ஜெபத்தைக் கேட்கிற யெகோவாவுக்குப் பயப்படுங்கள்
“ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.”—சங்கீதம் 65:2.
1. யெகோவாவை ஜெபத்தில் அணுக விரும்புகிறவர்கள் பூர்த்திசெய்யவேண்டிய தகுதிகளை அவர் கொண்டிருப்பார் என்பதை நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்?
யெகோவா தேவன் “நித்தியத்தின் ராஜா.” அவர் “ஜெபத்தைக் கேட்கிறவர்,” அவரிடத்தில் “மாம்சமான யாவரும் . . . வருவார்கள்.” (வெளிப்படுத்துதல் 15:3, NW; சங்கீதம் 65:2) ஆனால் அவரிடத்தில் அவர்கள் எவ்விதம் வரவேண்டும்? பூமிக்குரிய அரசர்களுடைய முன்னிலையில் அனுமதிக்கப்படுகிறவர்களின் உடை மற்றும் முறை அந்த அரசர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படியிருக்க நித்திய ராஜாவும் தமக்கு முன்பாக விண்ணப்பங்களோடும் ஸ்தோத்திரத்தோடும் வரவிரும்புகிறவர்கள் பூர்த்திசெய்யவேண்டிய தகுதிகளைக் கொண்டிருப்பார் என்பதை நாம் நிச்சயமாகவே எதிர்பார்க்கவேண்டும்.—பிலிப்பியர் 4:6, 7.
2. ஜெபம் என்ற பொருளின் பேரில் என்ன கேள்விகள் எழும்புகின்றன?
2 நித்தய ராஜா தம்மை ஜெபத்தில் அணுகுகிறவர்களிடம் எதிர்பார்ப்பது என்ன? யார் ஜெபிக்கலாம், யாருடைய ஜெபங்கள் கேட்கப்படலாம்? அவர்கள் எதைக் குறித்து ஜெபிக்கலாம்?
நித்திய ராஜாவை அணுகுதல்
3. கடவுளுடைய பூர்வீக ஊழியர்கள் ஏறெடுத்த ஜெபங்கள் பற்றி என்ன உதாரணங்களை நீங்கள் கொடுக்கக்கூடும், அவர்கள் ஒரு மத்தியஸ்தர் மூலம் அவரை அணுகினார்களா?
3 ஒரு பாவியாவதற்கு முன்பு “கடவுளுடைய குமாரனாய்” இருந்த ஆதாம், நித்திய ராஜாவுடன் பேச்சுத்தொடர்பு உடையவனாயிருந்தான் என்பது தெளிவாயிருக்கிறது. (லூக்கா 3:38; ஆதியாகமம் 1:26-28) ஆதாமின் மகன் ஆபேல் கடவுளுக்குத் “தன் மந்தையின் தலையீற்றுகளில் . . . சிலவற்றை” அளித்தபோது, இந்தக் காணிக்கை விண்ணப்பங்களோடும், ஸ்தோத்திரங்களோடும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 4:2-4) நோவா, ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு பலிபீடங்களைக் கட்டி யெகோவாவை ஜெபத்தோடு அணுகி தங்களுடைய பலிகளைச் செலுத்தினார்கள். (ஆதியாகமம் 8:18-22; 12:7, 8; 13:3, 4, 18; 22:9-14; 26:23-25; 33:18–20; 35:1, 3, 7) சாலொமோன், எஸ்றா, மற்றும் தெய்வீக ஆவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரர்களுடைய ஜெபங்கள் எந்த ஒரு மத்தியஸ்தமுமின்று அவர்கள் கடவுளை அணுகினார்கள் என்று காண்பிக்கிறது.—1 இராஜாக்கள் 8:22-24; எஸ்றா 9:5, 6; சங்கீதம் 6:1, 2; 43:1; 55:1; 61:1; 72:1; 80:1; 143:1.
