கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்பதால் வரும் நன்மைகள்
“[ஞானத்தின்மீது] பிரியமாயிரு, அது உன்னைப் பாதுகாக்கும். . . . நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னை புகழும்.”—நீதிமொழிகள் 4:6, 8, NW.
1.கடவுளுடைய வார்த்தையில் உண்மையில் பிரியமாயிருப்பது எதை உட்படுத்துகிறது?
பைபிளை வாசிப்பது ஒரு கிறிஸ்தவனுக்கு மிக மிக முக்கியம். ஆனால் கடவுளுடைய வார்த்தையை ஏதோ கடமைக்கு வாசிப்பதுதானே அதில் பிரியமாயிருப்பதை அர்த்தப்படுத்தாது. ஒருவர் பைபிளை வாசிக்கிறார், ஆனால் பைபிள் கண்டனம் செய்கிற பழக்கங்களை செய்துவந்தால்? சங்கீதம் 119-ஐ எழுதியவர் கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருந்தது போல இவர் பிரியமாயில்லை என்பதையே காட்டுகிறது. அந்தச் சங்கீதக்காரர் கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருந்ததால் அதன் கட்டளைகளின்படி வாழ அவரை வழிநடத்தியது.—சங்கீதம் 119:97, 101, 105.
2. கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலான ஞானத்திலிருந்து என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
2 கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுகிறபடி வாழ்வதற்கு, ஒருவருடைய சிந்தையிலும் வாழும் முறையிலும் தொடர்ந்து சரிப்படுத்துதல் தேவை. இத்தகைய போக்கு தெய்வீக ஞானத்தைப் பிரதிபலிக்கிறது. பைபிள் படிப்பிலிருந்து பெற்ற அறிவையும், அதிலிருந்து புரிந்துகொண்டதையும் நடைமுறையில் பொருத்திப் பிரயோகிப்பதே அந்த ஞானம். “[ஞானத்தின்மீது] பிரியமாயிரு, அது உன்னைப் பாதுகாக்கும். நீ அதை உயர்வாக மதி, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னை புகழும். அது உன் தலையில் மலர் வளையம் சூட்டும்; மணிமுடி ஒன்றை அது உனக்கு அளிக்கும். (நீதிமொழிகள் 4:6, 8, 9, NW) கடவுளுடைய வார்த்தைமீது பிரியத்தை வளர்த்துக்கொள்வதற்கும் அதனால் வழிநடத்தப்படுவதற்கும் எத்தகைய சிறந்த ஊக்கமூட்டுதல்! பாதுகாக்கப்படவும் மேன்மைப்படுத்தப்படவும் புகழப்படவும் விரும்பாதவர் யார்?
நிரந்தர தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுதல்
3. முன் எப்போதையும்விட கிறிஸ்தவர்கள் ஏன் அதிகமாக பாதுகாக்கப்பட வேண்டியதாயிருக்கிறது? யாரிடமிருந்து?
3 கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதிலிருந்தும் பொருத்திப் பயன்படுத்துவதிலிருந்தும் அடைந்த ஞானத்தால் ஒருவர் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்? ஒரு விஷயம், அவர் பிசாசாகிய சாத்தானிடமிருந்து பாதுகாக்கப்படுகிறார். தீயோனாகிய சாத்தானிடமிருந்து இரட்சிக்கப்படுவதற்காக ஜெபிக்கும்படி இயேசு தம்மை பின்பற்றினோருக்கு கற்பித்தார். (மத்தேயு 6:13, NW) இன்று, இந்த வேண்டுதலை நம் ஜெபங்களில் சேர்த்துக்கொள்வது உண்மையாகவே மிகவும் அவசரத் தேவையாக இருக்கிறது. 1914-ம் ஆண்டை தொடர்ந்து சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டார்கள். இதனால், சாத்தான் ‘தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டிருக்கிறான்.’ (வெளிப்படுத்துதல் 12:9, 10, 12) ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுக்கும்’ விரோதமாக அவன் தொடுக்கிற இந்தக் கடைசி கட்ட போர் வெற்றிபெறாததால், அவனுடைய கோபம் அனல் பறக்கும் அளவுக்கு கடுமையாக இருக்கும்.—வெளிப்படுத்துதல் 12:17.
