அவர்கள் இடுக்கமான வாசலை தேடினார்கள்
சுமார் 550 வருடங்களுக்கு முன், கிறிஸ்தவர்கள் என உரிமைப் பாராட்டிக் கொண்ட சிறு சிறு தொகுதியினர், தற்போது செக் குடியரசு என அறியப்படுகிற பகுதியிலிருந்த ப்ராக், கெல்சிட்ஸி, வைலிமாவ், க்ளாடவி போன்ற நகரங்களிலிருந்து தங்கள் வீடுவாசல்களையெல்லாம் விட்டு புறப்பட்டார்கள். அவர்கள் வடகிழக்கு பொஹிமியாவில், கூன்வால்ட் என்ற கிராமத்திற்கு அருகே இருந்த ஒரு பள்ளத்தாக்கில் குடியேறினார்கள். அங்கே தங்களுக்கு சிறிய வீடுகளைக் கட்டிக்கொண்டார்கள், நிலத்தை உழுது பயிர் செய்தார்கள், தங்கள் பைபிள்களைப் படித்தார்கள், யூனிட்டி ஆஃப் ப்ரதரன் அல்லது லத்தீனில் யூனிட்டாஸ் ஃப்ராட்ரும் என தங்களை அழைத்துக் கொண்டார்கள்.
அங்கு குடியேறியவர்களில் எல்லா தரப்பினரும் இருந்தார்கள். விவசாயிகள், உயர்குடியில் பிறந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஏழை பணக்காரர், ஆண்கள் பெண்கள், விதவைகள் அநாதைகள் என அவர்கள் அனைவருக்கும் ஒரே விருப்பம் இருந்தது. “கடவுளிடம்தான் நாங்கள் ஜெபித்தோம், எல்லா காரியங்களிலும் அவருடைய மகத்தான சித்தம் என்ன என்பதை எங்களுக்கு வெளிப்படுத்தும்படி அவரிடம் மன்றாடினோம். அவருடைய வழிகளில் நடக்கவே விருப்பப்பட்டோம்” என அவர்கள் எழுதினார்கள். ஆம், யூனிட்டி ஆஃப் ப்ரதரன் அல்லது செக் ப்ரதரன் என அழைக்கப்பட்ட இந்த சமுதாயத்து விசுவாசிகள், ‘ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வாசலை’ தேடினார்கள். (மத்தேயு 7:13, 14) அவ்வாறு தேடியதால் அவர்கள் என்ன பைபிள் சத்தியங்களைக் கண்டுபிடித்தார்கள்? அன்றைய நம்பிக்கைகளிலிருந்து இவர்களுடைய நம்பிக்கை எப்படி வேறுபட்டிருந்தது? இவர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
வன்முறை இல்லை—இணங்கிப்போதல் இல்லை
15-ம் நூற்றாண்டின் மத்திபத்தில், பல்வேறு மத இயக்கங்கள் யூனிட்டி ஆஃப் ப்ரதரன் என்ற இந்த தொகுதி உருவாவதற்கு காரணமாய் அமைந்தன. அவற்றில் ஒன்று 12-ம் நூற்றாண்டை சேர்ந்த வால்டென்ஸ்களின் இயக்கம். ஆரம்பத்தில், மத்திய ஐரோப்பாவின் தேசிய மதமாக இருந்த ரோமன் கத்தோலிக்க மதத்திலிருந்து இந்த வால்டென்ஸ்கள் பிரிந்து வந்திருந்தார்கள். ஆனால் பின்னர், கத்தோலிக்க போதனைகளை ஓரளவு பின்பற்ற ஆரம்பித்தார்கள். செல்வாக்குமிக்க மற்றொரு இயக்கம்,
ஜான் ஹஸ்ஸை பின்பற்றிய ஹஸ்ஸைட்டுகளின் இயக்கமாகும். பெரும்பாலான செக் மக்கள் இந்த மதத்தைப் பின்பற்றினார்கள்; ஆனால் இவர்களிடையே ஒற்றுமையில்லாதிருந்தது. இதன் ஒரு பிரிவினர் சமூக பிரச்சினைகளுக்காக போராடினார்கள், மற்றொரு பிரிவினர் மதத்தின் பெயரில் அரசியல் முன்னேற்றத்துக்கே பாடுபட்டார்கள். ஆயிர வருட ஆட்சியில் நம்பிக்கை வைத்த பல தொகுதியினரும் உள்ளூரிலும் வெளியூரிலுமிருந்த பைபிள் கல்விமான்களும்கூட ப்ரதரன்களின் மீது செல்வாக்கு செலுத்தினார்கள்.
