‘நீர் வந்திருப்பதற்கு அடையாளம் என்ன?’
“இவை எப்பொழுது சம்பவிக்கும், நீர் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?”—மத்தேயு 24:3, NW.
1, 2. மக்கள் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்று எது காண்பிக்கிறது?
பெரும்பாலான மக்கள் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். நீங்கள் அப்படி இருக்கிறீர்களா? பேராசிரியர் ஆல்வன் டாஃப்லர், எதிர்கால திகில் (Future Shock) என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டார், “எதிர்காலத்தைப் பற்றிய ஆய்வுக்காக அர்ப்பணித்திருக்கும் அமைப்புகள் திடீரென பெருகியிருக்கின்றன.” அவர் தொடர்ந்து சொன்னார்: ‘எதிர்கால சூழ்நிலைக்குத் தக்கபடி, தீவிர ஆய்வை மேற்கொள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் உருவாகுதல்; இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இடங்களில் எதிர்காலத்தைச் சொல்லும் பத்திரிகைகளின் தோற்றம்; எதிர்காலத்தைக் கணிப்பதில் பல்கலைக்கழக படிப்புப்பிரிவுகள் பரவுதல் ஆகியவற்றை நாம் கண்டுவருகிறோம்.’ டாஃப்லர் இறுதியாகச் சொன்னார்: “நிச்சயமாக, எதிர்காலத்தை எந்தவித முழுமையான அர்த்தத்திலும் யாருமே ‘அறிய’ முடியாது.”
2 வரப்போகிற காரியங்களின் அடையாளங்கள் (Signs of Things to Come) என்ற புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “கைரேகை ஜோசியம், பளிங்குக்கல் ஜோசியம், சோதிடவியல், சீட்டுக்கட்டு ஜோசியம், ஈ ஜிங் இவையெல்லாம் நம்முடைய குறிப்பான சமீப எதிர்காலம் எதைக் கொண்டுவருமென ஒருவித கருத்தை நமக்குத் தரும் குறைந்த அல்லது அதிக சிக்கலான முறைகளாகும்.” ஆனால் மனித முறைகளை நாடித்தேடுவதைவிட உறுதிசெய்யப்பட்ட ஊற்றுமூலமாகிய யெகோவாவை நோக்கியிருப்பது நமக்கு மேலானது.
3. எதிர்காலத்தைப் பற்றிய அறிவிற்காகக் கடவுளை சார்ந்திருத்தல் ஏன் சரியானது?
3 அந்த உண்மைக் கடவுள் இவ்வாறு அறிவித்திருக்கிறார்: “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும்.” (ஏசாயா 14:24, 27; 42:9) ஆம், என்ன நடக்கும் என்பதைப் பற்றி மனிதகுலத்திற்கு, ஆலோசனைக்கூற முடிந்தவராக யெகோவா இருக்கிறார். பெரும்பாலும் அவர் மனித சார்புப் பேச்சாளர்கள்மூலம் அவ்வாறு செய்கிறார். இந்தத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் எழுதினார்: “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”—ஆமோஸ் 3:7, 8; 2 பேதுரு 1:20, 21.
4, 5. (அ) எதிர்காலத்தைக் குறித்ததில் இயேசு ஏன் உதவியாக இருக்கமுடியும்? (ஆ) என்ன கூட்டுத் தகவலை அவருடைய அப்போஸ்தலர் கேட்டார்கள்?
4 இயேசு கிறிஸ்து, கடவுளுடைய பிரதான தீர்க்கதரிசியாக இருந்தார். (எபிரெயர் 1:1, 2) இயேசுவின் முக்கியமான தீர்க்கதரிசனங்களில் ஒன்றிற்கு நாம் கவனத்தைத் திருப்பலாம். இது நம்மைச் சுற்றி இப்பொழுது நடந்துகொண்டிருக்கிற காரியங்களை முன்னறிவிக்கிறது. தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை முடிவடைந்து, ஒரு பூமிக்குரிய பரதீஸால் இதைக் கடவுள் மாற்றீடுசெய்யும்போது சீக்கிரத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய உட்பார்வையையும் இந்தத் தீர்க்கதரிசனம் நமக்குக் கொடுக்கிறது.
5 இயேசு, தாம் ஒரு தீர்க்கதரிசி என்பதை நிரூபித்தார். (மாற்கு 6:4; லூக்கா 13:33; 24:19; யோவான் 4:19; 6:14; 9:17) இதனால் எருசலேமைப் பார்வையிடும் வகையில் அமைந்திருந்த ஒலிவ மலையின்மேல் அவரோடு உட்கார்ந்திருந்த அப்போஸ்தலர், ஏன் நம்பிக்கையோடு எதிர்காலத்தைப் பற்றி அவரிடம் பின்வருமாறு கேட்கமுடிந்தது என்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது: “இவை எப்பொழுது சம்பவிக்கும், நீர் வந்திருப்பதற்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்னவாயிருக்கும்?”—மத்தேயு 24:3, NW; மாற்கு 13:4.
6. மத்தேயு 24, மாற்கு 13, மேலும் லூக்கா 21 ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பு என்ன; நம்மை உண்மையில் அக்கறைகொள்ள செய்ய வேண்டிய கேள்வி என்ன?
