‘பந்தயப் பொருளை பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்’
“பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.”—1 கொரிந்தியர் 9:24.
1, 2. (எ) ஒரு கிறிஸ்தவனுக்கு இன்று எது மாபெரும் சோக சம்பவமாக இருக்கக்கூடும்? (பி) 1 கொரிந்தியர் 9:24-ல் பவுல் என்ன புத்திமதியை கொடுத்தான்? கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அது எவ்விதமாக பொருந்தியது?
பன்னிரண்டு ஆண்டு கால கடுமையான பயிற்சியின் மகத்தான உச்சக்கட்டமாக அது இருந்திருக்க வேண்டும். ஆனால் ஓட்டப்பந்தயத்தின் பாதி வழியில் அந்த இளம் பெண் தவறி கீழே விழந்துவிட்டாள். ஒலிம்பிக் தங்க பதக்கத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவளுடைய கனவு அப்படியே கலைந்துவிட்டது. அவள் தவறி கீழே விழுந்ததை செய்தித்துறை “சோக சம்பவம்” என்பதாக அழைத்தது.
2 என்றபோதிலும் யெகோவாவின் ஒரு சாட்சி, ஜீவனுக்கான ஓட்டத்தை முடிக்க தவறுவதோ ஒரு மாபெரும் சோக சம்பவமாக இருக்கும். விசேஷமாக வாக்குப் பண்ணப்பட்ட புதிய ஒழுங்கு இத்தனை அருகாமையில் இருப்பதன் காரணமாக இது இவ்விதமாக இருக்கும். (2 பேதுரு 3:13) அப்படியென்றால் அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு சொன்னது பொருத்தமாகவே இருக்கிறது: “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.” (1 கொரிந்தியர் 9:24) பூர்வ கொரிந்துவிலிருந்த சிலர் அதை இழந்துவிடும் அபாயத்திலிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் தாங்கள் விரும்பியபடியெல்லாம் செய்துக் கொண்டிருந்தார்கள். “மற்றவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துவதை” குறித்தும்கூட அவர்கள் கவலைப்படாதிருந்தார்கள். (1 கொரிந்தியர் 8:1-4; 10-12) ஆனால் பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கோ, தியாகங்களைச் செய்வது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஏனென்றால் பவுல் இவ்விதமாகச் சொன்னான்: “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள் . . . மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”—1 கொரிந்தியர் 9:25-27.
3. (எ) கிறிஸ்தவர்கள் பந்தயத்தை முடிப்பதை தடை செய்யக்கூடிய என்ன நிலைமை கொலோசெயுவில் இருந்தது? (பி) கொலோசெயுவில் இருந்த கிறிஸ்தவர்கள் தத்துவத்தையும் மறை மெய்மை கோட்பாட்டையும் படிப்பது பொருத்தமானதாக இருந்ததா?
3 பின்னால், கொலோசெயருக்கு எழுதுகையில், பவுல் மற்றொரு சாத்தியமான அபாயத்தைக் குறித்து—பந்தயப் பொருளை இழந்து போகும்படி செய்யக்கூடிய மனுஷர்களைக் குறித்து—எச்சரித்தான். (கொலோசெயர் 2:18) ஆகவே கிறிஸ்தவர்கள் எவ்விதமாக அதை ‘பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓட’ முடியும்? பொய் போதகர்களோடு வெற்றிகரமாக விவாதிப்பதற்காக அவர்கள் தத்துவங்களையும் புராணங்களையும் படிக்க வேண்டும் என்பதாக அப்போஸ்தலன் யோசனை தெரிவித்தானா? இல்லை. ஏனென்றால் கிறிஸ்தவர்கள் “உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்துவிட்டி”ருந்தார்கள். ஆகவே அவர்கள் தத்துவங்களிலும் பாரம்பரியங்களிலும் ஈடுபாடுள்ளவர்களாக இருக்க முடியாது.—கொலோசெயர் 2:20.
4. “திருத்தமான அறிவை” பெற்றுக்கொள்வது கொலோசெயுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு எவ்விதமாக உதவி செய்திருக்கும்?
