‘கிறிஸ்துவின் சிந்தையை’ அறிதல்
“கர்த்தருக்குப் [“யெகோவாவுக்கு,” NW] போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.”—1 கொரிந்தியர் 2:16.
1, 2. பைபிளில், இயேசுவைப் பற்றி எதை வெளிப்படுத்துவதை முக்கியமென யெகோவா கண்டார்?
இயேசு எப்படிப்பட்ட ஜாடையில் இருந்தார்? அவருடைய தலைமயிரின் நிறம் என்ன? அவருடைய தோலின் நிறம்? அவருடைய கண்களின் நிறம்? அவருடைய உயரம்? அவருடைய எடை? ஓரளவுக்கு அவருடைய ஜாடை, கொஞ்சம்கூட பொருத்தமில்லாத ஜாடை என பல்வகை தோற்றங்களில் இயேசுவின் ஓவியங்கள் கடந்த நூற்றாண்டுகளில் பவனி வந்திருக்கின்றன. சில ஓவியங்கள் அவரை தைரியமான, உறுதியான, மனபலம்படைத்த ஆண்மகனாக தீட்டியிருக்கின்றன. மற்றவையோ அவரை பலவீனமானவராகவும் மந்தமானவராகவும் சித்தரித்திருக்கின்றன.
2 பைபிளோ இயேசுவின் ஜாடையை படம்பிடித்துக் காட்டுவதில்லை. மாறாக, அதைப் பார்க்கிலும் மிகவும் முக்கியத்துவமுடைய ஒன்றை, அதாவது இயேசு எப்படிப்பட்ட நபர் என்பதை யெகோவா வெளிப்படுத்தி இருக்கிறார். சுவிசேஷ பதிவுகள் இயேசு சொன்னவற்றையும் செய்தவற்றையும் படம்பிடித்துக் காட்டுவது மட்டுமல்லாமல், அவருடைய வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பின்னால் மறைந்திருந்த உணர்ச்சிகளையும் சிந்தனை பாங்கையும் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. ‘கிறிஸ்துவின் சிந்தை’ என்று அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுவதை கூர்ந்து நோக்குவதற்கு, தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த நான்கு சுவிசேஷ பதிவுகள் நமக்கு உறுதுணை புரிகின்றன. (1 கொரிந்தியர் 2:16) இயேசுவின் சிந்தைகளையும் உணர்ச்சிகளையும் ஆள்தன்மையையும் நாம் நன்றாய் அறிந்துகொள்வது முக்கியம். ஏன்? குறைந்தது இரண்டு காரணங்களுக்காக, அவற்றை நாம் இப்போது ஆராயலாம்.
3. கிறிஸ்துவின் சிந்தையை அறிந்துகொள்வது எந்த அறிவை நமக்கு அளிக்கக்கூடும்?
3 முதலாவதாக, கிறிஸ்துவின் சிந்தை யெகோவா தேவனுடைய சிந்தையை கோடிட்டு காட்டுகிறது. பிதாவுடன் இயேசு மிகவும் நெருங்கி இருந்ததால், அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது: “பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான்.” (லூக்கா 10:22) இது, ‘நீங்கள் பிதாவின் சாயலை அறிய விரும்பினால், என்னைப் பாருங்கள்’ என்று இயேசு சொல்வது போல் இருக்கிறது. (யோவான் 14:9) ஆகவே, இயேசு சிந்தித்த விதத்தையும் உணர்ந்த விதத்தையும் பற்றி சுவிசேஷங்களில் நாம் படிக்கும்போது, உண்மையில் யெகோவா எவ்வாறு சிந்திக்கிறார், உணர்கிறார் என்பதையே கற்றுக்கொள்கிறோம். இத்தகைய அறிவு, நம்முடைய கடவுளிடம் நெருங்கிவர நமக்கு உதவுகிறது.—யாக்கோபு 4:8, NW.
4. நாம் உண்மையில் கிறிஸ்துவைப்போல் நடப்பதற்கு, எதை முதலாவதாகக் கற்றுக்கொள்ள வேண்டும், ஏன்?
