ஆபத்து அச்சுறுத்தும்போது விலகி இருங்கள்
ஆபத்தைக்குறித்து கப்பலோட்டிகளைவிட அதிக உணர்வுள்ளவர்களாய் இருப்பவர்கள் வெகு சில மக்களே. வானிலை, கடலின் ஏற்றவற்றங்கள், தங்களுடைய கப்பல் கரைக்கு எவ்வளவு அருகாமையில் இருக்கிறது என்பவற்றின்பேரில் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். கடலின் ஏற்றவற்றங்களும் காற்றுகளும் சேர்ந்து கப்பலைக் கரையிடமாகத் தள்ளத் தொடங்கினால் கப்பலோட்டிகள் கடின வேலையையும் ஆபத்தையும் எதிர்ப்படுகின்றனர்.
இந்த நிலைமைகளின்கீழ்—கப்பலின் காற்றொதுக்குப்பக்கம் நோக்கிய கரை (lee shore) என்று அறியப்பட்டதில்—முக்கியமாக, அந்தக் கலம் பாயால் மட்டுமே இயக்கப்பட்டால், ஒரு கப்பலோட்டி தன் படகுக்கும் கரைக்கும் இடையில் கணிசமானளவு கடல்பகுதியை வைத்துக்கொள்கிறார். ‘கப்பலின் காற்றொதுக்குப்பக்கம் நோக்கிய கரையில் ஒரு புயலில் சிக்கிக்கொள்வதே’ ஒரு கப்பலோட்டி தன்னைக் காணக்கூடிய ‘மிக மோசமான நிலைமையாக இருக்கக்கூடும்’ என்று ஒரு கடல்பயணக் கையேடு விவரிக்கிறது. அதற்குப் பரிந்துரைக்கப்பட்ட தீர்வு? ‘உங்கள் கலத்தை ஒருபோதும் அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் காணப்படும்படி விடாதீர்கள்.’ ஒரு மணற்கரையில் செருகிக்கொள்வதை அல்லது பாறைகள் நிறைந்த கரையைத் தவிர்ப்பதற்குப் பாதுகாப்பான வழி என்னவென்றால் ஆபத்திலிருந்து சற்று தொலைவைக் காத்துக்கொள்வதே ஆகும்.
கிறிஸ்தவர்கள் தங்களுடைய விசுவாசக் கப்பலைச் சேதத்திற்குள்ளாக்கும் ஆபத்துக்களைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 1:19) தற்காலத்தில், ஒரு நிலையான போக்கைக் காத்துக்கொள்வதற்கு நிலைமைகள் எவ்விதத்திலும் மிகச் சிறந்தவையாய் இல்லை. ஒரு படகு காற்றுகளாலும் கடலின் ஏற்றவற்றங்களாலும் தன் போக்கிலிருந்து வழிவிலகிச்செல்லும்படி செய்யப்படுவதுபோலவே,—இப்போது ஏறக்குறைய புயல் வேகத்தில் இருக்கும்—நம் அபூரண மாம்சத்தின் நிலையான போராட்டம் மற்றும் உலகத்தின் ஆவியால் தளராது தாக்கப்படுதல் காரணமாக, நம்முடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கையும் திசைமாறிப் போகலாம்.
ஆபத்தான முறையில் வாழ்ந்த ஒரு மனிதன்
ஆபத்தான ஆவிக்குரிய தண்ணீர்களில் கவனக்குறைவாகத் துணிந்திறங்குவது எவ்வளவு எளிதாக இருக்கிறது!
நிலத்தால் சூழப்பட்ட தண்ணீர் பகுதியான சவக் கடலுக்கு அருகே சம்பவித்த ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். லோத்தின் உதாரணத்தைக் குறிப்பிடுகிறோம். சோதோமில் வாழ்வதற்கான அவருடைய தீர்மானம் அநேக பிரச்னைகளையும் அதிக வருத்தத்தையும் அவருக்குக் கொண்டுவந்தது. அவர்களுடைய மேய்ப்பர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டதற்குப்பின் ஆபிரகாமும் லோத்தும் வெவ்வேறு பகுதிகளில் வாழும்படி ஒத்துக்கொண்டனர். லோத்து, யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமியைத் தெரிந்துகொண்டு, அந்தச் சமபூமியின் பட்டணங்களின் மத்தியில் கூடாரம்போட்டார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. பின்னர், அவர், சோதோமியர்களின் வாழ்க்கைப் பாணி அவருக்கு வேதனையூட்டுவதாய் இருந்தபோதிலும் சோதோமில் வாழ தீர்மானித்தார்.—ஆதியாகமம் 13:5-13; 2 பேதுரு 2:7, 8.
