படிப்பு 9
ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுதல்
1 சுவிசேஷ எழுத்தாளன் லூக்கா தன் நண்பன் தேயோப்பிலுவுக்கு எழுதினார்: “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் . . . அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.” (லூக். 1:3, 4) ஆக, ஆராய்ச்சி செய்து தன் தலைப்புப் பொருளைப்பற்றி வரிசையாக உண்மைகளைச் சேகரித்தப் பின் அவர் அவற்றை புரிந்துகொள்ளத்தக்க வரிசைமுறையில் ஒழுங்குபடுத்த தொடங்கினார். ஆகவே நம்முடைய பேச்சுக்களை தயாரிப்பதில் இதே பழக்கத்தைப் பின்பற்றுவது நமக்கு நன்மை பயப்பதாயிருக்கும். இது ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுவதை அர்த்தப்படுத்துகிறது.
2 முக்கிய எண்ணங்களை தேர்ந்தெடுத்தல். பேசுவது, விசேஷமாக கடவுளுடைய வார்த்தையைக் கலந்துபேசுவது, மற்றொருவரின் மனதுக்கு கருத்துக்களை எடுத்துச்செல்லும் நோக்கத்துக்காக இருப்பதால், ஒரு பேச்சில் நாம் எடுத்துச்செல்ல எதிர்பார்க்கும் எண்ணங்கள் முதலாவது நம்முடைய சொந்த மனதில் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பொருளை சேகரித்தப் பின்பு, கேட்போர் நீங்கள் பேசிமுடித்தப்பின் சரியாக எதை தங்களோடு எடுத்துச்செல்ல எதிர்பார்க்கிறீர்கள் என்பதை தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறீர்கள். இதை ஒரே வாக்கியத்தில் அமைக்க முயற்சிசெய்யுங்கள். உங்கள் பேச்சின் சாராம்சம் இதில் அடங்கியிருந்தால், கேட்போர் நினைவில் வைத்துக்கொள்ள நீங்கள் விரும்பும் மையக் கருத்தை அது உள்ளடக்கியிருந்தால், இதுவே உங்கள் பேச்சின் தலைப்பாக இருக்க வேண்டும். இதை எழுதிவைப்பது பிரயோஜனமாயிருப்பதை காண்பீர்கள், அப்பொழுது நீங்கள் தயார்செய்யும்போது அதை எடுத்துப்பார்க்க முடியும்.
3 இப்பொழுது நீங்கள் திரட்டியிருக்கும் பொருளிலிருந்து இந்த ஒரே முக்கிய தலைப்பைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான முக்கிய கருத்துக்களைத் தேர்ந்தெடுங்கள். இவையே பேச்சின் பிரதான குறிப்புகளாகச் சேவிக்க வேண்டும். உங்கள் பொருளை அட்டைகளில் வகைப்படுத்தியிருப்பீர்களானால், உங்களுக்கு முன்னால் ஒரு மேசையில் இவற்றை வரிசைமுறையில் வைக்கலாம். இப்பொழுது இந்தப் பிரதான குறிப்புகளை நிலைநிறுத்த உதவும் தேவையான மற்ற கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து, அது ஆதரிக்கும் பிரதான குறிப்புக்குப் பின்னால் அதனுடைய சரியான இடத்தில் ஒவ்வொன்றையும் வைக்கவும். திரட்டப்பட்டிருக்கும் பல்வேறு பிரதான குறிப்புகளையும் உபகுறிப்புகளையும் தேர்ந்தெடுத்துக் குறிப்புத்தாளில் சரியான இடத்தில் புகுத்துகையில், இவற்றில் சில உங்கள் தலைப்பின் விளக்கத்துக்கு குறிப்பிடத்தக்கவிதமாக அதிகத்தைச் சேர்க்காதிருப்பது கவனிக்கப்படலாம். இது இப்படியிருக்குமானால், அவற்றை நீக்கிவிட தயக்கம் வேண்டாம். தொடர்ச்சியாக அமையாத அல்லது பொருத்தமற்றப் பொருளைக்கொண்டு பேச்சை குழப்புவதைக் காட்டிலும் இதைச் செய்வது மேலானது. கருத்துக்களை அதிக தர்க்கரீதியாக அல்லது நடைமுறைக்கு ஏற்ற வரிசையில் வகைப்படுத்துவதையும்கூட நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்பட்ட முறையைப் பின்பற்றும்போது, தடையற்ற இணைப்பிலுள்ள குறைபாடுகளைக் குறிப்புத்தாளில் எளிதில் கண்டுகொள்ளமுடியும், அவற்றைத் திருத்திடவும் முடியும். இவ்விதமாக குறிப்புத்தாளிலுள்ள ஒவ்வொரு முக்கிய தலைப்பும் அதற்கு முன்னிருப்பதைத் தர்க்கரீதியாக பின்தொடருவதையும் தலைப்பை விரிவாக்குவதற்கு அது உதவுவதையும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். அந்த முக்கிய தலைப்புகளின் கீழுள்ள ஒவ்வொரு குறிப்பும் அதை நிலைநிறுத்த உதவிசெய்கையில், பேச்சில் தடைபடாத தர்க்கரீதியான கருத்துக்கள் நிச்சயமாகவே இருக்கும்.
