“ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள்”
“நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்” என்று சொன்னார்.”—யோவான் 13:34, 35.
இதன் அர்த்தம்: இயேசு தன் சீஷர்கள்மேல் அன்பு காட்டினார். அதேபோல் சீஷர்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்று சொன்னார். இயேசு எப்படியெல்லாம் அன்பு காட்டினார்? அன்றிருந்த மக்களைப் போல் இல்லாமல் அவர் வித்தியாசமாக நடந்துகொண்டார். எந்தப் பாகுபாடும் பார்க்காமல் எல்லார் மீதும் அன்பு காட்டினார். (யோவான் 4:7-10) மற்றவர்களுக்கு உதவி செய்வதற்காக இயேசு தன் நேரத்தையும் சக்தியையும் செலவழித்தார். தன்னுடைய சொந்த சவுகரியங்களையும் விட்டுக்கொடுத்தார். (மாற்கு 6:30-34) அதுமட்டுமல்ல, தன் உயிரையே கொடுக்கும் அளவுக்குத் தலைசிறந்த விதத்தில் அன்பைக் காட்டினார். “நான்தான் நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் உயிரையே கொடுக்கிறான்” என்று அவர் சொன்னார்.—யோவான் 10:11.
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படி அன்பு காட்டினார்கள்? அவர்கள் ஒருவரை ஒருவர் “சகோதரர்” அல்லது “சகோதரி” என்று கூப்பிட்டார்கள். (பிலேமோன் 1, 2) எல்லா தேசங்களைச் சேர்ந்தவர்களையும் கிறிஸ்தவ சபையில் ஏற்றுக்கொண்டார்கள். “யூதனுக்கும் கிரேக்கனுக்கும் இடையில் எந்தப் பாகுபாடும் இல்லை. ஏனென்றால், எல்லாருக்கும் எஜமான் ஒருவரே” என்று அவர்கள் நம்பினார்கள். (ரோமர் 10:11, 12) கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, எருசலேமில் இருந்த சீஷர்கள் “தங்கள் உடைமைகளையும் சொத்துகளையும் விற்று, அந்தப் பணத்தை அவரவருடைய தேவைக்கு ஏற்றபடி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.” எதற்காக? புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள் எருசலேமிலேயே தங்கி ‘அப்போஸ்தலர்கள் சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்துவதற்காக’ அப்படிச் செய்தார்கள். (அப்போஸ்தலர் 2:41-45) அதைச் செய்ய எது அவர்களைத் தூண்டியது? அன்புதான் அவர்களை தூண்டியது என்பதை அப்போஸ்தலர்கள் இறந்து கிட்டத்தட்ட 200 வருஷங்களுக்குப் பிறகு டெர்டுல்லியன் என்ற சரித்திர வல்லுநர் எழுதிய விவரம் காட்டுகிறது. “அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள்! . . . ஒருவருக்காக ஒருவர் சாவதற்குக்கூடத் தயாராக இருக்கிறார்கள்” என்று கிறிஸ்தவர்களைப் பற்றி மற்றவர்கள் சொன்னதாக அவர் எழுதினார்.
இன்று யார் அதுபோல் அன்பு காட்டுகிறார்கள்? கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் “ஒருவரை ஒருவர் கொடூரமாக நடத்தியிருக்கிறார்கள். கிறிஸ்தவர்களாக இல்லாதவர்கள் அவர்களுக்குச் செய்த கொடுமைகளைவிட அது ரொம்ப மோசமானது” என்று ரோம சாம்ராஜ்யத்தின் சரிவு மற்றும் வீழ்ச்சியின் சரித்திரம் (1837) என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது. மதப்பற்று இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் நிறைய பேர் இனப்பாகுபாடு பார்க்கிறார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆராய்ச்சி காட்டுகிறது. பொதுவாக, ஒரு நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இன்னொரு நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்கள்மேல் எந்த அன்பும் பாசமும் இருப்பதில்லை. அதனால் ஒருவருக்கு ஒருவர் உதவ முடிவதில்லை, அப்படி உதவும் எண்ணமே அவர்களுக்கு இல்லை.
2004-ல் இரண்டே மாதங்களில் அடுத்தடுத்து நான்கு சூறாவளிகள் ப்ளோரிடாவைத் தாக்கின. நிவாரணப் பொருளெல்லாம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ப்ளோரிடாவின் அவசரகால இயக்கக் குழுவின் சேர்மன் ஆய்வு செய்தார். யெகோவாவின் சாட்சிகளைத் தவிர வேறெந்தத் தொகுதியுமே அவற்றை ஒழுங்கான முறையில் பயன்படுத்தவில்லை என்று அவர் சொன்னார். அதோடு, யெகோவாவின் சாட்சிகளுக்குத் தேவைப்படும் எல்லாமே கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் சொன்னார். 1997-ல், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு நிவாரணக் குழு, காங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்தது. அவர்களுக்காக மருந்துகளையும் உணவுகளையும் உடைகளையும் எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்தது. ஐரோப்பாவில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் கிட்டத்தட்ட ஏழரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை நன்கொடையாகக் கொடுத்திருந்தார்கள்.