நியமத்தை பகுத்துணருவது முதிர்ச்சியை பிரதிபலிக்கிறது
கெட்ட கூட்டுறவுகள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுப்பீர்கள். (1 கொரிந்தியர் 15:33, NW; கலாத்தியர் 6:7) சரீரப் பிரகாரமாகவோ அல்லது ஆவிக்குரியப் பிரகாரமாகவோ, ஒவ்வொரு கூற்றும் ஓர் அடிப்படை சத்தியத்தின்—ஒரு நியமத்தின்—உதாரணமாக விளங்குகிறது; மேலும் ஒவ்வொன்றும் சட்டங்களுக்கான ஆதாரத்தைக் கொடுக்கிறது. என்றபோதிலும், சட்டங்கள் வரலாம் போகலாம், அவை திட்டவட்டமான ஒன்றை குறிக்கின்றன. மறுபட்சத்தில், நியமங்கள் பரவலாக பொருத்தப்படுபவை, அவை என்றென்றும் நிலைத்திருக்க முடியும். ஆகவே, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் நியமங்களின் அடிப்படையில் சிந்திக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை உற்சாகப்படுத்துகிறது.
உவெப்ஸ்டர்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல் டிக்ஷ்னரி நியமத்தை இவ்வாறு வரையறுக்கிறது: “பொதுவான அல்லது அடிப்படையான ஒரு சத்தியம்: விரிவான, அடிப்படையான ஒரு சட்டம், கொள்கை, அல்லது அதைக் கொண்டு மற்றவை ஆதாரமிடப்படும் அல்லது அதிலிருந்து மற்றவை பெறப்படும் அனுமானம்.” உதாரணமாக, ஒரு பிள்ளையிடம், “நீ ஸ்டவ்வை தொடக்கூடாது” என ஒருவர் சட்டம் போடலாம். ஆனால் ஒரு பெரியவரிடம், “ஸ்டவ் சூடாக இருக்கிறது” என்று சொல்வது போதுமானது. இரண்டாவதாக கூறப்பட்டது அதிக விரிவான ஒரு கூற்று. ஏனெனில், ஒருவர் செய்வதை—ஒருவேளை சமைப்பதை, சுடுவதை, அல்லது ஸ்டவ்வை அணைப்பதை—இது உட்படுத்துகிறது. ஒரு கருத்தில் அது ஒரு நியமமாகிறது.
நிச்சயமாகவே, வாழ்க்கையின் முக்கிய நியமங்கள் ஆவிக்குரிய விஷயங்களே; அவை நாம் கடவுளை வணங்குவதையும் நம்முடைய மகிழ்ச்சியையும் பாதிக்கின்றன. ஆனால், நியமங்களின் அடிப்படையில் நியாயங்காட்ட தேவைப்படும் முயற்சியை செய்வதிலிருந்து சிலர் பின்வாங்குகின்றனர். ஒரு தீர்மானத்தை எதிர்ப்படுகையில் ஒரு சட்டம் இருந்தால் வசதியாக இருக்குமென அவர்கள் விரும்புகின்றனர். இது ஞானமற்றதாகவும் பைபிள் காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள மனிதர்கள் வைத்த முன்மாதிரிக்கு முரணாகவும் இருக்கிறது.—ரோமர் 15:4.
கடவுளுடைய நியமத்தின்படி வாழ்ந்த மனிதர்கள்
அபூரண மனிதர்களில், ஆபேலை கடவுளுடைய நியமத்தின்படி வாழ்ந்தவர்களில் முதலாவது மனிதன் என அழைக்கலாம். ‘வித்துவைப்’ பற்றி சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு அவர் அதிக சிந்தனை செலுத்தி, பாவத்திலிருந்து மீட்கப்படுவது இரத்த பலியை உட்படுத்தும் என்பதை உணர்ந்திருக்கக்கூடும். (ஆதியாகமம் 3:15) எனவே அவர், ‘தன் மந்தையின் தலையீற்றுகளில் சிலவற்றை’ கடவுளுக்கு காணிக்கையாக கொடுத்தார். ‘அவைகளில் கொழுமையானவைகளை’ என்ற சொற்றொடரானது, ஆபேல் தன்னிடமிருந்த மிகச் சிறந்ததையே யெகோவாவுக்கு கொடுத்தார் என்பதை காட்டுகிறது. என்றபோதிலும், பலிகள் சம்பந்தமாக விரிவான கட்டளைகளைக் கடவுள் கொடுத்தது ஆபேலின் மரணத்திற்குப்பின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு பிற்பாடாகும். நியமத்தின்படி வாழ்ந்த ஆபேல் என்ற கடவுளுக்கு-பயந்த-மனிதனுக்கு நேர்மாறாக, அவருடைய சகோதரனாகிய காயீன் ஏதோ கடமைக்காக கடவுளுக்கு காணிக்கை செலுத்தினான். ஆனால் அவனுடைய மனப்பான்மை சரியில்லை; அவன் செலுத்திய காணிக்கை, நியமத்தின் அடிப்படையில் இருதயப்பூர்வமற்றதாய் இருந்ததை சுட்டிக்காட்டியது.—ஆதியாகமம் 4:3-5.
