இயேசுவின் பூமிக்குரிய குடும்பத்தாரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்
இயேசு 30 வயதாகும் வரை, அதாவது முழுக்காட்டுதல் எடுக்கும் வரை தம் குடும்பத்தாரோடு வசித்து வந்தார்; அவர்களைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? சுவிசேஷ பதிவுகள் என்ன சொல்கின்றன? அவருடைய குடும்பத்தாரைப் பற்றி ஆராயும்போது நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இதற்குரிய பதில்கள் உங்களுக்கு பயனளிக்கும்.
இயேசு பூமியில் தங்க மாளிகையிலா பிறந்து தவழ்ந்தார்? இல்லை, அவரது வளர்ப்பு தந்தையாகிய யோசேப்பு தச்சுத்தொழில் செய்து வந்தார். அதற்கு அவர் கடினமாய் உழைக்க வேண்டியிருந்தது, பெரும்பாலும் அவரே மரங்களை வெட்டி எடுத்துவர வேண்டியிருந்தது. இயேசு பிறந்து சுமார் 40 நாட்களுக்குப் பிறகு, அவருடைய பெற்றோர் எருசலேமுக்குச் சென்று நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்டிருந்தபடி பலி செலுத்தினார்கள். நியாயப்பிரமாண கட்டளைப்படி, காட்டுப்புறாவுடன் அல்லது புறாக்குஞ்சுடன் செம்மறியாட்டுக் கடாவையும் பலியாக செலுத்தினார்களா? இல்லை. அவர்களால் அந்தப் பலியை செலுத்த முடியவில்லை என தெரிகிறது. என்றாலும், ஏழைகளுக்காக நியாயப்பிரமாணத்தில் ஓர் ஏற்பாடு இருந்தது. அதன்படி யோசேப்பும் மரியாளும் ‘ஒரு ஜோடு காட்டுப் புறாவை அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளை’ பலியாக செலுத்தினார்கள். விலை குறைந்த ஒன்றை பலியாக செலுத்தியதால் அவர்கள் ஏழைகள் என்பது தெரிய வருகிறது.—லூக்கா 2:22-24; லேவியராகமம் 12:6, 8.
ஆக, முழு மனிதவர்க்கத்தையே ஆளப்போகும் அரசராகிய இயேசு கிறிஸ்து, அடிப்படை தேவைகளுக்காக திண்டாடிய பாமரர் மத்தியில் பிறந்தார். தமது வளர்ப்பு தந்தையைப் போலவே அவரும் ஒரு தச்சராக வேலை செய்து வந்தார். (மத்தேயு 13:55; மாற்கு 6:3) பரலோகத்தில் வல்லமை வாய்ந்த ஆவி சிருஷ்டியாக “ஐசுவரியமுள்ளவராயிருந்தும்” இயேசு நமக்காக ‘தரித்திரரானார்’ என பைபிள் கூறுகிறது. அவர் ஒரு மனிதனாக தாழ்ந்த நிலையை ஏற்று, எளிய குடும்பத்தில் வளர்ந்தார். (2 கொரிந்தியர் 8:9; பிலிப்பியர் 2:5-9; எபிரெயர் 2:9) இயேசு பணக்கார குடும்பத்தில் பிறக்காதது, அவரிடம் நெருங்கிவர சிலருக்கு உதவியாக இருந்திருக்கலாம். அவருடைய அந்தஸ்தோ ஸ்தானமோ அவர்களுடைய கவனத்தை திசைதிருப்பவில்லை. அவருடைய போதனைகளுக்காக, மனதை கொள்ளைகொள்ளும் சீரிய குணங்களுக்காக, சிறந்த செயல்களுக்காக அவர்கள் அவரை உயர்வாக மதிக்க முடிந்தது. (மத்தேயு 7:28, 29; 9:19-33; 11:28, 29) இயேசுவை ஒரு சாதாரண குடும்பத்தில் பிறக்க செய்ததில் யெகோவா தேவனுடைய ஞானம் விளங்கியதை நாம் காண முடிகிறது.
