பைபிள் தன்னில்தானே முரண்படுகிறதா?
நூலாசிரியர் ஹென்ரி வான் டைக் ஒருமுறை பின்வருமாறு எழுதினார்: “கிழக்கில் பிறந்து மத்திய கிழக்கின் மொழி நடையிலும் சொல்லணியிலும் வெளிப்படுத்திக்கூறி, பைபிள் உலக முழுவதனுடைய வழிகளில் நன்றாய்ப் பழக்கப்பட்ட நடையுடன் நடந்து, எல்லா இடங்களிலும் அதற்குச் சொந்தமானதைக் கண்டுபிடிக்க நாடுநாடாக உட்செல்கிறது. அது நூற்றுக்கணக்கான மொழிகளில் மனிதனின் இருதயத்துக்குள் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறது. பிள்ளைகள் ஆச்சரியத்துடனும் இன்பமகிழ்ச்சியுடனும் அதன் கதைகளுக்குச் செவிகொடுத்துக் கேட்கின்றனர், ஞானிகள் அவற்றை வாழ்க்கைக்குரிய நீதிக்கதைகளாக ஆழ்ந்து சிந்தனை செய்கின்றனர். பொல்லாதவர்களும் அகந்தையுள்ளோரும் அதன் எச்சரிக்கைகளின்பேரில் நடுங்குகின்றனர், ஆனால் புண்பட்டோருக்கும் மனஸ்தாபப்பட்டுத் திரும்புவோருக்கும் அது தாயின் குரலைக் கொண்டுள்ளது. . . . இந்தப் பொக்கிஷத்தைத் தனக்குச் சொந்தமாக வைத்திருக்கிற எந்த மனிதனும் ஏழையாக அல்லது துணையற்றவனாக இல்லை.”
பைபிள் நிச்சயமாகவே “நூற்றுக்கணக்கான மொழிகளில் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறது.” அதன் 66 புத்தகங்களில் ஒன்றாவது ஏறக்குறைய 1,970 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இலட்சக்கணக்கானோர் பைபிளைக் கடவுள் கொடுத்த ஈவாகக் கருதி மனமகிழ்ச்சியுடனும் நன்மையுண்டாகவும் வாசிக்கின்றனர். எனினும், மற்றவர்கள் அது முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறது, ஆகவே நம்பத்தகாதது என்று சொல்கின்றனர். கவனமான ஆராய்ச்சி எதை வெளிப்படுத்துகிறது?
நம்முடைய அட்டைப்படம் குறித்துக் காட்டுகிறபடி, பைபிளை எழுதுவதற்குக் கடவுள் உண்மையுள்ள மனிதர்களைப் பயன்படுத்தினார். பைபிளின் கவனமான பகுத்தாராய்ச்சி, அது 16 நூற்றாண்டுகளடங்கிய ஒரு காலப்பகுதியினூடே பெரும்பாலும் 40 மனிதர்களால் எழுதப்பட்டதென நிச்சயமாகவே வெளிப்படுத்துகிறது. அவர்கள் தேர்ச்சிப்பெற்ற எழுத்தாளர்களா? இல்லை. மேய்ப்பர், மீன்பிடிப்பவர், வரிவசூலிப்பவர், மருத்துவர், கூடாரஞ்செய்பவர், ஆசாரியர், தீர்க்கதரிசி, மற்றும் அரசர் ஆகியோரை அவர்களுக்குள் ஒருவர் காணலாம். இந்த 20-ம் நூற்றாண்டில் நாம் பழக்கப்பட்டிராத ஆட்களையும் பழக்கவழக்கங்களையும் அவர்களுடைய எழுத்துக்கள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. உண்மையில், பைபிள் எழுத்தாளர்கள்தாமே தாங்கள் எழுதினவற்றின் உட்பொருளை எல்லா சமயங்களிலும் புரிந்துகொள்ளவில்லை. (தானியேல் 12:8-10) ஆகையால் நாம் பைபிளை வாசிக்கையில் புரிந்துகொள்வதற்குக் கடினமாயுள்ள சிலவற்றை எதிர்ப்பட்டால் வியப்படைய வேண்டியதில்லை.
