பைபிளின் கருத்து
நரகம் வெப்பமுள்ளதா?
“மனிதன் எரிந்து கொண்டிருப்பான், எரிந்து கொண்டிருப்பான், எரிந்து கொண்டிருப்பான்!” இருண்ட ஒரு அறையில், அவருடைய சட்டை எரிந்து கொண்டிருக்க பேச்சாளர், தன் கைகளை நீட்டிக் கொண்டு, திகைப்போடு உற்று கேட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி ஒருசில படிகள் எடுத்து வைக்கிறார். நல்ல காலமாக இந்தக் காட்சி ஒருசில நொடிகளே நீடிக்கிறது. ஆனால் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய ஒரு பொடியின் மூலமாக, பிரசங்கியார், நரக அக்கினியை நம்பத்தக்க வகையில் வரவழைப்பதன் மூலம், பார்வையாளர்கள் மீது எப்படியோ ஒரு பெரிய அபிப்பிராயத்தை உண்டு பண்ணிவிட்டார்.
அவரைப் போலவே, அநேக மற்ற மத போதகர்கள், விசேஷமாக கிறிஸ்தவ மண்டலத்தில், கடவுள் பொல்லாதவர்களுக்காக, நித்தியமாக விலக்க முடியாத இந்த முடிவை வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் பைபிள் சொல்வது உண்மையில் அதுதானா?
நல்லவர்களும் பொல்லாதவர்களும் ஒரே இடத்தில்
“துன்மார்க்கரும் தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள்.” (சங்கீதம் 9:17, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு) இங்கே நரகம் என்ற வார்த்தைக்குப் பதிலாக, லாம்ஸா மற்றும் தி எருசலேம் பைபிள் போன்ற அதிக நவீன மொழிபெயர்ப்புகள் எபிரேய மொழி வேதாகமத்தில் காணப்படும் வார்த்தையாகிய “ஷீயோலை” தொடர்ந்து பயன்படுத்துவதைத் தெரிந்துகொண்டிருக்கின்றன. ஆனால் “நரகம்” அல்லது “ஷீயோல்” எதைச் சரியாக அர்த்தப்படுத்துகின்றன?
ஷீயோலைப்பற்றி பைபிள் புத்தகமாகிய பிரசங்கி கூடுதலான தகவலைத் தருகிறது. அது சொல்கிறது: “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற ஷீயோலிலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:10) நரகம் அல்லது ஷீயோலிலிருப்பவர்களுக்குச் சிந்திக்கவோ அல்லது அறிந்துகொள்ளவோ அல்லது செயல்படவோ முடியாதென்றால் நிச்சயமாகவே அவர்கள் துன்பமனுபவித்துக் கொண்டிருக்க முடியாது.
அப்படியென்றால், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்களுங்கூட ஷீயோலுக்குப் போனார்கள் என்பது ஆச்சரியம் தருவதாக இல்லை. யாக்கோபு தான் மரிக்கையில் அங்கு போவான் என்று நம்பினான். யோபு, கடவுள் தன்னை அங்கே மறைத்து வைத்து தன்னுடைய துன்பங்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினான். (ஆதியாகமம் 42:38; யோபு 14:13) இந்த உண்மையுள்ள ஊழியர்கள் இருவரும் பொல்லாதவர்களோடுகூட எரிகிற நரக அக்கினியினுள் போக விரும்பி அல்லது அதைக் கேட்கவுங்கூட செய்திருப்பார்களா?
“அக்கினி” என்பது என்ன?
ஆனால் தேவனுடைய சித்தத்தைச் செய்யாதவர்கள், “அவியாத அக்கினிக்குள்” போவார்கள் அல்லது “அழுகையும் பற்கடிப்புமுள்ள அக்கினிச் சூளையிலே” போடப்படுவார்கள் என்ற இயேசுவின் வார்த்தைகளை நாம் புரிந்துகொள்வது எப்படி?—மாற்கு 9:43-48; மத்தேயு 13:42.
இந்த இடத்தைப் பற்றிப் பேசுகையில், இயேசு ஷீயோல் என்ற எபிரேய பதத்திற்குச் சமமான கிரேக்க வார்த்தையாகிய “ஹேடீஸை” பயன்படுத்தவில்லை.a மாறாக அவர் “கெஹன்னா” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இந்த வார்த்தை இன்னோம் பள்ளத்தாக்கு என்றழைக்கப்பட்ட எருசலேமுக்கு அருகாமையிலிருந்த குப்பைத் தொட்டியை அர்த்தப்படுத்தியது. இங்கே குப்பைக் கூளங்களை அழிப்பதற்காக நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இயேசு பேசுவதை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், நித்திய வாதனையை அல்ல, ஆனால் அக்கினியால் முழுமையாக அழிக்கப்படுவதைப் பற்றியே சிந்திக்கும்படியாகச் செய்ய அது பொருத்தமான பதமாக இருந்தது.
அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கொடுக்கப்பட்ட வெளிப்படுத்தின விசேஷம், கெட்டக் காரியங்களைச் செய்பவர்கள், “அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே” எறியப்படுவார்கள் என்று சொல்கிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 21:8) நரகம் ஒன்றிருக்குமானால், இதுவே அதுவாக இருக்க வேண்டும். ஏனென்றால் பொல்லாதவர்கள் அங்கே போகிறார்கள். ஆனால் இதே பைபிள் புத்தகம், ஆதாமிலிருந்து சுதந்தரித்துக்கொள்ளப்பட்ட மரணமும் ஹேடீஸும் இதே அக்கினிக் கடலுக்குள் தள்ளப்படும் என்பதாக நமக்குச் சொல்கிறது. பண்பியலான இந்த இரண்டு காரியங்களும் வாதிக்கப்பட முடியுமா? இல்லை. ஆனால் அக்கினி இங்கே, அவை இல்லாமல் மறைந்து போவதைப் பிரதிநிதித்துவம் செய்யமுடியும். அவ்விதமாகவே செய்கிறது. தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தப் பின்பு அதாவது மரித்தோரின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இது நடந்தேறும்.—வெளிப்படுத்தின விசேஷம் 20:13, 14.
