விண்ணேற்பு___கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொள்கையா?
விண்ணேற்பு—இயேசுவின் தாய் மரியாள் மாம்சத்தில் பரலோகத்திற்கு ஏறிப்போனார் என்ற கோட்பாடு—லட்சக்கணக்கான ரோமன் கத்தோலிக்கர்களால் அருமையாகப் பேணப்படுகிறது. சரித்திராசிரியன் ஜார்ஜ் உவில்லியம் டக்லஸ் சொல்கிறார்: “கன்னி மரியாளின் விண்ணேற்பு அல்லது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுதல், அவருடைய விழாக்களில் மிகப் பெரியதாகவும் சர்ச் வருடத்தின் பிரதான விழாக் கொண்டாட்டங்களில் ஒன்றாகவும் [நீண்ட காலமாக] மதிக்கப்பட்டு வருகிறது.”
என்றாலும், மரியாள் அவ்வாறு பரலோகத்திற்கு ஏறிச் சென்றதாக பைபிள் சொல்வதில்லை என்று கத்தோலிக்க இறையியலாளர்கள் ஒத்துக்கொள்கின்றனர். உண்மையில், இந்த அருமையான கோட்பாடு நூற்றாண்டுகளாக சர்ச்சைக்கும் கசப்பான விவாதத்திற்குமுரிய பொருளாக இருந்து வருகிறது என்று பெரும்பாலான கத்தோலிக்கர்கள் உணர்வதில்லை. அப்படியானால், மரியாளின் விண்ணேற்பை ஒரு கொள்கையாகa சர்ச் எப்படித்தான் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியது? அது தெய்வீகமாக வெளிப்படுத்தப்பட்டது என்று கருதுவதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் வெறுமனே கொள்கையளவேயானவை அல்ல. அவை சத்தியத்தை நேசிப்பவர்கள் எவர்மேலும் ஆழமான பாதிப்பை உடையவையாய் இருக்கின்றன.
ஒரு கொள்கையின் பரிணாம வளர்ச்சி
இயேசுவின் மரணத்திற்குப் பின் முதல் நூற்றாண்டுகளில், பரலோகத்திற்கு மரியாளின் விண்ணேற்பு என்ற கருத்து கிறிஸ்தவர்களின் எண்ணத்திற்கு முற்றிலும் அறியப்படாததாய் இருந்தது என்றறிவது உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டுபண்ணக்கூடும். லாஸேர்வாடோரே ரோமானோவில் கத்தோலிக்க இறையியலாளர் ஷான் காலோ எழுதுகிறார்: “தொடக்கத்தில் மரியாளின் மரணத்தைப்பற்றிய எந்த நினைவும் கிறிஸ்தவ சமுதாயத்துடன் தொடர்புடையதாய் இருக்கவில்லை.”
ஆயினும், திரித்துவப் போதனை அதிகாரப்பூர்வமான சர்ச் கோட்பாடாக ஆனபிறகு, மரியாளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பாகம் கொடுக்கப்பட ஆரம்பித்தது. “கடவுளின் தாய்,” “பாவமின்றி கருத்தரிக்கப்பட்டவள்,” “மத்தியஸ்தம் செய்பவள்,” “பரலோகத்தின் ராணி,” என்பது போன்ற ஜொலிக்கும் பதங்கள் மரியாளுக்குப் பொருத்தப்படலாயிற்று. காலப்போக்கில், “மரியாளின் மரணத்தைப் பற்றிய ஆரம்பகால பாரம்பரியத்தின் மெளனம், மரியாளின் பரிபூரணத்தை அங்கீகரித்து, அவருக்கு வணக்கத்திற்குரிய மரியாதை செலுத்த விரும்பிய அந்தக் கிறிஸ்தவர்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லை. இவ்வாறு, பிரபலமான கற்பனையின் விளைப்பயனாக இருந்த விண்ணேற்பைப் பற்றிய விளக்கங்கள் உருவெடுத்தன,” என்று இறையியலாளர் காலோ காரணம் காட்டுகிறார்.