செக் பைபிள் கல்விமானும் சீர்திருத்தவாதியுமான பீட்டர் கெல்சிட்ஸ்கி (சுமார் 1390-சுமார் 1460), வால்டென்ஸ்கள், ஹஸ்ஸைட்டுகள் ஆகியோரின் போதனைகளை நன்கறிந்திருந்தார். ஹஸ்ஸைட்டுகள் வன்முறையை கையாள தொடங்கியிருந்ததால் அவர்களை விட்டு ஒதுங்கினார், வால்டென்ஸ்கள் தங்கள் போதனைகளை விட்டுக்கொடுத்து இணங்கிப் போனதால் அவர்களையும் விட்டு ஒதுங்கினார். போர் செய்வது கிறிஸ்தவர்களுக்குரியதல்ல என கண்டித்தார். எப்பேர்ப்பட்ட விளைவுகளை சந்திக்க நேர்ந்தாலும் ‘கிறிஸ்துவினுடைய பிரமாணமே’ கிறிஸ்தவர்களை கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டுமென அவர் கருதினார். (கலாத்தியர் 6:2; மத்தேயு 22:37-39) கெல்சிட்ஸ்கி 1440-ல் தன் போதனைகளை நெட் ஆஃப் த ஃபெய்த் என்ற புத்தகத்தில் எழுதி வைத்தார்.
கல்விமானாகிய கெல்சிட்ஸ்கி வாழ்ந்த அதே காலப்பகுதியை சேர்ந்த கிரெகரி என்ற இளைஞர்—ப்ராகில் வசித்தவர்—அவருடைய போதனைகளால் பெரிதும் கவரப்பட்டார்; எனவே ஹஸ்ஸைட்டுகளின் இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1458-ல் செக்கியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்த முன்னாள் ஹஸ்ஸைட்டுகளின் சிறு சிறு தொகுதியினரை தங்கள் வீடுவாசல்களை விட்டு வரும்படி சம்மதிக்க வைத்தார். கிரெகரியை பின்தொடர்ந்து கூன்வால்ட் கிராமத்திற்கு வந்தவர்களில் இவர்களும் இருந்தார்கள்; அங்கு புதிய ஒரு மத சமுதாயத்தை நிறுவினார்கள். பின்னர் செக், ஜெர்மனி ஆகிய இடங்களிலிருந்த வால்டென்ஸ்களின் தொகுதியினரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள்.
கடந்த காலத்தை கண்முன் நிறுத்துதல்
வளர்ந்து வந்த இந்தப் புதிய தொகுதியினர், 1464 முதல் 1467 வரை கூன்வால்ட் பகுதியில் அநேக பேரவை கூட்டங்களை நடத்தி, தங்கள் புதிய மத இயக்கத்தை வரையறுக்கும் பல்வேறு தீர்மானங்களை எடுத்தார்கள். இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் அநேக புத்தகங்களில் கஷ்டப்பட்டு பதிவு செய்து வைக்கப்பட்டன; இப்புத்தகங்கள், ஆக்டா யூனிடாடிஸ் ஃப்ராட்ரும் (யூனிட்டி ஆஃப் ப்ரதரனின் நடபடிகள்) என இப்போது அறியப்படுகின்றன, இவை இன்றும் உள்ளன. இப்புத்தகங்கள் ப்ரதரன்களின் நம்பிக்கைகளை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தி கடந்த காலத்தை கண்முன் நிறுத்த உதவுகின்றன. இந்தப் புத்தகங்களில் கடிதங்களும், பேச்சுக்களும், அவர்களுடைய விவாதங்களின் விவரங்களும்கூட உள்ளன.
