திரள்கூட்டமான மெய் வணக்கத்தார்—அவர்கள் எங்கேயிருந்து வந்திருக்கின்றனர்?
“இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள் . . . சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.”—வெளிப்படுத்துதல் 7:9.
1. வெளிப்படுத்துதலில் உள்ள தீர்க்கதரிசனக் காட்சிகள் ஏன் இன்று நம்முடைய பெரும் அக்கறைக்குரியவையாக இருக்கின்றன?
அப்போஸ்தலனாகிய யோவான் யெகோவாவின் நோக்கங்கள் சம்பந்தமாக மகத்தான சம்பவங்கள் அடங்கிய தரிசனங்களை பொ.ச. முதலாம் நூற்றாண்டின் இறுதியில் கண்டார். அவர் தரிசனத்தில் கண்ட சில காரியங்கள் இப்போது நிறைவேற்றமடைந்து கொண்டிருக்கின்றன. மற்றவை சமீப எதிர்காலத்தில் நிறைவேற்றமடையப் போகின்றன. எல்லா சிருஷ்டிக்கும் முன்பாக தம் பெயரை பரிசுத்தப்படுத்தும் யெகோவாவின் மகத்தான நோக்கம் உச்சக்கட்டத்தை அடைவதைச் சுற்றி இவையனைத்தும் இருக்கின்றன. (எசேக்கியேல் 38:23; வெளிப்படுத்துதல் 4:11; 5:13) மேலும், நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை எதிர்பார்ப்புகளை அவை உட்படுத்துகின்றன. அது எவ்வாறு அப்படி இருக்கும்?
2. (அ) அப்போஸ்தலனாகிய யோவான் தன் நான்காவது தரிசனத்தில் எதைக் கண்டார்? (ஆ) இந்தத் தரிசனத்தின் சம்பந்தமாக எந்தக் கேள்விகளை நாம் சிந்திக்கப் போகிறோம்?
2 வெளிப்படுத்துதல் தொடர் தரிசனங்களின் நான்காவது தரிசனத்தில், “நமது தேவனுடைய ஊழியக்காரரின்” நெற்றிகளில் முத்திரை போடும்வரை அழிவுண்டாக்கும் காற்றுகளைத் தேவதூதர்கள் பிடித்திருப்பதை யோவான் கண்டார். பின்பு அவர் அதிக கிளர்ச்சியூட்டும் முன்னேற்றத்தைக் கண்டார்—“சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்” யெகோவாவை வணங்குவதிலும் அவருடைய குமாரனைக் கனம்பண்ணுவதிலும் ஐக்கியப்பட்டவர்களாய் இருந்தனர். இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளியே வரப்போகும் ஜனங்கள் என்று யோவானுக்குச் சொல்லப்பட்டது. (வெளிப்படுத்துதல் 7:1-17) ‘நமது தேவனுடைய ஊழியக்காரர்’ என்று விவரிக்கப்பட்டிருப்பவர்கள் யார்? உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைக்கும் ‘திரள்கூட்டத்தில்’ யார் அடங்கியிருப்பர்? அவர்களுள் நீங்களும் ஒருவராக இருப்பீர்களா?
‘நமது தேவனுடைய ஊழியக்காரர்’ யார்?
3. (அ) தம்மைப் பின்பற்றுபவர்களோடு தமக்குள்ள உறவை யோவான் 10:1-18-ல் இயேசு எப்படி விளக்கினார்? (ஆ) இயேசு தம்முடைய தியாக மரணத்தின் மூலம் தம் செம்மறியாடுகளுக்கு எதை சாத்தியமாக்கினார்?
3 தாம் மரிப்பதற்கு ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு முன்பு, இயேசு தம்மை “நல்ல மேய்ப்பன்” என்றும் தம்மைப் பின்பற்றுபவர்களை “ஆடுகள்” என்றும் அழைத்து தம் ஜீவனை அவர்களுக்காகக் கொடுப்பேன் என்று சொன்னார். அடையாளப்பூர்வமான தொழுவத்துக்குள் அவர் கண்டுபிடித்த ஆடுகளையும், அதற்குப் பின்பு அவர் அவற்றிற்குக் காட்டிய விசேஷ அக்கறையையும் பற்றி அவர் விசேஷமாகக் குறிப்பிட்டார். (யோவான் 10:1-18)a இயேசு அன்போடு தம் ஆடுகள் சார்பாக ஜீவனைக் கொடுத்து, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அவர்களை விடுவிக்க தேவையாயிருந்த மீட்கும் கிரயத்தை ஏற்பாடு செய்தார்.
