“இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே”
“இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: . . . இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது [என்றார்].”—மத்தேயு 24:4-6.
1. எந்த விஷயத்தில் நமக்கு அக்கறை இருக்க வேண்டும்?
உங்கள் வாழ்க்கையைக் குறித்தும் உங்கள் எதிர்காலத்தைக் குறித்தும் உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அப்படியானால், 1877-ல் சி. டி. ரஸலின் கவனத்தைக் கவர்ந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும். உவாட்ச் டவர் சொஸைட்டியை நிறுவிய ரஸல், நம் கர்த்தருடைய வருகையின் நோக்கமும் பாங்கும் (ஆங்கிலம்) என்ற நூலை எழுதினார். இந்த 64-பக்க சிற்றேடு, இயேசு திரும்பி வருவதை, அல்லது அவரது எதிர்கால வருகையைப் பற்றி ஆராய்ந்தது. (யோவான் 14:3) ஒரு சந்தர்ப்பத்தில், ஒலிவமலையில் இருந்தபோது அந்த வருகையைப் பற்றி அப்போஸ்தலர் கேட்டனர்: “இவை எப்போது சம்பவிக்கும், உம்முடைய வந்திருத்தலுக்கும் [அல்லது, “வருகைக்கும்”] இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?”—மத்தேயு 24:3, NW.
2. இயேசு முன்னறிவித்தவற்றை குறித்ததில் ஏன் இத்தனை முரண்பட்ட கருத்துக்கள்?
2 இதற்கு இயேசு கொடுத்த பதில் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது உங்களுக்குப் புரிகிறதா? அது மூன்று சுவிசேஷகங்களில் காணப்படுகிறது. பேராசிரியர் டி. எ. கார்ஸன் இவ்வாறு சொல்கிறார்: “பைபிளில், மத்தேயு 24-ம் அதிகாரமும் அதற்கு இணையான மாற்கு 13 மற்றும் லூக்கா 21-ம் அதிகாரமுமே விளக்கம் சொல்வோர் மத்தியில் அதிக முரண்பாட்டை உண்டாக்கிய அதிகாரங்களாகும்.” பின்பு இவர் தனது சொந்த அபிப்பிராயத்தை தெரிவித்தார். ஆனால் அதுவும் முரண்பட்ட மனித கருத்துக்களில் ஒன்றுதான். கடந்த அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டில், இப்படிப்பட்ட பல கருத்துக்கள் விசுவாசக் குறைவையே படம்பிடித்துக் காட்டின. சுவிசேஷங்களில் நாம் வாசிப்பவற்றை இயேசு ஒருபோதும் சொல்லவில்லை; அவர் சொன்ன விஷயங்கள் பின்னால் மாற்றியமைக்கப்பட்டன அல்லது நடக்கப்போவதாக அவர் சொன்னதெல்லாம் பலிக்கவில்லை என்று இவர்கள் கருதினார்கள். இவையெல்லாம் நுட்பப்பிழை காண்போரால் உருவாக்கப்பட்ட கருத்துக்களே. ஒரு விரிவுரையாளர், மாற்கு எழுதின சுவிசேஷத்தை ‘மஹாயான-புத்தமத தத்துவ சாஸ்திர கோணத்திலும் காண முயன்றார்’!
3. இயேசுவின் தீர்க்கதரிசனத்தை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு கருதியிருக்கிறார்கள்?
3 இவற்றிற்கு நேர்மாறாக, யெகோவாவின் சாட்சிகள் பைபிளை அதிகாரப்பூர்வமானதாயும் நம்பகமானதாயும் ஏற்றுக்கொள்கிறார்கள். இயேசு தம்முடைய மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் ஒலிவமலையில் தம்முடன் இருந்த அந்த நான்கு அப்போஸ்தலருக்கு சொன்னவையும் இதில் அடங்கும். இயேசு அங்கு கொடுத்த தீர்க்கதரிசனத்தைப் பற்றிய விளக்கத்தை சி. டி. ரஸலின் நாட்கள் முதற்கொண்டு கடவுளுடைய ஜனங்கள் படிப்படியாய் தெளிவாக புரிந்துகொண்டு வந்திருக்கிறார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றிய அவர்களுடைய கருத்தை காவற்கோபுரம் கடந்த சில ஆண்டுகளில் இன்னும் நன்றாக தெளிவாக்கியிருக்கிறது. அவற்றை நீங்கள் தெள்ளத்தெளிவாக கற்று புரிந்துகொண்டு, உங்கள் வாழ்க்கையில் அதன் பலனை காண்கிறீர்களா? a அதை நாம் மறுபடியும் ஆராயலாமா?