அக்கினி என்பது நிர்மூலமாக்கப்படுவதற்கு அல்லது நித்திய அழிவுக்குத் தானே அடையாளமாக இருக்கிறது என்பதை இந்தக் கடைசி உதாரணங்கள் காண்பிக்கின்றன. கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களும் பொல்லாதவர்களும் போகும் ஹேடீஸ் (அல்லது ஷீயோலில்) எந்த வேதனையும் இல்லாதிருப்பது போலவே அக்கினிக்கடலிலும் வேதனை இல்லை. ஆனால் இந்த விஷயத்தைச் சற்று ஆழமாக ஆராய்வோமானால் பைபிளையும் அதே சமயத்தில் நரக அக்கினி இருப்பதையும் ஆகிய இரண்டையுமே நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதை நல்ல விதத்தில் நாம் புரிந்துகொள்ள முடியும்.
கடவுளுடைய குணாதிசயத்துக்கு முரண்பாடாக இருக்கிறது
தங்களுடைய பிள்ளைகளை ஒவ்வொரு நாளும் சிறையில் அடைத்து வைத்து அல்லது அவர்களைச் சித்திரவதையுங்கூடச் செய்யும் பெற்றோர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இப்படிப்பட்ட செயல்கள் உங்களுக்கு வெறுப்பூட்டுவதாக இருக்குமானால், நெருப்பில் போட்டு என்றென்றுமாக தம்முடைய பிள்ளைகளை வாதிக்கும் கடவுளுங்கூட உங்களுக்கு வெறுப்பாக இருப்பாரல்லவா?
மெய்க் கடவுள் அப்படிப்பட்டவர் இல்லை என்ற உண்மை, இஸ்ரவேலர் ‘தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனித்ததற்காக’ அவர்களைக் கடிந்து கொண்டதிலிருந்து தெரிகிறது. இந்தக் காரியத்தை ‘தாம் கட்டளையிடவுமில்லை, அது தம் மனதில் தோன்றவுமில்லை’ என்பதாக யெகோவா அழுத்தமாகக் கூறினார். (எரேமியா 7:31) கடவுள் இப்படிப்பட்ட காரியங்களை ஒருபோதும் நினைத்திராததன் காரணமாக, தம்முடைய சிருஷ்டிகளுக்கு அவர் ஒரு நரக அக்கினியை உண்டுபண்ணுவார் என்பதாக நாம் எவ்விதமாகக் கற்பனை செய்துகொள்ள முடியும்?b ஆம், கொடுமைப்படுத்துவதும் வாதிப்பதும் நமக்கு அருவருப்பானதாக இருக்குமானால், அன்பாகவே இருக்கும் கடவுளுக்கு அவை எத்தனை அருவருப்பானதாக இருக்கும்?—1 யோவான் 4:8.
எரிநரக கோட்பாடு நீதிக்கு எதிர்மாறாகவுங்கூட இருக்கிறது. ரோமர்களுக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இதை விளக்குகிறான்: “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) மேலுமாக அது நமக்குச் சொல்கிறது: “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.” மரணமானது ஒரு நபரின் கடன்களையெல்லாம் முற்றிலுமாக நீக்கிவிடுமேயானால், வேறு ஒரு வாழ்நாட்கால பாவத்துக்காக அவன் ஏன் நித்தியமாக வாதிக்கப்பட வேண்டும்?—ரோமர் 6:7.
ஆகவே பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறபடி எரிநரகம் ஒன்றில்லை என்பதைப் பைபிள் காண்பிக்கிறது. இதை அறிந்துகொள்வதானது பயத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் அன்பின் அடிப்படையில் கடவுளோடு ஒரு உறவை வளர்த்துக்கொள்வதை அனுமதிக்கிறது. ஹேடீஸ் அல்லது ஷீயோலாகிய மனிதவர்க்கத்தின் பொது பிரேதக் குழி என்றுமாக மறைந்துவிடப் போகிற அந்த மகத்தான நாளை காணப்போகிறவர்களில் ஒருவராக இருக்கும் பொருட்டு பைபிளை நீங்கள் தொடர்ந்து ஆராய்ந்து அவரை எவ்விதமாக சரியான விதத்தில் பிரியப்படுத்தலாம் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் யோசனை கூறுகிறோம்.—1 யோவான் 4:16-18. (g86 8/8)
[அடிக்குறிப்புகள்]
a அப்போஸ்தலர் 2:31-ல், சங்கீதம் 16:10-ஐ மேற்கோள் காண்பிக்கையில், எபிரய வார்த்தையாகிய “ஷீயோலை” மொழிபெயர்க்க கிரேக்க வார்த்தையாகிய ஹேடீஸ் பயன்படுத்தப்படுகிறது.
b எரிநரகத்துக்கு அத்தாட்சியாக லூக்கா 16:19-31-ல் ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றி இயேசு சொன்ன காரியத்தைச் சிலர் சுட்டிக்காண்பிக்கலாம். ஆனால் இயேசுவின் இந்த வார்த்தைகள் உவமையாக இருப்பதால் இவை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. கூடுதலான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டுள்ள இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைத்தானா? என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
தங்களுடைய பிள்ளைகளைச் சித்திரவதைச் செய்யும் பெற்றோர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
[பக்கம் 11-ன் படம்]
இதுவே பைபிளின் நரகமா?