4. இயேசு இங்கே குறிப்பிட்டதற்கு இசைவாக, செம்மறியாடுகளாக முதலாவது கூட்டிச்சேர்க்கப்பட்டவர்கள் யார்?
4 இருப்பினும், அதைச் செய்வதற்கு முன்பு, நல்ல மேய்ப்பராகிய இயேசு தனிப்பட்ட விதமாக சீஷர்களைக் கூட்டிச் சேர்த்தார். இயேசுவின் உவமையில் ‘வாசலைக் காக்கிறவராகிய’ யோவான்ஸ்நானன் முதலில் வந்தவர்களை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தினார். ‘ஆபிரகாமின் வித்தின்’ ஒருங்கிணைந்த பாகமாக ஆவதற்கான வாய்ப்புக்குச் சாதகமாக பிரதிபலிக்கக்கூடிய ஆட்களை இயேசு தேடிக்கொண்டிருந்தார். (ஆதியாகமம் 22:18; கலாத்தியர் 3:16, 29) பரலோக ராஜ்யத்துக்கான போற்றுதலை அவர்களுடைய இருதயங்களில் வளர்த்தார், தம்முடைய பரலோகப் பிதாவின் வீட்டில் அவர்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போவதாக அவர்களுக்கு உறுதியளித்தார். (மத்தேயு 13:44-46; யோவான் 14:2, 3) பொருத்தமாகவே அவர் சொன்னார்: “யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்.” (மத்தேயு 11:12) அந்த இலக்கை அடைவதற்கு அவரைப் பின்பற்றியவர்கள் இயேசு பேசிய தொழுவத்துக்குள் இருப்பதாக நிரூபித்தனர்.
5. (அ) வெளிப்படுத்துதல் 7:3-8-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘நமது தேவனுடைய ஊழியக்காரர்’ யாவர்? (ஆ) ஆவிக்குரிய இஸ்ரவேலருடன் வணக்கத்தில் இன்னும் அநேகர் சேர்ந்துகொள்வர் என்பதை எது காட்டுகிறது?
5 அந்தப் பரலோக இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேறிச் செல்பவர்களும்கூட ‘நமது தேவனுடைய ஊழியக்காரர்’ என்று வெளிப்படுத்துதல் 7:3-8-ல் குறிப்பிடப்பட்டுள்ளனர். (1 பேதுரு 2:9, 16-ஐக் காண்க.) அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் 1,44,000 பேர் இயற்கையான யூதர்கள் மட்டும்தானா? இயேசுவின் உவமையில் உள்ள அடையாளத் தொழுவத்துக்குள் இருப்பவர்கள் வெறும் யூதர்கள் மட்டும்தானா? நிச்சயமாகவே இல்லை. அவர்கள் கடவுளின் ஆவிக்குரிய இஸ்ரவேலின் அங்கத்தினர்களாக இருக்கின்றனர், ஆபிரகாமின் ஆவிக்குரிய வித்தில் கிறிஸ்துவோடு அவர்கள் அனைவரும் கூட்டாளிகளாக இருக்கின்றனர். (கலாத்தியர் 3:28, 29; 6:16; வெளிப்படுத்துதல் 14:1, 3) அந்த நேரம் இறுதியில் வரும், நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவுபெறும்போது வரும். அப்போது என்ன நடக்கும்? பைபிள் முன்னறிவித்துள்ளபடி, மற்றவர்கள்—திரள்கூட்டமான ஜனங்கள்—இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலரோடு யெகோவாவை வணங்குவதில் சேர்ந்து கொள்வர்.—சகரியா 8:23.
‘வேறே ஆடுகள்’—அவர்கள் புறஜாதி கிறிஸ்தவர்களா?
6. என்ன முன்னேற்றத்தை யோவான் 10:16 சுட்டிக்காட்டுகிறது?
