‘மகா உபத்திரவத்திற்கு’ முன்பு பாதுகாப்பிற்காக ஓடுங்கள்
‘எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, . . . யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.’—லூக்கா 21:20, 21.
1. உலகின் பாகமாக இன்னும் இருப்பவர்களுக்கு ஓட்டம் ஏன் அவசரமானது?
சாத்தானுடைய உலகின் பாகமாக இருக்கும் அனைவருக்கும், ஓட்டம் அவசரமானதாய் இருக்கிறது. பூமியிலிருந்து தற்போதைய காரிய ஒழுங்குமுறை துடைத்தழிக்கப்படும்போது அவர்கள் விட்டுவைக்கப்பட வேண்டுமானால், அவர்கள் யெகோவாவின் பக்கமாக உறுதியான நிலைநிற்கை எடுத்திருக்கிறார்கள் என்றும் சாத்தான் ஆட்சியாளனாக இருக்கிற உலகின் பாகமாக இனிமேலும் இல்லை என்றும் நம்பத்தக்க அத்தாட்சியை அளிக்க வேண்டும்.—யாக்கோபு 4:4; 1 யோவான் 2:17.
2, 3. மத்தேயு 24:15-22-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளின் தொடர்பாக என்ன கேள்விகளை நாம் கலந்தாலோசிக்கப்போகிறோம்?
2 இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில், அப்படிப்பட்ட ஓட்டத்திற்கான இன்றியமையாத அவசியத்தை இயேசு வலியுறுத்திக் காட்டினார். மத்தேயு 24:4-14-ல் பதிவு செய்யப்பட்டிருப்பவற்றை நாம் அடிக்கடி கலந்துபேசுகிறோம்; என்றாலும், அதைப் பின்தொடர்ந்து சொல்லப்படுகிறவையும் அதையொத்த முக்கியத்துவம் உடையதே. இப்போது உங்கள் பைபிளைத் திறந்து 15 முதல் 22 வசனங்கள் வரை வாசிக்கும்படியாக உங்களை நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம்.
3 அந்தத் தீர்க்கதரிசனம் எதை அர்த்தப்படுத்துகிறது? முதல் நூற்றாண்டில், ‘பாழாக்குகிற அருவருப்பாக’ இருந்தது என்ன? அது ‘பரிசுத்த ஸ்தலத்தில்’ இருப்பது எதைக் குறித்துக்காட்டியது? அவ்வாறு அது இருப்பது நமக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
“வாசிக்கிறவன் பகுத்துணர்வைப் பயன்படுத்தட்டும்”
4. (அ) யூதர்கள் மேசியாவை நிராகரிப்பதைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்று தானியேல் 9:27 சொன்னது? (ஆ) இதை மேற்கோள் காட்டுகையில், “வாசிக்கிறவன் பகுத்துணர்வைப் பயன்படுத்தட்டும்” என்று இயேசு ஏன் சொல்லியிருக்க வேண்டும்?
4 மத்தேயு 24:15-ல் (NW) இயேசு, தானியேல் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டினார் என்பதைக் கவனியுங்கள். அந்தப் புத்தகத்தில் 9-ம் அதிகாரத்தில், மேசியாவின் வருகையையும் அவரை நிராகரித்ததற்காக யூத தேசத்தார்மீது நடப்பிக்கப்படும் நியாயத்தீர்ப்பையும் முன்னறிவித்த தீர்க்கதரிசனம் ஒன்று இருக்கிறது. வசனம் 27-ன் (தி.மொ.) பிற்பகுதி சொல்கிறது: ‘அருவருப்பின் செட்டைகள்மேல் பாழாக்கும் ஒருவன் வருவான்.’ பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில் அன்டையக்கஸ் IV-ஆல் எருசலேமிலுள்ள யெகோவாவின் ஆலயம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதோடு, தானியேல் தீர்க்கதரிசனத்தின் அந்தப் பாகத்தை யூதப் பாரம்பரியம் பொருத்தியது. ஆனால் இயேசு எச்சரித்தார்: “வாசிக்கிறவன் பகுத்துணர்வைப் பயன்படுத்தட்டும்.” அன்டையக்கஸ் IV-ஆல் ஆலயத்தின் தூய்மை கெடுக்கப்பட்டது, நிச்சயமாகவே அருவருப்பானதாக இருந்தாலும்—எருசலேமோ, ஆலயமோ, அல்லது யூத தேசமோ—பாழாவதில் விளைவடையவில்லை. ஆகவே இதன் நிறைவேற்றம் கடந்த காலத்தில் அல்ல, ஆனால் எதிர்காலத்திலேயே நடக்கவிருக்கிறது என்பதாக இயேசு தாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் எச்சரித்தார் என்பது தெளிவாக இருக்கிறது.