அத்தகைய சிக்கல்களைத் தீர்க்க முடியுமா? பைபிள் தன்னில்தானே முரண்படுகிறதா? இவற்றைக் கண்டுபிடிக்க, சில உதாரணங்களை நாம் கவனிக்கலாம்.
இவை உண்மையான சிக்கல்களா?
◼ காயீன் தன் மனைவியை எங்கிருந்து அடைந்தான்? (ஆதியாகமம் 4:17)
ஆபேல் கொலைசெய்யப்பட்டபின், குற்றப்பழியுடைய அவன் சகோதரன் காயீனும் அவர்களுடைய பெற்றோரான, ஆதாமும் ஏவாளுமே, பூமியில் மீந்திருந்தனரென ஒருவர் நினைக்கலாம். எனினும், ஆதாம் ஏவாளுக்கு ஒரு பெரிய குடும்பம் இருந்தது. ஆதியாகமம் 5:3, 4-ன் பிரகாரம், ஆதாமுக்கு சேத் என்னும் பெயருடைய ஒரு குமாரன் இருந்தான். அந்த விவரம் மேலும் சொல்வதாவது: “ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.” ஆகவே காயீன் தன் சகோதரியை அல்லது ஒருவேளை தன் உடன்பிறந்தாரின் குமாரத்திகளில் ஒருத்தியை மணம் செய்தான். அப்பொழுது மனிதவர்க்கம் மனித பரிபூரணத்துக்கு அவ்வளவு நெருங்க இருந்ததால், இன்று அத்தகைய மண இணைப்பினால் பிறக்கும் பிள்ளைகளுக்கு இடுக்கண் உண்டாக்கக்கூடிய உடல்நலக் கேடுகள் அப்போது அத்தகைய திருமணம் உண்டாக்கவில்லையெனத் தெரிகிறது.
◼ எகிப்துக்குள் கொண்டுசெல்லும்படி யோசேப்பை விற்றது யார்?
யோசேப்பின் சகோதரர்கள் அவனை சில இஸ்மவேலருக்கு விற்றுப்போடும்படி தீர்மானித்தனரென ஆதியாகமம் 37:27 சொல்லுகிறது. ஆனால் அடுத்த வசனம் பின்வருமாறு கூறுகிறது: “அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் [யோசேப்பின் சகோதரர்கள்] யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள்.” யோசேப்பு யாருக்கு விற்கப்பட்டான் இஸ்மவேலருக்கா மீதியானியருக்கா? மீதியானியர் தங்கள் முற்பிதாவான ஆபிரகாமின் மூலம் இஸ்மவேலருக்கு உறவினராயிருந்தனர், அவர்கள் இஸ்மவேலரெனவும் அழைக்கப்பட்டிருக்கலாம். அல்லது மீதியானிய வர்த்தகர்கள் இஸ்மவேலர் வர்த்தகப் பயணக்கூட்டம் ஒன்றோடு பயணஞ்செய்திருக்கலாம். எவ்வாறாயினும், விற்றது யோசேப்பின் சகோதரர்களேயாவர், பின்னால் யோசேப்பு அவர்களிடம்: “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்,” என்று சொல்ல முடிந்தது.—ஆதியாகமம் 45:4.
◼ மோவாபிய பெண்களோடு வேசித்தன உறவுகொண்டதற்காகவும் பாகால்பேயோரின் வணக்கத்தில் ஈடுபட்டதற்காகவும் மாண்ட இஸ்ரவேலர் எத்தனை பேர்?
