அறுவடையில் மகிழ்ச்சி காணுங்கள்!
“அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்.”—மத்தேயு 9:37, 38.
1. கடவுளுடைய சித்தத்தை என்றும் தொடர எது நமக்கு உதவுகிறது?
சில நாட்களுக்கு முன்போ பல ஆண்டுகளுக்கு முன்போ முழுக்காட்டுதல் எடுத்திருந்தாலும், யெகோவாவின் ஊழியர்களில் ஒருவராக நாம் முழுக்காட்டப்பட்ட அந்த நாளை நினைத்துப் பார்க்கையில் அது நேற்று நடந்ததுபோல இருக்கலாம். யெகோவாவை துதிப்பதே ஒப்புக்கொடுத்த நம் வாழ்க்கையில் மையமாக ஆனது. காலத்தைப் பிரயோஜனப்படுத்தி மற்றவர்களுக்கு ராஜ்ய செய்தியை அறிவிக்கவும் அதன் வாயிலாக அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் உதவி செய்கையில், யெகோவாவுக்கு மகிழ்ச்சியோடு சேவை செய்வதே நம் முக்கிய அக்கறையாக இருந்தது. (எபேசியர் 5:15, 16, NW) ‘கர்த்தருடைய கிரியையில் பெருகுகிறவர்களாக’ மும்முரமாய் செயல்படுகையில் காலம் காற்றாய் பறந்துவிடுவதை இன்றும் நாம் காண்கிறோம். (1 கொரிந்தியர் 15:58) நாம் பிரச்சினைகளை எதிர்ப்படுகிறபோதிலும், யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அதை என்றும் தொடர நம்மை உந்துவிக்கிறது.—நெகேமியா 8:10.
2. அடையாள அர்த்தமுள்ள அறுவடையில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கு எவை உதவுகின்றன?
2 கிறிஸ்தவர்களாக நாம் அடையாள அர்த்தமுள்ள அறுவடையில் ஈடுபட்டிருக்கிறோம். ஆட்களை நித்திய ஜீவனுக்குக் கூட்டிச் சேர்ப்பதை இயேசு கிறிஸ்து அறுவடைக்கு ஒப்பிட்டார். (யோவான் 4:35-38) அத்தகைய அறுவடை வேலையில் நாம் பங்குகொள்வதால், இதை செய்து வந்த பூர்வ கிறிஸ்தவர்களின் மகிழ்ச்சியை ஆராய்ந்து பார்ப்பது ஊக்கமூட்டுவதாக இருக்கும். இன்றைய அறுவடையில் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கு உதவும் மூன்று அம்சங்களை கலந்தாலோசிப்போம். இவை: (1) நம்பிக்கையளிக்கும் நம் செய்தி, (2) நம்முடைய தேடுதலில் வெற்றி, (3) அறுவடைக்காரர்களாக சமாதானம் உண்டாக்கும் நம் மனப்பான்மை.
அறுவடைக்காரர்களாக அனுப்பப்படுதல்
3. ஆரம்ப காலத்தில் இயேசுவைப் பின்பற்றியவர்கள் எந்த விதத்தில் மகிழ்ச்சியை அனுபவித்தார்கள்?
3 பொ.ச. 33-ல் உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு ஆரம்ப கால அறுவடைக்காரர்கள்—முக்கியமாய் இயேசுவோடு கூடவே இருந்த 11 உண்மையுள்ள அப்போஸ்தலர்கள்—கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்கு சென்றபோது அவர்கள் வாழ்க்கை எவ்வளவாய் மாறிவிட்டது! (மத்தேயு 28:16) அந்தச் சந்தர்ப்பத்தில் ‘ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரர்’ அங்கிருந்திருக்கலாம். (1 கொரிந்தியர் 15:6) இயேசு அவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு, எப்போதும் அவர்களுடைய செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என்று அவர்களுக்கு சொன்னார். (மத்தேயு 28:19, 20) கடும் துன்புறுத்துதல் இருந்தபோதிலும், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களின் சபைகள் பல இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டதைக் கண்டபோது அறுவடையில் மிகுந்த மகிழ்ச்சியை அனுபவித்தார்கள். காலப்போக்கில், ‘அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வந்தது.’—கொலோசெயர் 1:23; அப்போஸ்தலர் 1:8; 16:5.
4. எப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்துவின் சீஷர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்?