5. (அ) முதல் நூற்றாண்டு ‘அருவருப்பை’ அடையாளம் கண்டுகொள்ள சுவிசேஷ பதிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தல் எவ்வாறு நமக்கு உதவுகிறது? (ஆ) பொ.ச. 66-ல், செஸ்டியுஸ் காலுஸ் ரோம துருப்புகளை ஏன் எருசலேமுக்கு அவசரமாக அனுப்பினார்?
5 அவர்கள் எந்த ‘அருவருப்பை’ குறித்து விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்? மத்தேயுவின் பதிவு இவ்வாறு சொல்வது கவனிக்கத்தக்கதாய் இருக்கிறது: ‘பாழாக்குகிற அருவருப்பை . . . பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது.’ என்றபோதிலும், லூக்கா 21:20-லுள்ள அதற்கிணையான பதிவு இவ்வாறு வாசிக்கிறது: ‘எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.’ பொ.ச. 66-ல், எருசலேமில் வாழ்கிற கிறிஸ்தவர்கள், இயேசு எதை முன்னறிவித்தாரோ அதைக் காணவே செய்தார்கள். யூதர்களுக்கும் ரோம அதிகாரிகளுக்கும் இடையிலான சண்டையை உட்படுத்திய தொடர் நிகழ்வுகள், எருசலேம் ரோமுக்கு விரோதமாகக் கலகம் செய்வதற்கான அனுகூலமான சூழலை உருவாக்க வழிநடத்தின. அதன் விளைவாக, யூதேயா, சமாரியா, கலிலேயா, தெக்கப்போலி, பெனிக்கியா, வடக்கே சீரியாவுக்குள், தெற்கே எகிப்திற்குள் வரையான இடங்களிலெங்கும் வன்முறை திடீர் சீற்றத்துடன் காணப்பட்டது. ரோம ஆட்சிப்பகுதியின் அந்தப் பாகத்தில் ஓரளவு அமைதியை மீண்டும் நிலைநாட்டுவதற்காக, யூதர்கள் தங்களுடைய ‘பரிசுத்த நகரம்’ என்பதாகக் குறிப்பிட்ட எருசலேமுக்கு சீரியாவிலிருந்து செஸ்டியுஸ் காலுஸ் அவசரமாக ராணுவ படைகளை அனுப்பினான்.—நெகேமியா 11:1; ஏசாயா 52:1.
6. பாழாக்கும் ‘அருவருப்பு’ ஒன்று ‘பரிசுத்த ஸ்தலத்தில் நின்றது’ என்பது எவ்வாறு உண்மையாக இருந்தது?
6 யூதர்களால் விக்கிரக ஆராதனைக்குரியவையாய் கருதப்பட்டவையும், ஆனால் ரோம படைகளால் புனிதமானவையாகக் கருதப்பட்டவையுமான கொடிகளை, அல்லது சின்னங்களை அந்தப் படைகள் கொண்டு செல்வது பழக்கமாக இருந்தது. அக்கறைக்குரிய விதத்தில், தானியேல் புத்தகத்தில் ‘அருவருப்பு’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வார்த்தை முக்கியமாக விக்கிரகங்களையும் விக்கிரகாராதனையையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.a (உபாகமம் 29:17) யூதர்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தபோதிலும், தங்களது விக்கிரகாராதனைக்குரிய சின்னங்களைத் தாங்கிய ரோம படைகள் பொ.ச. 66, நவம்பரில் எருசலேமுக்குள் புகுந்து, பின்னர் வடக்கிலுள்ள ஆலயச் சுவரை அடியரிக்க ஆரம்பித்தன. அதைக் குறித்து எவ்வித சந்தேகமுமில்லை—எருசலேமை முழுமையாகப் பாழாக்கத்தக்க ஒரு ‘அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நின்றுகொண்டிருந்தது’! ஆனால் ஒருவரால் எவ்வாறு தப்பி ஓட முடியும்?
ஓடிப்போதல் அவசரமானதாக இருந்தது!
7. எதிர்பாராதவிதமாக ரோம சேனை என்ன செய்தது?