4. (எ) முதல் நூற்றாண்டில் ஜெபத்தில் கடவுளை அணுகுவதில் என்ன ஒரு புதிய அணுகுமுறை நிறுவப்பட்டது? (பி) ஜெபம் இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கப்படுவது ஏன் விசேஷமாய்ப் பொருத்தமாயிருக்கிறது?
4 நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் ஜெபத்தில் கடவுளை அணுகுவதில் ஒரு புதிய அணுகுமுறை நிறுவப்பட்டது. அதுதான் மனிதவர்க்கத்தின் பேரில் விசேஷ அன்பைக் கொண்டிருந்த அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அவரை அணுகுவதாகும். அவருடைய மனுஷ வாழ்க்கைக்கு முன்னான வாழ்க்கையில் இயேசு ‘ஒரு கைதேர்ந்த வேலையாளாக’ சேவித்தார், மனிதவர்க்கத்துடன் சம்பந்தப்பட்ட காரியங்களில் மிகவும் பிரியமாயிருந்தார். (நீதிமொழிகள் 8:30, 31) பூமியில் ஒரு மனிதனாக இருந்த போது, இயேசு அபூரண மனிதருக்கு ஆவிக்குரிய பிரகாரமாய் உதவி செய்தார், நோய்ப்பட்டிருந்தவர்களைக் குணப்படுத்தினார், மரித்தவர்களையுங்கூட உயிர்த்தெழுப்பினார். (மத்தேயு 9:35-38; லூக்கா 8:1-3, 49-56) எல்லாவற்றிற்கும் மேலாக இயேசு ‘அநேகரை மீட்டுக்கொள்ள தம்முடைய ஜீவனை மீட்கும்பொருளாகக் கொடுத்தார்.’ (மத்தேயு 20:28) அப்படியிருக்க, இந்த மீட்கும்பொருளால் நன்மைபெறுகிறவர்கள் மனிதவர்க்கத்தை இவ்வளவாக நேசிக்கும் இவர் மூலம் கடவுளை அணுகவேண்டும் என்பது எவ்வளவு பொருத்தம்! நித்திய ராஜாவை அணுகுவதற்கு இப்பொழுது இதுவே ஒரே வழியாக இருக்கிறது, ஏனென்றால் இயேசுதாமே இப்படியாகச் சொன்னார்: “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவிடத்தில் வரான்,” மற்றும், “நீங்கள் என் நாமத்தினால் பிதாவினிடத்தில்கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.” (யோவான் 14:6; 16:23) காரியங்களை இயேசுவின் நாமத்தினால் கேட்பது என்பது ஜெபத்தைக் கேட்கிறவரை அணுகுவதற்கு ஒரே வழியாக அவரை மதித்துணருதலைக் குறிக்கிறது.
5. மனிதவர்க்க உலகத்தினிடமாகக் கடவுளுடைய மனப்பான்மை என்ன, இதற்கும் ஜெபத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
5 மீட்கும் பொருளை அளிப்பதன் மூலம் யெகோவா காண்பித்த அன்பை நாம் விசேஷமாக மதித்துணர வேண்டும். இயேசு சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் [மனிதவர்க்க] உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) கடவுளுடைய அன்பின் ஆழம் சங்கீதக்காரனுடைய வார்த்தைகளில் மிகவும் நன்றாய் தெரிவிக்கப்பட்டிருக்கிறது: “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:11-14) யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளின் ஜெபங்கள் அவருடைய குமாரன் மூலமாக இப்படிப்பட்ட ஓர் அன்பான தகப்பனிடமாகச் செல்கிறது என்பதை அறிவதுதானே எவ்வளவு இன்பமாயிருக்கிறது!
ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சிலாக்கியம்
6. யெகோவாவை ஜெபத்தில் எப்படிப்பட்ட மனநிலையோடு அணுகவேண்டும்?
