இயேசுவைக் குற்றவாளியாகத் தீர்த்த பிரதான ஆசாரியன்
நவம்பர் 1990-ம் ஆண்டு. எருசலேமின் பழைய நகரத்திற்குத் தெற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு பூங்காவிலும் ஒரு சாலையிலும் வேலை செய்துகொண்டிருந்த சில ஆட்கள், மலைக்க வைக்கும் ஒன்றைக் கண்டெடுத்தார்கள். அந்த இடத்தின் சுற்றுப்புறப் பகுதி, பொ.ச.மு. முதல் நூற்றாண்டிலிருந்து பொ.ச. முதல் நூற்றாண்டுவரை ஒரு பெரிய இடுகாடாகப் பயன்படுத்தப்பட்டது. அங்கிருந்த பண்டைய காலத்து கல்லறைக் குகையின் கூரையை டிராக்டர் ஒன்று தப்பித்தவறி மோதிவிட்டது. அந்தக் கல்லறையிலிருந்து புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த பொருள்கள் உண்மையிலேயே அவர்களை மலைக்க வைத்தன.
அந்தக் கல்லறை குகையில் 12 எலும்புப் பேழைகள் இருந்தன; இறந்தவர்களின் எலும்புகள் அத்தகைய பேழைகளில் வைக்கப்பட்டிருந்தன; இறந்தவர்களின் உடல் கல்லறையில் வைக்கப்பட்டு சுமார் ஒரு வருடம் கழித்து, மாம்சம் அழுகிப்போன பிறகு அவர்களுடைய எலும்புகள் அப்பேழைகளில் வைக்கப்பட்டன. பிரமாதமாகச் செதுக்கப்பட்டிருந்த ஒரு பேழையின் பக்கவாட்டில்—இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகச் சிறந்த அப்பேழையின் பக்கவாட்டில்—யெஹாஸெஃப் பார் கய்ஃபா (காய்பாவின் மகனான யோசேப்பு) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
அந்த அத்தாட்சி, மிகமிக முக்கியமான விசாரணையை, அதாவது இயேசு கிறிஸ்துவை உட்படுத்திய விசாரணையைத் தலைமைதாங்கி நடத்திய பிரதான ஆசாரியனுடைய கல்லறையாக அது இருக்கலாம் என்பதைக் காண்பிக்கிறது. யூத சரித்திராசிரியரான ஜொசிஃபஸ் அந்தப் பிரதான ஆசாரியனை “காய்பா என்றழைக்கப்பட்ட யோசேப்பு” என்று அடையாளம் காட்டுகிறார். பைபிளில், அந்தப் பிரதான ஆசாரியனின் பெயர் காய்பா என்று மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. நாம் ஏன் அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்? இயேசுவைக் குற்றவாளியாகத் தீர்க்க எது அவரைத் தூண்டியது?
குடும்பமும் பின்னணியும்
மற்றொரு பிரதான ஆசாரியனான அன்னா என்பவரின் மகளை காய்பா மணமுடித்திருந்தார். (யோவான் 18:13) திருமணம் நடப்பதற்கு பல வருடங்கள் முன்னரே ஒருவேளை அவர்களுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கலாம், ஏனெனில் தங்களுக்கு நல்ல சம்பந்தமே கிடைத்திருக்கிறது என்பதை அவ்விரு குடும்பத்தாருமே உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பியிருப்பார்கள். அப்படியானால் தங்களுடைய ஆசாரியக் குடிப்பிறப்பின் புனிதத்தன்மையை நிச்சயப்படுத்திக்கொள்ள வம்சாவளி பட்டியல்களையும் அவர்கள் கவனமாக ஆராய்ந்திருப்பார்கள். இரு குடும்பங்களுமே பணக்கார, உயர்குடி பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும்; எருசலேமிலிருந்த பெரிய பெரிய பண்ணை நிலங்களிலிருந்து அவர்களுக்கு வருமானம் வந்திருக்கும். தன் வருங்கால மருமகன் அரசியலில் தனக்கு நம்பகமான கூட்டாளியாக இருக்க வேண்டுமென அன்னா விரும்பியிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. அன்னாவும் சரி, காய்பாவும் சரி, இருவருமே செல்வாக்குமிக்க சதுசேய சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 5:17.
