“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு”
“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு தொடர்ந்து விழித்திருந்து இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்.”—மத்தேயு 26:41, NW.
மன அழுத்தம் மிகக் கடுமையாக இருந்தது—இதுபோன்ற அழுத்தத்தை அவர் அனுபவித்ததே இல்லை. கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தமது பூமிக்குரிய வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். விரைவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு, கழுவில் ஏற்றப்படப்போவதை அவர் உணர்ந்திருந்தார். தமது ஒவ்வொரு தீர்மானமும் செயலும் பிதாவின் நாமத்திற்கு மதிப்பையோ அவமதிப்பையோ கொண்டு வரும் என்பதை அவர் அறிந்திருந்தார். மனிதகுலத்தின் எதிர்கால வாழ்க்கை இப்பொழுது தராசில் தொங்கிக் கொண்டிருந்ததையும் அவர் அறிந்திருந்தார். இந்த எல்லா அழுத்தத்தையும் எதிர்ப்பட்டபோது, அவர் என்ன செய்தார்?
2 இயேசு தமது சீஷர்களுடன் கெத்செமனே தோட்டத்திற்குச் சென்றார். இது இயேசுவுக்கு மிகவும் பிடித்தமான இடம். அங்கே தமது சீஷர்களை விட்டுவிட்டு சற்று அப்பால் சென்றார். தனித்திருந்த அந்தத் தருணத்தில் தமது பரம பிதாவை நோக்கி பலத்திற்காக மன்றாடினார், தமது உள்ளத்திலுள்ள உணர்ச்சிகளை அப்படியே கொட்டி ஊக்கமாய் ஜெபித்தார்—ஒரு தடவை அல்ல மூன்று தடவை ஜெபித்தார். பரிபூரணராக இருந்தபோதிலும், தாமே சுயமாக இந்தச் சோதனையை எதிர்கொள்ள முடியும் என அவர் நினைக்கவில்லை.—மத்தேயு 26:36-44.
3 இன்றைக்கு நாமும் அழுத்தத்தை எதிர்ப்படுகிறோம். இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவில் வாழ்கிறோம் என்பதற்கு அத்தாட்சியை இச்சிற்றேட்டின் ஆரம்பத்தில் சிந்தித்தோம். சாத்தானிய உலகிலிருந்து வரும் சோதனைகளும் அழுத்தங்களும் தீவிரமாகிக் கொண்டே வருகின்றன. மெய்த் தேவனை சேவிப்பதாக உரிமைபாராட்டுகிற நம்மில் எவருடைய தீர்மானங்களும் செயல்களும் அவரது நாமத்திற்கு மதிப்பையோ அவமதிப்பையோ கொண்டு வருகின்றன, புதிய உலகில் ஜீவனைப் பெறுவோமா மாட்டோமா என்பதையும் பெரிதும் பாதிக்கின்றன. நாம் யெகோவாவை நேசிக்கிறோம். ‘முடிவுபரியந்தம் நிலைநிற்கவே’ விரும்புகிறோம்—அது நம் வாழ்க்கையின் முடிவாக இருந்தாலும்சரி இந்த ஒழுங்குமுறையின் முடிவாக இருந்தாலும்சரி. (மத்தேயு 24:13) ஆனால் எவ்வாறு நமது அவசர உணர்வை காத்துக்கொண்டு, தொடர்ந்து விழிப்புடன் இருக்க முடியும்?
4 அன்றைய சீஷர்களும் இன்றைய சீஷர்களும் அழுத்தங்களை எதிர்ப்படுவார்கள் என்பதை உணர்ந்து, “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு தொடர்ந்து விழித்திருந்து இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என இயேசு உந்துவித்தார். (மத்தேயு 26:41, NW) அந்த வார்த்தைகள் இன்று நமக்கு எதை அர்த்தப்படுத்துகின்றன? எப்படிப்பட்ட சோதனையை நீங்கள் எதிர்ப்படுகிறீர்கள்? நீங்கள் எவ்வாறு ‘தொடர்ந்து விழித்திருக்க’ முடியும்?
