கர்த்தருடைய இராப் போஜனத்தை ஏன் ஆசரிக்க வேண்டும்?
“நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்.”—1 கொரிந்தியர் 11:23.
1, 2. பொ.ச. 33, பஸ்காவை ஆசரித்தப்பின் அன்று இரவு இயேசு என்ன செய்தார்?
யெகோவாவின் ஒரேபேறான குமாரன் அங்கிருந்தார். ‘அவருக்கு நேரிட்ட சோதனைகளில் அவரோடுகூட நிலைத்திருந்த’ 11 பேரும் அங்கிருந்தார்கள். (லூக்கா 22:28) அது பொ.ச. 33, மார்ச் 31, வியாழக்கிழமை இரவு வேளை; எருசலேமிற்கு மேலே முழு நிலா ஆகாயத்தை அலங்கரித்திருக்கலாம். இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலரும் அப்போதுதான் பஸ்கா பண்டிகையை ஆசரித்து முடித்திருந்தார்கள். உண்மையற்ற யூதாஸ்காரியோத்து அங்கிருந்து வெளியே அனுப்பப்பட்டிருந்தான், ஆனால் மற்றவர்கள் புறப்பட்டுப் போவதற்கு இன்னும் வேளை வரவில்லை. ஏன்? ஏனெனில் இயேசு மிக முக்கியமான ஒன்றை அப்போது செய்யவிருந்தார். அது என்ன?
2 சுவிசேஷ எழுத்தாளராகிய மத்தேயு அங்கிருந்ததால் அவர் சொல்ல நாம் கேட்போமாக. “அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்; இது பாவ மன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என அவர் எழுதினார். (மத்தேயு 26:26-28) இந்தச் சம்பவம் ஒரு முறை மட்டுமே நிகழ்ந்ததா? இதன் முக்கியத்துவம் என்ன? இன்றுள்ள நமக்கு இது எதையேனும் அர்த்தப்படுத்துகிறதா?
‘இதை தொடர்ந்து செய்யுங்கள்’
3. பொ.ச. 33, நிசான் 14-ம் தேதி இரவில் இயேசு செய்த காரியம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?
3 பொ.ச. 33, நிசான் 14-ம் தேதி இரவில் இயேசு கிறிஸ்து செய்த காரியம் அவருடைய வாழ்க்கையில் ஏதோ தற்செயலாக நிகழ்ந்த ஒன்றல்ல. 20 ஆண்டுகளுக்குப் பிறகும் கொரிந்துவில் இதை ஆசரித்து வந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதும்போது இந்தச் சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்டார். பொ.ச. 33-ல் இயேசுவுடனும் 11 அப்போஸ்தலருடனும் பவுல் இருக்கவில்லை. என்றாலும், அந்தச் சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதை அப்போஸ்தலர்கள் சிலரிடமிருந்து நிச்சயம் கேட்டுத் தெரிந்திருப்பார். மேலும், அந்த நிகழ்ச்சியில் உட்பட்டிருந்த அம்சங்களை கடவுளுடைய ஆவி வெளிப்படுத்தியதாலும் பவுல் அதை ஊர்ஜிதப்படுத்த முடிந்தது. அவர் இவ்வாறு சொன்னார்: “நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் [“தொடர்ந்து,” NW] செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து; இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் [“தொடர்ந்து,” NW] செய்யுங்கள் என்றார்.”—1 கொரிந்தியர் 11:23-25.
4. கர்த்தரின் இராப் போஜனத்தை கிறிஸ்தவர்கள் ஏன் ஆசரிக்க வேண்டும்?
4 ‘என்னை நினைவுகூரும்படி இதை தொடர்ந்து செய்யுங்கள்’ என இயேசு கட்டளையிட்டதை சுவிசேஷ எழுத்தாளராகிய லூக்காவும் உறுதிப்படுத்துகிறார். (லூக்கா 22:19, NW) இந்த வார்த்தைகள் இவ்வாறும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன: “எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்.” (பொது மொழிபெயர்ப்பு), “என் நினைவுகூருதலாக இதை செய்யுங்கள்.” (த ஜெரூசலம் பைபிள்) சொல்லப்போனால், இந்த ஆசரிப்பு கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்பு என பெரும்பாலும் அழைக்கப்படுகிறது. பவுல் இதை கர்த்தரின் இராப் போஜனம் என்றும் அழைத்தார்; இந்த ஆசரிப்பு இரவில் ஆரம்பித்து வைக்கப்பட்டதால் இதற்கு இப்பெயர் பொருத்தமானதே. (1 கொரிந்தியர் 11:21) கர்த்தரின் இராப் போஜனத்தை ஆசரிக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஆனால் ஏன் இந்த ஆசரிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டது?
