விடுதலைச் சிலை—நிறைவேறிய ஒரு வாக்குறுதியா?
“உனது களைப்புற்ற, ஏழ்மையான,
சுதந்திரத்தைச் சுவாசிக்கக் காத்திருக்கும் குழம்பிய மக்கள் திரளை எனக்குக்கொடு,
அலைபாயும் உன்னுடைய கடற்கரையில் அழைக்கழியும்,
ஒன்றுக்கும் உதவாதவர்களை எனக்குக்கொடு. இவர்களை,
இல்லமின்றிருப்பவர்களை, பெரும் புயலால் அலைக்கழிக்கப்பட்டவர்களை என்னிடம் அனுப்பு.
பொற்கதவின் பக்கத்தில் என் தீபந்தை உயர்த்துகிறேன்!”
(தி நியு கொலாஸஸ், எம்மா லாசரஸ் இயற்றிய சிறு கவிதை, விடுதலைச் சிலைக்கு அற்பணிக்கப்பட்ட கவிதை)
அவள் உருவானதும் பிறந்ததும் பிரான்ஸ் தேசம், ஆனால் இரண்டு வயதில் அவள் ஐக்கிய மாகாணங்களில் குடியேறினாள். இப்பொழுது அவளுக்கு நூறு வயது, பல கோடி ரூபாய் செலவில் அவள் புதுப் பொலிவுடன் காணப்படுகிறாள். அவள் யார்? அவள்தான் அந்த விடுதலைச் சிலை, உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற சிலைகளில் ஒன்று.
151 அடி (46 மீ) உயரமுள்ள இவள், உலகிலேயே மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாகவும் திகழ்கிறாள். தனது அடிப்பீடம் உட்பட 305 அடி (93 மீ) உயரத்திற்கு எழும்பியவளாய் நியு யார்க் கடலைப் பார்வையற்ற கண்களால் பார்த்துக் கொண்டிருக்கிறாள். கடந்த நூறு ஆண்டுகளாக குடியிறங்கிய பல லட்சக்கணக்கான மக்களுக்கு அவள் வரவேற்புச் சின்னமாகத் திகழ்ந்திருக்கிறாள். ஆனால் அந்த விடுதலைச் சிலை ஏன் உங்களுடைய அக்கறைக்குரிய ஒன்றாக இருக்க வேண்டும்? ஏனென்றால் அது அடையாளப்படுத்தும் காரியம்—விடுதலை அல்லது சுதந்திரம்—இன்று ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. 1986 வரையான சரித்திரத்தைப் பார்க்குமிடத்து விடுதலை எல்லா நாடுகளிலும் காணப்படுவதில்லை, மற்றும் அநேக நாடுகளில் அது சீரழிந்துகொண்டு வருகிறது.
ஆனால் அந்தச் சிலையை உருவாக்குவதற்குப் பின்னிருந்த ஆரம்ப நோக்கம் என்ன? 1986-ம் ஆண்டு ஏன் அவளுக்கு ஒரு விசேஷ ஆண்டாயிருந்தது? வாய்ப்பு என்னும் அவளுடைய “பொற் கதவு” இன்னும் திறந்த நிலையிலும் பொன்னானதாகவும் இருக்கிறதா?
வித்தியாசத்தை ஏற்படுத்தின ஒரு விருந்து
1865-ம் ஆண்டில் பிரஞ்சு அடிமைத்தன எதிர்ப்பு சமுதாயத்தின் தலைவர் பேராசிரியர் எட்வர்ட் டி லெபாலே என்பவரின் அழைப்பின் பேரில் பிரஞ்சு அறிஞர்களும் அரசியல் நிபுணர்களும் கொண்ட ஒரு சிறு தொகுதி கிளாட்டிக்னியில் ஒரு விருந்தில் கலந்துகொண்டனர். அவர்கள் ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பையும் அதன் அரசியல் முன்னேற்றங்களையும் கண்டு வியந்து பாராட்டினர். ஐக்கிய மாகாணங்களுக்குத் தங்கள் பாராட்டுதலைத் தெரிவிக்கும் வண்ணமும் பிரட்டனிடமிருந்து 1776-ல் தான் பெற்ற சுதந்திரத்தின் நூறாவது ஆண்டை ஒட்டியும் அமெரிக்க மக்களுக்கு ஒரு வெகுமதி அனுப்புவதை அந்த விருந்தளித்த பேராசிரியர் சிபார்சு செய்தார்.
