ஜீவனின் இலக்கை ஐக்கியமாக நாடுதல்
“ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.
1. எந்த சந்தர்ப்பத்தில் நித்திய ஜீவனைப் பற்றி இயேசு முதல் முதலாக பேசினார்? இந்த இலக்கை யார் அடையக்கூடும்?
மறைவாக, யார் கண்ணிலும் படாமல், அவன் இராக்காலத்திலே வருகிறான். அவன் தான் நிக்கொதேமு. பொ.ச.30-ல் பஸ்காவின் சமயத்தில் இயேசு செய்து காட்டிய அடையாளங்கள் அவன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டிருந்தன. இந்த பரிசேயனிடம் கடவுளுடைய குமாரன், முதல் முதலாக பதிவு செய்யப்பட்டுள்ள “நித்திய ஜீவனைப்”பற்றி பேசி, இருதயத்துக்கு மகிழ்வூட்டும் பின்வரும் இந்த வார்த்தைகளையும் சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:15, 16) மீட்டுக்கொள்ளப்படக்கூடிய மனிதவர்க்கத்தின் உலகிற்கு என்ன மகத்தான ஒரு வாய்ப்பு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது! ஏன், மனமேட்டிமைக் கொண்ட ஒரு பரிசேயனும்கூட, அந்த இலக்கை அடைவதற்கு தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளக்கூடும்.
2. (எ) எந்த சூழ்நிலையில் இயேசு மறுபடியுமாக “நித்திய ஜீவனை”ப் பற்றி பேசினார்? (பி) ஜீவனைக் கொடுக்கும் தண்ணீர்கள் யாருக்கு கிடைக்கின்றன?
2 அதற்குப் பின்பு, இயேசு எருசலேமிலிருந்து கலிலேயாவுக்கு பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார். அவர் சமாரியாவில் ஒரு கிணற்றருகே இளைப்பாறுகிறார். அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களை வாங்கிவர போய்விடுகிறார்கள். தண்ணீர் மொள்ள ஒரு ஸ்திரீ அங்கு வருகிறாள். இயேசு அவளிடம்: “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.” (யோவான் 4:14) சமாரியர்கள் யூதர்களால் இழிவானவர்களாக கருதப்பட்டதன் காரணமாக, இத்தகைய ஒரு விலைமதிப்புள்ள ஒரு நம்பிக்கையைப் பற்றி இந்த பெண்ணுக்கு தெரிவிக்க இயேசு ஏன் முன்வந்தார்? மேலுமாக, இயேசு அறிந்திருந்த விதமாகவே, இந்த ஸ்திரீக்கு ஐந்து புருஷர்கள் இருந்திருக்கிறார்கள். இப்பொழுது அவள் தன்னுடைய புருஷனாயிராத ஒரு மனிதனோடு ஒழுக்கக் கேடாக வாழ்ந்து வருகிறாள். ஆனாலும்கூட இயேசு இங்கு குறிப்பிடுகிற விதமாகவே, மனிதவர்க்கத்தின் உலக்கத்தால் இழிவாக கருதப்படுகிறவர்கள்கூட, மனந்திரும்பி தங்களுடைய வாழ்க்கையை சுத்திகரித்துக் கொள்வார்களானால், இவர்களுங்கூட ஜீவனைக் கொடுக்கும் சத்தியத்தின் தண்ணீர் கிடைக்கும்படி செய்யப்பட வேண்டும்.—கொலோசெயர் 3:5-7 ஒப்பிடவும்.
3. (எ) என்னவிதமான “போஜனத்தை இயேசு சிபாரிசு செய்கிறார்? (பி) யோவான் 4:34-36 எவ்விதமாக நிறைவேறியிருக்கிறது?