ஏன் ஆரம்பித்து வைக்கப்பட்டது
5, 6. (அ) நினைவு ஆசரிப்பை இயேசு ஆரம்பித்து வைத்ததற்கு ஒரு காரணம் என்ன? (ஆ) கர்த்தருடைய இராப் போஜனம் ஆரம்பித்து வைக்கப்பட்டதற்கு மற்றொரு காரணம் என்ன?
5 இந்த நினைவு ஆசரிப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டதற்கு ஒரு காரணம், அது இயேசுவின் மரணத்தால் விளைந்த ஒரு நன்மையுடன் சம்பந்தப்பட்டுள்ளது. தமது பரம தந்தையின் பேரரசுரிமையை ஆதரிக்கிறவராக அவர் மரித்தார். இவ்வாறு, தன்னல காரணங்களுக்காக மட்டுமே கடவுளை மனிதர்கள் வணங்குவதாக குற்றம் சாட்டிய பிசாசாகிய சாத்தானை கிறிஸ்து பொய்யனாக்கினார். (யோபு 2:1-5) உண்மையுள்ளவராக இயேசு மரித்தது, இந்தக் குற்றச்சாட்டை பொய்யென நிரூபித்து, யெகோவாவின் இருதயத்தை குளிரச் செய்தது.—நீதிமொழிகள் 27:11.
6 கர்த்தரின் இராப் போஜனம் ஆரம்பித்து வைக்கப்பட்டதற்கு மற்றொரு காரணமும் உள்ளது, அதாவது பரிபூரணமான, பாவமற்ற மனிதனாக இயேசு மரித்ததன் மூலம் ‘அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுத்ததை’ அந்த இராப் போஜனம் நமக்கு நினைவூட்டுகிறது. (மத்தேயு 20:28) முதல் மனிதன் கடவுளுக்கு எதிராக பாவம் செய்தபோது பரிபூரண மனித வாழ்க்கையையும் அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களையும் இழந்தான். எனினும் இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” என்பது உண்மைதான். (ரோமர் 6:23) கர்த்தரின் இராப் போஜனத்தை ஆசரிப்பது, இயேசுவின் உயிர் தியாகத்தின் மூலம் யெகோவாவும் அவருடைய குமாரனும் காட்டிய எல்லையற்ற அன்பை நமக்கு நினைவூட்டுகிறது. அந்த அன்புக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!
எப்போது ஆசரிப்பது?
7. “பண்ணும் போதெல்லாம்” என்பதற்கு இசைய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் நினைவு ஆசரிப்பில் எப்படி பங்கெடுக்கிறார்கள்?
7 கர்த்தரின் இராப் போஜனத்தைப் பற்றி பவுல் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.” (1 கொரிந்தியர் 11:26) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் மரணம் வரை நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுப்பார்கள். இவ்வாறு, கடவுள் செய்திருக்கும் இயேசுவினுடைய மீட்பின் பலிக்குரிய ஏற்பாட்டில் தாங்கள் விசுவாசம் வைத்திருப்பதை யெகோவா தேவனுக்கும் இந்த உலகத்துக்கும் முன்பு மீண்டும் மீண்டும் அவர்கள் அறிவிப்பார்கள்.
8. அபிஷேகம் செய்யப்பட்ட தொகுதியினர் எது வரை கர்த்தருடைய இராப் போஜனத்தை ஆசரிப்பார்கள்?
8 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ தொகுதியினர் எது வரை கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பை அனுசரிப்பார்கள்? “கர்த்தர் வருமளவும்” என பவுல் சொன்னார்; இயேசு தம்முடைய ‘வருகையின்போது’ தம்மை பின்பற்றிய அபிஷேகம் செய்யப்பட்டவர்களை உயிர்த்தெழுப்பி பரலோகத்துக்கு அழைத்துக்கொள்ளும் வரை இந்த ஆசரிப்புகள் தொடரும் என்பதையே அவர் உண்மையில் அர்த்தப்படுத்தினார். (1 தெசலோனிக்கேயர் 4:14-17) தம்மை உண்மையுடன் பின்பற்றிய 11 அப்போஸ்தலரிடம் இயேசு சொன்ன வார்த்தைகளுடன் இது ஒத்திருக்கிறது: “நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்.”—யோவான் 14:3.