ஒரு சக்கரவர்த்தியின் கீழ் வாழும் அந்தத் தயாள குணமுள்ள பிரஞ்சு மனிதரின் உள்நோக்கம் முற்றிலும் பொது நலப்பண்பின் அடிப்படையிலானதல்ல. சார்லஸ் மெர்செர் விடுதலைச் சிலை என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்: “தங்களுடைய சொந்த அரசியல் இலட்சியத்திற்கு பிரஞ்சு மற்றும் அமெரிக்கரின் ஆதரவைப் பெறுவதற்கான பிரச்சாரத்தைத்தான் அவர்களுடைய கருத்து பிரதிநிதித்துவம் செய்தது. அந்த இலட்சியம்: [பிரான்ஸில்] மூன்றாம் உலகை உருவாக்குதல்.”
பெரிய எண்ணங்கள் கொண்ட சிற்பக் கலைஞர்
இந்தக் கருத்தை ஆதரித்தவர்களில் ஒருவர்தான் ஆகஸ்ட் பர்தோல்டி என்ற சிற்பக் கலைஞர். ப்ரான்ஸ் பத்திரிகையின்படி, “மத்திய கிழக்கு பயணத்தின்போது தான் பார்த்த ‘பிரமிட்’ என்றழைக்கப்படும் எகிப்திய கூர்ங்கோபுரங்களால் அதிக கவர்ச்சிக்கப்பட்டு, பெரிய சிற்ப வேலைகளுக்கான ஓர் ஆர்வத்தை அவர் வளர்த்துவிட்டார்.” தளர்த்தியான மேலங்கியணிந்த ஒரு பெண் தனது வலது கையில் எரிந்துகொண்டிருக்கும் ஒரு தீபந்தைப் பிடித்திருப்பவளாகக் கற்பனை செய்து அதற்கு வடிவம் அமைக்க நினைத்தான்.
இந்தச் சிற்பத்திட்டம் தாமதமாக ஆரம்பித்தது, ஏனென்றால், அந்தச் சமயத்தில் பேரரசுமுறை ஆட்சிகொண்ட பிரான்ஸில், உதயமாகும் வட அமெரிக்கக் குடியரசின் அரிய தன்மைகளைக் கொண்டாடுவதற்கு அரசியல் நிலவரம் இடம் கொடுக்கவில்லை. என்றபோதிலும் 1871-ல் நெப்போலியன் III பேரரசன் வீழ்ச்சியைக் காண, ஐக்கிய மாகாணங்களுக்கு வெகுமதியளிக்கும் அந்தப் பழைய எண்ணம் மீண்டும் தலைதூக்கியது. அந்த ஆண்டில் ஜூலை மாதத்தில், பர்தோல்டி ஐக்கிய மாகாணங்களுக்குப் பயணம் செய்தார். எதிர்கால சிலைக்குத் தான் பொருத்தமான ஒரு இடத்தைக் கண்டுபிடித்தார்—நியு யார்க் கடலில் பெட்லோ தீவு (1956 முதல் ‘விடுதலைத் தீவு’ என்று அழைக்கப்பட்டது) என்ற ஒரு சிறு தீவைக் கண்டுபிடித்தார்.
ஆனால் விடுதலை நாட்டைப்பற்றிய பர்தோல்டியின் கனவு உண்மைக்கு ஒத்துவரவில்லை. சார்லஸ் மெர்சர் கூறுகிறார்: “அமெரிக்கக் கருப்பர்கள் அனைவரும் விடுதலையாக்கப்பட்டாலும், அநேகமாய் எல்லாருமே கடுமையான வறுமைக்கும், வேலையில்லாமைக்கும், கல்வியின்மைக்கும் அடிமைப்பட்டிருந்தனர். பெண்களுக்கு ஓட்டுரிமையுங்கூட இல்லாமல் இருந்தது.”