6 யோவான் 10:7-15 வரை ஒரு தொழுவத்தைக் குறிப்பிட்ட பிறகு, இயேசு மற்றொரு தொகுதியை கவனத்துக்குக் கொண்டுவந்து இவ்வாறு சொல்கிறார்: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” (யோவான் 10:16) அந்த ‘வேறே ஆடுகள்’ யார்?
7, 8. (அ) வேறே ஆடுகள் புறஜாதி கிறிஸ்தவர்கள் என்ற கருத்து ஏன் தவறான முற்கூற்றின் பேரில் சார்ந்தது? (ஆ) பூமியைப் பற்றிய கடவுளுடைய நோக்கத்தைக் குறித்த எந்த உண்மைகள் வேறே ஆடுகள் யார் என்பதைப் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்?
7 கிறிஸ்தவமண்டல கருத்துரையாளர்கள், இந்த வேறே ஆடுகள் புறஜாதி கிறிஸ்தவர்கள் என்றும், தொழுவத்துக்குள் இருப்பதாக முன்பு குறிப்பிடப்பட்டவர்கள் யூதர்கள், நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் இருந்தவர்கள் என்றும், இரண்டு வகுப்பாரும் பரலோகத்துக்குச் செல்வர் என்ற எண்ணத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இயேசு யூதனாக பிறந்தார், யூத தேசத்தைச் சேர்ந்தவராயிருந்தபடியால் நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் இருந்தார். (கலாத்தியர் 4:4) கூடுதலாக, பரலோக வாழ்க்கையை வெகுமதியாகப் பெறப்போகும் புறஜாதி கிறிஸ்தவர்களை வேறே ஆடுகளாக எண்ணுபவர்கள் கடவுளுடைய நோக்கத்தின் ஒரு முக்கியமான அம்சத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறுகின்றனர். யெகோவா முதல் மானிடர்களைப் படைத்து ஏதேன் தோட்டத்தில் வைத்த போது, பூமி மக்களால் நிரப்பப்பட்டு முழுவதும் ஒரு பரதீஸாக இருக்கவேண்டும் என்றும் அதை கவனித்துக்கொள்ளும் மானிடர்கள்—தங்கள் படைப்பாளரை மதித்து அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்—என்றென்றுமாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் நோக்கம் கொண்டிருந்ததைத் தெளிவாக்கினார்.—ஆதியாகமம் 1:26-28; 2:15-17; ஏசாயா 45:18.
8 ஆதாம் பாவம் செய்தபோது யெகோவாவின் நோக்கம் தடைபடவில்லை. ஆதாம் போற்றத் தவறியதை ஆதாமின் சந்ததி அனுபவிப்பதற்கு ஒரு வாய்ப்பைக் கொண்டிருக்க கடவுள் அன்பாக ஏற்பாடு செய்தார். ஒரு மீட்பரை, ஒரு வித்தை எழும்பப்பண்ணி அவர் மூலம் எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று யெகோவா முன்னறிவித்தார். (ஆதியாகமம் 3:15; 22:18) பூமியிலுள்ள எல்லா நல்ல மக்களும் பரலோகத்துக்கு எடுத்துச் செல்லப்படுவர் என்பதை அந்த வாக்கு அர்த்தப்படுத்தவில்லை. இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு ஜெபம் செய்யக் கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) அவர் யோவான் 10:1-16 வரை பதிவுசெய்யப்பட்டிருக்கும் உவமையை சொல்வதற்கு சிறிது காலத்துக்கு முன்பு, ‘சிறு மந்தைக்கு’ மட்டும் பரலோக ராஜ்யத்தைக் கொடுப்பதாக தம் பிதா அங்கீகரித்திருக்கிறார் என்று இயேசு தம் சீஷர்களிடம் சொல்லியிருந்தார். (லூக்கா 12:32, 33) தம் ஆடுகள் சார்பாக ஜீவனைக் கொடுக்கும் நல்ல மேய்ப்பன் என்று தம்மை அழைத்துக்கொண்ட இயேசுவின் உவமையை நாம் வாசிக்கும் போது, தம்முடைய பரலோக ராஜ்யத்தின் பூமிக்குரிய பிரஜைகளாக ஆகும் நபர்களை தம் அன்பான கவனிப்பின்கீழ் இயேசு கொண்டு வரும் பெரும்பாலான ஜனங்களை அக்காட்சியில் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது தவறாக இருக்கும்.—யோவான் 3:16.