எண்ணாகமம் 25:9 பின்வருமாறு கூறுகிறது: “அந்த [தங்கள் பொல்லாத நடத்தைக்காகக் கடவுளிடமிருந்து வந்த] வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.” எனினும், அப்போஸ்தலன் பவுல் சொன்னதாவது: “அவர்களில் [வனாந்தரத்தில் இஸ்ரவேலரில்] சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.” (1 கொரிந்தியர் 10:8) கொல்லப்பட்ட எண்ணிக்கை ஒருவேளை 23,000-த்துக்கும் 24,000-த்துக்கும் இடையில் இருந்திருக்கலாம், ஆகவே இதில் ஏதாயினும் ஒன்று ஏற்கத்தக்கது. எனினும், இந்தப் பாவத்தில் உட்பட்ட “ஜனங்களின் தலைவர் எல்லா”ரும் நியாயாதிபதிகளால் கொல்லப்பட்டனரென எண்ணாகமம் முக்கியமாய்க் குறிப்பிடுகிறது. (எண்ணாகமம் 25:4, 5) குற்றப்பழியுடைய இந்தத் “தலைவர்கள்” 1,000 பேர் இருந்திருக்கலாம், இவ்வாறு, பவுல் குறிப்பிட்ட 23,000-த்தோடு கூட்டுகையில் மொத்தத்தொகையை 24,000 ஆக்கியிருக்கலாம். கடவுளிடமிருந்து வந்த வாதைக்கு 23,000 பேர் நேரடியான பலியானார்களென தோன்றுகிறபோதிலும், 24,000 பேர் அனைவரும் யெகோவாவின் வாதையை அனுபவித்தனர் ஏனெனில் அவர்கள் ஒவ்வொருவரும் ஆக்கினைத்தீர்ப்புக்குரிய அவருடைய கட்டளையின்கீழ் செத்தனர்.—உபாகமம் 4:3.
◼ ஆகாக் இஸ்ரவேலின் அரசன் சவுலுடன் சமகாலத்தவனாக இருந்ததால், அந்தப் பெயரையுடைய அமலேக்கிய அரசனைப்பற்றி பிலேயாம் வெகு காலத்துக்கு முன்னால் குறிப்பிட்டது ஒரு முரண்பாடல்லவா?
ஏறக்குறைய பொ.ச.மு. 1473-ல், பிலேயாம் இஸ்ரவேல் அரசன் ஒருவன் “ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்,” என முன்னறிவித்தான். (எண்ணாகமம் 24:7) அரசன் சவுலின் ஆட்சி (பொ.ச.மு. 1117-1078) வரையில் ஆகாகைப்பற்றி பிற்பட்ட எந்தக் குறிப்பும் செய்யப்படவில்லை. (1 சாமுவேல் 15:8) எனினும், இது ஒரு முரண்பாடல்ல, ஏனெனில் “ஆகாக்” என்பது எகிப்தில் பார்வோன் என்பது இருந்ததைப்போல் அரசருக்குரிய ஒரு பட்டமாக இருந்திருக்கலாம். மேலும் ஆகாக் என்பது அமலேக்கிய அரசர்களால் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொந்தப் பெயராகவும் இருப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.
◼ இஸ்ரவேலரை இலக்கம் பார்க்கும்படி தாவீதைச் செய்வித்தது யார்?
இரண்டு சாமுவேல் 24:1 கூறுவதாவது: “கர்த்தருடைய [யெகோவாவின், NW] கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான் [தாவீது தூண்டப்பட்ட போது, அடிக்குறிப்பு].” ஆனால் அரசன் தாவீதைப் பாவம் செய்யத் தூண்டினது யெகோவா அல்ல, ஏனெனில் 1 நாளாகமம் 21:1 பின்வருமாறு கூறுகிறது: “சாத்தான் [“எதிர்ப்பவன்,” NW அடிக்குறிப்பு] இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டா”ன். கடவுள் இஸ்ரவேலரின்மீது கோபமடைந்திருந்தார். ஆகவே பிசாசான சாத்தான் இந்தப் பாவத்தை அவர்கள்மீது கொண்டுவர அனுமதித்தார். இந்தக் காரணத்தினிமித்தம், 2 சாமுவேல் 24:1 கடவுள்தாமே இதைச் செய்ததுபோல் வாசிக்கிறது. கவனத்தை இழுப்பதாய், தமிழ் திருத்திய மொழிபெயர்ப்பு (1936-ன் பதிப்பு) பின்வருமாறு வாசிக்கிறது: “யெகோவாவின் கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல், யூதா என்பவர்களை இலக்கம்பார்க்கும்படி சொல்வதற்குத் தாவீதை அவர்களுக்கு விரோதமாய் ஏவினார்.”
