மத்தேயு எழுதியது
26 இந்த எல்லா விஷயங்களையும் இயேசு பேசி முடித்த பின்பு தன்னுடைய சீஷர்களிடம், 2 “உங்களுக்குத் தெரிந்தபடி, இன்னும் இரண்டு நாட்களில் பஸ்கா பண்டிகை வரப்போகிறது,+ அப்போது மனிதகுமாரன் மரக் கம்பத்தில்* அறைந்து கொல்லப்படுவதற்கு ஒப்படைக்கப்படுவார்”+ என்று சொன்னார்.
3 அந்தச் சமயத்தில், முதன்மை குருமார்களும் பெரியோர்களும்* தலைமைக் குருவாகிய காய்பா என்பவருடைய வீட்டின் உள்முற்றத்தில் ஒன்றாகக் கூடிவந்து,+ 4 இயேசுவைத் தந்திரமாக* பிடித்து* கொன்றுபோட திட்டம் போட்டார்கள்.+ 5 ஆனால், “பண்டிகையின்போது வேண்டாம், மக்கள் மத்தியில் ஒருவேளை கலவரம் ஏற்படலாம்” என்று பேசிக்கொண்டார்கள்.
6 பெத்தானியாவில், முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் இயேசு+ சாப்பிட* உட்கார்ந்திருந்தார். 7 அப்போது ஒரு பெண், விலை உயர்ந்த வாசனை எண்ணெயை வெண்சலவைக்கல் குப்பி ஒன்றில் எடுத்துவந்து, அதை அவருடைய தலையில் ஊற்ற ஆரம்பித்தாள். 8 அதைப் பார்த்த சீஷர்கள் கோபப்பட்டு, “ஏன் இதை இப்படி வீணாக்குகிறாள்? 9 இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று பேசிக்கொண்டார்கள். 10 இயேசு அதைத் தெரிந்துகொண்டு, “ஏன் இந்தப் பெண்ணின் மனதை நோகடிக்கிறீர்கள்? இவள் எனக்கு நல்லதுதான் செய்தாள். 11 ஏனென்றால், ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்,+ ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை.+ 12 இந்தப் பெண் என்னுடைய உடல்மேல் இந்த வாசனை எண்ணெயை ஊற்றி, நான் அடக்கம் செய்யப்படுவதற்கு என்னைத் தயார்செய்திருக்கிறாள்.+ 13 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உலகில் எங்கெல்லாம் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இந்தப் பெண் செய்த காரியமும் இவள் நினைவாகச் சொல்லப்படும்” என்று சொன்னார்.+
14 பின்பு, பன்னிரண்டு பேரில்* ஒருவனான யூதாஸ் இஸ்காரியோத்து+ முதன்மை குருமார்களிடம் போய்,+ 15 “அவரைக் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?”+ என்று கேட்டான். அவர்கள் 30 வெள்ளிக் காசுகள் கொடுப்பதாக அவனோடு ஒப்பந்தம் செய்தார்கள்.+ 16 அதுமுதல், அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சரியான சந்தர்ப்பத்தை அவன் தேடிக்கொண்டே இருந்தான்.
17 புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின்+ முதலாம் நாளில் சீஷர்கள் அவரிடம் வந்து, “பஸ்கா உணவைச் சாப்பிட நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.+ 18 அதற்கு அவர், “நீங்கள் நகரத்துக்குள் போய், இன்னாரைப் பார்த்து, ‘எனக்குக் குறிக்கப்பட்ட நேரம் நெருங்கிவிட்டது; உங்கள் வீட்டில் என் சீஷர்களோடு பஸ்கா பண்டிகையைக் கொண்டாடப்போகிறேன்’ என்று போதகர் சொன்னதாகச் சொல்லுங்கள்” என்றார். 19 சீஷர்களும் இயேசு சொன்னபடியே செய்து, பஸ்காவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
20 சாயங்காலம் ஆனபோது+ அவர் 12 சீஷர்களோடு சாப்பிட உட்கார்ந்திருந்தார்.+ 21 அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்” என்றார்.+ 22 அதைக் கேட்டு அவர்கள் மிகவும் துக்கப்பட்டு, “எஜமானே, அது நானா, நானா?” என்று ஒவ்வொருவரும் கேட்க ஆரம்பித்தார்கள். 23 அதற்கு அவர், “என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்துச் சாப்பிடுகிறவன்தான் என்னைக் காட்டிக்கொடுப்பான்.+ 24 மனிதகுமாரன் தன்னைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறபடியே உங்களைவிட்டுப் போகிறார் என்பது உண்மைதான்; ஆனால், மனிதகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக்+ கேடுதான் வரும்!+ அவன் பிறக்காமல் இருந்திருந்தாலே அவனுக்கு நல்லதாக இருந்திருக்கும்”+ என்று சொன்னார். 25 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸ், “ரபீ,* அது நானா?” என்று அவரிடம் கேட்டான். அதற்கு அவர், “அதை நீயே சொல்லிவிட்டாய்” என்று சொன்னார்.
