‘யெகோவாவுடைய சிந்தையை அறிந்தவன் யார்?’
“‘யெகோவாவுக்கு அறிவுரை கொடுக்கும்படி அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?’ நமக்கோ கிறிஸ்துவின் சிந்தை இருக்கிறது.”—1 கொ. 2:16.
1, 2. (அ) அநேகருக்குக் கடினமாகத் தெரிகிற ஒரு விஷயம் என்ன? (ஆ) யெகோவாவின் சிந்தையோடு நம் சிந்தையை ஒப்பிடுகையில் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
மற்றொருவர் சிந்திக்கும் விதத்தைப் புரிந்துகொள்வது உங்களுக்கு எப்போதாவது கடினமாக இருந்திருக்கிறதா? ஒருவேளை, உங்களுக்கு இப்போதுதான் கல்யாணமாகியிருக்கிறது என்றால், துணையின் மனதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லையே என நீங்கள் யோசிக்கலாம். உண்மைதான், ஆணும் பெண்ணும் சிந்திக்கும் விதத்தில் மட்டுமல்ல, பேசும் விதத்திலும் வித்தியாசப்படுகிறார்கள். ஏன், சில கலாச்சாரங்களில் ஒரே மொழி பேசுகிற ஆணும் பெண்ணும்கூட வார்த்தைகளை வித்தியாசமாக உச்சரிக்கிறார்கள்! அதுமட்டுமல்லாமல், மொழியும் கலாச்சாரமும் வேறுபடும்போது சிந்திக்கும் விதமும், நடந்துகொள்ளும் விதமும் வித்தியாசப்படலாம். என்றாலும், மற்றவர்களிடம் பழகப் பழகத்தான் அவர்கள் சிந்திக்கும் விதத்தை நீங்கள் அதிகமாகப் புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள்.
2 யெகோவா சிந்திக்கும் விதத்திற்கும் நாம் சிந்திக்கும் விதத்திற்கும் பெரும் வித்தியாசம் இருப்பதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா இஸ்ரவேலரிடம் இப்படிச் சொன்னார்: “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்ல.” பிறகு, இதை இவ்வாறு விளக்கினார்: “பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.”—ஏசா. 55:8, 9.
3. ‘யெகோவாவோடு அன்புறவு’ வைத்துக்கொள்வதற்கான இரண்டு வழிகள் யாவை?
3 அப்படியானால், யெகோவாவின் சிந்தையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்யவே கூடாது என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. யெகோவாவின் சிந்தையை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவரோடு “அன்புறவு” வைத்துக்கொள்ளும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (சங்கீதம் 25:14-ஐயும் நீதிமொழிகள் 3:32-ஐயும் வாசியுங்கள்.a) யெகோவாவோடு நெருங்கிய உறவு வைத்துக்கொள்வதற்கு ஒரு வழி, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள அவருடைய செயல்களை உயர்வாகக் கருதி அவற்றிற்குக் கவனம் செலுத்துவதாகும். (சங். 28:5) இன்னொரு வழி, ‘காணமுடியாத கடவுளுடைய சாயலாக இருக்கிற’ ‘கிறிஸ்துவின் சிந்தையை’ அறிந்துகொள்வதாகும். (1 கொ. 2:16; கொலோ. 1:15) பைபிள் பதிவுகளை ஆழ்ந்து படித்து அவற்றைத் தியானித்துப் பார்க்க நேரம் எடுத்துக்கொண்டால், யெகோவாவின் பண்புகளையும் அவர் சிந்திக்கும் விதத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
தவறான மனப்பான்மை—ஜாக்கிரதை
4, 5. (அ) நாம் தவிர்க்க வேண்டிய தவறான மனப்பான்மை என்ன? விளக்குங்கள். (ஆ) இஸ்ரவேலருக்கு இருந்த தவறான சிந்தை என்ன?
4 நாம் கடவுளுடைய செயல்களைத் தியானித்துப் பார்க்கும்போது மனித நெறிகளின்படி அவரை நியாயந்தீர்க்கும் மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும். இந்த மனப்பான்மையை யெகோவா இவ்வாறு சுட்டிக்காட்டுகிறார்: “நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்.” (சங். [திருப்பாடல்கள்] 50:21, பொ.மொ.) இது, 175-க்கும் மேலான வருடங்களுக்கு முன்பு பைபிள் அறிஞர் ஒருவர் பின்வருமாறு சொன்னதற்கு ஒப்பாக இருக்கிறது: “மனிதர் தங்களுடைய நெறிகளின்படி கடவுளை நியாயந்தீர்க்கும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். மேலும், தாங்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களுக்குக் கடவுளும் கட்டுப்பட்டிருக்கிறார் என நினைக்கிறார்கள்.”
