அதிகாரம் 123
மிகுந்த துக்கத்தோடு ஜெபிக்கிறார்
மத்தேயு 26:30, 36-46 மாற்கு 14:26, 32-42 லூக்கா 22:39-46 யோவான் 18:1
கெத்செமனே தோட்டத்தில் இயேசு
வியர்வை இரத்தத் துளிகள்போல் விழுகிறது
தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களோடு இயேசு ஜெபம் செய்து முடிக்கிறார். பிறகு, ‘கடவுளைப் புகழ்ந்து பாடல்கள் பாடிவிட்டு, ஒலிவ மலைக்கு அவர்கள் போகிறார்கள்.’ (மாற்கு 14:26) அங்கிருந்து கிழக்கு நோக்கி நடந்து கெத்செமனே என்ற தோட்டத்துக்குப் போகிறார்கள். இயேசு அங்கே போவது வழக்கம்.
இது ஒலிவ மரங்கள் சூழ்ந்த அழகான இடம். இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களில் எட்டுப் பேரிடம், “நான் அங்கே போய் ஜெபம் செய்கிற வரைக்கும் நீங்கள் இங்கேயே உட்கார்ந்திருங்கள்” என்று சொல்கிறார். ஒருவேளை, தோட்டத்தின் நுழைவாசலில் உட்கார்ந்திருக்கும்படி அவர்களிடம் சொல்லியிருக்கலாம். பிறகு, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் கூட்டிக்கொண்டு அந்தத் தோட்டத்துக்குள்ளே போகிறார். இயேசு அதிக மனவேதனையோடு, “உயிர் போகுமளவுக்கு நான் துக்கத்தில் தவிக்கிறேன். நீங்கள் இங்கேயே இருந்து, என்னோடு விழித்திருங்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார்.—மத்தேயு 26:36-38.
அவர்களைவிட்டு இன்னும் கொஞ்சம் தள்ளிப் போய், இயேசு ‘மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து ஜெபம் செய்கிறார்.’ இந்த நெருக்கடியான நேரத்தில் இயேசு எதைப் பற்றி ஜெபிக்கிறார்? “தகப்பனே, உங்களால் எல்லாமே முடியும்; இந்தக் கிண்ணத்தை என்னிடமிருந்து எடுத்துவிடுங்கள். ஆனாலும், என்னுடைய விருப்பத்தின்படி அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே நடக்கட்டும்” என்று ஜெபிக்கிறார். (மாற்கு 14:35, 36) இதற்கு என்ன அர்த்தம்? தன் உயிரை மீட்புவிலையாகக் கொடுக்காமல் இருந்துவிடலாம் என்று இயேசு நினைக்கிறாரா? இல்லவே இல்லை!
ரோமர்கள் எப்படியெல்லாம் ஆட்களைச் சித்திரவதை செய்து கொல்வார்கள் என்பதை இயேசு பரலோகத்திலிருந்து பார்த்திருக்கிறார். அவர் இப்போது ஒரு மனிதராக இருப்பதால் பயம், கவலை போன்ற உணர்ச்சிகள் அவருக்கும் இருக்கும். அவரால் வலியை உணர முடியும். அதனால், இப்போது அனுபவிக்கப்போகிற சித்திரவதையை அவர் விரும்பவில்லை என்பது உண்மைதான். ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் படுமோசமான குற்றவாளியைப் போலச் சாவதைப் பார்த்து, அவருடைய தகப்பனின் பெயரை மக்கள் பழித்துப் பேசுவார்களோ என்று நினைத்துதான் இயேசு அதிகமாக வேதனைப்படுகிறார். ஏனென்றால், இன்னும் சில மணிநேரங்களில், கடவுளை நிந்தித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு மரக் கம்பத்தில் அவர் தொங்கவிடப்படுவார்.
ரொம்ப நேரம் ஜெபம் செய்துவிட்டு, இயேசு திரும்பி வந்து பார்க்கும்போது மூன்று அப்போஸ்தலர்களும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர் பேதுருவிடம், “உங்களால் ஒரு மணிநேரம்கூட என்னோடு சேர்ந்து விழித்திருக்க முடியவில்லையா? சோதனைக்கு இணங்கிவிடாதபடி நீங்கள் விழித்திருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்கிறார். அப்போஸ்தலர்களும் பயங்கர மனவேதனையோடு இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். அதோடு, நேரம் இப்போது நடுராத்திரியையும் தாண்டிவிட்டது. அதனால், “உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது” என்கிறார்.—மத்தேயு 26:40, 41.
பிறகு, அவர் இரண்டாவது தடவையாகப் போய், “இந்தக் கிண்ணத்தை” எடுத்துவிடும்படி ஜெபம் செய்கிறார். அவர் திரும்பி வந்து பார்க்கும்போது, அப்போஸ்தலர்கள் மூன்று பேரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். சோதனைக்கு இணங்கிவிடாதபடி ஜெபம் செய்ய வேண்டிய நேரத்தில் அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இயேசு அதைச் சுட்டிக்காட்டியபோது, “அவரிடம் என்ன சொல்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை.” (மாற்கு 14:40) மூன்றாவது தடவையாக இயேசு போய் மண்டிபோட்டு ஜெபம் செய்கிறார்.
ஒரு குற்றவாளியைப் போலத் தான் சாவதால் தகப்பனின் பெயருக்குக் களங்கம் வந்துவிடுமோ என்று நினைத்து இயேசு ரொம்ப வேதனைப்படுகிறார். தன்னுடைய மகன் செய்கிற ஜெபங்களை யெகோவா கேட்டுக்கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில், அவர் ஒரு தேவதூதரை அனுப்பி இயேசுவைப் பலப்படுத்துகிறார். அதற்குப் பிறகும், இயேசு தன் தகப்பனிடம் மன்றாடுவதை நிறுத்தவில்லை. அவர் “இன்னும் அதிக உருக்கமாக ஜெபம்” செய்கிறார். மிகப் பெரிய பொறுப்பை அவர் சுமந்துகொண்டிருக்கிறார். அவருடைய முடிவில்லாத வாழ்வும், உண்மையுள்ள மனிதர்களின் முடிவில்லாத வாழ்வும் ஆபத்தில் இருக்கிறது. அவர் தாங்க முடியாத மனவேதனையில் தவிக்கிறார். சொல்லப்போனால், அவருடைய “வியர்வைத் துளிகள் இரத்தத் துளிகள்போல் தரையில்” விழுகின்றன.—லூக்கா 22:44.
இயேசு மூன்றாவது தடவையாக அப்போஸ்தலர்களிடம் வரும்போதும், அவர்கள் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். இயேசு அவர்களிடம், “இப்படிப்பட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறீர்களே! இதோ, மனிதகுமாரன் பாவிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிற நேரம் நெருங்கிவிட்டது. எழுந்திருங்கள், போகலாம். இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் நெருங்கி வந்துவிட்டான்” என்கிறார்.—மத்தேயு 26:45, 46.