4 ஆகவே பவுல் தன்னுடைய உடன் விசுவாசிகளை “எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய [கடவுளுடைய] சித்தத்தை அறிகிற அறிவினாலே [திருத்தமான அறிவினாலே, NW] நிரப்பப்படுவதில் அவர்களுடைய முயற்சிகளை ஒருமுகப்படுத்தும்படியாக உற்சாகப்படுத்தினான். ஆம், வீணான கற்பனைக் கருத்துக்கள் அல்ல, ஆனால் “திருத்தமான அறிவே” யெகோவாவுக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துக்”கொள்ள அவர்களுக்கு உதவி செய்யும். (கொலோசெயர் 1:9, 10; கொலோசெயர் 3:10-ம் கூட பார்க்கவும்) உண்மைதான், கொலோசெயுவிலிருந்த பெரும்பாலான கிறிஸ்தவர்களால் வேதவசனங்களின் அடிப்படைப் போதகங்களை மனப்பாடமாக சொல்ல முடிந்தது. ஆனால் படிப்பதன் மூலமும் தியானிப்பதன் மூலமும் அவர்கள் அடிப்படையானவற்றிற்கும் அதிகமாக சென்று கிறிஸ்துவின் அஸ்திபாரத்தின் மேல் உறுதியாக நிலைக்கொண்டவர்களாய் இருப்பது அவசியமாக இருந்தது. (கொலோசெயர் 1:23; 1 கொரிந்தியர் 3:11) இத்தனை ஆழத்தை அடைந்தபிறகு ‘ஒருவனும் நயவசனிப்பினாலே அவர்களை வஞ்சிக்க’ முடியாது. (கொலோசெயர் 2:4) கடவுளுடைய வார்த்தையை திறமையோடு பயன்படுத்துவதன்மூலம், தேவதூதர்களை வணங்குபவர்களின் அல்லது யூதேய மதத்துக்கு மதம் மாற்றிக் கொண்டிருப்பவர்களின் உரிமைப் பாராட்டல்களை தவறென்று காண்பிக்க முடியும்.—உபாகமம் 6:13; எரேமியா 31:31-34.
5. (எ) முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவன் அறிந்தும் புரிந்தும் கொண்டிருக்க வேண்டிய சில “ஆழமான” காரியங்கள் யாவை? (பி) “திருத்தமான அறிவை” எடுத்துக் கொள்ளாமலிருப்பது ஆபத்தானது என்பதை ஒரு சகோதரியின் அனுபவம் எவ்விதமாக காட்டுகிறது?
5 ஆனால் நீங்கள் “மூல உபதேசங்களுக்கும்” அதிகமாக சென்று “தேவனுடைய ஆழங்களை” ஆராய்ந்திருக்கிறீர்களா? (எபிரெயர் 6:1; 1 கொரிந்தியர் 2:10) உதாரணமாக வெளிப்படுத்தின விசேஷத்தின் மிருகங்களை உங்களால் அடையாளங் காட்ட முடியுமா? அல்லது ஆவிக்குரிய ஆலயம் எது என்பதை விளக்க முடியுமா? (வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 13; எபிரெயர் 9:11) யெகோவாவின் சாட்சிகளுடைய நவீன நாளைய அமைப்பின் வேதப்பூர்வமான ஆதாரத்தை உங்களால் விளக்க முடியுமா? பைபிள் கோட்பாட்டில் நீங்கள் உறுதியாக நிலைநாட்டப்பட்டவர்களாக இருக்கிறீர்களா? ஒரு கிறிஸ்தவ சகோதரி ஒரு பெண்ணிடம் திருத்துவத்தைப் பற்றி பேசுகையில், தன்னுடைய நம்பிக்கையை விளக்குவது கடினமாக இருப்பதாக உணர்ந்தாள். பின்னால் அந்த பெண், யெகோவாவின் அமைப்பின் மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்திய ஒரு பிரசுரத்தை நம்முடைய சகோதரிக்கு கொடுத்தாள். “ஆவிக்குரிய விதத்தில் நான் மிகவும் சோர்வடைந்து போனேன்” என்று இந்த சாட்சி அந்த சமயத்தை நினைவுபடுத்தி சொல்லுகிறாள். நல்ல வேளையாக, எதிராளிகளின் பொய்க் குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தி ஒரு மூப்பர் நம்முடைய சகோதரியின் விசுவாசத்தை காப்பாற்றினார். (யூதா 22, 23) “சங்கம் ஏன் எல்லா சமயத்திலும் ஜெபியுங்கள், படியுங்கள், தியானம் செய்யுங்கள் என்று சொல்லுகிறது என்பது இப்பொழுது எனக்கு புரிகிறது,” என்பதாக அவள் சொல்லுகிறாள்.
“மனுஷனுக்குப் பயப்படும் பயம்”
6. (எ) கடவுளின் ஊழியக்காரர்களில் சிலருக்கு எது இடறல் கல்லாக இருந்திருக்கிறது? வேதபூர்வமான சில உதாரணங்களை கொடுங்கள். (பி) அநேகமாக எது மனுஷனுக்கு பயப்படச் செய்திருக்கிறது?