4 போதனைக்காக நீங்கள் இப்பொழுதுதானே ஒழுங்குபடுத்தியிருக்கும் குறிப்புகள் உங்கள் பேச்சின் பொருளுரையாக இருக்க வேண்டும். இப்பொழுது உங்களுக்கு ஒரு முன்னுரையும் முடிவுரையும் தேவையாக இருக்கும். உங்கள் கலந்தாலோசிப்பை எவ்வாறு ஆரம்பிக்க நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள், நீங்கள் தயாரித்திருக்கும் அளிப்பின் அடிப்படையில் உங்கள் பேச்சின் நோக்கத்துக்கு இசைவாக கேட்போருக்குத் தூண்டுதலளிக்கும் ஒரு முடிவுரையைத் தேர்ந்தெடுங்கள். இப்பொழுது நீங்கள் இந்தப் பொருளை நியாயமான வகையில் முடிவான வடிவில் தாளில் எழுத ஆயத்தமாயிருக்கிறீர்கள். இது பல்வேறு வழிகளில் செய்யப்படலாம்.
5 குறிப்புத்தாள்களின் வகைகள். தலைப்புக் குறிப்புத்தாள் மற்றும் வாக்கிய குறிப்புத்தாள் என குறிப்புத்தாள் மிகப் பொதுவாக இரண்டு வகைப்படும். அடிக்கடி இரண்டும் சேர்ந்தே பயன்படுத்தப்படுகின்றன. தலைப்புக் குறிப்புத்தாளைத் தயாரிக்க, தலைப்பை வெறுமனே பக்கத்தின் மேற்புறத்தில் குறித்துக்கொள்ளவும். பின்னர் பிரதான குறிப்புகளை இடது மார்ஜினில் ஆரம்பித்து ஒவ்வொரு பிரதான குறிப்பையும் தலைப்புக்குக் கீழே சுருக்கமாக எழுதவும். ஒவ்வொரு பிரதான குறிப்புக்கும் உபகுறிப்புகள் ஓரத்தில் இடம்விட்டு, அதாவது அவை நிலைநிறுத்த உதவும் குறிப்புக்குக் கீழே மார்ஜினுக்குச் சிறிது வலப்பக்கமாக எழுதப்படலாம். இந்த உபகுறிப்புகள் அவற்றை நிலைநிறுத்த உதவும் கூடுதலான குறிப்புகளைக் கொண்டிருந்தால், அவை இன்னும் சற்று கூடுதலான இடம்விட்டு எழுதப்படலாம். இப்பொழுது உங்கள் தாளை வேகமாக நோட்டமிடுவதன் மூலம், கேட்போர் புரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பிரதான கருத்துக்களை எடுத்துச்செல்லும் முக்கியமான குறிப்புகள் எவை என்பதை பார்த்துவிடமுடியும். ஒரு பேச்சைக் கொடுக்கையில் இது பிரயோஜனமாயிருக்கிறது. ஏனென்றால் அவை அழுத்திக்கூறப்பட்டு அதிக நிலையாக பதிய வைக்கப்படும் பொருட்டு, நீங்கள் பேசுகையில் ஒவ்வொரு பிரதான கருத்திலுமுள்ள முக்கிய வார்த்தைகளைத் திரும்பச் சொல்லி இவற்றுக்கு அழுத்தம் கொடுக்கலாம். நீங்கள் கலந்துபேசுகையில் ஒவ்வொரு பிரதான குறிப்பின் சம்பந்தமாகவும் இதைச் செய்யுங்கள். இவ்வகையான குறிப்புத்தாளில் கொடுக்கப்பட்ட எந்த ஒரு குறிப்புக்கும் சுருங்கச் சொல்வதற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