யெகோவாவை வருத்தப்படுத்தி, அருகாமையில் வாழும் மக்களிடமிருந்து வெளிப்படையான கூக்குரல் எழும்பும்படியும்கூட செய்த கெட்ட பெயரெடுத்த ஒழுக்கக்கேடான பட்டணத்தில் ஏன் லோத்து தொடர்ந்து வாழ்ந்தார்? சோதோம் செல்வச்செழிப்புடையதாய் இருந்தது; சந்தேகமின்றி, பட்டணத்து வாழ்க்கையின் பொருளாதார நன்மைகளை லோத்தின் மனைவி அனுபவித்தாள். (எசேக்கியேல் 16:49, 50) ஒருவேளை லோத்தும்கூட சோதோமின் ஆடம்பர பொருளாதாரத்தால் கவரப்பட்டிருப்பார். அவர் அங்கு வாழ்வதற்குக் காரணம் என்னவாக இருந்தாலும், தான் செய்ததைவிட சீக்கிரமாகவே வெளியேறி இருக்கவேண்டும். யெகோவாவின் தூதர்களின் அவசரமான வற்புறுத்தலின் பேரில்தானே லோத்தின் குடும்பத்தினர் முடிவாக அந்த ஆபத்துப் பகுதியை விட்டுச்சென்றனர்.
ஆதியாகமப் பதிவு சொல்கிறது: “கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள்.” ஆனால் அந்த அவசர எச்சரிப்பிற்குப் பின்னும் லோத்து ‘தாமதித்துக்கொண்டிருந்தார்.’ கடைசியில் அந்தத் தூதர்கள் “அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.”—ஆதியாகமம் 19:15, 16.
பட்டணத்தின் வெளிப்பகுதியில், அந்தத் தூதர்கள் லோத்தின் குடும்பத்திற்கு சில கடைசி கட்டளைகளைக் கொடுத்தனர்: “உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ.” (ஆதியாகமம் 19:17) அப்போதும்கூட, முழுமையாக அந்தப் பகுதியை விட்டுச் செல்வதற்கு மாறாக, அருகாமையிலுள்ள சோவார் பட்டணத்திற்குப் போக அனுமதிக்கும்படி லோத்து மன்றாடினார். (ஆதியாகமம் 19:18-22) தெளிவாக, லோத்து ஆபத்திலிருந்து தன்னைக் கூடியவரை விலக்கி வைத்துக்கொள்ள விருப்பமற்றவராய் இருந்தார்.
சோவாருக்குச் செல்லும் வழியில், லோத்தின் மனைவி சோதோமைத் திரும்பிப் பார்த்தாள்; தான் விட்டுவந்த காரியங்களுக்காக ஏங்குபவளாய் அவ்வாறு செய்திருக்கவேண்டும். தூதர்களின் கட்டளைகளை அசட்டை செய்ததால் அவள் தன் உயிரை இழந்தாள். லோத்து—நீதியுள்ள ஒரு மனிதர்—அந்தப் பட்டணத்தின் அழிவை தன் இரு மகள்களுடன் தப்பிப்பிழைத்தார். ஆனால் ஆபத்துடன் நெருங்கி வாழ்வதைத் தெரிந்துகொண்டதற்கு அவர் என்னே ஒரு விலையைச் செலுத்தினார்!—ஆதியாகமம் 19:18-26; 2 பேதுரு 2:7, 8.