உற்சாகம் மிகுந்தவனாய் பர்தோல்டி கம்பீரமான தோற்றமுடைய சிலை செய்ய வேண்டிய தனது திட்டங்களை நிறைவேற்ற ஆரம்பித்தான். கூட்டுரிமைக் கழக நிறுவனத்தின் சின்னங்களை—உதாரணமாக, தீபம், இடது கையில் புத்தகம், மற்றும் தலையைச் சுற்றி ஏழு மணிமுடி கூர்களை அந்தச் சிலையில் இணைத்தான். இதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் அவன் கூட்டுரிமைக் கழக நிறுவனத்தானாயிருந்தான்.
பிரான்ஸில் பிறந்தது
ஐக்கிய மாகாணங்களில் எழுப்பப்பட்டது
பர்தோல்டியின் திட்டத்தைக் கனிய வைப்பதற்குப் பிரபல பிரஞ்சு கலைஞன் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டான். அவன்தான் கஸ்தவே ஐஃபெல், பாரீஸ் நகர ஐஃபெல் கோபுரத்தை அமைத்து பேர் பெற்றவன். நூற்றுக்கணக்கான டன்கள் எடையுள்ள செப்புத் தோலும் அங்கியும் கொண்ட அந்த விடுதலைச் சிலைக்கு ஆதாரமாக இரும்புக்கூட்டை அமைத்தான்.
உலகத்திற்கு ஒளியூட்டும் விடுதலைச்சிலை என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட அந்தச் சிலை 1884-ல் பாரீஸ் சிற்பச்சாலையில் உயர்ந்து நின்றது. அந்த ஆண்டில் ஜூலை 4-ம் தேதியன்று அந்தச் சிலை பாரீஸிலிருந்த அமெரிக்க தூதுவரிடம் அதிகாரப்பூர்வமாக வெகுமதியாக அளிக்கப்பட்டது.
ஆனால் இப்பொழுது, அது, தான் குடியேறும் புதிய தேசத்திற்கு அனுப்பப்பட வேண்டியதாயிருந்தது—குடியிறங்கும் லட்சக்கணக்கான மற்ற ஆட்களைப் போலவே விடுதலைப் பெண்ணும் குடியேற்றப்பட வேண்டும். இந்தச்சிலை பிரிக்கப்பட்டு 200 பெட்டிகளில் அடைக்கப்பட்டு நியு யார்க்குக்கு அனுப்பப்பட்டது. அக்டோபர் 28, 1886-ல் பெட்லோ தீவில் இந்த விடுதலைச் சிலைக்கு திறப்பு விழா கொண்டாடப்பட்டது.
புதுப்பிக்கப்பட்டது
1984-ல், ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக காற்றும் மழையும் புயலும், அந்தச் சிலையில் தங்கள் தடங்களை விட்டுச் சென்றன. எனவே, ஜூலை 4 1986-ம் தேதி கொண்டாடப்பட இருந்த சுதந்திர தினத்தன்று அதை மீண்டும் திறப்பதற்கு, புதுப்பிக்கும் வேலை தொடங்கப்பட்டதால், பொதுமக்கள் அதைக் காண அனுமதிக்கப்படவில்லை.
இரண்டு வருடங்களாக நியு யார்க்கின் அந்த வரவேற்பளிக்கும் பெண்மணி மூடப்பட்டிருக்க, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் அவளுக்கு ஒரு புது தோற்றத்தையளித்தனர். உள்ளே அமைக்கப்பட்டிருந்த இணைப்பு இரும்புக் கம்பிகளுக்குப் பதிலாக 1,700 எவர்சில்வர் கம்பிகள் இணைக்கப்பட்டன. பிரஞ்சு சிற்பக் கலைஞர்கள் அதன் புதிய தீபந்திற்கு 15 அவுன்ஸ் (425 கி) 24 காரெட் தங்கம் பூசினார்கள். அப்படியென்றால் 20 சதுர கஜம் (17 ச.மீ.) பரப்பளவை பென்னால் நிரப்ப வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு முறையும் ஓரிரண்டு சதுர அங்குலம் (13 ச.செமீ) பரப்புதான் நிரப்பப்பட முடிந்தது!