3 “நித்திய ஜீவன்!” சீஷர்கள் திரும்பி வந்து இயேசுவை சாப்பிடும்படியாக துரிதப்படுத்தியபோது அவர் இந்தப் பொருளை மேலுமாக விரிவுபடுத்துகிறார்: அவர் அவர்களிடம் சொல்லுருகிறார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” அந்தக் கிரியை என்ன? இயேசு சொல்லுகிறார்: “இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள். அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக் கொள்ளுகிறான்.” தாழ்வாகக் கருதப்பட்ட சமாரியர்களின் மத்தியிலும்கூட இத்தகைய அறுப்புக்கு வாய்ப்பிருந்தது. பதிவு காண்பிக்கிற விதமாகவே, அது உண்மையாக ஆனபோது மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று. (யோவான்:4:34-36; அப்போஸ்தலர் 8:1, 14-17) நித்திய ஜீவனுக்காக சேர்த்துக் கொள்ளப்படுவது இன்றுவரையாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது, ஆனால் இப்பொழுது நிலம் உலகமாக இருக்கிறது. இயேசுவின் சீஷர்களுக்கு கர்த்தருடைய இந்த வேலையிலே செய்வதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது.—மத்தேயு 13:37, 38; 1 கொரிந்தியர் 15:58.
“ஜீவனின் வரம்”
4. ஓய்வு நாள் ஆசரிப்பைக் குறித்து இயேசு யூதர்களுக்கு எவ்விதமாக பதிலளிக்கிறார்?
4 ஒரு வருடம் கடந்து போகிறது. இப்பொழுது பொ. ச. .31-ன் பஸ்கா சமயமாக இருக்கிறது. இயேசு அவருடைய வழக்கத்தின்படியே பண்டிகைக்காக எருசலேமில் இருக்கிறார். ஆனால் யூதர்களோ, ஓய்வுநாளில் அவர் அன்பான செயல்களாகிய சுகப்படுத்தல்களைச் செய்ததற்காக அவருக்கு தொல்லைக் கொடுக்க போகிறார்கள். இயேசு அவர்களுக்கு எவ்விதமாக பதிலளிக்கிறார்? அவர் சொல்லுகிறார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்.” ஆகவே அவர்கள் அவரை கொலை செய்யும்படி வகை தேடினார்கள்.—யோவான் 5:17, 18.
5, 6. (எ) என்ன விலைமதிப்புள்ள ஒரு ஒற்றுமையை இயேசு இப்பொழுது விவரிக்கிறார். (பி) என்ன விதத்தில் இயேசு “தம்மில் தாமே ஜீவனு”டையவராயிருக்கிறார்?
5 ஆனால் இயேசுவோ தமக்கும் பிதாவுக்குமிடையேயுள்ள ஐக்கியம் அல்லது ஒருமைப் பாடாகிய அந்த விலைமதிப்புள்ள ஒற்றுமையைக் குறித்து தொடர்ந்து விவரித்துக் கொண்டிருக்கிறார். அவர் அந்த யூதர்களிடம் இவ்விதமாகச் சொல்லுகிறார்: “பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்: நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.” பிதா தமக்கு மிக அதிகமான வல்லமையை அளித்திருப்பதை இவ்விதமாக அவர் குறிப்பிடுகிறார்: “என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.”—யோவான் 5:20, 24.
6 சுதந்தரித்துக் கொள்ளப்பட்ட அவர்களுடைய பாவத்தின் காரணமாக கடவுளுடைய பார்வையில் “மரித்தவர்க”ளாக இருப்பவர்களும்கூட “தேவ குமாரனுடைய சத்தத்தைக்” கேட்டு உயிர்த்தெழுந்து வரக்கூடும். ஆனால் எவ்விதமாக? இயேசு விளக்குகிறார்: “பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.” “தம்மில்தாமே ஜீவன்” என்ற வார்த்தைகளை “ஜீவனின் வரத்தை தம்மில் உடையவராயிருக்கிறார்” என்பதாகவும்கூட மொழி பெயர்க்கலாம். (யோவான் 5:25, 26, ஆங்கில மேற்கோள் பைபிளின் கீழ்க்குறிப்பு) ஆகவே மனிதர்களுக்கு கடவுளோடு ஒரு நல்ல நிலைநிற்கையை இயேசுவால் கொடுக்க முடிகிறது. மேலுமாக, மரணத்தில் நித்திரை செய்து கொண்டிருப்பவர்களை எழுப்பி அவர்களுக்கு ஜீவனை அவரால் கொடுக்க முடிகிறது.—யோவான் 11:25; வெளிப்படுத்தின விசேஷம் 1:18.