ஆபத்திலிருந்து மிகவும் விலகியே இருத்தல்
ஓர் ஆபத்தான சூழலுக்கு நெருங்கி அல்லது அதில் தங்கி இருந்தால் என்ன நடக்கும் என்று லோத்தின் கசப்பான அனுபவம் காண்பிக்கிறது. நல்ல கப்பலோட்டிகளைப்போல, அப்படிப்பட்ட ஓர் இக்கட்டான நிலைமைக்குள் நாம் நம்மை ஒருபோதும் விடமாட்டோம் என்று ஞானம் அறிவுறுத்தும். நாம் மிகவும் விலகியே இருக்கவேண்டிய சில அபாயமான பகுதிகள் யாவை? சில கிறிஸ்தவர்கள் வியாபார நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடுவதன்மூலம், உலக கூட்டாளிகளுடன் நெருங்கிய நட்பை வளர்த்துக்கொள்வதன்மூலம், அல்லது தாங்கள் திருமணம் செய்யும் நிலையில் இல்லாதபோது எதிர்பாலார் ஒருவருடன் உணர்ச்சிப்பூர்வமாக நெருங்குவதன்மூலம் வழிதவறிச் சென்றிருக்கின்றனர்.
ஒவ்வொரு காரியத்திலும், ஞானமான போக்கு என்னவென்றால் ஆபத்திலிருந்து நாம் விலகியிருப்பதே ஆகும். உதாரணமாக, மிகச் சாதகமான வியாபார வாய்ப்பு என்று சொல்லப்படும் ஒன்று, கொண்டுவரக்கூடிய ஆவிக்குரிய ஆபத்துகளுக்கு நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்கிறோமா? சில சகோதரர்கள், தங்களுடைய குடும்பங்கள், தங்கள் உடல்நலம், தங்களுடைய தேவராஜ்ய உத்தரவாதங்கள் ஆகியவற்றிற்குக் கெடுதல் விளைவிக்கும்முறையில், வாணிக சம்பந்தமான முயற்சிகளில் தங்களை மூழ்க வைத்திருக்கின்றனர். சிலநேரங்களில், பணம் கொண்டுவரக்கூடிய அதிக சொகுசான வாழ்க்கை முறையே மயக்குவதாய் இருக்கிறது. மற்றும் சிலநேரங்களில், தன்னுடைய வியாபாரத் திறமையை நிரூபிக்கும் சவாலாக அது இருக்கிறது. மற்ற சகோதரர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பது அல்லது உலகளாவிய வேலையின் சார்பாக அதிக தாராளமாக நன்கொடை அளிக்க முடிவது அவர்களுடைய நோக்கம் என்பதாக சிலர் காரணம் காட்டக்கூடும். வியாபாரம் நன்றாகச் செயல்படும்போது, ராஜ்ய அக்கறைகளுக்காகச் செலவிட மேலும் அதிகமான நேரம் தங்களுக்கு இருக்கும் என்றும் அவர்கள் ஒருவேளை நினைக்கலாம்.
படுகுழிகளில் சில யாவை? நிலையற்ற பொருளாதார சூழலும் “எதிர்பாராத சம்பவமும்” மிகச் சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட வியாபார முயற்சியைக் குலைத்துவிட முடியும். (பிரசங்கி 9:11, NW) ஒரு பெரிய கடனுடன் போராடுவது வேதனையைக் கொண்டுவந்து, ஆவிக்குரிய காரியங்களை நெருக்கித் தள்ளக்கூடும். ஒரு வியாபாரம் விரைவாக வளர்ச்சி அடையும்போதும்கூட, அது பெரும்பாலும் அதிக நேரத்தையும் மன ஆற்றலையும் உறிஞ்சிக்கொள்ளக்கூடும்; கணிசமான அளவு உலகப்பிரகாரமான கூட்டுறவையும் தேவைப்படுத்தக்கூடும்.