4 கலிலேயாவில் இயேசு தம்முடைய ஊழியத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு சமயம் 12 அப்போஸ்தலர்களை அழைத்து, முக்கியமாய் “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று அறிவிக்கும்படி அவர்களை அனுப்பி வைத்தார். (மத்தேயு 10:1-7) அவர்தாமேயும் “சகல [கலிலேய] பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.” கூட்டத்தார் “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால்,” இயேசு அவர்களைக் கண்டு அனுதாபப்பட்டார். (மத்தேயு 9:35, 36) மிகவும் மனதுருகியவராக, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் [யெகோவா தேவன்] தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.” (மத்தேயு 9:37, 38) பூமிக்குரிய தம்முடைய ஊழிய காலம் முடிவடைய இன்னும் ஆறே மாதங்கள் இருந்தபோது, அறுவடைக்காரர்கள் தேவைப்படுவதைப் பற்றிய இயேசுவின் மதிப்பீடு யூதேயாவைப் பொருத்ததிலும் மாறவில்லை. (லூக்கா 10:2) அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அவரைப் பின்பற்றியவர்கள் அறுவடைக்காரர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர்.—மத்தேயு 10:5; லூக்கா 10:3.
நம்பிக்கையளிக்கும் நம் செய்தி
5. எப்படிப்பட்ட செய்தியை நாம் அறிவிக்கிறோம்?
5 யெகோவாவின் இன்றைய ஊழியர்களாக அறுவடைக்காரர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றிருக்கிறோம். கவலைப்படுவோருக்கும் மனச்சோர்வுற்றோருக்கும் நம்பிக்கையளிக்கும் செய்தியை அறிவிப்பது நம் மகிழ்ச்சிக்கு பெருமளவு உதவுகிறது. இயேசுவின் முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போல், நற்செய்தியை, உண்மையிலேயே நம்பிக்கையளிக்கும் செய்தியை, ‘மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருப்பவர்களுக்கு’ அறிவிக்கும் எப்பேர்ப்பட்ட சிலாக்கியம் நமக்கு இருக்கிறது!
6. முதல் நூற்றாண்டில் என்ன வேலையில் அப்போஸ்தலர்கள் ஈடுபட்டிருந்தார்கள்?
6 முதல் நூற்றாண்டின் மத்திபத்திற்குள் அப்போஸ்தலன் பவுல் மும்முரமாய் நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தார். அவருடைய அறுவடை வேலை உண்மையிலேயே பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் சுமார் பொ.ச. 55-ல் கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.” (1 கொரிந்தியர் 15:1) அப்போஸ்தலரும் மற்ற ஆரம்ப கால கிறிஸ்தவர்களும் அறுவடைக்கு உழைத்த கடின உழைப்பாளிகள். முக்கிய சம்பவங்கள் முடிவுற்ற பொ.ச. 70-ன் எருசலேமின் அழிவுக்குப் பின்பு, எத்தனை அப்போஸ்தலர்கள் தப்பிப்பிழைத்தார்கள் என பைபிள் நமக்குச் சொல்வதில்லை. எனினும் அப்போஸ்தலன் யோவான் ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பின்னும் பிரசங்கித்து வந்தார் என்பது நமக்குத் தெரியும்.—வெளிப்படுத்துதல் 1:9.
7, 8. எப்போதும் இல்லாதளவுக்கு இப்போது, என்ன நம்பிக்கையின் செய்தியை யெகோவாவின் சாட்சிகள் அவசரத்தன்மையுடன் அறிவித்து வருகிறார்கள்?