7 திடீரென்றும் மனித நோக்குநிலையிலிருந்து எவ்வித தெளிவான காரணமுமின்றி, எருசலேம் எளிதாகக் கைப்பற்றப்படப்போவதாய் தோன்றிய சமயத்தில் ரோம சேனை பின்வாங்கியது. பின்வாங்கிக்கொண்டிருந்த ரோம துருப்புகளை யூதக் கலகக்காரர், எருசலேமிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்திப்பத்திரி வரையாக மட்டுமே பின்தொடர்ந்தார்கள். பின்னர் அவர்கள் திரும்பி வந்தார்கள். எருசலேமுக்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் மேலுமான போர்த்திறத்தைத் திட்டமிடுவதற்காக ஆலயத்தில் கூடிவந்தார்கள். அரண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் ராணுவத்தில் சேவிக்கவும் இளைஞர் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கிறிஸ்தவர்கள் இந்தக் காரியங்களில் ஈடுபடுவார்களா? அதை அவர்கள் தவிர்த்தாலும்கூட, ரோம சேனைகள் மீண்டும் வரும்போது அவர்கள் இன்னும் அபாயப் பகுதியில் இருப்பார்களா?
8. இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தவர்களாக கிறிஸ்தவர்கள் என்ன அவசர நடவடிக்கையை எடுத்தார்கள்?
8 எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் இருந்த கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசன எச்சரிப்புக்கு இசைவாக விரைவில் செயல்பட்டு, அபாயப் பகுதியிலிருந்து வெளியே ஓடிப்போனார்கள். ஓடிப்போதல் அவசரமானதாக இருந்தது! தக்க நேரத்தில் அவர்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்; பெரேயா மாகாணத்திலுள்ள பெல்லாவில் ஒருவேளை சிலர் குடியேறி இருக்கலாம். இயேசுவின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டவர்கள், தங்களுடைய பொருள்சம்பந்தமான உடைமைகளைக் காப்பதற்கான முயற்சியில், அறிவற்றவர்களாக மீண்டும் திரும்பிச் செல்லவில்லை. (லூக்கா 14:33-ஐ ஒப்பிடுக.) அவ்விதமான சூழ்நிலைகளில் அங்கிருந்து செல்பவர்களாய், ஓட்டமும் நடையுமான அந்தப் பயணத்தைக் கர்ப்பிணி பெண்களும் பால்கொடுக்கும் தாய்மாரும் நிச்சயமாகவே கடினமானதாகக் கண்டார்கள். ஓய்வுநாளின் கட்டுப்பாடுகளால் அவர்களுடைய ஓட்டம் தடை செய்யப்படவில்லை; மேலும் குளிர்காலம் நெருங்கி வந்தபோதிலும், அதுவரையிலும் அது வந்திருக்கவில்லை. விரைவில் ஓடிவிடும்படியான இயேசுவின் எச்சரிக்கைக்குச் செவிசாய்த்தவர்கள் சீக்கிரத்தில் பாதுகாப்பாக எருசலேமுக்கும் யூதேயாவுக்கும் வெளியே இருந்தார்கள். அவர்களுடைய ஜீவன் இதைச் சார்ந்திருந்தது.—யாக்கோபு 3:17-ஐ ஒப்பிடுக.
9. ரோம படைகள் எவ்வளவு விரைவாக திரும்பிச் சென்றன, மேலும் என்ன விளைவுடன்?
9 அதற்கடுத்த வருடம், பொ.ச. 67-ல், யூதர்களுக்கு விரோதமான போர் நடவடிக்கைகளை ரோமர்கள் புதுப்பித்துக் கொண்டனர். முதலில், கலிலேயாவின்மீது வெற்றிசிறக்கப்பட்டது. அதற்கடுத்த வருடம் யூதேயா பாழாக்கப்பட்டது. பொ.ச. 70-ற்குள், ரோம சேனைகள் எருசலேமையே சூழ்ந்துகொண்டன. (லூக்கா 19:43) பஞ்சம் மிகக் கடுமையாக ஆனது. நகரத்தில் சிக்கிக்கொண்டவர்கள் ஒருவரையொருவர் தாக்கினார்கள். தப்ப முயன்ற எவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் அனுபவித்தது, இயேசு சொல்லியிருந்ததுபோல் ‘மகா உபத்திரவமாக’ இருந்தது.—மத்தேயு 24:21, NW.
10. நாம் பகுத்துணர்வுடன் வாசித்தால், வேறு எதையும் கவனத்தில் கொள்வோம்?
10 இயேசு முன்னுரைத்ததை அது முழுமையாக நிறைவேற்றியதா? இல்லை, இன்னுமதிகம் வரவிருந்தது. இயேசுவின் அறிவுரைக்கிணங்க, நாம் வேதவசனங்களை பகுத்துணர்வுடன் வாசித்தோமானால், இன்னும் வரவிருப்பதை நாம் கவனிக்கத் தவறிவிட மாட்டோம். நம் சொந்த வாழ்க்கையில் அது எவற்றையெல்லாம் உட்படுத்துகிறது என்பதைக் குறித்தும் நாம் கருத்தூன்றி சிந்திப்போம்.