6 “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” என்பதாக ஞானவான் எச்சரித்தான். (நீதிமொழிகள் 29:25) சில சமயங்களில் ஆரோக்கியமற்ற ஒரு “மரண பயத்தினால்” அல்லது மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு மட்டுக்கு மீறிய ஆசையினால், ஒரு நபர் இந்த கண்ணியினுள் வீழ்ந்துவிடுகிறார். (எபிரெயர் 2:14, 15) ஒரு சமயம் எலியா, பாகால் வணக்கத்தாருக்கு எதிராக தைரியமாக நடவடிக்கை எடுத்தான். ஆனால் யேசபேல் ராணி, அவனுக்கு மரண தண்டனையை விதித்தபோது, அவன் பயந்து “தன் பிராணனைக் காக்க பெயெர்செபாவுக்கு போய்விட்டான்.” (1 இராஜாக்கள் 1:1-3) இயேசு கைது செய்யப்பட்ட அன்றிரவு அதேவிதமாகவே அப்போஸ்தலனாகிய பேதுருவும் மனுஷனுக்கு பயப்படும் பயத்தினால் மேற்கொள்ளப்பட்டான். “ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர ஆயத்தமாயிருக்கிறேன்” என்று பேதுரு பெருமிதமாக சொல்லியிருந்த போதிலும், கிறிஸ்துவின் சீஷர்களில் இவனும் ஒருவன் என்பதாக இவனைக் குறித்து சொல்லப்பட்டபோது “‘அந்த மனுஷனை அறியேன்’ என்று சொல்லி சபிக்கவும் சத்தியம் பண்ணவும் தொடங்கினான்.”—லூக்கா 22:33; மத்தேயு 26:74.
7. (எ) கொலோசெயுவிலிருந்த சிலர், கிறிஸ்தவத்தை யூதேய மதத்தோடு ஒருங்கிணைக்க முயன்றதற்கு உண்மையான காரணம் என்னவாக இருந்திருக்க வேண்டும்? (பி) இன்று யார் அதே போல தூண்டப்பட்டவர்களாக காணப்படுகிறார்கள்?
7 மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற பயத்தோடுகூடிய ஓர் ஆசையே, கிறிஸ்தவ மதத்தை யூதேய மதத்தோடு இணைக்க சிலர் முயற்சித்ததற்கு உண்மையான காரணமாக இருந்திருக்க வேண்டும். யூதேய மதத்தவர் கலாத்தியாவில் எழும்பியபோது பவுல் அவர்களுடைய மாய்மாலத்தை இவ்விதமாக வெளிப்படுத்தினான்: “மாம்சத்தின்படி நல்வேஷமாய் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம் பண்ணுகிறார்கள்.” (கலாத்தியர் 6:12) யெகோவாவின் அமைப்பை விட்டு சமீபத்தில் வெளியேறியிருப்பவர்களையும் அவ்விதமாகச் செய்யத் தூண்டியது யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற அதே போன்ற ஆசையாக இருக்கக்கூடுமா?
8, 9. (எ) ஒரு கிறிஸ்தவன் இன்று மனுஷனுக்கு பயப்படுகிற பயத்தை எவ்விதமாக விளங்கப் பண்ணக்கூடும்? (பி) இந்த பயம் எவ்விதமாக மேற்கொள்ளப்பட முடியும்?
8 கிறிஸ்தவர்கள் இத்தகைய பயங்களை மேற்கொள்ள உழைக்க வேண்டும். உங்களுடைய வீட்டின் அருகேயுள்ள பிராந்தியத்தில் பிரசங்கிக்கவோ அல்லது உறவினர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களுக்கு, சக பள்ளி மாணவர்களுக்கு சாட்சி கொடுக்கவோ நீங்கள் தயங்கினால் ஏசாயா 51:12-ல் யெகோவா கேட்கும் கேள்வியை நினைவுக்கு கொண்டு வந்து பாருங்கள்: “சாகப் போகிற மனுஷனுக்கும் புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கு நீ யார்?” (மத்தேயு 10:28-ஐ ஒப்பிடவும்) “யெகோவாவை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்,” என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 29:25) பேதுரு மனுஷனுக்கு பயப்படுகிற இந்த பயத்தை மேற்கொண்டு கடைசியாக ஒரு தியாக மரணத்தை அடைந்தான். (யோவான் 21:18, 19) அநேக சகோதரர்கள் இன்று அதே விதமாக தைரியத்தை காண்பிக்கிறார்கள்.