4. சாத்தானின் தொல்லைகளுக்கும் கண்ணிகளுக்கும் உட்படாதபடி கிறிஸ்தவர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள்?
4 சாத்தான் கோபாவேசத்தோடு தொடர்ந்து கிறிஸ்தவ ஊழியரை தொல்லைபடுத்திக் கொண்டும், கடும் துன்புறுத்துதலை அல்லது அவர்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக மற்ற இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கிறான். மேலும், இந்த ராஜ்ய அறிவிப்பாளர்கள் தங்களுடைய ராஜ்ய பிரசங்க வேலையில் கவனத்தை ஊன்ற வைப்பதற்குப் பதிலாக, உலகப்பிரகாரமாக பிரபலமடைதல், உல்லாசமாக காலத்தை கடத்துதல், பொருளுடைமைகளை சம்பாதித்தல், இன்பத்தை நாடித்தேடுதல் போன்ற காரியங்களில் தங்கள் கவனத்தை ஊன்ற வைப்பதற்கு கவர்ச்சியூட்டுகிறான். சாத்தானின் வற்புறுத்துதலுக்கு இணங்கிவிடாமல் அல்லது அவனுடைய கண்ணிகளில் அகப்படாமல் இருப்பதிலிருந்து கடவுளுடைய ஊழியர்களை எது பாதுகாக்கிறது? நிச்சயமாகவே, ஜெபமும் யெகோவாவுடன் தனிப்பட்ட நெருங்கிய உறவும் அவருடைய வாக்குறுதிகளின் நிச்சயத்தின்மீது விசுவாசமும் மிக முக்கியமானவை. ஆனால் இவை யாவும், கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவுடனும், அதன் நினைப்பூட்டுதலுக்குச் செவிகொடுக்கும்படியான தீர்மானத்துடனும் தொடர்புடையவை. இந்த நினைப்பூட்டுதல்கள், பைபிளையும் பைபிள் சார்ந்த புத்தகங்களையும் வாசிப்பதன் மூலமும், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராவதன் மூலமும், உடன் விசுவாசியினிடமிருந்து வரும் வேதப்பூர்வ அறிவுரைக்குச் செவிகொடுப்பதன் மூலமும், அல்லது கடவுளுடைய ஆவி நினைவுக்குக் கொண்டுவரும் பைபிள் நியமங்களின்மீது ஜெபத்துடன் தியானிப்பதன் மூலமும் வருகின்றன.—ஏசாயா 30:21; யோவான் 14:26, 1 யோவான் 2:15-17.
5. கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலான ஞானம் என்ன வழிகளில் நம்மை பாதுகாக்கிறது?
5 கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருக்கிறவர்கள் மற்ற வழிகளிலும் பாதுகாக்கப்படுகிறார்கள். உதாரணமாக, போதை பொருட்கள் துஷ்பிரயோகம், புகைப் பிடித்தல், பாலுறவு ஒழுக்கக்கேடு போன்றவற்றால் வரும் உணர்ச்சிப்பூர்வ வேதனையையும் நோய்களையும் தவிர்க்கிறார்கள். (1 கொரிந்தியர் 5:11; 2 கொரிந்தியர் 7:1) வீண்பேச்சால் அல்லது அன்பற்ற பேச்சால் உறவை குலைக்க மாட்டார்கள். (எபேசியர் 4:31) இவ்வுலக ஞானத்தின் மாய்மால தத்துவங்களை தோண்டி ஆராய்வதன் மூலம் சந்தேகத்திற்கும் பலியாக மாட்டார்கள். (1 கொரிந்தியர் 3:19) கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்பதால் கடவுளுடன் கொண்டுள்ள தங்கள் உறவையும் நித்திய ஜீவ நம்பிக்கையையும் கெடுக்கும் காரியங்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். பைபிளில் உள்ள அதிசயமான வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பதற்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு உதவி செய்வதிலும் சுறுசுறுப்பாய் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு, ‘தங்களையும் தங்கள் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்வார்கள்’ என்று அறிந்து செயல்படுகிறார்கள்.—1 தீமோத்தேயு 4:16,
6. கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலான ஞானம் இக்கட்டான சூழ்நிலைமைகளிலும் நம்மை எவ்வாறு பாதுகாக்க முடியும்?