ஆண்டுதோறும் உலக முழுவதிலிருந்தும் வரும் 20 லட்சம் பார்வையாளர்கள் இதை அருகே சென்று நன்கு பார்ப்பதற்கென்று மற்ற வசதிகளும் கூட்டப்பட்டுள்ளன. 100 அடி (30 மீ) உயரத்தை அடைய, வட அமெரிக்காவிலேயே மிக உயரச் செல்லும் ஹைட்ராலிக் லிப்ட் இங்கு பொருத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்து அந்தச் சிலையின் அடிப்பீடத்திற்குச் செல்ல, ஒரு கண்ணாடி கார் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பீடத்திலிருந்து தலை உச்சிக்குச் செல்ல வளைவுப் படிகட்டு அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏழு கடல்களையும் கண்டங்களையும் பிரதிநிதித்துவஞ் செய்யும் மணிமுடியின் ஏழு கூர்களும் புதுப்பிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டன. நியு யார்க் டைம்ஸ் கூறுகிறபடி, ஒன்பது அடி நீளமுள்ள (2.7 மீ) மணிமுடிக் கூர்களில் ஒன்றின் இடம் மாற்றப்பட்டது, ஏனென்றால் சிலை காற்றில் அசைந்தபோது, அந்த மணிமுடிக் கூர் உயர்த்தப்பட்ட வலது கையை குத்தி சேதப்படுத்தியது.
நூற்றாண்டு விழா—1986
விடுதலைப் பெண்ணின் 100-வது நிறைவு ஆண்டு ஏன் உலக அக்கறைக்குரிய ஒன்று? எல்லீஸ் தீவு விடுதலைச் சிலையின் அஸ்திபாரத்தின் குழுவுக்கு அக்கிராசனராயிருந்த லீ A. யகோக்கா பின்வருமாறு கூறினார்: “விடுதலையின் இலட்சியங்களுக்குச் சின்னமாயிருக்கும் இந்தச் சிலை ஒரு சர்வலோக அர்த்தத்தைக் கொண்டிருந்தது. இது உலக முழுவதிலும் உள்ள மக்கள் கேட்கவும் பார்க்கவும் கூடிய ஒரு நிகழ்ச்சியாக இருக்கும்.” “86-ன் விடுதலை வார நிகழ்ச்சிக்”கான (ஜூலை 3-6) திட்டங்கள், மற்ற மாநில தலைவர்களை நியு யார்க் நகரத்திற்குக் கூட்டிச் சேர்க்கும் தொடர்ச்சியான விழாக்களை உட்படுத்தின.
இந்த விழாக்கள் ஒரு சர்வதேச கப்பற் காட்சிகளையும் உட்படுத்தியது. சர்வதேச கப்பற் பயிற்சிக் காட்சியில் பங்கு பெறுவதற்காக குறைந்தபட்சம் 117 நாடுகளின் கப்பற் பிரிவுகள் அழைக்கப்பட்டன. இத்துடன் உயர்ந்த கொடிக்கம்பங்களைக் கொண்ட கப்பல்கள் 141 தேசங்களிலிருந்து வரவேற்கப்பட்டன.
இந்த நூற்றாண்டு விழாவை இசையும், வானவெடிக் காட்சிகளும் சிறப்பிப்பதாயிருந்தது. வானவெடிக் காட்சிகள் துறைமுகத்திலிருந்த 30 தளத்திலிருந்து எழும்பியதும் இரவுநேர விண்ணிற்குப் பொலிவூட்டியதுமாயிருந்தது.
உலகத்திற்கு விடுதலைப் பெண்ணின் வரவேற்புச் செய்தியை நினைவுபடுத்தும் வகையில், ஐக்கிய மாகாணங்களின் 5,000 புதிய குடிமக்கள், ஐக்கிய மாகாணங்களின் தலைமை நீதிபதியால் எல்லீஸ் தீவில் குடியேற்றப்படுவார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேலுமான 20,000 பேர் உறுதிமொழி எடுப்பதற்கும் எற்பாடு செய்யப்பட்டிருந்தது. செயற்கைக் கோள் உதவிகொண்டு அனைத்து நிகழ்ச்சிகளும் இணைக்கப்படும்.
என்றபோதிலும், இந்த விழா நிகழ்ச்சிகள் தானே சில கேள்விகளை எழுப்புகின்றன. இந்த விடுதலைப் பெண்மணி குடியிறங்குபவர்களுக்காக இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தன் “பொற்கதவைத்” திறந்து வைத்திருக்க முடியும்? உலகின் ‘ஏழைகளையும் குழம்பிய நிலையிலுள்ளவர்களையும்’ வரவேற்கும் நிலையிலிருக்கிறாளா?