6 பொதுவான அடுத்த வகை வாக்கிய குறிப்புத்தாளாகும். இந்த வகை குறிப்புத்தாளில், உங்கள் எல்லா வித்தியாசமான கருத்துக்களும் பொதுவாக முழு வாக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு வாக்கியமும் பேச்சில் ஒரு பாராவின் முக்கிய கருத்தாக இருக்கும் வகையில் சுருக்கிக் கூறப்படுகிறது. நிச்சயமாகவே பேச்சின் பிரதான குறிப்புகள் மேலெழும்பி நிற்கச் செய்வதற்கு இந்த வாக்கியங்களில் சில மற்றவற்றின் கீழ் ஓரத்தில் இடம்விட்டு எழுதப்படலாம். பேச்சைக் கொடுக்கையில், சில சமயங்களில் வாக்கியம் பேச்சாளரால் வாசிக்கப்பட்டு, பின்னர் அது சொல்லுக்குச் சொல் தயாரிப்பின்றி குறிப்புகளை வைத்துப் பேசப்படுவது போல விளக்கப்படுகிறது. இரண்டு வகை குறிப்புத்தாள்களிலும் அனுகூலங்கள் உண்டு. கருத்துக்கள் முழுமையாக சொல்லப்பட்டிருக்கும் வாக்கிய குறிப்புத்தாள் பொதுவாக பல வாரங்களுக்கு முன்பே தயாரிக்கப்படும் பேச்சுக்களுக்கு அல்லது பொதுப் பேச்சைப் போன்று பல மாத இடைவெளிகளில் திரும்பத்திரும்ப கொடுக்கப்படும் பேச்சுக்களுக்குச் சிறந்ததாக இருக்கிறது.
7 உங்கள் ஆரம்பநிலை குறிப்புத்தாளுக்கு நீங்கள் வாக்கிய அல்லது தலைப்புக் குறிப்புத்தாளில் எதையாகிலும் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்புகிற அளவு அது முழுமையாக இருக்கலாம். இவ்விதமாக கேட்போர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிற எல்லா நேர்த்தியான குறிப்புகளையும் உட்படுத்த நிச்சயமாயிருப்பீர்கள். இருந்தபோதிலும், பேச்சைக் கொடுக்கையில் சிலர் சுருக்கமான குறிப்புத்தாளையே விரும்புகின்றனர். பேச்சைக் கொடுப்பதற்காக நீங்கள் தயாரிக்கையில் இரண்டு குறிப்புத்தாள்களையும் உங்கள் முன்னால் கொண்டிருக்கலாம். சுருக்கமான பதிப்பை வைத்து நீங்கள் பழகிப்பாருங்கள். இதில் அடங்கியிருக்கும் குறிப்புகள் உங்கள் ஆரம்பநிலை குறிப்புத்தாளிலுள்ள அதிக விவரமான குறிப்புகள் அனைத்தையும் நினைவுக்கு கொண்டுவரும் வரையிலுமாக இதைச் செய்யுங்கள். சுருக்கமான குறிப்புத்தாளிலிருந்து இந்தக் குறிப்புகளை உங்களால் மனதுக்கு கொண்டுவரமுடிகையில் நீங்கள் பேச்சைக் கொடுக்க தயாராயிருக்கிறீர்கள்.
8 இவையே சுருக்கமாக ஒரு குறிப்புத்தாளை உண்டுபண்ணுவதிலிருக்கும் முக்கிய குறிப்புகளாகும். இப்பொழுது ஒரு பேச்சின் மூன்று முக்கிய பகுதிகளை விவரமாக சிந்திப்பது நமக்குப் பயனுள்ளதாயிருக்கும்.
9 முன்னுரை. முன்னுரை குறிப்புகளின் நோக்கம் கேட்போரின் அக்கறையைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். அந்த ஆரம்ப வாக்கியங்கள் உங்கள் தலைப்புப் பொருளின்பேரில் அவர்களுடைய அக்கறையைத் தூண்டி, ஏன் அது முக்கியத்துவமுள்ளதாய் இருக்கிறது என்பதை காண அவர்களுக்கு உதவ வேண்டும். குறிப்பாக முதல் வாக்கியம் கவனமான சிந்தனைக்குத் தகுதியுள்ளது. அது கேட்போருடன் இணக்கமான தொடர்பை ஏற்படுத்தி வைப்பது அத்தியாவசியமாகும். அது கருத்தை வற்புறுத்துவதாக அல்லது எதிர்ச்செயலாற்றுவதாக இருக்கக்கூடாது.