அந்தோ, துயர்தரும் நிறைவேற்றம் அருகில்!
4. எதிர்காலத்தைப் பற்றி இயேசுவிடம் அப்போஸ்தலர் விசாரித்ததற்கு காரணம் என்னவாய் இருக்கலாம்?
4 இயேசுவே மேசியா என்பதை அப்போஸ்தலர் அறிந்திருந்தனர். இயேசு தம்முடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் திரும்பி வருவதையும் பற்றி சொல்லவே, இதைக் கேட்ட சீஷர்கள், ‘இயேசு மரித்து நம்மை விட்டுச் சென்றுவிட்டால், மேசியா செய்யவேண்டிய மகத்தான காரியங்களை அவர் எப்படி நிறைவேற்ற முடியும்?’ என்று யோசித்திருப்பார்கள். மேலும், எருசலேமுக்கும் அதன் ஆலயத்துக்கும் வரவிருந்த ஒரு முடிவைப் பற்றியும் இயேசு பேசினார். ‘அது எப்போது சம்பவிக்கும், எப்படி சம்பவிக்கும்?’ என அப்போஸ்தலர் யோசித்திருக்கலாம். இவற்றை புரிந்துகொள்வதற்காக அப்போஸ்தலர் இவ்வாறு கேட்டார்கள்: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன?”—மாற்கு 13:4; மத்தேயு 16:21, 27, 28; 23:37–24:2.
5. இயேசு சொன்னதெல்லாம் முதல் நூற்றாண்டில் எப்படி நிறைவேறியது?
5 போர்களும் பஞ்சங்களும் கொள்ளைநோய்களும் பூமியதிர்ச்சிகளும் உண்டாகும்; கிறிஸ்தவர்களைப் பகைப்பார்கள், துன்புறுத்துவார்கள்; போலி மேசியாக்கள் எழும்புவார்கள்; ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பரவலாகப் பிரசங்கிக்கப்படும்; அதன் பின்பு முடிவு வரும் என இயேசு முன்னறிவித்தார். (மத்தேயு 24:4-14; மாற்கு 13:5-13; லூக்கா 21:8-19) இயேசு இதை பொ.ச. 33-ம் ஆண்டின் தொடக்கத்தில் சொன்னார். இதைப் பின்தொடர்ந்த ஆண்டுகளில், முன்னறிவித்த அந்தக் காரியங்கள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க முறையில் சம்பவித்தன; இதை விழிப்புள்ள அவருடைய சீஷர்கள் கண்டுகொள்ள முடிந்தது. ஆம், அப்போதைக்கு அந்த அடையாளத்தின்படியே சம்பவங்கள் நிறைவேறின; பொ.ச. 66-70-ல், அந்த யூதக் காரிய ஒழுங்குமுறை ரோமரால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை சரித்திரம் சான்றுபகருகிறது. அது எப்படி நடந்தது?
6. பொ.ச. 66-ல் ரோமருக்கும் யூதருக்கும் இடையில் என்ன ஏற்பட்டது?
6 பொ.ச. 66-ல், யூதேயாவில் அனல் பறக்கும் கோடையில், எருசலேம் ஆலயத்திற்கு அருகே ஒரு கோட்டையிலிருந்த ரோம காவலர்மீது யூத மதவெறியர் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்; தேசத்தின் மற்ற இடங்களில் வன்முறைத் தீயை கிளறிவிட்டார்கள். வரலாற்று ஆசிரியர் ஹைன்ரிச் கிரெட்ஸ், யூதர்களின் சரித்திரம் (ஆங்கிலம்) என்ற நூலில் சொல்கிறார்: “சிரியாவின் தளபதியாக ரோம படைகளின் நன்மதிப்பைக் காக்கும் கடமையுடைய செஸ்டியஸ் கேலஸ், . . . தன்னைச் சுற்றி பரவிக்கொண்டிருந்த கலகம் முன்னேறுவதைத் தடுக்காமல் சும்மா கையைக்கட்டிக் கொண்டிருக்க முடியவில்லை. அவர் தன் படைகளை ஒன்று திரட்டினார், அருகிலிருந்த சிற்றரசர்களும் தங்கள் படைகளைத் தாங்களாகவே மனமுவந்து அனுப்பினார்கள்.” 30,000 வீரர்கள் அடங்கிய இந்தப் படை எருசலேமை சுற்றி வளைத்துக்கொண்டது. யூதர்கள் சற்று போரிட்ட பின்பு, ஆலயத்திற்கு அருகிலிருந்த மதில்களுக்குப் பின்னால் தலைமறைவானார்கள். “தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் ரோமர்கள் மதில்களைத் தாக்கினார்கள். ஆனால் யூதேயரின் ஏவுகணைகளுக்கு முன் ரோமரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆறாவது நாளில்தான் ஆலயத்திற்கு எதிரில் வடதிசை மதிலின் ஒரு பாகத்தை அவர்களால் தகர்க்க முடிந்தது.”