ப்ரதரன்களின் நம்பிக்கைகளைக் குறித்து ஆக்டா இவ்வாறு சொல்கிறது: “[பைபிளை] மட்டுமே படிப்பதன் மூலமும், தியானிப்பது, மனத்தாழ்மையையும் நீடிய பொறுமையையும் காட்டுவது, சத்துருக்களை சிநேகிப்பது, மற்றவர்களுக்கு நல்லதே நினைத்து நல்லதே செய்வது, அவர்களுக்காக ஜெபிப்பது ஆகியவற்றில் நம்முடைய கர்த்தரும் பரிசுத்த அப்போஸ்தலர்களும் வைத்த முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலமும் எங்கள் தராதரங்களை ஏற்படுத்த உறுதிபூண்டிருக்கிறோம்.” ஆரம்பத்தில் இந்த ப்ரதரன்கள் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டதாகவும் இந்தப் புத்தகங்கள் காட்டுகின்றன. அவர்கள் இரண்டிரண்டு பேராக சென்றார்கள், உள்ளூர்களில் பெண்கள் வெற்றிகரமான மிஷனரிகளாக திகழ்ந்தார்கள். ப்ரதரன்கள் அரசியல் பதவிகளை ஏற்கவில்லை, உறுதிமொழி எடுக்கவில்லை, இராணுவ நடவடிக்கையில் ஈடுபடவில்லை, ஆயுதங்களை தொடவில்லை.
ஒற்றுமை குலைந்தது
சில பத்தாண்டுகளுக்குப் பிறகு யூனிட்டி ஆஃப் ப்ரதரன் இயக்கம் அதன் பெயருக்கேற்ப நடக்கவில்லை. நம்பிக்கைகளை சொல்லர்த்தமாக எந்தளவுக்கு அச்சுப்பிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் ஏற்பட்ட தகராறுகள் அதன் ஒற்றுமையை குலைத்தன. 1494-ல் மேஜர் பார்ட்டி, மைனர் பார்ட்டி என்ற இரண்டு தொகுதிகளாக ப்ரதரன்கள் பிரிந்தார்கள். ஆரம்ப கால நம்பிக்கைகளை மேஜர் பார்ட்டியினர் தணித்தார்கள்; மைனர் பார்ட்டியினரோ அரசியலுக்கும் உலகத்திற்கும் எதிரான நிலைநிற்கையில் ப்ரதரன்கள் உறுதியாக நிலைத்திருக்க வேண்டுமென பிரசங்கித்தார்கள்.—“மேஜர் பார்ட்டிக்கு என்ன ஏற்பட்டது?” என்ற பெட்டியைக் காண்க.
உதாரணமாக, மைனர் பார்ட்டியை சேர்ந்த ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இரண்டு பாதைகளின் வழியாக நடக்கிற ஆட்கள் கடவுளுடன் நெருங்கியிருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவே; ஏனெனில், எப்போதாவது, அதுவும் சிறிய சிறிய காரியங்களில் மட்டுமே அவர்கள் கடவுளுக்கு கீழ்ப்படிகிறவர்களாக இருக்கிறார்கள்; ஆனால் பெரிய காரியங்களிலோ தங்கள் மனம் போல் நடக்கிறார்கள். . . . உறுதியான உள்ளமும் நல்மனசாட்சியும் படைத்தவர்களோ ஒவ்வொரு நாளும் இடுக்கமான வாசல் வழியாக தங்கள் சிலுவையை சுமந்துகொண்டு கர்த்தராகிய கிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்கள், இப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்தான் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.”