விடுதலைச் சிலையின் செய்தியும் உண்மை நிலையும்
யு.எஸ். நியுஸ் & உவர்ல்ட் ரிப்போர்ட் அறிக்கையின்படி, 1886 முதல் “ஏறக்குறைய 4 கோடி மக்கள் ‘பொற் கதவைக்’ கடந்திருக்கின்றனர், அமெரிக்கர்களாக ஆகியிருக்கின்றனர்.” இந்த பலத்த தேசத்தில் அநேகர் தங்களை வாழ்க்கையில் வெற்றிகரமாக அமைத்துவிட்டிருக்கின்றனர். பொருள் சம்பந்தமான காரியத்தில், சிலர் இலட்சாதிபதிகளாகத் தங்களைக் காண்கின்றனர். ஆனால் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும்.
சட்டப்படி குடியிறங்கியவர்களுடன்கூட இப்பொழுது இலட்சக்கணக்கான பரதேசிகளும் காணப்படுகின்றனர். இவ்வளவு அநேகர் ஐக்கிய மாகாணங்களுக்கு வருவதற்குக் காரணம் என்ன? கறைபட்டக் கதவு என்ற தனது புத்தகத்தில் ஜான் க்ரூட்சன் எழுதினார்: ”தான் அதை விரும்பினாலுஞ்சரி விரும்பாவிட்டாலுஞ்சரி, பலமான மக்களாட்சி முறையையும் செல்வாக்கையும் உடைய ஐக்கிய மாகாணங்கள் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்திற்குத் தப்பியோடுகிறவர்களுக்குக் கவர்ச்சி மிகுந்த ஒரு சரணாலயமாகும் கட்டாய நிலையிலிருக்கிறது.”
இந்தப் பரதேசிகள் அரோகமாய் மெக்ஸிகோவிலிருந்தும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்தும் வருகிறவர்கள். ஆனால் பெரும்பாலும் அவர்கள் வறுமையின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குச் செல்கிறவர்களாகவே இருக்கின்றனர். அமெரிக்கர் பலர் சகிக்கமுடியாத பூச்சி புழு குடியிருக்கும் வீடுகளிலே வாழ்கின்றனர். மிகவும் குறைந்த சம்பளமுள்ள கீழ்த்தரமான வேலைகளை மேற்கொள்கின்றனர். இப்படியிருக்க அவர்கள் ஏன் ஐக்கிய மாகாணங்களின் எல்லைகளை மீறி இப்படிப்பட்ட நிலைமைகளின் கீழ் வாழக் குவிகின்றனர்.
குடியிறங்குதல் என்ற தன் புத்தகத்தில் லிடியா ஆண்டர்சன் அந்தக் கேள்விக்கு விடையளிக்கிறாள்: “சட்டத்தை மீறி குடியேறும் இம்மக்கள் வருவதற்குக் காரணம் . . . தாங்கள் விட்டுவந்திருக்கும் தேசத்தைவிட அமெரிக்கா மேன்மையானதாக இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களின் பொருளாதாரத்திற்கும் முன்றாம் உலக நாடுகள் மெக்ஸிக்கோ மற்றும் தென் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும் இடையே பெரும் பிளவு இருக்கிறது. தங்களுடைய தேசங்களில்—வேலை கிடைத்தால்—ஒரு வாரமாக சம்பாதிக்கும் பணத்தை இங்கு ஒரே நாளில் சம்பாதித்துவிடுக்கூடும்.”
ஐக்கிய மாகாணங்களின் எல்லைக் காப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “அங்கே அவர்கள் பட்டினியில் மடிந்துபோகிறார்கள். [ஐக்கிய மாகாணங்களுக்கு வருவதன் மூலம்] அவர்களுக்கு எல்லாம் கிடைக்கிறது, இழப்பதற்கு ஒன்றுமில்லை. ஒரு பணக்கார தேசத்தின் பக்கத்தில் ஓர் ஏழை நாடு, எனவே பரதேசிகளின் பிரவேசப் பிரச்னை நிச்சயமாயிருக்கும். (கரைபட்ட கதவு) மறுவார்த்தையில் குறிப்பிட வேண்டுமானால், ஐக்கிய மாகாணங்களில் வறுமை இருந்தும், தாங்கள் வந்திருக்கும் தேசங்களைவிட நிலைமைகள் மேன்மையானதாக இருக்கின்றன.