6 அவர்களுடைய கேள்வியையும் இயேசுவின் பதிலையும் நீங்கள் மத்தேயு அதிகாரம் 24, மாற்கு அதிகாரம் 13, லூக்கா அதிகாரம் 21-ல் காணலாம்.a பல அம்சங்களில் பதிவுகள் பூர்த்திசெய்வதாக இருந்தாலும், அவை ஒன்றே அல்ல. எடுத்துக்காட்டாக, [புதிய உலக மொழிபெயர்ப்பின்படி] லூக்கா மட்டுமே, ‘அநேக இடங்களில் கொள்ளைநோய்களும் உண்டாகும்’ என்று சொல்கிறார். (லூக்கா 21:10, 11; மத்தேயு 24:7; மாற்கு 13:8) நியாயமாகவே, நாம் இவ்வாறு கேட்டுக்கொள்ளவேண்டும், இயேசு தாம் சொன்னதைக் கேட்டவர்களின் வாழ்நாளுக்குள் மட்டுமே நடக்கும் சம்பவங்களைப் பற்றி முன்னறிவித்துக் கொண்டிருந்தாரா, அல்லது நம் காலத்தையும் நமக்கு எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்பதையும் உட்படுத்தியிருந்தாரா?
அப்போஸ்தலர் அறிய விரும்பினர்
7. குறிப்பாக எதைப் பற்றி அப்போஸ்தலர் கேட்டார்கள், ஆனால் இயேசுவினுடைய பதிலின் நோக்கம் என்னவாக இருந்தது?
7 இயேசு, தாம் கொல்லப்படுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்பு, யூதர்களின் தலைநகரமான எருசலேமைக் கடவுள் நிராகரித்துவிட்டார் என்று அறிவித்தார். நகரமும் அதன் மகத்தான ஆலயமும் அழிக்கப்படும். அப்போது, ‘இயேசுவின் வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவிற்கும் ஓர் அடையாளத்தை’ சில அப்போஸ்தலர் கேட்டார்கள். (மத்தேயு 23:37–24:3) சந்தேகமின்றி, அவர்கள் யூத ஒழுங்கையும் எருசலேமையுமே முக்கியமாக மனதில்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், முன்னால் என்ன இருந்தது என்பதன் நோக்கத்தைப் புரியாதவர்களாக இருந்தனர். ஆனால், அவர்களுக்குப் பதில்கொடுக்கும்போது, ரோமர்கள் எருசலேமை அழித்த பொ.ச. 70-லும் அந்த ஆண்டு வரையிலும் நடந்ததற்கு அப்பால் உள்ளதை இயேசு கவனத்தில் கொண்டிருந்தார்.—லூக்கா 19:11; அப்போஸ்தலர் 1:6, 7.
8. இயேசு முன்னறிவித்த சம்பவங்களில் சில யாவை?
8 மூன்று சுவிசேஷப் பதிவுகளில் நீங்கள் வாசிப்பதுபோல, ஜனத்திற்கு விரோதமாக ஜனமும் ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்புவது, பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள் அச்சுறுத்தும் காட்சிகள், வான அடையாளங்கள் ஆகியவற்றைப் பற்றி இயேசு பேசினார். இயேசு அந்த அடையாளத்தைக் கொடுத்ததற்கும் (பொ.ச. 33), எருசலேம் அழிக்கப்பட்டதற்கும் (பொ.ச. 66-70) இடைப்பட்ட ஆண்டுகளில் பொய்த் தீர்க்கதரிசிகளும் பொய்க் கிறிஸ்துக்களும் தோன்றுவார்கள். இயேசுவின் செய்தியைப் பிரசங்கிக்கும் கிறிஸ்தவர்களை யூதர்கள் துன்புறுத்துவார்கள்.
9. பொ.ச. முதல் நூற்றாண்டில் இயேசுவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேற்றத்தை அடைந்தது?
9 வரலாற்று ஆசிரியர் ஃபிளேவியஸ் ஜொஸிஃபஸ்-ம்கூட உறுதிப்படுத்துகிறபடி, அடையாளத்தின் இந்த அம்சங்கள் உண்மையில் நடந்தன. ரோமர்கள் தாக்குவதற்கு முன்பேயே, பொய் மேசியாக்கள் கலகத்தனத்தை ஏவிவிட்டனர் என்று அவர் எழுதுகிறார். யூதேயாவிலும், மற்ற இடங்களிலும் பயங்கரமான பூமியதிர்ச்சிகள் இருந்தன. ரோமப் பேரரசின் பல பகுதிகளில் யுத்தங்கள் ஆரம்பித்தன. பெரிய பஞ்சங்கள் இருந்தனவா? ஆம், நிச்சயமாகவே இருந்தன. (அப்போஸ்தலர் 11:27-30-ஐ ஒப்பிடவும்.) ராஜ்ய பிரசங்கவேலையைப் பற்றி என்ன? பொ.ச. 60 அல்லது 61-க்குள், கொலோசெயர் புத்தகம் எழுதப்பட்டபோது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய “சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கை,” ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பரவலாக அறியப்பட்டிருந்தது.b—கொலோசெயர் 1:22.