சுமார் பொ.ச. நான்காம் நூற்றாண்டில், விண்ணேற்புவாத கட்டுக்கதைகள் என்றழைக்கப்பட்டவை பரவலாயின. இந்த எழுத்துக்கள் பரலோகத்திற்கு மரியாள் எழுந்து போயிருப்பதாக நம்பப்படுவது பற்றிய விசித்திரமான பதிவுகளை அளித்தன. உதாரணத்திற்கு, “கடவுளுடைய பரிசுத்த தாயின் உறக்கம்” என்றழைக்கப்பட்ட பகுதியைக் கவனியுங்கள். அப்போஸ்தலன் யோவானைத் தவிர வேறு எவருக்கும் உரியதாக அது சொல்லப்படவில்லை, ஆனால் பெரும்பாலும் அது கிட்டத்தட்ட யோவானின் மரணத்திற்கு 400 வருடங்களுக்குப் பின் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இந்தப் போலியான பதிவின்படி, கிறிஸ்துவின் அப்போஸ்தலர் அற்புதகரமாக மரியாளிடம் கூட்டிச்சேர்க்கப்பட்டார்கள்; அங்கு மரியாள் குருடர், செவிடர், முடவர்களைக் குணப்படுத்துவதை அவர்கள் கண்டனர். முடிவாக, இங்கு வலியுறுத்தப்பட்டபடி, ஆண்டவர் இவ்வாறு மரியாளிடம் சொல்வதை அப்போஸ்தலர் கேட்டனர்: “இதுமுதற்கொண்டு, தங்கள் மதிப்புமிக்க சரீரம் பரதீஸுக்கு மாற்றப்படுவதாக; சமாதானமும், பரிசுத்த தூதர்களின் களிகூருதலும் இருக்கும் பரலோகத்தில் என் பிதாவின் பொக்கிஷங்களில் தங்களுடைய பரிசுத்த ஆத்துமா மேலோங்கி நிற்கும் பிரகாசத்துடன் இருப்பதாக; அப்போதிலிருந்து நிலைபேறுடைமை இருக்கும் என்று அறியப்படக்கடவது.”
அத்தகைய எழுத்துப்பதிவுகளுக்கு விசுவாசிகள் எப்படிப் பிரதிபலித்தனர்? மரியாள் வழிபாட்டவர் ரனே லாரன்டன் விவரிக்கிறார்: “பிரதிபலிப்புகள் மிகவும் பல்வேறு வகைப்பட்டவையாய் இருந்தன. மிக எளிதில் எதையும் நம்புபவர்கள், மேலுமான பிரதிபலிப்புமின்றி அந்த அழகான கதையின் பகட்டால் ஏமாற்றப்பட்டனர். பெரும்பாலும் எதிர்மாறானவையாகவும் ஆதாரப்பூர்வமற்றவையாகவும் இருக்கும் இந்த ஒவ்வாத பதிவுகளை, மற்றவர்கள் வெறுத்து ஒதுக்குகிறார்கள்.” இவ்வாறு விண்ணேற்பு கோட்பாடு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஒரு போராட்டத்தைக் கொண்டிருந்தது. மரியாளின் சரீரத்துடைய மீதங்கள் என்று சொல்லப்படுபவை சில இடங்களில் வணக்கத்திற்குரிய மரியாதை செலுத்தப்பட்டு வரும் உண்மையும் இந்தக் குழப்பத்தை அதிகரிப்பதாய் இருந்தது. அவருடைய மாம்ச சரீரம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்ற நம்பிக்கையுடன் இதை ஒத்துப்போகச் செய்வது கடினமாக இருந்தது.
13-ம் நூற்றாண்டில், மற்றுமநேக இறையியலாளர்களைப்போல், தாமஸ் அக்குவினாஸ், விண்ணேற்பை ஒரு கொள்கையாக விளக்குவது சாத்தியமல்ல, ஏனென்றால் “வேதவார்த்தை அதைப் போதிப்பதில்லை,” என்று வலியுறுத்தினார். இருந்தாலும், அந்த நம்பிக்கை தொடர்ந்து பிரபலமாக வளர்ந்து வந்தது; மரியாளின் நம்பப்பட்ட விண்ணேற்பைப் பற்றி ரஃபெல், கெரிஜியோ, டிஷன், காராட்சி, ரூபென்ஸ் போன்ற பிரபலமான ஓவியர்களுடைய படச்சித்தரிப்புகள் அதிகரித்தன.
