‘யெகோவா இரக்கமும் உருக்கமுமுள்ள கடவுள்’
‘யெகோவா, யெகோவா . . . உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுள்.’—யாத்திராகமம் 34:6, தி.மொ.
1. (அ) பாசத்துக்குரியவர்கள் உண்மை வணக்கத்திலிருந்து பாதைமாறிச் செல்வதைக் காண்பவர்களுக்கு பைபிள் என்ன ஆறுதலை அளிக்கிறது? (ஆ) தவறு செய்தவர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
“இனியும் கிறிஸ்தவ சபையில் இருக்க எனக்கு கொஞ்சம்கூட இஷ்டமில்லை என்று என் மகள் சொன்னாள். அத கேட்டதிலிருந்து நாள்கணக்கா, வாரக்கணக்கா, மாசக்கணக்காகூட மனசுக்குள்ள இரத்தம் கசிந்ததுபோல ஒரு வலி. அதவிட சாவே எவ்வளவோ தேவலை” என்று ஒரு கிறிஸ்தவ தகப்பன் சொல்கிறார். நம்முடைய பாசத்துக்குரியோர் உண்மை வணக்கத்திலிருந்து பாதை மாறி செல்லும்போது அதனால் ஏற்படும் வேதனை கொஞ்சநஞ்சமல்ல. உங்களுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதுண்டா? அப்படியானால், யெகோவா உங்களுடைய உணர்ச்சிகளை முழுக்கமுழுக்க புரிந்துகொள்கிறார் என்பதை அறிவது உங்களுக்கு ஆறுதல் தரலாம். (யாத்திராகமம் 3:7; ஏசாயா 63:9) ஆனால் தவறுசெய்த ஆட்களை அவர் எவ்வாறு கருதுகிறார்? யெகோவா தம்முடைய தயவைப் பெறுவதற்காக திரும்பிவரும்படி அவர்களை இரக்கத்தோடு அழைக்கிறார் என்று பைபிள் காட்டுகிறது. மல்கியாவின் நாளிலிருந்த கலகத்தனமான யூதர்களிடம் அவர் இவ்வாறு மன்றாடினார்: “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்.”—மல்கியா 3:7.
2. யெகோவாவின் குணநலன்களில் இரக்கம் மிக முக்கியமான குணம் என்று பைபிள் எவ்வாறு காட்டுகிறது?
2 சீனாய் மலையில் கடவுளுடைய இரக்கம் மோசேக்கு வலியுறுத்திக் காட்டப்பட்டது. அங்கே யெகோவா தம்மை, ‘உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் சத்தியமுமுள்ள கடவுளாக’ வெளிப்படுத்தினார். (யாத்திராகமம் 34:6, தி.மொ.) யெகோவாவின் குணநலன்களில் ஒரு முக்கியமான குணம் இரக்கமே என்பதை இந்த அறிவிப்பு அழுத்தியுரைக்கிறது. அவர் ‘எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புகிறார்’ என கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார். (2 பேதுரு 3:9) கடவுளுடைய இரக்கத்திற்கு எல்லை உண்டு என்பதும் உண்மைதான். ‘குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடமாட்டார்’ என மோசேக்கு சொல்லப்பட்டது. (யாத்திராகமம் 34:7; 2 பேதுரு 2:9) “தேவன் அன்பாகவே இருக்கிறார்;” இரக்கம் அதில் ஓங்கியிருக்கும் பிரதான அம்சம். (1 யோவான் 4:8; யாக்கோபு 3:17) யெகோவா “தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்,” அதோடு “பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர்.”—மீக்கா 7:18, 19, பொ.மொ.
3. இரக்கத்தைப் பற்றிய இயேசுவின் கருத்து வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் கருத்தோடு எவ்வாறு முரண்பட்டது?
