இயேசுவின் வாழ்க்கையும் ஊழியமும்
கலிலேயாவில் மற்றொரு போதனை பயணம்
இயேசு தம்முடைய தீவிரமான இரண்டு வருட போதனைக்குப் பின் காரியங்களை அப்படியே விட்டுவிடுவதோடு அவைகளைச் சாதாரணமாக கருதுவாரா? அதற்கு மாறாக, அவர் தம்முடைய போதிக்கும் வேலையை இன்னும் விரிவாக்குவதற்காக மூன்றாவது முறை பிரயாணம் செய்து கலிலேயாவிற்கு வருகிறார். அவர் அந்த ஊரில் இருக்கும் நகரங்கள், கிராமங்கள், மற்றும் தேவாலயங்களைச் சந்தித்து தேவனுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை போதித்து வருகிறார். இந்தப் பிரயாணத்தின்போது இயேசு கவனித்த நிலைமைகள், அவரை மேலும் தீவிரமாக பிரசங்க ஊழியத்தை செய்யும்படியாக வற்புறுத்துகிறது.
இயேசு எங்கெல்லாம் சென்றாரோ அங்கெல்லாம் மக்கள் ஆவிக்குரிய சுகத்திற்காகவும், ஆறுதலுக்காகவும், அதைப் பெறுவதற்கான தேவையோடு இருப்பதை கவனிக்கிறார். அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளை போலத் தொய்ந்து போனவர்களும், சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகிறார். தம்முடைய சீஷர்களை நோக்கி, “அறுப்பு மிகுதி வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால் அறுப்புக்கு எஜமானன் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.”
அதற்காக இயேசு ஒரு செயல் முறையான திட்டத்தை வைத்திருந்தார். அவர் ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னால் தேர்ந்தெடுத்த தம்முடைய 12 அப்போஸ்தலர்களையும் வரவழைக்கிறார். அவர்களை இரண்டிரண்டு பேராக பிரித்து, போதனை செய்யும் ஆறு அணிகளாக தொகுத்து பின்வரக்கூடிய காரியங்களை கட்டளையாக சொன்னார்: “நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும் சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். போகையில், பரலோக ராஜ்யம் சமீபத்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்” என்றார்.
இயேசு தன்னுடைய மாதிரி ஜெபத்தில் அந்த ராஜ்யத்தைப் பற்றி கற்றுக்கொடுத்த காரியங்களையே அவர்கள் போதிக்க வேண்டும். அந்த ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்ற அழைப்பின் அர்த்தம் என்னவென்றால், கடவுளின் முன்குறிக்கப்பட்ட அரசராக இயேசு கிறிஸ்து அவர்கள் மத்தியில் இருப்பதை அது குறிப்பிடுகிறது. அந்த மீமானிட அரசாங்கத்தின் நற்சாட்சி பெற்ற பிரதிநிதிகளாக அவர்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக பிணியாளிகளை சுகப்படுத்தவும், மரித்தவர்களை உயிரோடு எழுப்பவும் வல்லமையை இயேசு தம்முடைய சீஷர்களுக்கும்கூட கொடுக்கிறார். இவ்விதமான சேவைகளை இலவசமாக செய்யும்படி கட்டளை கொடுக்கிறார்.
அடுத்ததாக இயேசு தம்முடைய சீஷர்கள் போதிக்கும் பயணத்தை மேற்கொள்ளும்பொழுது பொருள் சம்பந்தமான முன்தயாரிப்புகளைக் கொண்டிருக்கலாகாது என்று கூறுகிறார். “உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடிவைக்க வேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான்.” செய்தியை மதிப்பவர்கள் அதற்கு பிரதிபலிப்பவர்களாக ஆகாரத்தையும், தங்குவதற்கு வீட்டையும் கொடுப்பார்கள். இயேசு தொடர்ந்து சொல்லும்பொழுது “எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்பொழுது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அதிலே தங்கியிருங்கள்” என்கிறார்.
பிறகு ராஜ்ய செய்தியோடு வீட்டுக்காரர்களை எவ்விதம் அணுகவேண்டும் என்பதற்கான சில கட்டளைகளை கொடுக்கிறார். “ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள் மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்தில் திரும்பக்கடவது. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளை கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.”
அவர்களுடைய செய்தியைப் புறக்கணிக்கும் நகரத்தைப் பற்றி இயேசு சொல்லும்பொழுது: “நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப் பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்” என்கிறார். சோதோம் பட்டணத்தார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆகிலும் பூர்வீக சோதோம் மக்களுக்கு அதிக இலகுவாக இருக்கும் என்று சொல்வதன் மூலமாக இயேசு இங்கே இத்தகைய பட்டணத்தார் எவ்வளவு உத்தரவாதமுள்ளவர்கள் என்பதை அறிவுறுத்துகிறார். ஏனெனில், அங்கு கூடியிருந்த இஸ்ரவேலரடங்கிய கூட்டத்தாரின் மனதில், பூர்வீக சோதோம் மக்கள் நியாயத்தீர்ப்பு நாளில் உயிர்த்தெழுப்பப்பட முற்றிலும் பாத்திரவான்களாக இல்லை. மத்தேயு 9:35–10:15; மாற்கு 6:6-12; லூக்கா 9:1-5.
◆ கலிலேயாவில் எப்பொழுது இயேசு தம்முடைய மூன்றாவது பயணத்தைச் செய்கிறார்? எதைக் குறித்து இந்தப் பயணம் அவருக்கு உறுதி செய்கிறது?
◆ தன்னுடைய 12 அப்போஸ்தலர்களை ஊழியத்திற்கு அனுப்புவதற்கு முன்னால் என்ன கட்டளைகளை அவர் அவர்களுக்குக் கொடுக்கிறார்?
◆ தேவனுடைய ராஜ்யம் அருகாமையில் இருப்பதாக சீஷர்கள் போதிப்பது ஏன் சரியானதாக இருந்தது?
◆ தன் சீஷர்களின் செய்தியை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் வினைமைத் தன்மையை இயேசு எவ்வாறு அழுத்திக்காட்டினார்?(w87 7/15)