◼ தாவீது இலக்கம் பார்த்ததில் இஸ்ரவேலருக்கும் யூதேயருக்கும் கொடுத்துள்ள எண்களின் வேறுபாட்டை ஒருவர் எவ்வாறு ஒத்திசைவாக்கக்கூடும்?
இரண்டு சாமுவேல் 24:9-ல் இஸ்ரவேலர் 8,00,000 எனவும் யூதேயர் 5,00,000 எனவும் எண்கள் கொடுக்கப்பட்டிருக்கையில், 1 நாளாகமம் 21:5 போர்செய்யத்தக்கவர்கள் இஸ்ரவேலில் 11,00,000 யூதாவில் 4,70,000 என்ற எண்களைக் கொடுக்கிறது. அரசர் சேவையில் நிரந்தரமாய்ச் சேர்க்கப்பட்டவர்கள் 2,88,000 படைவீரர்கள், இவர்கள், ஒவ்வொன்றும் 24,000 படைவீரர்களைக்கொண்ட 12 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு தொகுதியும் ஆண்டில் ஒரு மாதம் சேவை செய்தது. கூடுதலாக 12 கோத்திரப் பிரபுக்களின் சேவையில் 12,000 பேர்கள் இருந்தனர், ஆக மொத்தம் 3,00,000 ஆகியது. ஏற்கெனவே படையில் சேர்க்கப்பட்டிருந்த இந்த 3,00,000 1 நாளாகமம் 21:5-ன் 11,00,000-ல் உள்ளடங்கியிருப்பதாகவும், ஆனால் 2 சாமுவேல் 24:9-ல் இது சேர்த்தில்லை எனவும் தெரிகிறது. (எண்ணாகமம் 1:16; உபாகமம் 1:15; 1 நாளாகமம் 27:1-22) யூதாவைக் குறித்ததில், 2 சாமுவேல் 24:9, பெலிஸ்தர் எல்லைப்புறங்களில் கவனிப்புக்காக நிறுத்திவைக்கப்பட்ட படையிலிருந்த 30,000 ஆட்களை உட்சேர்த்திருப்பதாகவும் ஆனால் 1 நாளாகமம் 21:5-லுள்ள எண்ணில் அவர்கள் சேர்க்கப்படவில்லையெனவும் தெரிகிறது. (2 சாமுவேல் 6:1) 2 சாமுவேலும் 1 நாளாகமமும் வெவ்வேறுபட்ட கருத்துக்களையும் நோக்கங்களையுங்கொண்ட இரண்டு ஆட்களால் எழுதப்பட்டனவென்பதை நினைவுபடுத்திக்கொண்டால், நாம் எளிதில் இந்த எண்களை ஒத்திசைய செய்யக்கூடும்.
◼ சலாத்தியேலின் தகப்பன் யார்?
சலாத்தியேலின் மாம்சப்பிரகாரமான தகப்பன் எகொனியா (யோயாக்கீம் ராஜா) என சில வசனங்கள் குறிப்பிடுகிறது. (1 நாளாகமம் 3:16-18; மத்தேயு 1:12) ஆனால் சுவிசேஷ எழுத்தாளனாகிய லூக்கா சலாத்தியேலை “நேரியின் குமாரன்” என அழைக்கிறான். நேரி தன் குமாரத்தியை சலாத்தியேலுக்கு மனைவியாகக் கொடுத்தான் என்பது தெளிவாக இருக்கிறது. முக்கியமாக வம்சாவழி வரிசையில் எபிரெயர்கள் பொதுவாக மருமகளை மகனாக குறிப்பிடுவதால் ஒருவேளை லூக்கா சலாத்தியேலை நேரியின் குமாரன் என அழைத்திருக்கலாம். அதேவிதமாகவே யோசேப்பு ஏலியின் குமாரனாக குறிப்பிடப்படுகிறான்; உண்மையில் அவன் யோசேப்பின் மனைவியாகிய மரியாளின் தகப்பன்.—லூக்கா 3:23.