மிக சமீப காலம் வரையாக அந்தப் பிரச்னை தீர்க்கப்படாமலேயே இருந்தது. நம்முடைய நூற்றாண்டின் முதற்பாதியான அவ்வளவு பிந்தினகாலம்வரைகூட, ஜெஸ்யுட் ஜூஸெப்பே ஃபிலாகிராஸியின்படி, கத்தோலிக்க அறிஞர்கள், விண்ணேற்பு கோட்பாட்டுக்கு “எப்போதும் சாதகமாய் இராத ஆய்வுகளையும் கலந்தாலோசிப்புகளையும்” தொடர்ந்து பிரசுரித்தனர். லியோ XIII, பயஸ் X, பெனடிக்ட் XV போன்ற போப்புகள்கூட, “இந்தக் காரியத்தைக் குறித்து தயக்கங்களைக் கொண்டிருந்தனர்.” ஆனால் நவம்பர் 1, 1950-ல், முடிவாக சர்ச் ஒரு திடமான நிலைநிற்கை எடுத்தது. போப் பயஸ் XII அறிவித்தார்: “எப்போதும் கன்னியாகிய மரியாள், கடவுளின் பாவமற்ற தாய், தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிவடைந்ததும், சரீரமும் ஆத்துமாவுமாக பரலோகத்தின் மகிமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்பது கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொள்கை என்று நாங்கள் வரையறுக்கிறோம்.”—ம்யூனிஃபிகென்டிஸ்யிமுஸ் டேயுஸ்.
பரலோகத்திற்கு மரியாளின் சரீரப்பிரகாரமான பயணத்தில் நம்பிக்கையானது, இனிமேலும் கத்தோலிக்கர் மத்தியில் தெரிவுசெய்யப்படக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை—அது இப்போது சர்ச்சின் கொள்கை. “யாராவது . . . நாங்கள் வரையறுத்ததை மறுக்கத் துணிந்தால் அல்லது தானாக ஒரு சந்தேகத்தை உண்டாக்கினால், அவன் தெய்வீக மற்றும் கத்தோலிக்க விசுவாசத்தின் தராதரத்திற்கு குறைவுபடுகிறான்,” என்று போப் பயஸ் XII அறிவித்தார்.
வேத எழுத்துக்கள் உண்மையில் என்ன சொல்கின்றன
ஆனால் எதன் அடிப்படையில், சர்ச் இந்தத் தைரியமான நிலைநிற்கையை எடுத்தது? விண்ணேற்பு கொள்கை “அதன் மூல ஆதாரமான அஸ்திவாரத்தை பரிசுத்த வேத எழுத்தில்” கொண்டிருப்பதாக போப் பயஸ் XII வலியுறுத்தினார். மரியாளின் விண்ணேற்பிற்கு நிரூபணமாக அடிக்கடி சுட்டிக்காண்பிக்கப்படும் வாசகங்களில் ஒன்று லூக்கா 1:28, 42. இந்த வார்த்தைகள் மரியாளைப்பற்றி இவ்வாறு சொல்கின்றன: “அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே இருக்கிறார்: பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே, . . . , உம்முடைய கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டதே.” (டூயே) மரியாள் “அருள் நிறைந்த”வர்களாக இருந்ததால், அவர் ஒருபோதும் மரணத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது என்று விண்ணேற்பு கொள்கையை நம்புபவர்கள் நியாயவாதம் செய்கின்றனர். மேலும் ‘தன் கர்ப்பத்தின் கனியை’ போலவே ‘ஆசீர்வதிக்கப்பட்டு’ இருப்பதால், இயேசுவை ஒத்த சிலாக்கியங்களை—அவருடைய பரலோகத்திற்கு