7. (எ) சங்கீதம் 36:5, 9 கடவுளைப் பற்றி நமக்கு என்னச் சொல்லுகிறது? (பி) உத்தமத்தைக் காத்துக் கொண்ட தம்முடைய குமாரனுக்கு யெகோவா எவ்விதமாக பலனளித்திருக்கிறார்?
7 யெகோவா எப்பொழுதும் தம்மில் ஜீவனைக் கொண்டவராக இருந்திருக்கிறார். அவரைக் குறித்து இவ்விதமாக எழுதப்பட்டிருக்கிறது: “ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது.” (சங்கீதம் 36:5, 9) ஆனால் தகப்பன் இப்பொழுது “நித்திரையடைந்தவர்களில் முதற் பலனாக” உத்தமத்தைக் காத்துக்கொண்ட தம்முடைய குமாரனை மரித்தோரிலிருந்து எழுப்பினார். “தம்மில்தாமே ஜீவ வரத்தை”யுடையவராக இருப்பதன் காரணமாக, இயேசு பாவங்களை மன்னிக்கவும், நியாயத்தீர்ப்பு செய்யவும், நித்திய ஜீவனின் எதிர்பார்ப்போடு மரித்தோரை எழுப்பவும் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறார்.—1 கொரிந்தியர் 15:20-22; யோவான் 5:27-29; அப்போஸ்தலர் 17:31.
சந்தோஷமான ஒரு இணைப்பு
8, 9. (எ) நித்திய ஜீவனின் இலக்கை நாம் எவ்விதமாக காத்துக் கொள்ளலாம்? (பி) நித்திய ஜீவனின் சம்பந்தமாக கடவுள் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்? (சி) யார் இந்த ஆசீர்வாதங்களில் பங்கு கொள்கிறார்கள்? எவ்விதமாக?
8 ஆகவே, இயேசுவின் சீஷனாகிய யூதா நமக்கு இவ்விதமாக புத்தி சொல்லுகிறான்: “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்.” (யூதா 21) நித்திய ஜீவன்—என்ன மதிப்பு மிக்க ஓர் இலக்கு! அதுவும் இது பரிபூரணத்தில் வாழ்க்கையாக இருக்கப்போகிறது; பரிபூரணமான நம்முடைய சிருஷ்டிகரின் சித்தத்திற்கிசைவாக, அவருடைய குமாரன் மூலமாக அவர் செய்யும் ஏற்பாடாக இருக்கப்போகிறது. தற்போதைய காரிய ஒழுங்கில் உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில், அநேகமாக நாம் கடுமையாக உழைக்க வேண்டியதாக இருக்கிறது. அப்பொழுது இதற்கு அவசியமிராது. வரப்போகிற காரிய ஒழுங்கில், துயரமும், வியாதியும் அக்கிரமமும், ஒழுக்கக் கேடும் மரணமும்கூட இருக்காது!—மீகா 4:3, 4; 1 கொரிந்தியர் 15:26.
9 இந்த வாக்குதத்தங்களின் நிறைவேற்றத்தில் யார் பங்குகொள்வார்கள்? எங்கே? இயேசுவின் பலியில் விசுவாசத்தை வைத்து அந்த விசுவாசத்தோடு தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கிறவர்களே இதில் பங்குகொள்வார்கள். இவர்கள், விசுவாசத்தின் ஐக்கியத்தில், உலகம் முழுவதிலுமுள்ள உடன் கிறிஸ்தவர்களோடு ஒத்திசைவாக ஒன்றாக தங்களை சேர்த்திணைத்துக் கொள்ளுகிறார்கள்.—யாக்கோபு 2:24; எபேசியர் 4:16.
10. கடவுளுடைய நிர்வாகத்தில் எது முதலில் நடைபெறுகிறது? (பி) “நிர்வாகம்” அடுத்ததாக என்ன செய்கிறது?