நவீன நாளைய ‘அருவருப்பு’
11. வேறு எந்த இரு வசனங்களில் ‘அருவருப்பை’ பற்றி தானியேல் குறிப்பிடுகிறார், மேலும் எந்தக் காலப்பகுதி அங்கு பேசப்படுகிறது?
11 தானியேல் 9:27-ல் நாம் கண்டதோடுகூட, தானியேல் 11:31 மற்றும் 12:11-லும், ‘பாழாக்கும் அருவருப்பை’ குறித்து மேலுமாக குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். பின்னால் சொல்லப்பட்ட இந்தக் குறிப்புகள் எவற்றிலும், எருசலேமின் அழிவைப் பற்றி சொல்லப்படவில்லை. உண்மையில், தானியேல் 12:11-ல் சொல்லப்பட்டிருப்பது, ‘முடிவு காலத்தை’ பற்றிய ஒரு குறிப்புக்கு இரண்டே வசனங்களுக்குப்பின் காணப்படுகிறது. (தானியேல் 12:9) 1914 முதற்கொண்டு நாம் அப்பேர்ப்பட்ட ஒரு காலப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்கிறோம். ஆகவே, நவீன நாளைய ‘பாழாக்குகிற அருவருப்பை’ அடையாளம் கண்டுகொள்வதற்கும் பின்னர் நாம் அபாயப் பகுதியை விட்டு வெளியே வருவதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கும் விழிப்புள்ளவர்களாய் இருப்பது அவசியம்.
12, 13. நவீன நாளைய ‘அருவருப்பு’ என்பதாக சர்வதேச சங்கத்தை விவரிப்பது ஏன் பொருத்தமானதாக இருக்கிறது?
12 நவீன நாளைய ‘அருவருப்பு’ என்ன? உலகம் அதன் முடிவு காலத்திற்குள் நுழைந்ததற்குச் சற்றுப் பின்னர், 1920-ல் செயல்படத் தொடங்கிய சர்வதேச சங்கமே அது என்பதாக அத்தாட்சி சுட்டிக் காட்டுகிறது. ஆனால் அது எவ்வாறு ஒரு ‘பாழாக்குகிற அருவருப்பாக’ இருக்க முடியும்?
13 ‘அருவருப்பு’ என்பதற்கான எபிரெய வார்த்தை பைபிளில் முக்கியமாக, விக்கிரகங்கள் மற்றும் விக்கிரகாராதனைக்குரிய பழக்கங்களின் சம்பந்தத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்தச் சங்கம் விக்கிரகாராதனைக்குரியதாக ஆக்கப்பட்டதா? உண்மையிலேயே அவ்வாறு ஆக்கப்பட்டது! மதகுருமார் அதை ‘ஒரு பரிசுத்த ஸ்தலத்தில்’ வைத்தார்கள்; அவர்களைப் பின்பற்றியவர்கள் அதற்கு உணர்ச்சிமிக்க பக்தியைச் செலுத்த ஆரம்பித்தனர். அமெரிக்காவிலுள்ள சர்ச்சஸ் ஆஃப் க்ரைஸ்ட்டின் கூட்டமைப்புக் குழு, சர்வதேச சங்கமே ‘பூமியில் கடவுளுடைய ராஜ்யத்தின் அரசியல்பூர்வ வெளிப்பாடாக’ இருக்கும் என்பதாக அறிவித்தது. ஐ.மா. சட்டமாமன்ற மேலவை, சர்வதேச சங்கத்தின் ஒப்பந்தத்தை உறுதிசெய்யும்படி உந்துவித்து, மதத் தொகுதிகளிடமிருந்து திடீரென்று ஏராளமான கடிதங்கள் வந்தன. பிரிட்டனிலுள்ள பாப்டிஸ்ட்கள், காங்கிரிகேஷனலிஸ்ட்கள், மற்றும் பிரெஸ்பிடேரியன்களின் பொது குழுவானது, “[பூமியில் சமாதானத்தை] பெறுவதற்கான ஒரே வழி” என்பதாக அதைப் புகழ்ந்தது.—வெளிப்படுத்துதல் 13:14, 15-ஐக் காண்க.
14, 15. சர்வதேச சங்கமும் பின்னர் ஐக்கிய நாட்டுச் சங்கமும் என்ன வழியில் ‘பரிசுத்த ஸ்தலத்தில்’ நிற்கலாயின?