4 இரண்டாவதாக, கிறிஸ்துவின் சிந்தையை நாம் அறிவது, “அவருடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து [“பின்பற்ற,” NW]” நமக்கு உதவி செய்கிறது. (1 பேதுரு 2:21) இயேசுவைப் பின்பற்றுவது என்பது வெறுமனே அவருடைய வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதோ அவருடைய செய்கைகளை செய்துகொண்டு இருப்பதோ அல்ல. பேச்சும் செயல்களும், சிந்தனைகளாலும் உணர்வுகளாலும் கட்டுப்படுத்தப்படுவதால், கிறிஸ்துவுக்கு இருந்த அதே ‘மனப்பான்மையை’ நம்மில் வளர்ப்பதையே அர்த்தப்படுத்துகிறது. (பிலிப்பியர் 2:5, NW) வேறு வார்த்தைகளில் சொன்னால், கிறிஸ்துவைப் போல் நடப்பதற்கு, அவரைப் போலவே சிந்திக்கவும் உணரவும் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்; அபூரண மனிதராகிய நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். அப்படியானால், சுவிசேஷ எழுத்தாளர்களின் உதவியோடு கிறிஸ்துவின் சிந்தையை நாம் இப்போது கூர்ந்து நோக்கலாம். முதலாவதாக, இயேசுவின் சிந்தையிலும் உணர்விலும் செல்வாக்குச் செலுத்திய அம்சங்களை நாம் ஆராய்வோம்.
மனிதனாவதற்கு முன்னால் அவருடைய வாழ்க்கை
5, 6. (அ) நம்முடைய நெருங்கிய தோழர்கள் நம்மை எவ்வாறெல்லாம் மாற்றலாம்? (ஆ) கடவுளுடைய முதற்பேறான குமாரன், பூமிக்கு வருவதற்கு முன்பாக பரலோகங்களில் என்ன கூட்டுறவை வைத்திருந்தார், இது அவர்மீது என்ன செல்வாக்கை செலுத்தியது?
5 நம்முடைய நெருங்கிய தோழர்கள் நம் சிந்தனைகளையும், உணர்வுகளையும் செயல்களையும் நன்மையானதாகவோ தீமையானதாகவோ மாற்ற முடியும்.a (நீதிமொழிகள் 13:20) இயேசு பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் அவருக்கிருந்த கூட்டுறவை கவனியுங்கள். மனிதனாக வருவதற்கு முன்னால், ‘வார்த்தையாக,’ அல்லது கடவுளின் பிரதிநிதி பேச்சாளராக வாழ்ந்த இயேசுவின் வாழ்க்கைக்கு யோவானின் சுவிசேஷம் நம்முடைய கவனத்தை திருப்புகிறது. யோவான் சொல்கிறார்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை [ஒரு] தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.” (யோவான் 1:1, 2) யெகோவாவுக்கு ஓர் ஆரம்பம் இல்லாததால், “ஆதியில்” அந்த வார்த்தை கடவுளுடன் இருந்தார் என்பது கடவுளுடைய சிருஷ்டிப்பு செயல்களின் தொடக்கத்தைக் குறிக்க வேண்டும். (சங்கீதம் 90:2) இயேசு, ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர்.’ ஆகையால், மற்ற ஆவி சிருஷ்டிகளும் சடப்பொருளான சர்வலோகமும் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே அவர் இருந்தார்.—கொலோசெயர் 1:15; வெளிப்படுத்துதல் 3:14.
6 அறிவியல் மதிப்பீடுகள் சிலவற்றின்படி, சடப்பொருளான இந்த சர்வலோகம் குறைந்தது 1,200 கோடி ஆண்டுகாலமாக இருந்து வருகிறது. அந்த மதிப்பீடுகள் ஓரளவு உண்மையென வைத்துக்கொண்டாலும், கடவுளுடைய முதற்பேறான குமாரன், ஆதாம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன்பே தம்முடைய பிதாவுடன் யுகாயுகங்களாக நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்ந்தார். (மீகா 5:2-ஐ ஒப்பிடுக.) இவ்வாறு அவர்கள் இருவருக்கிடையே கனிவான, நெருக்கமான பிணைப்பு இருந்தது. ஞானமே உருவான இந்த முதற்பேறான குமாரன், மனிதனானதற்கு முன்பு இவ்வாறு சொன்னதாக கூறப்படுகிறது: “நான் அவர் [யெகோவாவின்] அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.” (நீதிமொழிகள் 8:30) நிச்சயமாகவே, அன்பின் ஊற்றுமூலரோடு நெருங்கிய கூட்டுறவை எண்ணற்ற யுகாயுகங்களாக செலவிட்டது, கடவுளுடைய குமாரனில் மிக அதிக செல்வாக்கு செலுத்தியது! (1 யோவான் 4:8) வேறு எவராலும் முடியாத வகையில் இந்தக் குமாரன் தம்முடைய பிதாவின் சிந்தனைகளையும், உணர்வுகளையும், வழிகளையும் அறிந்து பிரதிபலிப்பவரானார்.—மத்தேயு 11:27.
