மத்தேயு எழுதியது
19 இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்த பின்பு கலிலேயாவிலிருந்து புறப்பட்டு, யோர்தானைக் கடந்து யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்குப்* போனார்.+ 2 மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள், அங்கே அவர்களை அவர் குணமாக்கினார்.
3 அவரைச் சோதிப்பதற்காக பரிசேயர்கள் அவரிடம் வந்து, “ஒருவன் தன்னுடைய மனைவியை எந்தக் காரணத்துக்கு வேண்டுமானாலும் விவாகரத்து செய்வது சரியா?”+ என்று கேட்டார்கள். 4 அதற்கு அவர், “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்+ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? 5 ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்’+ என்று அவர் சொன்னதையும் நீங்கள் வாசிக்கவில்லையா? 6 அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை* எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்”+ என்று சொன்னார். 7 “அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் சொன்னார்?”+ என்று அவர்கள் கேட்டார்கள். 8 அதற்கு அவர், “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார்.+ ஆனால், ஆரம்பத்திலிருந்து அப்படி இல்லை.+ 9 நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டை தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன் முறைகேடான உறவுகொள்கிறான்”+ என்று சொன்னார்.
10 சீஷர்கள் அவரிடம், “திருமண பந்தம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று சொன்னார்கள். 11 அதற்கு அவர், “வரம்* பெற்றவர்களைத் தவிர வேறு யாராலும் இந்த வார்த்தைகளின்படி நடக்க* முடியாது.+ 12 சிலர் பிறவிக் குறைபாட்டினால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மனுஷர்களால் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர் பரலோக அரசாங்கத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்”+ என்று சொன்னார்.
13 சின்னப் பிள்ளைகள்மேல் கைகளை வைத்து ஜெபம் செய்வதற்காக அவர்களை மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள்; அந்த மக்களைச் சீஷர்கள் திட்டினார்கள்.+ 14 ஆனால் இயேசு தன் சீஷர்களிடம், “சின்னப் பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள்; இப்படிப்பட்டவர்களுக்கே பரலோக அரசாங்கம் சொந்தமாகும்”+ என்று சொன்னார். 15 அதன் பின்பு, அந்தச் சின்னப் பிள்ளைகள்மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.
16 அப்போது ஒருவன் அவரிடம் வந்து, “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற என்ன நல்ல காரியங்களை நான் செய்ய வேண்டும்?”+ என்று கேட்டான். 17 அதற்கு அவர், “நல்ல காரியங்களைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? நல்லவர்* ஒருவர்தான் இருக்கிறார்.+ ஆனால், முடிவில்லாத வாழ்வைப் பெற நீ விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி”+ என்று சொன்னார். 18 “எந்தக் கட்டளைகளை?” என்று அவன் கேட்டான். இயேசு அவனிடம், “கொலை செய்யக் கூடாது,+ மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது,+ திருடக் கூடாது,+ பொய் சாட்சி சொல்லக் கூடாது;+ 19 உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்;+ உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்+ என்ற கட்டளைகளே” என்று சொன்னார். 20 அப்போது அந்த வாலிபன், “இவை எல்லாவற்றையும் நான் கடைப்பிடித்து வருகிறேன்; என்னிடம் இன்னும் என்ன குறை இருக்கிறது?” என்று கேட்டான். 21 அதற்கு இயேசு, “நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா;+ அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்”+ என்று சொன்னார். 22 இதைக் கேட்டு அந்த வாலிபன் துக்கத்தோடு திரும்பிப் போனான்; ஏனென்றால், அவனிடம் நிறைய சொத்துகள் இருந்தன.+ 23 இயேசு தன் சீஷர்களிடம், “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், பணக்காரர்கள் பரலோக அரசாங்கத்துக்குள் நுழைவது கஷ்டம்.+ 24 மறுபடியும் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்”+ என்றார்.
25 அவருடைய சீஷர்கள் இதைக் கேட்டு மிகவும் ஆச்சரியத்தோடு, “அப்படியானால், யார்தான் மீட்புப் பெற முடியும்?”+ என்று கேட்டார்கள். 26 இயேசு நேராக அவர்களுடைய முகத்தைப் பார்த்து, “மனுஷர்களால் இது முடியாது, ஆனால் கடவுளால் எல்லாமே செய்ய முடியும்”+ என்று சொன்னார்.
27 அப்போது பேதுரு அவரிடம், “இதோ! நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உங்களைப் பின்பற்றி வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?”+ என்று கேட்டார். 28 அதற்கு இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எல்லாம் புதிதாக்கப்படுகிற காலத்தில், மனிதகுமாரன் தன்னுடைய மகிமையான சிம்மாசனத்தில் உட்காரும்போது, என்னைப் பின்பற்றியிருக்கிற நீங்களும் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்.+ 29 என் பெயருக்காக வீடுகளையோ சகோதரர்களையோ சகோதரிகளையோ அப்பாவையோ அம்மாவையோ பிள்ளைகளையோ நிலங்களையோ தியாகம் செய்கிற எல்லாருக்கும் அதைவிட நூறு மடங்கு அதிகமாகக் கிடைக்கும், முடிவில்லாத வாழ்வும் கிடைக்கும்.+
30 ஆனால், முந்தினவர்கள் பலர் பிந்தினவர்களாகவும், பிந்தினவர்கள் முந்தினவர்களாகவும் ஆவார்கள்.”+