3 தம்முடைய பரலோகத் தகப்பனை பரிபூரணமாக பிரதிபலித்தவர் இயேசு. (யோவான் 5:19) அவர் தவறு செய்தவர்களை தயவுடன் நடத்தினார்; ஆனாலும் அவர்களது பாவங்களை பொறுத்துக் கொண்டாரென்பதை அது அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, வியாதிப்பட்டவர்களிடம் அவருக்கிருந்த அதே பரிவுணர்ச்சியையே காட்டினார். (மாற்கு 1:40, 41-ஐ ஒப்பிடுக.) இயேசு கடவுளுடைய சட்டத்திலிருந்த ‘முக்கிய போதனைகளின்’ பட்டியலில் இரக்கத்தையும் சேர்த்தார். (மத்தேயு 23:23, பொ.மொ.) ஆனால் இதற்கு முரணாக இருந்த பரிசேயரையும் சதுசேயரையும் கவனியுங்கள். அவர்களுடைய சட்டப்படி, நியாயம் ஒருபோதும் இரக்கத்துக்கு இடமளிக்கவில்லை. இயேசு பாவிகளுடன் உறவாடுவதை அவர்கள் கண்டபோது, “இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார்” என்று குறை கூறினார்கள். (லூக்கா 15:1, 2) தம்மை குற்றம் சாட்டியவர்களுக்கு மூன்று உதாரணங்களைச் சொல்வதன் மூலம் இயேசு பதிலளித்தார்; அவை ஒவ்வொன்றும் கடவுளின் இரக்கத்துக்கு கவனத்தை திருப்புகின்றன.
4. என்ன இரண்டு உதாரணங்களை இயேசு விவரித்தார், அவை ஒவ்வொன்றின் மூலமாக அவர் சொல்ல வரும் கருத்தென்ன?
4 முதலாவதாக, 99 ஆடுகளை விட்டுவிட்டு தொலைந்துபோன ஒரு ஆட்டைத் தேடிச்சென்ற ஒரு மனிதனைக் குறித்து இயேசு சொன்னார். அவர் சொல்ல வரும் கருத்தென்ன? “மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.” அடுத்ததாக, தொலைந்துவிட்ட ஒரு வெள்ளிக் காசை தேடி கண்டுபிடித்து அதனால் பேரானந்தம் அடைந்த ஒரு பெண்ணைப் பற்றி இயேசு கூறினார். அவர் உணர்த்த விரும்பிய குறிப்பென்ன? “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது.” இயேசு தம்முடைய மூன்றாம் உதாரணத்தை ஒரு நீதிக்கதையின் மூலம் விளக்கினார்.a இதுவரை சொல்லப்பட்ட சிறுகதைகளிலேயே மிகச்சிறந்த கதை என அநேகரால் இது போற்றப்படுகிறது. இந்நீதிக்கதையை அலசி ஆராய்வது கடவுளுடைய இரக்கத்தை உயர்வாய் மதிக்கவும் பின்பற்றவும் நமக்கு உதவும்.—லூக்கா 15:3-10.
அடங்காத மகன் வீட்டைவிட்டுச் செல்கிறான்
5, 6. இயேசு மூன்றாவதாக சொன்ன நீதிக்கதையில் வரும் இளைய மகன் எவ்வாறு அதிர்ச்சியூட்டும் விதத்தில் நன்றிகெட்டத்தனமாய் நடந்துகொண்டான்?
5 “ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.”—லூக்கா 15:11-13.
6 இளைய மகன் அதிர்ச்சியூட்டும் வகையில் நன்றிகெட்டத்தனமாய் நடந்துகொண்டான். முதலில், சொத்தில் தன் பங்கை பிரித்துக் கொடுக்கும்படி கேட்டான்; பிறகு, “துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி” காசையெல்லாம் கரைத்தான். ‘துன்மார்க்க ஜீவனம்’ என்ற பதம் “தாறுமாறான வாழ்க்கை” என பொருள்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பதம், “கேடுகெட்ட நடத்தையின் அடிமட்டத்துக்கு செல்வதைக் குறிக்கிறது” என நிபுணர் ஒருவர் சொல்கிறார். இயேசுவின் நீதிக்கதையில் வரும் இந்த இளம் மனிதன் பெரும்பாலும் ஊதாரி என அழைக்கப்படுவது பொருத்தமானதே; எதையும் சட்டை செய்யாமல் கண்மூடித்தனமாக செலவு செய்து வீணாக்கும் நபரை இப்பதம் விவரிக்கிறது.
7. இன்று ஊதாரி மகனைப் போல் இருப்பது யார், இப்படிப்பட்ட அநேக ஆட்கள் ‘தூர தேசத்தில்’ இஷ்டம்போல் வாழவிரும்புவது ஏன்?