இயேசு சம்பந்தப்பட்ட வசனங்களை ஒத்திசைத்தல்
◼ பெரும் பன்றிக்கூட்டத்தைப் பீடித்துக்கொண்ட பேய்களை இயேசு கிறிஸ்து எத்தனை ஆட்களிலிருந்து துரத்தினார்?
சுவிசேஷ எழுத்தாளனாகிய மத்தேயு இரண்டு ஆட்களைக் குறிப்பிடுகிறார், ஆனால் மாற்கும் லூக்காவும் ஒருவனை மட்டுமே குறிப்பிடுகின்றனர். (மத்தேயு 8:28; மாற்கு 5:2; லூக்கா 8:27) மாற்கும் லூக்காவும் பேய்ப்பிடித்திருந்த ஒரே ஒரு மனிதனுக்கே கவனத்தை இழுத்ததற்குக் காரணம் இயேசு அவனிடம் பேசினதாலும் அவனுடைய காரியம் அதிக முனைப்பாக இருந்ததனாலுமே எனத் தோன்றுகிறது. ஒருவேளை, அந்த மனிதன் மீறிய முறையில் கட்டுக்கடங்காத மூர்க்கனாயிருந்திருக்கலாம் அல்லது அதிக நீடித்தக் காலம் பேய்ப்பீடிப்பில் அவதியுற்றிருக்கலாம். பின்னால், ஒருவேனை அந்த ஒரு மனிதன் மாத்திரமே இயேசுவோடுகூட செல்ல விரும்பியிருந்திருக்கலாம். (மாற்கு 5:18-20) இதற்கு ஒருவாறு இணையான ஒரு சந்தர்ப்பத்தில், இயேசு சுகப்படுத்தின இரண்டு குருடரைப் பற்றி மத்தேயு பேசினார், மாற்கும் லூக்காவுமோவெனில் ஒரே ஒருவனைக் குறிப்பிட்டனர். (மத்தேயு 20:29-34; மாற்கு 10:46; லூக்கா 18:35) இது முரண்பாடல்ல, ஏனெனில் அத்தகைய மனிதன் ஒருவனாவது இருந்தான்.
◼ இயேசு தம்முடைய மரண நாளில் அணிந்திருந்த அங்கியின் நிறம் என்ன?
மாற்கும் (15:17, NW) யோவானும் (19:2, NW) சொல்லுகிறபடி, போர்ச்சேவகர்கள் இயேசுவுக்கு ஒரு கருநீல (purple) அங்கியை உடுத்தினர். ஆனால் மத்தேயு (27:28) அதை “சிவப்பான மேலங்கி” (scarlet) என அதன் செந்நிறத்தில் அழுத்தம் வைக்கிறார். ஆங்கிலத்தில் கருநீலம் என்பது சிவப்பையும் நீலத்தையும் உள்ளடங்கிய நிறங்களாகக் கொண்டிருக்கும் எந்த நிறமுமாதலால், மாற்கும் யோவானும் அந்த அங்கி சிவப்பு தோற்றத்தைக் கொண்டிருந்ததாக ஒப்புக்கொள்கின்றனர். ஒளி பிரதிபலிப்பும் பின்புற அமைப்பும் அந்த அங்கிக்கு வெவ்வேறு நிறச் சாயல்களைக் கொடுத்திருக்கலாம். சுவிசேஷ எழுத்தாளர்கள் தங்களுக்கு அல்லது தாங்கள் எவரிடமிருந்து தகவல் பெற்றார்களோ அவர்களுக்கு முனைப்பாய்த் தோன்றிய நிறத்தைக் குறிப்பிட்டனர். இந்தச் சிறு வேறுபாடு எழுத்தாளர்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது, மேலும் முரண்பாடு இருக்கவில்லையென நிரூபிக்கிறது.
