எருசலேம்—“அது மகாராஜாவினுடைய நகரம்”
‘எருசலேமின்பேரில் சத்தியம்பண்ண வேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.’—மத்தேயு 5:34, 35.
1, 2. எருசலேம் சம்பந்தமாக எது சிலரை திகைக்க வைக்கலாம்?
எருசலேம்—இந்தப் பெயரே பல்வேறு மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு பரவசமூட்டுகிறது. சொல்லப்போனால், நாம் யாருமே இந்தப் பூர்வகால நகரத்தைப் பற்றி காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்துவிட முடியாது, ஏனெனில் இது அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. ஆனால் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், எருசலேம் எப்பொழுதுமே சமாதானம் தழைத்தோங்கும் இடமாக இல்லை என்பதை அநேக அறிக்கைகள் பறைசாற்றுகின்றன.
2 இது பைபிள் வாசகர் சிலரை திகைப்பில் ஆழ்த்தலாம். முன்னொரு காலத்தில், எருசலேம் என்ற பெயரின் சுருக்கம் சாலேம்; அதன் அர்த்தம் “சமாதானம்.” (ஆதியாகமம் 14:18; சங்கீதம் 76:2; எபிரெயர் 7:1, 2) ஆனால், ‘சமீப காலத்தில் அந்தப் பெயருக்கும் சமாதானத்திற்கும் ஏன் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாமல் இருக்கிறது?’ என நீங்கள் யோசிக்கலாம்.
3. எருசலேமைப் பற்றி நம்பத்தக்க தகவலை எங்கே காணலாம்?
3 இக்கேள்விக்குப் பதில் வேண்டுமாகில், நாம் சரித்திரத்தின் பல பக்கங்களை பின்னோக்கிப் புரட்டிப் பார்த்து பூர்வ எருசலேமைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், ‘பழைய சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்பதற்கெல்லாம் இப்ப நேரமில்லை’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் எருசலேமின் பூர்வீக சரித்திரத்தைப் பற்றி திருத்தமாக அறிந்துகொள்வது நம் அனைவருக்கும் பயனளிக்கும். ‘எப்படி?’ என்று கேட்கிறீர்களா? இதோ, அதற்கான பதிலை பைபிள் சுட்டிக்காட்டுகிறது: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) எருசலேமைப் பற்றிய பைபிள் அறிவு நமக்கு ஆறுதலையும் சமாதானத்திற்கான நம்பிக்கையையும் தரும்—அந்த நகரவாசிகளுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமுள்ள அனைவருக்குமே.
‘யெகோவாவின் சிங்காசனம்’ இருக்குமிடம்
4, 5. கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் எருசலேம் ஒரு முக்கிய பாகம் வகிப்பதற்கு உதவுவதில் தாவீது எவ்வாறு உட்பட்டிருந்தார்?
4 பொ.ச.மு. 11-ம் நூற்றாண்டில், பாதுகாப்பிற்கும் சமாதானத்திற்கும் தலைநகராய் விளங்கிய எருசலேம் உலகப் புகழ்பெற்றிருந்தது. தாவீது என்ற வாலிபனை அந்தப் பூர்வ தேசத்தின் ராஜாவாக, அதாவது இஸ்ரவேலின் ராஜாவாக யெகோவா தேவன் அபிஷேகம் செய்தார். எருசலேமை ஆட்சிபீடமாக கொண்டு தாவீதும் அவருடைய ராஜவம்சத்தினரும் ‘யெகோவாவின் ராஜ்யபார சிங்காசனத்தில்,’ அல்லது ‘யெகோவாவின் சிங்காசனத்தில்’ ஆட்சிபுரிய ஆரம்பித்தனர்.—1 நாளாகமம் [தினவர்த்தமானம்] 28:5; 29:23; தி.மொ.
