக்கு முன்மாதிரி
a “என்னிடம் வாருங்கள்” என்று இயேசு அழைக்கிறார். அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை விளக்கும். கிறிஸ்துவோடு சேர்ந்து வேலை செய்யும்போது நமக்கு எப்படிப் புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதைப் பற்றியும் இதில் பார்ப்போம்.
b படங்களின் விளக்கம்: நிறைய வழிகளில் இயேசு மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தார்.
c படங்களின் விளக்கம்: இயேசுவைப் போலவே, நிறைய வழிகளில் ஒரு சகோதரர் மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி தருகிறார்.