7 இந்த ஊதாரி மகனைப் போன்ற ஆட்கள் இன்றும் இருக்கிறார்களா? ஆம். விசனகரமாக, சிலர் நம் பரலோகத் தகப்பனாகிய யெகோவாவின் பாதுகாப்பான “வீட்டை” விட்டு வெளியேறியிருக்கின்றனர். (1 தீமோத்தேயு 3:15) கடவுளுடைய வீட்டில் எக்கச்சக்கமான கட்டுப்பாடுகள் இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்; அத்தகையோருக்கு கடவுளின் கண்காணிப்பு பாதுகாப்பாக தோன்றுவதற்குப் பதிலாக இடையூறாகவே தோன்றுகிறது. (சங்கீதம் 32:8-ஐ ஒப்பிடுக.) பைபிளின் நியமங்களுக்கு இசைவாக வளர்க்கப்பட்டு, ஆனால், பின்போ மதுபானத்திற்கும் போதைக்கும் அடிமையான ஒரு கிறிஸ்தவ பெண்ணை கவனியுங்கள். தன் வாழ்க்கையின் அந்த இருண்ட காலப்பகுதியைப் பற்றி அவள் இவ்வாறு சொல்கிறாள்: “என்னாலேயே நல்ல வாழ்க்கையை அமைச்சுக்க முடியும் என்பதைக் காட்ட விரும்பினேன். நினைத்ததை சாதிக்க விரும்பினேன். நான் செய்வது தப்பு என்று யாராவது சுட்டிக்காட்டினால் எனக்கு சுத்தமாக பிடிக்காது.” அந்த ஊதாரி மகனைப்போல இந்த இளம் பெண்ணும் தன் இஷ்டம்போல வாழ விரும்பினாள். கவலைக்குரியவிதமாய், பைபிளுடன் முரண்பட்ட பழக்கவழக்கங்களுக்காக, அவள் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்டாள்.—1 கொரிந்தியர் 5:11-13.
8. (அ) கடவுளுடைய தராதரங்களுக்கு முரணாக வாழ விரும்புகிறவர்களுக்கு என்ன உதவி அளிக்கப்படலாம்? (ஆ) வணக்க விஷயத்தைப் பற்றிய தன் தெரிவைக் குறித்து ஒருவர் ஏன் கவனமாக சிந்திக்க வேண்டும்?
8 உடன் விசுவாசி ஒருவர் கடவுளுடைய தராதரங்களுக்கு முரணாக வாழ விரும்புகையில் அது நம் நெஞ்சை புண்ணாக்குகிறது. (பிலிப்பியர் 3:18) அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், தவறு செய்த அந்நபரை சரியான பாதைக்கு கொண்டுவர ஆவிக்குரிய தகுதிகளுடைய மூப்பர்களும் மற்றவர்களும் முயலுகின்றனர். (கலாத்தியர் 6:1) இருந்தாலும், கிறிஸ்துவின் சீஷர் என்ற நுகத்தை ஏற்றுக்கொள்ளும்படி எவரும் வற்புறுத்தப்படுவதில்லை. (மத்தேயு 11:28-30; 16:24) இளைஞரும்கூட, “மேஜராக” ஆகும்போது, வணக்க விஷயத்தில் தனிப்பட்ட தெரிவைச் செய்ய வேண்டும். நம் ஒவ்வொருவருக்குமே தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது; ஆனால், அதற்காக கடைசியில் கடவுளுக்கு கணக்கும் கொடுக்க வேண்டும். (ரோமர் 14:12) நிச்சயமாகவே நாமும்கூட, ‘எதை விதைக்கிறோமோ அதையே அறுப்போம்.’ இந்தப் பாடத்தையே இயேசுவின் நீதிக்கதையில் வரும் ஊதாரியும் விரைவில் கற்றுக்கொள்ளவிருந்தான்.—கலாத்தியர் 6:7, 8.
தூர தேசத்தில் துயரம்
9, 10. (அ) ஊதாரி மகனின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன, அவன் அதற்கு எவ்வாறு பிரதிபலித்தான்? (ஆ) இன்று உண்மை வணக்கத்தைவிட்டு விலகிச் செல்கிறவர்களின் நிலைமை எவ்வாறு ஊதாரி மகனின் நிலைமைக்கு ஒத்திருக்கிறதென்று விளக்குங்கள்.
9 “எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அத்தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் அத்தேசத்தான் ஒருவனிடம் போய் ஒட்டிக்கொண்டான். அவன் அவனைத் தன் வயல்களில் பன்றிமேய்க்க அனுப்பினான். பன்றி தின்னும் தவிட்டைத்தின்று தன் வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான்; அவனுக்குக் கொடுப்பாரோ இல்லை.”—லூக்கா 15:14-16, தி.மொ.
