“ஜெபம்பண்ண . . . எங்களுக்குப் போதிக்கவேண்டும்”
“அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, . . . ஜெபம்பண்ண . . . எங்களுக்குப் போதிக்கவேண்டும்.”—லூக்கா 11:1.
1-3. (எ) இயேசுவின் சீஷர்கள் ஏன் ஜெபத்தின்பேரில் போதனையை நாடினார்கள்? (பி) ஜெபத்தைக் குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?
சிலருக்கு அருமையாகப் பாடும் குரல் வரம் இருக்கிறது. மற்றவர்களுக்கு இசைக் கலைஞர்களாக இயல்பான திறமை இருக்கிறது. ஆனால் அவர்களுடைய திறமையின் உச்சக்கட்டத்தை எட்டிப்பிடிப்பதற்கு இந்தப் பாடகர்களுக்கும் இசைக் கலைஞர்களுக்கும் போதனை தேவைப்படுகிறது. ஜெபத்தைக் குறித்ததிலும் இப்படியே இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் தங்களுடைய ஜெபங்கள் கடவுளால் கேட்கப்படுவதற்கு தங்களுக்குப் போதனை தேவைப்படுகிறது என்று உணர்ந்தனர்.
2 இயேசு சாதாரணமாகத் தனித்து சென்று தம் பிதாவிடம் ஜெபித்தார்; தம்முடைய 12 அப்போஸ்தலர்களையும் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர் ஓர் இரவு நேரம் முழுவதும் ஜெபித்தார். (லூக்கா 6:12-16) தனித்து ஜெபம் செய்யும்படியாக அவர் தம்முடைய சீஷர்களைத் துரிதப்படுத்திய போதிலும், அவர் பொது மக்கள் மத்தியில் ஜெபம் பண்ணினதையும் அவர்கள் கேட்டார்கள்; அவர் அந்த மத மாயக்காரரைப் போன்று மனிதர்கள் பார்ப்பதற்கென்று ஜெபிக்க வில்லை என்பதையும் அவர்கள் கவனித்தார்கள். (மத்தேயு 6:5, 6) தர்க்கரீதியாகவே, இயேசுவைப் பின்பற்றியவர்கள் ஜெபத்தில் அவருடைய மேலான போதனைகளைப் பெற்றுக்கொள்ள ஆவலாயிருந்தனர். எனவே இப்படியாக வாசிக்கிறோம்: “அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, [முழுக்காட்டுபவனாகிய] யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்க வேண்டும் என்றான்.”—லூக்கா 11:1.
3 இயேசு எவ்விதம் பிரதிபலித்தார்? அவருடைய முன்மாதிரியிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஜெபத்தின் பேரில் அவர் கொடுக்கும் போதனையிலிருந்து நாம் எவ்விதம் நன்மையடையலாம்?
நமக்குப் பாடங்கள்
4. நாம் ஏன் “இடைவிடாமல் ஜெபம்பண்ண” வேண்டும்? அப்படிச் செய்வது எதை அர்த்தப்படுத்துகிறது?
4 ஜெப சிந்தையுள்ளவராயிருந்த இயேசுவின் வார்த்தைகளிலிருந்தும் முன்மாதிரியிலிருந்தும் நாம் ஏராளமாகக் கற்றுக்கொள்ளலாம். ஒரு பாடம் என்னவென்றால், கடவுளுடைய பரிபூரணக் குமாரனாகிய இயேசு கிறிஸ்து தவறாமல் ஜெபம் செய்யவேண்டியதாயிருந்தது என்றால், அவருடைய அபூரண சீஷர்கள் வழிநடத்துதலுக்கும், ஆறுதலுக்கும் ஆவிக்குரிய பராமரிப்புக்கும் கடவுளைத் தொடர்ந்து சார்ந்திருக்க வேண்டிய அவசியம் அதிகமாய் இருக்கிறது. எனவே நாம் “இடைவிடாமல் ஜெபம்பண்ண” வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:17) உண்மைதான், நாம் சொல்லர்த்தமாகவே எப்பொழுதும் முழங்கால்படியிட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, நாம் தொடர்ந்து ஜெபசிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் வழிநடத்துதலுக்குக் கடவுளை நோக்கியிருக்க வேண்டும், இப்படிச் செய்யும்போது நாம் உட்பார்வையுள்ளவர்களாக செயல்படவும் எப்பொழுதும் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றவர்களாய் இருக்கவும் முடியும்.—நீதிமொழிகள் 15:24.
5. ஜெபத்திற்காக நாம் ஒதுக்க வேண்டிய நேரத்தை எது பறித்துக்கொள்ளக்கூடும்? இதைக் குறித்து நாம் என்ன செய்ய வேண்டும்?