பூமிக்குரிய வாழ்க்கையும் செல்வாக்குகளும்
7. கடவுளுடைய முதற்பேறான குமாரன் பூமிக்கு வரவேண்டியதற்கான ஒரு காரணம் எது?
7 கடவுளுடைய குமாரன் இன்னும் அதிகம் கற்க வேண்டியிருந்தது; ஏனெனில், “நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்”கூடிய இரக்கமுள்ள பிரதான ஆசாரியராக அவரை தகுதிபெற செய்ய வேண்டும் என்பது யெகோவாவின் நோக்கம். (எபிரெயர் 4:15) இதற்கான தகுதிகளைப் பூர்த்திசெய்வதே குமாரன் ஒரு மனிதனாக பூமிக்கு வந்ததற்கான ஒரு காரணம். முன்பெல்லாம் பரலோகத்திலிருந்து இயேசுவால் பார்க்க மட்டுமே முடிந்த காரியங்களை—நம்முடைய சூழ்நிலைகளையும் செல்வாக்குகளையும்—இங்கே பூமியில் மாம்சமும் இரத்தமும் உடைய ஒரு மனிதராக சந்திக்க வேண்டியிருந்தது. இப்போதோ மனிதருடைய உணர்ச்சிகளை அவரே அனுபவிக்க முடிந்தது. சில சமயங்களில் அவர் களைப்படைந்தார், தாகமடைந்தார், பசியடைந்தார். (மத்தேயு 4:2; யோவான் 4:6, 7) அதைவிட, எல்லா வகை கஷ்டங்களையும் துன்பங்களையும் சகித்தார். இவ்வாறு, “கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,” பிரதான ஆசாரியராக தம்முடைய பொறுப்புக்கு முற்றிலும் தகுதிபெற்றவரானார்.—எபிரெயர் 5:8-10.
8. பூமியில் இயேசுவின் இளமைப் பருவத்தைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
8 பூமியில் இயேசுவின் ஆரம்பகால அனுபவங்களைப் பற்றியதென்ன? அவருடைய குழந்தைப் பருவத்தைப் பற்றிய பதிவு சில வரிகளே. சொல்லப்போனால், மத்தேயுவும் லூக்காவும் மாத்திரமே அவருடைய பிறப்பின் சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள். இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பே பரலோகத்தில் வாழ்ந்தார் என்பதை சுவிசேஷ எழுத்தாளர்கள் அறிந்திருந்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் எப்படிப்பட்டவரானார் என்பதை அவர் பூமிக்கு வருவதற்கு முந்தைய வாழ்க்கையே தெளிவாய் படம்பிடித்துக் காட்டியது. இருப்பினும், இயேசு முழு மனிதராக இருந்தார். பரிபூரணராக இருந்தபோதிலும், குழந்தைப் பருவத்திலிருந்து பிள்ளைப் பருவத்திற்கும், வாலிப பருவத்திலிருந்து வயதுவந்த பருவத்திற்கும் வளர்ந்து, கற்று முன்னேற வேண்டியிருந்தது. (லூக்கா 2:51, 52) இயேசுவின் வாலிப வாழ்க்கையைப் பற்றிய சில விஷயங்களை பைபிள் வெளிப்படுத்துகிறது. அந்த வாழ்க்கை இயேசுவை பாதித்தது என்பதில் சந்தேகமில்லை.
9. (அ) இயேசு ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தார் என்பதற்கு என்ன அறிகுறி உள்ளது? (ஆ) என்ன வகையான சூழ்நிலைமைகளில் இயேசு வளர்ந்திருக்க வேண்டும்?