7 பின்பு, விசுவாச துரோக ‘அக்கிரம மனுஷனாகிய’ கிறிஸ்தவமண்டல மத குருமாரின் ஆதிக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்தது. (2 தெசலோனிக்கேயர் 2:3, திருத்திய மொழிபெயர்ப்பு) எனினும், பத்தொன்பதாவது நூற்றாண்டின் முடிவில், உண்மை கிறிஸ்தவ போதகத்திற்கு இசைய தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயன்றவர்கள், நம்பிக்கையளிக்கும் செய்தியை ஏற்றுக்கொண்டு, ராஜ்யத்தை யாவரறிய அறிவித்தார்கள். சொல்லப்போனால், இந்தப் பத்திரிகையின் முதல் வெளியீட்டிலிருந்தே (ஜூலை 1879) இதன் தலைப்பில் “கிறிஸ்துவின் பிரசன்னத்தை அறிவிக்கிறது,” “கிறிஸ்துவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது,” அல்லது “யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
8 இயேசு கிறிஸ்துவை ராஜாவாக கொண்ட கடவுளுடைய பரலோக ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்டது. எப்போதும் இல்லாதளவுக்கு இப்போது, நம்பிக்கையின் செய்தியை நாம் அவசரத்தன்மையுடன் பிரசங்கித்து வருகிறோம். ஏன்? ஏனெனில், கடவுளுடைய ராஜ்யம் செய்யப் போகும் நற்காரியங்களில், சீக்கிரத்தில் தற்போதைய பொல்லாத உலகிற்கு வரும் முடிவும் ஒன்று. (தானியேல் 2:44) இதைப் பார்க்கிலும் நல்ல செய்தி வேறென்ன இருக்க முடியும்? “மிகுந்த உபத்திரவம்” ஆரம்பிப்பதற்கு முன் ராஜ்யத்தை அறிவிப்பதில் பங்குகொள்வதைப் பார்க்கிலும் அதிக மகிழ்ச்சி தருவது நமக்கு வேறென்ன இருக்க முடியும்?—மத்தேயு 24:21; மாற்கு 13:10.
தேடுதலில் வெற்றி
9. இயேசு தம் சீஷர்களுக்கு என்ன கட்டளை கொடுத்தார், ராஜ்ய செய்திக்கு ஜனங்கள் எப்படி பிரதிபலித்தார்கள்?
9 அறுவடைக்காரர்களாகிய நம் மகிழ்ச்சிக்கு உதவும் மற்றொரு அம்சம்: சீஷர்களாகி, அறுவடையில் நம்முடன் சேர்ந்துகொள்வோரை வெற்றிகரமாக தேடிக் கண்டுபிடிப்பது. பொ.ச. 31-32-ல், “எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் [“தகுதியுள்ளவர்,” NW] யாரென்று விசாரித்து அறியுங்கள்” என இயேசு தம் சீஷர்களுக்கு கட்டளையிட்டார். (மத்தேயு 10:11) ஆனால், எல்லாரும் தகுதியுள்ளவர்கள் அல்ல, ராஜ்ய செய்திக்கு அவர்கள் பிரதிபலிக்கும் விதத்திலிருந்து அதைத் தெரிந்துகொள்ளலாம். இருப்பினும், ஆட்கள் எங்கெல்லாம் இருந்தார்களோ அங்கெல்லாம் நற்செய்தியை இயேசுவின் சீஷர்கள் ஆர்வத்துடன் பிரசங்கித்தார்கள்.
10. தகுதியுள்ளவர்களைப் பவுல் எவ்வாறு தொடர்ந்து தேடினார்?
10 இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு, தகுதியுள்ளவர்களைத் தேடுவது மும்முரமாய் தொடர்ந்தது. ஜெப ஆலயத்திலிருந்த யூதர்களிடமும் அத்தேனே பட்டணத்து சந்தைவெளியில் இருந்தவர்களிடமும் பவுல் நியாயங்காட்டி பேசினார். அந்த கிரேக்க பட்டணத்தில் மார்ஸ் மேடையிலிருந்து அவர் சாட்சி கொடுத்தபோது, “சிலர் அவனைப் பற்றிக்கொண்டு விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.” பவுல் எங்கு சென்றாலும், அங்கு “வெளியரங்கமாக வீடுகள்தோறும்” பிரசங்கிப்பதிலும் முன்மாதிரியாக திகழ்ந்தார்.—அப்போஸ்தலர் 17:17, 34; 20:20.
11. பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழியத்தில் என்ன முறைகள் பின்பற்றப்பட்டன?