14 கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் பரலோகத்தில் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது, ஆனால் தேசங்கள் தங்கள் சொந்த அரசதிகாரத்திற்காகப் போரிட ஆரம்பித்தன. (சங்கீதம் 2:1-6) சர்வதேச சங்கத்தை நிறுவுவதற்கான திட்டம் முன்கொண்டுவரப்பட்டபோது, அப்போதுதான் முதல் உலகப் போரில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தேசங்களும் அவற்றினுடைய துருப்புகளை ஆசீர்வதித்துக்கொண்டிருந்த மதகுருமாரும் கடவுளின் சட்டத்தைத் தாங்கள் கைவிட்டுவிட்டார்கள் என்பதை ஏற்கெனவே வெளிக்காட்டி இருந்தார்கள். அவர்கள் கிறிஸ்துவை அரசராக நோக்கி இருக்கவில்லை. இவ்வாறாக அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்திற்குரிய ஸ்தானத்தை ஒரு மனித அமைப்புக்கு அளித்தனர்; அவர்கள் சர்வதேச சங்கத்தை, ‘ஒரு பரிசுத்த ஸ்தலத்தில்,’ அதற்கு உரியதாக இல்லாத ஓர் இடத்தில் வைத்தார்கள்.
15 சர்வதேச சங்கத்தைப் பின்தொடர்வதாக, ஐக்கிய நாட்டுச் சங்கமானது அக்டோபர் 24, 1945 அன்று தோன்றியது. பின்னர், ரோமின் போப்புகள், ஐக்கிய நாட்டுச் சங்கத்தை “ஒத்திசைவு மற்றும் சமாதானத்தின் முடிவான நம்பிக்கை” என்றும் “சமாதானத்துக்கும் நீதிக்குமான உன்னத திட்டம்” என்றும் கூறி வரவேற்றனர். ஆம், சர்வதேச சங்கம், அதைப் பின்தொடர்ந்துவந்த ஐக்கிய நாட்டுச் சங்கத்துடன் சேர்ந்து உண்மையிலேயே ஒரு விக்கிரகமாக, கடவுளுடைய பார்வையிலும் அவருடைய மக்களின் பார்வையிலும் ஓர் ‘அருவருப்பாக’ ஆகியிருக்கிறது.
எதிலிருந்து ஓடவேண்டும்?
16. நீதியை நேசிப்பவர்கள் இன்று எதிலிருந்து வெளியே ஓட வேண்டும்?
16 இதைக் ‘காணும்போது,’ அந்தச் சர்வதேச அமைப்பு என்ன என்பதையும் அது எவ்வாறு வணக்கத்திற்குரியதாக ஆக்கப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ளும்போது, நீதியை நேசிக்கிறவர்கள் பாதுகாப்பிற்காக ஓடவேண்டியது அவசியம். எதைவிட்டு ஓடவேண்டும்? உண்மையற்ற எருசலேமின் மாதிரியை முன்குறித்த நவீன நாளைய மெய்ம்மையாகிய கிறிஸ்தவமண்டலத்தையும், உலகளாவிய பொய் மத அமைப்புமுறையாகிய மகா பாபிலோன் முழுவதையும்விட்டு வெளியேற வேண்டும்.—வெளிப்படுத்துதல் 18:4.
17, 18. நவீன நாளைய ‘அருவருப்பு’ எந்தப் பாழாக்குதலை ஏற்படுத்தும்?
17 முதல் நூற்றாண்டில், ரோம படையானது அதன் விக்கிரகாராதனைக்குரிய சின்னங்களோடு யூதர்களின் பரிசுத்த நகரத்திற்குள் வந்தபோது, எருசலேமுக்கும் அதன் வணக்க அமைப்புமுறைக்கும் பாழாக்குதலைக் கொண்டுவருவதற்காக அது அங்கு வந்திருந்தது. நம்முடைய நாளில், பாழாக்குதல், வெறுமனே ஒரு நகரத்தின் மீதோ, கிறிஸ்வமண்டலத்தின் மீதோ மட்டும் வரப்போவதில்லை, ஆனால் பொய் மதத்தின் முழு உலகளாவிய அமைப்புமுறையின்மீது வரவிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:5-8.
18 வெளிப்படுத்துதல் 17:16-ல், ஐக்கிய நாட்டுச் சங்கமாக நிரூபித்திருக்கிற அடையாள அர்த்தமுள்ள சிவப்புநிற மூர்க்க மிருகம் ஒன்று, வேசியைப் போன்ற மகா பாபிலோன்மீது திரும்பி அவளைக் கடுஞ்சீற்றத்துடன் அழித்துவிடுகிறது. அடையாளப்பூர்வ மொழிநடையில், அது சொல்கிறது: “நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.” இது எதை அர்த்தப்படுத்துகிறது என்பது சிந்தித்துப்பார்ப்பதற்கு திகைப்பூட்டுவதாய் இருக்கிறது. பூமியின் எல்லா பாகங்களிலும் எல்லா வகையான பொய் மதமும் முடிவடைவதில் அது விளைவடையும். மகா உபத்திரவம் தொடங்கிவிட்டது என்பதை இது உண்மையிலேயே காண்பிக்கும்.