6 உண்மைதான், எல்லோரும்—கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்போருங்கூட—‘சமயத்திற்கும் எதிர்பாரா சம்பவத்திற்கும்’ பலியாகிறார்கள். (பிரசங்கி 9:11) இயற்கை பேரழிவுகள், கொடுமையான நோய்கள், விபத்துகள், அல்லது அகால மரணம் ஆகியவை நமக்கு நேரிடுவதை தவிர்க்க முடியாதுதான். இருப்பினும், நாம் பாதுகாக்கப்படுகிறோம். கடவுளுடைய வார்த்தையில் உண்மையிலேயே பிரியமாயிருக்கிற ஒருவருக்கு எந்த இக்கட்டும் நிலையான தீங்கை கொண்டுவர முடியாது. ஆகையால், எதிர்காலத்தில் சம்பவிக்கப் போவதைப் பற்றி நாம் மட்டுக்குமீறி கவலைப்படக் கூடாது. இயன்றவரை எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தப் பின்பு, காரியங்களை யெகோவாவின் கைகளில் விட்டுவிடுவதும், இன்றைய வாழ்க்கையின் பாதுகாப்பற்ற நிலை நம் மனசமாதானத்தைக் கொள்ளையிட அனுமதியாமல் இருப்பதுமே மேலானது. (மத்தேயு 6:33, 34; பிலிப்பியர் 4:6, 7) உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் நிச்சயத்தையும், கடவுள் ‘சகலத்தையும் புதிதாக்குகையில்’ கிடைக்கும் மேம்பட்ட வாழ்க்கையின் நிச்சயத்தையும் மனதில் வையுங்கள்.—வெளிப்படுத்துதல் 21:5; யோவான் 11:25.
‘நல்ல நிலமாக’ உங்களை நிரூபியுங்கள்
7. தாம் பேசுவதைக் கேட்க வந்த கூட்டத்தாரிடம் என்ன உவமையை இயேசு சொன்னார்?
7 கடவுளுடைய வார்த்தையைப் பற்றி சரியான கருத்தை உடையோராக இருப்பதன் அவசியத்தை இயேசுவின் ஓர் உவமை சிறப்பித்துக் காட்டியது. இயேசு பாலஸ்தீனா முழுவதிலும் நற்செய்தியை அறிவிக்கையில், அவர் சொல்வதைக் கேட்பதற்கு ஜனங்கள் திரளாய் கூடிவந்தனர். (லூக்கா 8:1, 4) எனினும், அவர்கள் எல்லாரும் உண்மையில் கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருக்கவில்லை. அற்புதங்களைக் காண விரும்பியதால் அல்லது அவர் போதித்த அதிசயமான முறையை அனுபவித்து மகிழ்ந்ததால் பலர் வந்தார்கள். ஆகையால், அந்த ஜனங்களுக்கு ஓர் உதாரணத்தை இயேசு சொன்னார்: “விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார்.”—லூக்கா 8:5-8.
8. இயேசுவின் உவமையில் விதை என்பது என்ன?