இப்பொழுது நாம் இயேசுவின் குடும்ப அங்கத்தினர்களைப் பற்றி ஆராய்ந்து, அவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
யோசேப்பு—ஒரு நீதிமான்
தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாகிய மரியாள் ‘தன்னோடு கூடிவரும் முன்னே’ கர்ப்பம் தரித்திருந்ததை யோசேப்பு அறிந்தபோது, ஒருபக்கம் அவள் மீதிருந்த அன்பினாலும், மறுபக்கம் ஒழுக்கங்கெட்ட செயல் மீதிருந்த வெறுப்பினாலும் அல்லாடினார். வருங்கால கணவனாக தனது உரிமை பறிக்கப்பட்டது போல அவருக்கு தோன்றியது. அந்தக் காலத்தில், ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் அவரது மனைவியாகவே கருதப்பட்டாள். ஆகவே மரியாள் விபச்சாரி என்ற முத்திரை குத்தப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படுவதைத் தவிர்ப்பதற்காக, யோசேப்பு தீர யோசித்தப் பிறகு அவளை இரகசியமாக விவாகரத்து செய்ய தீர்மானித்தார்.—மத்தேயு 1:18; உபாகமம் 22:23, 24.
பின்பு கனவில் ஒரு தேவதூதன் யோசேப்புக்குத் தோன்றி இவ்வாறு கூறினார்: “உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்.” அந்தத் தெய்வீக கட்டளையைப் பெற்ற பிறகு, யோசேப்பு அதற்கேற்ப செயல்பட்டு மரியாளை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.—மத்தேயு 1:20-24.
இந்தத் தீர்மானம் எடுத்ததால், “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்” என்று தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலம் யெகோவா சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதில் நீதியும் உண்மையுமுள்ள யோசேப்பு பங்களித்தார். (ஏசாயா 7:14) யோசேப்பு நிச்சயமாகவே ஆன்மீகப் பற்றுள்ளவராக விளங்கினார். மரியாளின் தலைமகனாகிய மேசியா தனது குமாரனாக இல்லாதபோதிலும், அவரது வளர்ப்புத் தகப்பனாகும் பாக்கியத்தை நன்றியோடு ஏற்றுக்கொண்டார்.
மரியாள் தன் முதல் குமாரனை பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவளுடன் பாலுறவு கொள்ளவில்லை. (மத்தேயு 1:25) இந்தப் புதுமணத் தம்பதியினர் உறவு கொள்ளாமல் விலகியிருப்பது ஒரு சவாலாக இருந்திருக்கலாம், ஆனால் இந்தக் குழந்தைக்கு யார் தகப்பன் என்ற குழப்பம் உண்டாக அவர்கள் விரும்பவில்லை என தெரிகிறது. தன்னடக்கத்திற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! இயல்பான ஆசைகளைவிட ஆன்மீக மதிப்பீடுகளுக்கே யோசேப்பு முதலிடம் கொடுத்தார்.
தத்துக் குமாரனை வளர்ப்பது சம்பந்தமாக நான்கு சந்தர்ப்பங்களில் யோசேப்புக்கு தேவதூதரின் வழிநடத்துதல் கிடைத்தது. இவற்றில் மூன்று அந்தச் சிறுவனை எங்கு வளர்க்க வேண்டும் என்பதைப் பற்றியது. அந்தப் பிள்ளையின் உயிரை காப்பாற்ற, உடனடியாக கீழ்ப்படிவது அவசியமாக இருந்தது. எல்லா சந்தர்ப்பங்களிலும், யோசேப்பு உடனடியாக செயல்பட்டார், முதலில் அந்தப் பிள்ளையை எகிப்துக்கு கொண்டு சென்றார், பிற்பாடு மீண்டும் இஸ்ரவேலுக்கு அழைத்து வந்தார். இதனால் ஆண் குழந்தைகளை ஏரோது படுகொலை செய்தபோது இளம் இயேசு பாதுகாக்கப்பட்டார். மேலும், யோசேப்பின் கீழ்ப்படிதலால் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின.—மத்தேயு 2:13-23.