5 இந்தக் “கடைசி நாட்களில்,” நாம் ஜெபத்தில் செலவழிக்க வேண்டிய நேரத்தை அநேக காரியங்கள் பறித்துக்கொள்ளக்கூடும். (2 தீமோத்தேயு 3:1) ஆனால் வீட்டுக் கவலைகள், வியாபாரம் அல்லது தொழில் சார்ந்த கவலைகள் போன்றவை நம்முடைய பரம பிதாவிடம் நாம் ஒழுங்காகச் செய்யும் ஜெபத்தில் குறுக்கிடுமென்றால், நாம் இந்த வாழ்க்கையின் கவலைகளினால் அளவுக்கு மிஞ்சி பாரமடைந்தவர்களாக இருக்கிறோம். இப்படிப்பட்ட நிலை தாமதமின்றி சரிசெய்யப்படவேண்டும், ஏனென்றால் ஜெபம் செய்யத் தவறுவது விசுவாசத்தை இழந்துவிடுவதற்கு வழிநடத்தும். நம்முடைய உலகப்பிரகாரமான கடமைகளைக் குறைத்துக்கொள்ளவேண்டும் அல்லது வாழ்க்கையின் கவலைகளை சமநிலைப்படுத்துவதற்கு வழிநடத்துதலுக்காக நம்முடைய இருதயத்தை இன்னும் அதிக உள்ளார்ந்த விதத்திலும் மறுபடியும் மறுபடியுமாகவும் கடவுளிடம் திருப்பிட வேண்டும். நாம் “ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாக” இருக்க வேண்டும்.—1 பேதுரு 4:7.
6. நாம் இப்பொழுது எந்த ஜெபத்தைச் சற்று ஆய்வு செய்யப் போகிறோம்? என்ன நோக்கத்தோடு?
6 மாதிரி ஜெபம் என்று அழைக்கப்படும் ஜெபத்தில், சரியாக என்ன சொல்ல வேண்டும் என்று அல்ல, எப்படி ஜெபம்பண்ண வேண்டும் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். மத்தேயுவின் பதிவிலிருந்து லூக்காவின் பதிவு வித்தியாசப்படுகிறது, காரணம், வித்தியாசமான சமயங்கள் உட்பட்டிருந்தன. இயேசுவைப் பின்பற்றுகிறவர்களாகவும் யெகோவாவின் சாட்சிகளாகவும் நம்முடைய ஜெபங்களின் தன்மைக்கு ஒரு மாதிரியாக நாம் இந்த ஜெபத்தை சற்று ஆய்வு செய்வோம்.
நம்முடைய பிதாவும் அவருடைய பெயரும்
7. யெகோவாவை “எங்கள் பிதாவே” என்று அழைக்கும் சிலாக்கியம் யாருக்கு இருக்கிறது?
7 “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே.” (மத்தேயு 6:9; லூக்கா 11:2) யெகோவா மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகராயிருப்பதாலும், பரலோகங்களில் இருப்பதாலும், அவரைப் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைப்பது பொருத்தமாக இருக்கிறது. (1 இராஜாக்கள் 8:49; அப்போஸ்தலர் 17:24, 28) “எங்களுடைய” என்ற பதம் பயன்படுத்தப்படுவது மற்றவர்களும் கடவுளோடு ஒரு நெருங்கிய உறவைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அங்கீகரிப்பதாய் இருக்கிறது. ஆனால் அவரைத் தங்களுடைய பிதாவாக அழைக்கும் கட்டுப்பாடற்ற சிலாக்கியத்தைக் கொண்டிருப்பது யார்? அவரை வணங்கும் குடும்பத்தில் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்ற தனிநபர்கள் மட்டுமே. யெகோவாவை “எங்கள் பிதாவே” என்று அழைப்பது நமக்குக் கடவுளில் விசுவாசம் இருக்கிறது என்பதையும் அவரோடு ஒப்புரவாவதற்கு ஒரே ஆதாரம் இயேசுவின் மீட்புக் கிரய பலியை முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாகும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.—எபிரெயர் 4:14-16; 11:6.