9 பிரசங்க வேலை தடை செய்யப்பட்டுள்ள ஒரு தேசத்தில் ஊழியஞ் செய்யும் ஒரு மிஷனெரி இவ்விதமாகச் சொன்னார்: “நீங்கள் காவல் துறையினரால் கைது செய்யப்படுவீர்கள் என்பதை அறிந்திருக்கும்போது ஒரு கூட்டத்துக்கு போவதற்கோ அல்லது ஊழியத்துக்கு போவதற்கோ விசுவாசம் அவசியமாக இருக்கிறது.” ஆனால் சங்கீதக்காரனைப் போலவே அங்குள்ள சகோதரர்கள், யெகோவா என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?” என்று சொன்னார்கள். (சங்கீதம் 118:6) அந்த தேசத்தில் ஊழியம் அதிகமான பலன்களை தந்தது. சமீபத்தில் சட்டப்படி அங்கு அனுமதியும் கிடைத்திருக்கிறது. வெளி ஊழியத்தில் தவறாமல் பங்குகொள்வது, யெகோவாவில் அதே போன்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்யும்.
குடும்ப பிணைப்புகள்
10. (எ) அனைவருக்கும் உணர்ச்சி சம்பந்தமாக என்ன தேவை இருக்கிறது? அது பொதுவாக எவ்விதமாக பூர்த்தி செய்யப்படுகிறது? (பி) யெகோவாவோடு கொண்டிருந்த உறவைக் காட்டிலும் தங்களுடைய மனைவிகளோடு பலமான பிணைப்புகளைக் கொண்டிருந்த ஆண்களின் பைபிள் உதாரணங்களைக் கொடுங்கள்.
10 தனி மனிதன், விவாகம் மற்றும் குடும்பம் என்ற தலைப்புள்ள ஒரு புத்தகம் இவ்விதமாகச் சொல்லுகிறது: “எல்லா சமுதாயங்களிலும் சமுதாயத்தின் எல்லா பிரிவுகளிலுமுள்ள தனி நபரின் முழு மொத்தமான தேவை, ஒருவருக்குரியவராக இருப்பதும், தனக்குரியவராக இருக்கும் தனிச்சிறப்பான மற்றொருவரை கொண்டிருப்பதுமாகும்.” இந்த தேவையானது பொதுவாக குடும்ப ஏற்பாட்டின் மூலமாக பூர்த்தி செய்யப்படுகிறது. இது யெகோவாவின் ஏற்பாடாக இருக்கிறது. (எபேசியர் 3:14, 15) ஆனால் சாத்தான் அநேகமாக குடும்ப அங்கத்தினர்களிடமாக நமக்குள்ள பாசத்தை அவனுடைய நலனிற்காக பயன்படுத்திக் கொள்கிறான். ஆதாமுக்கு, அவனுடைய மனைவியினிடமாக இருந்த பலமான ஆசையே, பின்விளைவுகளை அசட்டை செய்து கலகத்தில் அவளோடு சேர்ந்துகொள்ள அவனை தூண்டியது. (1 தீமோத்தேயு 2:14) சாலொமோனைப் பற்றி என்ன? அவனுக்கு பிரசித்திப் பெற்ற ஞானம் இருந்தபோதிலும், “வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம், தன் தேவனாகிய யெகோவாவோடே உத்தமமாயிருக்கவில்லை . . . சாலொமோன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.”—1 இராஜாக்கள் 11:4-6.
11. ஏலி எவ்விதமாக யெகோவாவைவிட அவனுடைய குமாரர்களை அதிகமாக கனம் பண்ணினான்?
11 இஸ்ரவேலின் பிரதான ஆசாரியனாகிய, வயதுசென்ற ஏலியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவனுடைய குமாரர்களான ஒப்னியும் பினெகாஸும் “பேலியாளின் மக்களாயிருந்தார்கள்.” அவர்கள் “யெகோவாவை அறியவில்லை.” அவர்கள் யெகோவாவுக்கு செலுத்தப்பட்ட பலிகளுக்கு துணிச்சலாக அவமரியாதையை காண்பித்து “ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே” ஒழுக்கயீனமான காரியங்களை நடப்பித்தார்கள். ஆனால் ஏலி அதற்கு மிகவும் பொறுமையாக அமரிக்கையான ஆட்சேபனையையே தெரிவித்தான். (“நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன?”) அதே சமயத்தில் சிலாக்கியமான அந்த பணியிலிருந்து அவர்களை நீக்கிவிட அவன் எவ்விதத்திலும் முயற்சி செய்யவில்லை. உண்மையில் அவன் யெகோவாவைவிட தன்னுடைய குமாரர்களையே அதிகமாக கனம் பண்ணிக் கொண்டிருந்தான். இதன் விளைவாக அவனும் அவனுடைய குமாரர்களும் மரித்துப் போனார்கள்.—1 சாமுவேல் 2:12-17, 22, 23, 29-34; 4:18.