ஸ்பெய்னிலுள்ள ஒரு கிறிஸ்தவ மூப்பர் கடுமையான பொருளாதார கஷ்டங்களில் இருந்தார்; அப்போது காப்புறுதி நிறுவனம் ஒன்று கவரக்கூடிய ஒரு வாய்ப்பை முன்வைத்தது. சுயேச்சையான காப்புறுதி முகவராக அதிகமான பணம் சம்பாதிக்கும் எதிர்நோக்குகள் இருந்தபோதிலும், அவர் முடிவில் அந்த வாய்ப்பை மறுத்தார். “அது ஓர் எளிய தீர்மானமாக இருக்கவில்லை, ஆனால் நான் வேண்டாம் என்று சொன்னதற்காகச் சந்தோஷப்படுகிறேன்,” என்று அவர் விவரிக்கிறார். “ஒரு காரியம் என்னவென்றால், என்னுடைய தேவராஜ்ய தொடர்புகள் வழியாக—மறைமுகமாகக்கூட—நான் பணம் சம்பாதிக்க விருப்பமற்றவனாக இருந்தேன். சொந்தமாக வேலை செய்யக்கூடிய அந்த யோசனை எனக்குப் பிடித்திருந்தாலும், நான் அதிக பயணம் செய்யவும் நீண்ட மணிநேரங்களை வேலையில் செலவிடவும் வேண்டியதாய் இருந்திருக்கும். அது தவிர்க்கமுடியாத விதத்தில் என்னுடைய குடும்பத்தையும் சபையையும் கவனிக்காமல் விடுவதை அர்த்தப்படுத்தி இருந்திருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, நான் அந்த வாய்ப்பை ஏற்றிருந்தால் என்னுடைய வாழ்க்கையில் கட்டுப்பாட்டை இழந்திருப்பேன் என்பது நிச்சயம்.”
எந்தக் கிறிஸ்தவனும் தன் வாழ்க்கையில் கட்டுப்பாட்டை இழப்பதற்கு வாய்ப்பை அளிக்க முடியாது. ஓய்ந்திருந்து தன் வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொள்வதற்காக மேலும் மேலுமான செல்வத்தைச் சேர்த்துவைத்த ஒரு மனிதனைப் பற்றிய உவமையைச் சொல்வதன்மூலம், அப்படிப்பட்ட ஒரு போக்கின் துக்ககரமான விளைவுகளை இயேசு காண்பித்தார். ஆனால் கடைசியில் தான் போதுமான பணத்தைக் குவித்துவிட்டதாக நினைத்த அந்த இரவில்தானே அவன் இறந்துவிட்டான். “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான்,” என்று இயேசு எச்சரித்தார்.—லூக்கா 12:16-21; ஒப்பிடவும் யாக்கோபு 4:13-17.
உலகப்பிரகாரமான மக்களுடன் விரிவான கூட்டுறவு கொள்வதற்கு எதிராகவும் நாம் காத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை அவர் ஒரு பக்கத்து வீட்டுக்காரராக, ஒரு பள்ளி சிநேகிதராக, உடன் வேலை செய்பவர் ஒருவராக, அல்லது ஒரு வியாபாரக் கூட்டாளியாக இருக்கலாம். நாம் இவ்வாறு நியாயங்காட்டக்கூடும், ‘அவர் சாட்சிகளை மதிக்கிறார், ஒழுக்கமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறார், மேலும் நாங்கள் அவ்வப்போது சத்தியத்தைப் பற்றியும் பேசுகிறோம்.’ இருந்தாலும், காலப்போக்கில் நாம் ஓர் ஆவிக்குரிய சகோதரர் அல்லது சகோதரியுடன் கொள்ளும் கூட்டுறவைவிட அப்படிப்பட்ட உலகப்பிரகாரமான கூட்டுறவைத் தெரிந்துகொள்ளும் நிலையில்கூட நம்மைக் காணக்கூடும் என்று மற்றவர்களின் அனுபவம் நிரூபிக்கிறது. அப்படிப்பட்ட நட்பிலுள்ள சில ஆபத்துக்கள் யாவை?