ஏலம் முலம் குடியிறக்கம்
1986-ல் புதுப்பொலிவு பெற்ற விடுதலைப் பெண்மணி தொடர்ந்து ஏழைகளும் களைப்பற்றவர்களும் வீடு இழந்தவர்களும் தன் கரையில் தஞ்சம் காண அவர்களை வரவேற்கிறாள்—ஆனால் ஒரு வித்தியாசத்துடன் ஐ.மா.-வின் குடியிறக்கம் கொள்கைக்கு எதிராக பலமான குரல் எழுப்பப்படுகிறது. இந்தக் கொள்கை அதிகம் தளர்த்தப்பட்டதாக சிலர் கருதுகின்றனர். மற்றும் சிலர் அது அதிக கண்டிப்பாக இருப்பதாக உணருகின்றனர். சட்டவிரோதமான முறையில் குடியிறங்குகிறவர்களுக்குச் சில கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டான்ட் குருவர்க்கத்தினர் இடம் கொடுக்கின்றனர், ஆனால் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரலும் எழுப்பப்படுகிறது. இப்படியாக விடுதலைச் சிலையின் வரவேற்புச் செய்தி அதன் தெளிவை இழந்துகொண்டு வருகிறது.
உதாரணமாக, ஜூலியன் L. சைமன், ஹெரிடேஜ் பெளன்டேஷனைச் சேர்ந்தவர், நியு யார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றில் ஒரு புதிய ஆலோசனையைக் கொடுத்தார்: “குடியிறக்கம் உரிமைப் பெறுவதை ஏலமிடுங்கள்.” உலக முழுவதிலிருந்தும் குடியிறங்க அனுமதிக்கப்படும் எண்ணிக்கை ஏலத்திற்குட்படுத்தப்பட்டு, அதில் யார் அதிக உயர்வாகக் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த உரிமையை வழங்கப்பட வேண்டும். அந்த உரிமையை இப்படியாக ஏல முறையில் வாங்குபவர்கள், “இப்பொழுது அனுமதிக்கப்படுவர். பின்பு அவர்களுடைய வருமான வரியுடன் சேர்த்து அந்தத் தொகையைக் கொடுத்திட அனுமதிக்கப்படுவார்கள். அந்தத் தொகையைச் செலுத்த தவறுதல், அவர்கள் தங்கள் அனுமதியை இழந்து போவதில் விளைவடையும்,” என்றும் சைமன் கூறுகிறார். இந்த முறை ஐக்கிய மாகாணங்களுக்கு அதிக உதவியாக இருக்கும், ஏனெனில், “அதிக மதிப்பு வாய்ந்த பொருட்களை உற்பத்திச் செய்யும் திறமை படைத்த ஆட்களை அடையாளங் காண்பதற்கு இது உதவியாக இருக்கும்.”
இவருடைய கருத்து எப்படிப்பட்ட ஆட்களை வரவேற்பதாக இருக்கும்? ஜூலியன் சைமன் எழுதுகிறார்: “பேராசை மிகுந்தவர்கள், இவர்களுக்குத்தான் அமெரிக்கா அதிகமான பணத்தை சம்பாதிப்பதற்கான ஒரு பெரிய அங்காடியாக இருக்கிறது.” இந்தக் கொள்கை “உனது களைப்புற்ற, ஏழ்மையான, . . . அலைபாயும் உன்னுடைய கடற்கரையில் அலைக்கழியும் ஒன்றுக்கும் உதவாதவர்களை எனக்குக் கொடு,” என்ற எம்மா லாசரஸின் வார்த்தைகளுக்கு இசைவாக இருக்க முடியாது. மறுபட்சத்தில், ‘உன்னுடைய பேராசையும் திறமையும் உடையவர்களை எனக்குக் கொடு, உன்னுடைய ஏழையையும் ஒடுக்கப் பட்டவர்களையும் உனக்கே வைத்துக்கொள்,’ என்பதே அங்குள்ள செய்தியாக இருக்கிறது.