19. ஐக்கிய நாட்டுச் சங்கம் உருவாக்கப்பட்டதிலிருந்து எந்தத் தொகுதிகள் அதன் பாகமாக இருந்திருக்கின்றன, இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது?
19 ஐக்கிய நாட்டுச் சங்கம் அதன் செயல்பாடுகளை 1945 முதல் தொடங்கியதிலிருந்து, நாத்திக, மத எதிர்ப்புத் தொகுதிகள், அதன் அங்கத்தினர்களில் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் பல்வேறு சமயங்களில், மதம் சார்ந்த பழக்கங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதற்கோ முழுமையாக தடைவிதிக்கப்படுவதற்கோ அப்பேர்ப்பட்ட தீவிரவாத தொகுதிகள் காரணமாக இருந்திருக்கின்றன. என்றபோதிலும், கடந்த ஒருசில வருடங்களில், பல இடங்களில், மதத் தொகுதிகளின்மீது அரசாங்க அழுத்தம் தணிந்திருக்கிறது. இதனால் மதத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் போய்விட்டதாகச் சிலருக்குத் தோன்றக்கூடும்.
20. உலகின் மதங்கள் தங்களுக்குத் தாங்களே என்ன வகையான பெயரை ஏற்படுத்தியிருக்கின்றன?
20 என்றபோதிலும், மகா பாபிலோனின் மதங்கள் உலகின் கடுமையான பிரிக்கும் சக்தியாகவே தொடர்ந்து செயல்படுகின்றன. போரிட்டுக்கொண்டிருக்கும் உட்கட்சி பிரிவுகளையும் பயங்கரவாத தொகுதிகளையும், அவை ஆதரிக்கிற மதத்தின் பெயராலேயே அடிக்கடி தலைப்புச் செய்திகள் அடையாளம் காட்டுகின்றன. போட்டியிடும் மதத் தொகுதிகளுக்கு இடையில் வன்முறையை நிறுத்துவதற்காக கலகத்தைக் கட்டுப்படுத்தும் காவலர்களும் படைவீரர்களும் கோயில்களுக்குள் கட்டாயமான முறையில் செல்லவேண்டியிருந்திருக்கிறது. மதத் தொகுதிகள் அரசியல் புரட்சிக்கு நிதியுதவி அளித்திருக்கின்றன. இனத் தொகுதிகள் மத்தியில் நிலையான உறவுகளைக் காத்துக்கொள்வதற்காக ஐக்கிய நாட்டுச் சங்கம் எடுக்கும் முயற்சிகளை மத பகைமை கெடுத்திருக்கிறது. சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்குமான இலக்கைத் தொடருகையில், ஐக்கிய நாட்டு சங்கத்தினுள் இருக்கும் தொகுதிகள், அவற்றிற்குத் தடையாக இருக்கும் எவ்வித மத செல்வாக்கும் நீக்கப்படுவதைக் காண விரும்பும்.
21. (அ) மகா பாபிலோன் எப்போது அழிக்கப்படும் என்று தீர்மானிப்பது யார்? (ஆ) அதற்கு முன்னர் எதைச் செய்வது அவசரமானது?
21 கவனிப்பதற்கு வேறொரு முக்கியமான அம்சமும் இருக்கிறது. ஐக்கிய நாட்டு சங்கத்தின் உள்ளிருக்கும் இராணுவமயமாக்கப்பட்ட கொம்புகள்தாமே மகா பாபிலோனை அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் என்றாலும், அந்த அழிவு, உண்மையில் தெய்வீக நியாயத்தீர்ப்பின் ஒரு வெளிக்காட்டாக இருக்கும். கடவுளுடைய நியமிக்கப்பட்ட நேரத்தில் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும். (வெளிப்படுத்துதல் 17:17) இதற்கிடையில் நாம் என்ன செய்ய வேண்டும்? “அவளைவிட்டு வெளியே வாருங்கள்”—மகா பாபிலோனைவிட்டு வெளியே வாருங்கள்—என்பதாக பைபிள் பதிலளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:4.
22, 23. அப்படிப்பட்ட ஓர் ஓட்டம் எதை உட்படுத்துகிறது?