9. 1884-லிலேயே பைபிள் மாணாக்கர் வேறே ஆடுகளின் அடையாளக்குறி என்ன என்பதாக புரிந்துகொண்டார்கள்?
9 கடவுளின் ஆதி நோக்கத்தை நிறைவேற்றப்போகும் நிலைமைகளின்கீழ் இந்தப் பூமியில் வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் ஜனங்கள் தான் வேறே ஆடுகள் என்று 1884-ஆம் வருடத்திலேயே ஆங்கில காவற்கோபுரம் அடையாளம் காட்டியது. இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்துக்கு முன்பு வாழ்ந்து மரித்திருந்த சிலர் இந்த வேறே ஆடுகளில் இருப்பர் என்று அந்த ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் உணர்ந்தனர். என்றபோதிலும், அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாத சில விவரங்கள் இருந்தன. உதாரணமாக, எல்லா அபிஷேகம்செய்யப்பட்டவர்களும் தங்கள் பரலோக வெகுமதியைப் பெற்றுக்கொண்ட பின்பு, வேறே ஆடுகளைக் கூட்டிச் சேர்க்கும் வேலை நடைபெறும் என்று அவர்கள் நம்பினர். இருப்பினும், வேறே ஆடுகள் வெறும் புறஜாதி கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை அவர்கள் நிச்சயமாக உணர்ந்தனர். வேறே ஆடுகளில் ஒருவராக ஆவதற்கான வாய்ப்பு யூதர்களுக்கும் புறஜாதிகளுக்கும் எல்லா தேசங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த ஜனங்களுக்கும் கிடைக்கக்கூடியதாயிருக்கிறது.—அப்போஸ்தலர் 10:34, 35-ஐ ஒப்பிடுக.
10. இயேசு உண்மையாகவே தம்முடைய வேறே ஆடுகளாக நோக்குபவர்களாக நாம் இருக்கவேண்டுமானால், நம் சம்பந்தமாக எது உண்மையாயிருக்க வேண்டும்?
10 இயேசு கொடுத்த விவரிப்புக்குப் பொருத்தமாய் இருக்கவேண்டுமென்றால், வேறே ஆடுகள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும் இயேசு கிறிஸ்துவை நல்ல மேய்ப்பராக அங்கீகரிக்க வேண்டிய ஜனங்களாய் இருக்கவேண்டும். அது எதை உள்ளடக்கும்? அவர்கள் வழிநடத்தப்படுவதற்கு ஆடுகளின் சுபாவப் பண்புகளாகிய தாழ்மையையும் மனமுவந்தத்தன்மையையும் காண்பிக்க வேண்டும். (சங்கீதம் 37:11) சிறு மந்தையின் விஷயத்தில் உண்மையாயிருப்பது போல், அவர்கள் “[நல்ல மேய்ப்பனின்] சத்தத்தை அறிந்திருக்”கவேண்டும், தங்கள்மீது செல்வாக்குச் செலுத்த நாடும் மற்றவர்களால் தாங்கள் வழிநடத்தப்படும்படி அனுமதிக்கக்கூடாது. (யோவான் 10:4; 2 யோவான் 9, 10) தம் ஆடுகள் சார்பாக தம் ஜீவனை அளிப்பதில் இயேசு செய்தவற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் மதித்துணர்ந்து, அந்த ஏற்பாட்டில் முழு விசுவாசம் காண்பிக்க வேண்டும். (அப்போஸ்தலர் 4:12) யெகோவாவுக்கு மட்டுமே பரிசுத்த சேவை செய்ய வேண்டும், ராஜ்யத்தைத் தொடர்ந்து முதலாவது தேட வேண்டும், உலகத்திலிருந்து பிரிந்திருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் சுய-தியாகமுள்ள அன்பைக் காண்பிக்க வேண்டும் என்று நல்ல மேய்ப்பர் அவர்களை ஊக்குவிக்கும்போது, அவர்கள் அவருக்குச் “செவிகொடுக்க” வேண்டும். (மத்தேயு 4:10; 6:31-33; யோவான் 15:12, 13, 19) வேறே ஆடுகள் என்று இயேசு நோக்கும் ஆட்களின் விவரிப்பில் நீங்கள் பொருந்துகிறீர்களா? அவ்வாறிருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? இயேசுவின் வேறே ஆடுகளாக ஆவதற்கு உண்மையிலேயே விரும்பும் அனைவருக்கும் எப்படிப்பட்ட அருமையான உறவு கிடைக்கக்கூடியதாயிருக்கிறது!