“அப்போது” முடிவு
10. டோட்டே என்ற கிரேக்க வார்த்தையைப் பற்றி நாம் ஏன் அக்கறைகொள்ள வேண்டும், அதன் உட்பொருள் என்ன?
10 சில அம்சங்களில், எதிர்கால சம்பவங்களை இயேசு வரிசையில் நிகழ்வதாக முன்னுரைத்தார். அவர் சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் . . . பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” ஆங்கிலப் பைபிள்கள் “அப்போது” (then) என்ற வார்த்தையை, “எனவே,” அல்லது “ஆனால்,” போன்ற எளிய அர்த்தத்தில் அடிக்கடி பயன்படுத்துகின்றன. (மாற்கு 4:15, 17; 13:23) இருந்தபோதிலும் மத்தேயு 24:14-ல், “அப்போது” என்பது கிரேக்க வினையடைச்சொல் டோட்டே (Tovy) என்பதன் அடிப்படையில் இருக்கிறது.c “காலத்தில் அடுத்ததாக எது நடக்கப்போகிறது என்பதை அறிமுகப்படுத்துவதற்கு,” அல்லது “அடுத்து நடக்கப்போகும் ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்துவதற்கு” டோட்டே என்ற “காலத்தின் சுட்டு வினையடைச்சொல்,” பயன்படுத்தப்பட்டதாக கிரேக்க மொழி வல்லுநர்கள் விளக்குகின்றனர். இதன்படி, இயேசு, ராஜ்யத்தைப் பற்றிய பிரசங்க வேலை நடக்கும் என்று முன்னறிவித்து, அப்போது (‘அதற்குப் பின்பு,’ அல்லது ‘அடுத்தப்படியாக’) “முடிவு” வரும் என்றார். எந்த முடிவு?
11. எருசலேமின் அழிவுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்த சம்பவங்களின்மீது இயேசு எப்படிக் கவனம்செலுத்தினார்?
11 இயேசுவுடைய தீர்க்கதரிசனத்தின் ஒரு நிறைவேற்றம், யூத காரிய ஒழுங்குமுறையின் முடிவிற்கு வழிநடத்தும் சம்பவங்களில் காணப்படலாம். முப்பது ஆண்டுக்காலத்தில், இயேசு முன்னறிவித்த யுத்தங்கள், பூமியதிர்ச்சிகள், பஞ்சங்கள் போன்றவை நடந்தன. எனினும், முடிவு வாசற்படிக்கு மிக அருகில் இருந்தபோது, மத்தேயு 24:15, மாற்கு 13:14, மேலும் லூக்கா 21:20 ஆகியவற்றிலிருந்து தொடங்கி, சீக்கிரத்தில் வந்திருக்கும் அழிவுடன் தொடர்புடையதாயிருந்த சம்பவங்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம்.—அட்டவணையில் தனிப்பட்ட புள்ளிக்கோடிடப்பட்ட வரிகளைக் கவனியுங்கள்.
12. மத்தேயு 24:15-ன் நிறைவேற்றத்தில் ரோமப் படைகள் எவ்வாறு உட்பட்டிருந்தன?
12 பொ.ச. 66-ல் யூத புரட்சிக்குப் பிரதிபலிப்பாக, செஸ்டியஸ் காலஸின் தலைமையில் ரோமர்கள் எருசலேமிற்கு எதிராக அணிவகுத்து வந்து, யூதர்கள் புனிதமானது என்று கருதின இந்த நகரத்தை முற்றுகையிட்டனர். (மத்தேயு 5:35) யூதர்களின் பதில் தாக்குதல்கள் இருந்தபோதிலும், ரோமர்கள் நகருக்குள் வலுக்கட்டாயமாகப் புகுந்தனர். இயேசு மத்தேயு 24:15-லும், மாற்கு 13:14-லும் முன்னறிவித்ததற்கு இசைவாக, இந்த வகையில் அவர்கள் “பரிசுத்த ஸ்தலத்தில் நிற்க” ஆரம்பித்தனர். பின்பு, ஓர் ஆச்சரியப்படுத்தும் சம்பவம் நடந்தது. ரோமர்கள் நகரை முற்றுகையிட்டிருந்த போதிலும், அவர்கள் திடீரென்று பின்வாங்கிப் போய்விட்டனர். கிறிஸ்தவர்கள் உடனே இயேசுவின் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தைப் புரிந்துகொண்டனர். அந்தப் பின்வாங்கிப்போதல் யூதேயாவிலிருந்து யோர்தான் வழியாய் மலைகளுக்கு ஓடிப்போக அவர்களை அனுமதித்தது. அவர்கள் அவ்வாறு செய்தனர் என்று வரலாறு சொல்கிறது.
13. தப்பி ஓடும்படி இயேசு கொடுத்த எச்சரிக்கையைக் கிறிஸ்தவர்கள் ஏன் பின்பற்ற முடிந்தது?
