பைபிள் காலங்களில் எருசலேம்—புதைபொருள் ஆய்வு எதை வெளிப்படுத்துகிறது?
சுவாரசியமான முக்கிய புதைபொருள் ஆய்வுகள் விசேஷமாக 1967 முதற்கொண்டு எருசலேமில் நடத்தப்பட்டு வருகின்றன. தோண்டியெடுக்கப்பட்ட அநேக இடங்கள் இப்பொழுது பொது மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளன; ஆகவே அவற்றில் சில இடங்களுக்குச் சென்று புதைபொருள் ஆய்வு எவ்விதமாக பைபிள் வரலாற்றோடு ஒத்திருக்கிறது என்பதைக் காண்போம்.
தாவீது ராஜாவின் எருசலேம்
சீயோன் மலையின்மேல் கட்டப்பட்டிருந்த தாவீதின் பண்டைய நகரம் என்பதாக பைபிள் அழைக்கும் அந்தப் பகுதி, நவீன எருசலேமின் தலைநகரில் மிகவும் சிறியதாக காட்சியளிக்கிறது. காலஞ்சென்ற பேராசிரியர் இகல் ஷைலோவின் தலைமையில், 1978-85-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தாவீதின் நகரம் தோண்டியெடுக்கப்பட்டபோது, மலையின் கிழக்குப் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய கல் படிக்கட்டு அமைப்பு அல்லது தாங்கி நிற்கும் மதில்சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
பேராசிரியர் ஷைலோ, மேல்தள மதிலின் ஒரு கீழ்க்கட்டுமானத்தின் பிரமாண்டமான இடிபாடுகளாக இவை இருக்கவேண்டும் என்று கூறினார். இதன்மீது தானே எபூசியர்கள் (தாவீது கைப்பற்றுவதற்கு முன்னிருந்த குடிமக்கள்) ஒரு கோட்டையைக் கட்டினர். இந்த மேல்தள மதில்களின் மேல் அவர் கண்ட கல் படிக்கட்டு அமைப்பு, எபூசியர் கோட்டையைக் கட்டின இடத்தில் தாவீது கட்டின அந்தப் புதிய அரணைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும் என்பதாக அவர் விளக்கினார். 2 சாமுவேல் 5:9-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான்.”
இந்தக் கட்டட அமைப்புக்கு அருகில்தான் நகரின் பண்டைய நீர்க்குழாய் அமைப்புகளின் ஆரம்ப பகுதிகள் உள்ளன; இவற்றின் ஒரு பகுதி தாவீதின் காலத்திலிருந்தே இருந்துவருகிறது. எருசலேமின் தண்ணீர் சுரங்கவழி அமைப்புகளைப் பற்றிய பைபிளின் கூற்றுகள் கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. உதாரணமாக, ‘எபூசியரை முறியடிக்கும் எவனும் தண்ணீர் சுரங்கத்தின் வழியாய்’ சத்துருவோடு ‘தொடர்புகொள்ளட்டும்’ என்று தாவீது தன்னுடைய மனுஷர்களுக்குச் சொன்னார். (2 சாமுவேல் 5:8) தாவீதின் சேனாதிபதி யோவாப் இதைச் செய்தார். ‘தண்ணீர் சுரங்கம்’ என்ற சொற்றொடர் சரியாக எதை அர்த்தப்படுத்துகிறது?
பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டில் எசேக்கியா ராஜாவின் பொறியாளர்களால் தோண்டப்பட்டதும், 2 இராஜாக்கள் 20:20-லும் 2 நாளாகமம் 32:30-லும் குறிப்பிடப்பட்டிருப்பதுமான பிரசித்திப்பெற்ற சீலோவாம் சுரங்கத்தைப் பற்றி வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. எதிர்முனைகளிலிருந்து தோண்டிக்கொண்டு வரும் சுரங்க குழுக்கள் இரண்டும் எவ்வாறு ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ள முடியும்? நேராகத் தோண்டினால் இருப்பதைவிட, கணிசமான அளவு நீண்டதாக இருக்கும், வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாதையை அவர்கள் தெரிந்துகொண்டது ஏன்? குறிப்பாக எண்ணெய்யில் எரியும் விளக்குகளை அவர்கள் பயன்படுத்தியிருக்கக்கூடுமானால் சுவாசிப்பதற்கு போதுமான காற்று அவர்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரெவியூ சாத்தியமான பதில்களைக் கொடுத்துள்ளது. இந்த அகழாய்வின் மண்ணியல் நிபுணர் டான் கில் பின்வருமாறு சொல்வதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது: “தாவீதின் நகரத்துக்கு கீழே இயற்கையான பள்ளங்களையும் நீரோடைகளையும் கொண்ட சுண்ணாம்பு கற்பாறைப் பகுதி (karst) உள்ளது. கார்ஸ்ட் என்பது நிலத்தடி நீர் பூமிக்கு கீழே உள்ள பாறை அமைப்புகளின் வழியாக கசிந்து ஓடுகையில் உருவாகும் பள்ளங்களையும் கால்வாய்களையும் குழிகளையும் கொண்ட, ஒரே சீராக இல்லாத பகுதியை வருணிக்கப் பயன்படும் மண்ணியல் பதமாகும். . . . தாவீதின் நகரத்துக்குக் கீழே நிலத்தடி நீர்வழங்கீட்டு அமைப்பில் செய்யப்பட்ட எமது மண்ணியல் ஆய்வு, மண் அரிப்பினால் ஏற்பட்டிருந்த இயற்கையான கால்வாய்களை மனிதர் திறமையோடு விசாலமாக்கியும் சுரங்கத்திற்குள் செல்லும் செங்குத்தான வழியை நீர்வழங்கீட்டு அமைப்புகளில் இணைத்துமே அவற்றை முக்கியமாய் அமைத்திருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.”
சீலோவாம் சுரங்கம் எவ்வாறு வெட்டப்பட்டது என்பதை விளக்குவதற்கு இது உதவிசெய்வதாக இருக்கலாம். குன்றின் கீழ் வளைந்து நெளிந்து ஓடிக்கொண்டிருந்த இயற்கையான கால்வாயின் போக்கிலேயே அது வெட்டப்பட்டிருக்கலாம். ஏற்கெனவே இருந்த பள்ளங்களை சிறிதே திருத்தி அமைப்பதன் மூலம் ஒவ்வொரு முனையிலும் வேலைசெய்துகொண்டிருக்கும் குழுக்கள் தற்காலிகமான ஒரு சுரங்கத்தை தோண்டியிருக்கலாம். பின்னர் கீகோன் நீரூற்றிலிருந்து நகரத்தின் மதில்களுக்கு உட்புறத்தில் அமைந்திருந்த சீலோவாம் குளத்துக்கு தண்ணீர் ஓடிவரும்படியாக சாய்வான ஒரு கால்வாய் வெட்டப்பட்டது. அதன் நீளம் 533 மீட்டராக இருந்தபோதிலும் இரண்டு முனைகளுக்கும் இடையில் உயரத்தின் வித்தியாசம் 32 சென்டிமீட்டர் மாத்திரமே இருந்தபடியால் இது உண்மையில் பொறியியல் துறையில் ஒரு சாதனையாகும்.