10 நிராதரவற்ற நிலையிலும்கூட, இந்த ஊதாரி மகன் வீடு திரும்புவதைக் குறித்து யோசிக்கவில்லை. அதற்கு பதிலாக, அவ்வூரிலுள்ள ஒருவனிடம் சென்றான்; அவன் பன்றிகளை மேய்க்கும் வேலையைக் கொடுத்தான். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி பன்றிகள் அசுத்தமான பிராணிகள்; அத்தகைய வேலையை செய்வதைப் பற்றி எந்த ஒரு யூதனும் யோசிக்கக்கூட மாட்டான். (லேவியராகமம் 11:7, 8) அந்த வேலையைக் குறித்து ஊதாரி மகனின் மனசாட்சி உறுத்தினாலும் அதை அவன் அடக்கிவிட வேண்டியிருந்தது. உள்ளூர்க்காரனான தன் முதலாளி, நிர்க்கதியாய் நிற்கும் ஒரு புற தேசத்தானின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பான் என அவன் எதிர்பார்க்க முடியுமா என்ன? இன்று உண்மை வணக்கத்தின் நேர் பாதையை விட்டு வழிவிலகிச் செல்லும் அநேகருடைய வாழ்வும் இந்த ஊதாரி மகனின் வாழ்க்கைக்கு ஒத்ததாகவே இருக்கிறது. பெரும்பாலும், தாங்கள் ஒருகாலத்தில் இழிவாக கருதிய செயல்களையே இப்போது இவர்கள் செய்துகொண்டிருப்பார்கள். உதாரணமாக, கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்ட ஒரு இளைஞன் தன் 17-ம் வயதிலே அப்பாதையை விட்டு வழிவிலக ஆரம்பித்தான். “வருஷக்கணக்காக படித்த பைபிள் போதனைகளை ஒழுக்கக்கேடும் போதைப் பொருளும் பின்னுக்கு தள்ளிவிட்டன” என அவன் ஒத்துக் கொள்கிறான். விரைவில், துப்பாக்கி முனையில் திருடியதற்காகவும் கொலை செய்ததற்காகவும் சிறையில் போடப்பட்டான். பிற்காலத்தில் ஆவிக்குரிய பாதைக்கு திரும்பி வந்தபோதிலும், ‘அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதற்காக’ அவன் பெரும் துயரை அனுபவிக்க வேண்டியிருந்தது!—எபிரெயர் 11:24-26-ஐ ஒப்பிடுக.
11. ஊதாரி மகனின் இக்கட்டான நிலை எவ்வாறு மோசமடைந்தது, உலகின் கவர்ச்சிகள் “மாயமான வஞ்சகம்” என்பதை இன்று சிலர் எவ்வாறு கண்டறிந்திருக்கிறார்கள்?
11 “[‘எதையும்,’ NW] அவனுக்குக் கொடுப்பாரோ இல்லை” என்ற குறிப்பு அந்த ஊதாரியின் இக்கட்டான நிலை மோசமானதைக் காட்டுகிறது. அவனுடைய புதிய நண்பர்கள் எங்கே போனார்கள்? இப்போது அவன் கையில் ஒருபைசா கூட இல்லாததால், அவர்களால் ‘பகைக்கப்பட்டான்.’ (நீதிமொழிகள் 14:20) அதைப்போலவே, இன்றும் விசுவாசத்தை விட்டு வழிவிலகிச் செல்லும் அநேகர் இந்த உலகத்தின் கவர்ச்சிகளும் கருத்துக்களும் “மாயமான வஞ்சகம்” என்பதை கண்டறிகின்றனர். (கொலோசேயர் 2:8, தி.மொ.) கொஞ்ச காலங்களுக்கு கடவுளுடைய அமைப்பிலிருந்து விலகிச் சென்ற ஓர் இளம் பெண் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவின் துணை இல்லாமல் நான் பட்ட மனவேதனையும் துயரமும் கொஞ்சநஞ்சமல்ல. உலகத்தோடு ஒட்டி வாழலாம் என்று நினைத்தேன். ஆனால் நான் முழுக்கமுழுக்க அவர்களைப் போல இல்லாததால், அவர்கள் என்னை ஒதுக்கினார்கள். அப்பாவுக்காக ஏங்கித் தவிக்கும் தொலைந்துபோன பிள்ளையைப்போல உணர்ந்தேன். அப்போதுதான் யெகோவா இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை என்பது உரைத்தது. மறுபடியும் அவரை விட்டுவிட்டு என் இஷ்டத்துக்கு வாழப்போவதில்லை என முடிவுசெய்தேன்.” இயேசுவின் உதாரணத்திலிருந்த அந்த ஊதாரி மகனும் இதைப் போன்ற முடிவுக்கு வந்தான்.