உண்மையான விடுதலையின் ஊற்றுமூலம்
இந்தப் பெரிய குடியிறக்கப் பிரச்னைக்கு அடைப்படைக் காரணம் என்ன? ஜான் க்ரூட்சன் பதில் சொல்கிறார்: “உலகமுழுவதும் காணப்படும் வறுமையின் ஒடுக்குதலும் மக்கள் தொகைப் பெருக்கமும், அல்லது தவிர்க்கப்பட முடியாத பஞ்சமும், அரசியல் அழுத்தங்களும் போர்களும்.” இந்தப் பிரச்னைகளை நாம் பல நூற்றாண்டுகளாகப் பார்த்து வந்திருக்கிறோம், இவற்றிற்கு எந்த ஒரு அரசியல் முறையும் ஒரு நிரந்தர தீர்வை அல்லது பரிகாரத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே கேள்வியானது—வறுமையிலிருந்தும், ஒடுக்குதலிலிருந்தும், வியாதியிலிருந்தும், மரணத்திலிருந்தும் நாம் உண்மையான விடுதலையை எங்கிருந்து எதிர்பார்க்கலாம்?
எந்த ஒரு தேசமும் அல்லது அரசியல் தத்துவமும், மனிதவர்க்கத்தின் தேவைகளுக்கு முழு விடையைக் கொண்டில்லை. ஏன் இல்லை? ஏனென்றால், விசுவாச துரோக கிறிஸ்தவர்களுக்குப் பேதுரு அப்போஸ்தலன் பொருத்தின அதே நியமம்தான் அவர்களுக்கும் பொருந்துகிறது: “தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்.” (2 பேதுரு 2:19) இந்த உலகத்தைப் “பொய்க்குப் பிதாவாகிய” சாத்தான் ஆட்டிப்படைக்கிறான். சாத்தானின் காணக்கூடாத ஆதிக்கத்தின் கீழிருக்கும் அரசியல் ஆட்சி ஊழல் கட்டில் காணப்படுகிறது. விடுதலை, இன ஒற்றுமை, மற்றும் ஒழுக்கம் ஆகிய காரியங்கள், அரசியல் பேராசை மற்றும் தன்னல லாபம் என்ற பீடத்தில் பலியாக்கப்பட்டுவிடுகிறது.—யோவான் 8:44; 1 யோவான் 5:19.
இதற்கு மாறாக, 1,900 ஆண்டுகளுக்கு முன்பு இயேசு சொன்னார்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” இந்த வார்த்தைகளுக்கு இன்றும் அதிக வல்லமை இருக்கிறது. ஆனால் இயேசு குறிப்பிட்ட சத்தியம் என்பது என்ன? பொந்தியு பிலாத்துவுக்கு இயேசு கொடுத்த பதில் இதற்கு விளக்கமளிக்கிறது: “நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.”—யோவான் 8:32; 18:37.
கடவுள் வாக்களித்திருக்கும் கிறிஸ்துவின் மூலமான அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டதுதான் அந்தச் சத்தியம். தரிசனமொன்றில் தானியேல் தீர்க்கதரிசி, மேசியாவாகிய “மனுஷ குமாரன்” கடவுளுக்கு முன்பாகக் கொண்டுவரப்படுவதைக் கண்டான். பைபிள் சொல்லுகிறது: “சகல ஜனங்களும், ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது, அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.”—தானியேல் 7:13, 14.
இதோ, இங்குதான் உண்மையான விடுதலையும் சுதந்திரமும் காணப்படும்—இயேசுவிலும் கடவுள் நியமித்திருக்கும் அவருடைய ராஜ்ய ஆட்சியிலும்! அவருடைய நீதியான ஆட்சி வெகு சீக்கிரத்தில் எல்லா விதமான ஒடுக்குதலுக்கும், நோய்க்கும், மரணத்திற்கும் முடிவைக் கொண்டுவரப் போகிறது. இப்படிப்பட்ட விடுதலையையும் சுதந்திரத்தையும் குறித்து அறிந்துகொள்வது நிச்சயமாகவே சிறந்த ஒரு காரியம்.—மத்தேயு 6:9, 10; வெளிப்படுத்துல் 21:3, 4. (g86 6/22)
[பக்கம் 28-ன் படம்]
விடுதலைச் சிலையும் மான்ஹாட்டானின் விண்ணளாவிய மாடிக் கட்டிடங்களும்
[படத்திற்கான நன்றி]
New York Convention & Visitors Bureau
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
New York Convention & Visitors Bureau