12. (எ) குடும்ப பிணைப்புகளின் சம்பந்தமாக இயேசு என்ன எச்சரிப்பைக் கொடுத்தார்? (பி) உறவினர்கள் என்று வரும் போது சிலர் எவ்விதமாக உலகப்பிரகாரமாக விவாதிக்கக்கூடும்? வேதப் பூர்வமாக இது சரியாக இருக்கிறதா?
12 ஆகவே தவறான பற்றுறுதிகள், ஜீவனுக்கான உங்களுடைய ஓட்டத்தில் தடையாக இருக்கக்கூடும். இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்விதமாகச் சொன்னார்: “தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” (மத்தேயு 10:37; லூக்கா 14:26) ஆனால் நேசமான ஒருவர் சத்தியத்தை விட்டு போய்விட்டாலோ அல்லது சபைநீக்கம் செய்யப்பட்டாலோ என்ன? தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்ற உலகப்பிரகாரமான கருத்தினபடி, நீங்கள் அழிவுக்குள் அந்த உறவினரை பின்தொடர்ந்து செல்வீர்களா? அல்லது “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும் யெகோவா என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்,” என்று சங்கீதம் 27:10-லுள்ள வார்த்தைகளில் விசுவாசம் வைப்பீர்களா?
13. கோராகின் குமாரர்கள் எவ்விதமாக யெகோவாவுக்கு தங்களுடைய உண்மைத் தவறாமையை நிரூபித்தார்கள்? இதற்காக அவர்கள் எவ்விதமாக ஆசீர்வதிக்கப்பட்டார்கள்?
13 கோராகுவின் குமாரர்களுக்கு இந்த விசுவாசம் இருந்தது. அவர்களுடைய தகப்பன் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக கலகஞ்செய்ய கூட்டத்தை கூட்டினான். கோராகுவையும் அவனோடுகூட சதிசெய்தவர்களையும் அழிப்பதன் மூலம், யெகோவா தாம் மோசேயோடும் ஆரோனோடும் இருப்பதை மனதில் பதிகிற விதத்தில் நிரூபித்தார். ஆனாலும், “கோராகின் குமாரரோ சாகவில்லை.” (எண்ணாகமம் 16:1-3, 28-32; 26:9-11) அவர்கள் கலகத்தில் தங்களுடைய தகப்பனோடு சேர்ந்துக்கொள்ள மறுத்தார்கள். யெகோவா அவர்களை உயிரோடே வைப்பதன் மூலம் அவர்களுடைய உண்மைத் தவறாமையை ஆசீர்வதித்தார். அவர்களுடைய சந்ததியார், பின்னால் பைபிளின் சில பகுதிகளை எழுதும் சிலாக்கியத்தையும் பெற்றுக் கொண்டார்கள்!—சங்கீதங்கள் 42, 44-49, 84, 85, 87, 88-ன் மேல் எழுதப்பட்டுள்ளதை பார்க்கவும்.
14. உறவினர்களிடம் உண்மைத் தவறாதிப்பதைக் காட்டிலும், யெகோவாவிடம் உண்மைத் தவறாதிருப்பதற்கே முதலிடம் கொடுப்பதால் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன என்பதை என்ன அனுபவம் விளக்குகிறது?
14 அதுபோன்று இன்றும் உண்மைத் தவறாமை ஆசீர்வாதங்களில் விளைவடைகிறது. ஒரு கிறிஸ்தவப் பெண்ணாக நீண்டகாலமாக செயலற்றவளாக இருந்த தங்களுடைய தாய், ஒழுக்கக் கேடான முறையில் ஒரு விவாகத்தை செய்துகொண்டபோது, ஓர் இளம் சாட்சியும் அவனுடைய சகோதரர்களும் எடுத்த நிலைநிற்கையை அந்த இளம் சாட்சி நினைவுபடுத்துகிறான்: “நாங்கள் காரியங்களை மூப்பர்களிடம் எடுத்து சொன்னோம். அவள் எங்களோடு இல்லாததன் காரணமாக, மூப்பர்கள் இந்த காரியங்களை கையாளும் வரையாக எங்களுடைய கூட்டுறவை குறைத்துக்கொள்ள தீர்மானித்தோம். அவ்விதமாகச் செய்வது மிகவும் கடினமான ஒரு காரியமாக எங்களுக்கு இருந்தது” என்பதாக அவன் சொன்னான். தாயோ, “என்னைவிட உங்களுக்கு நித்திய ஜீவன்தான் அதிக முக்கியமானதாகிவிட்டதா?“ என்பதாக எதிர்த்தாள். இதற்கு அவர்கள் “யெகோவாவோடு எங்களுடைய உறவு எதையும்விட அதிக முக்கிமானதாக இருக்கிறது” என்று பதிலளித்தார்கள். இது அவளை திடுக்கிடச் செய்தது. உண்மையாக மனந்திரும்ப இது அவளை வழிநடத்தியது. அவள் ஆவிக்குரிய நிலைமைக்கு திரும்ப மீட்டுக் கொள்ளப்பட்டாள். இப்பொழுது மறுபடியுமாக அவள் நற்செய்தியின் சுறுசுறுப்பான ஒரு பிரஸ்தாபியாக இருந்து வருகிறாள்.