6 முன்னறிவிப்பில்லாமல் எவரும் அரண்மனைக்குள் பிரவேசிப்பதை மனித ராஜாக்கள் அனுமதிப்பதில்லை. ராஜாவோடு பேசுவதுதானே ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சிலாக்கியம். நித்திய ராஜாவிடம் ஏறெடுக்கப்படும் ஜெபமும் அப்படியே. உண்மைதான், கடவுளுடைய மகிமையான உன்னத ஸ்தானத்திற்குச் சரியான போற்றுதலுடன் அவரை இயேசு கிறிஸ்துவின் மூலம் அணுகும் ஆட்கள் அவரால் கேட்கப்படும் நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம். நித்திய ராஜா பயபக்தியோடு, ஆராதிக்கும் சிந்தையோடு அணுகப்படவேண்டும். தங்களுடைய ஜெபங்கள் கேட்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்கள் “யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தை” வெளிப்படுத்திட வேண்டும்.—நீதிமொழிகள் 1:7, NW.
7. “யெகோவாவுக்குப் பயப்படும் பயம்” என்ன?
7 “யெகோவாவுக்கு பயப்படுகிற பயம்” என்பது என்ன? அதுதான் கடவுளிடமாகக் காண்பிக்கும் பயபக்தி, அவரைப் பிரியப்படுத்தாமல்போய்விடுவோமோ என்ற ஓர் ஆரோக்கியமான பயத்துடன் கலந்த ஒன்று. இந்தப் பயபக்தி அவருடைய அன்பான தயவுக்காகவும் நற்குணத்துக்காகவும் ஆழமான நன்றியுணர்விலிருந்து பிறக்கிறது. (சங்கீதம் 106:1) அவரை நித்தியத்தின் ராஜா, கீழ்ப்படியாத எவர் மீதும் மரணம் உட்பட எந்தத் தண்டனையும் நிறைவேற்றும் உரிமையும் வல்லமையும் உடையவர் என்று அங்கீகரிப்பதை உட்படுத்துகிறது. யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தைக் காண்பிக்கும் ஆட்கள் அவர் தங்களுடைய ஜெபத்தைக் கேட்பார் என்ற எதிர்பார்ப்புடையவர்களாய் அவரிடம் ஜெபிக்கலாம்.
8. கடவுள் தமக்குப் பயப்படுகிறவர்களின் ஜெபங்களுக்கு ஏன் செவிகொடுக்கிறார்?
8 இயல்பாகவே, பொல்லாதவர்களுடைய, துரோகிகளுடைய, மற்றும் சுய நீதிமான்களுடைய ஜெபங்களைக் கடவுள் கேட்க மாட்டார். (நீதிமொழிகள் 15:29; ஏசாயா 1:15; லூக்கா 18:9-14) ஆனால் யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் கேட்கப்படுகிறார்கள், ஏனென்றால், அவர்கள் அவருடைய நீதியுள்ள தராதரங்களுக்கு இசைவாக வாழ்கிறார்கள். அதைவிட அதிகத்தையும் செய்திருக்கிறார்கள். யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்கள் ஜெபத்தில் அவருக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, இதைத் தண்ணீர் முழுக்காட்டுதல் பெறுவதன் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். இப்படியாக அவர்கள் கட்டுப்படுத்தப்படாத ஒரு சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
9, 10. முழுக்காட்டுதல் பெறாத ஒருவர் கடவுளால் கேட்கப்படுவார் என்ற நம்பிக்கையுடன் ஜெபிக்கலாமா?
9 கடவுளால் கேட்கப்படுவதற்கு, ஒருவர் தெய்வீக சித்தத்திற்கு இசைவாயிருக்கும் ஜெபசிந்தையுடன்கூடிய உணர்வுகளைத் தெரிவிக்கவேண்டும். ஆம், அவர் உள்ளப்பூர்வமாக ஜெபிக்க வேண்டும், ஆனால் அதிகம் தேவைப்படுகிறது. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்,” என்று பவுல் எழுதினான், “ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) சரி, அப்படியென்றால், முழுக்காட்டுதல் பெறாத ஒருவர் கடவுளால் கேட்கப்படுவார் என்ற நம்பிக்கையுடன் ஜெபிக்கும்படியாக உற்சாகப்படுத்தப்படலாமா?