ராஜ்ய அதிகாரத்துக்கு மரியாதை
11. (அ) தம்முடைய வந்திருத்தலின் அடையாளத்தில், வெள்ளாடுகளைப் பற்றியும் செம்மறியாடுகளைப் பற்றியும் இயேசு என்ன சொன்னார்? (ஆ) இயேசு குறிப்பிடும் சகோதரர்கள் யாவர்?
11 மேலே கொடுக்கப்பட்டுள்ள உவமையை அவர் சொல்லி அநேக மாதங்களுக்குப் பின்பு, இயேசு மறுபடியும் எருசலேமில் இருந்தார். ஆலயத்தை நோக்கியவாறு ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், ‘தம்முடைய வந்திருத்தலுக்கும் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளத்தைப்,’ பற்றிய விவரங்களை அவர் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். (மத்தேயு 24:3, NW) அவர் மறுபடியும் ஆடுகளைக் கூட்டிச்சேர்ப்பதைப் பற்றி பேசினார். மற்ற காரியங்களோடுகூட அவர் இதைச் சொன்னார்: “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.” இந்த உவமையில், ராஜாவின் கவனத்தின்கீழ் வருபவர்கள் அவருடைய ‘சகோதரர்களை’ அவர்கள் எவ்வாறு நடத்தினர் என்பதன் பேரில் நியாயந்தீர்க்கப்படுவர் என்று இயேசு காண்பித்தார். (மத்தேயு 25:31-46) இந்தச் சகோதரர்கள் யார்? அவர்கள் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், ஆகையால் அவர்கள் ‘தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.’ இயேசு கடவுளின் முதற்பேறான குமாரன். ஆகையால் அவர்கள் கிறிஸ்துவின் சகோதரர்கள். அவர்கள் வெளிப்படுத்துதல் 7:3-ல் குறிப்பிடப்பட்டுள்ள ‘நமது தேவனுடைய ஊழியக்காரர்,’ கிறிஸ்துவோடு பரலோக ராஜ்யத்தில் பங்கடைவதற்கு மனிதவர்க்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.—ரோமர் 8:14-17.
12. மக்கள் கிறிஸ்துவின் சகோதரர்களை நடத்தும் விதம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாய் உள்ளது?
12 இந்த ராஜ்ய சுதந்தரவாளிகளை மற்ற மானிடர்கள் நடத்தும் விதம் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது. யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் அவர்களை நோக்குவது போல் நீங்கள் அவர்களை நோக்குகிறீர்களா? (மத்தேயு 24:45-47; 2 தெசலோனிக்கேயர் 2:13) இந்த அபிஷேகம்செய்யப்பட்டவர்களிடமாக ஒரு நபர் காண்பிக்கும் மனப்பான்மை, இயேசு கிறிஸ்துவிடமாகவும் சர்வலோகப் பேரரசராகிய அவருடைய பிதாவிடமாகவும் அவர் காண்பிக்கும் மனப்பான்மையைப் பிரதிபலிக்கிறது.—மத்தேயு 10:40; 25:34-46.
13. எந்த அளவுக்கு பைபிள் மாணாக்கர்கள் 1884-ல் வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளைப் பற்றிய உவமையைப் புரிந்துகொண்டனர்?
13 இந்த உவமையிலிருக்கும் ‘செம்மறியாடுகள்’ இப்பூமியில் பரிபூரண ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பை தங்களுக்கு முன் வைத்திருப்பவர்கள் என்று ஆங்கில காவற்கோபுரம் ஆகஸ்ட் 1884 இதழ் சரியாகக் குறிப்பிட்டுக் காட்டியது. கிறிஸ்து தம் மகிமையான பரலோக சிங்காசனத்திலிருந்து ஆட்சி செய்யும்போது இந்த உவமை பொருத்தத்தைக் கொண்டிருக்கும் என்றும்கூட புரிந்துகொள்ளப்பட்டது. எனினும், அங்கே விவரிக்கப்பட்டிருக்கும் பிரிக்கும் வேலையை அவர் எப்போது ஆரம்பிப்பார், அது எவ்வளவு காலம் நீடித்திருக்கும் என்பதை அவர்கள் அந்தச் சமயத்தில் தெளிவாக அறிந்துகொள்ளவில்லை.