8 கேட்போருடைய இருதய நிலையைப் பொறுத்து நற்செய்திக்கு வெவ்வேறுபட்ட பிரதிபலிப்புகள் இருக்கும் என்பதை இயேசுவின் உவமை காட்டியது. விதைக்கப்படும் விதை, “தேவனுடைய வசனம்.” (லூக்கா 8:11) அல்லது, இந்த உவமையின் மற்றொரு விவரப் பதிவு சொல்லுகிறபடி, அந்த விதை ‘ராஜ்யத்தின் வசனம்.’ (மத்தேயு 13:19) இயேசு இதில் எதையும் பயன்படுத்தலாம், ஏனெனில் இயேசு கிறிஸ்துவை அரசராக கொண்டு ஆளப்படும் பரலோக ராஜ்யமே கடவுளுடைய வார்த்தையின் முக்கிய பொருள்; அதைக்கொண்டே யெகோவா தம்முடைய அரசாதிகாரத்தை நியாயநிரூபணம் செய்து தம்முடைய பெயரை பரிசுத்தப்படுத்துவார். (மத்தேயு 6:9, 10) அப்படியானால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் உள்ள நற்செய்தியே அந்த விதை. முதன்முதல் விதை விதைத்த இயேசு கிறிஸ்துவின் இந்த முன்மாதிரியைப் பின்பற்றி விதை விதைக்கையில், யெகோவாவின் சாட்சிகள் இந்த ராஜ்ய செய்தியையே முக்கியப்படுத்திக் காட்டுகிறார்கள். அவர்கள் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை காண்கிறார்கள்?
9. பின் குறிப்பிடப்படும் இடங்களில் விழுகிற விதைகளால் சித்தரிக்கப்படுவது என்ன (அ) வழியருகே? (ஆ) கற்பாறையின்மீது? (இ) முள்ளில்?
9 சில விதைகள் வழியருகே விழுந்து மிதிக்கப்படுவதாக இயேசு சொன்னார். இது, ராஜ்ய விதை இருதயத்தில் வேரூன்ற இடமில்லாமல் மற்ற காரியங்களில் மிதமீறி மூழ்கியிருப்போரை குறிக்கிறது. கடவுளுடைய வார்த்தையில் நேசத்தை வளர்ப்பதற்கு முன்பாக, “அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்கு பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.” (லூக்கா 8:12) சில விதைகள் கற்பாறையின்மீது விழுகின்றன. இது, பைபிள் செய்தியில் மனம் கவரப்பட்டு, ஆனால் அது தங்கள் இருதயங்களைப் பாதிக்க இடமளிக்காத ஆட்களைக் குறிக்கிறது. எதிர்ப்பு உண்டாகையில், அல்லது பைபிள் அறிவுரையை பொருத்திப் பயன்படுத்துவதை கடினமாக காண்கையில், “பின்வாங்கிப் போகிறார்கள்.” ஏனெனில் அது அவர்களில் வேரூன்றவில்லை. (லூக்கா 8:13) பின்னும், கடவுளுடைய வார்த்தையைக் கேட்கிறவர்கள் இருக்கிறார்கள், ஆனால் இந்தப் “பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும்” அமிழ்த்தப்பட்டிருக்கிறார்கள். முடிவாக, முட்களில் சிக்கப்பட்டுள்ள செடிகளைப்போல முற்றிலும் “நெருக்கப்பட்டு, பலன் கொடாதிருக்கிறார்கள்.”—லூக்கா 8:14.
10, 11. (அ) நல்ல நிலம் யாரை சித்தரிக்கிறது? (ஆ) கடவுளுடைய வார்த்தையை நம் இருதயத்தில் “காத்து” வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
10 கடைசியாக, நல்ல நிலத்தில் விழுகிற விதை இருக்கிறது. இது, “செம்மையான நல் இருதயத்திலே” (NW) செய்தியை ஏற்கிற ஜனங்களைக் குறிக்கிறது. இயல்பாகவே, இந்த வகுப்பினரில் ஒருவராக இருக்கவே நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். ஆனால் கடவுளுடைய கருத்தே முக்கியமானது. (நீதிமொழிகள் 17:3; 1 கொரிந்தியர் 4:4, 5) நாம் ‘செம்மையான நல் இருதயத்தை’ உடையோராக இருப்பது என்பது இப்போதிருந்து நம் மரணம் வரையில் அல்லது இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறைக்கு கடவுள் ஒரு முடிவை கொண்டுவரும் வரையில் நம்முடைய செயல்களால் நாம் நிரூபிக்கும் ஒன்று என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. ராஜ்ய செய்தி நம்மிடம் முதன்முதலாக சொல்லப்படுகையில், நாம் நல்லமுறையில் பிரதிபலித்தால் அது சிறந்தது. ‘செம்மையான நல் இருதயத்துடன்’ இருப்பவர்கள் கடவுளுடைய வார்த்தையை ஏற்று, ‘அதைக் காத்துப் பொறுமையுடனே பலன் தருகிறார்கள்.’—லூக்கா 8:15, தி.மொ.