13 ஆனால், ரோமர்கள் எருசலேமைச் சுற்றிலுமிருந்து திரும்பிப் போயிருக்கையில், எவரேனும் ஏன் தப்பி ஓடிப்போகவேண்டும்? ஏனென்றால், நடந்த சம்பவம் ‘எருசலேமின் அழிவு சமீபமாயிற்றென்பதை’ நிரூபித்ததாக இயேசுவின் வார்த்தைகள் காண்பித்தன. (லூக்கா 21:20) ஆம், அழிவு. ‘உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திருந்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மகா உபத்திரவத்தை’ அவர் முன்னறிவித்தார். ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகள் கழிந்தபின்பு, பொ.ச. 70-ல், படைத்தளபதி டைட்டஸ் தலைமையில் ரோமப் படைகளினால் எருசலேம் ஒரு ‘மகா உபத்திரவத்தை’ நிச்சயமாகவே அனுபவித்தது. (மத்தேயு 24:21, NW; மாற்கு 13:19, NW) எனினும், இயேசு இதை முன்போ பின்போ சம்பவித்த எந்த உபத்திரவத்தையும்விட பெரிய உபத்திரவம் என்று ஏன் விளக்கவேண்டும்?
14. பொ.ச. 70-ல் எருசலேமுக்கு நடந்த காரியம், இதுவரைக்கும் சம்பவித்திராததும் இனிமேலும் சம்பவியாததுமான ‘மகா உபத்திரவமாக’ இருந்தது என்று ஏன் நாம் சொல்லமுடியும்?
14 பொ.ச.மு. 607-ல் எருசலேம் பாபிலோனியர்களால் பாழாக்கப்பட்டிருந்தது. நம்முடைய தற்போதைய நூற்றாண்டில் அந்த நகரம் கொடூரமான சண்டைகளை எதிர்ப்பட்டிருக்கிறது. ஆனாலும், பொ.ச. 70-ல் நடந்தது விசேஷித்த வகையில் ஒரு மகா உபத்திரவமாக இருந்தது. சுமார் ஐந்து மாத படையெடுப்பில், டைட்டஸின் போர்வீரர்கள் யூதர்களைத் தோற்கடித்தனர். அவர்கள் ஏறக்குறைய 11,00,000 பேரைக் கொன்றனர். கிட்டத்தட்ட 1,00,000 பேரைச் சிறைப்படுத்தினர். மேலும் ரோமர்கள் எருசலேமை தகர்த்தழித்தனர். முன்பு அங்கீகரிக்கப்பட்டிருந்த, ஆலயத்தை மையமாகக் கொண்டிருந்த யூதர்களின் வணக்கமுறை நிரந்தரமாக முடிவுற்றது என்பதை இது நிரூபித்தது. (எபிரெயர் 1:2) ஆம், பொ.ச. 70-ன் நிகழ்ச்சிகள் சரியாகவே, ‘உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் [அந்த நகரில், தேசத்தில், ஒழுங்குமுறையில்] சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான ஓர் உபத்திரவம்’ என்று குறிப்பிடப்படலாம்.—மத்தேயு 24:21.d
தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டபடி, அதிகம் பின்தொடர இருந்தது
15. (அ) எருசலேமின் உபத்திரவத்திற்குப் பின்பு எப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்க இருந்தன என்று இயேசு முன்னறிவித்தார்? (ஆ) மத்தேயு 24:23-28-ஐக் கருத்தில்கொள்கையில், இயேசுவின் தீர்க்கதரிசனத்துடைய நிறைவேற்றத்தைப் பற்றி நாம் என்ன தீர்மானிக்கவேண்டும்?
15 எனினும், இயேசு தம்முடைய முன்னறிவிப்பை முதல் நூற்றாண்டிலிருந்த உபத்திரவத்தோடு மட்டுப்படுத்தவில்லை. அதிகம் அந்த உபத்திரவத்தைப் பின்தொடர இருந்ததாகப் பைபிள் காண்பிக்கிறது. இது மத்தேயு 24:23, மாற்கு 13:21-ல் டோட்டே அல்லது “அப்போது,” என்று பயன்படுத்தப்படுவதால் குறிக்கப்படுகிறது. பொ.ச. 70-ஐப் பின்தொடர்ந்த காலப்பகுதியில் என்ன நடந்திருக்கும்? யூத ஒழுங்குமுறையின்மீதான அந்த உபத்திரவத்திற்குப் பிறகு, அநேகப் பொய்க் கிறிஸ்துகளும், தீர்க்கதரிசிகளும் தோன்றுவர். (மாற்கு 13:6-ஐ 13:21-23-உடன் ஒப்பிடுக.) அவர்கள், ஆவிக்குரிய காட்சியைத் தெளிவாய்க் கொண்டிருந்து, கிறிஸ்துவின் ‘வந்திருத்தலை’ உண்மை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களைத் தவறாக வழிநடத்த முடியவில்லை என்றாலும், பொ.ச. 70-ல் எருசலேமின் அழிவிலிருந்து நூற்றாண்டுகளினூடே அப்படிப்பட்ட தனிப்பட்டவர்கள் தோன்றியிருக்கிறார்கள் என்று வரலாறு உறுதிசெய்கிறது. (மத்தேயு 24:27, 28) இருந்தபோதிலும், பொ.ச. 70-ன் மகா உபத்திரவத்திற்குப் பின் நடந்த இந்தச் சம்பவங்கள், இயேசு அந்த உபத்திரவத்திற்கும் அப்பால் நோக்கிக்கொண்டிருந்தார் என்ற ஒரு குறிப்பை உருவாக்குகின்றன. அந்த உபத்திரவம் ஓர் ஆரம்ப நிறைவேற்றமாகத்தான் இருந்தது.