இயேசு பொருளாதார ரீதியில் சொந்தக் காலில் நிற்பதற்கு உதவியாக யோசேப்பு அவருக்கு தன் தொழிலை கற்றுத் தந்தார். ஆகவே, இயேசு “தச்சனுடைய குமாரன்” என்று மட்டுமல்ல, “தச்சன்” என்றும் அறியப்பட்டிருந்தார். (மத்தேயு 13:55; மாற்கு 6:3) இயேசு ‘எல்லா விதத்திலும் நம்மைப் போல் சோதிக்கப்பட்டிருந்ததாக’ அப்போஸ்தலன் பவுல் எழுதினார். குடும்பத்தை ஆதரிப்பதற்கு கடினமாக உழைத்ததையும் இது உட்படுத்தியிருக்கும்.—எபிரெயர் 4:15.
இறுதியாக, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் யோசேப்பை பற்றிய கடைசி பதிவில், உண்மை வணக்கத்திற்கு அவர் காட்டிய பக்திக்கு அத்தாட்சியை பார்க்கிறோம். பஸ்கா பண்டிகைக்காக யோசேப்பு தனது குடும்பத்தை எருசலேமுக்குக் கூட்டிச் சென்றார். ஆண்கள் மட்டுமே செல்ல வேண்டியதாக இருந்தபோதிலும், “வருஷந்தோறும்” குடும்பமாக எருசலேமுக்குச் செல்வது அவரது வழக்கம். அதற்காக அவர் அதிக தியாகங்களைச் செய்தார், ஏனென்றால் நாசரேத்திலிருந்து எருசலேம் செல்வதற்கு அவர்கள் சுமார் 100 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியிருந்தது. ஆனால் ஒருசமயம் அப்படி பிரயாணம் செய்தபோது இயேசு கூட்டத்திலிருந்து பிரிந்துவிட்டதாக பைபிள் பதிவு சொல்கிறது. பிற்பாடு அவர் ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்; அங்கே நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சி பெற்ற போதகர்கள் பேசுவதை செவிகொடுத்துக் கேட்பதுடன் அவர்களிடம் கேள்விகளையும் கேட்டுக் கொண்டிருந்தார். இயேசு 12 வயதே நிரம்பியவராக இருந்தபோதிலும், கடவுளுடைய வார்த்தையில் அதிக ஞானமுடையவராகவும் அறிவுடையவராகவும் விளங்கினார். இயேசுவின் பெற்றோர் அவருக்கு நன்றாக கற்பித்திருக்க வேண்டும், ஆன்மீக சிந்தையுடைய சிறுவனாக வளர்த்திருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவத்திலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம். (லூக்கா 2:41-50) இதற்குப் பிறகு சிலகாலத்திற்குள் யோசேப்பு இறந்துவிட்டதாக தெரிகிறது, ஏனென்றால் பிற்பாடு பைபிள் பதிவில் அவரைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஆம், யோசேப்பு தனது குடும்பத்தாரை ஆன்மீக ரீதியிலும் சரீர ரீதியிலும் நன்கு கவனித்து வந்த நீதிமானாக விளங்கினார். இன்று கடவுளுடைய சித்தம் என்னவென்பதை புரிந்துகொண்டு நீங்களும் யோசேப்பை போல உங்களுடைய வாழ்க்கையில் ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா? (1 தீமோத்தேயு 2:4, 5) கடவுளுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள அவருடைய சித்தத்திற்கு உங்களை மனப்பூர்வமாக கீழ்ப்படுத்துவதன் மூலம் நீங்களும் யோசேப்பை போன்ற கீழ்ப்படிதலை காட்டுகிறீர்களா? மற்றவர்களுடன் ஆன்மீக ரீதியில் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடும்படி நீங்களும் உங்களுடைய பிள்ளைகளுக்குப் போதிக்கிறீர்களா?