பிரபல ஆசாரியக் குடும்பத்தின் அங்கத்தினராக இருந்த காய்பா, எபிரெய வேதாகமத்தையும் அதன் விளக்கங்களையும் பயின்றிருப்பார். தன்னுடைய 20-வது வயதிலே ஆலயப் பணியைத் துவங்கியிருப்பார், ஆனால் எந்த வயதில் பிரதான ஆசாரியனாக ஆனார் என்பது தெரியவில்லை.
பிரதான ஆசாரியர்களும் தலைமை ஆசாரியர்களும்
பிரதான ஆசாரியப் பதவி ஆரம்பத்தில் வழிவழியாக மட்டுமே தொடர்ந்தது, ஆயுள்கால நியமனமாகவும் அது இருந்தது. ஆனால், பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில், எஸ்மோனியர்கள் பிரதான ஆசாரியப் பதவியைப் பறித்துக்கொண்டார்கள்.a மகா ஏரோது, பிரதான ஆசாரியர்களை நியமித்தார், பதவியிலிருந்து நீக்கவும் செய்தார்; இந்த நியமிப்புக்குப் பின்னாலிருந்து அதிகாரம் செலுத்தியது அவர்தான் என்பதை இது தெளிவுபடுத்துகிறது. யூதேயாவின் ரோம ஆளுநர்கள் இதுபோன்ற பழக்கத்தையே கடைப்பிடித்தார்கள்.
இத்தகைய திருப்பங்களின் காரணமாக ஒரு புதிய தொகுதி உருவானது; இந்தத் தொகுதியை ‘தலைமை ஆசாரியர்கள்’ என்று பைபிள் குறிப்பிடுகிறது. (மத்தேயு 26:3, 4, NW) இத்தொகுதியில் காய்பா உட்பட, அன்னா போன்ற முன்னாள் பிரதான ஆசாரியர்கள் இருந்தார்கள்; இவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தபோதிலும் அந்தப் பட்டப்பெயரைத் தக்க வைத்துக்கொண்டார்கள். அப்போதிருந்த பிரதான ஆசாரியர்களின் நெருங்கிய குடும்பத்தினரும், முன்னாள் பிரதான ஆசாரியர்களின் நெருங்கிய குடும்பத்தினரும்கூட இத்தொகுதியில் இருந்தார்கள்.
யூதேயாவின் அன்றாட நிர்வகிப்பைக் கவனிக்கும் பொறுப்பை தலைமை ஆசாரியர்கள் உட்பட, யூத உயர்குடி வகுப்பினரிடமே ரோமர்கள் ஒப்படைத்திருந்தார்கள். இதன் காரணமாக, ஏராளமான ராணுவ வீரர்களை அனுப்பாமலேயே ரோம அரசாங்கத்தால் யூதேய மாகாணம் முழுவதையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், வரிகளை வசூலிக்கவும் முடிந்தது. யூத குருவர்க்கம்தான் ஒழுங்கைக் கட்டிக்காக்க வேண்டுமெனவும் நாட்டு நலனில் அக்கறை காண்பிக்க வேண்டுமெனவும் ரோம அரசாங்கம் எதிர்பார்த்தது. ரோம ஆதிக்கத்தை வெறுத்த யூத தலைவர்களை ரோம ஆளுநர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனால், தங்கள் அரசாங்கம் கவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, தங்களுடைய பரஸ்பர நலன் கருதியே அவர்களுடன் ஒத்துழைத்தார்கள்.