5 தேவனுக்கு பயந்து நடந்த மனிதனாகிய தாவீது, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த ஓர் இஸ்ரவேலன்; விக்கிரக ஆராதனைக்காரராகிய எபூசியர்களிடமிருந்து எருசலேமை கைப்பற்றினார். அப்பொழுது அந்நகரம் சீயோன் என்ற மலையை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது, ஆனால் பின்பு அந்தப் பெயர் எருசலேமின் மறுபெயரானது. காலப்போக்கில், இஸ்ரவேலருடன் கடவுள் உடன்படிக்கை செய்திருந்தார். உடன்படிக்கைப் பெட்டியை தாவீது எருசலேமுக்குள் கொண்டுவந்தார்; அங்கே ஒரு கூடாரத்தில் அது வைக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னர், அந்தப் பரிசுத்த பெட்டியிருந்த ஸ்தலத்திற்கு மேல் ஒரு மேகத்திலிருந்து தம்முடைய தீர்க்கதரிசியாகிய மோசேயிடம் கடவுள் பேசியிருந்தார். (யாத்திராகமம் 25:1, 21, 22; லேவியராகமம் 16:2; 1 நாளாகமம் 15:1-3) அந்தப் பெட்டி கடவுளுடைய பிரசன்னத்தை அடையாளப்படுத்தியது, ஏனென்றால் உண்மையில் யெகோவாவே இஸ்ரவேலின் ராஜா. ஆகையால், இரட்டை அர்த்தத்தில், எருசலேம் நகரத்திலிருந்து யெகோவா தேவன் ஆட்சி செய்தார் என்று சொல்லலாம்.
6. தாவீது மற்றும் எருசலேம் சம்பந்தமாக யெகோவா என்ன வாக்குறுதியை அளித்தார்?
6 சீயோனால் அல்லது எருசலேமினால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் அவருடைய ராஜரீக ஆட்சிக்கு முடிவிராது என தாவீதுக்கு யெகோவா வாக்குறுதி அளித்தார். தாவீதின் வம்சத்தில் வரும் ஒருவர் கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட மேசியாவாக அல்லது கிறிஸ்துவாக என்றென்றும் ஆளும் உரிமையை சுதந்தரித்துக்கொள்வார் என்பதை இது அர்த்தப்படுத்தியது.a (சங்கீதம் 132:11-14; லூக்கா 1:31-33) ‘யெகோவாவினுடைய சிங்காசனத்தின்’ இந்த நிரந்தர வாரிசு, எருசலேமை மட்டுமல்ல, சகல தேசங்களையும் ஆளும் என்பதையும் பைபிள் வெளிப்படுத்துகிறது.—சங்கீதம் 2:6-8; தானியேல் 7:13, 14.
7. தாவீது ராஜா எவ்வாறு தூய வணக்கத்தை முன்னேற்றுவித்தார்?
7 கடவுளால் அபிஷேகம் செய்யப்பட்ட தாவீது ராஜாவை சிங்காசனத்திலிருந்து இறக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனற்றுப் போயின. அதற்கு மாறாக, பகை நாட்டவர் முறியடிக்கப்பட்டு, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லைகள் கடவுளால் நியமிக்கப்பட்ட கடைக்கோடி வரைக்கும் விஸ்தரிக்கப்பட்டன. மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க தாவீது இச்சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டார். தாவீது இயற்றிய பெரும்பாலான சங்கீதங்கள் உண்மையில் யெகோவாவே சீயோனின் ராஜா என போற்றிப் பாடுகின்றன.—2 சாமுவேல் 8:1-15; சங்கீதம் 9:1, 11; 24:1, 3, 7-10; 65:1, 2; 68:1, 24, 29; 110:1, 2; 122:1-4.
8, 9. சாலொமோன் ராஜாவின் ஆட்சியில் எருசலேமில் எவ்வாறு மெய் வணக்கம் விரிவடைந்தது?
8 தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஆட்சியில் யெகோவாவின் வணக்கம் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டது. சாலொமோன் மோரியா மலையையும் (பாறையில் தற்போது மசூதி இருக்கும் பகுதியையும்) வளைத்துப்போட்டு எருசலேமை வடக்கு நோக்கி விஸ்தரித்தார். இந்த உயர்ந்த பகுதியில், யெகோவாவிற்கு துதிசெலுத்தும் வண்ணமாக ஒரு பிரமாண்டமான ஆலயத்தைக் கட்டும் பாக்கியத்தைப் பெற்றார். ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டது.—1 இராஜாக்கள் 6:1-38.
9 எருசலேமை மையமாகக்கொண்ட யெகோவாவின் வணக்கத்தை இஸ்ரவேலர் முழு இருதயத்தோடு ஆதரித்தபோது அத்தேசம் சமாதானத்தில் திளைத்தது. இச்சூழ்நிலையை அழகாய் வர்ணித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக்குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். . . . அவனைச் [சாலொமோனைச்] சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது. சாலொமோனுடைய நாளெல்லாம் . . . அவரவர் தங்கள்தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:20, 24, 25.
