மாற்கு எழுதியது
7 எருசலேமிலிருந்து வந்த பரிசேயர்களும் சில வேத அறிஞர்களும் அவரிடம் கூடிவந்தார்கள்.+ 2 அவருடைய சீஷர்களில் சிலர் தீட்டான கைகளால், அதாவது கழுவாத கைகளால்,* சாப்பிடுவதை அவர்கள் பார்த்தார்கள். 3 (பரிசேயர்கள் உட்பட யூதர்கள் எல்லாரும் முன்னோர்களுடைய பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து முழங்கைவரை கழுவிவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். 4 அதோடு, சந்தையிலிருந்து வந்த பிறகு, தங்களைத் தண்ணீரால் தூய்மைப்படுத்திக்கொண்ட பின்புதான் சாப்பிடுவார்கள்; இதுபோன்ற இன்னும் பல பாரம்பரியங்களையும் கடைப்பிடிப்பார்கள்; கிண்ணங்கள், கூஜாக்கள், செம்புப் பாத்திரங்கள் ஆகியவற்றைத் தண்ணீரில் அமிழ்த்தியெடுப்பார்கள்.)+ 5 அதனால், அந்தப் பரிசேயர்களும் வேத அறிஞர்களும், “உன்னுடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்காமல் ஏன் தீட்டான கைகளால் சாப்பிடுகிறார்கள்?”+ என்று அவரிடம் கேட்டார்கள். 6 அதற்கு அவர், “வெளிவேஷக்காரர்களான உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்; ‘இந்த ஜனங்கள் என்னை உதட்டளவில் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது.+ 7 இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்’+ என்று எழுதியிருக்கிறார். 8 அதன்படியே, நீங்கள் கடவுளுடைய கட்டளையை விட்டுவிட்டு மனுஷர்களுடைய பாரம்பரியத்தைப் பிடித்துக்கொள்கிறீர்கள்”+ என்று சொன்னார்.
9 அதோடு அவர்களிடம், “உங்களுடைய பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதற்காகக் கடவுளுடைய கட்டளையைச் சாமர்த்தியமாக ஒதுக்கிவிடுகிறீர்கள்.+ 10 உதாரணத்துக்கு, ‘உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும்’+ என்றும், ‘அப்பாவையோ அம்மாவையோ கேவலமாகப் பேசுகிற* எவனும் கொல்லப்பட வேண்டும்’+ என்றும் மோசே சொன்னார். 11 ஆனால் நீங்கள், ‘ஒருவன் தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ, “என்னிடம் இருப்பதையெல்லாம் ஏற்கெனவே கொர்பானாக (அதாவது, கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட காணிக்கையாக) கொடுத்துவிட்டேன், அதனால் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது” என்று சொன்னால்,’ 12 அவன் தன்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இனிமேல் எதையுமே செய்ய வேண்டியதில்லை என்று சொல்கிறீர்கள்.+ 13 இப்படி, நீங்கள் வழிவழியாகப் பின்பற்றுகிற பாரம்பரியத்தால் கடவுளுடைய வார்த்தையை மதிப்பற்றதாக்கிவிடுகிறீர்கள்.+ இதுபோல் இன்னும் நிறைய காரியங்களைச் செய்கிறீர்கள்”+ என்று சொன்னார். 14 பின்பு, கூட்டத்தாரை அவர் மறுபடியும் தன் பக்கத்தில் கூப்பிட்டு, “நான் சொல்வதை நீங்கள் எல்லாரும் கவனித்துக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.+ 15 வெளியே இருந்து ஒரு மனுஷனுக்குள் போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது; அவனுக்குள்ளிருந்து வெளியே வருபவைதான் அவனைத் தீட்டுப்படுத்தும்”+ என்று சொன்னார். 16 *——
17 பின்பு, அவர் அந்தக் கூட்டத்தாரைவிட்டு ஒரு வீட்டுக்குள் போனபோது, அந்த உவமையைப் பற்றிச் சீஷர்கள் அவரிடம் கேட்க ஆரம்பித்தார்கள்.+ 18 அதற்கு அவர், “நீங்களுமா அவர்களைப் போல் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியே இருந்து ஒரு மனுஷனுக்குள் போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது உங்களுக்குத் தெரியாதா? 19 அது அவனுடைய இதயத்துக்குள் போகாமல் வயிற்றுக்குள் போய் பின்பு கழிப்பிடத்துக்குப் போய்விடுகிறது, இல்லையா?” என்று கேட்டார்; இப்படி, எல்லா உணவுகளும் சுத்தமானவைதான் என்பதைத் தெரியப்படுத்தினார். 20 அதோடு அவர்களிடம், “ஒரு மனுஷனுக்குள்ளிருந்து வெளியே வருபவைதான் அவனைத் தீட்டுப்படுத்துகின்றன.+ 21 ஏனென்றால் கெட்ட எண்ணங்கள்,+ அதாவது பாலியல் முறைகேடு,* திருட்டு, கொலை, 22 மணத்துணைக்குத் துரோகம், பேராசை, அக்கிரமம், வஞ்சகம், வெட்கங்கெட்ட நடத்தை,* பொறாமை,* நிந்தனை, கர்வம், வறட்டுப் பிடிவாதம் ஆகியவை மனுஷர்களுடைய இதயத்திலிருந்துதான் வெளியே வருகின்றன. 23 இந்தப் பொல்லாத விஷயங்களெல்லாம் ஒருவனுக்குள்ளிருந்து வந்து அவனைத் தீட்டுப்படுத்துகின்றன” என்று சொன்னார்.