காய்பாவின் காலத்திற்குள், பிரதான ஆசாரியன் உண்மையில் ஒரு யூத அரசியல் தலைவனாகவே இருந்தார். பொ.ச. 6 அல்லது 7-ம் ஆண்டில், சீரியாவிலிருந்த ரோம ஆளுநரான சிரேனியு இந்தப் பதவியில் அன்னாவை நியமித்தார். பேராசை, உறவினர்களுக்குத் தனி சலுகைகள், வன்முறை, ஒடுக்குதல் ஆகியவை பிரபல யூத உயர்குடி குடும்பத்தினருக்கே உரிய சிறப்பம்சங்களாய் இருந்ததை ரபீனிய பாரம்பரியம் சுட்டிக்காட்டுகிறது. பிரதான ஆசாரியனாக, அன்னா தன்னுடைய மருமகன் “சீக்கிரத்திலேயே ஆலயத்தின் அதிகார ஏணியில் ஏறும்படி” செய்திருப்பார் என ஓர் எழுத்தாளர் ஊகிக்கிறார்; “காய்பாவின் பதவி எந்தளவு உயர்ந்ததோ அந்தளவு அவர் அன்னாவுக்கு பிரயோஜனமாக இருந்திருப்பார்” எனவும் அவர் ஊகிக்கிறார்.
யூதேயாவின் ஆளுநரான வாலெரியுஸ் கிராட்டுஸ் பொ.ச. 15-ல் அன்னாவைப் பதவிநீக்கம் செய்தார். அன்னாவின் ஒரு மகன் உட்பட, மூன்று பேர் அடுத்தடுத்தாற்போல் பிரதான ஆசாரியர்களாக ஆனார்கள். பொ.ச. 18 வாக்கில், காய்பா பிரதான ஆசாரியனாக ஆனார். பொ.ச. 26-ல் யூதேயாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பொந்தியு பிலாத்து, தனது பத்து ஆண்டுகால ஆட்சி முழுவதிலும் காய்பாவையே பிரதான ஆசாரியனாக அமர்த்தியிருந்தார். இயேசுவின் ஊழியக் காலத்தின்போதும், அவருடைய சீஷர்கள் பிரசங்க வேலையில் ஈடுபட ஆரம்பித்த காலத்தின்போதும் காய்பா அதே பதவியில் நீடித்திருந்தார். ஆனால், கிறிஸ்தவ செய்தியை காய்பா வெகு கடுமையாக எதிர்த்தார்.
இயேசுவுக்குப் பயப்படுதல், ரோமுக்குப் பயப்படுதல்
இயேசுவை ஆபத்தான கிளர்ச்சிக்காரனாக காய்பா கருதினார். ஓய்வுநாள் சட்டங்களுக்குக் குருவர்க்கம் அளித்த விளக்கங்களைப் பற்றி இயேசு கேள்விகளை எழுப்பினார், அதோடு ஆலயத்தை ‘கள்ளர் குகையாக’ ஆக்கிவிட்டதாகச் சொல்லி வியாபாரிகளையும், காசுக்காரர்களையும் ஆலயத்திலிருந்து துரத்தியடித்தார். (லூக்கா 19:45, 46) ஆலயத்திலிருந்த அந்தக் கடைகள் அன்னாவின் குடும்பத்தாருக்குச் சொந்தமானவையாக இருந்திருக்கலாம் என சில சரித்திராசிரியர்கள் நம்புகிறார்கள்; இயேசுவின் வாயை அடைக்க காய்பா முயன்றதற்கு ஒருவேளை அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தலைமை ஆசாரியர்கள் இயேசுவைக் கைதுசெய்ய சில சேவகர்களை அனுப்பினார்கள், ஆனால் அந்தச் சேவகர்கள் இயேசு பேசுவதைக் கேட்டு வாயடைத்துப் போனவர்களாய் அவரைக் கைதுசெய்யாமலேயே வெறுங்கையோடு திரும்பினார்கள்.—யோவான் 2:13-17; 5:1-16; 7:14-49.
