இருபத்திரண்டாம் அதிகாரம்
சோதனைகள் மத்தியிலும் உண்மையாய் இருந்தார்
1, 2. இயேசு கப்பர்நகூமில் சொற்பொழிவு ஆற்றியபோது பேதுரு எதை எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் என்ன நடந்தது?
இயேசுவின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருப்போரின் முகத்தை பேதுரு கவலையோடு பார்க்கிறார். இடம் கப்பர்நகூமிலுள்ள ஜெபக்கூடம். இந்த ஊரில்தான் பேதுருவின் வீடு இருக்கிறது. இங்குதான், கலிலேயாக் கடலின் வடக்கு கரையோரத்தில்தான், மீன்பிடி தொழில் செய்துவந்தார். அவருடைய நண்பர்கள்... உறவினர்கள்... தொழில் ரீதியில் பழக்கமானவர்கள்... பலரும் இங்குதான் வசிக்கிறார்கள். ஊர்க்காரர் எல்லோரும் தன்னைப்போல் இயேசுவை ஏற்றுக்கொள்வார்கள்... இந்த மாபெரும் போதகரிடமிருந்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சந்தோஷமாய்க் கற்றுக்கொள்வார்கள்... என்றெல்லாம் பேதுரு எதிர்பார்த்திருப்பார். ஆனால் அன்றைக்கு இதில் எதுவுமே நடப்பதில்லை.
2 இதுவரை காதுகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்த அநேகர் இப்போது கேட்பதை நிறுத்திவிடுகிறார்கள். வேறு சிலரோ சத்தமாக முணுமுணுக்கிறார்கள், இயேசு சொல்கிற செய்தியையே ஆட்சேபிக்கிறார்கள். ஆனால் பேதுருவுக்கு அதிக கவலையூட்டுகிற விஷயம் என்னவென்றால், இயேசுவின் சீடர்கள் சிலருடைய பிரதிபலிப்புதான். இப்போது அவர்களுடைய முகத்தில் ஆன்மீக அறிவொளி பெற்ற ஆனந்தம் இல்லை... புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொண்ட புத்துணர்ச்சி இல்லை... சத்தியத்தை அறிந்துகொண்ட சந்தோஷம் இல்லை. அவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள், சொல்லப்போனால் கோபமாக இருக்கிறார்கள். இயேசுவின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது என்றுகூட வாய்விட்டுச் சொல்கிறார்கள். வேறெதையும் கேட்கப் பிடிக்காமல், ஜெபக்கூடத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். ஏன், இயேசுவைப் பின்பற்றுவதையே விட்டுவிடுகிறார்கள்.—யோவான் 6:60, 66-ஐ வாசியுங்கள்.
3. பேதுருவின் விசுவாசம் என்ன செய்ய பலமுறை அவருக்குக் கைகொடுத்தது?
3 பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தர்களுக்கும் இதுவொரு சோதனைக் காலம். அன்று இயேசு சொன்னதை பேதுருகூட முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனாலும், இயேசுவின் வார்த்தைகளை மேலோட்டமாய் எடுத்துக்கொண்டால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்பது அவருக்குப் புரிகிறது. பேதுரு என்ன செய்வார்? எஜமானர்மீது அவர் வைத்திருக்கும் விசுவாசத்திற்கு சோதனை வருவது இது முதல் தடவையும் அல்ல, கடைசி தடவையும் அல்ல. இப்படிப்பட்ட சவால்களைச் சமாளிக்க... உண்மையுடன் இருக்க... பேதுருவின் விசுவாசம் அவருக்குக் கைகொடுக்கிறது. எப்படி என்று பார்ப்போம்.
மற்றவர்கள் பிரிந்து சென்றாலும் அவர் பிரிந்து செல்வதில்லை
4, 5. மக்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக இயேசு எப்படியெல்லாம் நடந்துகொண்டார்?