11 கடவுளுடைய வார்த்தையை இருதயத்தில் வைத்திருப்பதற்கு ஒரே வழி தனிப்பட்ட விதமாகவும் உடன் விசுவாசிகளுடன் சேர்ந்தும் வாசிப்பதும் படிப்பதுமே. இயேசுவை உண்மையாக பின்பற்றுவோரின் ஆவிக்குரிய அக்கறைகளை கவனிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள வழிமூலத்தால் அளிக்கப்படும் ஆவிக்குரிய உணவை முழுமையாய் பயன்படுத்திக் கொள்வதும் இதில் உட்படுகிறது. (மத்தேயு 24:45-47) இத்தகைய வழிகளில், கடவுளுடைய வார்த்தையைத் தங்கள் இருதயங்களில் காத்து வைப்பவர்கள், ‘பொறுமையுடனே பலன் தரும்படி’ அன்பினால் தூண்டுவிக்கப்படுகிறார்கள்.
12. நாம் பொறுமையுடன் எப்படிப்பட்ட கனி தரவேண்டும்?
12 நல்ல நிலம் எப்படிப்பட்ட கனியைப் பிறப்பிக்கிறது? இயற்கை உலகில், விதைகள் செடிகளாக வளர்ந்து அதே வகையான விதையுள்ள கனியையே தருகின்றன. அந்த விதைகள் மேலும் கனிதருவதற்கு அவற்றை தூவி விதைக்கலாம். அவ்வாறே, ‘செம்மையான நல் இருதயத்துடன்’ இருப்போரில், வார்த்தை எனும் விதை வளர்ந்து, அவர்கள் பிரதிபலனாக மற்றவர்களுடைய இருதயங்களில் விதை விதைக்க இயலும்வரை ஆவிக்குரிய முறையில் படிப்படியாக முன்னேறும்படி அவர்களை செய்விக்கிறது. (மத்தேயு 28:19, 20) அவர்களுடைய விதைக்கும் வேலை பொறுமையைக் குறிப்பிடுவதாக இருக்கிறது. விதைப்பதில் பொறுமையின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு இயேசு இவ்வாறு சொன்னார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:13, 14.
‘சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தருதல்’
13. கனிதருவதை கடவுளுடைய வார்த்தையை அறியும் அறிவோடு இணைத்து பவுல் செய்த வேண்டுதல் என்ன?
13 கனிதருவதற்கான அவசியத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுலும் பேசி, அதை கடவுளுடைய வார்த்தையுடன் இணைத்தார். உடன் விசுவாசிகள், ‘எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் தேவனுடைய சித்தத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவினாலே நிரப்பப்பட்டு, சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் [“யெகோவாவுக்கு,” NW] பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள’ வேண்டும் என அவர் ஜெபித்தார்.—கொலோசெயர் 1:9, 10; பிலிப்பியர் 1:9-11.
14-16. பவுலின் ஜெபத்திற்கிசைய கடவுளுடைய வார்த்தையில் பிரியமுள்ளவர்கள் எப்படிப்பட்ட கனி தருகிறார்கள்?
