அதிகாரம் 119
இயேசு—வழி, சத்தியம், வாழ்வு
ஒரு இடத்தைத் தயார்படுத்துவதற்காக இயேசு போகிறார்
சகாயரை அனுப்புவதாக வாக்குக் கொடுக்கிறார்
இயேசுவைவிட தகப்பன் பெரியவர்
நினைவுநாள் விருந்துக்குப் பிறகு இயேசு இன்னமும் தன் அப்போஸ்தலர்களோடு அந்த மாடி அறையில்தான் இருக்கிறார். அவர்களிடம், “நீங்கள் மனம் கலங்க வேண்டாம். கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள், என்மேலும் விசுவாசம் வையுங்கள்” என்று சொல்லித் தைரியப்படுத்துகிறார்.—யோவான் 13:36; 14:1.
தான் அவர்களைவிட்டுப் போகப் போவதை நினைத்து அவர்கள் ஏன் கவலைப்படத் தேவையில்லை என்பதை இயேசு விளக்குகிறார். “என்னுடைய தகப்பனின் வீட்டில் தங்குவதற்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. . . . நான் போய் உங்களுக்காக ஒரு இடத்தைத் தயார்படுத்திய பின்பு, மறுபடியும் வந்து என் வீட்டுக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு போவேன். அப்போது, நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்” என்கிறார். பரலோகத்துக்குப் போவதைப் பற்றிப் பேசுகிறார் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அதனால் தோமா, “எஜமானே, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்றுகூட எங்களுக்குத் தெரியாது, அப்படியிருக்கும்போது அந்த வழி எங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கிறார்.—யோவான் 14:2-5.
அதற்கு இயேசு, “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன்” என்று சொல்கிறார். அவரையும் அவருடைய போதனைகளையும் ஏற்றுக்கொண்டு, அவர் வாழ்ந்தது போல் வாழ்ந்தால் மட்டும்தான் தகப்பனின் பரலோக வீட்டுக்குப் போக முடியும். அதனால்தான், “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொல்கிறார்.—யோவான் 14:6.
அவர் சொல்வதை பிலிப்பு ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் இயேசுவிடம், “எஜமானே, தகப்பனை எங்களுக்குக் காட்டுங்கள், அது போதும்” என்கிறார். மோசே, எலியா, ஏசாயா ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த தரிசனங்களில் கடவுளை ஏதோவொரு விதத்தில் பார்த்ததுபோல, தானும் பார்க்க வேண்டும் என்று பிலிப்பு ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட தரிசனங்களைவிட சிறந்த ஒன்றை அப்போஸ்தலர்கள் பார்த்திருக்கிறார்கள். அதை பிலிப்புவுக்குச் சுட்டிக்காட்ட இயேசு விரும்புகிறார். அதனால், “பிலிப்பு, இத்தனை காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னைத் தெரிந்துகொள்ளவில்லையா? என்னைப் பார்த்தவன் என் தகப்பனையும் பார்த்திருக்கிறான்” என்று சொல்கிறார். தகப்பனின் குணங்களை இயேசு அச்சு அசலாக வெளிக்காட்டுகிறார். அதனால், இயேசுவோடு இருந்து, அவர் செய்வதைப் பார்ப்பது தகப்பனைப் பார்ப்பது போல இருக்கிறது. ஆனாலும், மகனைவிட தகப்பன் உயர்ந்தவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. “நான் உங்களுக்குச் சொல்கிற விஷயங்களைச் சொந்தமாகச் சொல்லவில்லை” என்று இயேசுவே சொல்கிறார். (யோவான் 14:8-10) அதற்கான எல்லா புகழையும் தன்னுடைய தகப்பனுக்கு இயேசு கொடுப்பதை அப்போஸ்தலர்கள் கவனிக்கிறார்கள்.
இயேசு அற்புதங்கள் செய்வதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அவர் அறிவிப்பதைக் கேட்டிருக்கிறார்கள். இப்போது இயேசு அவர்களிடம், “என்மேல் விசுவாசம் வைக்கிறவன் நான் செய்கிற செயல்களைச் செய்வான், அவற்றைவிட பெரிய செயல்களையும் செய்வான்” என்கிறார். (யோவான் 14:12) தான் செய்ததைவிட பெரிய அற்புதங்களை அவர்கள் செய்வார்கள் என்று இயேசு சொல்லவில்லை. தன்னைவிட அவர்கள் ரொம்பக் காலத்துக்கு ஊழியம் செய்வார்கள், நிறைய இடங்களில் செய்வார்கள், நிறைய பேரிடம் பிரசங்கிப்பார்கள் என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொல்கிறார்.