8. யெகோவாவிடம் ஜெபிப்பதற்கு நேரத்தைச் செலவழிக்க நாம் ஏன் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
8 நம்முடைய பரம பிதாவிடமாக நாம் எவ்வளவு நெருக்கமாக உணரவேண்டும்! தங்களுடைய தகப்பனிடம் செல்வதில் களைப்படையாத பிள்ளைகளைப் போன்று நாம் கடவுளிடம் ஜெபிப்பதற்கு நேரம் செலவழிக்க ஆர்வமாயிருக்க வேண்டும். அவர் தருகிற ஆவிக்குரிய மற்றும் பொருள்சம்பந்தமான ஆசீர்வாதங்களுக்கான ஆழ்ந்த நன்றியுணர்வு அவருடைய நற்குணங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்த நம்மைத் தூண்ட வேண்டும். நம்மைச் சோர்வடையச் செய்யும் பாரங்களை அவரிடமாக எடுத்துச் செல்லும் மனச்சாய்வு நமக்கு இருக்க வேண்டும். (சங்கீதம் 55:22) நாம் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், எல்லாம் நமக்கு நன்மையாக அமையும் என்பதில் நிச்சயமாயிருக்கலாம், ஏனென்றால் அவர் நம்மில் கரிசனை காண்பிக்கிறார்.—1 பேதுரு 5:6, 7.
9. கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுவதற்கு செய்யும் ஜெபம் எதற்கு ஒரு விண்ணப்பமாக இருக்கிறது?
9 “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9; லூக்கா 11:2) “நாமம்” என்ற வார்த்தை சில சமயங்களில் அந்த நபரைத்தாமே குறிப்பதாயிருக்கிறது, “பரிசுத்தப்படுத்துதல்” என்பது “பரிசுத்தமாக்குதல், தனியே பிரித்துவைத்தல் அல்லது பரிசுத்தமாகக் கொள்ளுதல் என்று பொருள்படுகிறது. (வெளிப்படுத்துதல் 3:4-ஐ ஒப்பிடவும்.) அப்படியென்றால், கடவுளுடைய நாமம் அல்லது பெயர் பரிசுத்தப்படுவதற்கு ஏறெடுக்கப்படும் ஜெபம் யெகோவா தம்மைப் பரிசுத்தப்படுத்துவதற்கு செயல்படவேண்டும் என்று விண்ணப்பிப்பதாயிருக்கிறது. எப்படி? தம்முடைய பெயரில் குவிக்கப்பட்டுள்ள எல்லா நிந்தனைகளையும் நீக்கிவிடுவதன் மூலம். (சங்கீதம் 135:13) அதற்காகவே, கடவுள் துன்மார்க்கத்தை நீக்கி, தம்மைத்தாமே மகிமைப்படுத்திடுவதோடு, தாம் யெகோவா என்று தேசங்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்வார். (எசேக்கியேல் 36:23; 38:23) அந்த நாளைக் காணவும் யெகோவாவின் மகத்துவத்தை உண்மையிலேயே போற்றவும் ஆவலுள்ளவர்களாய் இருந்தால், “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்ற வார்த்தைகள் தெரிவிக்கும் பயபக்தியான ஆவியோடு அவரை எப்பொழுதுமே அணுகுகிறவர்களாய் இருப்போம்.
கடவுளுடைய ராஜ்யமும் அவருடைய சித்தமும்
10. கடவுளுடைய ராஜ்யம் வரவேண்டும் என்று ஜெபிப்பதன் அர்த்தம் என்ன?
10 “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” (மத்தேயு 6:10; லூக்கா 11:2) இந்த இடத்தில் ராஜ்யம் என்பது இயேசு கிறிஸ்து மற்றும் அவருடன்கூட இருக்கும் “பரிசுத்தவான்கள்” கரங்களில் இருக்கும் பரலோக மேசியானிய ராஜ்யத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் யெகோவாவின் பேரரசாட்சியைக் குறிக்கிறது. (தானியேல் 7:13, 14, 18, 27; ஏசாயா 9:6, 7; 11:1-5) அது “வருவதாக” என்று ஜெபிப்பதன் அர்த்தம் என்ன? தெய்வீக ஆட்சிக்கு எதிராக இருக்கும் எல்லாப் பூமிக்குரிய எதிர்ப்பாளர்களுக்கும் எதிராகக் கடவுளுடைய ராஜ்யம் வரும்படியாக நாம் கேட்பதைக் குறிக்கிறது. அந்த ராஜ்யம் ‘பூமியின் ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கிய’ பின்னர், அது இந்தப் பூமியை ஒரு பூகோளப் பரதீஸாக மாற்றிடும்.—தானியேல் 2:44; லூக்கா 23:43.
11. யெகோவாவின் சித்தம் சர்வலோகம் முழுவதும் செய்யப்படுவதைக் காண நாம் ஆர்வமுள்ளவர்களாய் இருப்போமானால், நாம் என்ன செய்ய வேண்டும்?