11 பத்தொன்பதாவது நூற்றாண்டின் கடைசி சில பத்தாண்டுகளில் தகுதியுள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தைரியமாய் ஈடுபட்டார்கள். 1881, ஜூலை/ஆகஸ்ட் ஜயன்ஸ் உவாட்ச் டவர் பிரதியில் “பிரசங்கிப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்டது” என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை இவ்வாறு சொன்னது: “கேட்பதற்கு விருப்பமும் திறனுமுள்ள ‘சாந்தகுணமுள்ளவர்களுக்கு’ . . . நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது . . . அவர்களிலிருந்து கிறிஸ்துவின் சரீரமாகிய அவரது உடன் சுதந்தரவாளிகள் உருவாக இது வழிவகுக்கிறது.” ஆராதனைகள் முடிந்து சர்ச்சிலிருந்து வெளிவருபவர்களை கடவுளுடைய அறுவடைக்காரர்கள் அடிக்கடி சந்தித்தனர்; தகுதியுள்ளவர்களில் சாதகமான பிரதிபலிப்பை உண்டுபண்ணும் விதத்தில் தயாரிக்கப்பட்ட பைபிள் செய்திகள் அடங்கிய துண்டுப்பிரதிகளை அவர்களுக்கு விநியோகித்தனர். இப்படி சாட்சி கொடுப்பது எந்தளவுக்குப் பயனுள்ளது என்பதை கவனமாக சிந்தித்த பிறகு மே 15, 1903-ன் ஆங்கில காவற்கோபுரம், “ஞாயிற்றுக்கிழமை தோறும் மதிய வேளையில் வீட்டுக்கு வீடு” சென்று துண்டுப்பிரதிகளை விநியோகிக்கும்படி அறுவடைக்காரர்களை ஊக்குவித்தது.
12. நம்முடைய பிரசங்க வேலையை எப்படி இன்னும் பலன்தரத்தக்கதாக ஆக்கலாம்? உதாரணம் கொடுங்கள்.
12 சமீப ஆண்டுகளில், வீடுகளில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் ஆட்களை சந்திப்பதன் மூலம் நம் ஊழியத்தை விரிவுபடுத்தியிருக்கிறோம். நாம் பொதுவாய் ஊழியத்திற்குச் செல்லும் நேரத்தில், சில நாடுகளில் பொருளாதார நிலைமை, பொழுதுபோக்கு காரியங்கள் நிமித்தம் சிலசமயங்களில் சிலரை வீட்டில் சந்திக்க முடியாமல் போவதால் அப்படிப்பட்ட நாடுகளில் இந்த வகை ஊழியம் பெரும் பலனளித்திருக்கிறது. சுற்றுலா பயணிகள் கடற்கரையில் பொழுதைக் கழித்த பின்பு வழக்கமாய் பஸ்ஸில் ஏறிப் போவதை இங்கிலாந்திலுள்ள ஒரு சாட்சியும் அவர்களது தோழியும் கவனித்தனர்; அந்த பஸ்களில் ஏறி, பயணிகளுக்கு காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதற்கு அவர்கள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்கள். ஒரு மாதத்தில் 229 பிரதிகளை விநியோகித்தார்கள். “கடற்கரையிலோ வியாபார பிராந்தியத்திலோ அல்லது வேறெந்த சமயத்திலோ சாட்சி கொடுக்கையில் எதிர்ப்படும் சவாலை கண்டு நாங்கள் பயப்படுகிறதில்லை. ஏனெனில் யெகோவா எப்பொழுதும் எங்களுடன் இருப்பதை அறிந்திருக்கிறோம்” என சொல்கிறார்கள். இதனால் அவர்கள் ஒரு பத்திரிகை மார்க்கத்தையும், பைபிள் படிப்பையும் ஆரம்பித்தார்கள்; இருவரும் துணைப் பயனியர் ஊழியமும் செய்தார்கள்.
13. சில இடங்களில் நம் ஊழியத்தில் என்ன மாற்றங்களை இப்போது செய்ய வேண்டியிருக்கிறது?
13 தகுதியுள்ளவர்களைத் தொடர்ந்து தேடுகையில், சில இடங்களில் நம் ஊழியத்தைக் கவனமாய் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியிருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை காலை வேளையில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அநேக சாட்சிகள் வழக்கமாய் கலந்துகொள்கிறார்கள்; சில பகுதிகளில் அவ்வேளையில் ஜனங்கள் வெகு நேரம் தூங்குவதால் அப்போது வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது அந்தளவுக்கு பலன் தராததை அவர்கள் காண்கிறார்கள். தங்கள் அட்டவணையில் சில மாற்றங்களை செய்வதன்மூலம் அநேக சாட்சிகள் அந்நாளின் பிற்பகுதியில் ஒருவேளை கூட்டங்களுக்குப்பின் தங்கள் தேடுதலைத் தொடருகிறார்கள். இத்தகைய தேடுதல் நிச்சயமாகவே பயனளித்திருக்கிறது. கடந்த ஆண்டில் உலகமெங்குமுள்ள ராஜ்ய பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 2.3 சதவீதம் அதிகரித்திருந்தது. இது, அறுவடையின் எஜமானரை கனப்படுத்துவதுடன், நம் இருதயத்திற்கும் மகிழ்ச்சியைத் தருகிறது.