எதை செய்வதற்கு சோதனை?
5 இன்று நாம் அனைவரும் ‘பிசாசின் கண்ணியில்’ விழுந்துவிடும் சோதனையை எதிர்ப்படுகிறோம். (2 தீமோத்தேயு 2:26) முக்கியமாக யெகோவாவின் வணக்கத்தாரை சாத்தான் குறி வைத்திருக்கிறான் என பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (1 பேதுரு 5:8; வெளிப்படுத்துதல் 12:12, 17) என்ன நோக்கத்திற்காக? நம்மை கொலை செய்ய வேண்டுமென்ற நோக்கத்திற்காக அல்ல. ஏனென்றால் நாம் கடவுளுக்கு உண்மையோடிருந்து மரிப்பது சாத்தானுக்கு எவ்வித வெற்றியையும் தராது. அப்படிப்பட்ட மரணத்தை யெகோவா தமது உரிய காலத்தில் உயிர்த்தெழுதல் மூலம் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என்பதை சாத்தான் அறிந்திருக்கிறான்.—லூக்கா 20:37, 38.
6 நமது தற்போதைய ஜீவனைக் காட்டிலும் அதிக மதிப்புமிக்க ஒன்றை, அதாவது கடவுளுக்கு நாம் காண்பிக்கும் உத்தமத்தன்மையை அழிப்பதற்கே சாத்தான் விரும்புகிறான். யெகோவாவிடமிருந்து நம்மை பிரிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்கு சாத்தான் வெறித்தனமாக போராடி வருகிறான். எனவே, துரோகிகளாக மாறுவதற்கு, அதாவது நற்செய்தியைப் பிரசங்கிப்பதை விட்டுவிடுவதற்கு அல்லது கிறிஸ்தவ தராதரங்களை துறந்துவிடுவதற்கு அவன் நம்மை தூண்ட முடிந்தால், அதுதான் சாத்தானுக்கு வெற்றியாக அமையும்! (எபேசியர் 6:11-13) ஆகவே இந்தச் ‘சோதனைக்காரன்’ நமக்கு முன் சோதனைகளை வைக்கிறான்.—மத்தேயு 4:3.
7 சாத்தானுடைய ‘ஏமாற்று வழிகள்’ பல்வேறு வகைப்படுகின்றன. (எபேசியர் 6:11, பொது மொழிபெயர்ப்பு) பொருளாசை, பயம், சந்தேகம், இன்பத்தை நாடுதல் போன்ற எந்தவொரு கண்ணியை பயன்படுத்தியும் அவன் நம்மை சோதிக்கலாம். ஆனால் அவனுடைய திறம்பட்ட முறைகளில் ஒன்று சோர்வுறச் செய்வதாகும். சோர்வு நம்மை பலவீனப்படுத்தி, நம்மை எளிதில் ஆபத்திற்குள்ளாக்கிவிடும் என்பதை இந்தச் சந்தர்ப்பவாதி அறிந்திருக்கிறான். (நீதிமொழிகள் 24:10) முக்கியமாக உணர்ச்சி ரீதியில் நாம் ‘நொறுக்கப்படும்போது’ நம் உத்தமத்தை விட்டுக்கொடுத்துவிடும்படி தூண்டுகிறான்.—சங்கீதம் 38:8.