5 யெகோவா இப்படிப்பட்டவர்தான் என்று நம்முடைய நெறிகளின்படியும் விருப்பங்களின்படியும் முடிவுகட்டிவிடாதவாறு கவனமாயிருக்க வேண்டும். இது ஏன் முக்கியம்? நம்முடைய கண்ணோட்டம் குறுகியதாக இருப்பதால் பைபிளைப் படிக்கும்போது யெகோவாவின் செயல்களில் சில நமக்குத் தவறாகத் தெரியலாம். பூர்வ இஸ்ரவேலருக்கும் இதுபோன்ற சிந்தை இருந்ததால் யெகோவாவின் வழிகளைக் குறித்துத் தவறான முடிவுக்கு வந்தார்கள். அவர்களிடம் யெகோவா என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள்: “நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது.”—எசே. 18:25.
6. யோபு எதைப் புரிந்துகொண்டார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
6 நம்முடைய நெறிகளின்படி யெகோவாவை நியாயந்தீர்க்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய வழி, நம்முடைய கண்ணோட்டம் குறுகியது என்பதையும் சில சமயங்களில் அது தவறாக இருக்கும் என்பதையும் அறிந்துகொள்வதாகும். யோபு இதைப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர் துன்பத்தில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் தன்னைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கிவிட்டார். முக்கிய விவாதங்களைப் பற்றி யோசிக்கத் தவறிவிட்டார். என்றாலும், தன்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள அவருக்கு யெகோவா அன்போடு உதவினார். அவரிடம் 70-க்கும் அதிகமான கேள்விகளைக் கேட்டார்; ஒரு கேள்விக்குக்கூட அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதன் மூலம், அவருடைய புரிந்துகொள்ளும் திறன் வரம்புக்குட்பட்டதாய் இருந்ததை யெகோவா அவருக்கு வலியுறுத்தினார். உடனே மனத்தாழ்மையோடு தன்னுடைய கண்ணோட்டத்தை அவர் மாற்றிக்கொண்டார்.—யோபு 42:1-6-ஐ வாசியுங்கள்.
‘கிறிஸ்துவின் சிந்தையை’ வளர்த்துக்கொள்ளுதல்
7. யெகோவாவின் சிந்தையைப் புரிந்துகொள்ள இயேசுவின் செயல்களை ஏன் ஆராய வேண்டும்?
7 சொல்லிலும் செயலிலும் இயேசு தம் தகப்பனை அச்சுப்பிசகாமல் அப்படியே பின்பற்றினார். (யோவா. 14:9) எனவே, இயேசுவின் செயல்களை ஆராய்ந்து பார்ப்பது யெகோவாவின் சிந்தையைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். (ரோ. 15:5; பிலி. 2:5) இப்போது, இரண்டு சுவிசேஷப் பதிவுகளை ஆராயலாம்.
8, 9. யோவான் 6:1-5-ல் உள்ள பதிவின்படி, எந்தச் சூழ்நிலையில் இயேசு அந்தக் கேள்வியை பிலிப்புவிடம் கேட்டார், ஏன் கேட்டார்?
8 இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். இது, கி.மு. 32 பஸ்கா பண்டிகைக்குச் சற்று முன்பு நடந்த சம்பவம். இயேசுவின் சீடர்கள் கலிலேயா எங்கும் போய் ஒரு விசேஷ ஊழியம் செய்துவிட்டு அப்போதுதான் திரும்பி வந்திருந்தார்கள். அவர்கள் மிகவும் களைப்பாக இருந்தார்கள்; அதனால், இயேசு அவர்களை கலிலேயாக் கடலின் வடக்குப் பகுதியிலுள்ள ஓர் ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஆயிரக்கணக்கான ஜனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு திரளான ஜனங்களைக் குணப்படுத்தி, அவர்களுக்கு நிறைய விஷயங்களைப் போதித்த பிறகு ஒரு சிக்கலான பிரச்சினை தலைதூக்கியது. ஒதுக்குப்புறமான அந்த இடத்தில் ஜனங்கள் எல்லாருக்கும் எப்படி உணவு கிடைக்கும்? இதை உணர்ந்த இயேசு அந்த ஊரைச் சேர்ந்த பிலிப்புவிடம், “இவர்கள் சாப்பிடுவதற்கு எங்கே போய் ரொட்டிகளை வாங்கலாம்?” என்று கேட்டார்.—யோவா. 6:1-5.