◼ இயேசுவின் வாதனைக்குரிய கழுமரத்தை யார் சுமந்துசென்றது?
“அவர் [இயேசு] சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு வெளியே கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப்போனார். அதை எபிரெயு பாஷையில் கொல்கொதா என்று சொல்வார்கள்,” என்று யோவான் (19:17, NW) கூறினான். ஆனால் மத்தேயுவும் (27:32), மாற்கும் (15:21), லூக்காவும் (23:26) ‘போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள்,’ என்று கூறுகின்றனர். யோவான் சொன்னபடி இயேசு தம்முடைய வாதனைக்குரிய கழுமரத்தைச் சுமந்தார். எனினும், கழுமரத்தைச் சுமக்கும் சேவையைச் செய்யும்படி சீமோன் பின்னால் வற்புறுத்தப்பட்ட இந்தக் குறிப்பை யோவான் தன் சுருக்கப்பட்ட விவரத்தில் சேர்க்கவில்லை. ஆகையால், சுவிசேஷ விவரங்கள் இந்தக் காரியத்தில் ஒத்திசைந்துள்ளன.
◼ யூதாஸ்காரியோத்து எவ்வாறு செத்தான்?
யூதாஸ் தன்னைத்தானே தூக்குப்போட்டுக்கொண்டான் என மத்தேயு 27:5 (NW) கூறுகிறது, ஆனால் அப்போஸ்தலர் 1:18-ல் “தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று,” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தற்கொலைசெய்துகொள்ள முயற்சி செய்ததன் முறையை மத்தேயு குறிப்பிடுவதாகத் தோன்றுகையில், அப்போஸ்தலர் புத்தகம் அதன் விளைவுகளை விவரிக்கிறது. யூதாஸ் ஒரு கயிற்றை ஒரு மரத்தின் கிளையில் கட்டி, அந்தச் சுருக்கு முனையைத் தன் கழுத்தைச் சுற்றி மாட்டிக்கொண்டு, மலைசெங்குத்து முனையிலிருந்து குதித்து தன்னைத் தொங்கவிட முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அந்தக் கயிறு அறுந்ததால் அல்லது அந்த மரத்தின் கிளை முறிந்ததால் அவன் கீழே ஆழத்தில் இருந்த கற்பாறைகள்மீது தடாலென்று விழுந்து உடல் வெடித்துச் சிதறியிருப்பானெனத் தோன்றுகிறது. எருசலேமைச் சுற்றியிருக்கும் இடவியல்பு இத்தகைய முடிவு நியாயமானதென தோன்றச்செய்கிறது.
நீங்கள் காரியங்களை எவ்வாறு நோக்குவீர்கள்?
பைபிளில் முரண்பாடுகளாகத் தோன்றுபவற்றை நீங்கள் எதிர்ப்படுகையில், ஆட்கள் முரண்பாடாகத் தோன்றும், ஆனால் எளிதில் விளக்கிக்கூற அல்லது விளங்கிக்கொள்ளக்கூடிய காரியங்களையே பெரும்பாலும் சொல்வரென்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. உதாரணமாக, ஓர் அலுவலதிகாரி ஒருவருக்கு ஒரு கடிதத்தை எழுதுமாறு தன் செயலாளருக்குச் செய்தியைக் கூறி ஆணையிடுவதன்மூலம் அந்த ஆளுடன் கடிதப்போக்குவரவு கொள்ளலாம். அவரைக் கேட்டால், தான் அந்தக் கடிதத்தை அனுப்பினதாகக் கூறுவார். ஆனால் அவருடைய செயலாளர் அந்தக் கடிதத்தை அச்சடித்து அஞ்சல்மூலம் அனுப்பினதால், அவளும் தான் அதை அனுப்பினதாகக் கூறலாம். இவ்வாறே ஒரு நூற்றுக்கு அதிபதி இயேசுவினிடம் ஒரு தயவு கேட்க வந்தான் என மத்தேயு (8:5) சொன்னது, அந்த மனிதன் பிரதிநிதிகளை அனுப்பினான் என லூக்கா (7:2, 3) சொன்னதற்கு முரணாயில்லை.