8 கடைசி நாட்களின் முடிவு நெருங்க நெருங்க, சோர்ந்து போவதற்குரிய காரணங்களும் அதிகரித்து வருவது போல தோன்றுகின்றன, இவற்றிற்கு நாம் எவருமே விதிவிலக்கானவர்கள் அல்ல. (“சோர்வுறச் செய்யும் அம்சங்கள் சில” என்ற பெட்டியைக் காண்க.) எந்தக் காரணமாக இருந்தாலும்சரி, சோர்வுறுதல் நமது பலத்தை உறிஞ்சிவிடலாம். உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் மனோ ரீதியிலும் களைத்துப்போனால், பைபிள் படிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவது, ஊழியத்தில் பங்குகொள்வது போன்ற ஆன்மீக கடமைகளைச் செய்ய ‘நேரத்தை வாங்குவது’ நமக்கு ஒரு சவாலாக ஆகிவிடலாம். (எபேசியர் 5:15, 16, NW) விசுவாசத்தின் ஓட்டத்தை நீங்கள் நிறுத்திவிட வேண்டும் என்றே சோதனைக்காரன் விரும்புகிறான் என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் மந்தமாவதற்கோ இந்தக் காலத்தைக் குறித்த அவசர உணர்வை தளர்த்திக் கொள்வதற்கோ இது சமயமல்ல! (லூக்கா 21:34-36) அப்படியானால், எவ்வாறு சோதனையை எதிர்த்து நின்று தொடர்ந்து விழித்திருக்க முடியும்? உங்களுக்கு உதவும் நான்கு ஆலோசனைகளைக் கவனியுங்கள்.
“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்”
9 ஜெபத்தின் மூலம் யெகோவாவை சார்ந்திருங்கள். கெத்செமனே தோட்டத்தில் இயேசு வைத்த முன்மாதிரியை நினைத்துக் கொள்ளுங்கள். கடும் மன அழுத்தத்தில் இருந்தபோது, அவர் என்ன செய்தார்? உதவிக்காக யெகோவாவிடம் மன்றாடினார்; ‘அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழும்’ அளவுக்கு மிகுந்த ஊக்கத்தோடு ஜெபித்தார். (லூக்கா 22:44) இதைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள். சாத்தானை இயேசுவுக்கு நன்றாக தெரியும். கடவுளுடைய ஊழியர்களை சிக்க வைப்பதற்கு சாத்தான் பயன்படுத்தும் எல்லா கண்ணிகளையும் பரலோகத்திலிருந்தபோது இயேசு பார்த்திருக்கிறார். என்றாலும், சோதனைக்காரனுடைய எந்த சோதனையையும் சுலபமாக சமாளித்துவிடலாம் என இயேசு நினைக்கவில்லை. தெய்வீக உதவிக்காக ஜெபிப்பதன் அவசியத்தை கடவுளுடைய பரிபூரண குமாரனே உணர்ந்திருந்தார் என்றால், நாம் எந்தளவுக்கு இன்னும் அதிகமாய் உணர்ந்திருக்க வேண்டும்!—1 பேதுரு 2:21.
10 “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என தமது சீஷர்களை ஊக்குவித்தப்பின், “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என இயேசு சொன்னதையும் நினைத்துக் கொள்ளுங்கள். (மத்தேயு 26:41) யாருடைய மாம்சத்தைப் பற்றி இயேசு குறிப்பிட்டார்? நிச்சயமாகவே அவருடைய மாம்சத்தைப் பற்றி குறிப்பிடவில்லை; ஏனென்றால் அவருடைய பரிபூரண மானிட சரீரத்தில் எந்தவித பலவீனமும் இருக்கவில்லை. (1 பேதுரு 2:22) ஆனால் அவருடைய சீஷர்களின் நிலைமையோ வேறு. அபூரணத்தையும் பாவத்தையும் சுதந்தரித்திருந்ததால், சோதனையை எதிர்த்து நிற்க முக்கியமாக அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது. (ரோமர் 7:21-24) அதனால்தான் சோதனையை எதிர்ப்படும்போது அதை வெற்றிகரமாய் சமாளிப்பதற்கு உதவிக்காக ஜெபிக்கும்படி அவர்களையும் அவர்களுக்குப் பின்வந்த உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரையும் இயேசு உந்துவித்தார். (மத்தேயு 6:13) இத்தகைய ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்கிறார். (சங்கீதம் 65:2) எப்படி? குறைந்தபட்சம் இரு வழிகளில் பதிலளிக்கிறார்.