9 இயேசு ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தாரென சான்றுகள் காட்டுகின்றன. அவர் பிறந்து ஏறக்குறைய 40 நாட்களுக்குப் பின்பு, யோசேப்பும் மரியாளும் ஆலயத்திற்குக் கொண்டுவந்த காணிக்கையிலிருந்து இது தெரிகிறது. சர்வாங்க தகனபலிக்கு ஒரு ஆட்டுக்குட்டி, பாவநிவாரண பலியாக ஒரு புறாக்குஞ்சு அல்லது காட்டுப் புறாவை கொண்டுவருவதற்கு பதிலாக, அவர்கள் ‘ஒரு ஜோடு காட்டுப்புறாவையோ, இரண்டு புறாக்குஞ்சுகளையோ’ கொண்டுவந்தார்கள். (லூக்கா 2:24) மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, இந்தக் காணிக்கை ஏழைகளுக்கான ஏற்பாடாக இருந்தது. (லேவியராகமம் 12:6-8) காலப்போக்கில் இந்த ஏழைக் குடும்பம் பெருகியது. இயேசுவின் அற்புத பிறப்பிற்குப் பின், யோசேப்புக்கும் மரியாளுக்கும் குறைந்தபட்சம் ஆறு பிள்ளைகளாவது பிறந்திருக்க வேண்டும். (மத்தேயு 13:55, 56) ஆகவே, இயேசு ஒரு பெரிய குடும்பத்தில், பெரும்பாலும் எளிமையான சூழலில் வளர்ந்திருக்க வேண்டும்.
10. மரியாளும் யோசேப்பும் கடவுள் பயமுள்ள ஆட்களாக இருந்தார்கள் என்று எது காட்டுகிறது?
10 இயேசு, தம்மை அக்கறையோடு கவனித்த, கடவுள் பயமுள்ள பெற்றோரால் வளர்க்கப்பட்டார். அவருடைய தாயாகிய மரியாள், ஒரு நல்ல பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை வாழ்த்துகையில், காபிரியேல் தூதன் சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: “கிருபை பெற்றவளே. வாழ்க, கர்த்தர் [“யெகோவா,” NW] உன்னுடனே இருக்கிறார்.” (லூக்கா 1:28) யோசேப்பும் தேவபக்தியுள்ள மனிதனாக விளங்கினார். தவறாமல் ஆண்டுதோறும் பஸ்கா ஆசரிப்புக்காக 150 கிலோமீட்டர் தூரம் எருசலேமுக்குப் பயணம் செய்தார். ஆண்கள் மாத்திரமே போக கடமைப்பட்ட போதிலும், மரியாளும் சென்றார்கள். (யாத்திராகமம் 23:17; லூக்கா 2:41) அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், யோசேப்பும் மரியாளும் சளைக்காமல் அங்கும் இங்கும் தேடிய பின்பே, 12 வயதுடைய இயேசுவை ஆலயத்தில் போதகர்களின் மத்தியில் கண்டுபிடித்தார்கள். கவலையோடு இருந்த தம் பெற்றோரிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “என் பிதாவின் வீட்டில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களோ”? (லூக்கா 2:49, தி.மொ.) “பிதா” என்ற இந்த வார்த்தையை கட்டாயமாகவே இளைஞனாகிய இயேசு அன்புடனும் கனிவுடனும்தான் சொல்லியிருக்க வேண்டும். ஒருபட்சத்தில், யெகோவாவே அவருடைய மெய்யான தகப்பன் என்று அவருக்குச் சொல்லப்பட்டிருந்தது என தெரிகிறது. மறுபட்சத்தில், இயேசுவை யோசேப்பு தன்னுடைய பிள்ளையாக ஏற்று வளர்த்த நல்ல தகப்பனாக இருந்திருக்க வேண்டும். தம்முடைய செல்லக் குமாரனை வளர்ப்பதற்கு, கடுகடுப்பான, குரூர குணம் படைத்த ஒரு மனிதனை யெகோவா நிச்சயமாகவே தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்!
11. என்ன கைத்தொழிலை இயேசு கற்றார், பைபிள் காலங்களில், இந்தத் தொழிலில் என்ன உட்பட்டிருந்தது?