பண்டைய நகரத்திற்கு முக்கியமாக தண்ணீர் கீகோன் நீரூற்றிலிருந்தே வந்தது என்பதை கல்விமான்கள் வெகு காலமாக அறிந்திருக்கிறார்கள். அது நகரின் மதில்களுக்கு வெளியே இருந்தாலும், ஒரு சுரங்கத்தையும் அதற்குள் செல்லும் 11 மீட்டர் ஆழமுள்ள செங்குத்தான ஒரு வழியையும் அமைக்கும் அளவுக்கு அருகாமையிலும் இருந்தது; பாதுகாப்பாக இருந்த மதில்களுக்கு வெளியே செல்லாமலே தண்ணீரைப் பெற்றுக்கொள்ள இது குடிமக்களுக்கு உதவியது. இது, 1867-ல் அதைக் கண்டுப்பிடித்தவரான சார்லஸ் வாரன் என்பவரின் பெயரால் வாரனின் சுரங்க வழி என்பதாக அழைக்கப்படுகிறது. ஆனால் சுரங்கமும் சுரங்க வழியும் எப்போது கட்டப்பட்டது? தாவீதின் காலத்தில் அவை இருந்தனவா? இது யோவாப் பயன்படுத்திய சுரங்கமா? டான் கில் பதிலளிக்கிறார்: “வாரனின் சுரங்க வழி சுண்ணாம்பு கற்பாறைப் பகுதியில் இயற்கையாக அமைந்த ஒரு பள்ளம்தானா என்பதை பரிசோதனை செய்வதற்காக, சீராக இல்லாத மதில்களிலிருந்து சுண்ணநீரின் மேல் ஓட்டின் ஒரு துண்டை நாங்கள் ஆராய்ந்து, அது எத்தனை பழமையானது என்பதைக் கண்டுபிடித்தோம். அந்த மேல் ஓடு 40,000 வருடங்களுக்குமேல் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது: இந்தச் சுரங்க வழி மனிதனால் தோண்டப்பட்டிருக்க முடியாது என்பதற்கு சந்தேகத்திற்கிடமில்லாத அத்தாட்சியை இது அளிக்கிறது.”
எசேக்கியாவின் காலத்திலிருந்த எஞ்சிய பொருட்கள்
கிடைத்த அனைத்தையும் அசீரியா தேசம் கைப்பற்றிக்கொண்டிருந்த காலத்தில் எசேக்கியா ராஜா வாழ்ந்துவந்தார். அவருடைய ஆட்சியின் ஆறாம் வருடத்தில், அசீரியர்கள் பத்து கோத்திர ராஜ்யத்தின் தலைநகரான சமாரியாவைக் கைப்பற்றினர். எட்டு வருடங்களுக்குப் பிறகு (பொ.ச.மு. 732) அசீரியர்கள் திரும்ப வந்து யூதாவையும் எருசலேமையும் அச்சுறுத்திக்கொண்டிருந்தார்கள். 2 நாளாகமம் 32:1-8 எசேக்கியாவின் தற்காப்பு திட்டத்தை விவரிக்கிறது. இந்தக் காலப்பகுதியில் அதற்கான காணக்கூடிய அத்தாட்சிகள் எதுவும் இருக்கின்றனவா?
ஆம், 1969-ல், பேராசிரியர் நிமான் அவிகாட் என்பவர் இந்தக் காலப்பகுதியைச் சேர்ந்த இடிபாடுகளைக் கண்டுபிடித்தார். தோண்டி எடுக்கப்பட்ட பிரமாண்டமான மதிலின் முதல் பாகம் 40 மீட்டர் நீளமும், ஏழு மீட்டர் அகலமும், மதிப்பீடுகளின்படி எட்டு மீட்டர் உயரம் உள்ளதாய் இருப்பது தெரியவந்தது. மதிலின் ஒரு பகுதி வண்டல்மண் படிந்த பாறையின் மீதும் மற்றது அண்மையில் கட்டப்பட்ட வீடுகளின்மீதும் அமைந்திருந்தது. மதிலைக் கட்டியது யார், எப்போது கட்டப்பட்டது? “பைபிளின் இரண்டு பகுதிகள் மதில் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்பதையும் அதன் நோக்கத்தையும் சுட்டிக்காட்ட அவிகாட்டுக்கு உதவியது” என்பதாக புதைபொருள் ஆய்வு பத்திரிகை அறிவிப்பு செய்கிறது. இந்தப் பகுதிகள் பின்வருமாறு வாசிக்கின்றன: “[அவர்] திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி”னார். (2 நாளாகமம் 32:5) ‘அலங்கத்தை [மதிலை] அரணிப்பாக்கும்படி வீடுகளை இடிப்பீர்கள்.’ (ஏசாயா 22:10) பிராட் வால் என்பதாக அழைக்கப்படும் இதன் ஒரு பகுதியைப் பார்வையாளர்கள் இன்று பழைய நகரில் யூதர் குடியிருக்கும் பகுதியில் காணமுடியும்.