14. இயேசுவின் தீர்க்கதரிசன உவமை எப்போது நிறைவேற்றப்படும் என்பதை பைபிள் மாணாக்கர்கள் போற்றுவதற்கு 1923-ல் ஒரு மாநாட்டு பேச்சு எவ்வாறு உதவியது?
14 இருப்பினும், 1923-ல் மாநாட்டுப் பேச்சு ஒன்றில், அப்போது சொஸைட்டியின் பிரஸிடென்ட்டாக இருந்த ஜே. எஃப். ரதர்ஃபர்டு செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமை நிறைவேற்றமடையப்போகும் காலத்தைத் தெளிவுபடுத்தினார். ஏன்? இராஜாவின் சகோதரர்களில் சிலராவது இன்னும் பூமியில் இருப்பர் என்று அந்த உவமை காண்பிக்கிறது. மானிடர்கள் மத்தியில், ஆவியால்-பிறப்பிக்கப்பட்டு அவரைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே அவருடைய சகோதரர்கள் என்று உண்மையிலேயே அழைக்கப்படக்கூடும். (எபிரெயர் 2:10-12) இயேசு விவரித்த வழிகளில் ஜனங்கள் அவர்களுக்கு நன்மை செய்வதற்கு சந்தர்ப்பத்தை அளிக்க இவர்கள் ஆயிர வருட ஆட்சி முழுவதும் பூமியில் இருக்கமாட்டார்கள்.—வெளிப்படுத்துதல் 20:6.
15. (அ) இயேசுவின் உவமையில் உள்ள செம்மறியாடுகளை சரியாக அடையாளம் காண என்ன முன்னேற்றங்கள் பைபிள் மாணாக்கர்களுக்கு உதவின? (ஆ) இராஜ்யத்தின் பேரில் தங்களுக்கு உள்ள போற்றுதலுக்கு அத்தாட்சியை செம்மறியாடுகள் எவ்வாறு கொடுத்திருக்கின்றனர்?
15 செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றி ஆண்டவர் கொடுத்த விவரிப்புக்குப் பொருத்தமாய் இருப்பவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்கு 1923-ல் கொடுக்கப்பட்ட பேச்சில் முயற்சி எடுக்கப்பட்டது, அந்த உவமையின் முழு உட்கருத்தும் தெளிவாக ஆவதற்கு முன்பு மற்ற விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருந்தது. அதைப் பின்தொடர்ந்து வந்த ஆண்டுகளின்போது, யெகோவா இந்த முக்கியமான விவரங்களைத் தம் ஊழியர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். பூமியில் இருக்கும் ஆவியினால் அபிஷேகம்செய்யப்பட்டுள்ள கிறிஸ்தவர்களின் முழுத்தொகுதியும் தான் “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” என்று 1927-ல் தெளிவாக விளங்கிக்கொள்ளப்பட்டதும் இதில் அடங்கியிருந்தது; யெகூவோடு யோனதாப் செய்தது போல ஒருவர் பயமின்றி தன்னை யெகோவாவின் அபிஷேகம்செய்யப்பட்ட ஊழியர்களோடு நெருக்கமாக அடையாளம் காட்டவேண்டிய தேவையும்கூட 1932-ல் போற்றப்பட்டது. (மத்தேயு 24:45; 2 இராஜாக்கள் 10:15) அந்தச் சமயத்தில் வெளிப்படுத்துதல் 22:17-ன் அடிப்படையில், இந்தச் செம்மறியாட்டைப் போன்றவர்கள் மற்றவர்களிடமாக ராஜ்ய செய்தியை எடுத்துச் செல்வதில் பங்குகொள்ளும்படி திட்டவட்டமாக உற்சாகப்படுத்தப்பட்டனர். மேசியானிய ராஜ்யத்துக்கான அவர்களுடைய போற்றுதல், ஆண்டவரின் அபிஷேகம்செய்யப்பட்டவர்களிடமாக வெறுமனே மனித தயவைக் காண்பிப்பது மட்டுமல்லாமல், தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் ஒப்புக்கொடுத்து, அவருடைய அபிஷேகம்செய்யப்பட்டவர்களோடு நெருக்கமாகக் கூட்டுறவுக்கொண்டு அவர்கள் செய்யும் வேலையில் வைராக்கியமாய் பங்குகொள்வதற்கு அவர்களை உந்துவிக்கும். நீங்கள் அதைச் செய்கிறீர்களா? அதைச் செய்பவர்களை நோக்கி ராஜா சொல்வார்: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.” அந்த ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியில் பரிபூரணத்தோடு நித்திய ஜீவனை அனுபவிக்கும் மகத்தான எதிர்பார்ப்பு அவர்களுக்கு முன்பாக இருக்கும்.—மத்தேயு 25:34, 46.
