பைபிளின் கருத்து
ஞானஸ்நானம்—அது குழந்தைகளுக்குரியதா?
“எனக்குக் குழந்தைகள் பிறந்தபோது, அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க நான் அவசரப்பட்டேன் . . . நான் சரியான காரியத்தை தான் செய்தேனா என்று சில சமயங்களில் நான் யோசிப்பதுண்டு” என்று ஒரு பெற்றோர் குறிப்பிட்டார். ஏன்? மூன்று பிள்ளைகளில் இரண்டு பேர், அவளுடைய மதத்தில் நிலைத்திராமல் அதை நிராகரித்து விட்டார்கள்.
ஒருவேளை பெற்றோராக, ஒரு குழந்தையை சடங்குகள் மூலம் உங்களுடைய மதத்துக்குள் சேர்த்து வைப்பதைக் குறித்து இதேவிதமாக சந்தேகங்கள் உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். அப்படியானால் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டாண்டு ஆகிய மத சர்ச் தலைவர்கள் இருவருமே உங்களுடைய மனதில் எழும் சந்தேகத்தை நிவிர்த்தி செய்ய எதுவும் செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். குழந்தை ஞானஸ்நானம் குறித்து தர்க்கம் செய்து கொண்டிருப்பதன் மூலம் அவர்கள் சந்தேகத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். சீர்திருத்தவாதிகள் இதை வரலாற்றின் இடைநிலைக்காலத்திய மூட நம்பிக்கையின் தடம் என்று அழைக்கிறார்கள். என்றபோதிலும் சம்பிரதாயங்களில் பற்றுள்ளவர்கள், ஞானஸ்நானத்தை மறுதலிப்பது, கிறிஸ்தவ உணர்ச்சிகளுக்கு நேர் எதிரானது” என்று சொல்லுகிறார்கள்.
இந்த விதமாக வாதாடுவதன் மூலம் சர்ச் தலைவர்கள் “அர்த்தமுள்ள, ஆதாரமுள்ள விளக்கத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக, வெறுமென உணர்ச்சிகள் கொந்தளிக்கப் பேசுகிறார்கள்.” (குழந்தை ஞானஸ்நானமும் கிருபையின் உடன்படிக்கையும், பால். k. ஜீவட் எழுதியது) அப்படியென்றால் குழந்தை ஞானஸ்நானத்தைப் பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கு, தகுதியான பதில்களை நீங்கள் எங்கே பார்க்க முடியும்? இதற்குரிய பதில்களைக் கடவுளுடைய வார்த்தையில் பார்க்க வேண்டும்.
நரகத்துக்கு ஒப்படைக்கப்படுகிறார்களா?
குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பவர்கள், பெரும்பாலும் யோவான் 3:5-திலுள்ள இயேசுவின் வார்த்தைகளின் அடிப்படையில் செய்வதாகச் சொல்கிறார்கள்: “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால், தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்.” பரலோகத்துக்குள் பிரவேசிக்க ஜலத்தினால் ஞானஸ்நானம் பெறுதல் அவசியமாக இருப்பதன் காரணமாக நரக அக்கினியில் வாதிக்கப்படுவதை—அல்லது நரக சுற்றுப் பகுதியில் அரை உயிராய் காலங்கழிப்பதை தவிர்ப்பதற்கு குழந்தைகளுக்கு ஞானஸ்நானங் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.a
என்றபோதிலும், “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்பதாக பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5; சங்கீதம் 146:4 ஒப்பிடவும்.) மரித்தோர் உணர்வற்றவர்களாக இருப்பதன் காரணமாக, அவர்கள் எந்த வேதனையையும் அனுபவிக்கக் கூடாதவர்களாக இருக்கிறார்கள். ஆகவே தங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானங் கொடுக்கவில்லையென்றால், கொடிய விளைவுகள் இதனால் ஏற்படுமோ என்று பெற்றோர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
ஞானஸ்நானம் பெறாதவர்கள் பரலோகத்துக்குள் பிரவேசிக்க முடியாது என்ற கவலை இன்னும் இருக்கக்கூடும். என்றபோதிலும் அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. இயேசு சொன்னார்: “இந்தத் [பரலோக] தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு.” (யோவான் 10:16) இங்கேயும் மத்தேயு 25:31-46-ல் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு உவமானத்திலும் பரலோகத்துக்குச் செல்லாத, இரட்சிக்கப்படும் ஆட்கள் இருப்பார்கள் என்பதை இயேசு காண்பித்தார். அவர்கள் எங்கே போவார்கள்? தமக்கருகே கழுமரத்தில் அறையப்பட்ட குற்றவாளியிடம் இயேசு சொன்னார்: “நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்.” —லூக்கா 23:43.