4 இயேசுவின் சொல்லும் செயலும் பலமுறை பேதுருவுக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கின்றன. அவருடைய எஜமானர் மீண்டும் மீண்டும் மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துகொண்டார். ஒரு நாளுக்கு முன்புதான் ஆயிரக்கணக்கானோருக்கு இயேசு அற்புதமாய் ஆகாரம் அளித்தார். அதற்காக அவரை அரசராக்க அவர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தாரைவிட்டு விலகிப்போனார், அது அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது. போவதற்கு முன்பு, தம்முடைய சீடர்களைப் படகில் ஏறி கப்பர்நகூமுக்குப் புறப்படச் சொல்லிக் கட்டளையிட்டிருந்தார். அந்தச் சீடர்கள் ராத்திரி நேரத்தில் படகில் பயணம் செய்தபோது, புயல் வீசிய கலிலேயாக் கடலில் இயேசு நடந்துவந்தார்; அதைக் கண்டு சீடர்கள் மீண்டும் ஆச்சரியப்பட்டார்கள். அப்போது விசுவாசம் சம்பந்தமாக ஒரு முக்கியமான பாடத்தை பேதுருவுக்கு இயேசு புகட்டினார்.
5 காலையில், அந்தக் கூட்டத்தார் அவர்களைப் பின்தொடர்ந்து ஏரியின் அக்கரைக்கு வந்திருப்பதைச் சீடர்கள் பார்த்தார்கள். இன்னும் ஏராளமான உணவை இயேசு அற்புதமாய்க் கொடுப்பார் என்ற ஆசையோடு வந்திருந்தார்கள்; ஆன்மீகப் பசியைத் தீர்த்துக்கொள்ள அல்ல, வெறும் வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்ள வந்ததால் அவர்களை இயேசு கடிந்துகொண்டார். (யோவா. 6:25-27) அப்போது நடந்த அந்த உரையாடல் கப்பர்நகூம் ஜெபக்கூடத்திலும் தொடர்ந்தது. அங்கே இயேசு முக்கியமான சத்தியத்தை, ஆனால் ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்த சத்தியத்தை, போதித்தார்; இந்தச் சமயத்திலும் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்துகொண்டார்.
6. இயேசு சொன்ன உவமை என்ன, கூட்டத்தார் அதற்கு எப்படிப் பிரதிபலித்தார்கள்?
6 உணவு வழங்கும் ஒருவராக அவர்கள் தம்மைப் பார்ப்பதை இயேசு விரும்பவில்லை; ஆனால் கடவுளிடமிருந்து வரும் ஆன்மீக உணவாகத் தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்பினார். ஏனென்றால் அவருடைய வாழ்வும் சாவும்தான் அவர்களுக்கு முடிவில்லா வாழ்வைத் தரப்போகிறது. அதனால்தான், தம்மை மன்னாவுக்கு... மோசேயின் நாளில் பரலோகத்திலிருந்து வந்த உணவுக்கு... ஒப்பிட்டு ஓர் உவமையைச் சொன்னார். அதைச் சிலர் ஆட்சேபித்தபோது, அந்த உவமையைத் தத்ரூபமாகப் பயன்படுத்தி, வாழ்வைப் பெற அவருடைய சதையையும் இரத்தத்தையும் சாப்பிட வேண்டுமென விளக்கினார். அப்போதுதான் அவர்கள் கோபாவேசம் அடைந்தார்கள். “இவருடைய பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது; யாரால் இதைக் கேட்டுக்கொண்டிருக்க முடியும்?” என்று சிலர் சொன்னார்கள். இயேசுவின் சீடர்கள் பலர் அவரைப் பின்பற்றுவதையே நிறுத்திவிட முடிவுசெய்தார்கள்.a—யோவா. 6:48-60, 66.
7, 8. (அ) இயேசுவைப் பற்றி பேதுரு இன்னும் எதைப் புரிந்துகொள்ளவில்லை? (ஆ) அப்போஸ்தலர்களிடம் இயேசு கேட்ட கேள்விக்கு பேதுரு எப்படிப் பதிலளித்தார்?