11 “உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) இது பூமி சம்பந்தமாகக் கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிடுவதற்கான ஒரு விண்ணப்பமாகும், அவருடைய எதிரிகளை நீக்கிப்போடுவதையும் இது உட்படுத்துகிறது. (சங்கீதம் 83:9-18; 135:6-10) உண்மையில், அவருடைய சித்தம் சர்வலோகம் முழுவதும் நிறைவேற்றப்படுவதைக் காண நாம் வாஞ்சிக்கிறோம் என்பதை இது குறிக்கிறது. அது நம்முடைய இருதயத்தில் இருக்குமானால், யெகோவாவின் சித்தத்தை எப்பொழுதுமே நம்மாலானவரைக்கும் மிகச் சிறந்த வகையில் செய்கிறவர்களாயிருப்போம். நம்முடைய சொந்த விஷயத்தில் கடவுளுடைய சித்தம் நடந்தேற நாம் உள்ளப்பூர்வமாய் முயலாதவர்களாயிருந்தால் நேர்மையோடு நாம் அவ்விதமான ஒரு விண்ணப்பத்தை ஏறெடுக்க முடியாது. இவ்விதமாக நாம் ஜெபிக்கிறோமென்றால், ஓர் அவிசுவாசியைக் காதலிப்பது அல்லது உலக வழிகளைப் பின்பற்றுவது போன்ற அந்தச் சித்தத்துக்கு முரணான காரியங்களை நாம் செய்யாதிருப்பது குறித்து நிச்சயமாயிருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 7:39; 1 யோவான் 2:15-17) மாறாக, “இந்த விஷயத்தில் யெகோவாவின் சித்தம் என்ன?” என்ற எண்ணத்தையே நம் மனதில் கொண்டிருக்க வேண்டும். ஆம், கடவுளை நம்முடைய முழு இருதயத்தோடு நேசிப்போமென்றால், வாழ்க்கையின் எல்லா விவகாரங்களிலும் நாம் அவருடைய வழிநடத்துதலை நாடுவோம்.—மத்தேயு 22:37.
நம்முடைய அன்றன்று ஆகாரம்
12. ‘அன்றன்று ஆகாரம்’ மட்டுமே கேட்பது நம்மில் என்ன நல்ல பாதிப்பை ஏற்படுத்துகிறது?
12 “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.” (மத்தேயு 6:11) லூக்காவின் பதிவு இப்படியாக வாசிக்கிறது: “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்.” (லூக்கா 11:3) தேவையான உணவை “இன்று” தரும்படியாகக் கடவுளைக் கேட்பது நம்முடைய அன்றாட தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் அவருடைய திறமையில் நம்முடைய விசுவாசத்தை வளர்க்கிறது. இஸ்ரவேலர் மன்னாவை “ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும்” சேர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வாரத்துக்கு அல்லது அதற்கு அதிகம் வேண்டியதை அல்ல. (யாத்திராகமம் 16:4) இது மிக நேர்த்தியான அல்லது அளவுக்கு அதிகமான தேவைகளுக்கான ஒரு ஜெபம் அல்ல, ஆனால் அன்றாட தேவைகள் எழும்போது, அவற்றிற்கான ஜெபமாக இருக்கிறது. அன்றன்று ஆகாரத்தை மட்டுமே விண்ணப்பிப்பது நம்மைப் பேராசை கொள்ளாமலிருக்க உதவுகிறது.—1 கொரிந்தியர் 6:9, 10.
13. (எ) விரிவான கருத்தில், அன்றன்று ஆகாரத்திற்கு ஜெபிப்பதன் அர்த்தம் என்ன? (பி) நாம் கடினமாக உழைத்தும் நாம் உயிர்வாழ்வதற்கு போதியவை மட்டுமே இருந்தாலும் நம்முடைய மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?