26 அவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, இயேசு ரொட்டியை எடுத்து, ஜெபம் செய்து, அதைப் பிட்டு+ சீஷர்களிடம் கொடுத்து, “இதைச் சாப்பிடுங்கள், இது என் உடலைக் குறிக்கிறது”+ என்று சொன்னார். 27 அதோடு, ஒரு கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவர்களிடம் கொடுத்து, “நீங்கள் எல்லாரும் இதிலிருந்து குடியுங்கள்;+ 28 ஏனென்றால் இது, ‘ஒப்பந்தத்தை+ உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை’+ குறிக்கிறது; என் இரத்தம், பாவ மன்னிப்புக்கென்று+ பலருக்காகச் சிந்தப்படப்போகிறது.+ 29 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், என் தகப்பனுடைய அரசாங்கத்தில் புதிய திராட்சமதுவை உங்களோடு சேர்ந்து குடிக்கும் நாள்வரை இனி நான் திராட்சமதுவையே குடிக்க மாட்டேன்”+ என்று சொன்னார். 30 கடைசியில், கடவுளைப் புகழ்ந்து பாடல்கள் பாடிவிட்டு, ஒலிவ மலைக்கு அவர்கள் போனார்கள்.+
31 அப்போது இயேசு அவர்களிடம், “இன்று ராத்திரி எனக்கு நடக்கப்போவதைப் பார்த்து நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள்; ஏனென்றால், ‘நான் மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையில் இருக்கிற ஆடுகள் சிதறி ஓடும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.+ 32 ஆனால், நான் உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு உங்களுக்கு முன்னதாகவே கலிலேயாவுக்குப் போவேன்”+ என்று சொன்னார். 33 பேதுருவோ, “உங்களுக்கு நடக்கப்போவதைப் பார்த்து மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போகவே மாட்டேன்!”+ என்று சொன்னார். 34 அதற்கு இயேசு, “உண்மையாகவே உனக்குச் சொல்கிறேன், இன்று ராத்திரி சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று நீ மூன்று தடவை சொல்லிவிடுவாய்”+ என்றார். 35 ஆனால் பேதுரு, “நான் உங்களோடு சாக வேண்டியிருந்தாலும் உங்களைத் தெரியாது என்று சொல்லவே மாட்டேன்”+ என்றார். மற்ற எல்லா சீஷர்களும் அதையே சொன்னார்கள்.
36 பின்பு, கெத்செமனே என்ற இடத்துக்கு இயேசு தன் சீஷர்களோடு வந்தார்;+ அப்போது அவர் அவர்களிடம், “நான் அங்கே போய் ஜெபம் செய்கிற வரைக்கும் நீங்கள் இங்கேயே உட்கார்ந்திருங்கள்”+ என்று சொல்லிவிட்டு, 37 பேதுருவையும் செபெதேயுவின் இரண்டு மகன்களையும்+ தன்னோடு கூட்டிக்கொண்டு போனார்; அப்போது, அவர் மிகுந்த துக்கமும் மனக்கலக்கமும் அடைந்து,+ 38 “உயிர் போகுமளவுக்கு நான் துக்கத்தில் தவிக்கிறேன். நீங்கள் இங்கேயே இருந்து, என்னோடு விழித்திருங்கள்”+ என்று அவர்களிடம் சொன்னார். 39 பின்பு சற்று முன்னே போய், மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து, “தகப்பனே, இந்தக் கிண்ணம்*+ என்னிடமிருந்து நீங்க முடியுமானால் நீங்கும்படி செய்யுங்கள். ஆனாலும், என்னுடைய விருப்பத்தின்படி* அல்ல, உங்களுடைய விருப்பத்தின்படியே* நடக்கட்டும்”+ என்று ஜெபம் செய்தார்.+