மைனர் பார்ட்டியை சேர்ந்தவர்கள் பரிசுத்த ஆவியை கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தியாக, அவருடைய ‘விரலாக’ கருதினார்கள். பாவியான ஆதாம் எதை இழந்தானோ அதை பரிபூரண மனிதரான இயேசு தம் ஜீவனைக் கொடுத்து மீட்டதையே அவரது கிரயபலி குறித்ததாக அவர்கள் புரிந்துகொண்டார்கள். அவர்கள் இயேசுவின் தாயான மரியாளை வணங்கவில்லை. மணம் செய்யாமல் இருப்பதற்கான உறுதிமொழியை ஏற்காவிட்டாலும் விசுவாசிகள் அனைவரும் குருக்களே என்ற கொள்கையை மீண்டும் நிலைநாட்டினார்கள். சபையிலுள்ள அனைவரையும் பிரசங்க வேலையில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்தினார்கள், மனந்திரும்பாத பாவிகளை சபை நீக்கம் செய்தார்கள். அதோடு, இராணுவத்திலிருந்தும் அரசியல் காரியங்களிலிருந்தும் முற்றிலுமாக விலகியிருந்தார்கள். (“மைனர் பார்ட்டியிலிருந்த ப்ரதரன்கள் நம்பியவை” என்ற பெட்டியைக் காண்க.) மைனர் பார்ட்டி தங்களுடைய ஆக்டாவிலிருந்த தீர்மானங்களை அச்சுப்பிசகாமல் பின்பற்றியதால் தங்களை ஆரம்ப கால யூனிட்டி ஆஃப் ப்ரதரன்களின் உண்மையான வாரிசுகளாக கருதினார்கள்.
பகிரங்கமான குறைகூறுதலும் துன்புறுத்துதலும்
மேஜர் பார்ட்டி உட்பட பிற மதங்களை மைனர் பார்ட்டியினர் பகிரங்கமாக குறைகூறினார்கள். “தங்களுக்கென எந்த விசுவாசமும் இல்லாத சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் தரும்படி நீங்கள் போதிக்கிறீர்கள், இந்த விஷயத்தில் டையோனிசியஸ் என்ற பிஷப் ஆரம்பித்து வைத்த பழக்கத்தைப் பின்பற்றுகிறீர்கள். இந்த பிஷப், ஞானமற்ற சிலரின் தூண்டுதலால் குழந்தை ஞானஸ்நானத்தை வலியுறுத்தினார் . . . இதை போதகர்கள், இறையியல் வல்லுனர்கள், லூத்தர், மெலாங்தன், பூட்ஸிருஸ், கார்வின், ஐலெஷ், புல்லிங்கர், . . . மேஜர் பார்ட்டி என கிட்டத்தட்ட எல்லாருமே நம்புகிறார்கள்” என அத்தகைய மதங்களைப் பற்றி எழுதினார்கள்.
எனவே மைனர் பார்ட்டியினர் துன்புறுத்தப்பட்டார்கள், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை. 1524-ல் அதன் தலைவர்களில் ஒருவரான யான் காலிநெட்ஸ் சாட்டையால் அடிக்கப்பட்டார், நெருப்பினால் சூடுபோடப்பட்டார். பிற்பாடு, மைனர் பார்ட்டியை சேர்ந்த மூவர் கழுமரத்தில் எரிக்கப்பட்டார்கள். அதன் கடைசி தலைவர் இறந்த பிறகு மைனர் பார்ட்டி 1550 வாக்கில் மறைந்துவிட்டதாக தோன்றுகிறது.
ஆனாலும், மைனர் பார்ட்டியைச் சேர்ந்த விசுவாசிகள் இடைக்கால ஐரோப்பாவில் மதம் எனும் நிலப்பரப்பில் தங்கள் கால் தடத்தை பதித்துவிட்டுச் சென்றார்கள். உண்மைதான், மைனர் பார்ட்டியின் காலத்தின்போது ‘மெய் அறிவு’ பெருகாமல் இருந்ததால் நீண்ட கால ஆவிக்குரிய இருளை அவர்களால் நீக்க முடியவில்லை. (தானியேல் 12:4, NW) என்றாலும், இடுக்கமான வாசலைத் தேடுவதிலும் எதிர்ப்பின் மத்தியில் தொடர்ந்து அதில் நடப்பதிலும் அவர்களுக்கிருந்த தணியாத தாகம் இன்று கிறிஸ்தவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்.
[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]
1500-ம் ஆண்டு முதல் 1510-ம் ஆண்டு வரை அச்சிடப்பட்ட 60 பொஹிமிய (செக்) புத்தகங்களில் 50 புத்தகங்கள் யூனிட்டி ஆஃப் ப்ரதரன் அங்கத்தினரால் வெளியிடப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது
[பக்கம் 11-ன் பெட்டி]
மேஜர் பார்ட்டிக்கு என்ன ஏற்பட்டது?