7 இப்போது பேதுரு என்ன செய்வார்? இயேசுவின் பேச்சைக் கேட்டு இவரும்கூட குழம்பிப்போயிருக்க வேண்டும். கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்ற இயேசு சாக வேண்டும் என்பதை இவர் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சலன புத்தியுள்ள அந்தச் சீடர்களைப்போல் இயேசுவைவிட்டு விலகிச்செல்ல பேதுருவும் தூண்டப்படுகிறாரா? இல்லை. அந்த மனிதர்களிடம் இல்லாத முக்கியமான ஒரு குணம் பேதுருவிடம் இருக்கிறது. அது என்ன?
8 இயேசு தமது அப்போஸ்தலர்களிடம் திரும்பி, “நீங்களும் என்னைவிட்டுப் போகப் போகிறீர்களா?” என்று கேட்கிறார். (யோவா. 6:67) அவர் அந்த 12 அப்போஸ்தலர்களிடமும் கேட்கிறார், ஆனால் பேதுருதான் பதில் சொல்கிறார். பெரும்பாலும் அவர்தான் முந்திக்கொண்டு சொல்வார். ஏனென்றால், அவர்கள் எல்லோரையும்விட அவர் வயதில் பெரியவராக இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும்சரி, மற்றவர்களைவிட அவர்தான் எதையும் வெளிப்படையாகப் பேசுகிறவர். தன் மனதில் இருப்பதைச் சொல்லத் தயங்கவே மாட்டார். இந்தச் சந்தர்ப்பத்தில், அவரது மனதிலிருந்து வரும் முத்தான வார்த்தைகள்... இன்றுவரை அழியாத வார்த்தைகள்... இவையே: “எஜமானே, நாங்கள் யாரிடம் போவோம்? முடிவில்லா வாழ்வைத் தரும் வார்த்தைகள் உங்களிடம்தானே இருக்கின்றன.”—யோவா. 6:68.
9. பேதுரு எவ்வாறு இயேசுவுக்கு உண்மைத்தன்மையைக் காட்டினார்?
9 இந்த வார்த்தைகள் உங்களுடைய இதயத்தைத் தொடவில்லையா? இயேசுமீது பேதுரு வைத்திருக்கும் விசுவாசம் ஒரு தலைசிறந்த பண்பை... அதாவது உண்மைத்தன்மையை... வளர்த்துக்கொள்ள அவருக்கு உதவியிருக்கிறது. இயேசுதான் யெகோவா தந்த ஒரே மீட்பர் என்பதை பேதுரு தெளிவாகப் புரிந்துகொள்கிறார்; அதோடு, இயேசு தமது வார்த்தைகளின் மூலம், அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய போதனைகளின் மூலம், மீட்புக்கு வழிநடத்துகிறார் என்பதையும் புரிந்துகொள்கிறார். சில விஷயங்கள் தனக்குப் புரியாமல் இருந்தாலும்கூட, கடவுளுடைய தயவையும் முடிவில்லா வாழ்வெனும் ஆசீர்வாதத்தையும் பெற வேறு யாரிடமும் போக முடியாது என்பதை பேதுரு அறிந்திருக்கிறார்.
புரிந்துகொள்வதற்குக் கஷ்டமாக இருந்தாலும் சரி நம் விருப்புவெறுப்புகளுக்கு மாறாக இருந்தாலும் சரி, இயேசுவின் போதனைகளை நாம் உண்மையோடு பின்பற்ற வேண்டும்
10. பேதுருவின் உண்மைத்தன்மையை இன்று நாம் எப்படிப் பின்பற்றலாம்?