இந்தச் சமயத்தில், முன்னாட்களில் இருந்ததைவிட எருசலேம் மிகப் பெரியதாக இருந்ததையும்கூட பல்வேறு அகழாய்வுகள் வெளிப்படுத்துகின்றன; இது ஒருவேளை அசீரியர்களால் தோற்கடிக்கப்பட்ட பின்பு, வடக்கு தேசத்திலிருந்து அகதிகளின் வருகையின் காரணமாக இருக்கலாம். எபூசிய நகரம் சுமார் 15 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததாக பேராசிரியர் ஷைலோ மதிப்பிடுகிறார். சாலொமோனின் காலத்தில் அது சுமார் 40 ஏக்கர் நிலப்பகுதியாய் இருந்தது. 300 ஆண்டுகளுக்குப் பின்னர், எசேக்கியா ராஜாவின் காலத்துக்குள், நகரின் அரணிப்பான பகுதி சுமார் 150 ஏக்கராக அதிகரித்துவிட்டிருந்தது.
முதலாம் ஆலயம் இருந்த காலத்தைச் சேர்ந்த கல்லறைகள்
முதலாம் ஆலயம் இருந்த காலத்தைச் சேர்ந்த கல்லறைகள், அதாவது பாபிலோனியர்கள் எருசலேமை பொ.ச.மு. 607-ல் அழிப்பதற்கு முன்பிருந்தவை தகவல் பெறுவதற்கு மற்றொரு வழியாக உள்ளன. 1979/80-ல் இன்னோம் பள்ளத்தாக்கின் சரிவுகளில் கல்லறைக் குகைகளின் ஒரு பகுதி தோண்டியெடுக்கப்பட்டபோது பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டன. “எருசலேமில் செய்யப்பட்ட புதைபொருள் ஆய்வின் சரித்திரத்திலேயே முதலாம் ஆலயத்தின் பண்டகச்சாலை அதனுடைய எல்லா பொருட்களோடும்கூட கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். ஓராயிரம் பொருட்களுக்கு மேலாக இதில் இருந்தன” என்பதாக காபிரியேல் பார்க்கே என்ற புதைபொருள் ஆய்வாளர் சொல்கிறார். அவர் தொடர்ந்து சொல்வதாவது: “இஸ்ரேலில், விசேஷமாக எருசலேமில் ஆய்வைசெய்யும் ஒவ்வொரு புதைபொருள் ஆய்வாளரின் மிகவும் விருப்பமான நம்பிக்கையாக இருந்தது என்னவென்றால், எழுதப்பட்ட தகவல் எதையாவது கண்டுபிடிப்பதே ஆகும்.” இரண்டு சிறிய வெள்ளி சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதில் என்ன இருந்தன?
பார்க்கே விளக்குகிறார்: “சுருட்டப்படாத வெள்ளி தகட்டை நான் கண்டுபிடித்து அதை ஒரு உருபெருக்காடியின் உதவியால் பார்த்தபோது, மேற்பாகத்தில் நேர்த்தியான எழுத்துக்கள் இருந்தன; இவை ஒரு கூர்மையான கருவியைக் கொண்டு மிகவும் மெல்லியதாகவும் எளிதில் உடையக்கூடியதாகவும் இருந்த வெள்ளித் தகட்டின் மீது எழுதப்பட்டிருந்தன. . . . செதுக்கப்பட்டிருந்த கடவுளுடைய பெயர் தெளிவாக தெரிகிறது; இது பண்டைய எபிரெய எழுத்தில், யோத்-ஹே-வாவ்-ஹே (yod-he-waw-he) என்ற நான்கு எபிரெய எழுத்துக்களைக் கொண்டது.” பின்னால் வந்த ஒரு பிரசுரத்தில், பார்க்கே கூடுதலாக இவ்வாறு சொல்கிறார்: “இரண்டு வெள்ளி தகடுகளிலுமே பைபிளில் ஆசாரியர் கூறும் ஆசீர்வாதத்தைப் போன்ற அதே ஆசீர்வாத கூற்றுகள் பொறிக்கப்பட்டிருந்தது எங்களுக்கு ஆச்சரியமாயிருந்தது.” (எண்ணாகமம் 6:24-26) எருசலேமில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப்பொறிப்பில் யெகோவாவின் பெயர் காணப்படுவது இதுவே முதல் தடவையாக இருந்தது.