16. லூக்கா 21:24, இயேசுவின் தீர்க்கதரிசனத்திற்கு என்ன அம்சத்தைக் கூட்டுகிறது, இது என்ன முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது?
16 மத்தேயு 24:15-28, மாற்கு 13:14-23 ஆகியவற்றை, நாம் லூக்கா 21:20-24-உடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இயேசுவின் முன்னறிவிப்பு எருசலேமின் அழிவிற்கு அப்பால் நீடித்தது என்பதற்கு இரண்டாவது குறிப்பைக் காணலாம். லூக்கா மட்டுமே கொள்ளைநோய்களைக் குறிப்பிட்டிருந்தார் என்பதை நினைவில்கொள்ளுங்கள். இதைப்போலவே, அவர் மட்டுமே இயேசுவின் தீர்க்கதரிசனத்தினுடைய இந்தப் பாகத்தை இயேசுவின் பின்வரும் வார்த்தைகளுடன் முடிவிற்குக் கொண்டுவந்தார்: “அந்நிய தேசங்களின் நியமிக்கப்பட்ட காலங்கள் [“புறஜாதியாரின் காலங்கள்,” கிங் ஜேம்ஸ் வெர்ஷன்] நிறைவேறும்வரைக்கும் எருசலேம் அந்நிய தேசத்தினரால் மிதிக்கப்படும்.”e (லூக்கா 21:24, NW) பொ.ச.மு. 607-ல் யூதர்களின் கடைசி ராஜாவைப் பாபிலோனியர்கள் நீக்கினர். அதற்குப்பின்பு, கடவுளின் ராஜ்யத்தைப் பிரதிநிதித்துவம்செய்த எருசலேம் மிதிக்கப்பட்டது. (2 இராஜாக்கள் 25:1-26; 1 நாளாகமம் 29:23; எசேக்கியேல் 21:25-27) கடவுள் ஒரு ராஜ்யத்தை மறுபடியும் ஸ்தாபித்த அந்த நேரம் வரும்வரை, எதிர்காலத்தில் அந்த நிலை தொடர்ந்திருக்கும் என லூக்கா 21:24-ல் இயேசு குறிப்பிட்டுக் காண்பித்தார்.
17. இயேசுவின் தீர்க்கதரிசனம் நெடுங்கால எதிர்காலத்தில் நிறைவேற இருந்தது என்பதற்கு என்ன மூன்றாவது குறிப்பை நாம் கொண்டிருக்கிறோம்?
17 ஒரு நெடுங்கால எதிர்கால நிறைவேற்றத்தையும் இயேசு குறிப்பிட்டுக்கொண்டிருந்தார் என்பதற்கு ஒரு மூன்றாவது குறிப்பு இங்கு இருக்கிறது: வேதவாக்கியங்களின்படி, மேசியா மரித்து, உயிர்த்தெழுப்பப்படவேண்டும். அதற்குப் பின்பு, பிதா அவரை ஆட்சியில் வைக்கும்வரை, அவர் கடவுளுடைய வலதுபக்கத்தில் உட்காருவார். (சங்கீதம் 110:1, 2) இயேசு தம்முடைய பிதாவின் வலதுபக்கத்தில் உட்கார இருப்பதைக் குறிப்பிட்டிருந்தார். (மாற்கு 14:62) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, யெகோவாவின் வலது பக்கத்தில் ராஜாவாகவும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுபவராகவும் இருக்கப்போகும் காலத்திற்காகக் காத்திருந்தார் என்று அப்போஸ்தலன் பவுல் நிச்சயப்படுத்தினார்.—ரோமர் 8:34; கொலோசெயர் 3:1; எபிரெயர் 10:12, 13.
18, 19. சுவிசேஷங்களில் உள்ள இணையான தீர்க்கதரிசனத்துடன் வெளிப்படுத்துதல் 6:2-8 என்ன தொடர்பைக் கொண்டிருக்கிறது?
18 காரிய ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டுக்கும் அப்பால் பொருந்துகிறதென்பதற்கு நான்காவதும் முடிவானதுமான குறிப்புக்கு, வெளிப்படுத்துதல் 6-ஆம் அதிகாரத்திற்கு நாம் கவனத்தைத் திருப்பலாம். பொ.ச. 70-க்குப் பல பத்தாண்டுகளுக்குப் பின்பு எழுதுபவராய், அப்போஸ்தலனாகிய யோவான், சுறுசுறுப்பான குதிரை வீரர்களின் ஒரு கவனத்தை ஈர்க்கும் காட்சியை வர்ணித்தார். (வெளிப்படுத்துதல் 6:2-8) ‘கர்த்தருடைய நாளுக்குள்’—அவருடைய வந்திருத்தலின் நாளுக்குள்—செல்லும் இந்தத் தீர்க்கதரிசன காட்சி, குறிப்பிடத்தக்க யுத்தம் (வசனம் 4), பரவலாகப் பரவியிருக்கும் உணவு பற்றாக்குறை (வசனங்கள் 5, 6), “சாவுக்கேதுவான கொள்ளைநோய்கள்” (வசனம் 8) ஆகியவற்றின் காலமாக நம்முடைய 20-ம் நூற்றாண்டை அடையாளப்படுத்துகிறது. தெளிவாகவே இது, சுவிசேஷங்களில் இயேசு என்ன சொன்னாரோ அவற்றிற்கு இணையாக இருக்கிறது. மேலும் அவருடைய தீர்க்கதரிசனம், இந்த ‘கர்த்தருடைய நாளில்’ ஒரு பெரிய நிறைவேற்றத்தைக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது.—வெளிப்படுத்துதல் 1:10.