ஊதாரி மகனின் புத்தி தெளிந்தது
12, 13. இன்றும் சிலருக்கு புத்தி தெளிவதற்கு என்ன அம்சங்கள் உதவியுள்ளன? (பெட்டியைக் காண்க.)
12 “அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்.”—லூக்கா 15:17-20.
13 ஊதாரி மகனுக்கு ‘புத்தி தெளிந்தது.’ இந்த ஊதாரி மகன் மாய உலகில் சில காலத்துக்கு இன்பத்தைத் தேடிக்கொண்டிருந்தான். ஆனால் இப்போதோ தன்னுடைய உண்மையான ஆவிக்குரிய நிலையைப் பற்றி தெளிவாய் புரிந்துகொண்டான். ஆம், இந்த இளைஞன் இடறி விழுந்தாலும்கூட, திரும்ப எழுவான் என்ற நம்பிக்கை இருந்தது. அவனுக்குள் சில நல்ல குணங்கள் இருந்தன. (நீதிமொழிகள் 24:16; 2 நாளாகமம் 19:2, 3-ஐ ஒப்பிடுக.) இன்று யெகோவாவின் மந்தையை விட்டு வழிவிலகுகிறவர்களைப் பற்றி என்ன? அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த நம்பிக்கையுமில்லை; எல்லா விஷயத்திலுமே அவர்களுடைய கலகத்தனமான போக்கு கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறார்கள் என நிரூபிக்கிறது என்ற முடிவுக்கு வருவது நியாயமாக இருக்குமா? (மத்தேயு 12:31, 32) எப்போதும் இல்லை. அப்படிப்பட்ட சிலருக்கு தாறுமாறான போக்கினால் ஏற்படும் குற்றவுணர்வு மனதுக்குள் முள்ளாகத் தைக்கிறது. காலப்போக்கில் அநேகருடைய புத்தி தெளிவடைகிறது. கடவுளுடைய அமைப்பை நிராகரித்து வாழ்ந்த அந்தக் காலப்பகுதியை நினைவுபடுத்தி ஒரு சகோதரி இவ்வாறு சொல்கிறார்: “நான் யெகோவா தேவனை நினைக்காத நாளேயில்ல. என்னைக்காவது ஒருநாள், எப்படியும் என்னை அவர் திரும்பவும் சத்தியத்துக்குள்ளே ஏத்துக்கணும் என்று நான் எப்போதும் ஜெபம் பண்ணிகிட்டே இருந்தேன்.”—சங்கீதம் 119:176.
14. ஊதாரி மகன் என்ன தீர்மானத்தை செய்தான், அவ்வாறு செய்வதன்மூலம் தன் மனத்தாழ்மையை எவ்வாறு காட்டினான்?
14 வழிவிலகிச் சென்றவர்கள் தங்களுடைய நிலையைக் குறித்து என்ன செய்யலாம்? இயேசுவின் நீதிக்கதையில் வரும் இந்த ஊதாரி மகன் தன் தகப்பனிடம் மன்னிப்பு கேட்பதற்கு வீடு திரும்ப முடிவு செய்தான். “உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று தன் தந்தையிடம் கேட்பதற்கு முடிவு செய்தான். கூலிக்காரன் தினக்கூலிக்கு வேலைப்பார்க்கும் ஒரு தொழிலாளி; அவன் எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கவும்படலாம். ஊழியக்காரனைவிட கீழான நிலையில் இருப்பவன்; ஏனென்றால் ஊழியக்காரன் என்பவன் குடும்பத்தில் ஒருவனாகவே கருதப்பட்டான். எனவே முன்பு தனக்கிருந்த மகன் என்ற அந்த அந்தஸ்திலேயே தன்னை ஏற்கும்படி கேட்பதற்கு அந்த ஊதாரி நினைக்கவில்லை. மிகக் குறைவான அந்தஸ்தையும் ஏற்றுக்கொள்ள தயாராய் இருந்தான்; அதன் மூலம் தன் அப்பாவுக்கு இவ்வளவு நாளாக காட்டாத உத்தமத்தை ஒவ்வொரு நாளும் நிரூபிக்க விரும்பினான். இருந்தபோதிலும், அவனுக்கோ பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.