10 கடவுளுடைய நல்விருப்பத்தின்படி, அவர் “பரலோகத்திலிருக்கிறவைகளையும் பூலோகத்திலிருக்கிறவைகளையுமாகிய சகலத்தையும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்ட . . . ஒரு நிர்வாகத்தை கொண்டிருக்க நோக்கங் கொண்டிருக்கிறார்.” (எபேசியர் 1:8-10) இது கடவுளுடைய குடும்ப ஏற்பாடாக இருக்கிறது. இது கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளாகிய 1,44,000 பேரை கூட்டிச் சேர்ப்பதில் ஆரம்பமாகிறது. “இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் [இயேசு கிறிஸ்து] முதற்பலனாக மீட்டுக் கொள்ளப்பட்டவர்கள்.” அவர்கள் கிறிஸ்துவோடேகூட ஆயிர வருஷமளவும் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவிக்கும் பொருட்டு முதலாம் [பரலோக] உயிர்த்தெழுதலில் பங்கு கொள்கிறார்கள். அடுத்ததாக, கடவுளுடைய நிர்வாகம் “பூலோகத்திலிருக்கிறவைகளை” கூட்டிச் சேர்க்க ஆரம்பிக்கிறது. அவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும் ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்களாக” இருக்கிறார்கள். கடவுளின் இந்த ஊழியர்கள் “புதிய பூமி“யில் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்போடு “மகா உபத்திரவத்திலிருந்து” வெளியே வருவார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 14:1, 4; 20:4, 6; 7:4, 9-17; 21:1, 4.
11. (எ) எபேசியர் 1:11 என்ன விலையேறப்பெற்ற “ஐக்கியத்தைப்” பற்றி பேசுகிறது? (பி) இந்த ஐக்கியத்திலிருப்பவர்களுக்கு யோவான் 15:4, 5 எவ்விதமாக பொருந்துகிறது?
11 “பரலோகத்திலிருக்கிறவைகளாகிய” கடவுளின் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரர்கள், இயேசுவோடும் பிதாவோடும் மிகவும் நெருக்கமான ஒரு உறவை அனுபவித்துக் களிக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குள் அவருடைய “சுதந்தரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.” (எபேசியர் 1:11) மிகுதியாக கனி கொடுக்கும் பொருட்டு, கொடிகள் திராட்ச செடியில் நிலைத்திருப்பதுபோலவே இயேசு, அவர்களை தம்மில் நிலைத்திருக்கும்படியாக உற்சாகப்படுத்தினார். கிறிஸ்து இயேசுவோடு விலையேறப் பெற்ற இந்த ஐக்கியத்தை காத்துக் கொண்டாலொழிய கொடிகள் “ஒன்றும் செய்யக்கூடாது.”—யோவான் 14:10, 11, 20; 15:4, 5; 1 யோவான் 2:27.
“வேறே ஆடுகள்” இப்பொழுது பங்கு கொள்கிறார்கள்
12. (எ) சிறு மந்தையினிடமாக வேறே ஆடுகளின் உறவு என்னவாக இருக்கிறது? (பி) இந்த ஒவ்வொரு தொகுதியினரின் சம்பந்தமாகவும் 1 யோவான் 2:1-6 எவ்விதமாக பொருந்துகிறது?
12 ஆனால் கடந்த 50 வருடங்களாக உலகப் பிரகாரமான வெள்ளாடுகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வந்திருக்கும் லட்சக்கணக்கான மற்ற செம்மறியாடுகளைப் போன்ற ஆட்களைப் பற்றி என்ன? (மத்தேயு 25:31-40) இவர்கள் ராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளும் இயேசுவின் “சிறு மந்தை” அல்ல. ஆனால் “வேறே ஆடுகளாக” அவர்கள் பிதாவோடும் குமாரனோடும் ஐக்கியமாக சேவை செய்யும் பெரிய மந்தையின் ஒரு பாகமாக இவர்களை சேர்ந்துக் கொள்கிறார்கள். (லூக்கா 12:32; யோவான் 10:16) இயேசு கிறிஸ்து “நம்முடைய பாவங்களை [அதாவது சிறு மந்தையினரின்] நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” என்ற நம்பிக்கையை அப்போஸ்தலனாகிய யோவான் கொடுக்கிறான். ஆகவே மனிதவர்க்கத்தின் உலகத்திலிருந்து கூட்டிச் சேர்க்கப்படும் இந்த “வேறே ஆடு”களும்கூட, கடவுளோடும் கிறிஸ்துவோடும் விலையேறப் பெற்ற ஒரு ஐக்கியத்தை அல்லது ஒருமைப்பாட்டை அனுபவித்துக் களிக்கலாம். யோவான் தொடர்ந்து சொல்வதற்கு ஒப்பாக இது இருக்கிறது: “அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும், நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.” முதலாவது “சிறு மந்தை”யும் பின்னர் “வேறே ஆடுகளும்” இயேசு நடந்தபடியே நடக்க வேண்டிய உத்தரவாதமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—1 யோவான் 2:1-6.