7. பெரும்பான்மையான யூதர்களைப் போலல்லாமல் ஏன் இயேசுவின் சீஷர்களால் காரியங்களை வித்தியாசமாக பார்க்க முடிந்தது?
7 தங்களையும் தங்கள் பரிசுத்த நகரத்தையும் கடவுள் பாதுகாப்பார் என்று நீண்ட காலமாக யூதர்கள் கனவுகண்டிருந்ததால், அவர்கள் எவ்வளவு குழப்பமடைந்திருப்பார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! ஆனால், எருசலேமுக்கு அழிவு காத்திருக்கிறது என்பது இயேசுவின் சீஷர்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கப்பட்டிருந்தது. இயேசு இவ்வாறு முன்னறிவித்திருந்தார்: “உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்.” (லூக்கா 19:43, 44) அப்படியானால் பொ.ச. 66-ல் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவர்களும் மடிந்துபோவார்கள் என்று அர்த்தமாகுமா?
8. எப்படிப்பட்ட துயர சம்பவம் நடக்கும் என இயேசு முன்னறிவித்தார், ‘தெரிந்தெடுக்கப்பட்ட’ எவர்களை முன்னிட்டு அந்நாட்கள் குறுக்கப்பட்டது?
8 ஒலிவமலையில் அப்போஸ்தலருக்குப் பதில் சொல்கையில், இயேசு இவ்வாறு முன்னறிவித்தார்: “கடவுள் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் இப்படிப்பட்ட உபத்திரவம் நேரிட்டதுமில்லை, இனி நேரிடப்போவதுமில்லை. கர்த்தர் [“யெகோவா,” NW] அந்நாட்களைக் குறுக்காதிருந்தால் மாம்சமான எதுவும் தப்பிக்கொள்வதில்லை; தாம் தெரிந்தெடுத்தவர்களினிமித்தமோ அவர் அந்த நாட்களைக் குறுக்கியிருக்கிறார்.” (மாற்கு 13:19, 20, தி.மொ.; மத்தேயு 24:21, 22) ஆகவே, அந்நாட்கள் குறுக்கப்படும், ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ’ காக்கப்படுவார்கள். அவர்கள் யார்? யெகோவாவை வணங்குவதாக உரிமை பாராட்டிக்கொண்டு, ஆனால் அவருடைய குமாரனை ஏற்காமல் தள்ளிய அந்தக் கலகக்கார யூதர்கள் அல்ல. (யோவான் 19:1-7; அப்போஸ்தலர் 2:22, 23, 36) இயேசுவை மேசியாவாகவும் இரட்சகராகவும் விசுவாசித்த யூதரும் யூதரல்லாதவர்களுமே தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்களை கடவுள் தெரிந்தெடுத்து, பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே அன்று ஒரு புதிய ஆவிக்குரிய ஜனமாக, ‘தேவனுடைய இஸ்ரவேலாக’ அமைத்திருந்தார்.—கலாத்தியர் 6:16; லூக்கா 18:7; அப்போஸ்தலர் 10:34-45; 1 பேதுரு 2:9.
9, 10. ரோம தாக்குதலின் நாட்கள் எவ்வாறு ‘குறுக்கப்பட்டன,’ அதனால் விளைந்த நற்பயன் என்ன?