10 ஜெபம் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சிலாக்கியம் என்பதை அறிந்திருந்தவனாய், எருசலேமிலிருந்த கடவுளுடைய ஆலயத்தை நோக்கி ஜெபம் செய்த அந்நியர்களுடைய ஜெபத்தை மட்டுமே கேட்கும்படி சாலொமோன் அரசன் யெகோவாவிடம் விண்ணப்பித்தான். (1 இராஜாக்கள் 8:41-43) நூற்றாண்டுகளுக்குப் பின்னர், புறஜாதியானாகிய கொர்நேலியு தேவபக்தியுள்ள ஒரு மனிதனாக “எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.” திருத்தமான அறிவைப் பெற்றபோது, கொர்நேலியு கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான், அவர் அவனுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து கொர்நேலியுவும் மற்ற புறஜாதியாரும் முழுக்காட்டுதல் பெற்றார்கள். (அப்போஸ்தலர் 10:1-44) கொர்நேலியுவைப் போன்று, ஒப்புக்கொடுத்தலிடமாக முன்னேறும் எவருமே ஜெபிக்கும்படியாக உற்சாகப்படுத்தப்படலாம். ஆனால் வேத வசனங்களைப் படிப்பதில் உண்மையாயிராத, ஜெபத்திற்கான தெய்வீக தகுதிகளை அறியாத, கடவுளுக்குப் பிரியமான மனப்பான்மையை வெளிப்படுத்தாத ஒருவர் யெகோவாவுக்குப் பயப்படுகிறவர், விசுவாசமுள்ளவர், அல்லது உள்ளப்பூர்வமாய்க் கடவுளைத் தேடுகிறவர் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் கடவுள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஜெபங்களை ஏறெடுக்கும் நிலையில் இல்லை.
11. ஒப்புக்கொடுத்தலிடமாக முன்னேறுகிற சிலருக்கு என்ன நேர்ந்திருக்கிறது, அவர்கள் தங்களைத்தாங்களே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?
11 ஒப்புக்கொடுத்தலினிடமாக ஒருசமயம் முன்னேறிக்கொண்டிருந்த சிலர் பின்னர் பின்வாங்குவதாகத் தென்படலாம். கடவுளுக்கு நிபந்தனையற்ற ஓர் ஒப்புக்கொடுத்தலை செய்வதற்கு போதிய அளவு அவர் பேரில் அவர்களுக்கு இருதயப்பூர்வமான அன்பு இல்லாவிட்டால், ஜெபிக்கும் அந்த அருமையான சிலாக்கியம் தங்களுக்கு இன்னும் இருக்கிறதா என்று தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். தெளிவாகவே, இருக்காது, ஏனென்றால் கடவுளை அணுகுகிறவர்கள் அவரை உள்ளப்பூர்வமாக நாடிக்கொண்டிருக்க வேண்டும், மற்றும் நீதியையும் சாந்தத்தையும் நாடிக்கொண்டிருக்கவேண்டும். (செப்பனியா 2:3) யெகோவாவுக்கு உண்மையிலேயே பயந்து நடக்கும் ஒவ்வொருவருமே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து அதை முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தும் ஒரு விசுவாசியாக இருக்கிறார். (அப்போஸ்தலர் 8:13; 18:8) முழுக்காட்டுதல் பெற்றவர்கள் மட்டுமே நித்தியத்தின் ராஜாவை ஜெபத்தில் அணுகும் கட்டுப்படுத்தப்படாத சிலாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
“பரிசுத்த ஆவியோடு ஜெபம்பண்ணுதல்”
12. ஒருவர் ‘பரிசுத்த ஆவியோடு ஜெபம்பண்ணுகிறார்’ என்று எப்பொழுது சொல்லலாம்?