9 பிலிப்புவிடம் இயேசு ஏன் இந்தக் கேள்வியைக் கேட்டார்? என்ன செய்வதென்று தெரியாததால்தான் இப்படிக் கேட்டாரா? இல்லை. உண்மையிலேயே அவர் எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்? இயேசுவுடன் அங்கு இருந்த யோவான் இவ்வாறு விளக்குகிறார்: “[இயேசு] தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காக இப்படிக் கேட்டார்.” (யோவா. 6:6) ஆம், இயேசு தம் சீடர்களுக்கு எந்தளவு விசுவாசம் இருந்தது என சோதித்துப் பார்த்தார். இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் அதன் சம்பந்தமாகச் சிந்திக்கவும் தம்மால் என்ன செய்ய முடியும் என்பதில் அவர்களுக்கு எந்தளவு விசுவாசம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டவும் வாய்ப்பு கொடுத்தார். ஆனால், அவர்கள் அந்த வாய்ப்பை நழுவ விட்டார்கள்; தங்களுடைய கண்ணோட்டம் எவ்வளவு குறுகியதாக இருந்தது என்பதையும் வெளிக்காட்டினார்கள். (யோவான் 6:7-9-ஐ வாசியுங்கள்.) பிறகு, அவர்கள் நினைத்துக்கூடப் பார்க்காத ஒரு காரியத்தை இயேசு செய்தார். பசியில் வாடிய அந்த ஆயிரக்கணக்கானோருக்கு அற்புதமாக உணவளித்தார்.—யோவா. 6:10-13.
10-12. (அ) ஒரு கிரேக்கப் பெண் கேட்டுக்கொண்டதை இயேசு உடனடியாகச் செய்யாமல் போனதற்குக் காரணம் என்னவாக இருக்கலாம்? விளக்குங்கள். (ஆ) இப்போது நாம் எதைப் பற்றித் தெரிந்துகொள்ளப் போகிறோம்?
10 இயேசு மற்றொரு சமயத்தில் எப்படிச் சிந்தித்தார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தச் சம்பவம் உதவுகிறது. இந்தப் பெரிய ஜனக்கூட்டத்திற்கு உணவளித்த பிறகு, இயேசுவும் அவருடைய சீடர்களும் வடக்கு நோக்கிப் பயணித்தார்கள்; அதாவது, இஸ்ரவேலின் எல்லைக்கு அப்பால் இருந்த தீரு, சீதோன் நகரங்களுக்கு அருகே உள்ள பகுதிக்குப் பயணித்தார்கள். அங்கே, ஒரு கிரேக்கப் பெண்ணைச் சந்தித்தார்கள்; அவள் தன் மகளைக் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கெஞ்சினாள். முதலில் அவளை அவர் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், அவள் விடாப்பிடியாகக் கேட்டுக்கொண்டே இருந்ததால் அவளிடம் இவ்வாறு சொன்னார்: “முதலில் பிள்ளைகள் திருப்தியாகச் சாப்பிடட்டும், பிள்ளைகளின் ரொட்டியை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல.”—மாற். 7:24-27; மத். 15:21-26.
11 இயேசு ஏன் முதலில் அந்தப் பெண்ணுக்கு உதவவில்லை? பிலிப்புவைச் சோதித்தது போலவே அவளையும் சோதிப்பதற்காகத்தான் அவர் அப்படி நடந்துகொண்டாரா? விசுவாசத்தை வெளிக்காட்ட அவளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, அவளுடைய பிரதிபலிப்பைப் பார்ப்பதற்காகத்தான் அப்படிச் செய்தாரா? அவர் என்ன தொனியில் சொன்னார் என்பது நமக்குத் தெரியாவிட்டாலும், அவர் சொன்ன விதம் அவள் மனதை நோகடிக்கவில்லை. அவளுடைய ஜனங்களை ‘நாய்க் குட்டிகளுக்கு’ ஒப்பிட்டது அவர் மென்மையாகப் பேசியதைக் காட்டியது. சொல்லப்போனால், ஒரு பிள்ளை கெஞ்சிக் கேட்கும் ஒன்றைக் கொடுக்க விரும்பும் ஓர் அப்பாவைப் போல இயேசு நடந்துகொண்டார்; ஆனால், அதைப் பெற அந்தப் பிள்ளைக்கு இருக்கும் ஆர்வத்தைச் சோதிப்பதற்காக அந்த அப்பா தன் விருப்பத்தை வெளிக்காட்டுவதில்லை. இயேசு அப்படி நடந்துகொண்டதற்குக் காரணம் எதுவாக இருந்தாலும், அந்தப் பெண் விசுவாசத்தை வெளிக்காட்டியதும் அவர் மனமுவந்து அவள் கேட்டுக்கொண்டபடி செய்தார்.—மாற்கு 7:28-30-ஐ வாசியுங்கள்.