இறுதியில் மேஜர் பார்ட்டிக்கு என்ன ஏற்பட்டது? மைனர் பார்ட்டி சுவடு தெரியாமல் மறைந்த பிறகு, மேஜர் பார்ட்டி ஒரு மத இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டது; அது யூனிட்டி ஆஃப் ப்ரதரன் என்பதாகவே அறியப்பட்டு வந்தது. கடைசியாக இந்தத் தொகுதி தன் ஆரம்ப கால நம்பிக்கைகளில் சில மாற்றங்களை செய்தது. 16-ம் நூற்றாண்டின் முடிவில் செக் பகுதியிலிருந்த லூத்தரன் பிரிவினரான யுட்ராக்விஸ்ட்களுடன்a இது கூட்டு சேர்ந்துகொண்டது. எனினும், பைபிளையும் மத புத்தகங்கள் பலவற்றையும் மொழிபெயர்த்து பிரசுரிப்பதில் ப்ரதரன்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வந்தார்கள். அவர்களுடைய ஆரம்ப கால பிரசுரங்களின் முதல் பக்கங்களில் திருநான்கெழுத்துக்கள், அதாவது கடவுளுடைய தனிப்பட்ட பெயரென்று அறியப்படும் எபிரெய நான்கெழுத்துக்கள் காணப்படுவது ஆர்வத்துக்குரிய விஷயம்.
1620-ல் செக் ராஜ்யம் வலுக்கட்டாயமாக ரோமன் கத்தோலிக்க அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் மேஜர் பார்ட்டியிலிருந்த அநேக ப்ரதரன்கள் நாட்டை விட்டு வெளியேறி பிற நாடுகளில் தங்கள் பணிகளைத் தொடர்ந்தார்கள். பின்னர் அந்தத் தொகுதி மரேவியன் சர்ச் (செக் நாடுகளில் ஒன்றாக மரேவியா இருந்தது) என அழைக்கப்பட்டது; இன்றும் அது இருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a யுட்ராக்விஸ்ட் என்ற பெயர் யுட்ராக்வீ என்ற லத்தின் வார்த்தையிலிருந்து பிறந்தது; அதற்கு “இரண்டில் ஒவ்வொருவர்” என்று அர்த்தம். நன்மை எடுக்கையில் பாமரர்களுக்கு திராட்சை ரசத்தை தர மறுத்த ரோமன் கத்தோலிக்க பாதிரிகளைப் போலல்லாமல் யுட்ரேக்விஸ்ட்கள் (ஹஸ்ஸைட்டுகளிலிருந்து பிரிந்தவர்கள்) அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் பாமரர்களுக்கும் கொடுத்தார்கள்.
[பக்கம் 12-ன் பெட்டி]
மைனர் பார்ட்டியிலிருந்த ப்ரதரன்கள் நம்பியவை
மைனர் பார்ட்டியின் சில நம்பிக்கைகளை 15-ம், 16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆக்டா யூனிடாடிஸ் ஃப்ராட்ரும் புத்தகங்களிலுள்ள பின்வரும் மேற்கோள்கள் காட்டுகின்றன. மைனர் பார்ட்டியின் தலைவர்கள் எழுதிய குறிப்புகள் முக்கியமாக மேஜர் பார்ட்டியினருக்காகவே எழுதப்பட்டவை.
திரித்துவம்: “பைபிள் முழுவதையும் நீங்கள் புரட்டிப் பார்த்தால்கூட, ஜனங்கள் கற்பனை செய்திருப்பது போல, கடவுள் ஒரு திரித்துவமாக, அதாவது தனித்தனி பெயர்களை உடைய மூன்று ஆட்களாக பிரிக்கப்பட்டிருப்பதை எங்கும் காண மாட்டீர்கள்.”
பரிசுத்த ஆவி: “கிறிஸ்துவினுடைய நீதியுள்ள செயல்களின் அடிப்படையில் விசுவாசிகளுக்குக் கடவுள் தருகிற பரிசுத்த ஆவி அவருடைய விரலாக, பரிசாக, ஆறுதலாக, அல்லது வல்லமையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியை கடவுளெனவோ ஒரு ஆளெனவோ அழைக்க வேண்டுமென பரிசுத்த வேதாகமத்தில் நாம் எங்கும் காண்பதில்லை. அப்போஸ்தலர்களுடைய போதனைகளும் அவ்வாறு கற்பிக்கவில்லை.”