இந்த வெள்ளி சுருள்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதை கல்விமான்கள் எவ்விதமாக கண்டுபிடித்தார்கள்? அவை கண்டெடுக்கப்பட்டிருந்த புதைபொருள் ஆய்வு சூழமைவை வைத்தே முக்கியமாக இதை மதிப்பிட்டார்கள். பண்டகசாலையில் காலங்குறிக்கப்படக்கூடிய 300-க்கும் அதிகமான மண்கலங்கள் காணப்பட்டன, மண்கலங்களின் பாணியை வைத்து, இவை பொ.ச.மு. ஏழாவது மற்றும் ஆறாவது நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. காலங்குறிக்கப்பட்டுள்ள மற்ற எழுத்துப்பொறிப்புகளோடு ஒப்பிட, வெள்ளி சுருளிலுள்ள எழுத்துக்களும் அதே காலப்பகுதியையே சேர்ந்தவை என்பது தெரிகிறது. சுருள்கள் எருசலேமிலுள்ள இஸ்ரேல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
பொ.ச.மு. 607-ல் எருசலேமின் அழிவு
பொ.ச.மு. 607-ல் ஏற்பட்ட எருசலேமின் அழிவைக் குறித்து பைபிள் 2 இராஜாக்கள் 25-ம் அதிகாரத்திலும், 2 நாளாகமம் 36-ம் அதிகாரத்திலும் எரேமியா 39-ம் அதிகாரத்திலும் சொல்லப்படுவது, நேபுகாத்நேச்சாரின் சேனைகள் நகரத்தை அக்கினியால் சுட்டெரித்துவிட்டார்கள் என்பதை அறிவிக்கிறது. அண்மைக்கால அகழாய்வுகள் இந்த வரலாற்றுப்பூர்வமான உண்மையை உறுதிசெய்திருக்கின்றனவா? பேராசிரியர் இகல் ஷைலோவின் பிரகாரம், “பைபிளின் [பாபிலோனியர் எருசலேமை அழித்ததற்கிருக்கும்] அத்தாட்சியை, தெளிவாக இருக்கும் புதைபொருள் ஆய்வின் அத்தாட்சி முழுமைப் பெறச் செய்கிறது; பல்வேறு கட்டட அமைப்புகளின் முழுமையான அழிவும், வீடுகளில் மரத்தாலான பல்வேறு பகுதிகள் பெருந்தீயுக்கு இறையானதும்.” அவர் மேலுமாகச் சொல்கிறார்: “எருசலேமில் செய்யப்பட்ட ஒவ்வொரு அகழாய்விலும் இந்த அழிவு ஏற்பட்டதற்குரிய தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.”
2,500 ஆண்டுகளுக்கும் முன்னால் நடந்த இந்த அழிவில் எஞ்சிய பொருட்களை பார்வையாளர்கள் காணமுடியும். தி இஸ்ரலைட் டவர், பர்ன்ட் ரூம், பூலே ஹௌஸ் ஆகியவை புதைபொருள் ஆய்வாளர்களின் பிரசித்திப் பெற்ற இடங்களின் பெயர்களாகும்; இவை பாதுகாக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. புதைபொருள் ஆய்வாளர்கள் ஜேயின் எம். காஹில் மற்றும் டேவிட் டார்லெர் பண்டைய எருசலேம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் பின்வருமாறு சுருங்கக் கூறுகின்றனர்: “பாபிலோனியர்களால் எருசலேமுக்கு மிகப் பெரிய ஓர் அழிவு ஏற்பட்டது என்பது பர்ன்ட் ரூம், பூலே ஹௌஸ் போன்ற கட்டடங்களிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டிருக்கும் எஞ்சிய கருகிப்போன அடர்த்தியான அடுக்குகளிலிருந்து மட்டுமல்லாமல் கிழக்கு சரிவை மூடிக்கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகளின் கற்குவியல்களிலிருந்தும் தெரியவருகிறது. . . . நகரத்தின் அழிவைப்பற்றிய பைபிளின் வருணனையை . . . புதைபொருள் ஆய்வின் அத்தாட்சி முழுமைபெறச் செய்கிறது.”