10, 11. சாலொமோன் ஆட்சிபுரிந்தபோது இருந்த எருசலேமைப் பற்றி பைபிள் சொல்வதை எவ்வாறு தொல்பொருள் ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது?
10 சாலொமோன் காலத்தில் செழித்தோங்கிய ஆட்சியைப் பற்றிய விவரப்பதிவை தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும்கூட ஆதரிக்கின்றன. இஸ்ரவேல் தேசத்தின் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற ஆங்கில நூலில், பேராசிரியர் யோஹானான் ஆஹாரோனி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எட்டு திக்கிலிருந்தும் அரண்மனைக்குள் செல்வம் வந்துகுவிந்தது, வாணிபம் செழித்தோங்கியது . . . இதனால் பொருளாதார வளர்ச்சி எல்லா அம்சத்திலும் வேகமான, கவனிக்கத்தக்க புரட்சியைக் கண்டது. . . . ஆடம்பர பொருள்களில் மட்டுமல்ல, முக்கியமாக மட்பாண்டத் தொழிலில் பொருளாதார வளர்ச்சி மிளிர்ந்தது. . . . மட்பாண்டத் தொழிலும் அதை சுடும் தரமும் வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்திருந்தது.”
11 அதைப் போலவே, ஜெரி எம். லாண்டே என்பவர் இவ்வாறு எழுதினார்: “முந்தைய இருநூறு ஆண்டுகளில் இருந்த முன்னேற்றத்தைவிட சாலொமோன் ஆட்சியின் முப்பதாண்டுகளில் இஸ்ரவேலின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டிருந்தது. சாலொமோன் காலத்தைக் குறிக்கும் நில அடுக்குப்படிவங்களில் சிறப்புமிக்க கட்டுமானங்கள், பிரமாண்டமான மதிற்சுவர்களாலான பெருநகரங்கள், ஆடம்பர வீடுகளைக் கொண்ட நன்கு கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிகளின் திடீர் வளர்ச்சி, குயவரின் தொழில்நுட்ப திறமை மற்றும் கலைநுணுக்கத்தின் மலைக்க வைக்கும் வளர்ச்சி ஆகியவற்றை காட்டும் இடிபாடுகளை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். தூர இடங்களில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்களின் எஞ்சிய பாகங்களையும் நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். இவை, சர்வதேச வாணிபமும் தொழிலும் மும்முரமாக நடைபெற்றதை சுட்டிக்காட்டுகின்றன.”—தாவீதின் வீடு (ஆங்கிலம்).
சமாதானத்திலிருந்து பாழான நிலைக்கு
12, 13. எருசலேமில் மெய் வணக்கம் எவ்வாறு தொடர்ந்து முன்னேற்றுவிக்கப்படாமல் போயிற்று?
12 எருசலேமே யெகோவாவின் பிராகாரம்; அந்நகரத்தின் சமாதானத்திற்காகவும் செழிப்பிற்காகவும் ஜெபிப்பது பொருத்தமாக இருந்தது. தாவீது இவ்வாறு எழுதினார்: “எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.” (சங்கீதம் 122:6-8) சமாதானம் பொங்கிவழிந்த அந்நகரத்தில் பிரமாண்டமான ஆலயம் கட்டும் பாக்கியம் சாலொமோனுக்கு கிடைத்தபோதிலும், அவர் கடைசியில் புறமத பெண்கள் அநேகரை கல்யாணம் செய்துகொண்டார். அவர்களது உந்துவிப்பினால் அவர் தன் முதிர் வயதில், அந்நாளில் இருந்த பொய்க் கடவுட்களின் வணக்கத்தை முன்னேற்றுவிக்க ஆரம்பித்தார். இத்தகைய விசுவாசதுரோகம் முழு தேசத்தின்மீதும் சீர்குலைவை ஏற்படுத்தி, அந்நகரம் கொள்ளைபோகவும் அதன் குடிமக்களின் உண்மையான சமாதானம் பறிபோகவும் காரணமானது.—1 இராஜாக்கள் 11:1-8; 14:21-24.