9. மாற்கு 14:25-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
9 இயேசு நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தபோது பாத்திரத்திலிருந்த திராட்ச ரசத்தை சுட்டிக்காட்டி, “நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம் பண்ணும் நாள் வரைக்கும் திராட்சப்பழ ரசத்தை இனி நான் பானம் பண்ணுவதில்லை” என தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களிடம் கூறினார். (மாற்கு 14:25) இயேசு பரலோகத்தில் நிஜமான திராட்ச ரசத்தைக் குடிக்க மாட்டார்; ஆகையால் சிலசமயங்களில் திராட்ச ரசத்தால் அடையாளமாக காட்டப்படும் மகிழ்ச்சியை மனதில் வைத்தே பேசினார் என்பது தெளிவாக தெரிகிறது. (சங்கீதம் 104:15; பிரசங்கி 10:19) அவரும் அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்களும் வெகு ஆவலுடனும் ஏக்கத்துடனும் எதிர்பார்த்திருக்கும் அந்த ராஜ்யத்தில் அவர்கள் ஒன்று சேருவது மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.—ரோமர் 8:23; 2 கொரிந்தியர் 5:2.
10. நினைவு ஆசரிப்பை எப்போதெல்லாம் அனுசரிக்க வேண்டும்?
10 இயேசுவின் மரணத்தை மாதந்தோறும், வாரந்தோறும், அல்லது தினந்தோறும் ஆசரிக்க வேண்டுமா? இல்லை. கர்த்தருடைய இராப் போஜனத்தை இயேசு ஆரம்பித்து வைத்த அந்த பஸ்கா பண்டிகை நாளில் அவர் கொல்லப்பட்டார்; அந்த பண்டிகை பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேலர் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானதை ‘நினைவுகூருவதற்கு’ ஆசரிக்கப்பட்டது. (யாத்திராகமம் 12:14) பஸ்கா பண்டிகை வருடத்திற்கு ஒருமுறை, யூத மாதமாகிய நிசான் 14-ம் தேதி அன்று மட்டுமே கொண்டாடப்பட்டது. (யாத்திராகமம் 12:1-6; லேவியராகமம் 23:5) இயேசுவின் மரணத்தையும் மாதந்தோறும், வாரந்தோறும், அல்லது தினந்தோறும் அல்ல, ஆனால் பஸ்கா பண்டிகையைப் போலவே வருடாந்தரமாக மட்டுமே அனுசரிக்க வேண்டும்.
11, 12. ஆரம்பத்தில் நினைவு ஆசரிப்பு அனுசரிக்கப்பட்ட விதத்தைப் பற்றி சரித்திரப் பதிவு என்ன காட்டுகிறது?
11 எனவே, நினைவு ஆசரிப்பை ஒவ்வொரு வருடமும் நிசான் 14-ம் தேதியன்று மட்டுமே அனுசரிப்பது பொருத்தமானதே. ஒரு புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “ஆசியா மைனரிலிருந்த கிறிஸ்தவர்கள் தவறாமல் பஸ்காவை [கர்த்தருடைய இராப் போஜனத்தை] நிசான் 14-ம் தேதி பழக்கமாய் கொண்டாடியதால் குவார்ட்டோடெசிமன்கள் [பதினான்கவர்கள்] என அழைக்கப்பட்டார்கள் . . . அந்தத் தேதி வெள்ளிக்கிழமையில் அல்லது வேறு எந்தக் கிழமையிலாவது வரலாம்.”—புதிய ஷாஃப்-ஹெர்ட்ஸோக் மத அறிவு கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்), தொகுதி IV, பக்கம் 44.