9 அந்நாட்கள் ‘குறுக்கப்பட்டு,’ எருசலேமிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட தெரிந்தெடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் காக்கப்பட்டார்களா? பேராசிரியர் கிரெட்ஸ் சொல்கிறார்: “வீரதீரத்தோடு துணிந்து செயல்படுகிறவர்களுக்கு எதிராக அந்தப் போராட்டத்தைத் தொடருவது நல்லதல்ல என்றும், பருவமழை தொடங்கவிருந்த அந்தச் சமயம்பார்த்து நீண்டகால போரில் ஈடுபடுவது நல்லதல்ல என்றும் [செஸ்டியஸ் கேலஸ்] கருதினார். . . . ஏனெனில் மழைகாலத்தில் படையினருக்கு வேண்டிய உணவுப்பொருட்களின் வரத்து தடையாகலாம். அதனால் பின்வாங்குவதே ஞானமானது என அவர் ஒருவேளை நினைத்திருக்கலாம்.” செஸ்டியஸ் கேலஸ் என்ன நினைத்திருந்தாலும்சரி, அந்த நகரத்திலிருந்து ரோம படை பின்வாங்கியது; துரத்திவந்த யூதர்களால் அப்படைக்கு பேரளவான இழப்பும் ஏற்பட்டது.
10 திடீரென ரோமர் பின்வாங்கியது, ‘மாம்சம்’—அதாவது, எருசலேமுக்குள் ஆபத்தில் இருந்த இயேசுவின் சீஷர்கள்—தப்பிப் பிழைப்பதற்கு இடமளித்தது. வாய்ப்பு எனும் இந்தக் கதவு திறந்தபோது, கிறிஸ்தவர்கள் அந்த இடத்தைவிட்டு ஓடினார்கள் என்று சரித்திரம் பதிவுசெய்திருக்கிறது. இது, எதிர்காலத்தை முன்னறிவதிலும், தம்முடைய வணக்கத்தார் தப்பிப் பிழைப்பதற்கு எப்படியாவது வழிசெய்வதிலும் கடவுளுக்கு இருக்கும் திறனை அழகாக எடுத்துக்காட்டுகிறது அல்லவா? ஆனால் எருசலேமிலும் யூதேயாவிலும் தங்கியிருந்த, விசுவாசமில்லாத யூதர்களுக்கு என்ன சம்பவித்தது?
விசுவாசியாத யூதர்கள் பட்ட பாடு
11. ‘இந்தச் சந்ததியைப்’ பற்றி இயேசு என்ன சொன்னார்?
11 ஆலயத்தை மையமாகக் கொண்ட தங்கள் வணக்கமுறை தொடரும் என யூதர்கள் பலர் நினைத்தார்கள். ஆனால் இயேசு சொன்னார்: ‘அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.’—மத்தேயு 24:32-35.
12, 13. “இந்தச் சந்ததி” என்று இயேசு குறிப்பிட்டதை சீஷர்கள் எப்படி புரிந்திருப்பார்கள்?
12 பொ.ச. 66-க்கு முந்திய ஆண்டுகளின்போது, பல நிகழ்ச்சிகள் அடங்கிய அந்தக் கூட்டு அடையாளத்தின் முதல் அம்சங்களில் பலவற்றை—போர்களையும் பஞ்சங்களையும், ஏன் ராஜ்ய நற்செய்தி பரவலாக பிரசங்கிக்கப்படுவதையும்கூட—கிறிஸ்தவர்கள் பார்த்திருப்பார்கள். (அப்போஸ்தலர் 11:28; கொலோசெயர் 1:23) ஆனால் முடிவு எப்போது வரும்? ‘இந்தச் சந்ததி [கிரேக்கில், ஜேநேயா (ge·ne·aʹ)] ஒழிந்துபோகாது’ என்று இயேசு சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்? அதே காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்கள் உட்பட, விசுவாசியாத கலகக்கார யூத கூட்டத்தினரை ‘பொல்லாத விபசார சந்ததி’ என இயேசு அடிக்கடி அழைத்தார். (மத்தேயு 11:16; 12:39, 45; 16:4; 17:17; 23:36) ஆகவே, ஒலிவமலையில் இருக்கையில், ‘இந்தச் சந்ததியைப்’ பற்றி அவர் மறுபடியும் பேசினபோது, சரித்திரம் முழுவதிலும் வாழ்ந்த அந்த முழு யூத குலத்தவரையும் குறிக்கவில்லை. அவரைப் பின்பற்றிய ‘தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியையும்’ குறிக்கவில்லை. (1 பேதுரு 2:9) மேலும், ஒரு காலப்பகுதியையும் குறிக்கவில்லை.