மரியாள் —கடவுளுடைய சுயநலமற்ற ஊழியர்
இயேசுவின் தாயாகிய மரியாள், கடவுளுக்கு மிகச் சிறந்த ஊழியராக விளங்கினாள். குழந்தை பெறப்போவதைப் பற்றி காபிரியேல் தூதன் அவளிடம் அறிவித்தபோது ஆச்சரியப்பட்டாள். அவள் ஒரு கன்னிகையாக இருந்ததால், “புருஷனை அறியேனே” என கூறினாள். இந்தப் பிறப்பு பரிசுத்த ஆவியால் சம்பவிக்கும் என்பதை அறிந்தபோது, அந்தச் செய்தியை தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு, “இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று கூறினாள். (லூக்கா 1:30-38) இந்த விசேஷ சிலாக்கியத்தை அவள் மிகவும் உயர்வாக மதித்து, ஏற்றுக்கொண்டதால் உண்டாகும் எந்தவொரு கஷ்டத்தையும் தாங்கிக்கொள்ள மனமுடையவளாக இருந்தாள்.
சொல்லப்போனால், இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது ஒரு பெண்ணாக அவளுடைய முழு வாழ்க்கையையும் மாற்றியது. சுத்திகரிப்புக்காக அவள் எருசலேம் சென்றபோது, “உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்” என முதியவராகிய பக்திமிக்க சிமியோன் அவளிடம் கூறினார். (லூக்கா 2:25-35) இயேசு அநேகரால் புறக்கணிக்கப்பட்டு, கடைசியில் கழுமரத்தில் ஆணியால் அறையப்படுவதைப் பார்க்கும்போது மரியாள் எப்படி உணருவாள் என்பதையே அவர் குறிப்பிட்டதாக தெரிகிறது.
இயேசு வளர்ந்து வந்தபோது, அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றையெல்லாம் மரியாள் மனதில் வைத்துக்கொண்டு, “தன் இருதயத்திலே . . . தீர்மானத்திற்கு வந்தாள்.” (லூக்கா 2:19, 51, NW) யோசேப்பை போலவே, அவளும் ஆன்மீகப் பற்றுள்ள பெண்ணாக விளங்கினாள், தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்குக் காரணமான சம்பவங்களையும் வார்த்தைகளையும் இருதயத்தில் பொக்கிஷமாக வைத்துப் போற்றினாள். “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது” என காபிரியேல் தூதன் சொன்னது அவளுடைய மனதில் ஆழமாக பதிந்திருக்க வேண்டும். (லூக்கா 1:32, 33) ஆம், மேசியாவின் பூமிக்குரிய தாயாக இருக்கும் பாக்கியத்தை அவள் உயர்வாக கருதினாள்.
அற்புதகரமாக கர்ப்பம் தரித்த தனது உறவினளாகிய எலிசபெத்தை சந்தித்தபோது மரியாளுடைய ஆன்மீகம் மீண்டும் புலப்பட்டது. அவளை சந்தித்தபோது, யெகோவாவை துதித்து கடவுளுடைய வார்த்தையின் மீது தனக்கிருந்த அன்பை வெளிப்படுத்தினாள். 1 சாமுவேல் 2-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அன்னாளின் ஜெபத்தையும், எபிரெய வேதாகமத்தின் மற்ற புத்தகங்களில் உள்ள கருத்துக்களையும் மரியாள் குறிப்பிட்டாள். வேதவசனங்களை இந்தளவுக்கு அறிந்திருந்தது, கடவுளுக்கு பயந்து நடக்கும் ஒரு தாயாக இருப்பதற்கு அவள் தகுதியுடையவள் என்பதை காட்டியது. தனது மகனை ஆன்மீக ரீதியில் போஷித்து வளர்ப்பதில் யோசேப்புடன் அவளும் ஒத்துழைப்பாள் என்பதையும் சுட்டிக்காட்டியது.—ஆதியாகமம் 30:13; 1 சாமுவேல் 2:1-10; மல்கியா 3:12; லூக்கா 1:46-55.