12 இந்த இரண்டு சுவிசேஷப் பதிவுகளும் ‘கிறிஸ்துவின் சிந்தையை’ பற்றிய ஆழமான அறிவைப் பெற நமக்கு உதவுகின்றன. இவை, யெகோவாவின் சிந்தையை நன்கு புரிந்துகொள்ள நமக்கு எப்படி உதவுமென்று இப்போது பார்க்கலாம்.
மோசேயிடம் யெகோவா நடந்துகொண்ட விதம்
13. இயேசு சிந்திக்கும் விதத்தை நன்கு அறிந்துகொள்வது நமக்கு எப்படி உதவுகிறது?
13 இயேசு சிந்திக்கும் விதத்தை நன்கு அறிந்துகொள்வது, புரிந்துகொள்வதற்குக் கடினமாக பைபிள் பகுதிகளை உள்வாங்கிக்கொள்ள நமக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு, வழிபாட்டிற்காக ஒரு பொன் கன்றுக்குட்டியை இஸ்ரவேலர் உண்டாக்கியதற்குப் பிறகு மோசேயிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள். “இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள். ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன்” என்று அவர் சொன்னார்.—யாத். 32:9, 10.
14. யெகோவா சொன்ன வார்த்தைகளுக்கு மறுமொழியாக மோசே என்ன சொன்னார்?
14 அந்தப் பதிவில் நாம் தொடர்ந்து வாசிப்பதாவது: “மோசே தன் கடவுளாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி: யெகோவாவே, தேவரீர் வல்லமையினாலும் புஜபலத்தினாலும் எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்துக்கு விரோதமாக உமது கோபம் மூளுவதென்ன? மலைகளிலே அவர்களைக் கொன்றுபோடவும் பூமியின்மேல் இராதபடி அவர்களை நிர்மூலமாக்கவும் அவர்களுக்குத் தீங்கு செய்யும் பொருட்டே அவர்களைக் கொண்டுபோனார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டு மாறி மனஸ்தாபம்கொண்டவராய், உமது ஜனத்திற்கு விரோதமான தீமையைச் செய்யாதுவிடும். உமது அடியாராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலரையும் நினைத்தருளும்; உங்கள் சந்ததியை வானத்து நக்ஷத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றென்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று பிரார்த்தித்து நின்றான். யெகோவா அப்படியே மனஸ்தாபப்பட்டுத் தமது ஜனத்திற்குச் செய்வதாகச் சொன்ன தீமையைச் செய்யாதிருந்தார்.”—யாத். 32:11-14, திருத்திய மொழிபெயர்ப்பு.b
15, 16. (அ) யெகோவா தாம் செய்ய நினைத்ததைச் சொன்னதால் மோசேக்கு என்ன வாய்ப்பு கிடைத்தது? (ஆ) யெகோவா ‘மனஸ்தாபப்பட்டார்’ என்பதன் அர்த்தம் என்ன?