நோவாவும்கூட கடவுளுடைய நியமத்தின்படி வாழ்ந்த ஒரு மனிதர். ஒரு பேழையைக் கட்டும்படி கடவுள் அவரிடம் திட்டவட்டமாய் கட்டளையிட்டார் என பைபிள் பதிவு காட்டுகிறபோதிலும், மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அவருக்கு கட்டளையிட்டதாய் நாம் வாசிப்பதில்லை. இருப்பினும், ‘நீதியைப் பிரசங்கித்தவர்’ என நோவா அழைக்கப்படுகிறார். (2 பேதுரு 2:5) பிரசங்கிக்கும்படி கடவுள் ஒருவேளை நோவாவுக்கு சொல்லியிருந்தாலும்கூட, நியமத்தின் பேரில் அவருக்கிருந்த உணர்வும் அயலாரின்மீது அவருக்கிருந்த அன்பும்கூட அவ்வாறு செய்யும்படி அவரைத் தூண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நோவாவுடையதைப் போன்ற காலங்களில் நாம் வாழ்வதால், அவருடைய சிறந்த மனப்பான்மையையும் முன்மாதிரியையும் நாம் பின்பற்றுவோமாக.
தம்முடைய நாளில் இருந்த மதத் தலைவர்களைப் போலில்லாமல், நியமங்களின் அடிப்படையில் சிந்திக்கும்படி மக்களுக்கு இயேசு போதித்தார். அவருடைய மலைப்பிரசங்கம் அதற்கு ஓர் உதாரணமாகும். அதன் முழு சாராம்சமும் நியமத்திற்கு கவனத்தை ஈர்க்கிறது. (மத்தேயு, 5-7 அதிகாரங்கள்) இயேசு இந்த முறையில் போதித்தார், ஏனெனில் ஆபேல் மற்றும் நோவாவுக்கு முன்பே அவர் உண்மையிலேயே கடவுளை அறிந்திருந்தார். ஒரு சிறுவனாக இருந்தபோதே, பின்வரும் அடிப்படை சத்தியத்தை உயர்ந்த மதிப்புக்குரியதாய் கருதினார்: “மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (உபாகமம் 8:3; லூக்கா 2:41-47) ஆம், யெகோவாவையும் அவருடைய விருப்புவெறுப்புகளையும் அவருடைய நோக்கங்களையும் உண்மையில் அறிவதே கடவுளுடைய நியமத்தின்படி வாழும் நபராக இருப்பதற்கான திறவுகோல். கடவுளைப் பற்றிய இப்படிப்பட்ட நியமங்கள் நம்முடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும்போது, அவை உயிருள்ள நியமங்களாக ஆகின்றன.—எரேமியா 22:16; எபிரெயர் 4:12.