11 முதலாவதாக, சோதனைகளை அடையாளம் கண்டுகொள்ள கடவுள் நமக்கு உதவுகிறார். இருளில் ஆங்காங்கே மறைவாக வைக்கப்படும் கண்ணிகளைப் போலவே சாத்தானுடைய சோதனைகளும் இருக்கின்றன. அவற்றை நீங்கள் பார்க்கவில்லையென்றால், அகப்பட்டுவிடலாம். பைபிள் மற்றும் பைபிள் சார்ந்த பிரசுரங்கள் வாயிலாக சாத்தானுடைய கண்ணிகளை யெகோவா வெளிச்சம் போட்டு காட்டுகிறார்; இவ்வாறு சோதனையில் சிக்காமலிருக்க நமக்கு உதவுகிறார். மனித பயம், பாலியல் ஒழுக்கக்கேடு, பொருளாசை போன்ற ஆபத்துக்களையும் சாத்தானிடமிருந்து வரும் இன்னும் பிற சோதனைகளையும் பற்றி கடந்த பல வருடங்களாக அச்சிடப்பட்ட பிரசுரங்களும் வட்டார மற்றும் மாவட்ட மாநாட்டு நிகழ்ச்சிகளும் நமக்கு விழிப்பூட்டியிருக்கின்றன. (நீதிமொழிகள் 29:25; 1 கொரிந்தியர் 10:8-11; 1 தீமோத்தேயு 6:9, 10) சாத்தானுடைய தந்திரங்களைப் பற்றி விழிப்புணர்வூட்டியதற்காக யெகோவாவுக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் அல்லவா? (2 கொரிந்தியர் 2:11) இத்தகைய எல்லா எச்சரிக்கைகளுமே சோதனையை எதிர்த்து நிற்க கடவுளிடம் நீங்கள் செய்த ஜெபங்களுக்கு பதில்களாகும்.
12 இரண்டாவதாக, சோதனையை சகிப்பதற்குத் தேவையான பலத்தைக் கொடுப்பதன் மூலம் யெகோவா நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார். ‘உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு [தேவன்] இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்’ என கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (1 கொரிந்தியர் 10:13) நாம் தொடர்ந்து அவரை சார்ந்திருந்தால், எதிர்த்து நிற்க ஆன்மீக பலமின்றி போகுமளவுக்கு நம்மை திணறடிக்கும் சோதனையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அப்படியானால், “தப்பிக்கொள்ளும்படியான போக்கை” எவ்வாறு நமக்கு உண்டாக்குவார்? ‘தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார்.’ (லூக்கா 11:13) சரியானதைச் செய்ய வேண்டுமென்ற நமது தீர்மானத்தை பலப்படுத்தும் பைபிள் நியமங்களை ஞாபகப்படுத்திக் கொள்வதற்கும், ஞானமான தீர்மானங்களை எடுப்பதற்கும் அந்த ஆவி நமக்கு உதவி செய்யும். (யோவான் 14:26; யாக்கோபு 1:5, 6) தவறான ஆசைகளை வெல்ல நமக்குத் தேவைப்படும் பண்புகளை வெளிக்காட்ட அது நமக்கு உதவி செய்யும். (கலாத்தியர் 5:22, 23) மேலும், சக விசுவாசிகள் நமக்கு ‘பக்கபலமாக’ இருப்பதற்கும் அந்த ஆவி அவர்களைத் தூண்டலாம். (கொலோசெயர் 4:11, NW) உதவி கேட்டு நீங்கள் செய்யும் ஜெபங்களுக்கு இப்படிப்பட்ட அன்பான வழிகளில் யெகோவா பதிலளிப்பதற்காக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் அல்லவா?
