அதிகாரம் 43
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய உவமைகள்
மத்தேயு 13:1-53 மாற்கு 4:1-34 லூக்கா 8:4-18
அரசாங்கத்தைப் பற்றிய உவமைகளை இயேசு சொல்கிறார்
பரிசேயர்களைக் கண்டிக்கும்போது இயேசு அநேகமாக கப்பர்நகூமில் இருந்திருக்கலாம். அதே நாளில், அவர் அந்த வீட்டிலிருந்து புறப்பட்டு பக்கத்திலிருக்கிற கலிலேயா கடலுக்கு நடந்துபோகிறார். மக்கள் அங்கே கூடிவருகிறார்கள். இயேசு ஒரு படகில் ஏறி, அதைக் கரையிலிருந்து சற்றுத் தள்ளும்படி சொல்கிறார். பிறகு, பரலோக அரசாங்கத்தைப் பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கிறார். நிறைய உவமைகளை, அதாவது உதாரணங்களை, சொல்லி இயேசு கற்றுக்கொடுக்கிறார். மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களை இயேசு தன்னுடைய உவமைகளில் பயன்படுத்துகிறார். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நிறைய விஷயங்களை அவர்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
முதலில், விதை விதைக்கிற ஒருவனைப் பற்றி இயேசு சொல்கிறார். சில விதைகள் பாதையோரமாக விழுகின்றன. பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்கின்றன. வேறு சில விதைகள் மண் அதிகமாக இல்லாத பாறை நிலத்தில் விழுகின்றன. அவை முளைத்தாலும், மண் ஆழமாக இல்லாததால் அவற்றால் வேர்பிடிக்க முடிவதில்லை. அந்தச் செடிகள் வெயிலில் வாடி வதங்கி காய்ந்துவிடுகின்றன. இன்னும் சில விதைகள் முட்செடிகளுக்கு நடுவே விழுகின்றன. அவை முளைக்கும்போது, முட்செடிகள் அவற்றை நெருக்கிப் போடுகின்றன. கடைசியில், சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து விளைச்சல் தருகின்றன. “அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும்” பலன் தருகின்றன.—மத்தேயு 13:8.
இன்னொரு உவமையில், கடவுளுடைய அரசாங்கத்தைத் தன் நிலத்தில் விதை விதைக்கிற ஒருவனுக்கு இயேசு ஒப்பிடுகிறார். அந்த மனிதன் தூங்கினாலும் சரி, விழித்திருந்தாலும் சரி, அந்த விதைகள் முளைக்கின்றன. அவை எப்படி வளர்கின்றன என்பது ‘அவனுக்கே தெரிவதில்லை.’ (மாற்கு 4:27) அவை தானாக வளர்ந்து பலன் கொடுக்கின்றன. அதை அவன் அறுவடை செய்கிறான்.
அடுத்ததாக, விதைப்பதைப் பற்றிய மூன்றாவது உவமையை இயேசு சொல்கிறார். ஒரு மனிதர் நல்ல விதையை விதைக்கிறார். ‘ஆட்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போது’ அவருடைய எதிரி வந்து கோதுமைக்கு இடையே களைகளை விதைக்கிறான். அந்தக் களைகளைப் பிடுங்கிப் போடலாமா என்று அவருடைய வேலைக்காரர்கள் அவரிடம் வந்து கேட்கிறார்கள். அதற்கு அவர், “வேண்டாம், அப்படிச் செய்யாதீர்கள்; களைகளைப் பிடுங்கும்போது தெரியாமல் கோதுமைப் பயிர்களையும் பிடுங்கிவிடுவீர்கள். அதனால் அறுவடைவரை இரண்டும் சேர்ந்தே வளரட்டும்; அறுவடைக் காலம் வந்ததும் அறுவடை செய்கிறவர்களிடம், ‘முதலில் களைகளைப் பிடுங்கி அவற்றை எரித்துப்போடுவதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள், அதன் பின்பு கோதுமையை என்னுடைய களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று சொல்வேன்” என்கிறார்.—மத்தேயு 13:24-30.