10 நீங்களும் அப்படித்தான் உணருகிறீர்களா? இன்றைக்கு இந்த உலகிலுள்ள பெரும்பாலோர் இயேசுவை நேசிப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் அவருக்கு உண்மையாய் இருப்பதில்லை. நாம் இயேசுவுக்கு உண்மையாய் இருக்க வேண்டுமானால் பேதுருவைப்போல் அவருடைய போதனைகளை நேசிக்க வேண்டும். புரிந்துகொள்வதற்குக் கஷ்டமாக இருந்தாலும் சரி நம் விருப்புவெறுப்புகளுக்கு மாறாக இருந்தாலும் சரி, அந்தப் போதனைகளைக் கற்றுக்கொண்டு, அவற்றின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கேற்ப வாழ வேண்டும். உண்மையோடு நிலைத்திருந்தால்தான் இயேசு கொடுக்க விரும்புகிற முடிவில்லா வாழ்வை நாம் பெற முடியும்.—சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள். b
கண்டிக்கப்படுகிறபோதும் உண்மையாய் இருக்கிறார்
11. இயேசு தம் சீடர்களை எங்கே அழைத்துச் சென்றார்? (அடிக்குறிப்பையும் காண்க.)
11 பரபரப்பான அந்த நாளுக்குப்பின், இயேசு தமது அப்போஸ்தலர்களையும் சீடர்கள் சிலரையும் வடக்கு நோக்கி நீண்ட தூரம் அழைத்துச்செல்கிறார். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் வடகோடியில் வீற்றிருக்கிற எர்மோன் மலையை நோக்கி அவர்கள் பயணம் செய்கிறார்கள்; பனிபோர்த்திய அதன் மலைச்சிகரம் சிலசமயம் கலிலேயாக் கடலிலிருந்தே தெரிகிறது. அவர்கள் மேட்டு நிலப்பரப்பு வழியாக செசரியா பிலிப்பிக்கு அருகில் உள்ள கிராமங்களை நெருங்க நெருங்க அந்த மலை பிரமாண்டமாய்க் காட்சியளிக்கிறது.c இந்த அழகிய சூழலில்... தெற்கே வாக்குப்பண்ணப்பட்ட தேசம் பின்னணியாய் அமைந்திருக்க... இயேசு தமது சீடர்களிடம் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்கிறார்.
12, 13. (அ) மக்கள் தம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என இயேசு ஏன் கேட்டார்? (ஆ) பேதுருவுக்கு உண்மையான விசுவாசம் இருந்தது என்பதை அவருடைய பதில் எப்படிக் காட்டியது?
12 “நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்கிறார். இயேசுவின் கண்களுக்குள் பேதுரு ஊடுருவிப் பார்ப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்; தன் எஜமானரின் கண்களில் கனிவு கசிவதை... அறிவுப் புலமை மிளிர்வதை... மறுபடியும் காண்கிறார். மக்கள் தாங்கள் பார்த்த... கேட்ட... விஷயங்களின் அடிப்படையில் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை இயேசு அறிய விரும்புகிறார். சீடர்கள் அவருக்குப் பதில் அளிக்கிறார்கள், இயேசுவைப் பற்றி மக்கள் மத்தியில் நிலவுகிற தவறான கருத்துகள் சிலவற்றைச் சொல்கிறார்கள். ஆனால் இயேசு இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறார். தம்மை மிக நெருக்கமாய்ப் பின்பற்றுகிறவர்களும் அதே தவறான கருத்தை வைத்திருக்கிறார்களா என்று அறிய விரும்புகிறார். அதனால் அவர்களிடம், “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்கிறார்.—லூக். 9:18-20.