உங்கள் எதிர்பார்ப்புகள் நியாயமானவையாய் இருப்பதாக
13 தொடர்ந்து விழித்திருப்பதற்கு, நம் எதிர்பார்ப்புகள் நியாயமானவையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வரும் அழுத்தங்களால் சில சமயங்களில் நாம் அனைவரும் சோர்ந்துவிடுகிறோம். இந்தப் பழைய ஒழுங்குமுறையில் பிரச்சினையே இல்லாத வாழ்க்கையை அனுபவிப்போம் என கடவுள் ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பைபிள் காலங்களிலும்கூட, துன்புறுத்தல், வறுமை, மனச்சோர்வு, வியாதி போன்ற கஷ்டங்களை கடவுளுடைய ஊழியர்கள் எதிர்ப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 8:1; 2 கொரிந்தியர் 8:1, 2; 1 தெசலோனிக்கேயர் 5:14; 1 தீமோத்தேயு 5:23.
14 இன்று நாமும் பிரச்சினைகளை எதிர்ப்படுகிறோம். துன்புறுத்தலை எதிர்ப்படலாம், பணக்கஷ்டம் வரலாம், மனச்சோர்வு உண்டாகலாம், வியாதியினால் அவதியுறலாம், இதுபோன்ற இன்னும் அநேக காரியங்களால் கஷ்டப்படலாம். இந்த எல்லா பிரச்சினைகளிலிருந்தும் யெகோவா நம்மை அற்புதமாக பாதுகாத்தால், யெகோவாவை நிந்திக்க சாத்தானுக்கு இதெல்லாம் ஒரு காரணமாக ஆகிவிடும் அல்லவா? (நீதிமொழிகள் 27:11) தமது ஊழியர்கள் சோதிக்கப்படவும் பரீட்சிக்கப்படவும் யெகோவா கண்டிப்பாக அனுமதிக்கிறார், சிலருடைய விஷயத்தில் எதிரிகளுடைய கைகளில் உயிர்போகும் அளவுக்கும்கூட விட்டுவிடுகிறார்.—யோவான் 16:2.
15 அப்படியானால், யெகோவா நமக்கு என்ன வாக்குறுதி அளித்திருக்கிறார்? ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அவர் மீது நாம் முழு நம்பிக்கை வைத்தால், நாம் எதிர்ப்படும் எந்த சோதனையையும் எதிர்த்து நிற்க பலத்தை தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். (நீதிமொழிகள் 3:5, 6) தமது வார்த்தை, ஆவி, அமைப்பு ஆகியவற்றின் மூலம் நம்மை ஆன்மீக ரீதியில் பாதுகாத்து, தம்முடன் உள்ள உறவை காத்துக்கொள்ள நமக்கு உதவுகிறார். அந்த உறவுக்கு எந்தவொரு பங்கமும் ஏற்படாதிருந்தால், நாம் மரித்தாலும்கூட நமக்கு வெற்றிதான். கடவுள் தமது ஊழியர்களுக்கு பலனளிப்பதை எதுவுமே தடுத்து நிறுத்த முடியாது, ஏன் மரணமும்கூட தடுத்து நிறுத்த முடியாது. (எபிரெயர் 11:6) வெகு விரைவில் வரப்போகும் புதிய உலகில், தம்மை நேசிப்பவர்களுக்காக மீதமுள்ள அற்புதமான வாக்குறுதிகளை யெகோவா நிச்சயம் நிறைவேற்றுவார்.—சங்கீதம் 145:16.
விவாதங்களை நினைவிற்கொள்ளுங்கள்
16 முடிவு வரை சகித்திருப்பதற்கு, துன்பத்தை கடவுள் அனுமதித்திருப்பதில் உட்பட்டுள்ள முக்கிய விவாதங்களை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். சில சமயங்களில் பிரச்சினைகள் நம்மை திக்குமுக்காடச் செய்வதாக தோன்றும்போது அப்படிப்பட்ட சோதனைக்கு விட்டுக்கொடுத்து விடும்படி தூண்டப்பட்டால், யெகோவாவின் பேரரசுரிமையை எதிர்த்து சாத்தான் சவால்விட்டிருப்பதை நமக்கு நாமே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும். கடவுளுடைய வணக்கத்தாரின் பக்தியையும் உத்தமத்தையும்கூட சாத்தான் எதிர்த்து கேள்வி கேட்டிருக்கிறான். (யோபு 1:8-11; 2:3, 4) அந்த விவாதங்களும் அவற்றை தீர்க்க யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற வழியும் நமது ஜீவனைக் காட்டிலும் அதிக முக்கியமானவை. எப்படி?