13 விரிவான கருத்தில், அன்றன்று தேவையான ஆகாரத்திற்கு விண்ணப்பிப்பதுதானே நம்மில் சுதந்திர உணர்வை ஏற்படுத்தாமல், உணவுக்கும், பானத்துக்கும் உடைக்கும் மற்ற தேவைகளுக்கும் தொடர்ந்து கடவுளை நோக்கி இருக்கிறோம் என்பதைக் குறிப்பாய்த் தெரிவிக்கிறது. அவரை ஆராதிக்கும் குடும்பத்தின் ஒப்புக்கொடுத்த அங்கத்தினர்களாக, நம்முடைய பிதாவை நம்பியிருக்கிறோம் ஆனால் அவர் நமக்கு அற்புதமாய் அளிப்பதற்காக அவரில் காத்திருக்கும் வகையில் நாம் சும்மாயிருப்பதில்லை. நாம் வேலை செய்கிறோம், உணவையும் மற்ற தேவைகளையும் பெற்றுக்கொள்ள கிடைக்கக்கூடிய வழிவகைகள் என்னவாயினும் அதை பயன்படுத்திக்கொள்கிறோம். என்றாலும், நாம் ஜெபத்தில் சரியாகவே கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம், ஏனென்றால் இந்த ஏற்பாடுகளுக்குப் பின்னால் நம்முடைய பரம பிதாவின் அன்பையும் ஞானத்தையும் வல்லமையையும் காண்கிறோம். (அப்போஸ்தலர் 14:15-17; லூக்கா 22:19-ஐ ஒப்பிடவும்.) நம்முடைய ஊக்கம் செழுமையில் விளைவடையக்கூடும். ஆனால் நாம் கடினமாக உழைத்து போதியவை மட்டுமே இருந்தாலும், நாம் நன்றியுள்ளவர்களாகவும் திருப்தியுள்ளவர்களாகவும் இருப்போமாக. (பிலிப்பியர் 4:12; 1 தீமோத்தேயு 6:6-8) உண்மையில், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகிறவனாகவும் பொதுவாக உடுத்துவதுபோல் உடுத்துகிறவனாகவும் இருக்கும் ஒரு தேவ பயமுள்ள ஒருவர் பொருள் சம்பந்தமாக செழுமையில் வாழும் சிலரைவிட அதிக மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். எனவே நம்முடைய கட்டுப்பாட்டையும் மிஞ்சி அமையும் சூழ்நிலை காரணத்தால் நமக்குக் குறைவாக இருந்தாலும், நாம் சோர்ந்துவிட வேண்டாம். அந்த நிலையிலும் நாம் ஆவிக்குரியபிரகாரமாய் ஐசுவரியராய் இருக்க முடியும். ஆம், நாம் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் யெகோவாவின் பேரில் அன்பிலும் நாம் ஊட்டமில்லாதவர்களாய் இருக்க வேண்டியதில்லை, அவருக்கே நம்முடைய துதியும் நன்றியும் இருதயப்பூர்வமான ஜெபத்தில் செல்லுகின்றன.
நம்முடைய கடன்களை மன்னித்தல்
14. நாம் எதற்காக மன்னிப்பு கேட்கிறோம்? கடவுள் எதைப் பயன்படுத்துகிறார்?
14 “எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” (மத்தேயு 6:12) அந்தக் கடன்கள் பாவங்கள் என்று லூக்காவின் பதிவு காட்டுகிறது. (லூக்கா11:4) எல்லாக் காரியங்களையும் நம்முடைய பிதாவின் சித்தத்தின்படி செய்வதற்கு சுதந்தரிக்கப்பட்டப் பாவத்தன்மை நம்மைத் தடைசெய்கிறது. எனவே, ஒரு கருத்தில், இந்தக் குறைபாடுகள் நம்முடைய கடன்களாக இருக்கின்றன, அல்லது கடவுளுக்குக் கடன்பட்டிருத்தலாக இருக்கின்றன, ஏனென்றால் நாம் ‘ஆவிக்கேற்றபடி வாழவும் நடக்கவும்’ ஆரம்பித்தோம். (கலாத்தியர் 5:16-25; ரோமர் 7:21-25 ஒப்பிடவும்.) நமக்கு இந்தக் கடன்கள் இருப்பதற்குக் காரணம் நாம் அபூரணராகவும் கடவுளுடைய தராதரங்களை முழுமையாகப் பூர்த்திசெய்கிறவர்களாகவும் இல்லை. இந்தப் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறுவதற்காகவே நாம் ஜெபிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம். மகிழ்ச்சிக்குரிய காரியம் என்னவென்றால், இந்தக் கடன்கள் அல்லது பாவங்களை மன்னிப்பதற்காக கடவுள் இயேசுவின் மீட்புப் பலியின் கிரயத்தைப் பயன்படுத்துகிறார்.—ரோமர் 5:8; 6:23.
15. தேவையான சிட்சையினிடமாக நம்முடைய மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?