13 மாறாக, தாம் கொடுத்த அடையாளத்தின் நிறைவேற்றத்தால் பாதிக்கப்போகும் அப்போதைய கலகக்கார யூதர்களையே இயேசு மனதில் வைத்திருந்தார். லூக்கா 21:32-ல் குறிப்பிட்டுள்ள ‘இந்தச் சந்ததியை’ பற்றி பேராசிரியர் ஜோயல் பி. கிரீன் இவ்வாறு சொல்கிறார்: “மூன்றாவது சுவிசேஷத்தில், ‘இந்தச் சந்ததி’ (அதோடு சம்பந்தப்பட்ட சொற்றொடர்களும்), கடவுளுடைய நோக்கத்திற்கு முரண்பாடாய் செல்லும் ஜனங்களின் ஒரு வகுப்பினரையே எப்பொழுதும் குறிப்பிடுகிறது. . . . கடவுளுடைய சித்தத்தை ஏற்காமல் வேண்டுமென்றே பிடிவாதமாய் ஒதுக்கித்தள்ளும் ஜனங்களை [இது குறிப்பிடுகிறது.].” b
14. அந்தச் “சந்ததி” எதை அனுபவித்தது, ஆனால் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு வேறுபட்ட நிலைமை இருந்தது?
14 அந்த அடையாளம் நிறைவேறி வருவதைக் கண்ட யூத எதிரிகளான அந்தப் பொல்லாத சந்ததியார், அதைத் தொடர்ந்து வந்த முடிவையும் அனுபவித்திருப்பார்களா? (மத்தேயு 24:6, 13, 14) ஆம், அவர்கள் அனுபவித்தார்கள்! பொ.ச. 70-ல் அந்த ரோம படை, பேரரசன் வெஸ்பேஸியனின் மகன் டைட்டஸ் தலைமையில் திரும்பிவந்தது. எலிப்பொறியில் அகப்பட்டுக்கொண்டது போல மறுபடியும் அந்த நகருக்குள் சிக்கிக்கொண்ட யூதர்கள் பட்ட பாடுகள் நம்பமுடியாத அளவுக்கு மகா கொடியதாக இருந்தன. c ரோமர்கள் அந்த நகரத்தைப் பாழாக்கிப் போடுவதற்குள், ஏறக்குறைய 11,00,000 யூதர்கள் மாண்டார்கள், சுமார் 1,00,000 பேர் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்திச் செல்லப்பட்டார்கள் என கண்கண்ட சாட்சியாகிய ஃப்ளேவியஸ் ஜொஸிஃபஸ் அறிவிக்கிறார். சீக்கிரத்தில், அவர்களில் பலர் உணவின்றி வதைக்கப்படுவார்கள், அல்லது ரோம அரங்குகளில் பயங்கரமாக அழிக்கப்படுவார்கள். பொ.ச. 66-70-ல் ஏற்பட்ட அந்த உபத்திரவம், மெய்யாகவே எருசலேமும் யூத ஒழுங்குமுறையும் அதுவரை அனுபவித்த அல்லது அனுபவிக்கப்போகும் எதைப் பார்க்கிலும் மிகக் கொடியதாக இருந்தது. இயேசுவின் தீர்க்கதரிசன எச்சரிக்கைக்குச் செவிகொடுத்து, பொ.ச. 66-ல் ரோம படைகள் திரும்பிச் சென்றபின் எருசலேமை விட்டு வெளியே வந்த கிறிஸ்தவர்களின் நிலைமை எவ்வளவு வேறுபட்டதாக இருந்தது! அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களான ‘தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்’ பொ.ச. 70-ல் ‘காப்பாற்றப்பட்டார்கள்,’ அல்லது பாதுகாக்கப்பட்டார்கள்.—மத்தேயு 24:16, 22.
வரவிருக்கும் மற்றொரு நிறைவேற்றம்
15. பொ.ச. 70-க்குப் பின்பு, இயேசுவின் தீர்க்கதரிசனம் மிகப் பெரிய அளவிலும் நிறைவேறும் என்று நாம் எவ்வாறு நிச்சயமாய் இருக்கலாம்?