அங்கே இருக்கிற நிறைய பேருக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியும். இப்போது இயேசு மிகச் சிறிய கடுகு விதையைப் பற்றி அவர்களிடம் சொல்கிறார். இதுவும் பலருக்குத் தெரிந்ததுதான். அந்தக் கடுகு விதை ஒரு பெரிய மரமாக வளர்கிறது. அதன் கிளைகளில் பறவைகள் வந்து தங்கும் அளவுக்குப் பெரிதாகிறது. அதனால், “பரலோக அரசாங்கம் கடுகு விதையைப் போல் இருக்கிறது; ஒருவன் அதை எடுத்து தன்னுடைய வயலில் விதைத்தான்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 13:31) கடுகு விதையை விதைப்பது எப்படி என்று இயேசு இங்கே பாடம் நடத்திக்கொண்டில்லை. பிரமாண்டமான வளர்ச்சிக்கு ஒரு உதாரணமாகத்தான் கடுகு விதையைப் பற்றிச் சொல்கிறார். மிகச் சிறிய ஒன்று எப்படிப் பிரமாண்டமாக வளரவோ விரிவடையவோ முடியும் என்பதை விளக்குவதற்காக இந்த உதாரணத்தைச் சொல்கிறார்.
அடுத்ததாக, பலருக்கும் தெரிந்த இன்னொரு விஷயத்தை இயேசு சொல்கிறார். பரலோக அரசாங்கம் “புளித்த மாவைப் போல் இருக்கிறது; ஒரு பெண் அதை மூன்று பெரிய படி மாவில் கலந்து வைத்தாள்” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 13:33) அப்படிக் கலந்த பிறகு, புளித்த மாவை நம்மால் பார்க்க முடியாது. ஆனால், அது மாவு முழுவதையும் புளிக்க வைத்து, உப்ப வைக்கிறது. இது வளர்ச்சியையும் கண்ணுக்குத் தெரியாத மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.
இந்த உவமைகளைச் சொன்ன பிறகு, இயேசு அந்தக் கூட்டத்தாரை அனுப்பிவிட்டு தான் தங்கியிருந்த வீட்டுக்குப் போகிறார். கொஞ்ச நேரத்தில் அவருடைய சீஷர்கள் அவரிடம் வந்து, அந்த உவமைகளுக்கு என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள்.
இயேசு சொன்ன உவமைகளிலிருந்து பயன் அடையுங்கள்
மக்களுக்குக் கற்பிக்கும்போது இயேசு பல தடவை உவமைகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால், இத்தனை உவமைகளை ஒரே சமயத்தில் சொன்னதில்லை. அதனால், “ஏன் அவர்களிடம் உவமைகளால் பேசுகிறீர்கள்?” என்று சீஷர்கள் அவரிடம் கேட்கிறார்கள்.—மத்தேயு 13:10.
பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்காக இயேசு இப்படி உவமைகளைச் சொல்கிறார். “உவமைகளைப் பயன்படுத்தாமல் அவர்களிடம் அவர் பேசியதே இல்லை; ‘நான் வாய் திறந்து உவமைகளாகவே பேசுவேன்; ஆரம்பத்திலிருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ள விஷயங்களை நான் அறிவிப்பேன்’ என்று தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது” என்று மத்தேயுவின் சுவிசேஷம் சொல்கிறது.—மத்தேயு 13:34, 35; சங்கீதம் 78:2.
இயேசு உவமைகளைப் பயன்படுத்தியதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. மக்களின் மனப்பான்மையைத் தெரிந்துகொள்ள இது உதவியது. அவர்களைப் பொறுத்தவரை, இயேசு அழகாகக் கதை சொல்பவர், அற்புதங்களைச் செய்பவர், அவ்வளவுதான்! அவரைத் தங்கள் எஜமானாக அவர்கள் பார்க்கவில்லை. அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றோ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரைப் பின்பற்ற வேண்டும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை. (லூக்கா 6:46, 47) தங்களுடைய கருத்துகளையும் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று துளியும் நினைக்கவில்லை. இயேசுவின் செய்தியைக் கேட்டு, இந்த மாற்றங்களைச் செய்ய அவர்கள் கொஞ்சம்கூட தயாராக இல்லை.
அதனால் இயேசு தன் சீஷர்களிடம், “அவர்கள் பார்த்தும் பார்க்காதவர்களாகவும், கேட்டும் கேட்காதவர்களாகவும், புரிந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், நான் அவர்களிடம் உவமைகளின் மூலம் பேசுகிறேன். ஏசாயா சொன்ன இந்தத் தீர்க்கதரிசனம் அவர்களிடம் நிறைவேறுகிறது: ‘அவர்களுடைய இதயம் இறுகிப்போயிருக்கிறது’” என்று சொல்கிறார்.—மத்தேயு 13:13-15; ஏசாயா 6:9, 10.