12 பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில், குவார்ட்டோடெசிமன்கள், “சட்டத்தைக் கடைப்பிடிப்பது போல் கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டுமென கருதியதாலேயே” நினைவு ஆசரிப்பை நிசான் 14-ம் தேதியன்று பழக்கமாக அனுசரித்தார்கள் என சரித்திராசிரியர் ஜே. எல். ஃபான் மோஷைம் குறிப்பிட்டார். “ஆசியாவிலுள்ள குவார்ட்டோடெசிமன் சர்ச்சுகள் பின்பற்றிய பழக்கம் எருசலேமிலுள்ள சர்ச்சில் செய்யப்படுவது போலவே இருந்தது. இரண்டாம் நூற்றாண்டில் இந்த சர்ச்சுகள் பஸ்காவை நிசான் 14-ம் தேதியன்று ஆசரிக்கையில் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் ஏற்பட்ட மீட்பை நினைவுகூர்ந்தன” என மற்றொரு சரித்திராசிரியர் சொல்கிறார்.—ஸ்டுடியா பாட்ரிஸ்டீகா, தொகுதி V, 1962, பக்கம் 8.
அப்பத்தின் முக்கியத்துவம்
13. கர்த்தரின் இராப் போஜனத்தை ஆரம்பித்து வைக்கையில் இயேசு எப்படிப்பட்ட அப்பத்தை பயன்படுத்தினார்?
13 இயேசு நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தபோது, “அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் [அப்போஸ்தலர்களுக்குக்] கொடுத்”தார். (மாற்கு 14:22) அந்த சமயத்தில் பஸ்கா பண்டிகைக்குப் பயன்படுத்தப்பட்ட அப்பமே அங்கிருந்தது. (யாத்திராகமம் 13:6-10) அது புளிக்காத மாவில் சுடப்பட்டதால் மெல்லியதாக இருந்தது, அது எளிதில் நொறுங்குவதாய் இருந்தது; அதைப் பிட்டு பரிமாற வேண்டியிருந்தது. இயேசு ஆயிரக்கணக்கானோருக்கு அப்பத்தை அற்புதமாக அளிக்கையில் அதுவும் மெல்லியதாக, மொரமொரப்பாக இருந்ததால் அதை பிட்டு பகிர்ந்தளித்தார். (மத்தேயு 14:19; 15:36) எனவே நினைவு ஆசரிப்பு அப்பத்தை பிட்டுக் கொடுத்ததில் எந்த ஆவிக்குரிய முக்கியத்துவமும் இருப்பதாக தெரியவில்லை.
14. (அ) நினைவு ஆசரிப்பில் புளிப்பில்லாத அப்பம் பயன்படுத்தப்படுவது ஏன் பொருத்தமானது? (ஆ) கர்த்தருடைய இராப் போஜன ஆசரிப்புக்காக எப்படிப்பட்ட அப்பத்தை வாங்கலாம் அல்லது சுடலாம்?
14 நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைத்தபோது பயன்படுத்தப்பட்ட அப்பத்தைக் குறித்து இயேசு, “இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது” என சொன்னார். (1 கொரிந்தியர் 11:24; மாற்கு 14:22) அந்த அப்பம் புளிப்பில்லாதிருந்தது பொருத்தமே. ஏன்? ஏனெனில் புளித்தமா, தீமையை, துன்மார்க்கத்தை அல்லது பாவத்தை அர்த்தப்படுத்தலாம். (1 கொரிந்தியர் 5:6-8) இயேசுவின் பரிபூரண, பாவமற்ற மனித சரீரத்தை அப்பம் பிரதிநிதித்துவம் செய்தது. ஆகவே, மீட்பின் பலியாக செலுத்தப்பட அது பொருத்தமானதாக இருந்தது. (எபிரெயர் 7:26; 10:5-10) யெகோவாவின் சாட்சிகள் இதை மனதில் வைத்தே நினைவு ஆசரிப்புகளில் புளிப்பில்லாத அப்பத்தை உபயோகிக்கிறார்கள்; இதன் மூலம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். சில சமயங்களில், வெங்காயம், முட்டை போன்ற வேறு எந்த பொருட்களும் சேர்க்கப்படாத யூதர்கள் பயன்படுத்துகிற மேட்ஸோ (matzo) என்ற அப்பத்தை உபயோகிக்கிறார்கள். அல்லது, கொஞ்சம் தானிய மாவில் (முடிந்தால், கோதுமை மாவில்) சிறிது தண்ணீர் சேர்த்தும் புளிப்பில்லாத அப்பத்தை தயாரிக்கலாம். மெல்லியதாக தேய்க்கப்பட்ட மாவை, உலர்ந்து, மொருமொருவென ஆகும் வரை லேசாக எண்ணெய் தடவிய கல்லில் சுடலாம்.