இவ்விதமாக, தாவீதின் காலம் முதற்கொண்டு பொ.ச.மு. 607-ல் அது அழிக்கப்பட்ட சமயம் வரையாக எருசலேமைப்பற்றிய பைபிளின் சித்தரிப்பு, கடந்த 25 ஆண்டுகளாக செய்யப்பட்டு வரும் புதைபொருள் அகழாய்வுகளால் பல வழிகளில் உறுதிசெய்யப்பட்டுவிட்டன. ஆனால் பொ.ச. முதல் நூற்றாண்டிலிருந்த எருசலேமைப் பற்றியது என்ன?
இயேசுவின் நாளில் எருசலேம்
ரோமர்கள் எருசலேமை பொ.ச. 70-ல் அழிப்பதற்கு முன்பாக இயேசுவின் நாளிலிலிருந்த எருசலேமை கற்பனை செய்துபார்க்க அகழாய்வுகளும் பைபிளும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யூத வரலாற்று ஆசிரியர் ஜோசிஃபஸும் இன்னும் மற்ற ஆதார ஏடுகளும் கல்விமான்களுக்கு உதவிசெய்கின்றன. எருசலேமிலுள்ள ஒரு பெரிய ஹோட்டலுக்குப் பின்னால் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய மாதிரி எருசலேமானது, புதிய அகழாய்வுகளின் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. நகரின் முக்கிய அம்சம் டெம்பிள் மெளண்ட்டாகும்; சாலொமோனின் காலத்திலிருந்ததோடு ஒப்பிடுகையில் ஏரோது இதை இரண்டு மடங்கு பெரியதாக விரிவாக்கியிருந்தான். பண்டைய உலகில் இருந்த மனிதன் உண்டுபண்ணிய மிகப் பெரிய மேடையாக, சுமார் 480x280 மீட்டர் அளவுடையதாக இது இருந்தது. கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட சில கற்கள் 50 டன் எடையுள்ளவையாக, ஒன்று 400 டன்னுக்கு சற்றுக் குறைவாகக்கூட இருந்தது; “பண்டைய உலகில் இதற்கு நிகராக எதுவும் இருக்கவில்லை” என்பதாக ஒரு கல்விமான் கூறுகிறார்.
இயேசு “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்பதாகச் சொன்னதைக் கேட்ட சில ஆட்கள் அதிர்ச்சியடைந்ததைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர் “தம்முடைய சரீரமாகிய ஆலயத்தை” அர்த்தப்படுத்திய போதிலும் அவர்கள் அந்தப் பிரமாண்டமான ஆலயத்தை அர்த்தப்படுத்தியதாக எண்ணினார்கள். ஆகவே அவர்கள் “இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ” என்பதாக கேள்விகேட்டார்கள். (யோவான் 2:19-21) டெம்பிள் மெளண்ட் சுற்றுப்புறத்தில் செய்யப்பட்ட அகழாய்வுகளின் விளைவாக, இயேசுவின் காலத்தைச் சேர்ந்த மதில்களின் சில பகுதிகளையும் மற்ற கட்டடக் கலையின் அம்சங்களையும் பார்வையாளர்கள் இப்போது காணமுடியும்; ஆலயத்தின் தெற்குப் பகுதியில் இருந்த வாயிலுக்குச் செல்லும் பாதையில் அவர் நடந்துசென்ற இடத்திலும் நடந்துசெல்ல முடியும்.