12 ஒருவர் கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் மூலம் அதை அடையாளப்படுத்திய பின்பு ‘பரிசுத்த ஆவியோடு ஜெபம்பண்ணும்’ நிலையிலிருக்கிறார். இதைக் குறித்து யூதா எழுதினான்: “நீங்களோ, பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் [பரிசுத்த ஆவியோடு, NW] ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்.” (யூதா 20, 21) ஒருவர் கடவுளுடைய ஆவியின் அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியின் செல்வாக்கின் கீழும் அவருடைய வார்த்தையில் சொல்லப்பட்டிருக்கும் காரியங்களுக்கு இசைவாகவும் ஜெபிக்கும் போது அவர் பரிசுத்த ஆவியோடு ஜெபிக்கிறார். யெகோவாவின் ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டிருக்கும் வேதவசனங்கள் நாம் எவ்விதம் ஜெபிக்க வேண்டும், ஜெபத்தில் என்ன விண்ணப்பிக்க வேண்டும் என்று நமக்குக் காண்பிக்கிறது. உதாரணமாக, கடவுள் நமக்கு பரிசுத்த ஆவியைத் தரவேண்டும் என்று நாம் நம்பிக்கையுடன் ஜெபிக்கலாம். (லூக்கா 11:13) நாம் பரிசுத்த ஆவியோடு ஜெபிக்கும்போது, நம்முடைய ஜெபங்கள் யெகோவா நேசிக்கும் ஓர் இருதய நிலையை வெளிப்படுத்துகிறது.
13. நாம் பரிசுத்த ஆவியோடு ஜெபம்பண்ணினால், நாம் எதைத் தவிர்ப்போம்? இயேசுவின் எந்த ஆலோசனையை நாம் பொருத்துவோம்?
13 நாம் ஆவியில் ஜெபம் செய்யும்போது, நம்முடைய ஜெபங்கள் உயர்ந்து தொனிக்கும் வார்த்தைகளாலானவையாக இருப்பதில்லை. அவை ஒரே ரீதியில் திரும்பத் திரும்பக் கூறப்படும் விதிமுறைகளைக் கொண்டவை அல்ல. இல்லை, அவை அர்த்தமற்ற, இறைபுகழ்ச்சி வாய்ப்பாடுகளை, உள்ளப்பூர்வமாயிராத துதிக் கூற்றுகளைக் கொண்டிராது. அப்படிப்பட்ட ஜெபங்கள் கிறிஸ்தவமண்டலத்திலும் பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனின் மற்ற பாகங்களிலும் நிரம்பிக் காணப்படுகின்றன. ஆனால் உண்மைக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் புத்திமதிக்குச் செவிகொடுக்கின்றனர்: “நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம் பண்ண விரும்புகிறார்கள். . . . அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று [தவறாக] நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்.”—மத்தேயு 6:5-8.
14. ஜெபத்தைக் குறித்து என்ன கருத்தூன்றிய கூற்றுகளைச் சிலர் மொழிந்திருக்கின்றனர்?