14 வெறும் அறிவை பெறுவதுதானே முடிவான இலக்கு அல்ல என்று பவுல் காட்டுகிறார். மாறாக, ‘‘சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத்” தொடர்ந்து தருவதன்மூலம் ‘யெகோவாவுக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளும்படி’ கடவுளுடைய வார்த்தையின்மீதான பிரியம் நம்மை உந்துவிக்கிறது. என்ன நற்கிரியை? ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பது, இந்தக் கடைசி நாட்களில் கிறிஸ்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பு. (மாற்கு 13:10, தி.மொ.) அதோடு, கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருக்கிறவர்கள், இந்த ஊழியத்திற்கு பண ஆதரவை தொடர்ந்து அளித்து தங்களால் இயன்றதை செய்கிறார்கள். “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” என்பதை அறிந்து, இந்தச் சிலாக்கியத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். (2 கொரிந்தியர் 9:7) அவர்கள் அளிப்பவை நூறுக்கு மேற்பட்ட பெத்தேல் வீடுகளை நடத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பெத்தேல் வளாகங்களிலிருந்து ராஜ்ய பிரசங்க வேலை வழிநடத்தப்படுகிறது. சிலவற்றில் பைபிள்களும் பைபிள் இலக்கியங்களும் பிரசுரிக்கப்படுகின்றன. பெரிய கிறிஸ்தவ மாநாடுகளை நடத்துவதற்கான செலவுகளையும், பயணக் கண்காணிகளையும், மிஷனரிகளையும், முழுநேர சுவிசேஷகரான மற்றவர்களையும் அனுப்ப ஆகும் செலவிற்கும் அவர்கள் அளிக்கும் பண உதவி பயன்படுத்தப்படுகிறது.
15 உண்மையான வணக்கத்திற்குரிய கட்டிடங்களைக் கட்டுவதும் அவற்றை கவனிப்பதும் மற்ற நற்கிரியைகளில் உட்பட்டவையாக இருக்கின்றன. அசெம்பிளி மன்றங்களையும் ராஜ்ய மன்றங்களையும் பராமரிக்காமல் விட்டுவிடாதபடி பார்த்துக்கொள்வதற்கு கடவுளுடைய வார்த்தையின்மீதான பிரியம் அவருடைய வணக்கத்தாரை உந்துவிக்கிறது. (ஒப்பிடுக: நெகேமியா 10:39.) இந்தக் கட்டிடங்களின் முன்னால் கடவுளுடைய பெயர் காணப்படுவதால், வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் அவை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைக்கப்பட வேண்டியது அவசியம். அதுமட்டுமல்ல, வணக்கத்திற்காக அங்கு வருவோரின் நடத்தையும் நிந்தனைக்கு இடமில்லாமல் இருப்பது மிக முக்கியம். (2 கொரிந்தியர் 6:3) கிறிஸ்தவர்கள் சிலர், இன்னுமதிகம் செய்கின்றனர். வணக்கத்திற்காக புதிய இடங்கள் தேவைப்படுகிற ஆனால் வறுமையாலோ கட்டிடம் கட்டும் திறமையின்மையாலோ கட்ட இயலாமல் இருக்கிற இடங்களில் வணக்கத்திற்காக புதிய கட்டிடங்கள் கட்டுவதில் பங்குகொள்ள நெடுந்தூரம் பயணம் செய்வதற்கு கடவுளுடைய வார்த்தையின் மீதுள்ள பிரியம் அவர்களை உந்துவிக்கிறது.—2 கொரிந்தியர் 8:14.