15 கடவுள் நம்முடைய கடன்களை அல்லது பாவங்களை மன்னிக்கும்படி எதிர்பார்ப்போமானால், நாம் மனந்திரும்புதலுள்ளவர்களாக, சிட்சையைப் பெற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 28:13; அப்போஸ்தலர் 3:19) யெகோவா நம்மை நேசிப்பதால், நம்முடைய பலவீனத்தை நாம் சரிசெய்துகொள்ளும் வகையில் அவர் நமக்குத் தனிப்பட்ட விதத்தில் தேவையான சிட்சையைக் கொடுத்துவருகிறார். (நீதிமொழிகள் 6:23; எபிரெயர் 12:4-6) உண்மைதான், நாம் எந்தவகையிலும் வேண்டுமென்றே மீறுதலுக்குட்படாத அளவுக்கு விசுவாசத்திலும் அறிவிலும் வளர்ச்சியை கொண்டிருந்து, நம்முடைய இருதயம் கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முழுமையாக இசைந்திருப்பதைக் காணக்கூடுமானால் நாம் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் நம்முடைய தவறுகள் வேண்டுமென்றே செய்யப்படுகிறதை நாம் பகுத்துணர முடிந்தால், அப்பொழுது என்ன? அப்பொழுது நாம் உள்ளத்தால் வருத்தப்பட்டு, ஊக்கத்தோடு மன்னிப்புக்காக ஜெபிக்க வேண்டும். (எபிரெயர் 10:26-31) நாம் பெற்றிருக்கும் ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிப்பவர்களாய், நம்முடைய வழியை வேகமாக சரிசெய்துகொள்ள வேண்டும்.
16. கடவுள் நம்முடைய பாவத்தை மன்னிக்கும்படியாகத் தொடர்ந்து ஜெபிப்பது ஏன் நன்மையான காரியம்?
16 நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படியாக நாம் கடவுளிடம் இடைவிடாமல் கேட்பது நல்லது. இதைச் செய்வது நம்முடைய பாவத் தன்மையை நமக்கு முன்னால் நிறுத்துவதோடு கடவுளுக்கு முன்னால் நம்மைத் தாழ்த்துகிறது. (சங்கீதம் 51:3, 4, 7) நம்முடைய பரம பிதா “பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்க” வேண்டிய அவசியம் இருக்கிறது. (1 யோவான் 1:8, 9) மேலும், ஜெபத்தில் நம்முடைய பாவங்களைக் குறிப்பிடுவதுதானே அவற்றை எதிர்த்துக் கடுமையாகப் போராடுவதற்கு நமக்கு உதவுகிறது. இப்படியாக மீட்கும் பொருளும் இயேசு சிந்திய இரத்தத்தின் கிரயமும் நமக்கு அவசியமாயிருக்கிறது என்று நாம் தொடர்ந்து ஞாபகப்படுத்தப்படுகிறோம்.—1 யோவான் 2:1, 2; வெளிப்படுத்துதல் 7:9, 14.
17. மன்னிப்புக்காக ஜெபிப்பது ஏன் மற்றவர்களோடு நாம் கொண்டிருக்கும் உறவுக்கு உதவியாக இருக்கும்?
17 மன்னிப்புக்காக ஜெபிப்பது சிறிய பெரிய காரியங்களில் நம்முடைய கடனாளிகளாக இருப்பவர்களிடம் நாம் இரக்கமுள்ளவர்களாகவும், தயைமிகுந்தவர்களாகவும், தாராள மனப்பான்மையுள்ளவர்களாகவும் இருக்க நமக்கு உதவுகிறது. லூக்காவின் பதிவு சொல்லுகிறது: “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே.” (லூக்கா 11:4) உண்மை என்னவெனில், நமக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவர்களை ‘நம்முடைய கடனாளிகளை நாம் மன்னித்திருந்தால்’ மட்டுமே நாம் கடவுளுடைய மன்னிப்பைப் பெறக்கூடும். (மத்தேயு 6:12; மாற்கு 11:25) இயேசு மேலும் கூறினார்: “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” (மத்தேயு 6:14, 15) நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக ஜெபம்பண்ணுதல் மற்றவர்களுடைய குறைகளைத் தாங்கி மன்னிப்பதற்கு நம்மை உந்துவிக்கும். அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான்: “யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல, நீங்களும் அப்படியே செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:13, NW; எபேசியர் 4:32.
சோதனையும் பொல்லாங்கனும்
18. நம்முடைய சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் ஏன் கடவுளை ஒருபோதும் குற்றப்படுத்தக்கூடாது?
18 “எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதீர்.” (மத்தேயு 6:13; லூக்கா 11:4) பாவம் செய்யும்படி யெகோவா நம்மைச் சோதிக்கிறார் என்று இந்த வார்த்தைகள் அர்த்தப்படுவதில்லை. சில சமயங்களில் கடவுள் வெறுமென அனுமதிக்கும் காரியங்களை அவர் செய்வதாக அல்லது ஏற்படுத்துவதாக வேதவசனங்கள் பேசுகின்றன. (ரூத் 1:20, 21; பிரசங்கி 11:5-ஐ ஒப்பிடவும்.) ஆனால் “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவரையும் அவர் சோதிக்கிறவரும் அல்ல,” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினான். (யாக்கோபு 1:13) எனவே பொல்லாதவற்றால் சோதிக்கப்படும்போது நம்முடைய பரம பிதாவை நாம் ஒருபோதும் குற்றப்படுத்தாதிருப்போமாக, ஏனென்றால் கடவுளுக்கு விரோதமாகப் பாவம் செய்ய நம்மை வழிநடத்த முயலுவது பிசாசாகிய சாத்தானே.—மத்தேயு 4:3; 1 தெசலோனிக்கேயர் 3:5.