14 இயேசுவும் மற்ற எழுத்தாளர்களும் சொன்னதுப்போக, ஜெபத்தைப் பற்றி மற்றவர்களும் கருத்தூன்றிய கூற்றுகளை மொழிந்திருக்கின்றனர். உதாரணமாக ஆங்கில எழுத்தாளர் ஜான் பன்யன் (1628-88) சொன்னார்: “ஜெபம் உள்ளப்பூர்வமானதும், கடவுள் வாக்களித்திருக்கும் காரியங்களுக்கு ஆவியின் பெலத்தாலும் உதவியாலும் கிறிஸ்து மூலம் கடவுளிடம் ஆத்துமாவை ஆசையோடு ஊற்றும் ஒன்றாயிருக்கிறது.” பியூரிட்டன் மத ஊழியர் தாமஸ் புரூக்ஸ் (1608-80) கூறினார்: “கடவுள் உங்களுடைய ஜெபங்களின் சொல்வளம் எவ்வளவுதான் மேன்மையானதாய் இருந்தாலும், அவற்றின் சரளமான தன்மையைப் பார்ப்பதில்லை. அல்லது உங்கள் ஜெபங்கள் எவ்வளவு நீண்டிருப்பினும், அவற்றின் அளவைப் பார்ப்பதில்லை; அல்லது உங்கள் ஜெபங்கள் எத்தனையாக இருப்பினும் அவற்றின் கணக்கைப் பார்ப்பதில்லை; அல்லது உங்கள் ஜெபங்கள் எந்தளவுக்கு முறையாக அமைந்திருப்பினும் அவற்றின் அமைப்பு முறையைப் பார்ப்பதில்லை; ஆனால் அவை உள்ளப்பூர்வமானவையா என்பதைத்தான் பார்க்கிறார்.” இந்தக் குறிப்புகளுடன் பன்யனின் கூற்றுகளைச் சேர்க்கலாம்: “ஜெபத்தில் இதயம் இல்லாத வார்த்தைகள் இருப்பதைவிட வார்த்தைகளில்லாத இதயம் இருப்பது மேல்.” ஆனால் நாம் உள்ளப்பூர்வமாக ஜெபிப்பவர்களாய்த் தெய்வீகத் தகுதிகளைப் பூர்த்திசெய்வோமானால், நித்தியத்தின் ராஜா நம்முடைய ஜெபங்களைக் கேட்பார் என்பது குறித்து நாம் எப்படி நிச்சயமாயிருக்கலாம்?
செவிகளை மூடியதில்லை
15. லூக்கா 11:5-8-ல் இயேசு சொன்ன வார்த்தைகளின் சாராம்சம் என்ன?
15 யெகோவா தேவன் தம்முடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்களுடைய ஜெபத்திற்கு செவிகளை ஒருபோதும் மூடிக்கொள்வதில்லை. இயேசுவின் சீஷர்கள் ஜெபத்தின் பேரில் ஆலோசனைகள் கேட்ட சமயத்தில், இயேசு சொன்ன இதயத்திற்கு இதமான வார்த்தைகளில் இது தெளிவாகத் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக அவர் சொன்னார்: “உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன் முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையாதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 11:1, 5-8) இந்த உவமையின் கருத்து என்ன?
16. ஜெபத்தைக் குறித்ததில், நாம் என்ன செய்யவேண்டும் என்று இயேசு விரும்பினார்?
16 யெகோவா நமக்கு உதவி செய்ய மனமில்லாதவராயிருக்கிறார் என்பதை இயேசு நிச்சயமாகவே குறிக்கவில்லை. மாறாக, நாம் கடவுளை முழுமையாக நம்பி, இடைவிடாமல் ஜெபம் செய்யுமளவுக்கு அவரில் அன்புகூர வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம். இப்படியாக, இயேசு தொடர்ந்து கூறினார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தொடர்ந்து தட்டிக்கொண்டிருங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” (லூக்கா 11:9, 10, NW) எனவே நாம் துன்புறுத்தலை, ஆழமாய் வேர்க்கொண்டிருக்கும் ஏதோ ஒரு தனிப்பட்ட பலவீனத்தைக்குறித்து கவலைப்படுவதை, அல்லது வேறு வகையான சோதனையை அனுபவிக்கும்போது நாம் தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்க வேண்டும். யெகோவா தம்முடைய உண்மைவிசுவாசமுள்ள ஊழியர்களுக்கு உதவி செய்ய எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறார். அவர் நம்மைப் பார்த்து, “என்னைத் தொந்தரவு செய்வதை நிறுத்து,” என்று ஒருபோதும் சொல்வதில்லை.