லாசருவை இயேசு உயிர்த்தெழுப்பிய விஷயம் குருவர்க்கத்தாரின் காதுகளை எட்டியபோது என்ன நடந்ததென்பதைக் கவனியுங்கள். யோவானின் சுவிசேஷம் இவ்வாறு சொல்கிறது: “பிரதான [அதாவது, தலைமை] ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள்.” (யோவான் 11:47, 48) தங்களது மத அமைப்பின் செல்வாக்கிற்கும், சமுதாய ஒழுங்கிற்கும் இயேசு அச்சுறுத்தலாய் இருப்பதாக ஆலோசனைச் சங்கத்தார் கருதினார்கள்; அத்தகைய ஒழுங்கிற்கு அவர்களையே பொறுப்பாளிகளாக பிலாத்து நியமித்திருந்தான். தங்களது ஆட்சிக்கு விரோதமாக பிரபல இயக்கம் ஒன்று எழும்புகிறது என்ற சந்தேகம் மட்டும் ரோமர்களுக்கு வந்துவிட்டால், யூத விவகாரங்களில் உடனடியாகத் தலையிட்டுவிடுவார்கள்; இதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்றே ஆலோசனைச் சங்கத்தார் துடித்தார்கள்.
இயேசு அற்புதங்கள் செய்ததை காய்பாவால் மறுக்க முடியவில்லை, அதேசமயத்தில், அவரிடம் விசுவாசம் வைக்கவும் இல்லை; அதற்குப் பதிலாக, தன்னுடைய அந்தஸ்தையும் அதிகாரத்தையும் தற்காத்துக்கொள்ளவே முயன்றார். லாசரு உயிர்த்தெழுப்பப்பட்டதை அவரால் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்? ஒரு சதுசேயனாக, உயிர்த்தெழுதலில் முதலாவது அவர் நம்பிக்கையே வைக்கவில்லையே!—அப்போஸ்தலர் 23:8.
காய்பா தனது சக ஆட்சியாளர்களிடம் சொன்ன விஷயம் காய்பாவின் நயவஞ்சகத்தை அப்படியே பிட்டுவைத்தது: “ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள்.” அந்தப் பதிவு இவ்வாறு தொடர்கிறது: “இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூத ஜனங்களுக்காக மரிக்கப் போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காக மாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப் போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான். அந்நாள்முதல் அவரைக் கொலை செய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.”—யோவான் 11:49-53.
தான் சொன்ன வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் காய்பா புரிந்திருக்கவில்லை. பிரதான ஆசாரியனாகச் சேவை செய்த அவர், ஒரு தீர்க்கதரிசனத்தையே சொல்லியிருந்தார்.b ஆம், இயேசுவின் மரணம் யூதர்களுக்கு மட்டுமே அல்ல, எல்லாருக்கும் நன்மை அளிக்கும். அவருடைய கிரய பலி முழு மனிதவர்க்கத்தையே பாவத்தின் பிடியிலிருந்தும் மரணத்தின் பிடியிலிருந்தும் விடுவிக்க வழிசெய்யும்.
கொலை செய்ய கூட்டுச்சதி
இயேசுவை எப்படிப் பிடிக்கலாம், எப்படிக் கொலை செய்யலாம் என்பதையெல்லாம் கலந்துபேச, யூத தலைமை ஆசாரியர்களும் மூப்பர்களும் காய்பாவின் வீட்டில் கூடிவந்தார்கள். இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ்காரியோத்துக்கு எவ்வளவு பணம் கொடுப்பது என்பதைத் தீர்மானிப்பதற்கு பிரதான ஆசாரியன் துணைபுரிந்ததாகத் தெரிகிறது. (மத்தேயு 26:3, 4, 14, 15) ஆனால், ஒரோவொரு நபரை மட்டும் கொலை செய்வது காய்பாவின் பொல்லாத திட்டங்களை நிறைவேற்ற போதுமானதாக இருக்கவில்லை. “லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் . . . இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால், பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலை செய்ய ஆலோசனைபண்ணினார்கள்.”—யோவான் 12:10, 11.