ஏறிச் செல்லுதல் உட்பட—அவரும் கொண்டிருக்கவேண்டும். இது சரியான நியாயவாதம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஒரு காரியம் என்னவென்றால், “அருள் நிறைந்த” என்ற கூற்று ஒரு துல்லியமற்ற மொழிபெயர்ப்பு என்றும், லூக்காவால் பயன்படுத்தப்பட்ட மூல கிரேக்க கூற்று மிகத் திருத்தமாக “கடவுளின் தயவுக்குரிய பொருள்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது என்றும் மொழி வல்லுநர்கள் சொல்கின்றனர். இவ்வாறு கத்தோலிக்க ஜெரூசலம் பைபிள் லூக்கா 1:28-ஐ மொழிபெயர்க்கிறது: “களிகூரு, மிக உயர்வாக தயவுகூரப்பட்டவளே!” மரியாள் கடவுளால் “உயர்வாகத் தயவுகூரப்பட்ட”தால்தானே பரலோகத்திற்கு சரீரப்பிரகாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று முடிவு செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. முதல் கிறிஸ்தவ இரத்த சாட்சி ஸ்தேவான், அதேவிதமாகவே, உயர்வாகத் தயவுகூரப்பட்டவராய், அல்லது “அருள் நிறைந்த”வராக கத்தோலிக்க டூயே பைபிளில் பேசப்படுகிறார்—அவருக்கு எவ்வித சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டிருக்கவில்லை.—அப்போஸ்தலர் 6:8.
இருப்பினும், மரியாள் ஆசீர்வதிக்கப்பட அல்லது தயவுகூரப்படவில்லையா? ஆம், ஆனால் அக்கறைக்குரியவிதமாக, இஸ்ரவேலருடைய நியாயாதிபதிகளின் காலத்தில், யாகேல் என்ற பெண் “பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று கருதப்பட்டாள். (நியாயாதிபதிகள் 5:24, Dy) யாகேலும் சரீரப்பிரகாரமாக பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாள் என்று நிச்சயமாக ஒருவரும் வாதாடமாட்டார்கள். தவிர, இயேசு தாமே மாம்சத்தில் பரலோகத்திற்கு ஏறிச்சென்றார் என்ற மூலத்தின் அடிப்படையிலேயே விண்ணேற்பைப்பற்றிய முழு கருத்தும் சார்ந்திருக்கிறது. எனினும், இயேசு “ஆவியில்” “உயிரூட்டப்பட்டார்,” அல்லது உயிர்த்தெழுப்பப்பட்டார் என்று பைபிள் சொல்கிறது. (1 பேதுரு 3:18, Dy; ஒப்பிடவும் 1 கொரிந்தியர் 15:45.) “மாம்சமும் இரத்தமும் கடவுளுடைய ராஜ்யத்தை உரிமையாகப் பெற முடியாது,” என்று அப்போஸ்தலன் பவுல் மேலுமாகச் சொல்கிறார்.—1 கொரிந்தியர் 15:42-50, Dy.
ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு ஒரு பரலோக உயிர்த்தெழுதலைப்பற்றி பைபிள் பேசுகிறது என்பது உண்மைதான். என்றாலும், இந்தப் பொல்லாத யுகத்தின் கடைசி நாட்களின்போது ‘கர்த்தருடைய வந்திருத்தல்’ வரையாக இந்த உயிர்த்தெழுதல் தொடங்காது என்று 1 தெசலோனிக்கேயர் 4:13-17 தெளிவாகக் காண்பிக்கிறது. அதுவரையிலும், மற்ற ஆயிரக்கணக்கான உண்மையுள்ள கிறிஸ்தவர்களுடன் மரியாள் மரணத்தில் நித்திரையாய் இருப்பார்.—1 கொரிந்தியர் 15:51, 52.