17 நாம் கடவுளோடு ஒரு நெருங்கிய உறவை அனுபவிக்க வேண்டுமென்றால், நமக்கு அவருடைய பரிசுத்த ஆவி அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தி தேவைப்படுகிறது. எனவேதான் இயேசு தொடர்ந்து சொன்னார்: “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.” (லூக்கா 11:11-13) மத்தேயு 7:9-11 அப்பத்துக்குப் பதில் கல்லைக் கொடுப்பது பற்றி பேசுகிறது. பூர்வ பைபிள் தேசங்களில் அப்பம் ஒரு தட்டையான வட்டக் கல்லைப் போன்ற அளவிலும் உருவிலும் இருந்தது என்பதை நாம் எண்ணிப்பார்க்கும்போது, இயேசுவுடைய வார்த்தைகளின் சக்தி கூடுகிறது. சில வகை பாம்புகள் ஒரு சில மீன்கள் போன்று காணப்படும், மற்றும் ஒரு முட்டையைப் போன்று காணப்படும் ஒரு சிறிய வகை தேள் இருக்கிறது. ஆனால் அப்பத்தை, ஒரு மீனை, அல்லது ஒரு முட்டையைக் கேட்கும்போது, எந்தத் தகப்பன் தன்னுடைய பிள்ளைக்கு ஒரு கல்லை, ஒரு பாம்பை அல்லது ஒரு தேளைக் கொடுப்பான்?
17, 18. (எ) பரிசுத்த ஆவிக்காகக் கேட்கும்படி இயேசு நம்மை எவ்விதம் உற்சாகப்படுத்தினார், அவருடைய வார்த்தைகளின் சக்தியைக் கூட்டுவது எது? (பி) ஒரு பூமிக்குரிய பெற்றோரின் செயல்தொடர்புகளை இயேசு எவ்விதம் கடவுளுடைய செயல்தொடர்புகளுடன் ஒப்பிட்டார்?
18 அடுத்து இயேசு ஒரு பூமிக்குரிய பெற்றோரின் செயல்தொடர்புகளை தம்மை ஆராதிக்கும் குடும்ப அங்கத்தினரிடமாகக் கடவுளுடைய செயல்தொடர்புகளோடு ஒப்பிட்டுப் பேசினார். நாம் பாவத் தன்மையைச் சுதந்தரித்திருப்பதனால் ஏறக்குறைய பொல்லாதவர்களாயிருந்தாலும் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்கும் போது, தம்முடைய உத்தம ஊழியர்கள் மனத்தாழ்மையுடன் பரிசுத்த ஆவிக்குக் கேட்கும்போது, அந்த அருமையான ஈவை நம்முடைய பரம பிதா கொடுப்பார் என்பதை எவ்வளவு அதிகமாக எதிர்பார்த்திருக்கலாம்!
19. (எ) லூக்கா 11:11-13 மற்றும் மத்தேயு 7:9-11-ல் இயேசு சொன்ன வார்த்தைகள் குறிப்பாய்க் காட்டுவது என்ன? (பி) நாம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவோமானால், நாம் எதிர்ப்படும் சோதனைகளை எவ்வாறு நோக்குவோம்?