40 அதன் பின்பு, அவர் வந்து சீஷர்களைப் பார்த்தபோது அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்; அப்போது பேதுருவிடம், “உங்களால் ஒரு மணிநேரம்கூட என்னோடு சேர்ந்து விழித்திருக்க முடியவில்லையா?+ 41 சோதனைக்கு இணங்கிவிடாதபடி+ நீங்கள் விழித்திருந்து,+ தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.+ உள்ளம் ஆர்வமாக இருக்கிறது, உடலோ பலவீனமாக இருக்கிறது”+ என்று சொன்னார். 42 மறுபடியும் அவர் இரண்டாவது தடவை போய், “தகப்பனே, நான் இந்தக் கிண்ணத்திலிருந்து குடிப்பதைத் தவிர வேறு வழி இல்லையென்றால், உங்களுடைய விருப்பத்தின்படியே* நடக்கட்டும்”+ என்று சொல்லி ஜெபம் செய்தார். 43 சீஷர்கள் பயங்கர தூக்கக் கலக்கத்தில் இருந்ததால், அவர் மறுபடியும் வந்து பார்த்தபோது அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். 44 அதனால் அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், முன்பு சொன்ன விஷயங்களையே சொல்லி மூன்றாவது தடவை ஜெபம் செய்தார். 45 பின்பு சீஷர்களிடம் வந்து, “இப்படிப்பட்ட நேரத்தில் தூங்கிக்கொண்டும் ஓய்வெடுத்துக்கொண்டும் இருக்கிறீர்களே! இதோ, மனிதகுமாரன் பாவிகளிடம் காட்டிக்கொடுக்கப்படுகிற நேரம் நெருங்கிவிட்டது. 46 எழுந்திருங்கள், போகலாம். இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவன் நெருங்கி வந்துவிட்டான்” என்று சொன்னார். 47 அவர் பேசிக்கொண்டிருந்தபோதே, பன்னிரண்டு பேரில் ஒருவனாகிய யூதாஸ் அங்கே வந்தான்; முதன்மை குருமார்களும் பெரியோர்களும் அனுப்பிய ஆட்கள் வாள்களோடும் தடிகளோடும் பெரிய கூட்டமாக அவனோடு வந்தார்கள்.+
48 அவரைக் காட்டிக்கொடுப்பவன், “நான் யாருக்கு முத்தம் கொடுக்கிறேனோ அவர்தான் அந்த ஆள்; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சொல்லியிருந்தான். 49 அதனால் அவன் நேராக இயேசுவிடம் போய், “ரபீ,* வாழ்க!” என்று சொல்லி, மென்மையாக முத்தம் கொடுத்தான். 50 ஆனால் இயேசு அவனிடம், “நீ எதற்காக இங்கே வந்தாய்?”+ என்று கேட்டார். அப்போது, அந்த ஆட்கள் அவர் பக்கத்தில் போய் அவரைப் பிடித்துக் கைது செய்தார்கள். 51 ஆனால், இயேசுவோடு இருந்தவர்களில் ஒருவர் தன் வாளை உருவி, தலைமைக் குருவின் வேலைக்காரனைத் தாக்கினார்; அவனுடைய காது அறுந்துபோனது.+ 52 அப்போது இயேசு அவரிடம், “உன் வாளை உறையில் போடு;+ வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்.+ 53 இந்த நொடியே 12 லேகியோனுக்கும் அதிகமான தேவதூதர்களை+ அனுப்பச் சொல்லி என் தகப்பனிடம் என்னால் வேண்டிக்கொள்ள முடியாதென்றா நினைக்கிறாய்? 54 நான் அப்படிச் செய்தால், இதெல்லாம் நடக்க வேண்டுமென்று சொல்கிற வேதவசனங்கள் எப்படி நிறைவேறும்?” என்று கேட்டார். 55 அந்தச் சமயத்தில் இயேசு அந்தக் கூட்டத்தாரிடம், “ஒரு கொள்ளைக்காரனைப் பிடிக்க வருவது போல வாள்களோடும் தடிகளோடும் என்னைப் பிடிக்க வந்திருக்கிறீர்களா? நான் தினமும் ஆலயத்தில் உட்கார்ந்து கற்பித்துக்கொண்டிருந்தேன்;+ அப்போதெல்லாம் நீங்கள் என்னைக் கைது செய்யவில்லை.+ 56 ஆனால், தீர்க்கதரிசிகள் எழுதிவைத்த வசனங்கள் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்திருக்கின்றன”+ என்று சொன்னார். அதன் பின்பு, சீஷர்கள் எல்லாரும் அவரை விட்டுவிட்டு ஓடிப்போனார்கள்.+
57 இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குருவான காய்பாவிடம் கொண்டுபோனார்கள்;+ அங்கே வேத அறிஞர்களும் பெரியோர்களும் கூடியிருந்தார்கள்.+ 58 ஆனால் பேதுரு தூரத்திலிருந்தபடியே அவரைப் பின்தொடர்ந்து, தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம்வரை போனார்; என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்ப்பதற்காக அந்த வீட்டு வேலைக்காரர்களோடு உட்கார்ந்துகொண்டார்.+