மேசியாவாகிய தனது குமாரன் மீது மரியாளுக்கு பலமான விசுவாசம் இருந்தது, அவருடைய மரணத்திற்குப் பிறகும் அந்த விசுவாசம் தணிந்துவிடவில்லை. அவருடைய உயிர்த்தெழுதலுக்குப்பின், அப்போஸ்தலர்களுடன் ஜெபம் செய்வதற்காக ஒன்றுகூடி வந்த உண்மையுள்ள சீஷர்களுடன் அவளும் இருந்தாள். (அப்போஸ்தலர் 1:13, 14) தனது நேசத்திற்குரிய மகன் கழுமரத்தில் மரிப்பதைப் பார்க்கும் பெருந்துயரத்தை சகிக்க வேண்டியதாய் இருந்தபோதிலும், அவள் தனது உண்மைத்தன்மையைக் காத்துக்கொண்டாள்.
மரியாளின் வாழ்க்கையை அறிந்துகொள்வதிலிருந்து நீங்கள் எவ்வாறு பயனடையலாம்? தியாகங்கள் செய்ய வேண்டிய அவசியம் இருந்தாலும் கடவுளை சேவிக்கும் சிலாக்கியத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இன்று இந்த சிலாக்கியம் எவ்வளவு பொன்னானது என்பதை நீங்கள் மதித்துணருகிறீர்களா? இயேசு முன்னறிவித்தவற்றை மனதில் வைத்து, அவற்றை இன்று சம்பவிப்பவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் ‘உங்கள் இருதயத்தில் தீர்மானத்திற்கு வருகிறீர்களா?’ (மத்தேயு 24 மற்றும் 25-ம் அதிகாரங்கள்; மாற்கு 13-ம் அதிகாரம்; லூக்கா 21-ம் அதிகாரம்) கடவுளுடைய வார்த்தையில் நன்கு தேர்ச்சி பெறுவதிலும் அதை உங்களுடைய உரையாடலில் அடிக்கடி பயன்படுத்துவதிலும் நீங்கள் மரியாளை பின்பற்றுகிறீர்களா? இயேசுவை பின்பற்றுவதால் நீங்கள் துன்பப்பட வேண்டியிருந்தாலும் அவரில் உங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொள்வீர்களா?
இயேசுவின் சகோதரர்கள் —மாற்றம் சாத்தியமே
இயேசுவின் மரணம் வரை அவருடைய சகோதரர்கள் அவர் மீது விசுவாசம் வைக்கவில்லை என தெரிகிறது. எனவே, வாதனையின் கழுமரத்தில் இயேசு இறந்த சமயத்திலும் அவர்கள் அங்கு வரவில்லை; அதனால்தான் இயேசு தமது தாயை அப்போஸ்தலன் யோவானிடத்தில் ஒப்புவிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கலாம். இயேசுவின் உறவினர்கள் அவரை மதிக்கவில்லை, “மதிமயங்கியிருக்கிறார்” என்றும்கூட ஒரு சந்தர்ப்பத்தில் சொன்னார்கள். (மாற்கு 3:21) இயேசுவின் குடும்ப அங்கத்தினர்கள் அவிசுவாசிகளாக இருந்ததால், அதுபோன்ற உறவினர்களால் இன்று கேலி செய்யப்படுவோரின் உணர்ச்சிகளை இயேசு புரிந்துகொள்வார் என்பதில் நாம் நம்பிக்கையோடிருக்கலாம்.
ஆனால் இயேசு உயிர்த்தெழுந்த பின், அவருடைய சகோதரர்கள் அவரில் விசுவாசம் வைக்க ஆரம்பித்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பு எருசலேமில் கூடிவந்திருந்த ஒரு தொகுதியினரில் இவர்களும் இருந்தார்கள், அப்போஸ்தலர்களுடன் சேர்ந்து ஊக்கமாய் ஜெபம் செய்தார்கள். (அப்போஸ்தலர் 1:14) அவர்களது ஒன்றுவிட்ட சகோதரனின் உயிர்த்தெழுதல் அவர்களுடைய இருதயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அவருடைய சீஷர்களாகும்படி செய்தது என தெளிவாக தெரிகிறது. ஆக, நம்முடைய உறவினர்கள் நமது மதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நினைத்து ஒருபோதும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது.
இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனான யாக்கோபு கிறிஸ்தவ சபையில் முக்கிய பாகம் வகித்ததாக வேதவசனங்கள் காட்டுகின்றன. இவருக்கு தனிப்பட்ட விதமாக இயேசு காட்சியளித்தார். விசுவாசத்தைக் காத்துக்கொள்ளும்படி சக கிறிஸ்தவர்களுக்கு புத்திமதி கூறி, தேவாவியால் ஏவப்பட்டு ஒரு கடிதத்தையும் யாக்கோபு எழுதினார். (அப்போஸ்தலர் 15:6-29; 1 கொரிந்தியர் 15:7; கலாத்தியர் 1:18, 19; 2:9; யாக்கோபு 1:1) மற்றொரு ஒன்றுவிட்ட சகோதரராகிய யூதா, விசுவாசத்திற்காக கடினமாய் போராடும்படி சக விசுவாசிகளை உந்துவித்து ஆவியின் ஏவுதலால் ஒரு கடிதம் எழுதினார். (யூதா 1) அந்தக் கடிதங்களில், இயேசுவுக்கும் தங்களுக்குமுள்ள இரத்த பந்தத்தை சுட்டிக் காட்டி தங்களுக்கு அதிகாரம் இருப்பதாக யாக்கோபோ யூதாவோ உடன் கிறிஸ்தவர்களிடம் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மனத்தாழ்மைக்கு அவர்களிடமிருந்து நாம் எப்பேர்ப்பட்ட பாடத்தைக் காற்றுக்கொள்ளலாம்!
ஆகவே, இயேசுவின் குடும்பத்தாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சில விஷயங்கள் யாவை? நிச்சயமாகவே, நம்முடைய பக்தியை வெளிப்படுத்திக் காட்டுவதற்கு உதவும் இதுபோன்ற பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்: (1) கடவுளுடைய வெளிப்படுத்தப்பட்ட சித்தத்திற்கு உண்மையுடன் கீழ்ப்படிந்து, அதனால் வரும் எல்லா சோதனைகளையும் சமாளியுங்கள். (2) தியாகங்கள் செய்ய வேண்டியதாக இருந்தாலும்கூட, ஆன்மீக மதிப்பீடுகளுக்கு முதலிடம் கொடுங்கள். (3) உங்கள் பிள்ளைகளை வேதவசனங்களுக்கு இசைவாக பயிற்றுவியுங்கள். (4) குடும்ப அங்கத்தினர்கள் உங்களுடைய மதத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். (5) கிறிஸ்தவ சபையில் பிரபலமாயிருப்பவர்களுடன் உங்களுக்கிருக்கும் உறவைக் குறித்து பெருமையடிக்காதீர்கள். ஆம், இயேசுவின் குடும்பத்தைப் பற்றி கற்றுக்கொள்வது அவரிடம் நம்மை நெருங்கி வரச் செய்கிறது, குழந்தைப் பருவத்தில் இயேசுவை வளர்ப்பதற்கு ஒரு சாதாரண குடும்பத்தை யெகோவா தேர்ந்தெடுத்ததற்காக நம் நன்றியுணர்வையும் பெருகச் செய்கிறது.
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
மரியாளை யோசேப்பு தன் மனைவியாக ஏற்றுக்கொண்டு மேசியானிய தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதில் பங்களித்தார்
[பக்கம் 6-ன் படங்கள்]
யோசேப்பும் மரியாளும் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆன்மீக மதிப்பீடுகளையும் வேலை செய்வதன் அவசியத்தையும் கற்பித்தார்கள்
[பக்கம் 7-ன் படங்கள்]
ஆன்மீக குடும்பத்தில் வளர்க்கப்பட்டாலும், இயேசுவின் சகோதரர்கள் அவர் மரித்து உயிர்த்தெழும் வரை அவர் மீது விசுவாசம் வைக்கவில்லை
[பக்கம் 8-ன் படங்கள்]
இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரர்களாகிய யாக்கோபும் யூதாவும் சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார்கள்