அந்தப் பொன் விதி—ஏன் இன்னும் செல்லத்தக்கதாக இருக்கிறது?
கலப்படமற்ற பொன்னின் ஒளி ஒருபோதும் குறைவதில்லை, ஆகவே பொன்னில் செய்யப்படும் நகைகள் உயர்வாக மதிக்கப்பட்டு அருமையாகப் பேணப்படுகிறது. பொன் அதன் மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதன் காரணமாக சேதப்பட்ட பொன்னாலானப் பொருட்களை எறிந்துவிடுவதற்குப் பதிலாக பொற்கொல்லர்கள் விலையேறப்பெற்ற உலோகத்தை வைத்துப் புதிய கலைத்திறன் அமைந்த வேலைபாட்டை மீண்டும் உருவாக்குகிறார்கள்.
அதேவிதமாகவே இயேசு பொன்விதியை சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகக் கூறியபோதிலும், அதன் மதிப்பு இன்னும் குறைந்துவிடவில்லை. அது செல்லத்தக்கதாக இருப்பதற்குரிய காரணங்களை ஆராய்ந்து பார்ப்பது அல்லது தீர்மானிப்பதன் மூலம் நமக்கு இன்று அதனுடைய மதிப்பை நாம் நல்லவிதமாக மதித்துணர முடியும்.
இயேசு, “ஆதலால் மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்யவிரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” என்ற பொன்விதியை நமக்குக் கொடுத்தபோது அவர் மேலுமாகச் சொன்னார்: “இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.” (மத்தேயு 7:12) அவர் பேசுவதை செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த இயேசுவின் சீஷர்களும் மற்றவர்களும் இதை எவ்விதமாகப் புரிந்துகொண்டார்கள்?
“நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும்” அர்த்தப்படுத்துவது என்ன
“நியாயப்பிரமாணம்”, ஆதியாகமத்திலிருந்து உபாகமம் வரையாகச் செல்லும் பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை உண்டுபண்ணின தொடக்கக் காலத்துக்குரிய எழுத்துகளைக் குறிப்பிடுவதாக இருந்தது. இவை தீமையை நீக்கக்கூடிய ஒரு வித்தை உற்பத்தி செய்வது யெகோவாவின் நோக்கமாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன. (ஆதியாகமம் 3:15) அந்தப் பூர்வ பைபிள் புத்தகங்களில், பொ.ச.மு. 1513-ல் யெகோவா, சீனாய் மலையில் மோசேயை மத்தியஸ்தனாகக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த நியாயப்பிரமாணம் அல்லது கட்டளைகளின் ஒரு தொகுதி உள்ளடங்கியிருந்தது.
தெய்வீகப் பிரமாணம், இஸ்ரவேலரை அவர்களைச் சுற்றியிருந்த புறமத தேசங்களிலிருந்து பிரித்து வைத்தது, இஸ்ரவேலர் யெகோவாவுக்கு முன்பாகத் தங்கள் தனிச்சலுகைக்குரிய நிலைநிற்கையை விட்டுக்கொடுக்கக்கூடிய எதையும் செய்யக்கூடாதவர்களாக இருந்தனர். அவர்கள் அவருடைய பிரத்தியேகமான உடைமையாக இருந்தனர், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் அவ்விதமாகவே நிலைத்திருக்க வேண்டும். (யாத்திராகமம் 19:5; உபாகமம் 10:12, 13) ஆனால் கடவுளிடமாக அவர்களுக்கிருந்த கடமைகளோடுகூட இஸ்ரவேலில் வாசமாயிருக்கும் அந்நியருக்கு இஸ்ரவேலர் நன்மை செய்ய வேண்டிய பொறுப்பை மோசேயின் நியாயப்பிரமாணம் விவரமாக விளக்கியிருந்தது. உதாரணமாக அது சொன்னது: “உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூறுகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா. (NW)” (லேவியராகமம் 19:34) இஸ்ரவேலில் ராஜாக்களின் காலத்தில், எருசலேமில் கடவுளுடைய ஆலயத்தைக் கட்டுவதில் பங்குகொள்வது போன்ற அநேக சிலாக்கியங்களை அவர்கள் மத்தியில் வாசம் செய்த பரதேசிகள் அனுபவித்துக் களித்தனர்.—1 நாளாகமம் 22:2.
இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம் வேசித்தனம், கொலை, திருட்டு மற்றும் பொருளாசையைத் தடைசெய்தது. இந்தக் கட்டளைகளும், “வேறே எந்தக் கற்பனையும் உன்னிடத்தில் நீ அன்புகூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்கிற நல்லொழுக்கப் போதனையில் தொகையாய் அடக்க”ப்படக்கூடும். அப்போஸ்தலனாகிய பவுல் மேலுமாகச் சொன்னான்: “அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.”—ரோமர் 13:9, 10.
நியாயப்பிரமாணம், பொன்விதியின் மெய்யான அஸ்திரவாரத்தை விவரித்துக் கூறுவதாக இருந்தால், “தீர்க்கதரிசனங்களைப்” பற்றி என்ன?
எபிரெய வேதாகமத்தின் தீர்க்கதரிசனப் புத்தகங்கள் அதேவிதமாகவே பொன்விதியின் செல்லத்தக்கத்தன்மையை உறுதி செய்கின்றன. அவை யெகோவா தேவனை, தம்முடைய நோக்கங்களை உண்மையுடன் நிறைவேற்றுபவராகக் காண்பிக்கின்றன. அபூரணராக இருந்தபோதிலும் அவருடைய சித்தத்தைச் செய்ய முயன்று தங்கள் ஏறுமாறான செயல்களுக்காக மெய்யான மனந்திரும்புதலைக் காண்பிக்கும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களை அவர் ஆசீர்வதிக்கிறார் என்பதை அவை காட்டுகிறது. “உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமை செய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மை செய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப் பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள்.”—ஏசாயா 1:16, 17.
கடவுளுடைய மக்கள் மற்றவர்களுக்கும் கடவுளுக்கும் செம்மையானதைச் செய்தபோது, யெகோவா தம்முடைய ஆதரவை உறுதியளித்தார். “யெகோவா சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைகொண்டு, நீதியைச் செய்யுங்கள்; . . . இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப்பற்றிக் . . . கொண்டிருக்கிற மனுபுத்திரனும் சந்தோஷமுள்ளவர்கள்.”—ஏசாயா 56:1, 2, NW.
கிறிஸ்து அவருடைய சபையை வழிநடத்துகிறார்
கிறிஸ்து நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றவந்தார், அவருடைய காலம் முதற்கொண்டு யெகோவாவின் நித்திய நோக்கம் படிப்படியாக முன்னேறிவந்திருக்கிறது. (மத்தேயு 5:17; எபேசியர் 3:10, 11, 17–19) மோசேயின் பழைய நியாயப்பிரமாணத்திற்குப் பதிலாக, புதிய உடன்படிக்கை ஏற்பட்டது, இது அபிஷேகம் பண்ணப்பட்ட யூதரையும் புறஜாதி கிறிஸ்தவர்களையும் ஏற்றுக்கொள்கிறது. (எரேமியா 31:31–34) என்றபோதிலும் நம்முடைய நாளிலுள்ள கிறிஸ்தவ சபை, இன்னும் பொன்விதியைப் பின்பற்றுகிறது. இந்த விதியின் செல்லத்தக்கத்தன்மையை ஏற்றுக்கொள்வதற்கு கூடுதலான காரணம் இதோ: கிறிஸ்துவே நவீன கிறிஸ்தவ சபையின் சுறுசுறுப்பான தலைவராக இருக்கிறார். அவர் தம்முடைய கட்டளைகளை மாற்றிக்கொள்ளவில்லை. ஆவியால் ஏவப்பட்ட அவருடைய ஆலோசனை இன்னும் பொருத்தமாகவே இருக்கின்றது.