ஆனால், இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற எல்லாரும் இப்படி இல்லை. அதனால் இயேசு, “உங்களுடைய கண்கள் பார்ப்பதாலும் உங்களுடைய காதுகள் கேட்பதாலும் நீங்கள் சந்தோஷமானவர்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நிறைய தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் பார்க்கிறவற்றைப் பார்க்க ஆசைப்பட்டும் பார்க்கவில்லை; நீங்கள் கேட்கிறவற்றைக் கேட்க ஆசைப்பட்டும் கேட்கவில்லை” என்று சொல்கிறார்.—மத்தேயு 13:16, 17.
பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கும் மற்ற உண்மையுள்ள சீஷர்களுக்கும் இயேசு சொல்வதை ஏற்றுக்கொள்கிற மனநிலை இருக்கிறது. அதனால்தான், “பரலோக அரசாங்கத்தைப் பற்றிய பரிசுத்த ரகசியங்களைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை” என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 13:11) உவமைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அந்தச் சீஷர்கள் உண்மையிலேயே ஆசைப்பட்டதால் விதைப்பவனைப் பற்றிய உவமையை இயேசு விளக்குகிறார்.
“விதை கடவுளுடைய செய்தி” என்று இயேசு சொல்கிறார். (லூக்கா 8:11) மண் என்பது ஒருவரின் இதயத்தைக் குறிக்கிறது. இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்டால்தான், இந்த உவமையைப் புரிந்துகொள்ள முடியும்.
பாதையோரமாக விழுந்த விதையைப் போல் இருப்பவர்களைப் பற்றி இயேசு முதலில் சொல்கிறார். “அவர்கள் நம்பிக்கை வைக்காமலும் மீட்புப் பெறாமலும் இருப்பதற்காகப் பிசாசு வந்து அவர்களுடைய இதயத்திலிருந்து அந்தச் செய்தியை எடுத்துவிடுகிறான்” என்று சொல்கிறார். (லூக்கா 8:12) பாறை நிலத்தில் விழுந்த விதையைப் போல இருப்பவர்கள் அந்தச் செய்தியைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அது அவர்களுடைய இதயத்தில் ஆழமாக வேர்விடுவதில்லை. அதனால், “அந்தச் செய்தியின் காரணமாக உபத்திரவமோ துன்புறுத்தலோ வந்தவுடன்” அவர்கள் தடுமாறிவிடுகிறார்கள். “சோதனைக் காலம்” வந்தவுடன், ஒருவேளை குடும்பத்தாரிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ எதிர்ப்பு வந்தவுடன், விசுவாசத்தை விட்டு விலகிவிடுகிறார்கள்.—மத்தேயு 13:21; லூக்கா 8:13.
முட்செடிகளுக்கு நடுவில் விழுந்த விதையைப் போல் இருக்கிறவர்கள் கடவுளின் செய்தியைக் கேட்கிறார்கள். “ஆனால் இந்த உலகத்தின் கவலையும் செல்வத்தின் வஞ்சக சக்தியும்” அவர்களை நெருக்கிப் போடுகின்றன. (மத்தேயு 13:22) ஆரம்பத்தில், கடவுளின் செய்தி அவர்கள் இதயத்தில் இருந்தது; ஆனால், கடவுளைவிட மற்ற விஷயங்களுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்ததால் அவர்கள் பலன் கொடுக்கவில்லை.
கடைசியாக, நல்ல நிலத்தைப் பற்றி இயேசு சொல்கிறார். இது, கடவுளின் செய்தியைக் கேட்டு, தங்கள் இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறவர்களைக் குறிக்கிறது. இவர்கள் “பலன் கொடுக்கிறார்கள்.” வயது, ஆரோக்கியம் போன்ற காரணங்களால் எல்லாராலும் ஒரே அளவுக்குப் பலன் கொடுக்க முடியாது. ஒருவர், 100 மடங்காகவும், இன்னொருவர் 60 மடங்காகவும், வேறொருவர் 30 மடங்காகவும் பலன் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் “நேர்மையான நல்ல இதயத்தோடு அந்தச் செய்தியைக் கேட்டு, அதைத் தங்களுக்குள் பதிய வைத்துக்கொண்டு, சகித்திருந்து பலன் கொடுக்கிறார்கள்.” இவர்கள்தான் கடவுளுடைய சேவையில் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.—லூக்கா 8:15.