22 பாதுகாப்பிற்கான இந்த ஓட்டம், எருசலேமை விட்டுச்சென்றபோது யூத கிறிஸ்தவர்கள் செய்ததுபோல நிலயியல் சார்ந்த ஓர் இடப்பெயர்ச்சி அல்ல. கிறிஸ்வமண்டல மதங்களைவிட்டு, ஆம், மகா பாபிலோனின் எந்தப் பாகத்தைவிட்டும் வெளியேறும் ஓர் ஓட்டம். பொய் மத அமைப்புகளிலிருந்து மட்டுமல்ல, ஆனால் அவற்றின் பழக்கவழக்கங்களிலிருந்தும் அவை உண்டுபண்ணுகிற மனோபாவத்திலிருந்தும் ஒருவர் தன்னை முழுமையாக பிரித்துக்கொள்வதை அது குறிக்கிறது. யெகோவாவின் தேவராஜ்ய அமைப்புக்குள்ளிருக்கும் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும் ஓர் ஓட்டம் அது.—எபேசியர் 5:7-11.
23 நவீன நாளைய அருவருப்பாகிய சர்வதேச சங்கத்தை முதல் உலகப் போருக்குப் பின், முதலாவதாக யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்கள் அடையாளங்கண்டு கொண்டபோது, சாட்சிகள் எவ்வாறு பிரதிபலித்தார்கள்? கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் தாங்கள் அங்கத்தினராக இருப்பதை ஏற்கெனவே துண்டித்துவிட்டிருந்தார்கள். ஆனால் சிலுவையைப் பயன்படுத்துவது, கிறிஸ்மஸையும் மற்ற புறமத விடுமுறை நாட்களையும் கொண்டாடுவது போன்ற கிறிஸ்தவமண்டல பழக்கவழக்கங்கள் சிலவற்றை அவர்கள் இன்னும் கடைப்பிடித்துக்கொண்டிருந்ததை அவர்கள் படிப்படியாக உணர்ந்துகொண்டார்கள். இந்தக் காரியங்களைப் பற்றிய உண்மையைக் கற்றறிந்தபோது, அவர்கள் உடனடியாகச் செயல்பட்டனர். ஏசாயா 52:11-லுள்ள ஆலோசனைக்கு இசைவாக அவர்கள் செயல்பட்டனர்: “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.”
24. விசேஷமாக 1935 முதற்கொண்டு, அந்த ஓட்டத்தில் சேர்ந்திருப்பது யார்?
24 விசேஷமாக 1935-லிருந்து, ஒரு பரதீஸிய பூமியில் என்றென்றுமாக வாழ்வதற்கான எதிர்நோக்கை ஆர்வமாக ஏற்றுக்கொண்ட, வளர்ந்துவரும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மற்றவர்களும் அதுபோன்ற நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்தனர். அவர்களும் ‘பாழாக்கும் அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் நிற்பதைக் கண்டிருந்து,’ அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை உணர்ந்துகொள்கிறார்கள். ஓடிப்போவதற்காகத் தங்கள் தீர்மானத்தை எடுத்தப்பின், மகா பாபிலோனின் பாகமாக இருக்கும் அமைப்புகளின் அங்கத்தினர் பட்டியல்களிலிருந்து அவர்கள் தங்கள் பெயர்கள் நீக்கப்படும்படி செய்திருக்கின்றனர்.—2 கொரிந்தியர் 6:14-18.
25. ஒரு நபர் பொய் மதத்துடன் கொண்டிருக்கக்கூடிய எவ்வித பிணைப்புகளையும் விட்டுவிடுவதுடன்கூட வேறென்ன தேவைப்படுகிறது?
25 என்றபோதிலும், மகா பாபிலோனைவிட்டு வெளியே ஓடுவது, பொய் மதத்தை விட்டுவிடுவதைவிடவும் அதிகத்தை உட்படுத்துகிறது. ஒரு ராஜ்ய மன்றத்தில் ஒருசில கூட்டங்களுக்கு ஆஜராவதையோ மாதத்தில் ஓரிரு முறை நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக வெளி ஊழியத்திற்கு செல்வதையோவிடவும் அதில் அதிகம் உட்பட்டிருக்கிறது. சொல்லர்த்தமாக ஒருவர் மகா பாபிலோனுக்கு வெளியே இருக்கக்கூடும், ஆனால் அவர் உண்மையிலேயே அதைப் பின்னாலே விட்டுவந்திருக்கிறாரா? மகா பாபிலோன் பிரதான பாகத்தை வகிக்கும் உலகிலிருந்து அவர் தன்னைப் பிரித்து வைத்திருக்கிறாரா? அதன் மனோபாவத்தை—கடவுளுடைய நீதியான தராதரங்களை ஏளனமாகக் கருதும் மனோபாவத்தை—பிரதிபலிக்கும் காரியங்களை அவர் இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறாரா? பாலின ஒழுக்கத்தையும் திருமணத்தில் உண்மைத்தன்மையையும் அவர் ஏனோதானோவென்று கருதுகிறாரா? தனிப்பட்ட மற்றும் பொருளாதார அக்கறைகளை ஆவிக்குரிய அக்கறைகளைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக வைக்கிறாரா? இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு ஒத்த பாணியில் இருக்கும்படி அவர் தன்னை அனுமதிக்கக் கூடாது.—மத்தேயு 6:24; 1 பேதுரு 4:3, 4.