19 1914-ல் முதல் உலக யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து, மத்தேயு 24:7-14, வெளிப்படுத்துதல் 6:2-8 ஆகிய பகுதிகளில் முன்னறிவிக்கப்பட்டுள்ள கூட்டு அடையாளம் வெளிப்பட்டிருக்கிறது என தகவலறிந்த ஜனங்கள் ஒத்துக்கொள்கிறார்கள். மேலும் இயேசுவின் தீர்க்கதரிசனம் கொடூரமான யுத்தங்களாலும், பாழாக்கும் பூமியதிர்ச்சிகளாலும், துயரந்தரும் பஞ்சங்களாலும், பரவலாகப் பரவிவரும் நோய்களாலும் வெளிப்படையாகச் சான்றளிக்கப்பட்டதுபோல், இது இப்பொழுது அதனுடைய இரண்டாவது மற்றும் பெரியளவு நிறைவேற்றத்தை அடைந்துகொண்டிருப்பதாக யெகோவாவின் சாட்சிகள் உலகமெங்கும் அறிவித்திருக்கிறார்கள். பரவலாகப் பரவிவரும் நோயைப் பற்றி ஐ.மா.செய்தி & உலக அறிக்கை (U.S.News & World Report) (ஜூலை 27, 1992) இவ்வாறு சொன்னது: “எய்ட்ஸ் கொள்ளைநோய் . . . லட்சக்கணக்கான பலியாட்களை அவர்களின் மரணத்திற்கு வழிநடத்துகிறது. இது வரலாற்றிலேயே மிக அதிகமான செலவையும் பேரழிவையும் தரும் கொள்ளைநோயாகச் சீக்கிரத்தில் ஆகிவிடக்கூடும். பிளாக் டெத் என்ற கொள்ளைநோய், ஏறக்குறைய 2.5 கோடி பாதிக்கப்பட்ட மக்களை 14-ம் நூற்றாண்டில் கொன்றது. ஆனால் எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமியாகிய ஹெச்ஐவி-யைக் கொண்டிருப்பவர்கள், இன்றுள்ள ஏறக்குறைய 1.2 கோடி எண்ணிக்கையிலிருந்து, 2000-ஆம் ஆண்டிற்குள், 3 கோடியிலிருந்து 11 கோடி மக்களாக அதிகரித்திருப்பார்கள். சிகிச்சை இல்லாத பட்சத்தில், இவர்களனைவரும் நிச்சயமாகவே மரணமடையப் போகிறார்கள்.”
20. மத்தேயு 24:4-22-ன் ஆரம்ப நிறைவேற்றம் எதைப் பற்றி சொல்கிறது, ஆனால் வேறென்ன நிறைவேற்றம் தெளிவாய் இருக்கிறது?
20 அப்படியென்றால், அப்போஸ்தலரின் கேள்விக்கு இயேசு எவ்வாறு பதில் கொடுத்தார் என்பதைக் குறித்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? அவருடைய தீர்க்கதரிசனம், எருசலேமின் அழிவிற்கு வழிநடத்தும், அதன் அழிவை உட்படுத்தும் காரியங்களைத் துல்லியமாக முன்னறிவித்தது, மேலும் பொ.ச. 70-ஐப் பின்தொடரும் சில சம்பவங்களைப் பற்றியும் அது சொன்னது. ஆனால் பெரும்பாலானவை பிற்காலத்தில் ஓர் இரண்டாவது பெரிய நிறைவேற்றத்தை பெற இருந்தது. அது தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை முடிவிற்கு கொண்டுவந்திருக்கும் மகா உபத்திரவத்திற்கு வழிநடத்துவதாய் இருக்கும். அதாவது, மத்தேயு 24:4-22-ல் உள்ள இயேசுவின் முன்னறிவிப்பு, மேலும் மாற்கு, லூக்காவிலுள்ள இணைப் பதிவுகள் பொ.ச. 33-லிருந்து பொ.ச. 70-ன் உபத்திரவம் வரை நிறைவேறின. ஆனால் அந்த வசனங்களே, ஓர் இரண்டாவது நிறைவேற்றத்தைக் கொண்டிருந்திருக்கும். இது எதிர்காலத்தில் ஒரு மிகப் பெரிய உபத்திரத்தை உட்படுத்தும். இந்த பெரிய நிறைவேற்றம் நம் மத்தியில் நடக்கிறது; இதை நாம் தினந்தோறும் காணமுடிகிறது.f
எதற்கு வழிநடத்தும்?
21, 22. கூடுதலான சம்பவங்கள் வர இருந்தன என்று சொல்லும் தீர்க்கதரிசன குறிப்பை நாம் எங்குக் காண்கிறோம்?