13. (எ) யோவான் 17:20, 21-ல் இயேசு எதற்காக ஜெபிக்கிறார்? (பி) கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளுக்காக மட்டுமே அவர் வேண்டுதலை செய்துக் கொண்டில்லை என்பதை எது காண்பிக்கிறது?
13 ஆகவே இன்று பரலோக மற்றும் பூமிக்குரிய தொகுதிகளாகிய இரண்டுமே, பிதாவோடும் குமாரனோடும் ஐக்கியமாக—கடவுளுடைய வேலையை செய்து முடிப்பதில் அவர்களோடு முழு இசைவில் இருக்கிறார்கள்: “நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்க” வேண்டுமென்று இயேசு வேண்டிக் கொண்டார். இந்த ஒருமைப்பாடு உடன் சுதந்தரவாளிகளாயிருக்கும் நிலையை மட்டும் அர்த்தப்படுத்துவதாய் அல்லது அந்நிலைக்கு மட்டும் பெருந்துவதாயில்லை. ஏனென்றால் இயேசுவின் சீஷர்கள் ‘யெகோவாவின் சரீரத்தின்’ பாகமாகவோ ‘யெகோவாவின் உடன் சுதந்தரவாளிகளாகவோ’ ஆவதில்லை. மனிதவர்க்கத்தின் உலகிற்கு சாட்சி கொடுக்கும்போது அவர்கள் ஒத்துழைப்பதிலும், யெகோவாவோடும் கிறிஸ்துவோடும் ஒரே இருதயத்தோடும் மனதோடும் இருப்பதிலும் அவர்கள் காண்பிக்கும் ஒருமைப்பாட்டில்தானே அவர்கள் “ஒன்றாயிருக்கிறார்கள்.”—யோவான் 17:20, 21.
14. பரலோக வகுப்பார் கிறிஸ்துவோடு என்ன விசேஷித்த விதத்தில் ஐக்கியமாயிருக்கிறார்கள்? இதை அவர்களுக்கு உணர்த்துவது எது?
14 ஆனால் பரலோக வகுப்பிலுள்ள ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் இப்பொழுது அந்த ஐக்கியத்தை விசேஷித்த விதமாக அனுபவித்து வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ்துவின் கிரய பலியின் மதிப்பு அவர்கள் சார்பாக பயன்படுத்தப்படுவதன் மூலமாக அவர்கள் ஜீவனுக்கென்று நீதிமான்களாக எண்ணப்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்கள் ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்களாக, கிறிஸ்து இயேசுவோடு உடன் சுதந்தரவாளிகளாக இருக்கும் எதிர்பார்ப்பை உடையவர்களாக இருக்கிறார்கள். புத்திரர்களாக சுவிகாரம் செய்யப்பட்டதை இவ்விதமாகச் சொல்வதன் மூலம் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே [பிறப்பிக்கச் செய்யும் கடவுளுடைய கிரியை செய்யும் சக்தி] நம்முடைய ஆவி[பிரதான மனச்சாய்வு]யுடனேகூட சாட்சி கொடுக்கிறார்.—ரோமர் 3:23, 24; 5:1; 8:15-18.
15. பூமிக்குரிய வாழ்க்கை நம்பிக்கைகளையுடையவர்களுக்கு தற்காலமும் எதிர்காலமும் எதைக் கொண்டிருக்கின்றன?