உங்கள் ஓட்டத்தை எதுவும் தடைசெய்யாதிருப்பதாக!
26. ஓட்டத்தை வெறுமனே தொடங்குவதற்கு மட்டுமல்லாமல் அதை வெற்றிகரமாக முடிப்பதற்கு எது நமக்கு உதவி செய்யும்?
26 பாதுகாப்பிடமாக நம் ஓட்டத்தில், பின்னால் விட்டுவந்த காரியங்களை ஏக்கத்துடன் நோக்காமல் இருப்பது அத்தியாவசியமானது. (லூக்கா 9:62) நம் மனங்களையும் இருதயங்களையும் கடவுளுடைய ராஜ்யத்திலும் அவருடைய நீதியிலும் உறுதியாக ஊன்றவைத்திருப்பது அவசியம். அப்படிப்பட்ட உண்மையான போக்கை யெகோவா ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன், இவற்றை முதலாவதாகத் தேடுவதன்மூலம் நம் விசுவாசத்தை வெளிக்காட்ட தீர்மானமுள்ளவர்களாய் இருக்கிறோமா? (மத்தேயு 6:31-33) உலகக் காட்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் படிப்படியாக வெளிப்படுவதற்காக ஆவலாக நாம் காத்துக்கொண்டிருக்கையில், வேதப்பூர்வ அடிப்படையிலான நம் உறுதியான நம்பிக்கைகள் அந்த இலக்கை நோக்கித் தொடருவதற்கு நம்மைத் தூண்டுவிக்க வேண்டும்.
27. இங்குக் கேட்கப்பட்டிருக்கிற கேள்விகளைக் குறித்து கருத்தூன்றியவாறு சிந்திப்பது ஏன் முக்கியமானது?
27 மகா பாபிலோனின் அழிவுடன் தெய்வீக நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றம் தொடங்கும். வேசியைப் போன்ற அந்த பொய் மத பேரரசு ஒருபோதும் இல்லாதபடிக்கு என்றென்றைக்குமாகத் துடைத்தழிக்கப்பட்டிருக்கும். அதற்கான காலம் மிக அண்மையில் இருக்கிறது! மிக முக்கியமான அந்தக் காலம் வரும்போது தனி நபர்களாக நம்முடைய நிலைநிற்கை என்னவாக இருக்கும்? மேலும் மகா உபத்திரவத்தின் உச்சக்கட்டத்தில், சாத்தானின் துன்மார்க்க உலகத்தின் மீதிபாகம் அழிக்கப்பட்டிருக்கையில், நாம் எந்தப் பக்கத்தில் காணப்படுவோம்? தேவையான நடவடிக்கையை நாம் இப்போதே எடுத்தோமென்றால், நம்முடைய பாதுகாப்பு உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. யெகோவா நமக்குச் சொல்லுகிறார்: ‘எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணுவான்.’ (நீதிமொழிகள் 1:33) யெகோவாவை உண்மைப்பற்றுறுதியுடனும் சந்தோஷத்துடனும் இந்த ஒழுங்குமுறையின் முடிவில் தொடர்ந்து சேவிப்பதன்மூலம், நாம் என்றென்றைக்குமாக யெகோவாவைச் சேவிக்க தகுதிபெறக்கூடும்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கங்கள் 634-5-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ நவீன நாளைய ‘அருவருப்பு’ எது?
◻ என்ன அர்த்தத்தில் ‘அருவருப்பு பரிசுத்த ஸ்தலத்தில் இருக்கிறது’?
◻ இப்போது பாதுகாப்பிற்காக ஓடுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
◻ அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை ஏன் அவசரமானது?
[பக்கம் 16-ன் படம்]
தப்பிப்பிழைப்பதற்கு, இயேசுவைப் பின்பற்றியவர்கள் தாமதிக்காமல் ஓடவேண்டியிருந்தது