11 இயேசு நாசரேத்தில் இருந்த சமயத்தில், தச்சுத் தொழிலை கற்றுக்கொண்டார். தன்னை தத்தெடுத்த தகப்பனாகிய யோசேப்பிடமிருந்தே பெரும்பாலும் இதை கற்றிருக்கலாம். அந்தக் கைத்தொழிலில் இயேசு மிகவும் திறமைபெற்று விளங்கினார். அதனாலேயே அவர் “தச்சன்” என்று அழைக்கப்பட்டார். (மாற்கு 6:3) பைபிள் காலங்களில், தச்சர்கள் வீடு கட்டும் வேலையையும், (மேஜை, நாற்காலி, பெஞ்சு உட்பட) பர்னிச்சர்களையும் விவசாயத்திற்குத் தேவையான கருவிகளையும் செய்வார்கள். பொ.ச. இரண்டாம் நூற்றாண்டிலிருந்த ஜஸ்டின் மார்ட்டிர், ட்ரைஃபோவுடன் உரையாடல் என்ற நூலில் இயேசுவைப் பற்றி இவ்வாறு எழுதினார்: “அவர் மனிதர் மத்தியில் இருந்தபோது, கலப்பைகளையும் நுகத்தடிகளையும் செய்யும் தச்சுத் தொழில் செய்தார்.” இத்தகைய வேலை எளிதானதல்ல, ஏனெனில் பூர்வகால தச்சனால் ஒருவேளை தனக்கு வேண்டிய மரக்கட்டைகளை விலைக்கு வாங்க முடியாதிருந்திருக்கலாம். பெரும்பாலும், அவன் வெளியில் சென்று ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, அதை கோடாரியால் வெட்டி, மரக்கட்டைகளை வீட்டுக்குச் சுமந்து சென்றிருக்க வேண்டும்! ஆகையால், வயிற்றுப் பிழைப்புக்காக உழைப்பதிலும், வாடிக்கையாளர்களோடு தொடர்பு கொள்வதிலும், குடும்பத்திற்குத் தேவைப்பட்ட வரவு செலவை சமாளிப்பதிலும் இருந்த போராட்டங்களை இயேசு அறிந்திருக்கலாம்.
12. இயேசு மரிப்பதற்கு முன்பாகவே யோசேப்பு மரித்திருப்பார் என்று எது காட்டுகிறது, இது இயேசுவை எப்படி பாதித்திருக்கும்?
12 இயேசு மூத்த மகனாக இருந்ததால், அதுவும் இயேசுவுக்கு முன்பே யோசேப்பு மரித்துவிட்டிருக்கலாம் என்பதால், அவர் குடும்பத்தைக் கவனிப்பதற்கு உதவியிருக்கலாம்.b ஜனவரி 1, 1900 ஜயன்ஸ் உவாட்ச் டவர் பிரதியில் இவ்வாறு சொல்லப்பட்டது: “இயேசு இளைஞராக இருந்தபோதே யோசேப்பு மரித்துவிட்டார் என்றும், இயேசு தச்சு வேலையை ஏற்று, குடும்பத்தை ஆதரிப்பவரானார் என்றும் பாரம்பரியம் அறிவிக்கிறது. இயேசுதாமே தச்சர் என்று அழைக்கப்பட்டதும், அவருடைய தாயும் சகோதரர்களும் குறிப்பிடப்பட்டு, யோசேப்பு குறிப்பிடப்படாமல் விடப்பட்டதும் இதற்கு ஓரளவு ஆதாரமாகும். (மாற்கு 6:3) . . . அப்படியானால், [லூக்கா 2:41-49-ல் பதிவுசெய்யப்பட்ட] அந்த சம்பவத்தின் சமயத்திலிருந்து தம்முடைய முழுக்காட்டுதலின் சமயம் வரை பதினெட்டு ஆண்டுகள் நம் கர்த்தரின் வாழ்க்கை காலம் அன்றாட வாழ்க்கைக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதில் செலவிடப்பட்டிருக்கலாம்.” அன்பான கணவரும் தகப்பனுமானவர் மறைகையில் உண்டாகும் மனவேதனையை மரியாளும் இயேசுவும் அவர்களுடைய பிள்ளைகளும் அறிந்திருப்பார்கள்.
13. இயேசு தம்முடைய ஊழியத்தைத் தொடங்கினபோது, ஏன் எந்த மனிதனுக்கும் இருந்திருக்க முடியாத அறிவுடனும், உட்பார்வையுடனும் ஆழ்ந்த உணர்ச்சியுடனும் அதை செய்ய முடிந்தது?