‘திரள்கூட்டத்தார்’—அவர்கள் எங்கே செல்கின்றனர்?
16. (அ) வெளிப்படுத்துதல் 7:9-ன் திரளான மக்களை, அல்லது திரள்கூட்டத்தாரை அடையாளம் காண்பதைக் குறித்ததில் ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் என்ன தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தனர்? (ஆ) எப்போது மற்றும் எந்த அடிப்படையில் அவர்களுடைய எண்ணம் திருத்தப்பட்டது?
16 வெளிப்படுத்துதல் 7:9, 10-ல் உள்ள திரளான மக்கள் (அல்லது, திரள்கூட்டத்தார்), யோவான் 10:16-ல் உள்ள வேறே ஆடுகள் மற்றும் மத்தேயு 25:33-ல் உள்ள செம்மறியாடுகள் ஆகியவற்றிலிருந்து வித்தியாசப்பட்டவர்கள் என்று யெகோவாவின் ஊழியர்கள் சில காலம் நம்பினர். “சிங்காசனத்திற்கு முன்பாக” அவர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள் என்று பைபிள் சொல்வதால், அவர்கள் பரலோகத்தில் இருப்பார்கள் என்றும், ஆனால் கிறிஸ்துவோடு உடன் அரசர்களாக சிங்காசனங்களிலிருந்து ஆட்சி செய்யாமல், சிங்காசனத்திற்கு முன்பு இரண்டாவது ஸ்தானத்தில் இருப்பார்கள் என்றும் நினைத்தனர். அவர்கள் மெய்யான சுய-தியாகமுள்ள ஆவியைக் காண்பிக்காதவர்கள், உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக இருப்பதில் குறைவுபட்டவர்கள் என்பதாக நோக்கப்பட்டனர். அந்த எண்ணம் 1935-ல் திருத்தப்பட்டது.b மத்தேயு 25:31, 32 போன்ற வசனங்களைக் கவனத்தில் கொண்டு வெளிப்படுத்துதல் 7:9-ஐ ஆராய்ந்து பார்த்தது, இங்கே பூமியில் இருக்கும் ஆட்கள் “சிங்காசனத்திற்கு முன்பாக” இருக்கமுடியும் என்பதைத் தெளிவாக்கியது. மேலும் உண்மைத்தன்மைக்குக் கடவுள் இரண்டு தராதரங்களைக் கொண்டில்லை என்றும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டது. அவருடைய அங்கீகாரத்தைக் கொண்டிருக்கப்போகும் அனைவரும் அவருக்கு உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ள வேண்டும்.—மத்தேயு 22:37, 38; லூக்கா 16:10.
17, 18. (அ) பூமியில் நித்திய ஜீவனை எதிர்பார்த்திருந்தவர்களின் எண்ணிக்கையில் 1935-ஆம் வருடத்திலிருந்து என்ன காரணம் பெரும் அதிகரிப்பைத் தூண்டுவித்தது? (ஆ) என்ன முக்கிய வேலையில் திரள்கூட்டத்தைச் சேர்ந்தோர் வைராக்கியமாக பங்குகொள்கின்றனர்?