13 சாலொமோனின் மகன் ரெகொபெயாம் ஆட்சியின் ஆரம்பத்தில், பத்து கோத்திரத்தார் கலகம் செய்து இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தை உருவாக்கினர். அவர்கள் விக்கிரக வழிபாடு செய்ததால், அந்த ராஜ்யத்தை அசீரியா கவிழ்த்துப்போட கடவுள் அனுமதித்தார். (1 இராஜாக்கள் 12:16-30) யூதாவின் இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்திற்கு எருசலேமே தலைநகராய் விளங்கியது. ஆனால் காலப்போக்கில் அதுவும் மெய் வணக்கத்தின் பாதையிலிருந்து தடம்புரண்டது. ஆகையால் சோரம்போன அந்நகரம் பொ.ச.மு. 607-ல் பாபிலோனியர்களால் அழிக்கப்படும்படி கடவுள் அனுமதித்தார். நாடுகடத்தப்பட்ட அந்த யூதர்கள் 70 ஆண்டுகளாக பாபிலோனில் கைதிகளாக தளர்ந்துபோயிருந்தனர். பின்பு, கடவுளுடைய இரக்கத்தால், எருசலேமுக்குத் திரும்பிவந்து மெய் வணக்கத்தை நிலைநாட்ட அனுமதிக்கப்பட்டனர்.—2 நாளாகமம் 36:15-21.
14, 15. பாபிலோனின் சிறையிருப்புக்குப் பிறகு எவ்வாறு எருசலேம் மீண்டும் ஒரு முக்கிய பாகத்தை வகித்தது, ஆனால் என்ன மாற்றம் ஏற்பட்டது?
14 எழுபது வருட பாழ்க்கடிப்புக்குப் பின்னர், பாழடைந்த கட்டடங்களில் புதர்ச்செடிகள் மண்டிக்கிடந்திருக்க வேண்டும். எருசலேமின் மதிற்சுவர்கள் இடிக்கப்பட்டிருந்தன, ஒரு காலத்தில் கதவுகளும் கோபுரங்களும் ஒய்யாரமாய் காட்சியளித்த இடங்களில் பெரும் உடைப்புகள். ஆயினும், திரும்பிவந்த யூதர்கள் தைரியத்தோடு இருந்தனர். முன்பு ஆலயம் இருந்த இடத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுக்கு தினமும் பலிசெலுத்த ஆரம்பித்தனர்.
15 இது ஒரு நல்ல ஆரம்பமாக இருந்தது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட அந்த எருசலேம், தாவீது ராஜாவின் வம்சத்தார் ஒருவரால் ஆளப்படும் ஒரு ராஜ்யத்தின் தலைநகரமாக இனி ஒருபோதும் இருக்காது. அதற்கு மாறாக, பாபிலோனை வென்றவர்களால் நியமிக்கப்பட்ட அதிபதிகள் யூதர்களை ஆண்டார்கள். பெர்சியர்களுக்கு அவர்கள் கப்பம் கட்ட வேண்டியிருந்தது. (நெகேமியா 9:34-37) எருசலேம் ‘மிதிக்கப்பட்ட’ நிலையில் இருந்தபோதிலும், பூமியிலேயே அந்நகரம்தான் யெகோவா தேவனால் விசேஷித்த விதத்தில் தயவுகூரப்பட்ட ஒரு நகரமாய் திகழ்ந்தது. (லூக்கா 21:24) மெய் வணக்கத்தின் மையமாக, தாவீது ராஜாவின் வம்சத்தாரில் ஒருவரைக்கொண்டு பூமி முழுவதும் அரசதிகாரத்தை செலுத்துவதற்கான கடவுளுடைய உரிமையையும் அது பிரதிநிதித்துவம் செய்தது.
சுற்றிலுமிருந்த பொய் மதத்தவரால் எதிர்க்கப்படுதல்
16. பாபிலோனிலிருந்து திரும்பிவந்த யூதர்கள் ஏன் எருசலேமை புதுப்பிப்பதை நிறுத்திவிட்டார்கள்?