அந்தக் குற்றவாளி ஞானஸ்நானத்தின் மூலம் எப்போதாவது “ஜலத்தினால் பிறந்திருந்தானா?” இல்லை என்பது தெளிவாக இருக்கிறது. ஆகவே பரலோகம் அவனுக்கு அடைக்கப்பட்டிருந்தது. அப்படியென்றால் பரதீஸ் எங்கே இருக்கும்? என்றென்றுமாக வாழும் எதிர்பார்ப்போடு கடவுள் முதல் மானிட ஜோடியை ஒரு பூமிக்குரிய பரதீஸில் வைத்தார் என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள். (ஆதியாகமம் 1:28; 2:8) ஆனால் ஆதாமும் ஏவாளுமோ கலகம் செய்வதைத் தெரிந்து கொண்டபடியால், அவர்களுடைய அழகிய தோட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பூமிக்குரிய பரதீஸ் என்றுமாக இழக்கப்பட்டு விட்டதா? இல்லை. ஏனென்றால் கடவுள் பூமியின் மீது முடிவாக பரதீஸை மீண்டும் கொண்டுவருவார் என்பதை வேதவசனங்கள் தெளிவாக காண்பிக்கின்றன. (மத்தேயு 5:5; 6:9, 10; எபேசியர் 1:9-11; வெளிப்படுத்தின விசேஷம் 21:1-5) இந்தப் பூமிக்குரிய பரதீஸிற்குள் தான் குழந்தைகள் உட்பட, மரித்துவிட்டிருக்கும் பெரும்பாலானோர் இறுதியில் உயர்த்தெழுப்பப்படுவார்கள்.—யோவான் 5:28, 29.
இந்தப் பூமிக்குரிய உயிர்த்தெழுதலில் பங்கு கொள்வதற்கு ஒரு நபர் ஞானஸ்நானம் பெற்றிருக்க வேண்டுமா? கட்டாயமாக அப்படியில்லை. ஆவிக்குரிய அறியாமையில் அநேகர் மரித்து விட்டிருக்கிறார்கள். (யோனா 4:11 ஒப்பிடவும்.) கடவுளைப் பற்றி கற்றறிய அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சந்தர்ப்பம் இல்லாமல் போனதால் அவர்கள் ஒருபோதும் அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நம்பிக்கையே இல்லையா? அப்படியில்லை. ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னான்: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்”திருப்பார்கள். (அப்போஸ்தலர் 24:15) இவ்விதமாக உயிர்தெழுப்பப்படும் திரளான கூட்டத்தில் குழந்தைகளும் அடங்குவர் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே குழந்தைகளின் இரட்சிப்புக்கு ஞானஸ்நானம் தேவை என்று சொல்வது முற்றிலும் ஆதாரமற்றதாகும்.
விருத்தசேதனமும் ஞானஸ்நானமும்
ஆனால் இஸ்ரவேலில் குழந்தைகள் பிறந்தவுடன் விருத்தசேதனம் செய்யப்பட்டதை, ஞானஸ்நானத்தை ஆதரித்துப் பேசுகிறவர்கள் சுட்டிக் காண்பிக்கிறார்கள். (ஆதியாகமம் 17:12) குழந்தைகளை இரட்சிப்பதற்கு ஒரு வழியாக விருத்தசேதனத்தின் இடத்தை ஞானஸ்நானம் எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதாக அவர்கள் வாதாடுகிறார்கள்.
என்றபோதிலும் விருத்தசேதனம் இரட்சிக்கப்படுவதற்கு ஒரு வழியாக இருந்ததா? இல்லை. அது ஆபிரகாமோடு கடவுள் செய்து கொண்ட “உடன்படிக்கைக்கு அடையாளமாக” இருந்தது. (ஆதியாகமம் 17:11) மேலுமாக ஆண்கள் மாத்திரமே விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். ஞானஸ்நானம் விருத்தசேதனத்துக்கு இணையாக இருக்குமானால், பெண் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்காமலிருப்பதே நியாயமாக இருக்குமல்லவா? இந்த இசைவு பொருத்தம் செல்லாததாக இருப்பது தெளிவாக இருக்கிறது. மேலுமாக வேதவசனங்கள், தங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணும்படியாக குறிப்பாக யூத பெற்றோர்களுக்கு மாத்திரமே கட்டளையிட்டது. இரட்சிப்பு இதில் உட்பட்டிருக்குமேயானால், ஞானஸ்நானம் சம்பந்தமாக கிறிஸ்தவ பெற்றோர்களுக்கு ஏன் இதுபோன்ற ஒரு கட்டளை கொடுக்கப்படவில்லை?
சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங் கொடுங்கள், . . . தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” என்று இயேசு சொன்னது உண்மைதான். (மாற்கு 10:14) ஆனால் பரலோகத்தில் பிள்ளைகளே குடியிருப்பார்கள் என்பதாக அவர் ஒருபோதும் சொல்லவில்லை. பரலோக ராஜ்யத்தைக் குறித்து புராட்டஸ்டாண்டு இறைமையியல் வல்லுநர் A. காம்ப்பெல் சொன்னது அக்கறையூட்டுவதாக இருக்கிறது. “அது பிள்ளைகளால் உருவாக்கப்பட்டதாக இல்லை. ஆனால் பணிவிலும், மனத்தாழ்மையிலும், சாந்த குணத்திலும் அவர்களைப் போலிருப்பவர்களால் அது உருவாக்கப்படுகிறது.”
ஒரு விசுவாசியின் பிள்ளைகள் “பரிசுத்தமானவர்கள்”
இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு “போய் . . . சகல ஜாதிகளையும் சீஷராக்கி . . . அவர்களுக்கு [கற்பிக்கப்பட்டவர்களுக்கு] ஞானஸ்நானங் கொடுங்கள்” என்று கட்டளையிட்டார். (மத்தேயு 28:19) ஆகவே சீஷர்களாக அல்லது கற்பிக்கப்பட்டவர்களாக இருப்பதற்கு போதிய வயதுள்ளவர்களாக இருப்பவர்களுக்கு மாத்திரமே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும். இதன் காரணமாகவே இன்று மெய் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பிள்ளைகள் சிறு பிராயம் முதற்கொண்டு ஞானஸ்நானங் கொடுக்க அல்ல—அவர்களைப் பயிற்றுவிக்கவே முயற்சி செய்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:15) பிள்ளைகள் “யெகோவாவின் சிட்டையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” வளர்க்கப்படும் போது அவர்கள் தங்களுடைய சொந்த விசுவாசத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்.—எபேசியர் 6:4.
இதற்கிடையில், பெற்றோர் தங்களுடைய குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்காவிட்டால், அவர்களுடைய நித்திய நலன் ஆபத்திற்குள்ளாக்கப்படுமோ என்று பயப்பட வேண்டிய அவசியமில்லை. 1 கொரிந்தியர் 7:14 ல் கிறிஸ்தவ பெற்றோரின் பிள்ளைகள் “பரிசுத்தமாயிருப்பதாக” அப்போஸ்தலனாகிய பவுல் உறுதியாகச் சொன்னான். இது ஏனென்றால், இவர்கள் ஏதோ சம்பிரதாயமான சடங்குகளுக்கு உட்படுத்தப்படுவதால் அல்ல, ஆனால் இவர்களுடைய பெற்றோர்களில் குறைந்த பட்சம் ஒருவராவது கிறிஸ்தவராக உண்மையுள்ளவராக நிலைத்திருக்கும் வரை, கடவுள் இரக்கமாக இவர்களுக்குச் சுத்தமாக ஒரு நிலைநிற்கையை தருகிறார்.
பெற்றோரின் உண்மையுள்ள முன்மாதிரி, அவர்களுடைய பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் பைபிள் பயிற்றுவிப்போடு சேர்ந்து காலப்போக்கில் தங்களைக் கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கவும் இதை முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்திக் காண்பிக்கவும் பிள்ளைகளைத் தூண்டக்கூடும். போற்றுதலுள்ள அவர்ளுடைய இருதயங்கள் ‘புத்தியுள்ள ஆராதனை’யைச் செய்வதன் மூலம் தொடர்ந்து அதில் நிலைத்திருக்க அவர்களைத் தூண்டும். (ரோமர் 12:1) ஒரு பச்சிளங் குழந்தை செய்ய முடியாத காரியங்களாக இவை இருக்கின்றன. (g86 10/8)
[அடிக்குறிப்புகள்]
a புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா (1967) சொல்வது: உயிருக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில், ஞானஸ்நானங் கொடுக்க உண்மையில் பிறக்கும் வரையாக ஒருவர் காத்திருக்கக் கூடாது. திறமையுள்ள ஒரு நபர் ஒரு ஊசியை உபயோகித்து அல்லது வேறு ஏதாவது ஒரு கருவியின் மூலம் கருப்பையிலேயே ஞானஸ்நானங் கொடுக்க அனுமதிக்கப்படலாம்.