15 (எ) சில பெற்றோர்கள் எவ்விதமாக தங்களுடைய சொந்த பிள்ளைகளை இடறல் கற்களாக இருக்கும்படியாக அனுமதித்திருக்கிறார்கள்? (பி) பெற்றோர் எவ்விதமாக ஜீவனின் பரிசைப் பெற்றுக்கொள்ள தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் உதவி செய்து கொள்ளலாம்?
15 சிலர் தங்களுடைய சொந்த பிள்ளைகள் இடறல் கற்களாக இருக்க அனுமதித்திருக்கிறார்கள். பிள்ளைகளின் “நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கிறது” என்பதை உணர தவறும் சில பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை உலகப் பிரகாரமான ஆட்களோடு நெருக்கமாக கூட்டுறவுகொள்ளவும், வேண்டாத சமூக விவகாரங்களுக்குச் செல்லவும் விவாக வயதை எட்டுவதற்கு முன்பாகவே காதல் சந்திப்புகளைக் கொண்டிருக்கவும்கூட அனுமதித்திருக்கிறார்கள். (நீதிமொழிகள் 22:15) கட்டுப்பாடில்லாமல் விட்டுவிடுவதால் வரும் பின்விளைவுகள் அநேகமாக என்னவாக இருக்கின்றன? ஆவிக்குரிய கப்பற் சேதம். (1 தீமோத்தேயு 1:19) சிலர் தங்களுடைய பிள்ளைகளின் தவறுகளை மூடி மறைப்பதன் மூலமாக அதில் ஒத்திணங்கிப் போய்விட்டிருக்கிறார்கள். (நீதிமொழிகள் 3:32; 28:13) ஆனால் பைபிள் நியமங்களின்படி உண்மையுடன் வாழ்வதால், பெற்றோர் ஜீவனின் பரிசை பெற்றுக்கொள்ள தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் உதவி செய்கிறார்கள்.—1 தீமோத்தேயு 4:16.
உங்களுடைய நண்பர்கள்—ஞானிகளா அல்லது மூடர்களா?
16. (எ) நம்முடைய நண்பர்கள் எவ்விதமாக நம்மீது பலமான செல்வாக்கை செலுத்துகிறவர்களாக இருக்கக்கூடும்? (பி) நண்பர்களில் செல்வாக்கினால் குறிப்பாக யார் எளிதில் பணிந்துவிடுகிறவர்களாக இருக்கிறார்கள்? ஏன்?
16 சமூகவியல்: மனித சமுதாயம் என்ற ஆங்கில புத்தகம் இவ்விதமாக குறிப்பிடுகிறது: “ஒருவரின் நெருங்கிய நண்பர்களால் உயர்வாக மதிக்கப்பட வேண்டும் என்ற ஆசை, அவர்களுடைய தராதரங்களை பின்பற்றும்படியாக பலமான ஒரு அழுத்தத்தைக் கொண்டு வருகிறது.” குறிப்பாக இளைஞர்கள் இந்த அழுத்தத்துக்கு எளிதில் பணிந்துவிடுகிறார்கள் என்பதாக வளரிளமைப் பருவம் என்ற ஆங்கில புத்தகம் காண்பிக்கிறது. அது இவ்விதமாகச் சொல்லுகிறது: “[இது ஏனென்றால்] அவர்கள் தங்களுடைய சரீரங்களிலும், சொந்த கருத்துக்களிலும் அவர்களுடைய குடும்பங்களோடு கொண்டுள்ள உறவுகளிலும் மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். இதன் காரணமாக, பருவ வயதினர் தங்களுடைய குடும்பங்களோடு செலவிடும் நேரத்தைக் காட்டிலும் நண்பர்களுடனே அதிகமான நேரத்தை செலவிட ஆரம்பிக்கிறார்கள்.”
17. (எ) நீதிமொழிகள் 13:20-லுள்ள வார்த்தைகளின் உண்மையை விளக்கவும். (பி) என்ன விதமான நண்பர்கள் “ஞானமுள்ள”வர்களாக கருதப்படலாம்? (சி) இன்று எவ்விதமாக இளைஞர்கள் இளைஞனான சாமுவேலின் முன்மாதிரியை பின்பற்றக்கூடும்?