நியமங்களும் இருதயமும்
கீழ்ப்படியவில்லையென்றால் ஒருவேளை தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினாலேயே, மனவிருப்பமே இல்லாமல் ஒரு சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து நடக்கும் சாத்தியம் உள்ளது. என்றபோதிலும், நியமத்திற்கு இசைவாக நடப்பது இப்படிப்பட்ட மனப்பான்மையை தவிர்த்துவிடுகிறது; ஏனெனில் நியமங்களால் கட்டுப்படுத்தப்படுகையில் மனப்பூர்வமாய் கீழ்ப்படிவது இயல்பான பிரதிபலிப்பே. ஆபேல் மற்றும் நோவாவைப் போல, மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கை சட்டம் ஏற்படுத்தப்படுவதற்கு முன்பே வாழ்ந்த யோசேப்பை குறித்து சிந்தித்துப் பாருங்கள். போத்திபாரின் மனைவி அவரை கெடுக்க முயன்றபோது, யோசேப்பு இவ்வாறு சொன்னார்: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி”? ஆம், கணவனும் மனைவியும் “ஒரே மாம்சமாயிரு”க்கிறார்கள் என்ற நியமத்தை யோசேப்பு அறிந்திருந்தார்.—ஆதியாகமம் 2:24; 39:9.
இன்றைக்கு இந்த உலகம் நீதியான நியமங்களின்றி உள்ளது. அது வன்முறையையும் ஒழுக்கயீனத்தையும் பெருந்தீனிக்காரனைப் போல் வாரி விழுங்குகிறது. ஆபத்து என்னவென்றால், சுவையுள்ள ஆனால் எந்தவித சத்தற்ற அதே உணவை—அதாவது திரைப்படங்கள், வீடியோக்கள், புத்தகங்கள் ஆகியவற்றை—ருசிபார்ப்பதற்கு, ஒருவேளை இரகசியமாய் சாப்பிடுவதற்கு ஒரு கிறிஸ்தவன் கவர்ந்திழுக்கப்படலாம். ஆகையால், வரப்போகும் ‘மிகுந்த உபத்திரவத்தில்’ உண்மைப்பற்றுறுதியுள்ளோரை மட்டுமே கடவுள் காப்பாற்றுவார் என்பதை மனதில்கொண்டு, யோசேப்பை போல் நியமத்தின் அடிப்படையில் தீமையை புறக்கணிப்பது எவ்வளவு போற்றத்தக்கது. (மத்தேயு 24:21) ஆம், வெளிப்பார்வைக்கு அல்ல, ஆனால் நாம் அந்தரங்கத்தில் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதே முக்கியம்; அதுவே, நாம் உள்ளுக்குள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துகிறது.—சங்கீதம் 11:4; நீதிமொழிகள் 15:3.
மேற்சொல்லப்பட்ட காரியங்களை சிந்தித்துப் பார்க்கையில், பைபிள் நியமங்களால் நாம் வழிநடத்தப்படுவோமாகில், கடவுளுடைய சட்டத்திலுள்ள ஓட்டைகள் என சொல்லப்படுபவற்றை தேடிக்கொண்டிருக்க மாட்டோம்; குறிப்பிட்ட ஒரு சட்டத்தை மீறாமலேயே நாம் எந்தளவுக்கு செல்லலாம் என்பதைப் பார்ப்பதற்கும் நாம் முயற்சிசெய்ய மாட்டோம். அப்படிப்பட்ட சிந்தை நம்மையே வீழ்ச்சியடையச் செய்யும்; முடிவில் அது நமக்கு தீங்கிழைக்கும்.
சட்டத்திற்குப் பின்னால் இருப்பதை பாருங்கள்
நிச்சயமாகவே, கிறிஸ்தவருடைய வாழ்க்கையில் சட்டங்கள் இன்றியமையா பாகத்தை வகிக்கின்றன. அவை நம்மைப் பாதுகாக்க உதவும் காவலாளிகளைப் போல் இருக்கின்றன, அவற்றின் அடித்தளத்தில் அநேக முக்கிய நியமங்கள் உள்ளன. இத்தகைய நியமங்களைக் கண்டுணரத் தவறுவது அதோடு தொடர்புடைய சட்டங்களுக்கான நம்முடைய அன்பு தணிந்துபோகும்படி செய்யலாம். பூர்வ இஸ்ரவேல் தேசத்தார் இதையே செயலில் காண்பித்தார்கள்.