திராட்ச ரசத்தின் முக்கியத்துவம்
15. கிறிஸ்து தம் மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைக்கையில் பாத்திரத்தில் என்ன இருந்தது?
15 புளிப்பில்லாத அப்பத்தைப் பரிமாறிய பிறகு, இயேசு பாத்திரத்தை எடுத்து “ஸ்தோத்திரம் பண்ணி, அதை அவர்களுக்குக் [அப்போஸ்தலர்களுக்குக்] கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம் பண்ணினார்கள்.” “இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என இயேசு விளக்கினார். (மாற்கு 14:23, 24) அந்தப் பாத்திரத்தில் என்ன இருந்தது? புளிப்பேறிய திராட்ச ரசம் இருந்தது, புளிப்பேறாத திராட்சைப் பழச்சாறு அல்ல. திராட்ச ரசம் என பைபிள் குறிப்பிடுகையில் புளிப்பேறாத பழச்சாற்றைப் பற்றி அது சொல்வதில்லை. உதாரணமாக, திராட்சைப் பழச்சாறு அல்ல, புளிப்பேறிய திராட்ச ரசமே ‘பழந்துருத்தியைக்’ கிழித்துப் போடும் என இயேசு சொன்னார். கிறிஸ்துவின் பகைவர்கள் அவரை ‘மதுபானப் பிரியர்’ [‘திராட்சை மது அருந்துபவர்,’ NW] என குற்றம் சாட்டினார்கள். அது சாதாரண திராட்சைப் பழச்சாறாக இருந்திருந்தால் அத்தகைய குற்றச்சாட்டு அர்த்தமற்றதாக இருந்திருக்கும். (மத்தேயு 9:17; 11:19) பஸ்கா ஆசரிப்பின் போது புளிப்பான திராட்ச ரசம் உபயோகிக்கப்பட்டது, அதையே தம்முடைய மரண நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைக்கையில் கிறிஸ்து உபயோகித்தார்.
16, 17. நினைவு ஆசரிப்பில் பயன்படுத்துவதற்கு எப்படிப்பட்ட திராட்ச ரசம் பொருத்தமானது, ஏன்?
16 அந்தப் பாத்திரத்தில் இருந்தது இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தை பிரதிநிதித்துவம் செய்வதால் சிவந்த திராட்ச ரசம் மட்டுமே அதற்கு பொருத்தமான அடையாளமாக இருக்கும். “இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என அவரே சொன்னார். “உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் [அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள்] அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே” என அப்போஸ்தலன் பேதுருவும் எழுதினார்.—1 பேதுரு 1:18, 19.
17 ஒருவித சிவந்த திராட்ச ரசத்தைத்தான் நினைவு ஆசரிப்பை ஆரம்பித்து வைக்கையில் இயேசு உபயோகித்தார் என்பதில் எவ்வித சந்தேகமில்லை. எனினும், இன்று கிடைக்கும் சிவந்த திராட்ச ரசங்களில் சில வகைகள் உபயோகிக்க தகுதியற்றவை; ஏனெனில் அவை போதை உண்டாக்கும் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன அல்லது பிராந்தி சேர்த்து அல்லது மூலிகைகளும் வாசனைப் பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. இயேசுவின் இரத்தம் எவ்விதத்திலும் குறையின்றி இருந்தது, அதனுடன் எதுவும் சேர்க்கப்படுவதற்கு அவசியம் இருக்கவில்லை. எனவே, போர்ட், ஷெர்ரி, வெர்மௌத் போன்ற கலப்படம் செய்யப்பட்ட ஒயின்கள் பொருத்தமற்றவை. நினைவு ஆசரிப்பு பாத்திரத்தில் இனிப்பு முதலான வேறு எதுவும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்ட சிவந்த திராட்ச ரசம் இருக்க வேண்டும். இனிப்பு சேர்க்கப்படாமல் வீட்டில் தயாரிக்கப்படும் சிவந்த திராட்ச ரசத்தை பயன்படுத்தலாம், அதே போல சிவந்த பர்கண்டி, க்ளேரட் போன்ற ஒயின்களையும் பயன்படுத்தலாம்.
18. நினைவு ஆசரிப்பு அப்பம், திராட்ச ரசம் சம்பந்தப்பட்டதில் இயேசு ஏன் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தவில்லை?