இயேசுவைக் கைதுசெய்ய அனுப்பப்பட்ட ஆட்களில் காய்பாவின் வேலைக்காரனான மல்குஸ் என்பவனும் இருந்தான். கைதுசெய்யப்பட்ட இயேசு விசாரணைக்காக முதலில் அன்னாவிடமும், பிறகு காய்பாவிடமும் அழைத்துச் செல்லப்பட்டார்; யூத சட்டத்திற்கு விரோதமாக இரவுநேர விசாரணையை நடத்துவதற்கு காய்பா ஏற்கெனவே யூத மூப்பர்களையெல்லாம் கூடிவரச் செய்திருந்தார்.—மத்தேயு 26:57; யோவான் 18:10, 13, 19-24.
இயேசுவுக்கு எதிராகப் பொய் சாட்சி கூறியவர்கள் ஒருவருக்கொருவர் முரணாகச் சாட்சிகொடுத்தபோதிலும் காய்பா சற்றும் பின்வாங்கவில்லை. மேசியா என்று சொல்லிக்கொள்பவர்களைப் பற்றிய தன் கூட்டாளிகளின் அபிப்பிராயங்களை அந்தப் பிரதான ஆசாரியன் அறிந்திருந்தார். அதனால் இயேசுவும் அந்தப் பட்டப்பெயருக்குச் சொந்தம் கொண்டாடுகிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் ஆணையிட்டுக் கேட்டார். அதற்கு இயேசு, தம்மைக் குற்றம்சாட்டுகிறவர்கள் தாம் “சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள் மேல் வருவதையும்” காண்பார்கள் என்று பதில் அளித்தார். தேவபக்தியுள்ளவர் போல் காட்டிக்கொள்வதற்காக, ‘பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?’” என்று கூறினார். அதன்பின், இயேசு மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறார் என்று ஆலோசனைச் சங்கத்தார் ஒருமனதாகச் சொன்னார்கள்.—மத்தேயு 26:63-66.
மரணதண்டனை தீர்ப்புகளை ரோமர்கள்தான் அங்கீகரிக்க வேண்டியிருந்தது. அவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே மத்தியஸ்தராக இருந்த காய்பாவே பிலாத்துவுக்கு முன் இந்த வழக்கை கொண்டுவந்திருக்க வேண்டும். அதோடு, இயேசுவை பிலாத்து விடுவிக்க முயன்றபோது, “அவனைக் கழுவேற்றுங்கள்! கழுவேற்றுங்கள்!” என்று சத்தமிட்ட தலைமை ஆசாரியர்களில் காய்பாவும் இருந்திருக்க வேண்டும். (யோவான் 19:4-6, NW) மேலும், இயேசுவுக்குப் பதிலாக ஒரு கொலைகாரனை விடுவிக்குமாறு கூக்குரலிடும்படி ஜனக்கூட்டத்தாரைத் தூண்டிவிட்டதும் அவராகத்தான் இருந்திருக்க வேண்டும்; அதுமட்டுமல்ல, “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை” என்று போலித்தனமாக அறிவித்த ஆசாரியர்களில் ஒருவராகவும் அவர் இருந்திருக்க வேண்டும்.—யோவான் 19:15; மாற்கு 15:7-11.
இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதற்கான அத்தாட்சியை காய்பா ஏற்றுக்கொள்ள மறுத்தார். பேதுருவையும், யோவானையும், பிறகு ஸ்தேவானையும் எதிர்த்தார். அதோடு, தமஸ்குவில் கண்ணில்படும் எல்லாக் கிறிஸ்தவர்களையும் கைதுசெய்வதற்கான அதிகாரத்தை சவுலுக்குக் கொடுத்தார். (மத்தேயு 28:11-13; அப்போஸ்தலர் 4:1-17; 6:8-7:60; 9:1, 2) என்றபோதிலும், பொ.ச. 36 வாக்கில், சிரியாவின் ரோம ஆளுநரான விட்டெலியுஸ் என்பவர் காய்பாவை பதவிநீக்கம் செய்தார்.