17 நீதிமொழிகள் 13:20-லுள்ள வார்த்தைகளை நாம் கவனிக்க தவறக்கூடாது: “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.” ஒரு கிறிஸ்தவ பெண் இவ்விதமாகச் சொன்னாள்: “என்னுடைய பள்ளியிலுள்ள எல்லா கெட்ட கூட்டுறவுகளும் என்னை பாதிக்க ஆரம்பித்திருக்கின்றன. இன்று பள்ளியில் என்னையறியாமலே ஒரு கெட்ட வார்த்தை என் வாயிலிருந்து வந்துவிட்டது . . . நான் அதை சொல்லியேவிட்டேன், ஆனால் நான் அவ்விதமாக நினைக்கவில்லை.” சில கிறிஸ்தவ இளைஞர்கள், நண்பர்களென அழைக்கப்பட்டவர்களால் மிகவும் வினைமையான ஒழுக்கக் கேடான நடத்தைக்குள் வழிநடத்தப்பட்டிருப்பது வருத்தத்தை தருவதாக இருக்கிறது. ஆனால் பந்தயப் பொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையையுடைய ஒரு இளைஞராக நீங்கள் இருப்பீர்களேயானால்—ஆவிக்குரிய மனதுள்ளவர்களும், அவர்களுடைய நடத்தையில் நேர்மையாகவும் அவர்களுடைய பேச்சில் கட்டியெழுப்புகிறவர்களாகவும் இருக்கும் ஞானமான நண்பர்களை தேடி கண்டுபிடியுங்கள். இளைஞனான சாமுவேல் ஏலியின் கெட்ட குமாரர்களோடு கூட்டுறவுக் கொள்ளவில்லை என்பது நினைவில் இருக்கட்டும். அவன் “யெகோவாவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருப்பதில்“ சுறுசுறுப்பாக இருந்தான். ஆகவே அவர்களுடைய ஒழுக்கக் கேட்டினால் அவன் கறைப்படாதவனாக இருந்தான்.—1 சாமுவேல் 3:1.
பந்தயப் பொருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
18. (எ) சகோதரர்களில் சிலர் எவ்விதமாக அறியாமல், ஜீவனுக்கான நம்முடைய பந்தயத்தில் நம்மை தடை செய்யக்கூடும்? (பி) இவ்விதமாக ஆரோக்கியமற்ற செல்வாக்கிலிருந்து எது நம்மை பாதுகாக்கக்கூடும்?
18 அப்படியானால்,, பந்தயப் பொருளாகிய ஜீவனை நீங்கள் இழந்துபோகும்படி செய்யக்கூடிய எவரையும் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். நிச்சயமாகவே இது உங்களுடைய சகோதரர்களை சந்தேகத்தோடு பார்க்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துவது கிடையாது. சில சமயங்களில் அறியாமல், சில சகோதரர்கள் உங்களை உற்சாகமிழக்கும்படி செய்யக்கூடிய காரியங்களை சொல்லக்கூடும். (‘நீங்கள் ஏன் உங்களை வருத்திக் கொண்டிருக்கிறீர்கள்? ஜீவனைப் பெறப் போவது நீங்கள் மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?’) உண்மை மனதுடன் நீங்கள் செய்யும் முயற்சிகளையும்கூட அவர்கள் கடுமையாக விமர்சிக்கலாம். (‘ஒரு குடும்பத்தை வைத்துக்கொண்டு எவ்விதமாக உங்களால் பயனியர் ஊழியத்தை செய்ய முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டியதை செய்யவில்லை.’) காரியங்களை சுலபமாக எடுத்துக் கொள்ளும்படியாக பேதுரு சொன்னபோது, இயேசு அதை தள்ளிவிட்டதை நினைவுபடுத்திப் பாருங்கள். (மத்தேயு 16:22, 23) “வார்த்தைகளைச் சோதித்துப்” பார்ப்பதற்கு பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட உங்களுடைய காதுகளை பயன்படுத்துங்கள். உண்மையாக இல்லாதவை உங்களை பாதிக்க அனுமதியாதேயுங்கள். (யோபு 12:11) பவுல் பின்வருமாறு சொன்னது நினைவிருக்கட்டும்: “ஒருவன் மல்யுத்தம் பண்ணினாலும் சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.” (2 தீமோத்தேயு 2:5) ஆம் வேத ஆதாரமற்ற கருத்துக்கள் அல்ல, கடவுளுடைய “சட்டங்களே” உங்களுடைய சிந்தனைகளை வழிநடத்த வேண்டும்.—1 கொரிந்தியர் 4:3, 4-ஐ ஒப்பிடவும்.