மனதுக்கு இதமளிக்கும் வரவேற்பு
15-17. (அ) மகனைப் பார்த்த தகப்பன் எவ்வாறு நடந்துகொண்டார்? (ஆ) தகப்பன் தன் மகனுக்கு கொடுத்த அங்கி, மோதிரம், காலணிகள் ஆகியவற்றால் எது உணர்த்தப்படுகிறது? (இ) தகப்பன் விருந்தை ஏற்பாடு செய்வதிலிருந்து என்ன காட்டப்படுகிறது?
15 “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற் போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.”—லூக்கா 15:20-24.
16 அன்பான பெற்றோர் யாராயிருந்தாலும்சரி, தன் பிள்ளை ஆவிக்குரிய பாதைக்கு திரும்பி வருவதை ஆசையோடு எதிர்பார்ப்பார். எனவே, ஊதாரியின் தந்தை என்றாவது ஒரு நாள் தன் மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் ஆவலோடு நாள் தவறாமல் தன் வீட்டு வாசலில் வழிமேல் விழிவைத்து காத்திருந்ததை சற்று கற்பனை செய்து பாருங்கள். தன் மகன் வருவதை இப்போது அவர் பார்த்துவிடுகிறார்! இந்த இளைஞனின் தோற்றம் பெருமளவிற்கு மாறியிருந்தது என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும்கூட, “அவன் தூரத்தில் வரும்போதே” தகப்பன் அவனை அடையாளம் கண்டுகொள்கிறார். கந்தல்துணிக்கும் கூனிக்குறுகிய மனநிலைக்கும் அப்பால் அவர் பார்க்கிறார்; அவர் தன் மகனைக் காண்கிறார்; அவனைச் சந்திப்பதற்காக ஓடோடுகிறார்!
17 தகப்பன் மகனருகே சென்றவுடன், அவனைக் கட்டித்தழுவி, மென்மையாக முத்தம் செய்தார். பிறகு தம் மகனுக்கு அங்கி, மோதிரம், காலணிகள் ஆகியவற்றை கொடுக்கும்படி தன் ஊழியக்காரருக்கு கட்டளையிட்டார். இந்த அங்கி சாதாரண உடையாக இருக்கவில்லை. ஆனால் ‘உயர்ந்த வஸ்திரமாக’ ஒருவேளை, மதிப்புமிக்க விருந்தினருக்கு பரிசாக கொடுக்கப்படுகிற ஆடம்பர தையல் வேலைமிக்க அங்கியைப் போன்றிருந்தது. பொதுவாக ஊழியக்காரர் மோதிரமும் காலணிகளும் அணியாததால், தகப்பன் தன் மகனை குடும்ப அங்கத்தினருக்குரிய முழு அந்தஸ்துடன் வரவேற்பதைத் தெளிவாக்கினார். ஆனால் தகப்பன் அதோடு நிற்கவில்லை. தன் மகன் திரும்பி வந்ததை கொண்டாட ஒரு விருந்தை ஏற்பாடு செய்யும்படி கட்டளையிட்டார். தெளிவாகவே, அவர் தன் மகனை மனதுக்குள் திட்டிக்கொண்டோ, அல்லது திரும்பிவிட்டானே என்று கடமைக்காகவோ மன்னிக்கவில்லை. அவர் மனப்பூர்வமாக மன்னிக்க விரும்பினார். அது அவருக்கு அளவிலா மகிழ்ச்சியைத் தந்தது.
18, 19. (அ) ஊதாரி மகனைப் பற்றிய நீதிக்கதை யெகோவாவைப் பற்றி எதைக் கற்பிக்கிறது? (ஆ) யெகோவா யூதாவோடும் எருசலேமோடும் நடந்துகொண்ட விதத்தில் காட்டப்பட்டுள்ளபடி, பாவிகள் திரும்பி வருவதற்காக அவர் எவ்வாறு ‘தொடர்ந்து காத்திருக்கிறார்?’