இயேசு போன பிறகு அவர்கள் நிர்க்கதியாக நிற்க மாட்டார்கள். ஏனென்றால், “என் பெயரில் நீங்கள் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” என்று அவர் சொல்கிறார். அதோடு, “என் தகப்பனிடம் நான் வேண்டிக்கொள்வேன். அப்போது, என்றென்றும் உங்களோடு இருப்பதற்காக இன்னொரு சகாயரை அவர் உங்களுக்குத் தருவார். அதுதான் சத்தியத்தை வெளிப்படுத்துகிற கடவுளுடைய சக்தி” என்றும் சொல்கிறார். (யோவான் 14:14, 16, 17) இன்னொரு சகாயரான, கடவுளுடைய சக்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்று இயேசு உறுதியளிக்கிறார். பெந்தெகொஸ்தே நாளில் அது கிடைத்தது.
“இன்னும் கொஞ்சக் காலத்தில் உலகம் என்னைப் பார்க்காது, நீங்களோ என்னைப் பார்ப்பீர்கள். ஏனென்றால் நான் உயிரோடிருக்கிறேன், நீங்களும் உயிரோடிருப்பீர்கள்” என்று அவர்களிடம் சொல்கிறார். (யோவான் 14:19) உயிர்த்தெழுந்த பிறகு, மனித உடலில் இயேசு அவர்கள் முன்னால் தோன்றுவார். சில காலத்துக்குப் பிறகு, பரலோகத்தில் தன்னோடு இருப்பதற்காகச் சீஷர்களைப் பரலோகத்துக்குரிய உடலில் உயிர்த்தெழுப்புவார்.
ஒரு எளிமையான உண்மையை இயேசு அடுத்ததாகச் சொல்கிறார். “என் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு அவற்றின்படி நடப்பவன்தான் என்மேல் அன்பு காட்டுகிறான். என்மேல் அன்பு காட்டுகிறவனிடம் என் தகப்பனும் அன்பு காட்டுவார், நானும் அவன்மேல் அன்பு காட்டி அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்” என்கிறார். அப்போது ததேயு என்ற யூதாஸ் அவரிடம், “எஜமானே, நீங்கள் உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு மட்டுமே வெளிப்படுத்துவதாகச் சொல்கிறீர்களே, ஏன்?” என்று கேட்கிறார். அதற்கு இயேசு, “ஒருவனுக்கு என்மேல் அன்பு இருந்தால், அவன் என் வார்த்தையின்படி நடப்பான், என் தகப்பனும் அவன்மேல் அன்பு காட்டுவார். . . . என்மேல் அன்பு காட்டாதவன் என் வார்த்தைகளின்படி நடக்க மாட்டான்” என்கிறார். (யோவான் 14:21-24) அவர்தான் வழி, சத்தியம், வாழ்வு என்பதை அவருடைய சீஷர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்த உலகம் அதை ஏற்றுக்கொள்வதில்லை.
இயேசு சீக்கிரத்தில் அவர்களைவிட்டுப் போய்விடுவார். அவர் கற்றுக்கொடுத்த எல்லா விஷயங்களும் அவருடைய சீஷர்களுக்கு ஞாபகம் இருக்குமா? “என் தகப்பன் என்னுடைய பெயரில் அனுப்பப்போகிற அவருடைய சக்தியாகிய சகாயர் எல்லா காரியங்களையும் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லா விஷயங்களையும் உங்களுக்கு ஞாபகப்படுத்துவார்” என்று அவர் சொல்கிறார். கடவுளுடைய சக்திக்கு இருக்கிற வல்லமையை அப்போஸ்தலர்கள் பார்த்திருக்கிறார்கள். அதனால், இயேசு சொன்ன இந்த வார்த்தைகள் அவர்களுக்கு நம்பிக்கையைத் தருகின்றன. அவர் கூடுதலாக, “உங்களுக்குச் சமாதானத்தைத் தந்துவிட்டுப் போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குத் தருகிறேன். . . . நீங்கள் மனம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம்” என்கிறார். (யோவான் 14:26, 27) சீஷர்கள் மனம் கலங்க வேண்டிய அவசியமில்லை. இயேசுவின் தகப்பன் அவர்களை வழிநடத்தி, பாதுகாப்பார்.
கடவுள் எப்படிப் பாதுகாப்பார் என்பதைச் சீக்கிரத்தில் அவர்கள் பார்ப்பார்கள். “இந்த உலகத்தை ஆளுகிறவன் வருகிறான். அவனுக்கு என்மேல் அதிகாரம் இல்லை” என்று இயேசு சொல்கிறார். (யோவான் 14:30) யூதாசுக்குள் நுழைந்து அவனைத் தன் பிடியில் கொண்டுவர பிசாசினால் முடிந்தது. ஆனால், இயேசுவிடம் எந்தவொரு பாவமோ பலவீனமோ இல்லாததால், கடவுளுக்கு எதிராக அவரைச் செயல்பட வைக்க அவனால் முடியாது. இயேசுவை மரணத்தின் பிடியில் நிரந்தரமாக வைத்திருக்கவும் அவனால் முடியாது. ஏன்? ‘நான் என் தகப்பனின் கட்டளைப்படியே செய்கிறேன்’ என்று இயேசு சொல்கிறார். தகப்பன் தன்னை உயிரோடு எழுப்புவார் என்பதில் இயேசுவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.—யோவான் 14:31.