அறுவடையில் சமாதானத்தைக் காத்துக்கொள்ளுதல்
14. எப்படிப்பட்ட மனப்பான்மையோடு நாம் செய்தியை பிரசங்கிக்கிறோம், ஏன்?
14 நம்முடைய மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணம், அறுவடையின்போது நாம் காட்டும் சமாதானம் காக்கும் மனப்பான்மை. “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை [“அந்த வீட்டாரை,” NW] வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது” என இயேசு சொன்னார். (மத்தேயு 10:12, 13) எபிரெய மொழியில் இந்த வாழ்த்துதலும் கிரேக்க பைபிளில் இதற்கொத்த பதமும், “‘உமக்கு நலம் உண்டாவதாக’ என்ற கருத்தையே தெரிவிக்கின்றன. நற்செய்தியை நாம் பிரசங்கிக்கையில் எப்படிப்பட்ட மனப்பான்மையுடன் ஜனங்களை அணுக வேண்டும் என்பதை இது தெரிவிக்கிறது. ராஜ்ய செய்திக்கு அவர்கள் செவிசாய்ப்பார்கள் என்பது நம்முடைய நம்பிக்கை. அவ்வாறு செவிசாய்ப்பவர்கள், தங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி, மாற்றங்களை செய்து, கடவுளுடைய சித்தத்தின்படி நடந்தால் அவருடன் ஒப்புரவாகும் எதிர்பார்ப்பு உள்ளது. இதன் பலனாக, கடவுளுடன் சமாதானம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது.—யோவான் 17:3; அப்போஸ்தலர் 3:19, 20; 13:38, 48; 2 கொரிந்தியர் 5:18-20.
15. நமக்கு செவிசாய்க்காதவர்களை ஊழியத்தில் சந்திக்கையில் சமாதான மனப்பான்மையை எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
15 செவிசாய்க்க மறுப்பவர்களை சந்திக்கையில் எவ்வாறு நாம் சமாதானத்தைக் காத்துக்கொள்ள முடியும்? “அந்த வீடு . . . அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது” என இயேசு கட்டளையிட்டார். (மத்தேயு 10:13) 70 சீஷர்களை இயேசு அனுப்பினதைப் பற்றிய லூக்காவின் விவரப் பதிவில் அவருடைய இந்தக் குறிப்பும் உள்ளது: “சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்.” (லூக்கா 10:6) ஜனங்களுக்கு நற்செய்தியை பிரசங்கிக்கையில் நாம் அன்புடனும் சமாதானமான மனப்பான்மையுடனும் அறிவிப்பது பொருத்தமானதே. வீட்டுக்காரர் ஆர்வம் காட்டாமல் போகையில், குறைகூறுகையில், முகத்தில் அறைந்தாற்போல் பேசுகையில் நாம் அறிவித்த சமாதான செய்தி ‘நம்மிடமே திரும்பி வரும்’ சூழ்நிலை உருவாகிறது. ஆனால் இவற்றில் எதுவும், யெகோவாவின் பரிசுத்த ஆவியின் கனியாகிய சமாதானத்தை நம்மிடமிருந்து பறித்துப்போடுவதில்லை.—கலாத்தியர் 5:22, 23.
அறுவடைக்காரர்களுக்கு சிறந்ததோர் இலக்கு
16, 17. (அ) மறுசந்திப்புகள் செய்கையில் நம்முடைய இலக்கு என்ன? (ஆ) பைபிள் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு எப்படி உதவலாம்?