16 விரைவில், நாடுகடத்தப்பட்ட நிலையிலிருந்து எருசலேமுக்கு திரும்பிவந்த யூதர்கள் ஒரு புதிய ஆலயத்திற்கு அஸ்திவாரம் போட்டனர். ஆனால் அண்டை நாடுகளிலிருந்த பொய் மதத்தினர், யூதர்கள் கலகம் செய்வார்கள் என்று புறங்கூறி பெர்சிய ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு கடிதம் எழுதினர். அதன் விளைவாக, எருசலேமில் கட்டடப் பணியை தொடரக்கூடாது என அர்தசஷ்டா தடைவிதித்துவிட்டார். அந்தச் சமயத்தில் நீங்கள் எருசலேமில் வாழ்ந்திருந்தால், அதன் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று யோசித்திருப்பீர்கள் அல்லவா? இதனால், ஆலயத்தைக் கட்டுவதை யூதர்கள் நிறுத்திவிட்டு, தங்களுடைய சொந்த பொருளாதார நாட்டங்களில் மூழ்கிவிட்டார்கள்.—எஸ்றா 4:11-24; ஆகாய் 1:2-6.
17, 18. எருசலேம் திரும்பக் கட்டிமுடிக்கப்படுவதற்கு யெகோவா யாரை பயன்படுத்தினார்?
17 அவர்கள் திரும்பிவந்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தம்முடைய மக்களின் சிந்தையை சரிப்படுத்துவதற்காக தீர்க்கதரிசிகளாகிய ஆகாயையும் சகரியாவையும் கடவுள் அனுப்பினார். யூதர்கள் மனந்திரும்பி, ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள். இதற்கிடையில், தரியு பெர்சியாவின் அரசனானான். மீண்டும் எருசலேம் ஆலயத்தைக் கட்டுவதற்கு கோரேசு ராஜா கொடுத்திருந்த கட்டளையை அவன் படித்துப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான். யூதர்களுடைய அண்டை நாட்டவருக்கு தரியு ஒரு கடிதம் அனுப்பி, ‘எருசலேமைவிட்டு விலகியிருக்கும்படி’ அவர்களை எச்சரித்தான்; கட்டட வேலை முடிக்கப்படுவதற்கு ராஜாவின் வரியிலிருந்து பண உதவியையும் கொடுக்கும்படி கட்டளையிட்டான்.—எஸ்றா 6:1-13.
18 யூதர்கள் அந்த ஆலயத்தை தாங்கள் திரும்பிவந்த 22-வது வருடத்தில் கட்டி முடித்துவிட்டனர். இந்த முக்கிய சம்பவம் அதிக சந்தோஷத்தோடு கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என்பதை உங்களுக்குச் சொல்ல வேண்டியதேயில்லை. ஆயினும், எருசலேமும் அதன் மதிற்சுவர்களும் மிகவும் பாழடைந்த நிலையிலேயே கிடந்தன. ‘அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருந்த நாட்களில்’ அந்நகரத்திற்கு போதிய கவனம் செலுத்தப்பட்டது. (நெகேமியா 12:26, 27) பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டின் முடிவிற்குள் பூர்வ உலகில் ஒரு பெரும் நகரமாக எருசலேம் முழுமையாய் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது என்பதை அத்தாட்சி காட்டுகிறது.
மேசியா தோன்றுகிறார்!
19. எருசலேமின் தனித்தன்மைமிக்க நிலையை மேசியா எவ்வாறு ஒப்புக்கொண்டார்?
19 நாம் இப்பொழுது சில நூற்றாண்டுகள் தாவிச்சென்று சர்வலோக முக்கியத்துவமுடைய சம்பவமாகிய இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் சமயத்திற்கு வருவோமாக. இயேசுவின் கன்னித்தாயிடம் யெகோவா தேவனின் தூதர் இவ்வாறு சொல்லியிருந்தார்: “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். . . . அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” (லூக்கா 1:32, 33) பல வருடங்களுக்குப் பின்பு, இயேசு தம்முடைய புகழ்பெற்ற மலைப் பிரசங்கத்தைக் கொடுத்தார். அதில், அநேக விஷயங்களில் உற்சாகத்தையும் அறிவுரையையும் வழங்கினார். உதாரணமாக, கடவுளுக்கு தாங்கள் செய்திருந்த பொருத்தனையை நிறைவேற்றும்படியும், ஆனால் அற்பமான விஷயங்களுக்கு சத்தியம் செய்யாதவாறு கவனமாயிருக்கும்படியும் செவிகொடுத்துக் கொண்டிருந்தவர்களை உந்துவித்தார். இயேசு சொன்னார்: “பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ண வேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ண வேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். பூமியின்பேரிலும் சத்தியம்பண்ண வேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ண வேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.” (மத்தேயு 5:33-35) நூற்றாண்டுகளாக எருசலேம் அனுபவித்து வந்த அதன் தனித்தன்மைமிக்க நிலையை இயேசு ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். ஆம், அது ‘மகா ராஜாவாகிய’ யெகோவா தேவனுடைய ‘நகரம்.’