15 பூமிக்குரிய வாழ்க்கை நம்பிக்கைகளையுடையவர்கள், பூர்வ காலங்களிலிருந்த ஆபிரகாம், ராகாப் இன்னும் மற்றவர்களைப் போல, கடவுளோடு சிநேகிதராக இருப்பதன் சம்பந்தமாக இப்பொழுது நீதிமான்களாக எண்ணப்படுகிறார்கள். கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் போது அவர்கள் படிப்படியாக மனித பரிபூரணத்துக்கு உயர்த்தப்படுவார்கள். அப்பொழுது ஒரு கடைசி பரீட்சைக்குப் பின்பு “சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக் கொள்ளும்.” (ரோமர் 8:19-21; யாக்கோபு 2:21-26) இப்படியாக கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள், பூமியின் மீது நித்திய ஜீவனுக்கென்று நீதிமான்களாக எண்ணப்படுவார்கள்.—யோவான் 10:10; ஏசாயா 9:7; 11:1-9; 35:1-6; 65:17-25 ஒப்பிடவும்.
16. (எ) “சிறு மந்தையும்” “வேறே ஆடுகளும்” என்ன விதங்களில் ஒன்றாயிருப்பதை காண்பிக்கிறார்கள்? (பி) ஆனால் யோவான் 3:3-5 ஏன் “சிறு மந்தைக்கு” மட்டுமே பொருத்தமாக இருக்கிறது?
16 சிறு மந்தையிலுள்ளவர்களும், வேறே ஆடுகளான திரள் கூட்டத்தாரும், தனிப்பட்டவர்களாக கடவுளுடைய ஊழியத்துக்கு ஒரே விதமாக மகிழ்ச்சியான வைராக்கியத்தை காண்பிக்கிறார்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரில் பெரும்பாலானவர்கள் வயதிலும் கிறிஸ்தவ அனுபவத்திலும் அதிக முதிர்ச்சியுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் இரு தரத்தினருமே கிறிஸ்தவ ஆள்தன்மையையுடையவர்களாய் ஆவியின் கனியை வெளிப்படுத்துகிறார்கள். (எபேசியர் 4:24; கலாத்தியர் 5:22, 23) ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நித்திய ஜீவனைக் குறித்து நிக்கொதேமுவிடம் பேசுவதற்கு முன்பாகவேகூட இயேசு இதை அவனிடம் சொன்னார்: “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், தேவனுடைய ராஜ்யத்தைக் காண மாட்டான்.” (யோவான் 3:3-5) ஆகவே இயேசுவோடுகூட அவருடைய ராஜ்யத்தில் உடன் சுதந்திரவாளிகளாக இருப்பதற்காக கடவுள் அழைக்கும் அந்த முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் ஒரு ஆவிக்குரிய மறுபிறப்பை அனுபவிக்கிறார்கள். (1 கொரிந்தியர் 1:9, 26-30) வேறே ஆடுகளுக்கு இதுபோன்று ஒரு மறுபிறப்பு அவசியமில்லை. ஏனென்றால் ராஜ்யத்தில் பிரஜைகளாக மீண்டும் நிலைநாட்டப்படும் பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதே அவர்களுடைய இலக்காக இருக்கிறது.—மத்தேயு 25:34, 46b; லூக்கா 23:42, 43.
ஞாபகார்த்த ஆசரிப்பும் புதிய உடன்படிக்கையும்
17. ஜீவனை இலக்காக கொண்டிருக்கும் அனைவருமே ஏன் ஞாபகார்த்த ஆசரிப்புக்கு கடவுளுடைய ஜனங்களோடு கூடி வர வேண்டும்? 1985-ல் ஞாபகார்த்த கொண்டாட்டத்தைப் பற்றி நாம் என்ன கவனிக்கிறோம்?