13 இயேசு வசதியான குடும்பத்தில் பிறக்கவில்லை. பாமர மக்களின் வாழ்க்கை கஷ்டத்தை அனுபவித்தார். பின்பு, பொ.ச. 29-ல், கடவுள் நியமித்த வேலையை அவர் நிறைவேற்றும் காலம் வந்தது. அந்த ஆண்டின் இலையுதிர் காலத்தின்போது, அவர் தண்ணீரில் முழுக்காட்டப்பட்டு, கடவுளின் ஆவிக்குரிய குமாரனாக பிறப்பிக்கப்பட்டார். ‘வானம் அவருக்குத் திறக்கப்பட்டது.’ இது, தாம் மனிதனாவதற்கு முன்பு பரலோகத்தில் வாழ்ந்த வாழ்க்கையை, அதோடு இணைந்த நினைவுகளும் உணர்ச்சிகளும் உட்பட, அவர் இப்போது ஞாபகப்படுத்திக்கொள்ள முடிந்ததை குறிக்கலாம். (லூக்கா 3:21, 22) ஆகையால், வேறெந்த மனிதனுக்கும் இருக்க முடியாத அறிவுடனும் உட்பார்வையுடனும் ஆழ்ந்த உணர்ச்சியுடனும் இயேசு தம் ஊழியத்தை ஆரம்பித்தார். சுவிசேஷ எழுத்தாளர்கள் பெரும்பாலும் இயேசுவின் ஊழிய நிகழ்ச்சிகளையே பதிவுசெய்ததில் ஆச்சரியமில்லை. அவர் சொன்ன, செய்த எல்லாவற்றையும்கூட அவர்களால் பதிவுசெய்ய முடியவில்லை. (யோவான் 21:25) ஆனால் அவர்கள் தேவாவியால் ஏவப்பட்டு எழுதியவை, உயிர்வாழ்ந்த எவரிலும் தலைசிறந்த மனிதரின் மனதைக் கூர்ந்து நோக்குவதற்கு நமக்கு உதவிசெய்கிறது.
இயேசு எத்தகையவர்
14. சுவிசேஷங்கள் எவ்வாறு இயேசுவை, அன்பும் இரக்கமும் நிறைந்த கனிவான ஒரு மனிதராக காட்டுகின்றன?
14 இயேசுவை கனிவானவராக, மிகுந்த இரக்கமுள்ளவராக சுவிசேஷம் படம்பிடித்து காட்டுகிறது. அவர் பல்வகை உணர்வுகளைக் காட்டினார்: குஷ்டரோகியின்மீது மனதுருகினார் (மாற்கு 1:40, 41); மனந்திரும்பாத ஆட்களுக்காக துக்கித்தார் (லூக்கா 19:41, 42); பணப் பேராசைகொண்ட காசுக்காரர்களின்மீது நியாயமான கோபங்கொண்டார். (யோவான் 2:13-17) பரிவிரக்கமுள்ளவராக இயேசு கண்ணீர்விடும் அளவுக்கு மனதுருகினார், தம்முடைய உணர்ச்சிகளை மூடி மறைக்கவில்லை. தம்முடைய அன்பான நண்பன் லாசரு இறந்தபோது லாசருவின் சகோதரியாகிய மரியாளின் சோகத்தைப் பார்த்தது, இயேசுவின் உள்ளத்தின் ஆழத்தில் தொட்டதால், அவரே எல்லாருக்கும் முன்பு கண்ணீர்விட்டு அழுதார்.—யோவான் 11:32-36.
15. மற்றவர்களைப் பற்றி இயேசுவுக்கிருந்த எண்ணத்திலும் அவர்களிடம் அவர் நடந்துகொண்ட விதத்திலும், அவருடைய கனிவான உணர்ச்சிகள் எவ்வாறு தெளிவாக தெரிந்தன?
15 முக்கியமாய், மற்றவர்களைப் பற்றி இயேசு எண்ணிய மற்றும் நடத்திய விதத்திலும், அவருடைய கனிவான உணர்ச்சிகள் தெளிவாக தெரிந்தன. ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் அவர் அணுகி, ‘ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைப்பதற்கு’ உதவி செய்தார். (மத்தேயு 11:4, 5, 28-30) மெல்ல வந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட உதிரப்போக்குள்ள ஸ்திரீயாக இருந்தாலும்சரி, அடங்காமல் கூக்குரலிட்ட பிச்சைக்காரனாக இருந்தாலும்சரி, துயரப்பட்டோருக்கு உதவ அவர் ஒருபோதும் தயங்கவில்லை. (மத்தேயு 9:20-22; மாற்கு 10:46-52) இயேசு மற்றவர்களில் நல்லதைக் கண்டார்; அவர்களைப் பாராட்டினார்; எனினும் தேவைப்பட்டபோது அவர்களைக் கடிந்துகொள்ளவும் செய்தார். (மத்தேயு 16:23; யோவான் 1:47; 8:44) பெண்கள் அதிக உரிமைகளை அனுபவிக்காத ஒரு காலத்தில் இயேசு அவர்களை தகுந்த மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தினார். (யோவான் 4:9, 27) பெண்களின் ஒரு தொகுதி தங்களுடைய சொந்த உடைமைகளைக் கொடுத்து அவருக்கு மனப்பூர்வமாய் ஊழியம் செய்ததை நன்கு புரிந்துகொள்ள முடிகிறது.—லூக்கா 8:3.