15 எனினும், உபத்திரவத்தைப் பற்றி இயேசு குறிப்பிட்ட அடையாளங்கள் அத்தோடு முடிந்துவிடவில்லை. அந்த நகரம் பாழாக்கப்பட்டப் பின்பு, அவர்தாமே யெகோவாவின் பெயரில் வருவார் என்று முன்பே குறிப்பிட்டிருந்தார். (மத்தேயு 23:38, 39; 24:2) ஒலிவமலையில் சொன்ன தம்முடைய தீர்க்கதரிசனத்தில் அவர் இதை மேலும் தெளிவாக்கினார். வரவிருக்கும் ‘மிகுந்த உபத்திரவத்தை’ குறிப்பிட்டதற்குப் பின், கள்ளக் கிறிஸ்துக்கள் தோன்றுவர் என்றும் எருசலேம் நீண்ட காலம் புறஜாதியாரால் மிதிக்கப்படும் என்றும் சொன்னார். (மத்தேயு 24:21, 23-28; லூக்கா 21:24) அதைவிட மற்றொரு பெரிய நிறைவேற்றம் வருமா? வரும் என்றே உண்மை சம்பவங்கள் பதிலளிக்கின்றன. (பொ.ச. 70-ல் எருசலேமின்மீது வந்த அந்த உபத்திரவத்திற்குப் பின்பு எழுதப்பட்ட) வெளிப்படுத்துதல் 6:2-8-ஐ மத்தேயு 24:6-8 உடனும், லூக்கா 21:10, 11 உடனும் நாம் ஒப்பிடுகையில், போர்களும் உணவு குறைபாடுகளும் கொள்ளைநோய்களும் அதிக அளவில் இருப்பதை நாம் காண்கிறோம். இயேசு சொன்ன வார்த்தைகளின் இந்தப் பெரிய நிறைவேற்றம், 1914-ல் முதல் உலகப் போர் திடீரென தொடங்கியதிலிருந்து நிறைவேறிவருகிறது.
16-18. இன்னும் என்ன நடக்குமென எதிர்பார்க்கிறோம்?
16 “மிகுந்த உபத்திரவம்” இனி வரப்போவதை அந்த அடையாளத்தின் தற்போதைய நிறைவேற்றம் காட்டுகிறது என்பதை யெகோவாவின் சாட்சிகள் பல வருடங்களாக போதித்திருக்கின்றனர். தற்போதைய இந்தப் பொல்லாத “சந்ததி” அந்த உபத்திரவத்தை காணும். பொ.ச. 66-ல் கேலஸ் தாக்குதல் செய்தது, எருசலேமில் அந்த உபத்திரவத்தை தொடங்கிவைத்தது போலவே, மறுபடியும் ஓர் ஆரம்ப கட்டம் (பொய் மதம் முழுவதின்மீதும் ஒரு தாக்குதல்) இருக்கும் என தெரிகிறது. d பின்பு, திட்டமாய் குறிக்கப்படாத கால இடைவெளிக்குப் பின், முடிவு வரும்—பொ.ச. 70-ல் உண்டானதற்கு ஒப்பாகவே, உலகளாவிய விதத்தில் அழிவு உண்டாகும்.
17 நமக்கு முன் இருக்கும் இந்த உபத்திரவத்தை குறிப்பிட்டு, இயேசு இவ்வாறு சொன்னார்: “அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள் [“மாரடிப்பார்கள்,” தி.மொ.].”—மத்தேயு 24:29, 30.
18 ஆகவே, “அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே” வானத்துக்குரிய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் ஏதோ ஒரு வகையில் ஏற்படும் என்று இயேசுதாமே சொல்கிறார். (ஒப்பிடுக: யோவேல் 2:28-32; 3:15.) இது, கீழ்ப்படியாத மனிதரை அதிர்ச்சியூட்டி மிகவும் நடுங்கச் செய்யுமாதலால் அவர்கள் ‘மாரடித்துப் புலம்புவார்கள்.’ “பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.” ஆனால் உண்மையான கிறிஸ்தவர்களை இது பாதிக்காது! இவர்கள், ‘தங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நிமிர்ந்துபார்த்து, தங்கள் தலைகளை உயர்த்துவார்கள்.’—லூக்கா 21:25, 26, 28.
வருகிறது நியாயத்தீர்ப்பு!
19. செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய அந்த உவமை எப்போது நிறைவேறும் என்பதை நாம் எப்படி கண்டறியலாம்?
