இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
இயேசு மனத்தாழ்மைக்கு ஒரு பாடத்தைக் கொடுக்கிறார்
செசரியா பிலிப்பு என்ற இடத்துக்கு அருகே பிசாசு பிடித்திருந்த பையனை குணமாக்கிய பின்பு, கப்பர்நகூமுக்கு வீடு திரும்ப இயேசு விரும்புகிறார். என்றபோதிலும், தம்முடைய மரணத்துக்கும் அதற்கு பின்பு அவர்களுடைய உத்தரவாதங்களுக்காகவும் மேலுமதிகமாக தம் சீஷர்களைத் தயாரிக்க அந்தப் பயணத்தில் அவர்களோடு தனித்து இருக்க விரும்புகிறார். “மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார்” என்று அவர்களிடம் அவர் விளக்குகிறார்.
இதைக் குறித்து இயேசு முன்பே பேசியிருந்த போதிலும், அவருடைய “புறப்படுதல்” கலந்தாலோசிக்கப்பட்ட போது மூன்று அப்போஸ்தலர்கள் மறுரூபமாகுதலை உண்மையிலேயே பார்த்த போதும், அவரைப் பின்பற்றுபவர்கள் இந்த விஷயத்தைக் குறித்து இன்னும் புரிந்துகொள்ளாமலேயே இருக்கின்றனர். பேதுரு முன்பு செய்தது போல, அவர் கொல்லப்படுவார் என்பதை அவர்கள் ஒருவரும் நிராகரிக்க முயற்சி செய்யவில்லையென்றாலும், அதைக் குறித்து அவரிடம் இன்னுமதிகமாக கேள்வி கேட்க பயப்படுகின்றனர்.
இறுதியில் அவர்கள் இயேசுவின் ஊழியத்தின் போது தங்குவதற்கு மைய இடத்தைப் போல் இருந்த கப்பர்நகூமுக்குள் வருகின்றனர். இது பேதுரு மற்றும் அநேக மற்ற அப்போஸ்தலர்களின் சொந்த ஊராகவும் இருக்கிறது. அங்கு, ஆலய வரியை வசூலிக்கும் ஆட்கள் பேதுருவை அணுகுகின்றனர். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கத்துக்கு எதிராக நடந்த ஏதோவொன்றுக்காக இயேசுவைக் குற்றப்படுத்த முயற்சி செய்யும் வகையில் அவர்கள் கேட்கின்றனர்: “உங்கள் போதகர் [ஆலய] வரிப்பணம் செலுத்துகிறதில்லையா?”
“செலுத்துகிறார்” என்று பேதுரு பிரதிபலிக்கிறான்.
ஒருவேளை சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்கு வந்து சேர்ந்த இயேசு, என்ன நடந்தது என்பதை அறிந்திருக்கிறார். ஆகையால் பேதுரு அந்த விஷயத்தைப் பற்றி ஆரம்பிப்பதற்கு முன்பே, இயேசு கேட்கிறார்: “சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள்?”
“அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள்” என்று பேதுரு பதிலளிக்கிறான்.
“அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்த வேண்டுவதில்லையே” என்று இயேசு குறிப்பிடுகிறார். இயேசுவின் தகப்பன் ஆலயத்தில் வணங்கப்படுபவராக இப்பிரபஞ்சத்துக்கு ராஜாவாக இருப்பதனால், கடவுளுடைய குமாரன் ஆலய வரியைச் செலுத்துவது உண்மையில் ஒரு சட்டப்படியான தேவையாயில்லை. “ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்து பார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; [நான்கு டிராக்மாக்கள்] அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.”