15 மோசே உண்மையிலேயே யெகோவாவின் சிந்தையைச் சரிப்படுத்த வேண்டியிருந்ததா? இல்லவே இல்லை! யெகோவா தாம் செய்ய நினைத்ததைச் சொன்னபோதிலும், அதுவே அவருடைய முடிவான தீர்மானமாக இருக்கவில்லை. உண்மையில், பிலிப்புவையும் கிரேக்கப் பெண்ணையும் இயேசு சோதித்ததைப் போல மோசேயையும் சோதிப்பதற்காகவே யெகோவா அப்படிச் சொன்னார். தன்னுடைய கருத்தைச் சொல்ல மோசேக்கு அவர் வாய்ப்பளித்தார்.c இஸ்ரவேலருக்கும் தமக்கும் இடையே மத்தியஸ்தராக மோசேயை யெகோவா நியமித்திருந்தார்; அதோடு, மோசேக்குக் கொடுத்த அந்த நியமிப்பை அவர் மதித்தார். இப்படியிருக்க, யெகோவா செய்யப்போவதாகச் சொன்னதைக் கேட்டு மோசே அப்படியே மனமொடிந்து போனாரா? அல்லது, இதை நல்ல வாய்ப்பாகக் கருதி, இஸ்ரவேலை அழித்துவிடும்படியும் தன்னுடைய சந்ததியாரைப் பெரிய ஜனமாக்கும்படியும் யெகோவாவிடம் அவர் சொன்னாரா?
16 மோசே சொன்ன பதில், அவருக்கு யெகோவாவின் மீது விசுவாசம் இருந்ததையும் அவருடைய நீதியின் பேரில் நம்பிக்கை இருந்ததையும் வெளிக்காட்டியது. அவருடைய பதில், அவர் தன்னலமற்றவர் என்பதையும் யெகோவாவின் பெயர்மீது அவருக்கு மதிப்பு இருந்ததையும் காட்டியது. அந்தப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த அவர் விரும்பவில்லை. இந்த விஷயத்தில் மோசே, ‘யெகோவாவின் சிந்தையை’ புரிந்துகொண்டதைக் காட்டினார். (1 கொ. 2:16) அதன் விளைவு? யெகோவா தாம் செய்ய நினைத்த ஒரு காரியத்தைச் செய்தே தீர வேண்டுமென விடாப்பிடியாக இருக்கவில்லை; மாறாக, அவர் ‘மனஸ்தாபப்பட்டார்’ என்று அந்த பைபிள் பதிவு சொல்கிறது. எபிரெயுவில் இந்த வார்த்தை, அந்தத் தேசம் முழுவதையும் அழிக்க நினைத்ததாக யெகோவா சொன்னபடி அதை அவர் அழிக்கவில்லை என்பதையே அர்த்தப்படுத்தலாம்.
ஆபிரகாமுடன் யெகோவா நடந்துகொண்ட விதம்
17. ஆபிரகாம் தன்னுடைய கவலையைத் தெரிவித்தபோது யெகோவா எவ்வாறு மிகுந்த பொறுமையைக் காட்டினார்?
17 தம்முடைய ஊழியர்கள் தங்களது விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வெளிக்காட்டுவதற்கு யெகோவா எப்படி வாய்ப்பளிக்கிறார் என்பதற்கு மற்றொரு உதாரணம் உள்ளது; அது, சோதோம் சம்பந்தமாக யெகோவாவிடம் ஆபிரகாம் விடுத்த வேண்டுகோள் பற்றிய பதிவாகும். அடுத்தடுத்து பல கேள்விகளைக் கேட்க ஆபிரகாமை அனுமதித்ததன் மூலம் யெகோவா மிகுந்த பொறுமையோடு நடந்துகொண்டதைப் பற்றி அது குறிப்பிடுகிறது. ஒரு கட்டத்தில், அவர் தன்னுடைய உள்ளப்பூர்வமான கவலையை இவ்வாறு தெரிவித்தார்: “துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ”?—ஆதி. 18:22-33.
18. ஆபிரகாமிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
18 இந்தப் பதிவிலிருந்து யெகோவாவின் சிந்தையைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? யெகோவா சரியான தீர்மானம் எடுப்பதற்கு ஆபிரகாம் நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டியிருந்ததா? இல்லை. தாம் எதற்காக இந்தத் தீர்மானத்தை எடுத்தார் என்பதை யெகோவா ஆரம்பத்திலேயே சொல்லியிருந்திருக்கலாம். ஆனால், இந்தக் கேள்விகளைக் கேட்க ஆபிரகாமை அனுமதித்ததன் மூலம், தமது தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கும் தமது சிந்தையைப் புரிந்துகொள்வதற்கும் யெகோவா அவகாசம் கொடுத்தார். ஆம், ஆபிரகாமிடம் யெகோவா ஒரு நண்பரைப் போல நடந்துகொண்டார்.—ஏசா. 41:8; யாக். 2:23.
நமக்குப் பாடங்கள்
19. நாம் எப்படி யோபுவைப் பின்பற்றலாம்?