17 அநேக வருடங்களாக யெகோவாவின் ஜனங்கள் பூமியைப் பற்றிய கடவுளின் வாக்குகளைக் குறித்து பேசியிருக்கின்றனர். 1920-களில் நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தவற்றின் நிமித்தமாக, “இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோர் இனி ஒருபோதும் மரிக்கமாட்டார்கள்” என்று அவர்கள் அறிவித்தனர். அந்தச் சமயத்தில் ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக கடவுள் செய்திருந்த ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டவர்கள் இலட்சக்கணக்கானோராக இல்லை. சத்தியத்தை ஏற்றுக்கொண்டிருந்த பெரும்பான்மையோரில் பரிசுத்த ஆவி பரலோக வாழ்க்கைக்குரிய நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஆயினும், விசேஷமாக 1935-க்குப் பிறகு, ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. பூமியில் நித்திய ஜீவனுக்குரிய நம்பிக்கையை காவற்கோபுரம் கவனியாமல் விட்டிருந்தது என்பதல்ல. அநேக பத்தாண்டுகளாக யெகோவாவின் ஊழியர்கள் இதைக் குறித்து பேசிக்கொண்டும் அந்தப் பைபிளின் விவரிப்புக்குப் பொருந்துவோரை தேடிக்கொண்டும் இருந்தனர். இருப்பினும், யெகோவா திரள்கூட்டத்தின் அங்கத்தினர்களாக ஆகப்போகும் நபர்கள் வெளிப்படும்படியாக விஷயங்களைத் தம்முடைய உரியக்காலத்தில் வழிநடத்தினார்.
18 நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் அநேக ஆண்டுகளாக நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுத்து வந்ததாக கிடைக்கக்கூடிய பதிவுகள் காண்பிக்கின்றன. ஆனால் 1935-க்குப் பிறகு 25 ஆண்டுகளுக்குள், கிறிஸ்துவினுடைய மரணத்தின் வருடாந்தர நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோரின் எண்ணிக்கை பங்கெடுத்து வந்தவர்களின் எண்ணிக்கையைவிட நூற்றுக்கும் மேற்பட்ட மடங்கு திடீரென உயர்ந்தது. இந்த மற்றவர்கள் யார்? திரள்கூட்டத்தின் அங்கத்தினர்களாக ஆகப்போகும் நபர்களே. அவர்களைக் கூட்டிச்சேர்த்து சீக்கிரத்தில் வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பதற்கு அவர்களைத் தயார்படுத்த யெகோவாவின் நேரம் வந்துவிட்டது என்பது தெளிவாயிருந்தது. முன்னறிவிக்கப்பட்டபடி, அவர்கள் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வந்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9) “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்,” என்று இயேசு சொன்னபோது அவர் முன்னறிவித்த வேலையில் அவர்கள் வைராக்கியத்துடன் பங்குகொண்டு வருகின்றனர்.—மத்தேயு 24:14.
[அடிக்குறிப்புகள்]
a யோவான் 10-ம் அதிகாரத்திலுள்ள தொழுவத்தைப் பற்றிய விரிவான, சமீபத்திய கலந்தாலோசிப்புக்கு, ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1984, பக்கங்கள் 10-20, 31-ஐக் காண்க.
b ஆங்கில காவற்கோபுரம், ஆகஸ்ட் 1 மற்றும் 15, 1935.
உங்களுடைய குறிப்பு என்ன?
◻ வெளிப்படுத்துதல் 7-ஆம் அதிகாரத்தில் உள்ள தரிசனம் ஏன் விசேஷித்த அக்கறைக்குரியதாயிருக்கிறது?
◻ யோவான் 10:16-ல் உள்ள வேறே ஆடுகள் ஏன் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு வரையறுக்கப்பட்டதாயில்லை?
◻ வேறே ஆடுகளைப் பற்றிய பைபிள் விவரிப்புக்கு பொருத்தமாயிருப்பவர்களின் விஷயத்தில் எது உண்மையாயிருக்க வேண்டும்?
◻ வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளைப் பற்றிய உவமை, ராஜ்ய அதிகாரத்துக்கான மரியாதையை எவ்விதம் சிறப்பித்துக் காண்பிக்கிறது?
◻ வெளிப்படுத்துதல் 7:9-ல் உள்ள திரள்கூட்டத்தாரைக் கூட்டிச்சேர்ப்பதற்கு யெகோவாவின் நேரம் எப்போது வந்தது என்பதை எது காண்பிக்கிறது?