59 இதற்கிடையில், முதன்மை குருமார்களும் நியாயசங்க உறுப்பினர்கள் எல்லாரும், இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகள் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்;+ 60 பொய் சாட்சி சொல்ல பலர் முன்வந்தாலும்,+ தகுந்த குற்றச்சாட்டுகள் எதுவும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பின்பு இரண்டு பேர் முன்வந்து, 61 “இந்த மனுஷன், கடவுளுடைய ஆலயத்தைத் தரைமட்டமாக்கி மூன்று நாட்களுக்குள் அதைக் கட்டியெழுப்புவதாகச் சொன்னான்”+ என்றார்கள். 62 அப்போது, தலைமைக் குரு எழுந்து, “உனக்கு எதிராக இவர்கள் சாட்சி சொல்கிறார்களே, நீ பதில் சொல்ல மாட்டாயா?”+ என்று அவரிடம் கேட்டார். 63 ஆனால், இயேசு அமைதியாக இருந்தார்.+ அதனால் தலைமைக் குரு, “உயிருள்ள கடவுள்மேல் ஆணையாகச் சொல், நீதான் கடவுளுடைய மகனாகிய கிறிஸ்துவா?”+ என்று கேட்டார். 64 அதற்கு இயேசு, “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் உங்கள் எல்லாரிடமும் சொல்கிறேன், இதுமுதல் மனிதகுமாரன்+ வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும்+ வானத்து மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்”+ என்று சொன்னார். 65 அதைக் கேட்டு தலைமைக் குரு தன் மேலங்கியைக் கிழித்து, “இது தெய்வ நிந்தனை!+ இனி நமக்கு வேறு சாட்சிகள் எதற்கு? இதோ! இந்த நிந்தனையை நீங்களே இப்போது கேட்டீர்கள். 66 உங்கள் அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டும்”+ என்று சொன்னார்கள். 67 பின்பு, அவருடைய முகத்தில் துப்பி,+ தங்கள் கைமுஷ்டிகளால் குத்தினார்கள்.+ மற்றவர்கள் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ 68 “கிறிஸ்துவே, நீ ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால், உன்னை அடித்தது யாரென்று சொல் பார்க்கலாம்!” என்றார்கள்.
69 பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தார்; அப்போது, ஒரு வேலைக்காரப் பெண் அவரிடம் வந்து, “கலிலேயனாகிய இயேசுவோடு நீயும்தான் இருந்தாய்!”+ என்று சொன்னாள். 70 ஆனால், அவர் எல்லாருக்கும் முன்பாக அதை மறுத்து, “நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை” என்றார். 71 பின்பு, அவர் வாசல் மண்டபத்துக்குப் போனபோது, மற்றொரு பெண் அவரைப் பார்த்து, “நாசரேத்தூர் இயேசுவோடு இந்த ஆளும் இருந்தான்”+ என்று அங்கிருந்தவர்களிடம் சொன்னாள். 72 ஆனால் அவர் மறுபடியும் அதை மறுத்து, “எனக்கு அந்த மனுஷனைத் தெரியவே தெரியாது!” என்று ஆணையிட்டுச் சொன்னார். 73 கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, அங்கு சுற்றிலும் நின்றுகொண்டிருந்தவர்கள் பேதுருவிடம் வந்து, “நிச்சயமாகவே நீயும் அவர்களில் ஒருவன்தான்; உன் பேச்சே உன்னைக் காட்டிக்கொடுக்கிறது” என்று சொன்னார்கள். 74 அப்போது அவர், தான் சொல்வது பொய்யாக இருந்தால் தன்மேல் சாபம் வரட்டும் என்று சொல்லி, “அந்த மனுஷனை எனக்குத் தெரியவே தெரியாது!” எனச் சத்தியம் செய்ய ஆரம்பித்தார். உடனே சேவல் கூவியது. 75 “சேவல் கூவுவதற்கு முன்பு, என்னைத் தெரியாதென்று மூன்று தடவை நீ சொல்லிவிடுவாய்”+ என்று இயேசு சொன்னது அப்போது பேதுருவின் ஞாபகத்துக்கு வந்தது. அதனால், அவர் வெளியே போய்க் கதறி அழுதார்.