19, 20. (எ) யோசேப்பின் சகோதரர்கள் எவ்விதமாக அவனுக்கு தீங்குசெய்ய நினைத்தார்கள்? அவர்களுடைய தயவற்ற செயலுக்கு யோசேப்பு எவ்விதமாக பிரதிபலித்தான்? (பி) அபூரணமான மனிதர்களால் இடறலடைவதை நாம் எவ்விதமாக தவிர்க்கலாம்? (சி) பந்தயப் பொருளின் சம்பந்தமாக நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்? ஏன்?
19 உண்மைதான், சில சமயங்களில் ஒரு உடன் கிறிஸ்தவன், ஆராயாமல், உங்களிடம் ‘பட்டயத்தினால் குத்துவது’போல பேசிவிடக்கூடும். (நீதிமொழிகள் 12:18) இது ஜீவனுக்கான ஓட்டத்திலிருந்து உங்களை விலகிப் போகச் செய்ய அனுமதியாதீர்கள். யோசேப்பை நினைவுபடுத்திப் பாருங்கள். அவனுடைய சொந்த சகோதரர்களே அவனை கொலைசெய்ய எண்ணினார்கள். ஆனால் அவர்கள் அதைச் செய்யாவிட்டாலும், கடைசியாக அவனை ஒரு அடிமையாக விற்றுப் போட்டார்கள். ஆனால் யோசேப்போ, இது அவனை பகைத்துக் கொள்ளவோ ‘யெகோவாவுக்கு விரோதமாய்த் தாங்கலடையவோ’ செய்ய அனுமதிக்கவில்லை. (நீதிமொழிகள் 19:3) பழிவாங்குவதற்கு பதிலாக அவன் மாறுதலான ஒரு மனநிலையை காண்பிப்பதற்கு அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுத்தான். அவர்கள் மனந்திரும்பியதைக் கண்டபோது அவன் “தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான்.” பின்னால் யாக்கோபு சொன்ன விதமாகவே, “வில்வீரர் [பொறாமைக் கொண்ட யோசேப்பின் சகோதரர்கள்] அவனை மனமடிவாக்கி, அவன் மேல் ஏய்து அவனைப் பகைத்தார்கள்.” ஆனாலும் யோசேப்பு அவர்களுடைய பகைமைக்கு பதிலாக தயவை காண்பித்தான். இந்த அனுபவத்தால் பலமிழந்து போவதற்கு பதிலாக அவனுடைய “கரங்கள் பலத்தன.”—ஆதியாகமம் 37:18-28; 44:15-45:15; 49:23, 24.
20 அபூரணமான மனிதர்களால் இடறலடைவதற்கு பதிலாக பந்தயப் பொருளைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக ஓடிக் கொண்டே இருங்கள். யோசேப்பைப் போல, சோதனையான சம்பவங்கள் உங்களை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக அவை உங்களை பலப்படுத்தட்டும். எந்த மனிதனும் உங்களுக்கு ஒரு இடறல் கல்லாகிவிடாதபடிக்கு, யெகோவாவிடமுள்ள உங்களுடைய அன்பு அத்தனை பலமுள்ளதாக நிரூபிக்கட்டும். (சங்கீதம் 119:165) விவரிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் அப்பாற்பட்ட பரிசாகிய நித்திய ஜீவன் என்ற பரிசை யெகோவா அளிக்கிறார் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். எந்த மனுஷனும், நீங்கள் அதை இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். (w85 7/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ திருத்தமான அறிவு கிறிஸ்தவர்களுக்கு ஏன் அத்தனை மதிப்புள்ளதாக இருக்கிறது?
◻ ஜீவனை பெற்றுக்கொள்வதில் சிலருக்கு தடையாக இருந்திருக்கும் மனுஷனைப் பற்றிய பயத்தை ஒருவர் எவ்விதமாக மேற்கொள்ளலாம்?
◻ ஒருவருடைய சொந்த குடும்பம்தானே எவ்விதமாக இடறல் கல்லாக இருக்கக்கூடும்?
◻ உடன் கிறிஸ்தவர்களின் உற்சாகமிழக்கச் செய்யும் அல்லது புண்படுத்தும் வார்த்தைகளுக்கு ஒரு கிறிஸ்தவன் எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும்?
[பக்கம் 11-ன் படம்]
நம்முடைய மனதுகளையும் இருதயங்களையும் திருத்தமான அறிவால் நிறப்புவதன் மூலம், தவறான கருத்துகளை எதிர்த்து வாதாட நாம் ஆயத்தமாக இருக்கலாம்
[பக்கம் 13-ன் படம்]
பேதுரு மனுஷனுக்கு பயப்படுகிற பயத்தின் காரணமாக இயேசுவை மறுதலித்தான். பின்னால் இந்த அப்போஸ்தலன் இத்தகைய பயத்தை மேற்கொண்டான். எல்லா கிறிஸ்தவர்களும் அவ்வாறே செய்யவேண்டும்.