17 துன்பத்தை தற்காலிகமாக கடவுள் அனுமதித்திருப்பதால் மற்றவர்களும் சத்தியத்தை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைப் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்: நமக்கு ஜீவன் கிடைப்பதற்காக இயேசு துன்பப்பட்டார். (யோவான் 3:16) அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம் அல்லவா? ஆனால் மற்றவர்களும் ஜீவனைப் பெற நாம் இன்னும் கொஞ்சகாலம் கஷ்டங்களைப் பொறுத்துக்கொள்வதற்கு மனமுள்ளவர்களாக இருக்கிறோமா? முடிவு வரை சகித்திருப்பதற்கு, நம்முடைய ஞானத்தைவிட யெகோவாவின் ஞானம் மிக உயர்ந்தது என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். (ஏசாயா 55:9) இந்த விவாதங்களை நிரந்தரமாக தீர்ப்பதற்கு, அதுவும் நம்முடைய நித்திய நன்மைக்காக தீர்ப்பதற்கு மிகவும் சரியான சமயம் எதுவோ அந்தச் சமயத்தில் அவர் நிச்சயம் துன்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவார். உண்மையில், இந்த விவாதங்களை தீர்க்க இதைவிட சிறந்த வழி ஏது? கடவுள் அநீதியுள்ளவர் அல்லவே!—ரோமர் 9:14-24.
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள்”
18 அவசர உணர்வைக் காத்துக்கொள்வதற்கு நாம் யெகோவாவுடன் நெருங்கியிருக்க வேண்டும். யெகோவாவுடன் நாம் வைத்திருக்கும் நல்ல உறவைக் கெடுப்பதற்கு சாத்தான் தன் முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறான் என்பதை மறந்துவிடாதீர்கள். முடிவு வரவே வராது, நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலோ பைபிள் தராதரங்களின்படி வாழ்வதிலோ எந்தப் பிரயோஜனமுமில்லை என்பதை நாம் நம்பும்படி சாத்தான் செய்வான். ஆனால் “அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கி”றான். (யோவான் 8:44) ‘பிசாசை எதிர்ப்பதற்கு’ நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். யெகோவாவுடன் நாம் வைத்திருக்கும் உறவை ஒருபோதும் அற்பமாக நினைத்துவிடக் கூடாது. “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என பைபிள் நம்மை அன்புடன் உந்துவிக்கிறது. (யாக்கோபு 4:7, 8, NW) நீங்கள் யெகோவாவிடம் எப்படி இன்னும் நெருங்கிவர முடியும்?
19 ஜெபத்துடன் தியானிப்பது இன்றியமையாதது. வாழ்க்கையின் பிரச்சினைகள் உங்களை திணறடிப்பதாக தோன்றும்போது, இருதயத்தில் இருப்பதை யெகோவாவிடம் கொட்டுங்கள். நீங்கள் எந்தளவு குறிப்பாக கேட்கிறீர்களோ அந்தளவு தெளிவாக பதிலையும் காண முடியும். நீங்கள் மனதில் நினைத்திருந்த மாதிரியே எப்பொழுதும் பதில் இருக்காது, ஆனால் அவரை மகிமைப்படுத்துவதும் உத்தமத்தைக் காத்துக்கொள்வதுமே உங்கள் ஆசையாக இருந்தால், பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிப்பதற்குத் தேவைப்படும் உதவியை அவர் வழங்குவார். (1 யோவான் 5:14) உங்களுடைய வாழ்க்கையில் அவருடைய வழிநடத்துதலை காணும்போது, நீங்கள் அவரிடம் இன்னும் நெருங்கி வருவீர்கள். பைபிளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளபடி, யெகோவாவின் பண்புகளையும் வழிகளையும் பற்றி வாசித்து அதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதும் முக்கியம். இப்படி தியானிப்பது அவரை நன்றாக அறிந்துகொள்ள உங்களுக்கு உதவும்; அது உங்களுடைய இருதயத்தைத் தூண்டி அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை ஆழமாக்கும். (சங்கீதம் 19:14) வேறெதையும்விட அந்த அன்பே சோதனையை எதிர்த்து நிற்பதற்கும் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதற்கும் உங்களுக்கு உதவும்.—1 யோவான் 5:3.