10 பலவகையான முன்னுரைகள் உண்டு. ஓர் உதாரணம் பயன்படுத்தப்படலாம் அல்லது கேட்போருக்குப் பரிச்சயமாயுள்ள ஏதோவொரு மேற்கோள் குறிப்பிடப்படலாம். பரிகாரத்தைத் தேவைப்படுத்தும் ஒரு பிரச்சினையை நீங்கள் அறிமுகப்படுத்தலாம். தலைப்புப் பொருளின் வரலாற்றுப் பின்னணிதானே அதன் அறிமுகமாக அமையலாம். ஒன்றன்பின் ஒன்றாக கேள்விகள் முன்வைக்கப்படலாம். நீங்கள் எடுத்துரைக்கப்போகும் பிரதான குறிப்புகளைக்கூட சுருக்கமாகச் சொல்லலாம்.
11 முன்னுரை பேச்சுக்கு கச்சிதமாகப் பொருந்துவது முக்கியமாகும். மனதில் பதியத்தக்க ஓர் உதாரணம் விசேஷமாக பேச்சாளர் தன் பேச்சு முழுவதிலும் அதை பயன்படுத்துவாராகில் மிகவும் பயனுள்ளதாயிருக்கும். இது பேச்சை அதிக அக்கறையூட்டுவதாயும், பின்பற்றுவதையும் நினைவில் வைப்பதையும் சுலபமாக்க உதவுவது மாத்திரமல்லாமல், உதாரணம் நன்கு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கும் பட்சத்தில் கோர்வையாக இருப்பதிலும் உதவிசெய்யும்.
12 முன்னுரையை அளிக்கும் முறை, கேட்போர் காண்பிக்கப்போகும் அக்கறையின் அளவோடு வெகுவாக சம்பந்தப்பட்டதாயிருக்கும். பேச்சாளர், பேச்சில் எந்த இடறுதலோ தயக்கமோ இல்லாமல் உறுதியான நம்பிக்கையான தொனியோடு தன் பேச்சில் இறங்க வேண்டும். இந்தக் காரணத்துக்காக ஒருசில பேச்சாளர்கள் தட்டுத்தடங்கலில்லாத ஓர் ஆரம்பத்தை உறுதிசெய்துகொள்ள தங்கள் பேச்சின் முதல் ஓரிரு வாக்கியங்களை அப்படியே எழுதிவைத்துக்கொள்வது பிரயோஜனமாயிருப்பதைக் காண்கின்றனர்.
13 பேச்சின் பொருளுரை. உங்கள் பேச்சின் பொருளுரையை விரிவாக்குவதற்கு பல வழிகள் உண்டு. குறைந்த முக்கியத்துவமுள்ள குறிப்புகளை முதலில் அளித்து பின்னர் அதிக பொருட்செறிவுள்ள குறிப்புகளை கடைசியாகச் சொல்லி ஓர் உச்சக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல நீங்கள் விரும்பலாம். அப்போஸ்தலர் 7:2-53-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள சொற்பொழிவிலிருப்பது போல காலவரிசைப்படியும்கூட பொருள் அளிக்கப்படலாம். அனைத்தையும் உள்ளிட்ட தலைப்பின் விரிவாக்கத்தினுடைய முக்கியமான போக்கின் அடிப்படையில் பேச்சைப் பிரதான பகுதிகளாக பிரித்துக்கொள்வது மற்றொரு நல்ல முறையாகும். உதாரணமாக, “மரணத்திலிருந்து ஒரு மீட்பு,” என்பது தலைப்பாக இருக்குமானால், “மரணம் எவ்வாறு வந்தது,” “மனிதவர்க்கம் மீட்பை அளிக்க இயலாது,” “அதை யார் மட்டுமே அளிக்கமுடியும், ஏன்,” “அளிக்கப்பட்ட மீட்பிலிருந்து ஆசீர்வாதங்கள்,” போன்ற பிரதான குறிப்புகளின்கீழ் நீங்கள் விரிவாக்கலாம்.