20, 21. எருசலேமில் வாழ்ந்த பெரும்பாலானோருடைய மனப்பான்மையில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றம் என்ன?
20 ஏறக்குறைய தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவில், எருசலேமின் குடிகளுக்கு நியமிக்கப்பட்ட ராஜாவாக இயேசு தம்மை காண்பித்தார். கிளர்ச்சியூட்டும் அந்தச் சம்பவத்திற்கு அநேகர் இவ்வாறு சந்தோஷ ஆரவாரம் செய்தனர்: “கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக”!—மாற்கு 11:1-10; யோவான் 12:12-15.
21 ஆனால் ஒருவாரத்திற்குள்ளாகவே, எருசலேம் மதத் தலைவர்கள் இயேசுவுக்கு எதிராக செயல்பட அந்தக் கூட்டத்தார் இடமளித்தார்கள். எருசலேம் நகரத்தாரும் இஸ்ரவேல் தேசத்தார் அனைவரும் கடவுளுடைய தயவை இழந்துவிடுவார்கள் என அவர் எச்சரித்தார். (மத்தேயு 21:23, 33-45; 22:1-7) உதாரணமாக, இயேசு இவ்வாறு சொன்னார்: “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.” (மத்தேயு 23:37, 38) பொ.ச. 33-ல் பஸ்கா பண்டிகையின் சமயத்தில், இயேசுவின் எதிரிகள் அவரை எருசலேமுக்கு வெளியே அநியாயமாக கொலை செய்துவிட்டனர். என்றபோதிலும், தாம் அபிஷேகம் செய்தவரை யெகோவா உயிர்த்தெழுப்பி, பரலோக சீயோனில் அவருக்கு அழியாத ஆவி வாழ்க்கையை அளித்து மகிமைப்படுத்தினார்—இது நாம் அனைவரும் பயனடையும் ஒரு சாதனை.—அப்போஸ்தலர் 2:32-36.
22. இயேசுவின் மரணத்திற்குப் பிறகு, எருசலேமைப் பற்றிய அநேக குறிப்புகள் எதற்குப் பொருந்தின?
22 அந்தச் சமயத்திலிருந்து, சீயோன் அல்லது எருசலேமைப் பற்றிய நிறைவேறாத பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள், பரலோக ஏற்பாடுகளுக்கு அல்லது இயேசுவால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு பொருந்துவதாக புரிந்துகொள்ள வேண்டும். (சங்கீதம் 2:6-8; 110:1-4; ஏசாயா 2:2-4; 65:17, 18; சகரியா 12:3; 14:12, 16, 17) இயேசுவின் மரணத்திற்குப் பிறகு எழுதப்பட்ட “எருசலேம்” அல்லது “சீயோன்” பற்றிய எண்ணற்ற குறிப்புகள், அடையாளப்பூர்வமான கருத்துடையவை, சொல்லர்த்தமான நகரத்திற்கோ இடத்திற்கோ பொருந்துவதில்லை என்பது தெளிவாக இருக்கிறது. (கலாத்தியர் 4:26; எபிரெயர் 12:22; 1 பேதுரு 2:6; வெளிப்படுத்துதல் 3:12; 14:1; 21:2, 10) எருசலேம் இனிமேலும் “மகா ராஜாவினுடைய நகரம்” அல்ல என்பதற்கு இறுதியான அத்தாட்சி பொ.ச. 70-ல் கிடைத்தது, தானியேலும் இயேசு கிறிஸ்துவும் தீர்க்கதரிசனம் உரைத்தபடியே, அந்தச் சமயத்தில் ரோம படைவீரர்கள் அதை பாழாக்கிவிட்டனர். (தானியேல் 9:26; லூக்கா 19:41-44) பூமிக்குரிய எருசலேம் ஒருகாலத்தில் அனுபவித்த யெகோவாவின் விசேஷ தயவை மீண்டும் பெறும் என பைபிள் எழுத்தாளர்களும் முன்னறிவிக்கவில்லை, இயேசுதாமேயும்கூட ஒருபோதும் முன்னறிவிக்கவில்லை.—கலாத்தியர் 4:25; எபிரெயர் 13:14.