17 1986, மார்ச் 24-ம் தேதி, சூரிய அஸ்தமனத்துக்குப் பின் உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் இயேசுவின் மரணத்தை ஆசரிக்க கூடிவந்தார்கள். இயேசு, தம்முடைய பிதாவின் நாமத்தையும் நோக்கத்தையும் நிலைநிறுத்துவதற்காகவும் பாவத்திலிருக்கும் மனிதவர்க்கத்துக்காகவும் அவர் தம்முடைய பரிபூரண மனித சரீரத்தையும் இரத்தத்தையும் செலுத்தியிருப்பதன் பேரில் கவனம் ஒருமுகப்படுத்தப்பட்டது. (1 கொரிந்தியர் 11:23-26) ஆகவே ஜீவனை இலக்காக கொண்ட அனைவருமே (பரலோகத்திலிருந்தாலும் பூமியிலிருந்தாலும்) உலகம் முழுவதிலும் இந்த மகிழ்ச்சியான சம்பவத்துக்காக கடவுளுடைய ஜனங்களோடு கூட்டுறவுகொள்ள விரும்பினார்கள். 1985-ல் 77,92,109 பேர் இவ்விதமாக இயேசுவின் மரணத்தை நினைவு கூர்ந்தார்கள். ஆனால் இயேசுவின் மனித சரீரத்துக்கும் இரத்தத்துக்கும் அடையாளச் சின்னங்களாக இருந்த அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்கு கொண்டவர்கள் 9,051 பேர் மட்டுமே. ஏன் வெகு சிலரே?
18, 19. (எ) லூக்கா 22-ம் அதிகாரத்தில் இயேசு எந்த உடன்படிக்கைகளைப் பற்றி குறிப்பிடுகிறார்? (பி) ஒவ்வொரு உடன்படிக்கையின் நோக்கமும் என்ன? (சி) மோசேயினால் முன்நிழலாக காட்டப்பட்டபடி இயேசு எவ்விதமாக “ஒரே மத்தியஸ்தராக” இருக்கிறார்?
18 சரி, இயேசு தம்முடைய மரணத்தின் ஞாபகார்த்த ஆசரிப்பை தொடங்கி வைத்த அந்த மாலைப் பொழுதில் என்ன சொன்னார்? அப்பத்தைப் பிட்டு தம்முடைய சீஷர்களுக்கு கொடுத்தப் பின்பு, அதே விதமாக திராட்ச ரசத்தையும் கொடுத்து இவ்விதமாக சொன்னார்: “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.” பின்பு அவர் தொடர்ந்து அவர்களை புதிய உடன்படிக்கையினுள் எடுத்துக் கொள்வதற்கான காரணத்தை விரிவாக விளக்கினார்: “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. ஆகையால் என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜன பானம் பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின் மேல் உட்காருவீர்கள் என்றார்.”—லூக்கா 22:19, 20, 28-30.
19 எரேமியா தீர்க்கதரிசி புதிய உடன்படிக்கையைக் குறித்து முன்னறிவித்திருந்தான். யெகோவாவின் ஜனங்கள், மிகவும் நெருங்கிய ஒரு உறவில் “யெகோவாவை அறிந்து” கொள்ளும் பொருட்டு இந்த உடன்படிக்கையின் மூலமாக அவர் அவர்களுடைய பாவங்களையும் மீறுதல்களையும் மன்னிப்பார் என்று அவன் சொன்னான். (எரேமியா 31:31, 34) மாம்ச பிரகாரமான இஸ்ரவேலரோடு செய்யப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையில் மோசே “மத்தியஸ்தனாக” இருந்தது போலவே, ஆவிக்குரிய இஸ்ரவேலோடு” கடவுள் செய்துக் கொள்ளும் [இந்த] “விசேஷித்த உடன்படிக்கைக்கு” இயேசு மத்தியஸ்தராகிறார். கிறிஸ்துவோடு ராஜ்ய சுதந்தரவாளிகளாக ஆவதற்கு அழைக்கப்படுகிறவர்களை மீட்டுக் கொள்வதற்காக இது இவ்விதமாக இருக்கிறது. இவ்விதமாக அவர்கள் “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை” பெற்றுக் கொள்கிறார்கள். (கலாத்தியர் 3:19, 20; 6:16; எபிரெயர் 8:6; 9:15; 12:24) குறிப்பாக பைபிளின் இந்த கருத்தில்தானே “கிறிஸ்து இயேசு தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராக” இருக்கிறார்.—1 தீமோத்தேயு 2:5, 6.
20. ஞாபகார்த்த அடையாளச் சின்னங்களில் யார் பங்கு கொள்வது சரியாக இருக்கும்? (பி) இது ஏன் இப்படி?