பைபிள் சிக்கல்கள் தீர்க்கக்கூடியவையென முன்கூறப்பட்ட உதாரணங்கள் காட்டுகின்றன. ஆகவே, வேத எழுத்துக்களின்பேரில் நல்நம்பிக்கையான மனப்பான்மையைக் கொண்டிருப்பதற்கு நல்ல காரணம் உண்டு. இத்தகைய மனப்பான்மை, 1876-ம் ஆண்டில் பிரசுரிக்கப்பட்ட ஒரு குடும்ப பைபிளில் தோன்றும் பின்வரும் இவ்வார்த்தைகளில் சிபாரிசு செய்யப்பட்டது:
“அந்தச் சிக்கல்களைக் கையாளுவதற்குரிய சரியான மனப்பான்மையானது, ஒவ்வொரு மேகத்தையும் அதிலிருந்து விலக்கித் தெளிவாக்க முடியாதிருக்கையிலும், கூடியவரையில் அவற்றை நீக்கிவிட்டு, சத்தியத்தை விடாது பற்றிக்கொண்டு அதற்குக் கீழ்ப்படிவதே செய்யத்தக்க காரியம். நாம் அப்போஸ்தலரின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும், அவர்கள், அவருடைய சீஷர்களில் சிலர், ‘கடினமான உபதேசம்’ என்று தாங்கள் அழைத்ததால் இடறலடைந்து, கிறிஸ்துவைவிட்டுச் சென்றபோது, ‘ஆண்டவரே, யாரிடத்தல் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே, நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்,’ என்றதால் எல்லா எதிர்ப்பையும் அமரச் செய்தனர். . . . ஒரு சத்தியம் மற்றொரு சத்தியத்தோடு முரண்படுவதுபோல் தோன்றுகையில், அவற்றை ஒத்திசைவிக்க நாம் முயற்சி செய்து, எல்லாவற்றிலும் அவ்வாறு ஒத்திசைவு இருப்பதை அவர்களுக்குக் காட்டுவோமாக.”—யோவான் 6:60-69.
இத்தகைய மனநிலையை நீங்கள் ஏற்பீர்களா? வேத எழுத்துக்களின் ஒத்திசைவை மெய்ப்பித்துக் காட்டும் சில உதாரணங்களை மட்டுமே ஆராய்ந்து பார்த்தப்பின், கடவுளிடம் பின்வருமாறு சொன்ன சங்கீதக்காரனோடு நீங்கள் ஒருமனப்படுவீர்களென நம்புகிறோம்: “உமது வார்த்தையின் சாராம்சம் சத்தியம்.” (சங்கீதம் 119:160, தி.மொ.) யெகோவாவின் சாட்சிகள் பைபிள் முழுவதையும் குறித்து இந்த நோக்குநிலையையே ஏற்கின்றனர், மேலும் அதில் தங்களுக்குள்ள விசுவாசத்துக்குக் காரணங்களையும் மகிழ்ச்சியுடன் கொடுப்பார்கள். இந்த இணையற்ற புத்தகத்தை நீங்கள் அவர்களோடு கலந்தாலோசித்துப் பாருங்களேன்? அதன் ஊக்கமூட்டும் செய்தி உங்களை உண்மையான நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாய் நிரப்பலாம்.
[பக்கம் 7-ன் படம்]
பைபிளில் தங்களுக்கு விசுவாசம் இருப்பதேன் என நீங்கள் யெகோவாவின் சாட்சிகளைக் கேட்டிருக்கிறீர்களா?