21 இயேசு ‘புறஜாதியாரின் காலம் நிறைவேறுவதற்கும்’ வெகுமுன்பான காலப்பகுதியின்போது, வஞ்சிக்கும் அடையாளங்களைச் செய்யும் பொய்த் தீர்க்கதரிசிகளைப் பற்றி சொல்வதோடு தம்முடைய தீர்க்கதரிசனத்தை நிறுத்தவில்லை. (லூக்கா 21:24; மத்தேயு 24:23-26; மாற்கு 13:21-23) அவர், பூமியெங்கும் காணப்படும், நடக்கப்போகும் மற்ற திடுக்கிடச்செய்யும் காரியங்களைப் பற்றி தொடர்ந்து சொன்னார். இவை மனுஷகுமாரன் வல்லமையிலும் மகிமையிலும் வருவதோடு சம்பந்தப்பட்டிருக்கும். மாற்கு 13:24-27, அவருடைய தொடர்ச்சியான தீர்க்கதரிசனத்துக்கு உதாரணமாக இருக்கிறது:
22 “அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.”
23. பொ.ச. முதல் நூற்றாண்டுக்கு வெகுபின்பு மத்தேயு 24:29-31-ன் நிறைவேற்றத்திற்காக நாம் ஏன் காத்திருக்கலாம்?
23 பொ.ச. 70-ல் யூத ஒழுங்குமுறையின் அழிவுக்குரிய முடிவைத் தொடர்ந்து, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவாகிய மனுஷகுமாரன் அவ்விதமாகக் கண்ணைக்கவரும் வகையில் வரவில்லை. மத்தேயு 24:30 குறிப்பிடுகிறப்பிரகாரம், நிச்சயமாகவே, பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் அவரைக் கண்டுணரவும் இல்லை; பரலோக தூதர்கள் பூமியெங்குமிருந்து அபிஷேகம் செய்யப்பட்ட எல்லா கிறிஸ்தவர்களை அப்போது கூட்டிச்சேர்க்கவும் இல்லை. எனவே, இயேசுவின் மிகப் பெரிய தீர்க்கதரிசனத்தின் இந்தக் கூடுதல் பகுதி எப்போது நிறைவேற்றமடையும்? நம் மத்தியில் இப்போது நடக்கிறவற்றில் அது நிறைவேற்றத்தைக் காண்கிறதா அல்லது பதிலாக, சமீப எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடிய காரியங்களினுள் தெய்வீக உட்பார்வையை இது கொடுக்கிறதா? நாம் நிச்சயமாகவே இதை அறிந்துகொள்ள விரும்பவேண்டும், ஏனென்றால், இயேசுவின் புத்திமதியை லூக்கா பதிவுசெய்கிறார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.”—லூக்கா 21:28.
[அடிக்குறிப்புகள்]
a இந்த அதிகாரங்களின் பகுதிகளைப் பக்கங்கள் 14, 15-ல் உள்ள அட்டவணையில் காணலாம்; புள்ளிக்கோடிடப்பட்ட வரிகள் இணையான பகுதிகளைக் குறிக்கின்றன.
b இந்த நிகழ்ச்சிகளின் வரலாற்று மேற்கோள்களுக்கு, ஆங்கில காவற்கோபுரம் ஜனவரி 15, 1970, பக்கங்கள் 43-5-ஐப் பார்க்கவும்.
c டோட்டே, மத்தேயுவில் 80-க்கு மேற்பட்ட தடவைகளும் (அதிகாரம் 24-ல் 9 தடவைகள்) லூக்காவின் புத்தகத்தில் 15 தடவைகளும் வருகின்றன. மாற்கு டோட்டே என்ற சொல்லை வெறும் ஆறு தடவைகள்மட்டுமே பயன்படுத்தினார், ஆனால் அவற்றில் நான்கு ‘அந்த அடையாளத்தை’ உட்படுத்தின.
d பிரிட்டிஷ் ஆசிரியர் மேத்யூ ஹென்றி பின்வருமாறு சொன்னார்: “கல்தேயர்களால் எருசலேம் அழிக்கப்பட்டது அதிகக் கொடூரமாக இருந்தது, ஆனால் இது அதையும் மிஞ்சிவிட்டது. எல்லா . . . யூதர்களின் சர்வலோக படுகொலைக்கு இது ஓர் அச்சுறுத்தலாயிருந்தது.”
e லூக்கா 21:24-க்குப் பிறகு, லூக்காவின் பதிவில் பலர் அழுத்தம் தருவதில் மாற்றத்தைக் காண்கின்றனர். டாக்டர் லீயான் மொரஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “புறஜாதியாரின் காலங்களைப் பற்றி இயேசு தொடர்ந்துபேசுகிறார். . . . பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி மனுஷகுமாரனுடைய வருகையின்மீது இப்போது கவனம் திருப்பப்படுகிறது.” பேராசிரியர் R. ஜின்ஸ் எழுதுகிறார்: “மனுஷகுமாரனின் வருகை—(மத் 24:29-31; மாற் 13:24-27). ‘புறஜாதியாரின் காலங்களைப்’ பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது இந்தத் தலைப்பிற்கு ஓர் அறிமுகத்தைக் கொடுக்கிறது; [லூக்காவின்] காட்சிநோக்கு, இப்போது எருசலேமின் அழிவிற்கும் அப்பால், எதிர்காலத்திற்குள் கொண்டுசெல்கிறது.”