20 அப்படியென்றால், ஞாபகார்த்த அடையாளச் சின்னங்களாகிய அப்பத்திலும் திராட்ச ரசத்திலும் யார் பங்குகொள்வது சரியாக இருக்கும்? இயேசுவினுடைய பலியின் அடிப்படையில் கடவுள் புதிய உடன்படிக்கைக்குள் எடுத்துக் கொள்ளும் அந்த தொகுதியினர் மாத்திரமே அதில் பங்கு கொள்ளலாம். (சங்கீதம் 50:5) இயேசுவின் 1,44,000 உடன் சுதந்தரவாளிகளை முதலில் மனித வாழ்க்கைக்கு உரிமையுள்ளவர்களென நிரூபிப்பதே இந்த உடன்படிக்கையின் நோக்கமாக இருக்கிறது. பின்பு இந்த உரிமையை இவர்கள் தியாகம் செய்து இதனால் பரலோக ராஜ்யத்துக்குள் எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். (ரோமர் 4:25; 2 தீமோத்தேயு 2:10, 12) ஆனால் வேறே ஆடுகளைப் பற்றி என்ன?
21. (எ) ஞாபகார்த்தத்தின்போது அந்த ஆசரிப்பை கவனிக்கிறவர்களாக “வேறே ஆடு”கள் எவ்விதமாக நன்மையடைகிறார்கள்? (பி) ஞாபகார்த்த ஆசரிப்பு எதன் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது? என்ன கேள்வி எழும்புகிறது?
21 “வேறே ஆடு”களின் வகுப்பிலுள்ளவர்கள் புதிய உடன்படிக்கையில் இல்லை. ஆகவே அவர்கள் அதில் பங்கு கொள்வதில்லை. ஆனால் மரியாதையுடன் அதை கவனிக்கிறவர்களாக ஞாபகார்த்த ஆசரிப்புக்கு வருவதன் மூலம் அவர்கள் அனைவருமே வெகுவாக நன்மையடைகிறார்கள். இயேசு தம்முடைய பிதாவிடம் ஜெபிக்கையில் சொன்ன வார்த்தைகளுக்கு இசைவாக ஆவிக்குரிய விஷயங்களைப் பற்றிய அவர்களுடைய போற்றுதல் அதிகரிக்கிறது: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) ஞாபகார்த்த கொண்டாட்டம் இயேசுவின் மாம்சத்தின் மீதும் இரத்தத்தின் மீதும் கவனத்தை ஒருமுகப்படுத்துவதை நினைவில் கொள்ளுங்கள். நித்திய ஜீவனின் இலக்கை நாடும் அனைவருக்கும் பலி செலுத்தப்பட்ட கிறிஸ்துவின் மாம்சமும் இரத்தமும் அதிமுக்கியமானதாக இருக்கிறது. புதிய உடன்படிக்கையினுள் எடுத்துக் கொள்ளப்படாததன் காரணமாக ஞாபகார்த்த சின்னங்களில் பங்குகொள்ளாத “வேறே ஆடுகளின்” சம்பந்தமாக இது எவ்விதமாக உண்மையாக இருக்கிறது? பின்வரும் கட்டுரையில் இதை நாம் சிந்திப்போம். (w86 2/15)
நீங்கள் எவ்விதமாக பதிலளிப்பீர்கள்?
◻ நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பைப் குறித்து இயேசு எவ்விதமாக படிப்படியாக விளக்கங்
களைக் கொடுத்தார்?
◻ கடவுள் எவ்விதமாக தம்முடைய நிர்வாகத்தை நடத்தி சென்றிருக்கிறார்?
◻ பிதாவோடும் குமாரனோடும் கிறிஸ்துவின் சகோதரர்களோடும், வேறே ஆடுகள் ஐக்கியமாயிருக்கிறார்கள் என்று ஏன் சொல்லப்படலாம்?
◻ அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் மாத்திரமே ஞாபகார்த்த சின்னங்களில் பங்குகொள்வதற்கு காரணமென்ன?
[பக்கம் 13-ன் படம்]
“சிறு மந்தை”யும் “வேறே ஆடுகளும்” “ஒன்றாயிருக்கிறார்கள்”—கடவுளுடைய வேலையை இயேசு செய்ததுபோல் செய்கிறார்கள்