16. வாழ்க்கையையும் பொருளுடைமைகளையும் பற்றி இயேசு மிதமான நோக்குடையவராக இருந்தார் என்பதை எது மெய்ப்பித்துக் காட்டுகிறது?
16 வாழ்க்கையைக் குறித்து இயேசு சமநிலையான நோக்குடையவராக இருந்தார். பொருளுடைமைகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவரிடம் அதிக பொருட்கள் இல்லை என தெரிகிறது. “தலை சாய்க்க இடமில்லை” என்று அவர் சொன்னார். (மத்தேயு 8:20) அதேசமயத்தில், மற்றவர்களை சந்தோஷப்படுத்தினார். இசையும், பாடலும், ஆனந்தக் களிப்பும் கலந்த ஒரு கலியாண விருந்துக்கு இயேசு சென்றபோது, அந்த நிகழ்ச்சியின் மகிழ்ச்சியைக் கெடுப்பவராக அவர் இல்லை என்பது தெளிவு. மெய்யாகவே, இயேசு தம்முடைய முதல் அற்புதத்தை அங்கு நடப்பித்தார். திராட்சரசம் தீர்ந்துவிட்டபோது, தண்ணீரை மிகச் சிறந்த திராட்சரசமாக மாற்றினார். இது, “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்” ஒரு பானம். (சங்கீதம் 104:15; 2:1-11) இவ்வாறு அந்த விருந்து தடங்கலின்றி இனிதாய் நடந்தது, பெண்ணும் மாப்பிள்ளையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகவில்லை என்பதிலும் சந்தேகமில்லை. ஊழியத்தில் நெடுநேரமாகவும் கடினமாகவும் இயேசு உழைத்த சந்தர்ப்பங்கள் அதிகமாக குறிப்பிடப்பட்டதிலிருந்து அவரது சமநிலை பற்றி கூடுதலாக புரிந்துகொள்ள முடிகிறது.—யோவான் 4:34.
17. இயேசு தனித்தன்மை வாய்ந்த போதகராக இருந்தது ஏன் ஆச்சரியமாக இல்லை, அவருடைய போதகங்கள் எதை வெளிக்காட்டின?
17 இயேசு தனித்தன்மை வாய்ந்த போதகராக இருந்தார். அவருடைய போதகத்தில் பெரும்பான்மையானவை, அவருக்கு நன்றாகப் பழக்கப்பட்டிருந்த அன்றாட வாழ்க்கையின் உண்மைகளைக் குறிப்பிட்டன. (மத்தேயு 13:33; லூக்கா 15:8) அவர் போதித்த முறை இணையற்றதாக இருந்தது—எப்போதும் தெளிவாகவும், எளிதாகவும், நடைமுறைக்குரியதாகவும் இருந்தது. அவர் போதித்த விஷயமோ, எப்படிப்பட்டதென்று சொல்லி முடியாதது. தமக்குச் செவிகொடுத்துக் கேட்டவர்கள், யெகோவாவின் சிந்தனைகளையும், உணர்வுகளையும், வழிகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவருடைய இருதயப்பூர்வ ஆவலை அவருடைய போதகங்கள் வெளிக்காட்டின.—யோவான் 17:6-8.
18, 19. (அ) இயேசு எதைப் பயன்படுத்தி விஷயங்களை தெளிவாக விளக்குவதன் மூலம் தம்முடைய பிதாவை வெளிப்படுத்தினார்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன ஆலோசிக்கப்படும்?