20 யெகோவாவிடம் நெருங்கியிருப்பதற்கு, நமது சக விசுவாசிகளுடன் நெருங்கியிருப்பதும் முக்கியம். இந்தச் சிற்றேட்டின் கடைசி பகுதியில் இது சிந்திக்கப்படும்.
படிப்புக் கேள்விகள்
• இயேசு தமது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் மிகப் பயங்கரமான அழுத்தத்தை எதிர்ப்பட்டபோது என்ன செய்தார், என்ன செய்யும்படி தமது சீஷர்களை உந்துவித்தார்? (பாரா. 1-4)
• சாத்தான் ஏன் யெகோவாவின் வணக்கத்தாரை குறி வைத்திருக்கிறான், என்னென்ன வழிகளில் அவன் நம்மை சோதிக்கிறான்? (பாரா. 5-8)
• சோதனையை எதிர்த்து நிற்பதற்கு, ஏன் இடைவிடாமல் ஜெபிக்க வேண்டும் (பாரா. 9-12), ஏன் நம்முடைய எதிர்பார்ப்புகள் நியாயமானவையாக இருக்க வேண்டும் (பாரா. 13-15), ஏன் விவாதங்களை நினைவிற்கொள்ள வேண்டும் (பாரா. 16-17), ஏன் ‘கடவுளிடம் நெருங்கிவர’ வேண்டும் (பாரா. 18-20)?
[பக்கம் 25-ன் பெட்டி]
சோர்வுறச் செய்யும் அம்சங்கள் சில
ஆரோக்கியம்/வயது. நாள்பட்ட வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அல்லது வயோதிகத்தின் குறைபாடுகளால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், கடவுளுடைய சேவையில் அதிகம் ஈடுபட முடியவில்லையே என நாம் கவலைப்படக்கூடும்.—எபிரெயர் 6:10.
ஏமாற்றம். கடவுளுடைய வார்த்தையை பிரசங்கிக்கையில் நல்ல பலன் கிடைக்கவில்லையென்றால், நாம் சோர்ந்து போகக்கூடும்.—நீதிமொழிகள் 13:12.
எதற்கும் லாயக்கில்லை என்ற உணர்ச்சிகள். ஒருவர் பல வருடங்களாக மோசமாக நடத்தப்பட்டிருந்தால், யாருமே தன்னை நேசிக்கவில்லை, ஏன் யெகோவாவும்கூட தன்னை நேசிக்கவில்லை என நினைத்துக் கொள்ளக்கூடும்.—1 யோவான் 3:19, 20.
புண்பட்ட உணர்ச்சிகள். சக விசுவாசி ஒருவரால் ஆழமாக புண்படுத்தப்பட்டிருந்தால், மிகவும் மனச்சோர்வுற்று கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்து கொள்வதையோ வெளி ஊழியத்தில் பங்கு பெறுவதையோ நிறுத்திவிட தூண்டப்படலாம்.—லூக்கா 17:1.
துன்புறுத்தல். பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் உங்களை எதிர்க்கலாம், துன்புறுத்தலாம், அல்லது கேலி செய்யலாம்.—2 தீமோத்தேயு 3:12; 2 பேதுரு 3:3, 4.
[பக்கம் 26-ன் படம்]
சோதனையை எதிர்த்துப் போராடுவதற்கு ‘இடைவிடாமல் ஜெபம் பண்ணும்படி’ இயேசு நம்மை ஊக்குவித்தார்