இந்தப் பூமியிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக, இயேசு, தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு சகல ஜாதிகளையும் சீஷராக்கி, “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி” அவர்களுக்கு உபதேசம்பண்ணும்படியாக கட்டளையிட்டார். அந்தக் கட்டளைகளில் பொன்விதியும் உட்பட்டிருக்கிறது. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு இவ்விதமாக உறுதியளித்தார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.”—மத்தேயு 28:19, 20.
லூக்கா 6:31-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வண்ணமாகவே, இயேசு கட்டளையிட்டார்: “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” மற்றவர்களுக்கு நன்மை செய்ய முன்முயற்சி எடுப்பதில் என்னே நேர்த்தியான ஒரு முன்மாதிரியை இயேசு வைத்தார்!
தம்முடைய பூமிக்குரிய ஊழிய காலத்தின்போது, இயேசு மக்கள் எதைச் சகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது என்பதைக் கவனமாக உற்று கவனித்து அவர்களுக்காக இரங்கினார். அவருடைய பிரசங்க பிரயாணங்கள் ஒன்றின்போது, ஜனக்கூட்டத்தாரைப் பார்த்து அவர்களுக்காக மனதுருகினார். ஆனால் அதற்கும் அதிகமாக, அவர்களுக்கு உதவிசெய்ய அவர் ஏற்பாடுகளைச் செய்தார். எவ்விதமாக? அவருடைய சீஷர்களை, ஜனங்களுடைய வீடுகளுக்குக் கொண்டுவந்த தீவிர பிரசங்க வேலையை ஒழுங்கமைப்பதன் மூலம் இதைச் செய்தார். அவர் கட்டளையிட்ட வண்ணமே: “எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.” இந்த வேலையில் அவருடைய ஆதரவும் அவருடைய தகப்பனின் ஆசீர்வாதமும் இருந்தது என்பது இயேசுவின் மேலுமான வார்த்தைகளிலிருந்து தெளிவாக தெரிகிறது: “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். . . . சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”—மத்தேயு 9:36–10:42.
பொன்விதி, மற்றவர்கள் சார்பாக உடன்பாடான நடவடிக்கையை அர்த்தப்படுத்துவதை மற்றொரு சந்தர்ப்பத்தில் இயேசு கொடுத்த விளக்கத்தில் காணமுடிகிறது: “உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. உங்களுக்கு நன்மை செய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. . . . உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள் . . . அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.” (லூக்கா 6:32, 33, 35) இதன் விளைவாக, இன்னும் செல்லத்தக்கதாக இருக்கும் பொன்விதியைக் கடைப்பிடிப்பது, நாம் தனிப்பட்டவிதமாக அறிந்திராத ஆட்களுக்கும்கூட நன்மை செய்வதற்கு முன்முயற்சி செய்ய நம்மைத் தூண்டுவதாக இருக்கும்.
இன்னும் செல்லத்தக்கது, இன்னும் பயனுள்ளது
பொன்விதி இன்னும் செல்லத்தக்கதாக இருக்கிறது என்பதற்கு ஒருவேளை அதிக நம்பவைக்கிற அத்தாட்சி, அதன்படி வாழ்கிறவர்களின் உண்மை அனுபவங்களிலிருந்து வருவதாக இருக்கிறது. கடவுளுடைய சட்டங்களுக்கிசைவாக, தங்களைத் தினந்தோறும் நடத்திக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் மிகுந்த சந்தோஷத்தையும் அநேகமாக எதிர்பாரா ஆசீர்வாதங்களையும் கண்டடைகிறார்கள். ஒரு கிறிஸ்தவப் பெண், அவள் வழக்கமாகச் சென்றுவந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஆட்களிடம் மரியாதையாகவும் தயவாகவும் இருப்பதன் மூலம் மருத்துவரும் செவிலியரும் அவளை கவனிக்க விசேஷித்த முயற்சி எடுத்துக்கொண்ட விதத்தினால் தான் பயனடைந்ததைக் கண்டாள்.