14 முதலாவது முழு சபைக்கும் பின்னர் மனைவிகளுக்கும், அடுத்து கணவன்மாருக்கும் பின்னர் பிள்ளைகளுக்கும் பவுல் அறிவுரை வழங்கியது போன்று சில சமயங்களில் உங்கள் பேச்சு சகஜமாக வகைப்படுத்தப்பட்டு பிரிக்கப்படலாம் என்பதை நீங்கள் காணக்கூடும். (எபேசியர், அதிகாரங்கள் 5 மற்றும் 6-ஐ பார்க்கவும்.) அல்லது உங்கள் பொருள் காரணம் மற்றும் விளைவுக்கு இணங்கவோ அல்லது பிரச்சினையைக் குறிப்பிட்டு பின்னர் பரிகாரத்தை முன்கொணரும் வகையிலோ விரிவாக்கப்பட அனுமதிப்பதை நீங்கள் காணக்கூடும். சில சமயங்களில் இந்த முறைகளில் இரண்டு அல்லது அதிகமானவற்றை பலன்தரத்தக்கவிதமாக இணைக்கமுடியும்.
15 சம்பவங்களை நேரடியாக காலக்கணக்கை அறிமுகப்படுத்தாமலே எடுத்துரைப்பது ஒரு பேச்சை விரிவாக்குவதற்கு மிகச் சாதாரணமான ஒரு முறையாகும். விரித்துரைக்கும் பொருள் ஒரு பேச்சுக்கு அதிகத்தைக் கூட்டுகிறது. இன்னும் மற்ற பேச்சுக்கள், அந்த நாளின் ஏதோவொரு விறுவிறுப்பான விவாதத்தைப் பற்றி ஆதரவாகவும் எதிராகவுமுள்ள தர்க்கத்தின் அடிப்படையில் அக்கறையூட்டும்வகையில் அமைக்கப்படலாம்.
16 கால அம்சத்தைச் சிந்தித்து, அளவுக்கு அதிகமானப் பொருளை உங்கள் குறிப்புத்தாளில் திணிக்கவேண்டாம். பயன்படுகிற பொருள் அதை விரிவாக்குவதற்கு போதிய நேரம் அனுமதிக்கப்படாவிட்டால், மதிப்பிழந்துவிடுகிறது. தவிர, ஒரு நபர் ஒரு தலைப்புப் பொருளின்பேரில் ஒரே சமயத்தில் தனக்குத் தெரிந்த எல்லா காரியங்களையும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அதே தலைப்புப் பொருளின் மற்ற கோணங்கள் வேறு ஒரு சமயம் விரிவாக்கப்படலாம். உங்கள் பேச்சின் பிரதான குறிப்பு ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான அளவு நேரத்தை நியமித்து, பின்னர் அந்த நேரத்துக்குள் பொருத்துவதற்கு உபயோகிக்கக்கூடியவகையில் பொருளை ஒழுங்குபடுத்தவும். முக்கியமாயிருப்பது என்னவென்றால் பொருளின் அளவல்ல, மாறாக அதன் பண்பே.
17 முடிவுரை. எந்த ஒரு பேச்சின் முடிவான பகுதியும் தயாரிப்பு வகையில் கணிசமான கவனத்தைப் பெற தகுதியுள்ளதாயிருக்கிறது. பேச்சின் பொருளுரையிலுள்ள விவாதத்தின் எல்லா குறிப்புகளையும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டுவந்து, கேட்போரை நம்பவைத்து, இப்படிப்பட்ட நம்பிக்கைக்கு இசைவாக செயல்பட தூண்டும்வகையில் அவற்றின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது அதன் நோக்கமாகும். அதே சமயத்தில் அது சுருக்கமாகவும் மிகவும் குறிப்பாகவும் இருத்தல் அவசியம்.