16 அறுவடைக்காரர்களாக நித்திய ஜீவனுக்கு ஆட்களை கூட்டிச் சேர்ப்பதில் நமக்கும் ஒரு பங்கிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், பிரசங்கிக்கையில் ஒருவர் நன்கு செவிசாய்த்து, அதிகம் கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து, ‘சமாதான பாத்திரராக’ நிரூபிக்கையில் எவ்வளவு மகிழ்ச்சி! ஒருவேளை ஏகப்பட்ட பைபிள் கேள்விகளுக்கு அவருக்கு பதில் தேவைப்படலாம்; உடனடியாக அவை எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல நம்மால் முடியாமல் இருக்கலாம். முதல் சந்திப்பில் அதிக நேரத்தை செலவிடுவது பொருத்தமாக இராததால், என்ன செய்யலாம்? சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சிபாரிசு செய்யப்பட்டதை ஒரு குறிக்கோளாக நாம் வைக்கலாம்.
17 “மாதிரி பைபிள் படிப்புகள் நடத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.” 1937 முதல் 1941 வரை தொடர்ந்து பிரசுரிக்கப்பட்ட மாதிரி படிப்பு என்ற போதனைகள் நிறைந்த ஆங்கில சிறு புத்தகங்களில் மூன்றாவதாக பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தில் அந்த வாசகம் காணப்பட்டது. “[ராஜ்ய] பிரஸ்தாபிகள் அனைவரும் ராஜ்ய செய்தியில் ஆர்வம் காட்டும் நற்பிரியமுள்ள மனிதருக்கு முடிந்த எல்லா விதத்திலும் உதவ கவனமாய் இருக்க வேண்டும். பேக்-கால்ஸ் [மறுசந்திப்புகள்] மூலம் இவர்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் . . . , முடிந்த மட்டும் சீக்கிரத்தில் . . . மாதிரி படிப்பை ஆரம்பிக்க வேண்டும்” என்றும் அது குறிப்பிட்டது. ஆம், வீட்டு பைபிள் படிப்பை ஆரம்பித்து அதை தொடர்ந்து நடத்துவதே நம் மறுசந்திப்புகளின் இலக்கு.a ஆர்வமிக்கவர் மீது காட்டும் சிநேகப்பான்மையான மனப்பான்மையும் கரிசனையும், நன்றாக தயாரித்து பலன்தரும் படிப்பை நடத்த நம்மைத் தூண்டுவிக்கின்றன.
18. இயேசு கிறிஸ்துவின் சீஷராவதற்கு நாம் எப்படி புதியவர்களுக்கு உதவலாம்?
18 நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகம், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? போன்ற சிற்றேடுகளின் உதவியால், பயன்தரும் வீட்டு பைபிள் படிப்புகளை நாம் நடத்தலாம்; இவ்வாறு அக்கறை காட்டும் புதியவர் சீஷராவதற்கு உதவலாம். பெரிய போதகராகிய இயேசு கிறிஸ்துவை பின்பற்ற நாம் முயலுகையில், சமாதானமும் மகிழ்ச்சியுமுள்ள நம்முடைய மனப்பான்மை, உண்மைத்தன்மை, யெகோவாவின் தராதரங்களுக்கும் அறிவுரைகளுக்கும் நாம் காட்டும் மரியாதை ஆகியவற்றிலிருந்தும் அந்த பைபிள் மாணாக்கர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. புதியவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அவர்களிடம் மற்றவர்கள் கேள்வி கேட்கையில் எப்படி பதிலளிப்பது என்பதையும் நம்மால் முடிந்தளவு கற்றுக்கொடுத்து உதவுவோமாக. (2 தீமோத்தேயு 2:1, 2; 1 பேதுரு 2:21) அடையாள அர்த்தமுள்ள அறுவடைக்காரர்களாக, கடந்த ஊழிய ஆண்டில் உலகெங்கும் சராசரி 47,66,631 வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டதில் உண்மையிலேயே மகிழலாம். வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தும் அறுவடைக்காரர்களில் ஒருவராக இருக்கிறோமென்றால் நமக்கு இன்னும் மகிழ்ச்சியே.
அறுவடையில் தொடர்ந்து மகிழுங்கள்
19. இயேசுவின் ஊழிய காலத்திலும் அதற்குச் சற்று பின்பும், அறுவடையில் மகிழ்ச்சியடைய என்ன நல்ல காரணங்கள் இருந்தன?