நாம் வாழும் காலங்களின் அவசரத்தன்மையை குறைவாக மதிப்பிட அல்லது ஆவிக்குரிய காரியங்களைவிட பொருள் சம்பந்தமான காரியங்களில் நாம் வளரும் அக்கறையை எடுக்கத் தொடங்கலாம். ஒருவேளை, நம்முடைய உலகப்பிரகாரமான நண்பரை பிரியப்படுத்தாமல் போய்விடக்கூடாது என்ற பயத்தின் காரணமாக, உலகத்தால் ஏற்கப்படும்படிகூட நாம் ஆசைப்படலாம். (ஒப்பிடவும் 1 பேதுரு 4:3-7.) மறுபட்சத்தில், சங்கீதக்காரனாகிய தாவீது, யெகோவாவை நேசித்த மக்களுடன் கூட்டுறவுகொள்வதைத் தெரிந்துகொண்டார். “உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்,” என்று அவர் எழுதினார். (சங்கீதம் 22:22) ஆவிக்குரிய விதத்தில் கட்டியெழுப்பக்கூடிய நட்பை நாடுவதில், தாவீதின் முன்மாதிரியைப் பின்பற்றினால் நாம் பாதுகாக்கப்படுவோம்.
இன்னலுக்கு உட்படுத்தும் மற்றொரு போக்கு என்னவென்றால், ஒருவர் திருமணம் செய்யக்கூடிய நிலையில் இல்லாதபோது எதிர்பாலார் ஒருவரிடம் உணர்ச்சிப்பூர்வமாகச் சிக்கிக்கொள்வதாகும். கவர்ச்சிகரமாக, உரையாடல் கிளர்ச்சியூட்டுவதாக, ஒரேவிதமான நோக்குநிலையையும் நகைச்சுவை திறனையும்கூட உடையவராக இருக்கும் ஒருவரிடம், ஒருவர் ஈர்க்கப்படும்போது ஆபத்து எழும்பக்கூடும். இவ்வாறு நியாயங்காட்டி, அவர் அல்லது அவளுடைய கூட்டுறவை ஒருவர் அனுபவித்துக்களிக்கக்கூடும், ‘எவ்வளவு தூரம் செல்லலாம் என்று எனக்குத் தெரியும். நாங்கள் வெறுமனே நண்பர்களே.’ என்றபோதிலும், ஒரு முறை கிளர்ச்சியூட்டப்பட்ட உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல.
மேரி என்ற ஓர் இளம் திருமணமான சகோதரி மைக்கலின் கூட்டுறவை அனுபவித்துக்களித்தாள்.a அவர் ஒரு நல்ல சகோதரர்; ஆனால் நண்பர்களைக் கொண்டிருப்பது அவருக்குக் கடினமான காரியம். அவர்கள் இருவரும் அநேகக் காரியங்களைப் பொதுவில் கொண்டிருந்தனர்; அவர்கள் சேர்ந்து வேடிக்கைப் பேச்சுக்களைப் பேச முடிந்ததாகக் கண்டனர். ஒரு திருமணமாகாத சகோதரர் தன்னிடம் நம்பிக்கை வைப்பதை நினைப்பது மேரிக்கு பெருமை அளிப்பதாய் இருந்தது. விரைவில், ஒரு குற்றமற்ற நட்பாகத் தோன்றிய ஒன்று, ஓர் ஆழமான உணர்ச்சிப்பூர்வ நெருங்கிய பற்றாக ஆனது. அவர்கள் அதிகமதிகமான நேரத்தைச் சேர்ந்து செலவிட்டனர்; முடிவில் ஒழுக்கங்கெட்ட காரியத்தைச் செய்தனர். “தொடக்கத்திலேயே நான் ஆபத்தைக் குறித்து உணர்ந்திருக்கவேண்டும்,” என்று மேரி பெருமூச்சுடன் கூறுகிறாள். “நட்பு மலரத் தொடங்கிவிட்டதும், அது ஆழமாக உள் இழுத்துக்கொண்டே செல்லும் புதைமணல்போல ஆனது.”
பைபிளின் எச்சரிப்பை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது: “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்?” (எரேமியா 17:9) கடலின் ஏற்றவற்றம், பாய்மரப் படகை பாறைகளில் மோதும்படி கொண்டுசெல்வதுபோல, நம்முடைய திருக்குள்ள இருதயம் நம்மை ஒரு நாசகரமான உணர்ச்சிப்பூர்வ உறவிற்குள் கொண்டுசெல்லக்கூடும். தீர்வு? நீங்கள் திருமணம் செய்யும் நிலையில் இல்லாவிட்டால், உங்களுக்குக் கவர்ச்சிகரமாகத் தோன்றும் ஒருவரிடமிருந்து உணர்ச்சிப்பூர்வமாக விலகியே இருப்பதற்கு வேண்டுமென்றே முயற்சி செய்யுங்கள்.—நீதிமொழிகள் 10:23.