13 இந்தச் சமயத்திலும் பேதுருதான் உடனடியாகப் பதிலளிக்கிறார். அங்கிருக்கிற அநேகருடைய இதயத்தில் பதிந்திருக்கிற விஷயத்தைத் தெளிவான வார்த்தைகளில்... உறுதியான வார்த்தைகளில்... சொல்கிறார். “நீங்கள் கிறிஸ்து, உயிருள்ள கடவுளுடைய மகன்” என்று கூறுகிறார். அப்போது இயேசு அவரைக் கனிவுடன் பாராட்டுகிறார்; பேதுரு சொன்னதை அங்கீகரிப்பதுபோல் அவரைப் பார்த்துப் புன்னகை சிந்துகிறார். விசுவாசமுள்ளோருக்கு இந்த முக்கியமான உண்மையை வெளிப்படுத்தியிருப்பது எந்த மனிதனும் அல்ல, யெகோவா தேவனே என பேதுருவுக்கு நினைப்பூட்டுகிறார். யெகோவா இதுவரை வெளிப்படுத்திய உண்மைகளிலேயே மாபெரும் உண்மையைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் பேதுருவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது; ஆம், வெகு காலத்திற்குமுன் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா அல்லது கிறிஸ்து யார் என்பதைப் புரிந்துகொள்ளும் பாக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறது.—மத்தேயு 16:16, 17-ஐ வாசியுங்கள்.
14. பேதுருவுக்கு என்ன முக்கியப் பொறுப்புகளை இயேசு கொடுத்தார்?
14 இந்த கிறிஸ்துதான், கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல் எனப் பூர்வகால தீர்க்கதரிசனம் குறிப்பிட்டது. (சங். 118:22; லூக். 20:17) இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களை மனதில் வைத்தே பேதுருவிடம் இயேசு ஒரு விஷயத்தை வெளிப்படுத்துகிறார்; அதாவது பேதுரு இப்போது அடையாளம் கண்டுகொண்ட கிறிஸ்து மீதுதான்... இந்தக் கல்லின் அல்லது கற்பாறையின் மீதுதான்... யெகோவா சபையைக் கட்டுவார் என்பதை வெளிப்படுத்துகிறார். அந்தச் சபையில் மிக முக்கியமான பொறுப்புகள் சிலவற்றை பேதுருவுக்கு அளிக்கிறார். சிலர் நினைக்கிறபடி, மற்ற அப்போஸ்தலர்களைவிட மேலான அந்தஸ்தை அல்ல, கூடுதலான பொறுப்புகளைத்தான் அவருக்கு அளிக்கிறார். பேதுருவிடம் “பரலோக அரசாங்கத்தின் சாவிகளை” கொடுக்கிறார். (மத். 16:19) மனிதகுலத்தில் மூன்று தொகுதியினருக்கு—முதலில் யூதருக்கு, பின்பு சமாரியருக்கு, கடைசியில் புறதேசத்தாருக்கு—கடவுளுடைய அரசாங்கத்திற்குள் நுழையும் நம்பிக்கையை முதன்முதல் பேதுருதான் அளிப்பார்.
15. எந்தச் சந்தர்ப்பத்தில் இயேசுவை பேதுரு கடிந்துகொண்டார், என்ன சொல்லிக் கடிந்துகொண்டார்?
15 என்றாலும், யாரிடம் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அவரிடம் அதிகம் கேட்கப்படும் என இயேசு ஒருசமயம் குறிப்பிட்டிருந்தார்; அந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை பேதுருவின் விஷயம் காட்டுகிறது. (லூக். 12:48) மேசியாவைப் பற்றிய முக்கியமான உண்மைகளை இயேசு தொடர்ந்து வெளிப்படுத்துகிறார்; எருசலேமில் தாம் பாடுகள் பட்டு மரிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கிறார். இதெல்லாம் பேதுருவின் மனதை நெருடுகின்றன. இயேசுவைத் தனியே அழைத்து, “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று சொல்லி அவரைக் கடிந்துகொள்கிறார்.—மத். 16:21, 22.
16. இயேசு எப்படி பேதுருவைக் கண்டித்தார், இயேசுவின் வார்த்தைகள் நம் அனைவருக்கும் தரும் நடைமுறையான அறிவுரை என்ன?