19 இயேசுவின் ஊழிய காலத்திலும் அதற்குச் சற்று பின்பும், அறுவடையில் மகிழ்ச்சியடைய நல்ல காரணங்கள் இருந்தன. அப்போது பலர், நற்செய்திக்கு நன்கு செவிசாய்த்தனர். முக்கியமாய், பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. ஏனெனில் அப்போது பேதுருவின் வழிநடத்துதலை ஏற்ற சுமார் 3,000 பேர் யெகோவாவின் பரிசுத்த ஆவியைப் பெற்று, கடவுளுடைய ஆவிக்குரிய இஸ்ரவேலரின் பாகமானார்கள். “இரட்சிக்கப்படுகிறவர்களை ஆண்டவர் அநுதினமும் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டு வந்த”தால், அவர்களுடைய எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது, மகிழ்ச்சியும் பெருகியது.—அப்போஸ்தலர் 2:37-41, 46, 47, தி.மொ.; கலாத்தியர் 6:16; 1 பேதுரு 2:9.
20. அறுவடையில் எது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது?
20 அந்தச் சமயத்தில் ஏசாயாவின் பின்வரும் தீர்க்கதரிசனம் உண்மையானது: “[யெகோவாவாகிய நீர்] அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப் பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறது போலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறது போலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள்.” (ஏசாயா 9:3) அபிஷேகம் செய்யப்பட்ட அந்தத் ‘திரளானவர்களின்’ எண்ணிக்கை பெரும்பாலும் முழுமையாகிவிட்டதை நாம் இப்போது அறிந்திருந்தாலும், அறுவடைக்காரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதைக் கவனிக்கையில் நமக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.—சங்கீதம் 4:7; சகரியா 8:23; யோவான் 10:16.
21. பின்வரும் கட்டுரையில் எதை நாம் கலந்தாலோசிப்போம்?
21 அறுவடை வேலையில் தொடர்ந்து மகிழ்ச்சி காண நமக்கு உண்மையிலேயே நல்ல காரணங்கள் இருக்கின்றன. நம்பிக்கையளிக்கும் நம் செய்தி, தகுதியுள்ளவர்களை நாம் தேடுவது, சமாதானம் உண்டாக்கும் நம் மனப்பான்மை ஆகிய இந்த அனைத்து அம்சங்களும் அறுவடைக்காரர்களாகிய நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. எனினும், அவை பலரிடமிருந்து எதிர்ப்பையும் தூண்டுவிக்கின்றன. அப்போஸ்தலன் யோவானுக்கு இது ஏற்பட்டது. “தேவவசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்” அவர் பத்மு தீவில் சிறைபடுத்தப்பட்டார். (வெளிப்படுத்துதல் 1:9) அப்படியானால், துன்புறுத்துதலையும் எதிர்ப்பையும் சந்திக்கையில் நாம் எப்படி நம் மகிழ்ச்சியைக் காத்துக்கொள்ள முடியும்? நாம் இப்போது பிரசங்கிப்போரிடம் காணப்படும் கடினமான மனப்பான்மையைச் சகிக்க எது நமக்கு உதவும்? இந்தக் கேள்விகளுக்கு எமது அடுத்த கட்டுரை பைபிள்பூர்வமாய் பதிலளிக்கும்.
[அடிக்குறிப்பு]
a அக்கறை காட்டும் ஆட்கள் தொகுதிகளாக கூடிவரும் இடங்களில் ஆரம்பத்தில் படிப்புகள் நடத்தப்பட்டன. எனினும், சீக்கிரத்தில் தனி ஆட்களுடனும் குடும்பங்களுடனும் படிப்புகள் நடத்தப்பட்டன.—யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (ஆங்கிலம்) புத்தகத்தில் பக்கம் 574-ஐக் காண்க.
நிங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• அடையாள அர்த்தமுள்ள அறுவடை வேலை எது?
• என்ன வகையான செய்தியை நாம் அறிவிக்கிறோம்?
• சீஷர்களுக்கான நம் தேடுதல் ஏன் வெற்றியடைகிறது?
• அறுவடையில் நாம் எப்படி சமாதானத்தைக் காத்துக் கொள்கிறோம்?
• அறுவடையில் நாம் ஏன் தொடர்ந்து மகிழ்ச்சி காண்கிறோம்?
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
முதல் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டிலும் பிரசங்கித்தல்
[பக்கம் 13-ன் படங்கள்]
பவுலைப் போலவே இன்றைய அறுவடைக்காரர்களும் எல்லா இடங்களிலும் உள்ளவர்களை சென்றெட்ட முயலுகிறார்கள்
[பக்கம் 13-ன் படம்]
இன்முகத்துடன் நற்செய்தியை பிரசங்கியுங்கள்