விரைவாகக் கட்டப்படும் ராஜ்யமன்ற திட்டங்களில் பங்குகொள்ளும் யெகோவாவின் சாட்சிகளும், பொன்விதியின் செல்லத்தக்கத்தன்மைக்கு சான்றளிக்கக்கூடும். கட்டிட வேலை நடைபெறும் இடத்துக்கு அருகாமையிலுள்ளவர்களிடம், என்ன திட்டமிடப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதற்காகச் செய்யப்படும் தயவான சந்திப்புகள் அநேகமாக உடன்பாடான பிரதிபலிப்பைக் கொண்டுவந்திருக்கிறது. இவ்விதமாக, முன்னர் சாட்சிகளை எதிர்த்த ஆட்கள், இவர்கள் தங்கள் அயலாருக்கு நன்மைச் செய்வதைக் கவனிக்கிறார்கள், தங்கள் வேலையில் கடவுளுடைய மக்கள் ஒத்துழைக்கும் விதத்தை நேரடியாக அவர்கள் காண்கிறார்கள். இதன்விளைவாகச் சிலர் கட்டிட வேலைக்கு நேரடியாகவோ அல்லது தேவையானப் பொருட்களைத் தருவித்துக் கொடுப்பதன் மூலமாகவோ உதவிசெய்ய முன்வந்திருக்கிறார்கள்.—சகரியா 8:23-ஐ ஒப்பிடவும்.
இங்கிலாந்திலுள்ள லண்டனில் ஈரானைச் சேர்ந்த ஒரு சாட்சி கடையிலிருந்து கொஞ்சம் உணவுப்பண்டங்களை வாங்கியபோது, அவர் ஓர் அயல்நாட்டவராக இருந்ததன் காரணமாகக் கடைக்காரன் அவரை அவமரியாதையாக நடத்தினான். சாட்சி, தயங்காமல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக, மற்றத் தேசங்களைச் சேர்ந்த ஆட்களிடமாகத் தனக்கு எந்தக் கசப்பான உணர்ச்சிகளும் கிடையாது என்பதை தயவாகவும் சாதுரியமாகவும் விளக்கினார். மாறாக, பைபிள் செய்தியோடு சுற்றுவட்டாரத்திலிருக்கும் அனைவரையும் அவர் சந்தித்தார். விளைவு? கடைக்காரன், சாட்சி ஆர்டர் செய்த உணவுப்பண்டத்துக்குக் கூடுதலான அருஞ்சுவைப் பொருட்களைச் சேர்த்துக் கொடுத்தான்.
நிச்சயமாகவே பொன்விதி இப்படிப்பட்ட சிறிய தயவான செயல்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. நிச்சயமாகவே, யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியோடு தங்கள் அயலாரின் வீடுகளை ஒழுங்காகச் சந்திப்பதன் மூலம் செய்யும் நன்மையே, பெரிய அளவில் அதன் மிகப்பெரிய வெளிக்காட்டாக இருக்கிறது.
பொன்விதிப்படி வாழ்வது
பொன்விதியைப் பின்பற்றுவது என்பது மற்றவர்களிடமாக உங்கள் கவனத்தைத் திருப்புவதை அர்த்தப்படுத்துகிறது. அது ஓர் உடன்பாடான வழிகாட்டி நியமமாக இருக்கிறது. உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நன்மைச் செய்ய சந்தர்ப்பங்களை நீங்கள் தேடிக்கண்டுபிடிப்பது அவசியமாக இருக்கும். அவர்களிடம் தனிப்பட்ட வகையில் அக்கறையுள்ளவராக இருந்து, தாராளமாகப் பழகுகிறவர்களாயும், ஈடுபாடு கொண்டவர்களாயும் இருங்கள்! (பிலிப்பியர் 2:4) அவ்விதமாகச் செய்வதன் மூலம், நிறைவான ஆசீர்வாதங்களை நீங்கள் அறுவடைச் செய்வீர்கள். இயேசுவின் ஆலோசனையைப் பின்பற்றுகிறவர்களாக இருப்பீர்கள்: “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:16) அதற்கு மாறாக, அவரை ஊக்கமாகத் தேடி தினந்தோறும் பொன்விதிப்படி வாழ்ந்து வருகையில், யெகோவா உங்களுக்குப் பலனளிப்பவராக இருப்பார்.—எபிரெயர் 11:6. (w89 11/1)