18 ஊதாரி மகனைப் பற்றிய இந்த நீதிக்கதை, நாம் வணங்குவதற்கு சிலாக்கியம் பெற்ற கடவுளைப் பற்றி என்ன கற்பிக்கிறது? முதலாவதாக, யெகோவா ‘இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ளவராக’ இருக்கிறார் என்பதைக் கற்பிக்கிறது. (யாத்திராகமம் 34:6) உண்மையில், இரக்கம் என்பது கடவுளுடைய முக்கிய குணம். தேவையிலிருப்போரிடம் அவர் இயல்பாகவே அந்தக் குணத்தைக் காட்டுகிறார். யெகோவா “மன்னிக்கத் தயாராயிருக்கிறார்” என்றும் இயேசுவின் நீதிக்கதை கற்பிக்கிறது. (சங்கீதம் 86:5, NW) பாவமுள்ள மனிதரின் இருதயத்தில் ஏதேனும் மாற்றம் தென்படுமா என்று அவர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்; அதன் அடிப்படையில் தம் இரக்கத்தை காட்ட விரும்புகிறார்.—2 நாளாகமம் 12:12; 16:9.
19 உதாரணமாக, இஸ்ரவேலுடன் கடவுள் நடந்துகொண்ட விதத்தை சிந்தித்துப் பாருங்கள். “உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் சுகமேயில்லை” என யூதாவையும் இஸ்ரவேலையும் குறித்து விவரிக்கும்படி யெகோவா ஏசாயாவை ஏவினார். இருப்பினும், அவர் இதையும் சொன்னார்: “உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் [‘தொடர்ந்து,’ NW] காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்.” (ஏசாயா 1:5, 6; 30:18; 55:7; எசேக்கியேல் 33:11) இயேசுவின் நீதிக்கதையில் வரும் தகப்பனைப் போலவே, யெகோவா ‘வழிமேல் விழிவைத்து’ பார்த்துக் கொண்டிருக்கிறார். தம் வீட்டை புறக்கணித்துச் சென்றவர்கள் திரும்பி வருவதை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறார். ஒரு அன்பான தகப்பனிடமிருந்து நாம் எதிர்பார்ப்பவை இவைதாமே அல்லவா?—சங்கீதம் 103:13.
20, 21. (அ) என்ன வழியில் இன்று அநேகர் கடவுளுடைய இரக்கத்தால் கவரப்பட்டு உண்மை வணக்கத்துக்கு வருகிறார்கள்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
20 ஒவ்வொரு வருடமும், யெகோவாவின் இரக்கத்தினால் கவரப்பட்டு அநேகர் புத்தி தெளிந்து உண்மை வணக்கத்துக்கு திரும்புகின்றனர். இது அவர்களுடைய பாசத்துக்குரியோருக்கு என்னே மகிழ்ச்சியைத் தருகிறது! உதாரணமாக, ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்த கிறிஸ்தவ தகப்பனை எடுத்துக்கொள்ளுங்கள். மகிழ்ச்சிகரமாக, அவருடைய மகள் ஆவிக்குரிய பாதைக்கு திரும்பி வந்து இப்போது முழுநேர ஊழியராக சேவை செய்கிறாள். “இந்தப் பொல்லாத உலகத்தில் ஒரு நபரால் எந்தளவு சந்தோஷப்பட முடியுமோ அந்தளவு நான் சந்தோஷப்படுகிறேன். என்னுடைய வேதனையின் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மாறியிருக்கிறது” என்று அவர் சொல்கிறார். நிச்சயமாகவே யெகோவாவும்கூட பேரானந்தம் அடைகிறார்!—நீதிமொழிகள் 27:11.
21 ஊதாரி மகனைப் பற்றிய இந்த நீதிக்கதையில் இன்னும் அதிகம் இருக்கிறது. இயேசு இந்தக் கதையை தொடர்ந்து சொல்கிறார்; அதில் யெகோவாவின் இரக்கத்திற்கும் சதுசேயர் மற்றும் பரிசேயரின் விடாப்பிடியான, நியாயந்தீர்க்கிற மனநிலைக்கும் உள்ள வித்தியாசத்தைக் காட்டுகிறார். அதை அவர் எவ்வாறு காட்டினார்; இது நமக்கு எதை அர்த்தப்படுகிறது ஆகியவை அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a பைபிளில் விவரிக்கப்பட்டுள்ள நீதிக்கதைகளும் மற்ற உதாரணங்களும் உண்மைச் சம்பவங்கள் என சொல்ல முடியாது. இத்தகைய கதைகளின் நோக்கமே ஒரு நீதியை கற்பிப்பதுதான்; எனவே, நுணுக்கமாக ஒவ்வொரு குறிப்பிலும் ஒரு அடையாளப்பூர்வமான அர்த்தத்தை தேட வேண்டிய அவசியமில்லை.