இஸ்ரவேலர்களுக்கு கடவுள் பத்து கட்டளைகளைக் கொடுத்தார்; அவற்றில் முதலாவது கட்டளை, யெகோவாவைத் தவிர வேறெந்த கடவுளையும் வணங்குவதைத் தடைசெய்தது. யெகோவா எல்லாவற்றையும் படைத்தார் என்பது, இந்தச் சட்டத்திற்குப் பின்னால் இருக்கும் அடிப்படை சத்தியமாகும். (யாத்திராகமம் 20:3-5) ஆனால் அந்தத் தேசத்தார் இந்த நியமத்தின்படி வாழ்ந்தார்களா? யெகோவாதாமே பதிலளிக்கிறார்: “கட்டையைப் பார்த்து, ‘நீயே எங்கள் தகப்பன்’ [என்று இஸ்ரவேலர் சொன்னார்கள்]; ஒரு கல்லைப் பார்த்து, ‘தாய்’ [என்று சத்தமிட்டார்கள்]. ஆனால் [யெகோவாவாகிய] எனக்கு தங்களுடைய புறமுதுகைக் காட்டி, என்னிடமிருந்து தங்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.” (எரேமியா 2:27, த நியூ இங்லிஷ் பைபிள்) எப்பேர்ப்பட்ட சொரணையற்ற, நியமத்தால் வழிநடத்தப்படாத முட்டாள்தனம்! அது யெகோவாவின் இருதயத்தை எவ்வளவாய் புண்படுத்தியது!—சங்கீதம் 78:40, 41; ஏசாயா 63:9, 10.
கிறிஸ்தவர்களும்கூட கடவுளிடமிருந்து சட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். உதாரணமாக, விக்கிரக ஆராதனை, பாலின ஒழுக்கக்கேடு, இரத்தத்தை துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். (அப்போஸ்தலர் 15:28, 29) அதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், அதில் அடங்கியுள்ள முக்கிய நியமங்களைப் புரிந்துகொள்ள முடியும். அவை: கடவுள் நம்முடைய தனிப்பட்ட பக்திக்கு தகுதியானவர்; நம்முடைய திருமண துணைக்கு நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்; யெகோவாவே நமக்கு ஜீவனை தந்தவர். (ஆதியாகமம் 2:24; யாத்திராகமம் 20:5; சங்கீதம் 36:9) இந்தக் கட்டளைகளுக்குப் பின்னாலுள்ள நியமங்களை நாம் கண்டுணர்கிறவர்களாயும் அவற்றிற்கு ஆழ்ந்த போற்றுதல் காண்பிப்பவர்களாயும் இருந்தால், அவை நம்முடைய சொந்த நன்மைக்கே என்பதை காண்போம். (ஏசாயா 48:17) நமக்கு கடவுளுடைய ‘கற்பனைகள் பாரமானவைகளல்லவே.’—1 யோவான் 5:3.
ஒரு காலத்தில் கடவுளுடைய கட்டளைகளை இஸ்ரவேலர்கள் அசட்டை செய்தார்கள்; ஆனால் இயேசுவின் காலத்திற்குள், “நியாயப்பிரமாணத்தில் தேறியவர்களாகிய” வேதபாரகர்கள் மறுகோடிக்குச் சென்றுவிட்டார்கள். தூய வணக்கத்தை குலைத்து, கடவுளுடைய நியமங்களைக் குழிதோண்டி புதைத்துவிடுமளவுக்கு மலைபோல் சட்டங்களையும் பாரம்பரியங்களையும் ஏற்படுத்திவிட்டார்கள். (மத்தேயு 23:2, NEB) தோல்விக்கோ நம்பிக்கையின்மைக்கோ மாய்மாலத்திற்கோ அடிபணிந்துவிட்டதாக மக்கள் உணர்ந்தார்கள். (மத்தேயு 15:3-9) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பல சட்டங்கள் மனிதநேயமற்றவையாய் இருந்தன. சூம்பிய கையையுடைய ஒரு மனிதனை குணப்படுத்தவிருந்தபோது, இயேசு அங்கிருந்த பரிசேயர்களிடம், “ஓய்வுநாளில் நன்மை செய்வது நியாயமானதா?” என்று கேட்டார். இல்லை என்பதை அவர்களுடைய மெளனம் சுட்டிக்காட்டியது. ‘அவர்களுடைய இருதயக்கடினம் [இயேசுவை] விசனப்படும்படி’ செய்தது. (மாற்கு 3:1-6) ஓய்வுநாளில் கால்முறிந்துபோன அல்லது காயமடைந்த வீட்டு விலங்குக்கு (ஒரு முதலீடு) பரிசேயர்கள் உதவக்கூடும், ஆனால் ஒரு மனிதனுக்கோ அல்லது ஒரு மனுஷிக்கோ—ஜீவனா மரணமா என்ற விஷயமாய் இல்லாமல் இருந்தால் தவிர—ஒருபோதும் உதவமாட்டார்கள். உண்மையிலேயே, அவர்கள் மனித சட்டங்களாலும் சட்டநுணுக்கங்களாலும் மிகவும் மூழ்கடிக்கப்பட்டிருந்தார்கள்; எறும்புகள் ஒரு சித்திரத்தின்மீது அங்குமிங்கும் அலைமோதிக்கொண்டிருப்பதுபோல, அவர்கள் முழுப் படத்தையும்—அதாவது, கடவுளுடைய நியமங்களை—காண தவறிவிட்டார்கள்.—மத்தேயு 23:23, 24.