f பேராசிரியர் உவால்ட்டர் L. லீபெல்டு எழுதுகிறார்: “இயேசுவின் முன்னறிவிப்புகள் பின்வரும் இரண்டு நிலைகளில் உருப்பெறுகின்றன என்று நிச்சயமாய் ஊகிக்க முடியும்: (1) ஆலயத்தை உட்படுத்தின கி.பி. 70-ன் சம்பவங்கள், (2) அதிகமாக வெளிப்படுத்துதலின் சொற்களினால் விளக்கப்பட்டுள்ள நெடுங்கால திருவெளிப்பாட்டின் எதிர்கால சம்பவங்கள்.” J. R. டம்மலோ என்பவரால் தயாரிக்கப்பட்ட விளக்கவுரை இவ்வாறு சொல்கிறது: “நம்முடைய கர்த்தர் இதில் குறிப்பிட்ட நிறைவேற்றம் ஒன்றல்ல, இரண்டு என்றும், முதலாவதானது இரண்டாவதன் மாதிரி என்றும் புரிந்துகொள்ளப்படும்போது, இந்தப் பெரிய விளக்கப்பேச்சின் மிக வினைமையான பிரச்னைகளில் பல மறைந்துவிடுகின்றன. . . . விசேஷமாக [லூக்கா] 21:24, ‘புறஜாதியார்களின் காலங்களைப்’ பற்றி பேசுகிறது, . . . எருசலேமின் வீழ்ச்சிக்கும் உலகின் முடிவுக்கும் இடையே ஒரு வரையறையற்ற இடைவெளியை வைக்கிறது.”
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ மத்தேயு 24:3-ல் உள்ள கேள்விக்கான இயேசுவின் பதில், பொ.ச. 70-க்கு வழிநடத்தும் என்ன நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தது?
◻ டோட்டே என்ற சொல்லின் உபயோகம் இயேசுவின் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்ள நமக்கு எப்படி உதவிசெய்கிறது?
◻ முன்னொருபோதும் நடந்திராதது போன்ற முதல் நூற்றாண்டின் ஒரு ‘மகா உபத்திரவம்’ என்ன அர்த்தத்தில் இருந்தது?
◻ இன்று நம்மை உட்படுத்தும் இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் என்ன இரண்டு விசேஷித்த அம்சங்களைப் பற்றி லூக்கா குறிப்பிடுகிறார்?
◻ மத்தேயு 24:4-22-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் இரண்டாவது மற்றும் பெரிய நிறைவேற்றத்தை என்ன குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன?
[பக்கம் 14, 15-ன் படம்]
4 “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ் சிப்பார்கள். 6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; [உணவுப்பற்றாக்குறைகளும், பூகம்பங்களும், NW] பல இடங்களில் உண்டாகும். 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக் கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். 12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். 13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது, முடிவு வரும்.
------------------------------------------------------------------
15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, [(வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்) Nw] 16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். 17 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். 18 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். 19 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. 20 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். 21 ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான [ மகா உபத்திரவம், NW] அப்பொழுது, அப்பொழுது உண்டாயிருக்கும். 22 அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்.
------------------------------------------------------------------
23 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். 27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய [வந்ததிருத்தலும், NW] இருக்கும். 28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 6 ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது.
8 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்குமுன்பாக நிறுத்தப்படுவீர்கள். 10 சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். 11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர். 12 அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். 13 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
------------------------------------------------------------------
14 மேலும் [பாழாக்குகிற அருவருப்பு NW] நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, [(வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவ)ன்], அப்பொழுது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். 15 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன். 16 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். 17 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! 18 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். 19 ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். 20 கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திரா விட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார்.
------------------------------------------------------------------
21 அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள். 22 ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 23 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; 25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். 26 அப்பொழுது, மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். 27 அப்பொழுது, அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற் கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்.
8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். 9 யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
10 அப்பொழுது, அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். 11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12 இவைகளெல்லாம் நடப்பதற்குமுன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத்துன்பப்படுத்துவார்கள். 13 ஆனாலும் அது உச்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும். 14 ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள். 15 உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும்கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். 16 பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். 17 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். 18 ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. 19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
------------------------------------------------------------------
20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, [அப்பொழுது, NW] அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 21 அப்பொழுது, யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள். 22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. 23 அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும். 24 பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
------------------------------------------------------------------
அந்நிய தேசங்களின் நியமிக்கப்பட்ட காலங்கள் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் அந்நிய தேசத்தினரால் மிதிக்கப்படும்.—NW.
------------------------------------------------------------------
------------------------------------------------------------------
25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். 26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். 27 அப்பொழுது, மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். 28 இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள்தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
[பக்கம் 10-ன் படம்]
பொ.ச. 70-ன் உபத்திரவம் எருசலேமும் அந்த யூத ஒழுங்குமுறையும் இதுவரை அனுபவித்திராத மிகப் பெரிய ஒன்றாக இருந்தது