18 இந்தப் போஜனத்தை ஆரம்பித்து வைக்கையில் இயேசு சின்னங்களை நிஜமாகவே தம்முடைய சரீரமாகவும் இரத்தமாகவும் மாற்றும் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தவில்லை. நரமாமிசத்தை சாப்பிட்டு, இரத்தத்தைக் குடிப்பது அரக்கத்தனமாக இருக்கும், அது கடவுளுடைய சட்டத்தை மீறுவதைக் குறிக்கும். (ஆதியாகமம் 9:3, 4; லேவியராகமம் 17:10) அது மட்டுமல்ல, அந்த சமயத்தில் இயேசுவின் மாம்ச சரீரமும் இரத்தமும் இன்னும் அவரிடமே இருந்தன. மறுநாள் பிற்பகலில், அதாவது யூத நாட்காட்டியின்படி அதே நிசான் 14-ல், அவருடைய உடல் பரிபூரண பலியாக செலுத்தப்பட்டது, அவருடைய இரத்தம் சிந்தப்பட்டது. எனவே, நினைவு ஆசரிப்பு அப்பமும் திராட்ச ரசமும் அடையாள அர்த்தமுடையவை, அவை கிறிஸ்துவின் சரீரத்தையும் இரத்தத்தையும் பிரதிநிதித்துவம் செய்பவை.a
நினைவு ஆசரிப்பு—ஒரு கூட்டுப் போஜனம்
19. கர்த்தருடைய இராப் போஜனத்தின் போது ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுகளையும் கிண்ணங்களையும் பயன்படுத்தலாம்?
19 நினைவு ஆசரிப்பை இயேசு ஆரம்பித்து வைத்தபோது, ஒரே பாத்திரத்தில் பருகும்படி தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களுக்கு அழைப்பு விடுத்தார். இயேசு “பாத்திரத்தையும் [“கிண்ணத்தையும்,” NW] எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்” என சொன்னதாக மத்தேயு எழுதிய சுவிசேஷம் குறிப்பிடுகிறது. (மத்தேயு 26:27) பல கிண்ணங்களை உபயோகிக்காமல் ஒரு ‘கிண்ணத்தைப்’ பயன்படுத்தியது அன்று பிரச்சினையாக இருக்கவில்லை; ஏனென்றால் அன்று அநேகமாக ஒரே மேஜையில் 11 பேர் மட்டுமே இருந்ததால், கிண்ணத்தை ஒருவர் மற்றவருக்கு அடுத்தடுத்து கொடுக்க முடிந்தது. உலகெங்குமுள்ள 94,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் லட்சக்கணக்கானோர் இந்த வருடம் கர்த்தருடைய இராப் போஜனத்தை அனுசரிக்க கூடிவருவார்கள். அந்த நாள் இரவில் இதை அனுசரிக்க இத்தனை பேர் கூடிவருகையில் எல்லாருக்குமாக ஒரேவொரு கிண்ணத்தை மட்டுமே ஒருவேளை பயன்படுத்த முடியாது. ஆனாலும் அந்த நியமத்தை மீறாமல், பெரிய சபைகள் போதிய நேரத்துக்குள் சபையார் மத்தியில் இவற்றை அனுப்புவதற்கு வசதியாக பல கிண்ணங்களை பயன்படுத்துகின்றன. அதைப் போலவே, அப்பத்திற்காகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட தட்டுகளை பயன்படுத்தலாம். அந்தக் கிண்ணம் அல்லது கிளாஸ் இப்படித்தான் இருக்க வேண்டுமென திட்டவட்டமாக பைபிள் எதையும் குறிப்பிடுவதில்லை. எனினும், கிண்ணமும் தட்டும் அந்த நிகழ்ச்சியின் மதிப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும். மற்றவர்களிடம் கொடுக்கையில் திராட்ச ரசம் சிந்தும் அளவுக்கு விளிம்பு வரை நிரப்பாதிருப்பது ஞானமான செயலாகும்.
20, 21. நினைவு ஆசரிப்பை கூட்டுப் போஜனம் என நாம் ஏன் சொல்லலாம்?