இருப்பினும், இளைஞரும்கூட, தங்களுடைய இருதயம் உண்மையாய் இருக்கும்போது, பைபிள் நியமங்களுக்கு தாங்கள் காட்டும் போற்றுதலினால் யெகோவாவுக்கு கனத்தைக் கொண்டுவரலாம். யார் சூதாடுவது என பதின்மூன்று வயது ரிபெக்காவின் ஆசிரியர் வகுப்பில் உள்ளவர்களிடம் கேட்டார். சூதாடுவதில்லை என பெரும்பாலானவர்கள் சொன்னார்கள். ஆனால், பல்வேறு சூழ்நிலைகள் குறிப்பிடப்பட்டபோது, ரிபெக்காவைத் தவிர அனைவரும் ஏதாவதொரு விதத்தில் சூதாடுவதாக ஒத்துக்கொண்டார்கள். பணத்தை பெருக்குவதற்காக 20-சென்ட் கொடுத்து ஒரு லாட்டரி டிக்கெட் வாங்குவாளா என ரிபெக்காவிடம் அந்த ஆசிரியர் கேட்டார். மாட்டேன் என்பதாக சொல்லி, அவ்வாறு செய்வது ஏன் ஒருவகை சூதாட்டம் என்பதற்கு வேதப்பூர்வ காரணங்களையும் கொடுத்தாள். பின்பு அந்த ஆசிரியர் முழு வகுப்பாரிடமும் இவ்வாறு சொன்னார்: ‘என்னைப் பொருத்தவரை, இங்குள்ளவர்களிலேயே, “நியமங்கள்” என்று நான் அழைக்கிற வார்த்தைக்கான உண்மையான அர்த்தத்தின்படி இருப்பது ரிபெக்கா மட்டும்தான்.’ ஆம், வெறுமனே ரிபெக்கா, “அது என்னுடைய மதத்திற்கு விரோதமானது” என்று சொல்லியிருந்திருக்கலாம். ஆனால் அதைவிட அதிக ஆழமாய் அவள் சிந்தித்தாள்; சூதாடுவது ஏன் தவறு, அதில் அவள் ஏன் பங்குகொள்வதில்லை என்பதற்கு அவளால் பதிலளிக்க முடிந்தது.
கடவுளை வணங்குவதில் நம்முடைய ‘சிந்திக்கும் திறமையையும்’ ‘நியாயங்காட்டும் திறமையையும்’ பயன்படுத்துவதன் மூலம் நாம் எவ்வாறு பயனடையலாம் என்பதை ஆபேல், நோவா, யோசேப்பு, இயேசு ஆகியோருடைய உதாரணங்கள் காண்பிக்கின்றன. (நீதிமொழிகள் 2:11; ரோமர் 12:1; NW) கிறிஸ்தவ மூப்பர்கள், “[தங்களிடத்திலுள்ள] தேவனுடைய மந்தையை . . . மேய்”க்கையில் இயேசுவைப் பின்பற்றுவது நல்லது. (1 பேதுரு 5:2) இயேசு வைத்த நல்ல முன்மாதிரியின்படி, கடவுளுடைய நியமங்களை நேசிப்பவர்களே யெகோவாவின் அரசதிகாரத்தின்கீழ் செழித்தோங்குபவர்கள்.—ஏசாயா 65:14.