19 மத்தேயு 24:29-31 முன்னறிவிப்பதை கவனியுங்கள்: (1) மனுஷகுமாரன் வருகிறார், (2) இந்த வருகை மிகுந்த மகிமையுடன் இருக்கும், (3) தேவதூதர்கள் அவருடன் இருப்பார்கள், (4) பூமியின் சகல கோத்திரத்தாரும் அவரைக் காண்பார்கள். செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையில் இந்த அம்சங்களை இயேசு மறுபடியும் கூறினார். (மத்தேயு 25:31-46) ஆகவே, முதலாவதாக உபத்திரவம் தொடங்கிய பின்பு, இயேசு தம் தூதர்களோடு வந்து நியாயந்தீர்ப்பதற்கு சிங்காசனத்தில் உட்காரும் காலத்தை இந்த உவமை குறிக்கிறது என்று நாம் முடிவுசெய்யலாம். (யோவான் 5:22; அப்போஸ்தலர் 17:31; ஒப்பிடுக: 1 இராஜாக்கள் 7:7; தானியேல் 7:10, 13, 14, 21, 26; மத்தேயு 19:28.) யார் நியாயந்தீர்க்கப்படுவார்கள்? இதன் விளைவு எப்படி இருக்கும்? இயேசு அவர்கள் எல்லாருக்கும் கவனம் செலுத்துவார் என்று இந்த உவமை காட்டுகிறது. அது சகல ஜனத்தாரும் பரலோக சிங்காசனத்திற்குமுன் கூட்டப்பட்டிருப்பது போல இருக்கும்.
20, 21. (அ) இயேசுவின் உவமையிலுள்ள செம்மறியாடுகளுக்கு என்ன நடக்கும்? (ஆ) வெள்ளாடுகளுக்கு என்ன நடக்கும்?
20 செம்மறியாடுகளைப் போன்ற ஆண்களும் பெண்களும், இயேசுவின் தயவுக்குரிய வலதுபுறத்தில் பிரித்து வைக்கப்படுவார்கள். ஏன்? ஏனெனில் அவருடைய சகோதரர்களுக்கு—கிறிஸ்துவின் பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்ளும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு—நன்மை செய்ய இவர்கள் தங்களது வாய்ப்புகளை பயன்படுத்தினர். (தானியேல் 7:27; எபிரெயர் 2:9-3:1) இந்த உவமைக்கு ஒப்பாக, செம்மறியாடுகளைப் போன்ற லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள், இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவாக ஒத்துழைத்து வருகிறார்கள். இதன் பலனாக, இந்தத் ‘திரள் கூட்டத்தாருக்கு,’ “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தாங்கள் தப்பிப்பிழைப்போம் என்றும், கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பரதீஸில் என்றென்றும் வாழ்வோம் என்றும் பைபிள் ஆதாரத்தையுடைய நம்பிக்கை மலர்கிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 14; 21:3, 4; யோவான் 10:16.
21 வெள்ளாடுகளைப் போன்றவர்களுக்கோ பரிதாபமான முடிவு! இயேசு வருகையில், அவர்கள் ‘மாரடித்துப் புலம்புவதாக’ மத்தேயு 24:30 விவரிக்கிறது. அவ்வாறு புலம்புவதற்குக் காரணம் இருக்கிறது. ஏனெனில் இவர்கள் ராஜ்ய நற்செய்தியை ஏற்கவில்லை, இயேசுவின் சீஷர்களை எதிர்த்தார்கள், ஒழிந்துபோகும் இந்த உலகத்தின்மீது ஆசை வைத்தார்கள். (மத்தேயு 10:16-18; 1 யோவான் 2:15-17) வெள்ளாடுகள் யார் என்பதை தீர்மானிப்பவர் இயேசுவே அன்றி பூமியிலுள்ள அவருடைய சீஷர்கள் எவரும் அல்ல. அந்த வெள்ளாடுகளைப் பற்றி இயேசு சொல்கிறார்: “இவர்கள் நித்திய அழிவுக்குச் செல்வார்கள்.”—மத்தேயு 25:46, NW.
22. இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்தின் எந்தப் பாகம் நம் கவனத்தை ஈர்க்கிறது?
22 மத்தேயு 24-ம் 25-ம் அதிகாரங்களில் உள்ள தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்வதில் நாம் படிப்படியாக முன்னேறியிருப்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. எனினும், நம்முடைய விசேஷ கவனத்தை ஈர்க்கும் இயேசுவினுடைய தீர்க்கதரிசனத்தின் ஒரு பாகம் இருக்கிறது. அதுதான் ‘பாழாக்குகிற அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பது.’ இந்த விஷயத்தில் பகுத்தறிவைப் பயன்படுத்தும்படியும், நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாக இருக்கும்படியும் இயேசு ஊக்கமூட்டினார். (மத்தேயு 24:15, 16) இந்த ‘அருவருப்பு’ எது? அது எப்போது பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கிறது? நம்முடைய தற்போதைய மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகள் இதில் எவ்வாறு உட்படுகின்றன? பின்வரும் கட்டுரை இதை கலந்தாராயும்.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1994; அக்டோபர் 15, 1995; நவம்பர் 1, 1995; ஆகஸ்ட் 15, 1996 ஆகிய வெளியீடுகளில் வந்த படிப்பு கட்டுரைகளைக் காண்க.