மரியாள்—ஒரு விசுவாசமுள்ள பெண்
முன்குறிப்பிடப்பட்டவற்றைச் சொல்வதில் நாங்கள் மரியாளுக்கு எவ்வித அவமரியாதையையும் அர்த்தப்படுத்தவில்லை என்பதைக் குறித்து நிச்சயமாய் இருங்கள். சந்தேகமின்றி, மரியாள் ஒரு முன்மாதிரியான பெண்—பின்பற்றத் தகுதி வாய்ந்த விசுவாசமுள்ள ஒருவர். அவர் இயேசுவின் தாயாக ஆகும் சிலாக்கியமுள்ள பொறுப்பை, அது தேவைப்படுத்தக்கூடிய எல்லா சோதனைகள் மற்றும் தியாகங்களுடன்கூட உடனடியாக ஏற்றுக்கொண்டார். (லூக்கா 1:38; 2:34, 35) யோசேப்புடன் சேர்ந்து இயேசுவை தெய்வீக ஞானத்துடன் வளர்த்தார். (லூக்கா 2:51, 52) இயேசு கழுமரத்தில் துன்பம் அனுபவித்தபோது அவரோடு நிலைத்திருந்தார். (யோவான் 19:25-27) மேலும் ஓர் உண்மையுள்ள சீஷியாக, அவர் கீழ்ப்படிதலுடன் எருசலேமில் இருந்து, பெந்தெகொஸ்தே அன்று கடவுளுடைய ஆவி பொழிந்தருளப்பட்டதை அனுபவித்தார்.—அப்போஸ்தலர் 1:13, 14; 2:1-4.
மரியாளைப்பற்றி ஒரு திரித்துக்கூறப்பட்ட கருத்து சிருஷ்டிகரையும் கனப்படுத்துவதில்லை, மரியாளையும் கனப்படுத்துவதில்லை. மரியாள் கடவுளிடம் பரிந்துபேசும் ஒருவர் என்ற அடிப்படையற்ற வாதத்தை பலப்படுத்த விண்ணேற்பு கொள்கை உதவுகிறது. ஆனால் இயேசு கிறிஸ்து எப்போதாவது அப்படி ஒரு போதகத்தை ஆதரித்தாரா? எதிர்மாறாக, அவர் சொன்னார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.” (யோவான் 14:6, 14; ஒப்பிடவும் அப்போஸ்தலர் 4:12.) ஆம், இயேசு கிறிஸ்து மட்டுமே, மரியாள் அல்ல, சிருஷ்டிகரிடம் பரிந்து பேசுகிறார். இயேசுவின் மூலமாகவே—மரியாளின் மூலமாக அல்ல—நாம் “தேவைப்படும் சமயத்தில் உதவிக்காக” நமக்கு ஜீவனை அளித்தவரை அணுகவேண்டும்.—எபிரெயர் 4:16, ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வெர்ஷன், கேத்லிக் எடிஷன்.
மரியாளைப்பற்றிய உண்மையை ஏற்றுக்கொள்வது சிலருக்கு வேதனையாக இருக்கக்கூடும். குறைந்தபட்சம், நாம் நெடுங்காலமாகக் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் அருமையாகப் பேணிய கருத்துக்களையும் விட்டுவிடுவதை அது அர்த்தப்படுத்தக்கூடும். எனினும், சில நேரங்களில் வேதனையாக இருந்தாலும், முடிவில் சத்தியம் தானே ‘ஒருவரை விடுதலை ஆக்குகிறது.’ (யோவான் 8:32) “ஆவியிலும் சத்தியத்திலும்” வணங்குபவர்களை தம்முடைய பிதா நாடுவதாக இயேசு சொன்னார். (யோவான் 4:24, Dy) நேர்மையான கத்தோலிக்கர்களுக்கு இந்த வார்த்தைகள் ஒரு சவாலாக நிற்கின்றன.
[அடிக்குறிப்புகள்]
a கத்தோலிக்க மதத்தில் ஒரு கொள்கை என்பது, ஓர் எளிய நம்பிக்கைக்கு மாறாக, திருச்சபை முழுமையும் சார்ந்த ஒரு குழுவால் அல்லது போப்பின் ‘தவறிழைக்காத கற்பிக்கும் அதிகாரத்தால்’ பயபக்தியாக முறைப்படுத்தப்பட்ட ஒரு சத்தியம் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு கத்தோலிக்க சர்ச்சால் விளக்கப்பட்ட கோட்பாடுகளில், மிகவும் புத்தம்புதியது மரியாளின் விண்ணேற்பாகும்.