இயேசுவைத் தேடிப் போய் விளக்கங்களைக் கேட்ட சீஷர்களின் மனதை இந்த விஷயங்கள் தொடுகின்றன. இப்போது, அந்த உவமைகளை அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். தான் சொல்கிற உவமைகளை அவர்கள் புரிந்துகொண்டு, மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். “ஒரு விளக்கைக் கொண்டுவந்து யாராவது கூடையால் மூடி வைப்பார்களா அல்லது கட்டிலுக்குக் கீழே வைப்பார்களா? விளக்குத்தண்டின் மேல்தானே வைப்பார்கள்?” என்று இயேசு கேட்கிறார். அதனால், “கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று சொல்கிறார்.—மாற்கு 4:21-23.
கூடுதலான ஆலோசனைகள்
விதைப்பவனைப் பற்றிய உவமைக்கு விளக்கம் தெரிந்துகொண்ட பிறகு, சீஷர்கள் இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அதனால், “வயலில் விதைக்கப்பட்ட களைகளைப் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்குங்கள்” என்று கேட்கிறார்கள்.—மத்தேயு 13:36.
கரையோரத்தில், இயேசு பேசுவதைக் கேட்ட மக்கள் கூட்டத்துக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! இயேசு சொன்னதை அந்த மக்கள் கேட்டார்கள். ஆனால், அந்த உவமைகளின் அர்த்தத்தையும் அதை எப்படி வாழ்க்கையில் கடைப்பிடிக்கலாம் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வம் இல்லை. உவமைகளை மேலோட்டமாக கேட்டதே போதும் என்று திருப்தி அடைந்துவிட்டார்கள். அந்த மக்களுக்கும், ஆர்வத்தோடு தன்னிடம் வந்து கேட்கிற சீஷர்களுக்கும் இடையே இருக்கிற வித்தியாசத்தை இயேசு பார்க்கிறார்.
அதனால் அவர்களிடம், “நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிற விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள். எந்த அளவையால் அளந்து கொடுக்கிறீர்களோ அதே அளவையால்தான் உங்களுக்கும் அளந்து கொடுக்கப்படும், அதற்கு அதிகமாகவும் கொடுக்கப்படும்” என்று சொல்கிறார். (மாற்கு 4:24) இயேசு சொல்கிற விஷயங்களுக்கு அவருடைய சீஷர்கள் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் ஆர்வத்தோடு கேட்பதால், கூடுதலான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள்; இன்னும் நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். இப்போது, கோதுமையையும் களைகளையும் பற்றிய உவமையை இயேசு தன் சீஷர்களுக்கு விளக்குகிறார்.
“நல்ல விதையை விதைக்கிறவர், மனிதகுமாரன்; வயல், இந்த உலகம்; நல்ல விதை, கடவுளுடைய அரசாங்கத்தின் மகன்கள்; களைகளோ, பொல்லாதவனின் மகன்கள்; அவற்றை விதைத்த எதிரி, பிசாசு; அறுவடை, இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்; அறுவடை செய்கிறவர்கள், தேவதூதர்கள்” என்று சொல்கிறார்.—மத்தேயு 13:37-39.
இப்படி, அந்த உவமையில் சொல்லப்பட்ட முக்கிய அம்சங்களை முதலில் இயேசு விளக்குகிறார். பிறகு, சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்கிறார். இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில் ‘அரசாங்கத்தின் மகன்களுக்கு’ நடுவிலிருந்து களைகளைப் போன்ற போலி கிறிஸ்தவர்களைத் தேவதூதர்கள் பிரித்தெடுப்பார்கள் என்று சொல்கிறார். “நீதிமான்கள்” கூட்டிச்சேர்க்கப்படுவார்கள்; அவர்கள் “தங்களுடைய தகப்பனின் அரசாங்கத்தில்” பிரகாசிப்பார்கள். ‘பொல்லாதவனின் மகன்களுக்கு’ என்ன நடக்கும்? அவர்கள் அழிக்கப்படுவார்கள். அதை நினைத்து “அவர்கள் அழுது அங்கலாய்ப்பார்கள்.”—மத்தேயு 13:41-43.