யூத புத்தகங்கள் காய்பாவின் குடும்பத்தாரைப் பற்றிப் பாதகமாகவே குறிப்பிடுகின்றன. உதாரணத்திற்கு, பாபிலோனிய டால்மூட் இவ்வாறு புலம்புகிறது: “ஹானினுடைய [அன்னாவினுடைய] குடும்பத்தாரால் எனக்கு ஆபத்து, அவர்களது கிசுகிசுப்பால் [அதாவது, புரளிகளால்] எனக்கு ஆபத்து.” வேதனைமிக்க இவ்வார்த்தைகள் “கொடூர நடவடிக்கைகள் எடுப்பது பற்றித் திட்டமிடுவதற்காக [அன்னாவின் குடும்பத்தார்] நடத்திய இரகசியக் கூட்டங்களை” குறித்ததாக நம்பப்படுகிறது.
காய்பாவின் வாழ்க்கையிலிருந்து நமக்கு ஒரு பாடம்
பிரதான ஆசாரியர்கள் “முரட்டுத்தனமானவர்களாயும், விவரமானவர்களாயும், திறம்பட்டவர்களாயும்—முக்கியமாக, அகந்தையுள்ளவர்களாயும்” இருந்தார்கள் என ஓர் அறிஞர் குறிப்பிட்டார். காய்பா தன் அகந்தையினால்தான் மேசியாவை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, பைபிளிலுள்ள செய்தியை இன்று மக்கள் ஏற்றுக்கொள்ளாததைக் கண்டு நாம் ஊக்கமிழக்கத் தேவையில்லை. சிலர் பைபிள் சத்தியத்தை அவ்வளவாக நேசிக்காததால் தங்களுடைய உயிருக்குயிரான நம்பிக்கைகளை விட்டொழிக்க மனதில்லாமல் இருக்கிறார்கள். வேறு சிலர், நற்செய்தியை அறிவிக்கும் சாதாரண பிரசங்கிகளாக ஆவது தங்களுக்குக் கௌரவக் குறைச்சல் என்று நினைக்கிறார்கள். அதோடு, பித்தலாட்டக்காரர்களும் பேராசைக்காரர்களும் கிறிஸ்தவத் தராதரங்களைக் கண்டு தூரதூர விலகிப்போகிறார்கள்.
மேசியாவை ஏற்றுக்கொள்ள சக யூதர்களுக்குப் பிரதான ஆசாரியனான காய்பாவால் நிச்சயம் உதவியிருக்க முடியும், ஆனால் பதவி மோகத்தின் காரணமாக இயேசுவைக் குற்றவாளியாகத் தீர்த்தார். ஒருவேளை கல்லறையில் தான் மெளனமாகும்வரை காய்பா தொடர்ந்து அந்த விரோதத்தைக் காட்டியிருப்பார். அவருடைய நடத்தையைப் பற்றிய பதிவு ஒரு முக்கிய உண்மையைப் பறைசாற்றுகிறது: ஆம், மரிக்கும்போது, நாம் எலும்புகளை மட்டுமே விட்டுவிட்டுச் செல்வது இல்லை. நம்முடைய செயல்களால், கடவுளிடம் நிரந்தரமான ஒரு பெயரையும் விட்டுவிட்டுச் செல்கிறோம்—அது நல்ல பெயராகவும் இருக்கலாம், கெட்ட பெயராகவும் இருக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a எஸ்மோனியர்களின் சரித்திரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள 2001, ஜூன் 15, காவற்கோபுர இதழில் பக்கங்கள் 27-30-ஐக் காண்க.
b இஸ்ரவேலரைப் பற்றி உண்மையான தீர்க்கதரிசனங்களைச் சொல்வதற்கு, பொல்லாதவனான பிலேயாமை ஒருசமயம் யெகோவா பயன்படுத்தினார்.—எண்ணாகமம் 23:1-24:24.
[பக்கம் 10-ன் படம்]
காய்பாவின் மகனான யோசேப்பு
[பக்கம் 10-ன் படம்]
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புப் பேழை
[பக்கம் 10-ன் படங்களுக்கான நன்றி]
எலும்புப் பேழை, எழுத்துப் பொறிப்பு, பின்னணியில் குகை: Courtesy of Israel Antiquities Authority