[பக்கம் 27-ன் பெட்டி]
மரியாள் மரணம் அடைந்தாரா?
மரியாள் பரலோகத்திற்கு எறிச்சென்றதாக நினைக்கப்படுவதற்கு முன் அவர் உண்மையில் மரணம் அடைந்தாரா? கத்தோலிக்க இறையியலாளர்கள் இந்தப் பிரச்னையில் தங்களை ஓர் இறையியல் சார்ந்த இரண்டகநிலையின் பிடியில் சிக்கியவர்களாகக் காண்கின்றனர். “கிறிஸ்துவும்கூட கொண்டிருந்திராத மரணத்திலிருந்து விடுபட்ட சிலாக்கியத்தை மரியாளுக்குரியதாகக் காண்பிப்பது கடினம்,” என்று நுயாவோ டிட்ஸியானாரியோ டி டேயாலாஸியா சுட்டிக் காண்பிக்கிறார். மறுபட்சத்தில், மரியாள் மரணம் அடைந்தார் என்று சொல்வது அதைப்போலவே ஒரு கடினமான பிரச்னை. “மூல பாவத்திற்கான தண்டனை மரணம்; அது [“பாவமற்ற கருத்தரிப்பு” கோட்பாடு] என்பதன்படி மரியாளை பாதிக்கவில்லை,” என்று இறையியலாளர் காரி போயெர்யஸன் குறிப்பிடுகிறார். அப்படியானால், எதன் அடிப்படையில் அவர் மரணம் அடைந்திருக்கவேண்டும்? போப் பயஸ் XII, விண்ணேற்பைப் பற்றிய கொள்கையை வரையறுக்கும்போது, மரியாளின் மரணத்தைப்பற்றிய முழு பிரச்னையையும் கவனமாகத் தவிர்த்ததைக் குறித்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
நல்லவேளை, பைபிளின் போதகம் அப்படிப்பட்ட குழப்பத்திலிருந்து விடுபட்டதாய் இருக்கிறது. மரியாள் ‘பாவமற்ற கருத்தரிப்பின்’ விளைப்பயன் என்று ஓர் இடத்திலும் அது கற்பிப்பதோ—குறிப்பிடுவதோகூட—இல்லை. எதிர்மாறாக, மரியாள் மீட்பைத் தேவைப்படுத்தும் ஓர் அபூரண மனுஷி என்று அது குறிப்பிடுகிறது. இந்தக் காரணத்திற்காக, இயேசுவின் பிறப்பிற்குப்பின், அவர் தேவாலயத்திற்குச் சென்று ஒரு பாவநிவாரண பலியைக் கடவுளுக்குச் செலுத்தினார். (லேவியராகமம் 12:1-8; லூக்கா 2:22-24) மற்ற எல்லா அபூரண மனிதர்களையும்போல, மரியாளும் முடிவில் மரணம் அடைந்தார்.—ரோமர் 3:23; 6:23.
இந்த எளிய சத்தியம், விண்ணேற்பு கொள்கையால் எழுப்பப்பட்ட பதிலளிக்கப்பட முடியாத கேள்விகளுடன் முற்றிலும் வேறுபட்டு நிற்கிறது.
[பக்கம் 26-ன் படம்]
‘கன்னியின் விண்ணேற்பு,’ டிஷனால் தீட்டப்பட்ட ஓவியம் (சுமார் 1488-1576)
[படத்திற்கான நன்றி]
Giraudon/Art Resource, N.Y.
[பக்கம் 28-ன் படம்]
இயேசுவின் பிறப்பிற்குப்பின் ஒரு பாவநிவாரண பலியை தேவாலயத்திற்குக் கொண்டுவருவதன்மூலம், மரியாள் தன்னை ஒரு மீட்பு தேவைப்படும் பாவியாக அறிவிக்கிறார்