பிறகு, தன்னுடைய சீஷர்களுக்கு இன்னும் மூன்று உவமைகளை இயேசு சொல்கிறார். முதலில், “பரலோக அரசாங்கம் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தைப் போல் இருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டுபிடித்து, மறுபடியும் அங்கே மறைத்து வைக்கிறான்; பின்பு சந்தோஷத்தோடு போய், தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்” என்று சொல்கிறார்.—மத்தேயு 13:44.
இரண்டாவதாக, “பரலோக அரசாங்கம் அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் போல் இருக்கிறது. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அவன் போய்த் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான்” என்று சொல்கிறார்.—மத்தேயு 13:45, 46.
மதிப்புள்ள ஒன்றைப் பெறுவதற்காக ஒருவர் தியாகங்களைச் செய்யத் தயாராக இருப்பதை இந்த இரண்டு உவமைகளும் காட்டுகின்றன. விலை உயர்ந்த ஒரு முத்தை வாங்குவதற்காக அந்த வியாபாரி “தன்னிடம் இருந்த எல்லாவற்றையும்” உடனடியாக விற்கிறார். நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கிற மனிதனும் அதை வாங்குவதற்காகத் தன்னிடம் இருந்த “எல்லாவற்றையும்” விற்கிறான். இந்த இரண்டு உவமைகளிலும், விலைமதிப்புள்ள ஒன்றை வாங்குவதற்காக ஒருவர் தன்னிடம் இருக்கிற எல்லாவற்றையும் விற்கிறார். கடவுளிடம் நெருங்கி வருவதற்காக ஒருவர் செய்கிற தியாகங்களோடு இதை ஒப்பிடலாம். (மத்தேயு 5:3) இயேசு சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற சீஷர்களில் சிலர், கடவுளுடன் நெருங்கி வருவதற்கும், இயேசுவைப் பின்பற்றுவதற்கும் பெரிய பெரிய தியாகங்கள் செய்யத் தயாராக இருப்பதை ஏற்கெனவே காட்டியிருக்கிறார்கள்.—மத்தேயு 4:19, 20; 19:27.
கடைசியாக, பரலோக அரசாங்கம் எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொள்கிற இழுவலையைப் போல் இருப்பதாக இயேசு சொல்கிறார். (மத்தேயு 13:47) அவை பிரிக்கப்படும்போது, நல்ல மீன்கள் கூடைகளில் வைக்கப்படுகின்றன; வேண்டாத மீன்கள் தூக்கி வீசப்படுகின்றன. அதேபோல், இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில், நீதிமான்கள் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தேவதூதர்கள் பிரித்தெடுப்பார்கள்.
“மனுஷர்களைப் பிடிப்பவர்களாக” ஆக்குவதற்காகத் தன்னுடைய முதல் சீஷர்களை இயேசு கூப்பிட்ட சமயத்தில், அவரும் ஆன்மீக விதத்தில் மீன்பிடிக்கிற வேலையைச் செய்துவந்தார். (மாற்கு 1:17) ஆனால், இழுவலையைப் பற்றிய இந்த உதாரணம் “சகாப்தத்தின் கடைசிக் கட்டத்தில்” நிறைவேறும் என்று இயேசு சொல்கிறார். (மத்தேயு 13:49) அதனால், முக்கியமான நிறைய விஷயங்கள் இனிமேல்தான் நடக்கப்போகின்றன என்பதை அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் தெரிந்துகொள்கிறார்கள்.
இப்படி, படகில் உட்கார்ந்து இயேசு சொன்ன உவமைகளை அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். தன் ‘சீஷர்களோடு தனியாக இருக்கும்போது எல்லா விஷயங்களையும் விளக்குவதற்கு’ இயேசுவும் தயாராக இருக்கிறார். (மாற்கு 4:34) “தன்னுடைய பொக்கிஷத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளியே எடுக்கிற வீட்டு எஜமானைப் போல்” அவர் இருக்கிறார். (மத்தேயு 13:52) தன்னால் திறமையாகக் கற்பிக்க முடியும் என்பதைக் காட்டிக்கொள்வதற்காக இயேசு இந்த உதாரணங்களைச் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, விலை உயர்ந்த பொக்கிஷங்களைப் போல இருக்கிற சத்தியங்களைத் தன்னுடைய சீஷர்களுக்குக் கற்றுத்தருவதற்காகவே இவற்றைச் சொன்னார். அவரைப் போல திறமையாகக் ‘கற்றுக்கொடுக்க’ யாராலும் முடியாது!