19. சோதனைகள் சம்பந்தமாக நாம் எவ்விதம் ஜெபிக்கலாம்?
19 “எங்களைச் சோதனைக்குட்படுத்தாதீர்,” என்று விண்ணப்பிப்பதால், யெகோவாவுக்குக் கீழ்ப்படிய தவறும்படி சோதிக்கப்படுகையில் அல்லது வற்புறுத்தப்படுகையில் நாம் அதற்கு இடங்கொடுத்துவிட நம்மை அனுமதிக்கக்கூடாது என்று யெகோவாவைக் கேட்பதாயிருக்கிறது. நமக்கு மிக அதிகக் கடுமையாக இருக்கக்கூடிய சோதனைகள் நம் வழியில் வராதபடிக்கு நம் பாதைகளை வழிநடத்த வேண்டும் என்று நம்முடைய பிதாவை வருந்திக் கேட்டுக்கொள்ளலாம். பவுல் எழுதினான்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையே அல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13) நம்முடைய தாங்கிக்கொள்ளும் திராணிக்கு மேலாக சோதிக்கப்படாமலிருக்கவும், நாம் துயரத்தில் ஆழ்ந்துவிட்டிருக்கும்போது அதிலிருந்து வெளியேற ஒரு வழியைக் காண்பிக்கவும் நாம் யெகோவாவிடம் ஜெபத்தில் கேட்கலாம். சோதனைகள் பிசாசிடமிருந்து, நம்முடைய பாவ மாம்சத்தினால், மற்றவர்களுடைய பலவீனத்தினால் வருகின்றன, ஆனால் அவற்றால் மேற்கொண்டுவிடாதபடிக்கு நம்முடைய அன்புத் தகப்பன் நம்மை வழிநடத்தக்கூடும்.
20. “பொல்லாங்கனிடமிருந்து” மீட்கப்படுவதற்காக நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்?
20 “ஆனால் பொல்லாங்கனிடமிருந்து மீட்டருளும்.” (மத்தேயு 6:13, NW) ‘பொல்லாங்கனாகிய’ சாத்தான் நம்மை மேற்கொள்ளாதபடிக்குக் கடவுள் நிச்சயமாகவே அவனைத் தடைபண்ண முடியும். (2 பேதுரு 2:9) பிசாசிடமிருந்து மீட்கப்படுவதற்கு என்றும் இருந்திராத அவசியம் இன்று அதிகமாகவே இருக்கிறது, ஏனென்றால் “தனக்குக் கொஞ்சக் கால மாத்திரம் உண்டென்று அறிந்து. மிகுந்த கோபங்கொண்”டிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:12) சாத்தானின் திட்டங்களைக் குறித்து நாம் அறியாதவர்கள் அல்ல, ஆனால் அவனும் நம்முடைய பலவீனங்களைக் குறித்து அறியாதவன் அல்ல. எனவே, சிங்கம் போன்ற எதிராளியின் பிடிகளிலிருந்து நம்மைக் காக்கும்படியாக நாம் யெகோவாவிடம் ஜெபிக்க வேண்டும். (2 கொரிந்தியர் 2:11; 1 பேதுரு 5:8, 9; சங்கீதம் 141:8, 9-ஐ ஒப்பிடவும்.) உதாரணமாக, நாம் விவாகம் செய்துகொள்வதில் அக்கறையாயிருந்தால், ஒழுக்கக்கேட்டிற்கு வழிநடத்தக்கூடிய உலக ஆட்களோடு உறவுகளை வளர்த்திடும் சோதனையிலிருந்து அல்லது அவிசுவாசியை விவாகம் செய்வதால் கடவுளுக்குக் கீழ்ப்படிய தவறுவதிலிருந்து நம்மை மீட்டருள நாம் யெகோவாவிடம் விண்ணப்பிக்க வேண்டியதாயிருக்கலாம். (உபாகமம் 7:3, 4; 1 கொரிந்தியர் 7:39) நமக்கு ஐசுவரியத்துக்கான நாட்டம் இருக்கிறதா? அப்படியென்றால் சூதாட்டம் அல்லது ஏமாற்றுதல் ஆகிய சோதனைகளை எதிர்த்துப் போராடுவதற்கு உதவிக்காக ஜெபம் அவசியமாயிருக்கலாம். யெகோவாவுடன் நமக்கு இருக்கும் உறவை அழித்திட ஆர்வமுள்ளவனாய்ச் சாத்தான் தன்னுடைய சோதனைக் களத்திலுள்ள எந்த ஓர் ஆயுதத்தையும் பயன்படுத்துவான். எனவே நீதிமான்களைச் சோதனைகளில் கைவிடாதவரும் பொல்லாங்கனிடமிருந்து மீட்பளிப்பவருமான நம்முடைய பரம பிதாவிடம் நாம் தொடர்ந்து ஜெபிப்போமாக.