18 உவமைகளை அடிக்கடி பயன்படுத்தி, எளிதில் மறந்துவிட முடியாதபடி விஷயங்களை தெளிவாக விளக்குவதன் மூலம், இயேசு, தம்முடைய பிதாவை வெளிப்படுத்தினார். கடவுளுடைய இரக்கத்தைப் பற்றி பொதுவாகப் பேசுவது ஒரு விஷயம். அதே சமயத்தில், மனந்திரும்பி தன்னிடம் வரும் தன் குமாரனைக் கண்டவுடன் உள்ளம் கனிந்து, ‘ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனை முத்தஞ்செய்யும்,’ மன்னிக்கும் ஒரு தகப்பனுக்கு யெகோவாவை ஒப்பிடுவதோ முற்றிலும் வேறு விஷயம். (லூக்கா 15:11-24) மதத் தலைவர்கள், பொதுமக்களைத் தாழ்வாக நோக்கின கடுமையான பண்பாட்டை ஒதுக்கித் தள்ளிய இயேசு, தமது பிதா, அணுகக்கூடியவர், பெருமைபாராட்டும் பரிசேயனின் பகட்டான ஜெபத்தைப் பார்க்கிலும், தாழ்மையான ஆயக்காரனின் மன்றாட்டுகளை மேலாகக் கருதினவர் என்று விளக்கினார். (லூக்கா 18:9-14) சின்னஞ்சிறு அடைக்கலான் குருவி தரையில் விழுகையில் அதை அறிகிற அக்கறையுள்ள ஒரு கடவுளாக யெகோவாவை இயேசு வர்ணித்தார். “பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குத் திரும்பவும் உறுதிகூறினார். (மத்தேயு 10:29, 31) ஜனங்கள் இயேசுவின் ‘போதக முறையைக்’ குறித்து ஆச்சரியப்பட்டு, அவரிடமாக நெருங்கிவரும்படி கவரப்பட்டது ஏன் என்று நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. (மத்தேயு 7:28, 29) ஒரு சந்தர்ப்பத்தில் “திரளான ஜனங்கள்,” மூன்று நாட்கள், உணவும் உண்ணாமல் அவர் அருகிலேயே இருந்தார்கள்!—மாற்கு 8:1, 2.
19 கிறிஸ்துவின் சிந்தையை, யெகோவா தம்முடைய வார்த்தையில் வெளிப்படுத்தியிருப்பதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம். எனினும், கிறிஸ்துவின் சிந்தையை நாம் நம்மில் வளர்த்து, மற்றவர்களிடம் எப்படிக் காட்டலாம்? இது அடுத்த கட்டுரையில் ஆலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a ஆவி சிருஷ்டிகள் தங்கள் கூட்டுறவால் செல்வாக்குச் செலுத்தப்படலாம் என்பது வெளிப்படுத்துதல் 12:3, 4-ல் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அங்கு சாத்தான், மற்ற ‘நட்சத்திரங்களை,’ அதாவது ஆவி குமாரர்களை தன்னுடன் ஒரு கலகத்தில் சேர்ந்துகொள்ளும்படி தன் செல்வாக்கை பயன்படுத்திய ‘வலுசர்ப்பமாக’ சித்தரித்துக் காட்டப்படுகிறான்.—யோபு 38:7-ஐ ஒப்பிடுக.
b 12 வயதான இயேசுவை ஆலயத்தில் கண்டுபிடித்தபோதுதான் யோசேப்பு கடைசியாக குறிப்பிடப்பட்டிருக்கிறார். இயேசுவின் ஊழிய தொடக்கத்தில், கானா ஊர் கலியாண விருந்தின்போது யோசேப்பு இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. (யோவான் 2:1-3) பொ.ச. 33-ல் மரத்தில் அறையப்பட்ட இயேசு, மரியாளை அன்பான அப்போஸ்தலன் யோவான் கவனிக்கும்படி ஒப்படைத்தார். அப்போது யோசேப்பு இன்னும் உயிரோடிருந்திருந்தால், இயேசு அவ்வாறு செய்திருக்க மாட்டார்.—யோவான் 19:26, 27.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நாம் கிறிஸ்துவின் சிந்தையை அறிவது ஏன் முக்கியம்?
• இயேசு மனிதனாவதற்கு முன் என்ன கூட்டுறவை உடையவராக இருந்தார்?
• பூமிக்குரிய தம்முடைய வாழ்க்கையின்போது இயேசு என்ன சூழ்நிலைமைகளையும் செல்வாக்குகளையும் தானே நேருக்கு நேர் அனுபவித்தார்?
• சுவிசேஷங்கள், இயேசுவின் ஆள்தன்மையைப் பற்றி எதை வெளிப்படுத்துகின்றன?
[பக்கம் 10-ன் படம்]
இயேசு ஒரு பெரிய குடும்பத்தில், பெரும்பாலும் எளிமையான சூழலில் வளர்ந்திருக்க வேண்டும்
[பக்கம் 12-ன் படங்கள்]
12-வயது இயேசுவின் பதில்களை கேட்டபோதும் அவரது புரிந்துகொள்ளும் திறமையை கண்டபோதும் போதகர்கள் வாயடைத்துப் போனார்கள்