16 ஏதோ நல்ல எண்ணத்தோடுதான் அப்படிச் சொல்வதாக பேதுரு நினைத்திருக்கலாம்; ஆகவே இயேசு கொடுக்கும் பதில் அவருக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்க வேண்டும். இயேசு மறுபக்கம் திரும்பி, ஒருவேளை இதேபோல் நினைத்த மற்ற சீடர்களிடம் திரும்பி, “எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்” என்று சொல்கிறார். (மத். 16:23; மாற். 8:32, 33; தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு) இயேசுவின் வார்த்தைகளில் நம் அனைவருக்கும் நடைமுறையான அறிவுரை பொதிந்திருக்கிறது. கடவுளுடைய சிந்தையைவிட நம்முடைய சிந்தை மேலானது என்ற எண்ணம் நமக்குள் வருவது மிகச் சுலபம். அந்த எண்ணத்தோடு மற்றவர்களிடம் பேசினால், ஒருவேளை உதவி செய்யும் நோக்கத்தோடு அப்படிப் பேசினாலும், நம்மை அறியாமலேயே சாத்தானுடைய நோக்கத்தை நிறைவேற்றுகிறவர்களாய் இருப்போம், கடவுளுடைய நோக்கத்தை அல்ல. இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு பேதுரு எப்படிப் பிரதிபலிக்கிறார்?
17. “எனக்குப் பின்னாகப்போ” என்று பேதுருவிடம் இயேசு சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
17 நேரடி அர்த்தத்தில், தன்னைப் பிசாசாகிய சாத்தான் என்று இயேசு அழைக்கவில்லை என்பதை பேதுரு உணர்ந்திருப்பார். சொல்லப்போனால், சாத்தானிடம் பேசியதைப் போல் பேதுருவிடம் இயேசு பேசவில்லை. “அப்பாலே போ” என்று சாத்தானிடம் சொன்னார், பேதுருவிடமோ “எனக்குப் பின்னாகப்போ” என்றுதான் சொன்னார். (மத். 4:10) இந்த அப்போஸ்தலனிடம் ஏராளமான நல்ல குணங்களை இயேசு பார்ப்பதால் அவரை ஒதுக்கித் தள்ளிவிடுவதில்லை, பேதுருவின் மனதிலுள்ள தவறான எண்ணத்தைத்தான் திருத்துகிறார். எஜமானருக்கு முன்னால் பேதுரு ஒரு முட்டுக்கட்டையாக இல்லாமல் அவருக்குப் பின்னால் நின்று அவரை ஆதரிக்கும் சீடராய் இருக்க வேண்டும் என்பதைத்தான் புரியவைக்கிறார்.
புத்திமதியைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்ளும்போதுதான் இயேசுவிடமும் யெகோவாவிடமும் தொடர்ந்து நெருங்கிவர முடியும்
18. பேதுரு எவ்வாறு உண்மைத்தன்மையைக் காட்டினார், நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்?
18 இயேசுவுடன் பேதுரு வாதாடுகிறாரா, கோபப்படுகிறாரா, முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்கிறாரா? இல்லை; திருத்தத்தைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறு மீண்டும் உண்மைத்தன்மையைக் காட்டுகிறார். இயேசுவைப் பின்பற்றும் அனைவருக்கும் அவ்வப்போது திருத்தம் அவசியம். புத்திமதியைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்ளும்போதுதான் இயேசுவிடமும் யெகோவாவிடமும் தொடர்ந்து நெருங்கிவர முடியும்.—நீதிமொழிகள் 4:13-ஐ வாசியுங்கள்.
உண்மைத்தன்மைக்கு வெகுமதி
19. திகைப்பூட்டும் என்ன விஷயத்தை இயேசு சொன்னார், பேதுரு என்ன நினைத்திருக்கலாம்?