நிரந்தர சமாதானத்திற்கான முன்நிழல்
23. நாம் ஏன் இன்னும் எருசலேமைக் குறித்து அக்கறைகொள்ள வேண்டும்?
23 பூமிக்குரிய எருசலேமின் ஆரம்பகால சரித்திரத்தை ஆராய்ந்த பிறகு, சாலொமோன் ராஜாவின் சமாதானமான ஆட்சியில் அந்நகரம் அதன் பெயருக்கேற்ப திகழ்ந்ததை ஒருவரும் மறுக்க முடியாது. ஆம், அது உண்மையில், “இரட்டிப்பான சமாதானத்தின் கருவூலம் [அல்லது, அடித்தளம்].” ஆயினும் அது வெறும் ஒரு முன்நிழலே. எதற்கு? கடவுளை நேசிப்பவர்கள் அனுபவிக்கப்போகும் சமாதானத்திற்கும் செழிப்புக்குமே. பூங்காவனமாக மாற்றப்படும் ஒரு பூமியில் அவர்கள் அவ்வாறு மகிழ்ந்திருக்கப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.—லூக்கா 23:43.
24. சாலொமோனின் ஆட்சிகாலத்தில் இருந்த நிலைமைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
24 சாலொமோன் ராஜாவின் ஆட்சிகால நிலைமைகளை 72-வது சங்கீதம் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆனால் இனிமையான அந்தப் பாடல் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் பரலோக ஆட்சியில் மனிதவர்க்கம் அனுபவிக்கப்போகும் ஆசீர்வாதங்களின் தீர்க்கதரிசனமாக இருக்கிறது. அவரைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். . . . கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும். பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.”—சங்கீதம் 72:7, 8, 12-14, 16.
25. எருசலேமைப் பற்றி நாம் ஏன் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்?
25 கடவுளை நேசிப்பவர்களுக்கு அந்த வார்த்தைகள் என்னே ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகின்றன! அவர்கள் எருசலேமில் வாழ்ந்தாலும்சரி பூமியில் வேறெந்த பகுதியில் வாழ்ந்தாலும்சரி, இது உண்மையாகவே இருக்கிறது. கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் ஆளுகை செய்யும்போது பூமியெங்கும் சமாதானம் நிலவும். அப்படிப்பட்ட அமைதி கொஞ்சும் சூழலை நீங்களும் அனுபவிக்கலாம். எருசலேமின் கடந்தகாலத்தைப் பற்றிய அறிவு மனிதவர்க்கத்திற்கான கடவுளுடைய நோக்கத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவும். யூதர்கள் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி வந்தப்பின் எழுபதாவது மற்றும் எண்பதாவது ஆண்டுகளில் நடைபெற்ற சம்பவங்கள்மீது பின்வரும் கட்டுரைகள் கவனத்தை ஒருமுகப்படுத்தும். மகா ராஜாவாகிய யெகோவா தேவனுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க வணக்கத்தைச் செலுத்த விரும்பும் அனைவருக்கும் இது ஆறுதலைத் தருகிறது.
[அடிக்குறிப்புகள்]
a “மேசியா” (எபிரெயுவிலிருந்து எடுக்கப்பட்டது), “கிறிஸ்து” (கிரேக்கிலிருந்து எடுக்கப்பட்டது) ஆகிய இரண்டு பட்டப்பெயர்களும் “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்பதை அர்த்தப்படுத்துகின்றன.
ஞாபகமிருக்கிறதா?
◻ எவ்வாறு எருசலேம் ‘யெகோவாவின் சிங்காசனத்திற்குரிய’ இடமானது?
◻ மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில் சாலொமோன் வகித்த முக்கிய பாகம் என்ன?
◻ எருசலேம் யெகோவாவினுடைய வணக்கத்தின் மையமாக இல்லாமற்போனது என்று நமக்கு எப்படி தெரியும்?
◻ ஏன் எருசலேமைப் பற்றி இன்னுமதிகமாய் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்?
[பக்கம் 10-ன் படம்]
தாவீதின் நகரம் தெற்கே இருந்த மலையில் அமைந்திருந்தது, ஆனால் சாலொமோன் அந்நகரத்தை வடபகுதியில் விஸ்தரித்து ஆலயத்தைக் கட்டினார்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.