24 பின்பு அவர் அங்கிருந்து புறப்பட்டு தீரு, சீதோன் பகுதிக்குப் போய்,+ அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் போனார்; தான் அங்கே இருப்பது யாருக்குமே தெரியக் கூடாதென்று நினைத்தார், ஆனாலும் தெரிந்துவிட்டது. 25 அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு பெண் உடனே அங்கே வந்து அவருடைய காலடியில் விழுந்தாள்.+ 26 அவள் சீரியாவிலுள்ள பெனிக்கேயில் பிறந்த கிரேக்கப் பெண். அவளுடைய சின்னஞ்சிறு மகளுக்குப் பேய் பிடித்திருந்தது; தன் மகளைப் பிடித்திருந்த பேயை விரட்டச் சொல்லி அவரிடம் அவள் கேட்டுக்கொண்டே இருந்தாள். 27 அதற்கு அவர், “முதலில் பிள்ளைகள் திருப்தியாகச் சாப்பிடட்டும், பிள்ளைகளின் ரொட்டியை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல”+ என்று சொன்னார். 28 அவளோ, “உண்மைதான் ஐயா, ஆனால் சின்னப் பிள்ளைகள் சிந்தும் துணுக்குகளை மேஜைக்குக் கீழே இருக்கும் நாய்க்குட்டிகள் சாப்பிடுமே” என்று சொன்னாள். 29 அதற்கு அவர், “நீ இதைச் சொன்னதால், இப்போது போகலாம்; உன் மகளைப் பிடித்திருந்த பேய் போய்விட்டது”+ என்று சொன்னார். 30 அவள் வீடு திரும்பியபோது, அந்தச் சிறுமி கட்டிலில் படுத்திருந்ததைப் பார்த்தாள், அந்தப் பேய் அவளைவிட்டுப் போயிருந்தது.+
31 பின்பு, இயேசு தீருவைவிட்டு சீதோன் வழியாகவும் தெக்கப்போலி* வழியாகவும் கலிலேயா கடற்கரைக்குப் போனார்.+ 32 இங்கே,* காது கேட்காதவனும், பேச்சுக் குறைபாடு உள்ளவனுமான ஒருவனை+ அவரிடம் கொண்டுவந்து அவன்மேல் கைகளை வைக்கும்படி சிலர் கெஞ்சிக் கேட்டார்கள். 33 அப்போது அவர், கூட்டத்தாரைவிட்டு அவனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போய் அவனுடைய காதுகளில் தன் விரல்களை வைத்து, உமிழ்ந்து, பின்பு அவனுடைய நாக்கைத் தொட்டார்.+ 34 அதன் பின்பு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சுவிட்டு, “எப்பத்தா” என்று சொன்னார்; அதற்கு “திறக்கப்படு” என்று அர்த்தம். 35 அப்போது அவனுடைய காதுகள் திறந்தன,+ அவனுடைய பேச்சுக் குறைபாடும் சரியாகி அவன் தெளிவாகப் பேச ஆரம்பித்தான். 36 இந்த விஷயத்தைப் பரப்ப வேண்டாம் என்று அவர் அவர்களுக்குக் கட்டளையிட்டார்;+ ஆனால், அவர் பல தடவை சொல்லியும் இன்னும் அதிகமாகத்தான் அவர்கள் அதைப் பரப்பினார்கள்.+ 37 “எல்லாவற்றையும் இவர் எவ்வளவு அருமையாகச் செய்கிறார்! காது கேட்காதவர்களைக்கூட கேட்க வைக்கிறார், பேச முடியாதவர்களைக்கூட பேச வைக்கிறார்!”+ என்று மிகுந்த ஆச்சரியத்தோடு+ சொன்னார்கள்.