ஆபத்திலிருந்து விடுபெறுதலும் காத்துக்கொள்ளுதலும்
நாம் ஏற்கெனவே நம்மை ஆவிக்குரிய ஆபத்தில் கண்டால் என்ன செய்வது? கப்பலோட்டிகள், காற்று மற்றும் கடலின் ஏற்றவற்றத்தால் பாறைகள் நிறைந்த கரைக்குக் கொண்டுசெல்லப்படுகையில், பாதுகாப்பான தண்ணீர்களை அடையும்வரை தங்கள் கப்பல்களைக் கடலை நோக்கிச் செலுத்த கடுமையாக முயலுகின்றனர், அல்லது காற்றை எதிர்த்துச் செல்கின்றனர். அதேவிதமாக, நாமும் நம்மை விடுவித்துக்கொள்ள போராட வேண்டும். வேதப்பூர்வ ஆலோசனைக்குக் கவனம் செலுத்துவதன்மூலம், யெகோவாவின் உதவிக்காக மனமார ஜெபிப்பதன்மூலம், முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவ சகோதரர்களிடமிருந்து உதவி நாடுவதன்மூலம், நாம் பாதுகாப்பான வழிக்குத் திரும்ப முடியும். நாம் திரும்பவுமாக மனம் மற்றும் இருதயத்தின் சமாதானத்தால் ஆசீர்வதிக்கப்படுவோம்.—1 தெசலோனிக்கேயர் 5:17.
நம்முடைய சூழ்நிலைகள் என்னவாயிருந்தாலும், “இந்த உலகத்திற்குச் சொந்தமான காரியங்களுக்கு” விலகிக் காத்துக்கொண்டால் ஞானமுள்ளவர்களாய் இருப்போம். (கலாத்தியர் 4:3, NW) லோத்து செய்ததற்கு மாறாக, பல வருடங்களாக கூடாரங்களில் வசிப்பதை அர்த்தப்படுத்தியபோதிலும்கூட, ஆபிரகாம் உலகப்பிரகாரமான கானானியரிலிருந்து பிரிந்து வாழ்வதைத் தெரிந்துகொண்டார். ஒருவேளை அவர் சில பொருள் சம்பந்தமான சொகுசுகளில் குறைவுபட்டிருக்கலாம்; ஆனால் அவருடைய எளிமையான வாழ்க்கை முறை ஆவிக்குரிய விதத்தில் அவரைப் பாதுகாத்தது. தன்னுடைய விசுவாசக் கப்பலின் சேதத்தை அனுபவிப்பதற்கு மாறாக, அவர் ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ ஆனார்.—ரோமர் 4:11.
எப்போதும் பலமாகவே இருக்கும் “ஆவி”யை உடைய சுயவிருப்பத்தை அனுபவிக்கும் உலகத்தால் சூழப்பட்டிருக்கையில், நாம் ஆபிரகாமின் முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். (எபேசியர் 2:2) எல்லா காரியங்களிலும் யெகோவாவின் வழிநடத்துதலை நாம் ஏற்றுக்கொண்டால், நாம் அவருடைய அன்பான பாதுகாப்பை நேரடியாக அனுபவிப்பதன்மூலம் ஆசீர்வதிக்கப்படுவோம். தாவீதைப்போலவே நாமும் உணருவோம்: “அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.” ஆபத்தின் வழிகளை நோக்கி திசைமாறிச் செல்வதற்கு மாறாக, “நீதியின் பாதைகளில்” சென்று கொண்டிருப்பது, சந்தேகமின்றி நித்திய ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும்.—சங்கீதம் 23:3, 6.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 24-ன் படம்]
நீங்கள் திருமணம் செய்யும் நிலையில் இல்லாவிட்டால், உங்களுக்கு கவர்ச்சிகரமாகத் தோன்றும் ஒருவரிடம் உணர்ச்சிப்பூர்வமாக விலகியே இருங்கள்