மறுபார்வை
◻ இரக்கத்தினிடமான இயேசுவின் மனநிலை பரிசேயர்களோடு எவ்வாறு முரண்பட்டது?
◻ இன்று ஊதாரி மகனைப் போலிருப்போர் யார், எவ்வாறு?
◻ எத்தகைய சூழ்நிலை ஊதாரி மகனின் புத்தியைத் தெளிய வைத்தது?
◻ மனந்திரும்பிய மகனிடம் தகப்பன் எவ்வாறு இரக்கத்தைக் காட்டினார்?
[பக்கம் 11-ன் பெட்டி]
அவர்களுடைய புத்தி தெளிந்தது
ஒருசமயம் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்ட சிலருக்கு புத்தி தெளிந்து திரும்பி வருவதற்கு எது உதவியிருக்கிறது? பின்வரும் குறிப்புகள் இந்த விஷயத்தை தெளிவாக்குகின்றன.
“சத்தியம் எங்கே இருக்கிறது என்பது எனக்கு நல்லாவே தெரியும். வருஷக்கணக்காக பைபிளை படித்ததும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு போனதும் என் மனசை விட்டு நீங்கவேயில்லை. எவ்வளவு நாளைக்குத்தான் யெகோவாவை ஒதுக்கிவிட்டு என்னால வாழ முடியும்? அவர் என்னை விட்டுவிடவில்லை; நான் தான் அவரை விட்டுவிட்டேன். கடைசியில், நான் செய்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது. நான்தான் பிடிவாதக்காரியா இருந்துவிட்டேன், ‘மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’ என்ற யெகோவாவின் வார்த்தை எப்போதுமே உண்மையாக இருக்கிறது என்பதையும் ஒத்துக்கொண்டேன்.”—சி.டபிள்யு.
“என் பெண் குழந்தை பேசத் தொடங்கினாள். யெகோவா யார் என்றும் அவரிடம் எப்படி ஜெபிக்க வேண்டுமென்றும் நான் அவளுக்கு கற்றுக் கொடுக்க விரும்பியதால் அது என் மனதை நெருட ஆரம்பித்தது. தூங்க முடியாமல் தவித்தேன். ஒரு நாள் ஜாமத்தில் காரை எடுத்துக்கொண்டு பார்க்குக்கு சென்று அழ ஆரம்பித்தேன். ஆசைதீர அழுதேன். ரொம்ப நாள் கழித்து நீண்ட நேரம் யெகோவா தேவனிடம் ஜெபித்தேன். யெகோவா இல்லாமல் என்னால் இனியும் இருக்க முடியாது என்பது மட்டும் நன்றாக புரிந்தது; அவர் என்னை மன்னிக்க மாட்டாரா என ஏங்கினேன்.”—ஜி.ஹெச்.
“மதத்தைப் பற்றி பேச்சு எழும்போதெல்லாம், சத்தியத்தை கற்றுக்கொடுக்கும் மதத்திலிருக்க நான் விரும்பினால் ஒரு யெகோவாவின் சாட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்வேன். நான் அந்த மதத்தில்தான் இருந்தேன், ஆனால் அதற்கு இசைவாக வாழ முடியவில்லை, அதனால் விட்டு விலகிவிட்டேன் என்றும் சொல்வேன். இதை நினைத்து நினைத்து குற்றவுணர்வால் தவித்தேன், துக்கத்தை தாங்க முடியவில்லை. ‘நான் ரொம்ப மோசமானவள்; ஒரேயடியாக மாற வேண்டியது அவசியம்’ என்பதை ஒருவழியாக ஒத்துக்கொண்டேன்.”—சி.என்.
“முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு நானும் என் கணவரும் சபைநீக்கம் செய்யப்பட்டோம். பிறகு, 1991-ல் இரண்டு மூப்பர்கள் எங்களை சந்தித்து, மீண்டும் யெகோவா தேவனிடம் திரும்பிவருவதற்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்தபோது சந்தோஷத்தில் நாங்கள் மெய்சிலிர்த்து போனோம். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என் கணவருக்கு 79 வயதும், எனக்கு 63 வயதும் ஆகிறது.”—சி.எ.