19 அடுத்து... திகைப்பூட்டும் மற்றொரு விஷயத்தை இயேசு சொல்கிறார். “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இங்கு நிற்கிறவர்களில் சிலர், மனிதகுமாரன் ராஜ அதிகாரத்தில் வருவதைப் பார்ப்பதற்குமுன் சாக மாட்டார்கள்” என்று தெரிவிக்கிறார். (மத். 16:28) இந்த வார்த்தைகள் பேதுருவின் ஆர்வத்தைத் தூண்டுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. ‘இயேசு என்ன சொல்ல வருகிறார்? அவர் என்னைக் கடுமையாய்க் கண்டித்ததால் இப்படிப்பட்ட பாக்கியம் எதுவும் கிடைக்காதோ?’ என்று பேதுரு நினைத்திருக்கலாம்.
20, 21. (அ) பேதுரு பார்த்த காட்சியை விவரியுங்கள். (ஆ) காட்சியில் கண்ட நபர்களின் உரையாடலைக் கேட்டபோது பேதுரு என்ன உணர்ந்திருப்பார்?
20 ஆனால், சுமார் ஒரு வாரத்திற்குப்பின், யாக்கோபையும் யோவானையும் பேதுருவையும் அழைத்துக்கொண்டு சில மைல் தூரத்தில் இருக்கிற “உயரமான ஒரு மலைக்கு,” ஒருவேளை எர்மோன் மலைக்கு, இயேசு செல்கிறார். அது இரவு வேளையாக இருந்திருக்கலாம், ஏனென்றால் அந்த மூன்று பேரும் அரைத் தூக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் இயேசு ஜெபம் செய்கிறபோது, அங்கே நடக்கும் சம்பவம் அவர்களுடைய தூக்கத்தை விரட்டிவிடுகிறது.—மத். 17:1; லூக். 9:28, 29, 32.
21 அவர்கள் கண் முன்னால் இயேசு தோற்றம் மாறுகிறார். அவரது முகம் ஒளி வீசுகிறது... பளிச்சிடுகிறது... படிப்படியாகச் சூரியனைப் போல் பிரகாசிக்கிறது. அவரது உடை வெண்ணிறத்தில் மின்னுகிறது. அப்போது இரண்டு உருவங்கள் தோன்றுகின்றன, அந்த உருவங்களில் ஒன்று மோசேயையும் மற்றொன்று எலியாவையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. ‘எருசலேமில் நிறைவேறப்போகிற இயேசுவுடைய இறுதிப் பயணத்தை’ பற்றி... ஒருவேளை அவரது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி... அவருடன் உரையாடுகிறார்கள். அப்படிப்பட்ட வேதனைமிக்க மரணம் இயேசுவுக்கு ஏற்படக்கூடாது எனத் தான் சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்பதை பேதுரு இப்போது உணர்ந்திருப்பார்.—லூக். 9:30, 31.
22, 23. (அ) பேதுரு எவ்வாறு உற்சாகத்தையும் கனிவையும் காட்டினார்? (ஆ) அந்த இரவில் பேதுருவும் யாக்கோபும் யோவானும் பெற்ற மற்றொரு வெகுமதி என்ன?
22 இந்த அற்புதக் காட்சியில் தானும் இடம்பெற வேண்டுமென பேதுரு நினைக்கிறார்; அது நீடிக்க வேண்டுமெனவும் அவர் விரும்பியிருக்கலாம். இயேசுவிடமிருந்து மோசேயும் எலியாவும் விடைபெறுவதுபோல் அவருக்குத் தெரிகிறது. அதனால், “போதகரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உங்களுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை நாங்கள் போடுகிறோம்” என்று சொல்கிறார். உண்மைதான், பல காலங்களுக்கு முன்பே இறந்துபோன அந்த ஊழியர்களைப் பிரதிநிதித்துவம் செய்த உருவங்களுக்குக் கூடாரங்கள் தேவை இல்லை. என்ன சொல்கிறார் என்றே தெரியாமல் பேதுரு சொல்கிறார். இருந்தபோதிலும், உற்சாகமும் கனிவும் நிறைந்த இந்த மனிதரிடம் நீங்கள் கவரப்படுகிறீர்கள் அல்லவா?—லூக். 9:33.