19 தம்முடைய பரிசுத்த ஆவியை அதிகமாகக் கொடுக்கும்படி நாம் கடவுளிடம் கேட்க வேண்டும் என்று இயேசுவின் வார்த்தைகள் நமக்குக் குறிப்பாய்க் காட்டுகிறது. நாம் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டால் ‘நம் வாழ்க்கை நிலை குறித்து முறையிட மாட்டோம்’, சோதனைகளும் ஏமாற்றங்களும் நமக்கு உண்மையில் தீங்கிழைப்பதாக நாம் கருதமாட்டோம். (யூதா 16, NW) உண்மைதான், “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்,” அநேகர் தங்களுடைய பிரச்னைகள் அல்லது மனவேதனைகள் முடிவடைவதைப் பார்க்க உயிரோடில்லை. (யோபு 14:1) ஆனால் நாம் சோதனைகளை சந்திக்கையில் ஜெபத்தைக் கேட்கிறவர் எப்படியோ நமக்குக் கொடுத்துவிட்ட கற்களாகவும், பாம்புகளாகவும், தேள்களாகவும் அவற்றை நோக்கிட வேண்டாம். அவர் அன்பின் உருவாகவும், பொல்லாதவைகளால் எவரையும் சோதியாதவராகவும் இருக்கிறார். மாறாக, அவர் ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையுமே’ நமக்குக் கொடுக்கிறார். அவரை நேசித்து அவருக்குப் பயந்து நடக்கும் எல்லாருக்கும் எல்லாவற்றையும் கடைசியில் சரிசெய்திடுவார். (யாக்கோபு 1:12-17; 1 யோவான் 4:8) அநேக ஆண்டுகளாக சத்தியத்தில் நடந்துவந்திருப்போர் தாங்கள் சந்தித்திருக்கும் சில கடுமையான சோதனைகள் ஜெபத்தின் மூலமும் விசுவாசத்தின் மூலமும் தங்களுக்கு நன்மையாக செயல்பட்டிருப்பதையும் தங்களுடைய வாழ்க்கையில் கடவுளுடைய ஆவியின் கனி அதிகரித்திருப்பதையும் அனுபவத்தில் அறிந்திருக்கின்றனர். (3 யோவான் 4) உண்மை என்னவெனில், நம்முடைய பரம பிதாவை சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வதற்கும் ஆவியின் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றை வளர்ப்பதற்கும் நமக்கு வேறு சிறந்த வழி என்னவாக இருக்க முடியும்?—கலாத்தியர் 5:22, 23.
20. லூக்கா 11:5-13-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகள் நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
20 லூக்கா 11:5-13-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இயேசுவின் வார்த்தைகள் யெகோவாவின் அன்பும் கனிவான அக்கறையும் குறித்து நமக்கு ஆசீர்வாதமான நிச்சயத்தை அளிக்கிறது. இது நம்முடைய இருதயத்தை ஆழ்ந்த நன்றியுணர்வாலும் அன்பாலும் நிரப்பிட வேண்டும். அது நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்த வேண்டும், மற்றும் நித்தியத்தின் ராஜாவுடைய பாதபடியை அடிக்கடி அணுகி அவருடைய அன்பான பிரசன்னத்திலிருப்பதற்கான நம்முடைய ஆவலைத் தூண்டிட வேண்டும். மேலும், நாம் வெறுமையாகத் திருப்பியனுப்பப்பட மாட்டோம் என்பதை இயேசுவின் வார்த்தைகள் உறுதியளிக்கின்றன. நம்முடைய பாரத்தை அவர் மீது வைத்துவிடுவதில் அவர் பிரியப்படுகிறார். (சங்கீதம் 55:22; 121:1-3) அவருக்கு ஒப்புக்கொடுத்த உண்மை விசுவாசமுள்ள ஊழியர்களாய் அவரிடம் பரிசுத்த ஆவிக்கு விண்ணப்பம்பண்ணினால், அவர் அதைத் தாராளமாகக் கொடுக்கிறார். இவர்தாமே நம்முடைய அன்புள்ள தேவன், நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறவர் என்ற முழு விசுவாசத்தை நாம் கொண்டிருக்கலாம். (w90 5/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ நாம் ஜெபத்தில் கடவுளை யார் மூலம் அணுக வேண்டும், ஏன்?
◻ ஜெபம் எந்த விதத்தில் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சிலாக்கியம்?
◻ ‘பரிசுத்த ஆவியோடு ஜெபம்பண்ணுதல்’ என்பது எதைக் குறிக்கிறது?
◻ யெகோவாவின் உண்மையுள்ள முழுக்காட்டுதல் பெற்ற ஊழியர்களின் ஜெபங்கள் கேட்கப்படுகின்றன என்பதை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்?
[பக்கம் 14-ன் படம்]
மானிடப் பிதாக்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகள் கொடுப்பது போன்று, யெகோவா தம்மை நோக்கிக் கேட்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைய் கொடுக்கிறார்