b பிரிட்டிஷ் அறிஞர் ஜி. ஆர். பீஸ்லி மரீ குறிப்பிடுகிறார்: “ ‘இந்தச் சந்ததி’ என்ற இச்சொற்றொடரை விளக்குவதில் எந்தச் சிக்கலும் ஏற்பட அவசியமில்லை. முந்தைய கால கிரேக்கில் ஜேநேயா என்பது, பிறப்பு, வாரிசு என்ற அர்த்தத்தில் இனத்தைக் குறித்தது; . . . [கிரேக்க செப்டுவஜின்ட்டில்] டார் என்ற எபிரெய பதத்தை மொழிபெயர்க்கையில், வயது, மனிதவர்க்கத்தின் வயது, அல்லது ஒரே காலப்பகுதியில் வாழ்பவர்களைக் குறிப்பிட்டுக் காட்டும் சந்ததியை அர்த்தப்படுத்தியது. . . . இயேசு சொன்ன இந்தப் பதத்திலோ, பெரும்பாலும் இரண்டு விஷயங்கள் அடங்கியிருப்பதாக தோன்றுகிறது; ஒன்று, அவர் வாழ்ந்த காலத்து மக்களைக் குறிப்பிடுவது; மற்றொன்று, மறைமுகமான கண்டனத்தைக் குறிப்பிடுவது.”
c ரோமர்கள், சில சமயங்களில் 500 கைதிகளைக்கூட ஒரே நாளில் கழுமரத்தில் அறைந்தார்கள் என யூதர்களின் சரித்திரம் என்ற நூலில் பேராசிரியர் கிரெட்ஸ் சொல்கிறார். சிறைபிடிக்கப்பட்ட மற்ற யூதர்களுடைய கைகளை வெட்டி, பின்பு நகரத்திற்குள்ளேயே திரும்ப அனுப்பி வைத்தார்கள். அங்கே இருந்த நிலைமை என்ன? “பணத்திற்கு மதிப்பில்லை; ஏனெனில் பணமிருந்தாலும் உணவுப்பொருள் கிடைக்கவில்லை. மிக அருவருப்பூட்டி குமட்டல் உண்டாக்கும் உணவுக்காக, ஒரு கைப்பிடி வைக்கோலுக்காக, பதனிடப்பட்ட ஒரு துண்டு தோலுக்காக, அல்லது நாய்களுக்குப் போடும் கழிவுப் பொருட்களுக்காக, வீதிகளில் ஆண்கள் மூர்க்கமாய் சண்டை போட்டார்கள். . . . அடக்கம் செய்யப்படாத பிணங்கள் குவிந்துகொண்டே இருந்ததால் அந்தப் புழுக்கமான கோடைகாலத்தில் வீசிய காற்று கொள்ளைநோயை பரப்பியது; திரளான ஜனங்கள் நோய்க்கும் பஞ்சத்திற்கும் பட்டயத்திற்கும் பலியானார்கள்.”
d எதிர்கால உபத்திரவத்தைப் பற்றிய இந்த அம்சத்தை அடுத்த கட்டுரை கலந்தாராயும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ முதல் நூற்றாண்டில் மத்தேயு 24:4-14 எவ்வாறு நிறைவேறியது?
◻ மத்தேயு 24:21, 22-ல் முன்னறிவித்தபடி, அப்போஸ்தலரின் காலத்தில், நாட்கள் எவ்வாறு குறுக்கப்பட்டு மாம்சம் பாதுகாக்கப்பட்டது?
◻ மத்தேயு 24:34-ல் சொல்லப்பட்டுள்ள அந்தச் ‘சந்ததி’ எதைக் குறிப்பிட்டுக் காட்டியது?
◻ ஒலிவமலையில் கொடுக்கப்பட்ட அந்தத் தீர்க்கதரிசனம், மீண்டும் பெரிய அளவிலும் நிறைவேறும் என்று நமக்கு எப்படி தெரியும்?
◻ செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய அந்த உவமை எப்போது நிறைவேறும், எப்படி நிறைவேறும்?
[பக்கம் 12-ன் படம்]
எருசலேமின் அழிவிலிருந்து கொள்ளைப் பொருட்களை எடுத்துச் செல்வதை சித்தரித்துக் காட்டும் ரோம டைட்டஸ் வளைவு
[படத்திற்கான நன்றி]
Soprintendenza Archeologica di Roma