டெம்பிள் மெளண்ட்டின் மேற்குப்பக்க மதிலுக்கு அருகில், பழைய நகரில் யூதர்கள் குடியிருக்கும் பகுதியில், பொ.ச. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த புதுப்பிக்கப்பட்டுள்ள இரண்டு நேர்த்தியான அகழாய்வு இடங்கள் உள்ளன; அவை பர்ன்ட் ஹௌஸ், ஹெரோடியன் குவார்டர் ஆகியவை ஆகும். பர்ன்ட் ஹௌஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, புதைபொருள் ஆய்வாளர் நிமான் அவிகாட் பின்வருமாறு எழுதினார்: “இந்தக் கட்டடம் பொ.ச. 70-ல் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்ட சமயத்தில் எரிக்கப்பட்டது என்பது இப்பொழுது மிகவும் தெளிவாக உள்ளது. நகரில் செய்யப்பட்ட அகழாய்வுகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக, நகரம் எரிக்கப்பட்டது என்பதற்கு நன்கு புலப்படக்கூடிய மற்றும் தெளிவான அத்தாட்சி இப்பொழுது கிடைத்துள்ளது.”—பக்கம் 12-ல் உள்ள புகைப்படங்களைக் காண்க.
இந்தக் கண்டுபிடிப்புகளில் சில இயேசுவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைத் தெளிவாக்குவதாக உள்ளன. கட்டடங்கள் நகரின் மேற்புறத்தில் இருந்தன; பிரதான ஆசாரியர்கள் உட்பட எருசலேமிலிருந்த பணக்காரர்கள் இங்குதான் வாழ்ந்துவந்தனர். ஆசார முறைப்படியான சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் தொட்டிகள் பெரும் எண்ணிக்கையில் வீடுகளில் காணப்பட்டன. கல்விமான் ஒருவர் குறிப்பிடுகிறார்: “பெரும் எண்ணிக்கையான தொட்டிகள், இரண்டாம் ஆலயம் இருந்த காலப்பகுதியில் நகரின் மேற்புறத்தில் இருந்த குடிமக்கள், சடங்கு முறைப்படியான சுத்திகரிப்பைக் கண்டிப்பாக கடைப்பிடித்தனர் என்பதற்குச் சான்றளிக்கின்றன. (இந்தச் சட்டங்கள் மிஷ்னாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன; இது மிக்வேயின் நுணுக்கமான விவரங்களுக்காக பத்து அதிகாரங்களை ஒதுக்கியிருக்கிறது.)” பரிசேயர்களிடமும் வேதபாரகரிடமும் இந்தச் சடங்குகளைப்பற்றி இயேசு சொன்ன குறிப்புகளைப் போற்றுவதற்கு இந்தத் தகவல் நமக்கு உதவிசெய்கிறது.—மத்தேயு 15:1-20; மாற்கு 7:1-15.
ஆச்சரியம் தரும் விதமாக பெரும் எண்ணிக்கையில் கற்சாடிகளும்கூட எருசலேமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நிமான் அவிகாட் குறிப்பிடுகிறார்: “அப்படியென்றால் எருசலேமிலுள்ள மக்களின் வீடுகளில் திடீரென்று இத்தனை அநேகம் காணப்படுவது ஏன்? ஆசார முறைப்படியான சுத்திகரிப்பின் பேரில் யூதர்களுடைய சட்டங்களடங்கிய ஹலாக்காவில் பதில் இருக்கிறது. எளிதில் அசுத்தமாகாத பொருட்களில் ஒன்று கற்சாடிகள் என்பதாக மிஷ்னா நமக்குச் சொல்கிறது. . . . கற்சாடிகள் ஆசார முறைப்படியாக அசுத்தமாவதற்கு வாய்ப்பில்லை.” இயேசு திராட்சரசமாக மாற்றிய தண்ணீர் ஏன் மட்பாண்டங்களில் சேகரித்து வைக்கப்படாமல் கற்சாடிகளில் சேகரிக்கப்பட்டிருந்தது என்பதை இது விளக்குவதாக சொல்லப்படுகிறது.—லேவியராகமம் 11:33; யோவான் 2:6.