19 ‘யெகோவாவின் சிந்தையை’ பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்? பைபிளை ஆழ்ந்து படிப்பதன் மூலம், யெகோவாவின் சிந்தையைக் குறித்த நம்முடைய புரிந்துகொள்ளுதலைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். நம்முடைய குறுகிய கண்ணோட்டதின்படியும், நெறிகளின்படியும், சிந்தையின்படியும் அவரை ஒருபோதும் நியாயந்தீர்க்கக் கூடாது. “நான் அவருக்குப் [கடவுளுக்குப்] பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே” என்று யோபு குறிப்பிட்டார். (யோபு 9:32) யெகோவாவின் சிந்தையை கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொள்ளும்போது யோபுவைப் போல நாமும் உணர்ச்சிப்பொங்க இவ்வாறே சொல்வோம்: “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக் குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்”?—யோபு 26:14.
20. புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒரு பைபிள் பகுதியை வாசிக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
20 நாம் பைபிளில், யெகோவாவின் சிந்தை சம்பந்தமாகப் புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒரு பகுதியை வாசிக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்தத் தகவலைக் குறித்து ஆராய்ச்சி செய்த பிறகும், சரியான பதில் கிடைக்காவிட்டால், யெகோவாமீதுள்ள நம் நம்பிக்கைக்கு வந்த ஒரு சோதனையாக அதை எடுத்துக்கொள்ளலாம். சில சமயங்களில், குறிப்பிட்ட சில பைபிள் பகுதிகளும்கூட யெகோவாவுடைய பண்புகளை எந்தளவு புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் அவருடைய செயல்களில் இப்பண்புகள் பளிச்சிடுவதை ஒத்துக்கொள்கிறோம் என்பதையும் காட்ட நமக்கு வாய்ப்பளிக்கின்றன என்பதை நினைவில் வையுங்கள். அவர் செய்கிற எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதைத் தாழ்மையோடு ஒத்துக்கொள்வோமாக. (பிர. 11:5) அதனால், அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள நாம் தூண்டப்படுவோம்: “ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நியாயத்தீர்ப்புகள் ஆராய்ந்தறிய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை! ‘யெகோவாவின் சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு அறிவுரை வழங்குபவன் யார்?’ அல்லது, ‘அவரிடம் எதையாவது கொடுத்து வைத்திருந்து, அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டவன் யார்?’ அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன; அவர் மூலமாகவே உண்டாயின; அவருக்காகவே இருக்கின்றன. அவருக்கே என்றென்றும் மகிமை உரியது. அப்படியே ஆகட்டும்.”—ரோ. 11:33-36.
[அடிக்குறிப்புகள்]
a சங்கீதம் 25:14 (பொது மொழிபெயர்ப்பு): “ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போர்க்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்.”
நீதிமொழிகள் 3:32 (பொ.மொ.): “நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்.”
b இதுபோன்ற ஒரு பதிவை எண்ணாகமம் 14:11-20-ல் காணலாம்.
c சில அறிஞர்களின் கருத்துப்படி, யாத்திராகமம் 32:10-லுள்ள “என்னை விட்டுவிடு” என்ற வார்த்தைகளுக்கான மூல எபிரெய மரபுவழக்கை, யெகோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் இடையேயுள்ள “திறப்பிலே நிற்க,” அதாவது இடைவெளியிலே நின்று அவர்களுக்காகப் பரிந்து பேச, மோசேக்குக் கொடுக்கப்பட்ட ஓர் அழைப்பாக அல்லது ஆலோசனையாக எடுத்துக்கொள்ளலாம். (சங். 106:23; எசே. 22:30) எப்படியிருந்தாலும், மோசே தன் கருத்தை மனந்திறந்து சொல்வதை இது எளிதாக்கியது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• நம்முடைய நெறிகளின்படி யெகோவாவை நியாயந்தீர்க்கும் மனப்பான்மையைத் தவிர்க்க எது நமக்கு உதவும்?
• இயேசுவின் செயல்களைப் புரிந்துகொள்வது, ‘யெகோவாவோடு அன்புறவு’ வைத்துக்கொள்ள நமக்கு எப்படி உதவும்?
• மோசேயிடமும் ஆபிரகாமிடமும் யெகோவா உரையாடிய விதத்திலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறோம்?
[பக்கம் 5-ன் படங்கள்]
மோசேயிடமும் ஆபிரகாமிடமும் யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து அவருடைய சிந்தையைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?