கப்பர்நகூமுக்குத் திரும்பிய போது பேதுருவின் வீட்டில் சீஷர்கள் ஒன்றாக கூடுகிறார்கள். அப்போது அவர்கள் கேட்கிறார்கள்: “பரலோக ராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்?” எது அவர்களை இந்தக் கேள்வியை கேட்கத் தூண்டியது என்பதை இயேசு அறிந்திருக்கிறார். செசரியா பிலிப்பியிலிருந்து அவர்கள் திரும்பிய போது, அவருக்குப் பின்னே மெள்ள நடந்து வருகையில் அவர்களுக்குள்ளே என்ன நடந்தது என்பதை அறிந்தவராய், அவர் கேட்கிறார்: “நீங்கள் வழியிலே எதைக் குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம் பண்ணினீர்கள்?” தடுமாற்றம் அடைந்தவர்களாய், சீஷர்கள் பேசாமல் இருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணினார்கள்.
இயேசுவின் ஏறக்குறைய மூன்று வருட போதனைக்குப் பின், சீஷர்கள் இப்பேர்ப்பட்ட தர்க்கத்தைக் கொண்டிருப்பார்கள் என்பது நம்பமுடியாததாய் தோன்றுகிறதா? அது மானிட அபூரணத்தின் பலமான செல்வாக்கையும் அதோடு மத பின்னணியின் செல்வாக்கையும் வெளிக்காட்டுகிறது. சீஷர்கள் வளர்ந்து வந்த யூத மதம் பதவி அல்லது ஸ்தானத்தை எல்லா தொடர்புகளிலும் வலியுறுத்திக் காட்டியது. மேலும் பேதுரு ராஜ்யத்தின் சில “திறவுகோல்களை” பெற்றுக்கொள்ள இயேசு வாக்களித்ததினால் உயர்ந்தவனாக ஒருவேளை உணர்ந்திருக்கலாம். இயேசுவின் மறுரூபமாகுதலை நேரில் காணும் தயவை பெற்றதனால் யாக்கோபும் யோவானும் அதே போன்ற எண்ணங்களை கொண்டிருந்திருக்கலாம்.
விஷயம் என்னவாக இருந்தாலும், இயேசு அவர்களுடைய மனநிலைகளை திருத்தும் ஒரு முயற்சியில் ஓர் உணர்ச்சியூட்டும் செயலை செய்து காட்டுகிறார். அவர் ஒரு பிள்ளையை அழைத்து, அவர்களுக்கு நடுவே நிற்கச் செய்து, தன் கைகளை அதைச் சுற்றிப் போட்டு, சொல்கிறார்: “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் இந்தப் பிள்ளையைப் போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோக ராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.”
தம்முடைய சீஷர்களை திருத்துவதற்கு என்னே ஓர் அற்புதமான முறை! இயேசு அவர்களோடு கோபப்பட்டு, அவர்களை இறுமாப்புள்ளவர்கள், பேராசை உள்ளவர்கள் என்று அழைக்கவில்லை. இல்லை, ஆனால் அவர் பொதுவாக தங்களுக்குள் பதவி என்ற எண்ணம் இல்லாத, குறிப்பிடத்தக்க வகையில் தாழ்மையாக, பேராசையற்றவர்களாக இருக்கும் இளம் பிள்ளைகளின் மாதிரியை உதாரணமாக உபயோகித்து தன் சீர்திருத்தும் போதனையை செய்கிறார். தாழ்மையான பிள்ளைகளை அடையாளங் காட்டும் இப்பேர்ப்பட்ட குணாதிசயங்களை தம் சீஷர்கள் வளர்க்க வேண்டும் என்று இயேசு காண்பிக்கிறார். “உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியனாயிருப்பான்” என்பதாக இயேசு முடிக்கிறார். மத்தேயு 17:22–27; 18:1–5; மாற்கு 9:30–37; லூக்கா 9:43–48.
◆ கப்பர்நகூமுக்குத் திரும்பிய போது, என்ன போதனையை இயேசு மறுபடியும் சொல்கிறார், அது எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படுகிறது?
◆ இயேசு ஆலய வரியை செலுத்துவதற்கு ஏன் கடமைப்பட்டவராயில்லை, ஆனால் ஏன் அவர் அதை செலுத்துகிறார்?
◆ எது ஒருவேளை சீஷர்களின் தர்க்கத்துக்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும், அவர்களை இயேசு எவ்வாறு திருத்துகிறார்? (w88 2/1)