ஜெபம் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்க்கிறது
21. ராஜ்யத்துக்காக ஜெபிப்பதிலிருந்து நாம் எவ்விதம் நன்மையடைந்திருக்கிறோம்?
21 பொல்லாங்கனிடமிருந்து நம்மை மீட்கும் நம்முடைய பரம பிதா நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிப்பதில் மகிழ்ச்சியடைகிறார். என்றபோதிலும், “உம்முடைய ராஜ்யம் வருவதாக,” என்று அவருடைய அன்பு மக்கள் ஜெபம்பண்ணுவதற்கு அவர் ஏன் இவ்வளவு நீண்ட காலத்தை அனுமதித்திருக்கிறார்? சரி, கடந்த ஆண்டுகளினூடே இப்படியாக ஜெபித்திருப்பது ராஜ்யத்துக்கான நம்முடைய ஆசையையும் போற்றுதலையும் கூட்டியிருக்கிறது. இந்த ஆசீர்வாதமான பரலோக ராஜ்யம் நமக்கு மிகவும் தேவைப்படுகிறது என்பதை இப்படிப்பட்ட ஜெபம் நமக்கு நினைப்பூட்டிக்கொண்டிருக்கிறது. இது ராஜ்ய ஆட்சியின் கீழ் ஜீவனடையும் நம்பிக்கையை நம் முன்னால் உயிர்ப்புடன் வைக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:1-5.
22. நம்முடைய பரம பிதாவாகிய யெகோவா தேவனை நோக்கி ஜெபம்பண்ணுதல் பேரில் நம்முடைய மனப்பான்மை தொடர்ந்து என்னவாக இருக்க வேண்டும்?
22 ஜெபம் யெகோவாவின் பேரில் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அவர் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கையில், அவரோடு நமக்கிருக்கும் பந்தம் பலப்படுகிறது. எனவே, தினந்தோறும் அவரிடம் துதியோடும், நன்றியோடும், விண்ணப்பங்களோடும் திரும்புவதில் நாம் ஒருபோதும் சோர்ந்துவிடாதிருப்போமாக. “ஆண்டவரே, ஜெபம்பண்ண . . . எங்களுக்குப் போதிக்க வேண்டும்,” என்று இயேசுவைப் பின்பற்றினவர்கள் கேட்டதற்கு அவர் கொடுத்த பதிலுக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருப்போமாக. (w90 5/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஜெப சிந்தையுடைய ஒரு மனிதராக இயேசுவின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
◻ நம்முடைய பரம பிதா மற்றும் அவருடைய பெயரின் சம்பந்தமாக நாம் எதற்காக ஜெபம் செய்ய வேண்டும்?
◻ கடவுளுடைய ராஜ்யம் வருவதற்கும் அவருடைய சித்தம் பூமியில் செய்யப்படுவதற்கும் நாம் ஜெபிக்கும்போது நாம் எதற்காக விண்ணப்பிக்கிறோம்?
◻ நம்முடைய அன்றாட ஆகாரத்துக்கு ஜெபிக்கையில் நாம் என்ன கேட்கிறோம்?
◻ நம்முடைய கடன்களுக்கு நாம் மன்னிப்புக்காக ஜெபிப்பதன் அர்த்தம் என்ன?
◻ பொல்லாங்கனாகிய சாத்தானிடமிருந்து வரும் சோதனை குறித்தும் அதிலிருந்து மீட்கப்படுவது குறித்தும் நாம் ஜெபிப்பது ஏன் மிகவும் அவசியம்?
[பக்கம் 17-ன் படம்]
ஜெபம்பண்ண தங்களுக்குக் கற்றுக்கொடுக்கும்படியாக இயேசுவைப் பின்பற்றியவர்கள் அவரிடம் கேட்டார்கள். ஜெபத்தின் பேரில் அவர் அளித்த போதனைகளிலிருந்து நாம் எவ்விதம் நன்மையடையலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?