16 குடும்பப் பொறுப்புகளைக் கவனிப்பதும், உடன் கிறிஸ்தவர்களுக்கு அக்கறை காண்பிப்பதும்கூட ‘சகலவித நற்கிரியைகளுமாகிய கனியைத் தருவதில்’ உட்பட்டுள்ளன. கடவுளுடைய வார்த்தையின்மீதான பிரியம், ‘விசுவாச குடும்பத்தார்களின்’ தேவைகளுக்கு உணர்வுள்ளவர்களாக இருக்கும்படி செய்கிறது. மேலும், “தேவபக்தியை முதலாவது [நம்] சொந்தக் குடும்ப விஷயத்தில் பாராட்டி” செயல்படுத்தும்படியும் நம்மை உந்துவிக்கிறது. (கலாத்தியர் 6:10; 1 தீமோத்தேயு 5:4, 8, தி.மொ.) நோயுற்றோரை சென்று பார்ப்பதும், துக்கிப்போருக்கு ஆறுதல் அளிப்பதும் நற்கிரியைகள். சவாலான மருத்துவ நெருக்கடி நிலைகளை எதிர்ப்படுகிறவர்களுக்கு உதவிசெய்வதில் சபை மூப்பர்களும், மருத்துவ ஆலோசனை குழுக்களும் எப்பேர்ப்பட்ட சிறந்த வேலையை நிறைவேற்றுகின்றனர்! (அப்போஸ்தலர் 15:28) இதுமட்டுமா! விபத்துகள் பல மடங்கு பெருகிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் சில இயற்கை விபத்துகளாயும், மற்றவை மனிதரின் அறிவீனத்தினால் ஏற்படுபவையாயும் இருக்கின்றன. இயற்கை பேரழிவுகள் மற்றும் விபத்துகளுக்கு பலியான உடன் விசுவாசிகளுக்கும் மற்றவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகள் உடனடியாக நிவாரணம் அளிக்கின்றனர். இவ்வாறு, பூமியின் பல இடங்களில் நற்பதிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இவையனைத்தும் கடவுளுடைய ஆவியின் உதவியால் செய்கின்றனர். இவை யாவும், கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்போர் வெளிக்காட்டும் நற்கனிகள்.
பெரும் சிறப்பான எதிர்கால நன்மைகள்
17, 18. (அ) ராஜ்ய விதையை விதைப்பதால் என்ன சாதிக்கப்படுகிறது? (ஆ) கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்பவர்கள் அதிர்ச்சியூட்டும் என்ன சம்பவங்களைச் சீக்கிரத்தில் காண்பார்கள்?
17 ராஜ்ய விதை விதைப்பது, மனிதவர்க்கத்திற்கு பெரும் நன்மைகளைத் தொடர்ந்து கொண்டுவருகிறது. சமீபகாலங்களில், ஒவ்வொரு ஆண்டிலும் 3,00,000-க்கும் அதிகமானோர் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, அதை முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தி காண்பித்திருக்கின்றனர். இப்படியாக பைபிளின் செய்தி தங்கள் இருதயங்களில் வேரூன்ற அனுமதித்திருக்கின்றனர். எப்பேர்ப்பட்ட மேன்மையான எதிர்காலம் அவர்களுக்குக் காத்திருக்கிறது!
18 சீக்கிரத்தில், யெகோவா தேவன் தம்முடைய பெயரை மகிமைப்படுத்துவதற்கு எழும்புவாரென கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்பவர்கள் அறிந்திருக்கிறார்கள். பொய்மத உலகப் பேரரசாகிய “மகா பாபிலோன்” அழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 18:2, 8) பின்பு, கடவுளுடைய வார்த்தைக்கு இசைவாக வாழ மறுப்பவர்கள் அரசராகிய இயேசு கிறிஸ்துவால் அழிக்கப்படுவார்கள். (சங்கீதம் 2:9-11; தானியேல் 2:44) அதன்பின், குற்றச்செயல்களிலிருந்தும் போர்களிலிருந்தும் பேரழிவுகளிலிருந்தும் நிலையான நிவாரணத்தை கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரும். வேதனை, நோய், மரணம் ஆகியவற்றின் காரணமாக ஜனங்களை ஆறுதல்படுத்துவதற்கான எந்த அவசியமும் இனிமேல் இராது.—வெளிப்படுத்துதல் 21:3, 4.
19, 20. கடவுளுடைய வார்த்தையில் உண்மையிலேயே பிரியமாயிருப்போருக்கு என்ன மகிமையான எதிர்காலம் காத்திருக்கிறது?