இஸ்ரேல் அருங்காட்சியகத்துக்குச் சென்றால், இறந்தவர்களின் எலும்புகளை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு அசாதாரணமான கலங்களை காணமுடியும். பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரெவியூ விளக்குகிறது: “பொ.ச. 70-ல் எருசலேம் ரோமர்களால் அழிக்கப்பட்டதற்கு முன் சுமார் நூறு ஆண்டுகளாக இறந்தவர்களின் எலும்புகளை வைக்கும் கலங்கள் முக்கியமாக பயன்படுத்தப்பட்டன. கல்லறைக் குகையின் சுவரில் வெட்டப்பட்ட குழியில் இறந்தவர் வைக்கப்பட்டார்; உடல் அழுகிப்போனபின்பு, எலும்புகள் சேகரிக்கப்பட்டு ஒரு கலத்தில்—அலங்கரிக்கப்பட்ட சுண்ணாம்புக் கல்லால் செய்யப்பட்ட ஒரு கொள்கலத்தில்—வைக்கப்பட்டன.” காட்சியில் வைக்கப்பட்டுள்ள இரண்டு கலங்களுமே நவம்பர் 1990-ல் ஒரு கல்லறைக் குகையில் கண்டெடுக்கப்பட்டவை. புதைபொருள் ஆய்வாளர் சிவி க்ரீன்ஹெட் இவ்வாறு அறிவிப்பு செய்கிறார்: “கல்லறையில் இருந்த இரண்டு எலும்பு கலங்களிலும் காணப்பட்ட ‘காய்பா’ . . . என்ற வார்த்தை, புதைபொருள் ஆய்வு சூழமைவில் இங்கே முதல் முறையாக தோன்றுகிறது. அது ஒருவேளை புதிய ஏற்பாட்டில் . . . குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதான ஆசாரியன் காய்பாவின் குடும்பப் பெயராக இருக்கலாம். . . . எருசலேமில் இருந்த அவருடைய வீட்டிலிருந்துதானே இயேசு ரோம அதிபதியாகிய பொந்தியு பிலாத்துவிடம் ஒப்படைக்கப்பட்டார்.” ஒரு எலும்புக் கலத்தில் சுமார் 60 வயதுள்ள ஒரு மனிதனின் எலும்புகள் இருந்தன. இவை உண்மையில் காய்பாவின் எலும்புகள் என்பதாக சில கல்விமான்கள் கருதுகிறார்கள். கல்விமான் ஒருவர் கண்டுபிடிப்புகளை இயேசுவின் காலத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்: “மற்ற ஒரு எலும்பு கலத்தில் ஏரோது அகிரிப்பா (பொ.ச. 37-44) காலத்து நாணயம் ஒன்று காணப்பட்டது. இரண்டு காய்பாக்களின் எலும்புக் கலங்களும் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாக ஒருவேளை இருக்கலாம்.”
அரிஜோனா பல்கலைக்கழகத்தின் நியர் ஈஸ்டர்ன் புதைபொருள் ஆய்வுத்துறை பேராசிரியர் வில்லியம் ஜி. டீவர் எருசலேமைக் குறித்து பின்வருமாறு கூறினார்: “முந்திய 150 ஆண்டுகள் முழுவதிலும் நாம் கற்றதைவிட கடந்த 15 ஆண்டுகளில்தானே முக்கியமான இந்த இடத்தைப் பற்றி புதைபொருள் வரலாற்றில் அதிகத்தைக் கற்றிருக்கிறோம் என்று சொன்னால் அது மிகையாகாது.” சமீப பத்தாண்டுகளில் எருசலேமில் நடத்தப்பட்டுள்ள முக்கியமான புதைபொருள் ஆய்வு நடவடிக்கைகள் பல, நிச்சயமாகவே பைபிள் வரலாற்றை தெளிவுபடுத்தும் கண்டுபிடிப்புகளை அளித்திருக்கின்றன.
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
இரண்டாம் ஆலயம் இருந்த காலப்பகுதியில் காணப்பட்ட எருசலேம் நகரத்தின் மறு ஆக்கம்—எருசலேமின் ஹோலிலேண்ட் ஹோட்டலினுடைய மைதானத்தில் வைக்கப்பட்டிருப்பது
[பக்கம் 10-ன் படம்]
மேலே: எருசலேமின் டெம்பிள் மெளண்ட்டின் தென்மேற்கு முனை
வலது: வாரனின் சுரங்கத்திற்குள் இறங்குதல்