23 பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோருக்கு அந்த இரவில் இன்னொரு வெகுமதியும் கிடைக்கிறது. அந்த மலையில் ஒரு மேகம் வந்து அவர்களைச் சூழ்ந்துகொள்கிறது. அதிலிருந்து ஒரு குரல் வருகிறது—அது யெகோவா தேவனின் குரல். “இவரே என் மகன், நான் தேர்ந்தெடுத்திருப்பவர்; இவருக்குச் செவிகொடுங்கள்” என்று சொல்கிறது. அத்துடன் அந்தக் காட்சி முடிவடைகிறது, இயேசுவுடன் அந்த மலையில் அவர்கள் தனியாக இருக்கிறார்கள்.—லூக். 9:34-36.
24. (அ) இயேசு தோற்றம் மாறிய காட்சி பேதுருவுக்கு எப்படிப் பயனளித்தது? (ஆ) அந்தக் காட்சியிலிருந்து இன்று நாமும் எப்படிப் பயனடையலாம்?
24 இயேசு தோற்றம் மாறுகிற காட்சி பேதுருவுக்கும், ஏன் நமக்கும், எப்பேர்ப்பட்ட ஒரு பரிசு! அந்த இரவில் நிகழ்ந்த சம்பவத்தை... பரலோக அரசராக இயேசு பெறப்போகும் மகிமையின் முற்காட்சியை... காண தனக்குக் கிடைத்த பாக்கியத்தைப் பற்றி பேதுரு பல பத்தாண்டுகளுக்குப் பின்பு எழுதினார். ‘அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டதாக’ குறிப்பிட்டார். கடவுளுடைய வார்த்தையிலுள்ள பல தீர்க்கதரிசனங்களை அந்தக் காட்சி உறுதிப்படுத்தியது, அதோடு பேதுரு எதிர்ப்படப்போகும் விசுவாச பரீட்சைகளுக்கு அவரைப் பலப்படுத்தியது. (2 பேதுரு 1:16-19-ஐ வாசியுங்கள்.) யெகோவாவால் நியமிக்கப்பட்ட எஜமானருக்கு உண்மையாய் இருந்தால்... அவரிடமிருந்து கற்றுக்கொண்டால்... அவருடைய கண்டிப்பையும் திருத்தத்தையும் ஏற்றுக்கொண்டால்... அவரது அடிச்சுவடுகளை அன்றாடம் தாழ்மையுடன் பின்பற்றி நடந்தால்... பேதுருவைப் போலவே அந்தக் காட்சி நம் விசுவாசத்தையும் பலப்படுத்தும்.
a இயேசுவைக் கடவுளிடமிருந்து வந்த தீர்க்கதரிசி என்று ஒருநாள் முன்புதான் அந்தக் கூட்டத்தார் ஆர்வம்பொங்க அழைத்திருந்தார்கள்; ஆனால், அன்றைக்கு ஜெபக்கூடத்தில் அவருடைய பேச்சைக் கேட்டு அவர்கள் பிரதிபலித்த விதம் அவர்களுடைய சலன புத்தியைக் காட்டியது.—யோவா. 6:14.
b சங்கீதம் 97:10 (NW): “யெகோவாவை நேசிக்கிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள். தமக்கு உண்மையாய் இருப்போரின் உயிரை அவர் பாதுகாக்கிறார்; பொல்லாதவரின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.”
c கலிலேயாக் கடலின் கரையிலிருந்து 50 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கிறார்கள்; கடல்மட்டத்திற்குக் கீழே சுமார் 700 அடியிலிருந்து மேலே 1,150 அடி உயரத்திற்குப் பயணம் செய்கிறார்கள். இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிற இடங்கள் வழியாகச் செல்கிறார்கள்.