19 அப்போது, கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்போரால் எப்பேர்ப்பட்ட மகிமையான நற்கிரியைகள் நிறைவேற்றப்படும்! அர்மகெதோனை தப்பிப் பிழைத்திருப்பவர்கள் இந்தப் பூமியைப் பரதீஸாக மாற்றும் மகிழ்ச்சி ததும்பும் வேலையைத் தொடங்குவார்கள். மரித்தோரின் உயிர்த்தெழுதலில் பங்குகொள்ளும்படி, இப்போது கல்லறையில் இளைப்பாறும் அதே சமயத்தில் கடவுளுடைய நினைவில் இருக்கும் மரித்தோருக்கு வேண்டியவற்றை ஆயத்தம் செய்யும் கிளர்ச்சியூட்டும் சிலாக்கியம் அவர்களுக்கு இருக்கும். (யோவான் 5:28, 29) அந்தச் சமயத்தில், ஈடற்ற உன்னத பேரரசரான கர்த்தராகிய யெகோவாவினிடமிருந்து அவருடைய உயர்த்தப்பட்ட குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியில் வசிப்போருக்கு பரிபூரண வழிநடத்துதல் அருளப்படும். புதிய உலக வாழ்க்கைக்குரிய யெகோவாவின் கட்டளைகளை வெளிப்படுத்தும் ‘புத்தகச் சுருள்கள் திறக்கப்படும்.’—வெளிப்படுத்துதல் 20:12, NW.
20 யெகோவா குறித்துள்ள காலத்தில், அபிஷேகம் செய்யப்பட்ட மெய் கிறிஸ்தவர்களின் முழு எண்ணிக்கையானோரும் ‘கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராக’ தங்கள் பரலோக பலனை பெறுவதற்கு எழுப்பப்படுவார்கள். (ரோமர் 8:17) கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது, கடவுளுடைய வார்த்தையின்மீது பிரியமாயிருக்கும் மனிதர் யாவரும் மனதிலும் உடலிலும் பரிபூரணராக்கப்படுவார்கள். கடைசி சோதனையில் உண்மையுள்ளவர்களாக நிரூபித்த பின்பு, அவர்கள் நித்திய ஜீவன் அளிக்கப்பட்டு, “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” அனுபவிப்பார்கள். (ரோமர் 8:20; வெளிப்படுத்துதல் 20:1-3, 7-10) அது எப்பேர்ப்பட்ட அதிசயமான காலமாயிருக்கும்! பரலோக நம்பிக்கையோ பூமிக்குரிய நம்பிக்கையோ, எதை யெகோவா நமக்கு அளித்திருந்தாலும், அவருடைய வார்த்தையின்மீது நிலையான பிரியமும் தேவ ஞானத்தின்படி வாழவேண்டுமென்ற தீர்மானமும் நம்மைப் பாதுகாக்கும். நாம் அதைத் ‘தழுவிக்கொள்வதால்,’ எதிர்காலத்தில் ‘நம்மைக் கனம்பண்ணும்.’—நீதிமொழிகள் 4:6, 8.
உங்களால் விளக்க முடியுமா?
◻ கடவுளுடைய வார்த்தையின் மீதுள்ள பிரியம் நம்மை எவ்வாறு பாதுகாக்கும்?
◻ இயேசுவின் உவமையில் குறிக்கப்படும் விதை என்ன, அது எப்படி விதைக்கப்படுகிறது?
◻ நாம் எவ்வாறு நம்மை ‘நல்ல நிலமாக’ நிரூபிக்கலாம்?
◻ கடவுளுடைய வார்த்தையில் பிரியமுள்ளவர்கள் என்ன நன்மைகளை எதிர்பார்க்கலாம்?
[பக்கம் 16-ன் படம்]
இயேசுவின் உவமையில் குறிக்கப்படும் விதை கடவுளுடைய வார்த்தையில் அடங்கியுள்ள நற்செய்தியை படமாக குறிக்கிறது
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
[பக்கம் 17-ன் படம்]
பெரிய விதை விதைப்பவரின் மாதிரியை யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகிறார்கள்
[பக்கம் 18-ன் படங்கள்]
அர்மகெதோனை தப்பிப் பிழைப்பவர்கள் பூமியின் கனிகளை அனுபவித்து மகிழுவார்கள்