18 விரிவாக்கியிருக்கும் தலைப்புக்கு ஏற்ப, பல்வேறு வகைகளிலிருந்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம். பேச்சின் பிரதான குறிப்புகளைத் தர்க்கரீதியான வரிசையில் சுருக்கமாகக் கூறலாம். இது பின்தொடரவேண்டிய தெளிவான முடிவுக்கு வழிநடத்த வேண்டும். அல்லது தகவல் தனக்கு எவ்விதமாக பொருந்துகிறது, அளிக்கப்பட்ட தகவலின் பலனாக தான் என்ன செய்யமுடியும் என்பதைக் கேட்போருக்கு காண்பித்து நீங்கள் பொருத்தத்தின் ஒரு முடிவுரையைப் பயன்படுத்தலாம். சில பேச்சுக்களின் தொடர்பாக, குறிப்பாக வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கொடுக்கப்படும் பிரசங்கங்களில், தூண்டுதலளிக்கும் ஒரு முடிவுரையைக் கொண்டிருப்பதே சிறந்தது. உதாரணமாக அது பிரசுரத்தை ஏற்றுக்கொள்ள அல்லது அவருடைய வீட்டில் ஒரு பைபிள் படிப்புக்கான ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொள்ள வீட்டுக்காரரை உற்சாகப்படுத்தக்கூடும்.
19 முடிவு உச்சக்கட்டமாக கேட்போரின் மனதில் விட்டுச்செல்லவேண்டிய முக்கிய குறிப்பாகவும்கூட இருக்கலாம். பேச்சைப் பலன்தரத்தக்கவிதமாக முடிப்பதற்கு முன்னுரையில் குறிப்பிட்ட ஏதோ ஒன்றை முடிவில் இணைப்பதும்கூட பொருத்தமாக இருக்கிறது. ஒருவர் ஆரம்பத்தில் சொன்ன உதாரணத்தை அல்லது மேற்கோளை திரும்பவும் குறிப்பிடக்கூடும். ஏதோவொரு தீர்மானத்தைச் சென்றடைந்து பின்பற்றுவதனுடைய அவசரத்தன்மை அநேகமாக முடிவுரையில் முக்கியப்படுத்திக்காட்டப்படுகிறது. யோசுவா, அவருடைய மரணத்துக்குச் சற்றே முன்பாக தன் பிரியாவிடை பேச்சை முடிக்கையில் சொன்ன வார்த்தைகள் இதற்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது.—யோசு. 24:14, 15.
20 ஆகவே நல்ல குறிப்புத்தாளைக் கொண்ட ஒரு பேச்சு, கவனத்தைத் தூண்டும் முன்னுரையை அளிக்க வேண்டும் என்பதைக் காண முடிகிறது. அது தலைப்பை நிலைநிறுத்த கவனமாக தெரிந்துகொள்ளப்பட்ட முக்கிய குறிப்புகளைத் தர்க்கரீதியில் விரிவாக்குவதை உட்படுத்த வேண்டும். அளிக்கப்படும் வேதப்பூர்வமான புத்திமதிக்கு இசைவாக, கேட்போரைச் செயல்பட தூண்டும் ஒரு முடிவுரையையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்புத்தாளை உண்டுபண்ணும்போதே இந்த அனைத்துப் பகுதிகளும் தயாரிக்கப்பட வேண்டும். பேச்சுக்குத் திறம்பட்ட வகையில் குறிப்புத்தாளைத் தயாரிப்பது உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தக்கூடும். இது அர்த்தமுள்ளதாயும் கேட்போரின் மனதில் மதிப்புள்ள அறிவுரையை நிலையாக பதியவைப்பதாயுமுள்ள ஒரு பேச்சுக்கு உதவக்கூடும்.
[கேள்விகள்]
1-4. ஒரு பேச்சின் தலைப்பும் பிரதான குறிப்புகளும் எவ்வாறு தீர்மானிக்கப்படலாம்?
5, 6. தலைப்புக் குறிப்புத்தாள் மற்றும் வாக்கிய குறிப்புத்தாள் என்பதன் பொருள் என்ன?
7, 8. உண்மையில் பேச்சைக் கொடுப்பதற்கு உங்கள் குறிப்புத்தாளை வைத்து நீங்கள் என்ன செய்யலாம்?
9-12. (அ) ஒரு பேச்சினுடைய முன்னுரையின் நோக்கமென்ன? (ஆ) ஒரு வகையான முன்னுரைக்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
13-16. (அ) பேச்சின் பொருளுரை எவ்வாறு விரிவாக்கப்படலாம் என்பதை விளக்கவும். (ஆ) பேச்சின் நேரம் எவ்விதமாக பொருளுரையை தயாரிப்பதை பாதிக்க வேண்டும்?
17-20. முடிவுரைகள் ஏன் முக்கியமானவை, என்ன வழிகளில் அவை விரிவாக்கப்படலாம்?