20 ஒன்றுக்கு மேற்பட்ட தட்டுகளில் அப்பங்களையும் பல கிண்ணங்களில் திராட்ச ரசத்தையும் பயன்படுத்தினாலும் நினைவு ஆசரிப்பு ஒரு கூட்டுப் போஜனமே. பூர்வ இஸ்ரவேலில் ஒருவர் கடவுளுடைய பரிசுத்த ஸ்தலத்துக்கு ஒரு மிருகத்தைக் கொண்டுவந்து பலி செலுத்தி, ஒரு கூட்டுப் போஜனத்தை ஏற்பாடு செய்திருக்கலாம். அந்த மிருகத்தின் ஒரு பங்கு பலிபீடத்தின் மீது தகனிக்கப்பட்டது; ஒரு பங்கு பலி செலுத்திய ஆசாரியருக்கும், மற்றொரு பங்கு ஆரோனின் ஆசாரிய குமாரர்களுக்கும் கொடுக்கப்பட்டது; பலி செலுத்த வந்தவரும் அவருடைய குடும்பத்தாரும் இந்த போஜனத்தில் கலந்துகொண்டனர். (லேவியராகமம் 3:1-16; 7:28-36b) எல்லாரும் பகிர்ந்துகொள்வதால் நினைவு ஆசரிப்பும்கூட ஒரு கூட்டுப் போஜனமே.
21 இந்த ஏற்பாட்டின் ஸ்தாபகரான யெகோவா தேவன் இந்தக் கூட்டுப் போஜனத்தில் கலந்துகொள்கிறார். இயேசுதான் அந்தப் பலி, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இப்போஜனத்தில் பகிர்ந்துகொண்டு அந்த சின்னங்களில் பங்கெடுக்கிறார்கள். யெகோவாவின் மேஜையில் புசிப்பது, பங்கெடுக்கும் அந்த நபர்கள் அவருடன் சமாதான உறவை அனுபவிப்பதை அர்த்தப்படுத்துகிறது. அதற்கு இசைவாக பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்.”—1 கொரிந்தியர் 10:16, 17.
22. நினைவு ஆசரிப்பு பற்றிய என்ன கேள்விகளை இனி நாம் கலந்தாலோசிக்க வேண்டும்?
22 கர்த்தருடைய இராப் போஜனம் மட்டுமே யெகோவாவின் சாட்சிகள் ஆசரிக்கிற ஒரேவொரு வருடாந்தர மத ஆசரிப்பு. இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம், ‘என்னை நினைவுகூரும்படி இதை தொடர்ந்து செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டதால் இது பொருத்தமான ஆசரிப்பாக இருக்கிறது. நினைவு ஆசரிப்பின் போது நாம் இயேசுவின் மரணத்தை நினைவுகூருகிறோம்; அந்த மரணம் யெகோவாவின் பேரரசுரிமையை ஆதரித்தது. நாம் கவனித்தபடி, இந்தக் கூட்டுப் போஜனத்தில், அப்பம் கிறிஸ்து பலியாக செலுத்திய அவருடைய சரீரத்தையும், திராட்ச ரசம் சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றன. எனினும், அடையாள சின்னங்களான அப்பத்திலும் திராட்ச ரசத்திலும் சொற்ப எண்ணிக்கையானோரே பங்கெடுக்கிறார்கள். ஏன்? அதில் பங்கெடுக்காத லட்சக்கணக்கானோருக்கு நினைவு ஆசரிப்பு எதையேனும் அர்த்தப்படுத்துகிறதா? அப்படியானால், கர்த்தருடைய நினைவு ஆசரிப்பு உங்களுக்கு எதை அர்த்தப்படுத்த வேண்டும்?
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்ட வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2-ல் பக்கம் 271-ஐக் காண்க.
b தமிழ் பைபிளிலுள்ள “சமாதான பலி” என்ற பதம் மூல எபிரெயுவில் “கூட்டுப் பலி” என்பதாகவும் மொழிபெயர்க்கப்படுகிறது.
உங்கள் பதிலென்ன?
• கர்த்தருடைய இராப் போஜனத்தை இயேசு ஏன் ஆரம்பித்து வைத்தார்?
• எப்போதெல்லாம் இந்த நினைவு ஆசரிப்பை அனுசரிக்க வேண்டும்?
• நினைவு ஆசரிப்பில் பயன்படுத்தப்படும் புளிப்பில்லாத அப்பம் எதை அர்த்தப்படுத்துகிறது?
• நினைவு ஆசரிப்பில் பயன்படுத்தப்படும் திராட்ச ரசம் எதை பிரதிநிதித்துவம் செய்கிறது?
[பக்கம் 15-ன் படம்]
கர்த்தருடைய இராப் போஜனத்தை இயேசு ஆரம்பித்து வைத்தார்