குருத்துவம்: “அவர்கள் தவறாக உங்களுக்கு ‘குரு’ என்ற பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்கள்; உச்சந்தலை சிரைக்கப்படாமலும் சுகப்படுத்தும் நறுமணத் தைலமில்லாமலும் இருந்தால் நீங்கள் சாதாரண ஒரு பாமரனின் நிலைக்கு வந்துவிடுவீர்கள். கிறிஸ்தவர்கள் அனைவருமே குருமார்களாக இருக்க வேண்டுமென்பதை புனித பேதுரு பின்வருமாறு சொல்கிறார்: நீங்களோ ஆவிக்குரிய பலிகளை செலுத்தும் பரிசுத்த குருத்துவத் திருக்கூட்டம். (1 பேதுரு 2)”
முழுக்காட்டுதல்: “கர்த்தராகிய கிறிஸ்து தம் அப்போஸ்தலர்களிடம் இவ்வாறு சொன்னார்: உலகெங்கும் போய் விசுவாசிக்கின்ற எல்லா சிருஷ்டியிடமும் நற்செய்தியை அறிவியுங்கள். (மாற்கு, 16-ம் அதிகாரம்) இவற்றை செய்த பிறகே: ஞானஸ்நானம் பெறுபவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். ஆனால், தங்களுக்கென எந்த விசுவாசமும் இல்லாத சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் தரும்படி நீங்கள் போதிக்கிறீர்கள்.”
நடுநிலைமை: “இராணுவத்தில் சேர்ந்து கொலை செய்வது அல்லது ஆயுதம் தரித்து நடப்பது ஆகியவற்றை மோசமானதாகவும், அசுத்தமானதாகவும் உங்கள் ஆரம்பகால சகோதரர்கள் கருதினார்கள்; ஆனால் அவை அனைத்தும் நல்லவை என்று நீங்கள் கருதுகிறீர்கள். . . . ‘அவர் வில்லின் வல்லமையை முறித்தெறிந்தார், கேடயங்களையும் வாளையும் படைக்கலங்களையும் தகர்த்தெறிந்தார் (சங்கீதங்கள் 75); அவர்கள் என் பரிசுத்த மலையெங்கும் தீங்கு செய்யவோ கேடு விளைவிக்கவோ மாட்டார்கள், ஏனெனில் கர்த்தரின் பூமி தெய்வீக அறிவால் நிரம்பியிருக்கும் (ஏசாயா 11-ம் அதிகாரம்)’ என்ற தீர்க்கதரிசனங்களை மற்ற போதகர்களைப் போல நீங்களும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை என்றே நாங்கள் நினைக்கிறோம்.”
பிரசங்க வேலை: “பிஷப்பையும் எல்லா குருமார்களையும்விட, ஆரம்பத்தில் பெண்களே அநேகரை மனந்திரும்ப செய்திருக்கிறார்கள் என்பதை நாம் நன்கறிவோம். இப்போது குருமார்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வீடுகளில் சொகுசாக தங்கிவிட்டார்கள். எப்பேர்ப்பட்ட தவறு! உலகெங்கும் போய் எல்லா சிருஷ்டியிடமும் . . . அறிவியுங்கள்.”
[பக்கம் 10-ன் தேசப்படங்கள்]
ஜெர்மனி
போலந்து
செக்குடியரசு
பொஹிமியா
எல்ப் ஆறு
ப்ராக்
வல்டவா ஆறு
க்ளாடேவி
கெல்சிட்ஸி
கூன்வால்ட்
வைலிமாவ்
மரேவியா
டேன்யூப் ஆறு
[பக்கம் 10, 11-ன் படங்கள்]
இடது: பீட்டர் கெல்சிட்ஸ்கி; கீழே: “நெட் ஆஃப் த ஃபெய்த்” என்ற புத்தகத்தின் ஒரு பக்கம்
[பக்கம் 11-ன் படம்]
ப்ராகை சேர்ந்த கிரெகரி
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
எல்லா படங்களும்: S laskavým svolením knihovny Národního muzea v Praze, C̆esko